பிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள்

கண்ணன் சித்திரம் ஒன்றைப் பார்த்திருப்பீர்கள்- குட்டிக் கண்ணன் தன் உள்ளங்கைகளில் நெல்மணிகளை அள்ளி வந்து ஒரு பெண்ணிடம் நாவல் பழங்களை வாங்குவான். பொருள் கொடுத்துப் பொருள் பெறும் பண்டமாற்றிலிருந்து, பொருட்களுக்கு விலை நிர்ணயித்து, அதைப் பணம் என்ற இடை ஊடகத்துடன் இணைத்து வர்த்தகம் உலக அளவில் நடைபெற்று வருகிறது. அந்தந்த நாடுகளின் தங்கம் மற்றும், முதன்மை இடம் பெற்றுள்ள உலக நாடுகளின் நாணயங்களின் கையிருப்பினைப் பொறுத்து, அந்தந்த நாடுகளால், நாணயங்கள் அச்சிடப்பட்டு மக்களிடையே புழக்கத்திற்கு வருகின்றன. ஆனால், காற்றில் கட்டப்படும் நாணயக் கோட்டைகளை நாம் பார்த்திருக்கிறோமா? ஆம், கிரிப்டோகரன்ஸிகள் (Crypto Currencies) என்று சொல்லப்படும், புலப்படா வலைப் பணம் அவ்வகைக் கோட்டைகளே. அரசு, நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்ற எந்த சேவைகளுமில்லாமல் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதையும் அதன் நன்மை, தீமைகளையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

1800 க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்ஸிகள் இருப்பதாக 2018-ல் வெளிவந்த ஒரு செய்தி தெரிவிக்கிறது. அதில் கிட்டத்தட்ட பாதி பிட்காயின் என்ற வலை நாணயங்கள் (Bitcoin). கிரிப்டோகரன்ஸிகளின் தற்போதைய சந்தை மதிப்பு $1.5 டிரில்லியன். உருவற்ற ஒரு பொருள் (!), கணினியின் நிரலன்றி வேறு ஒன்றுமில்லை, ஆயினும் அதன் மதிப்போ மலைக்க வைக்கிறது. இத்தனைக்கும் இவ்வருடத் தொடக்கத்தில் ஒரு பிட்காயினின் மதிப்பு $60,000 க்கும் மேலாக எகிறி, சில வாரங்களிலேயே பாதிக்கும் கீழாகச் சரிந்தது. எலான் மஸ்க்கின் (Elon Musk) சிறுகுருவிச் செய்திகளால் டோ(ட்)ஜ் காயின் (Dogecoin) போன்ற இதர வலைப் பணங்களும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

நிதித் தொழில் நுட்பப் புரட்சி என்று வலை நாணயங்களைக் கொண்டாடுகிறார்கள்; மூன்றாவது அமைப்பின் தலையீடு இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் மிகப் பெரிய வசதி எனக் கருதுகிறார்கள். ஒற்றைப் பதிவு முறை (Single Entry), இரட்டைப் பதிவு முறை (Double Entry) போல இது முப்பதிவு கணக்கு முறை (Triple Entry System of Book keeping) எனச் சொல்லப்படுகிறது. உங்கள் வருங்கால சேமிப்புக் கருவியாக இதை ஏற்பதில் என்னென்ன அபாயங்கள் உள்ளன? இந்த மே மாதத்தில் மட்டும் மொத்தமாக இவ்வகை கரன்ஸிகளின் மதிப்பு $1 டிரில்லியன் சரிவினைக் கண்டிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜூலை,2021-ல் அமெரிக்க அரசுத்துறைகளில் இணையத் தாக்குதல்கள் நடை பெற்றன என்றும், அமெரிக்கத் திட்டமான ‘ஆப்கானிலிருந்து படைகளை விலக்குதல்’ என்ற செயல் திட்டத்திற்கான நுட்பங்களைக் களவு செய்ய நிகழ்ந்திருக்கலாமென்றும் செய்திகளும் ஊகங்களும் வெளியாகி உள்ளன. ஆனால், கவனிக்கப் பட வேண்டிய ஒன்று உண்டு- அது ‘இருள் பதிவுகள்’ (Dark Patterns) என்ற புதிய மிரட்டலாகும்.

பிட்காயின்?

ஏன் பிட்காயின்கள் உருவாகியுள்ளன? உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய நிதி நிறுவனங்களின் அதீதச் சிக்கல், அவற்றின் மேலும், அரசுகளின் மேலும், மக்களுக்கு இருந்த நம்பிக்கையைச் சிதைத்தன. பிட்காயின் பிறக்க ஏற்ற சூழல் உருவானது. இலக்க அடையாளங்கள், செய்பவர் எவரெனக் காட்டாமல் உங்கள்  வர்த்தகத் தேவைகளை நிறைவேற்றும் வசதி, நிதி அமைப்புகளுக்கு அவை தரும் சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணமின்மை, ஆகியவை பெரிதும் பேசப்படுகின்றன. சுவிஸ் வங்கிக் கணக்குகளைப் போல, உங்கள் இரகசியம் பாதுகாக்கப்படுவதில், பொது மக்களுக்கு எந்த அளவில் தேவை இருக்கும்? சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவோருக்கு, ஆயுதம், போதை மருந்துகள் கடத்துவோருக்கு இவை ஒரு வரமெனவே அமைந்தன. கணினிக் கொந்தர்களுக்கு (Hackers) கொண்டாட்டமாயிற்று. கறுப்புவலை வர்த்தகங்களில் பெரும்பாலும் பிட்காயின் தரப்பட்டன, பெறப்பட்டன, மீட்புப் பணமும் (Ransom money) இவ்வகையிலேயே கைமாற கொந்தர்கள் விதிகள் செய்தனர். நிழல் உலகின் பொக்கிஷமாக பிட்காயின் இடம் பிடித்தது. பரிவர்த்தனைகளுக்கு பிட்காயினைப் பயன்படுத்துவோரில் 26% நிழல் நடவடிக்கைகளில் அதைச் செலவிடுகின்றனர் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. 2017-ல் வெளியான அவ்வறிக்கையின் படி ஏறத்தாழ பாதி நடவடிக்கைகள் குற்ற உலகைச் சார்ந்ததாக இருக்கிறதாம். சட்டப்புறம்பான நடவடிக்கைகள் நடைபெறும் பிட்காயின் வலைத்தளங்கள், நேர்மையான பரிவர்த்தனை நடக்கும் வலைத் தளங்களை விட மூன்று முதல் நான்கு மடங்கு அடர்த்தி கொண்டு செயல்படுகின்றன.

பிட்காயினை உருவாக்கியவர் யார்?

நாம் முன்னர் பார்த்தோம் அல்லவா? பொது மக்களின் சேமிப்புகளை வைத்துக் கொண்டு, கடன் வழங்கி, அதற்கு வட்டியும் வாங்கி, நிதி நிர்வாகத்தைத் திறம்பட நடத்த வேண்டிய நிதி நிறுவனங்கள், அடிப்படை சொத்துக்களின் ஆதாரம் அமையாத ஊகச் சந்தைகளில் முதலீடு செய்து உலகப் பொருளாதாரத்தை முடக்கினார்கள். அத்தகைய நிறுவனங்களின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை சிதைந்தது. எனவே, நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல், குறியீட்டு மொழியில் (cryptography) பணப் பரிவர்த்தனை செய்யும் ஒரு முறையாக, கணினி மொழியில் பரிமாற்றம் நடை பெறும் தேவை வந்தது. விளைவு பிட்காயின் பிறந்தது. 1998-ல் வே டை (Wei Dei) முதன் முதலாக கிரிப்டோகரன்ஸியைப் பற்றிச் சொன்னார். பின்னர் சுசோஷி நாகாமோடோ(Satoshi Nakamoto) அதன் கட்டமைப்பையும், அதற்கான நிரூபணத்தையும் அளித்தார். இது தொடர்ச் சங்கிலி தொழில் நுட்பத்தில் (Block Chain Technology) அமைந்த ஒன்று. இந்த நுட்பத்தை தொடரேடு என்றும், கட்டங்கள் எனவும் அழைக்கிறார்கள். சிறப்பம்சம் கொண்ட வன்பொருளமைந்த கணினிகள் இதில் பங்கேற்கும். ஒரு தொடரை உருவாக்குபவர் தொடங்கும் முதல் பரிவர்த்தனை ஒரு முதல் நாணயத்தின் பிறப்பாகும். கணினிகளில் இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் சுரங்கத் தொழிலாளர் (Miner) என அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் இது லாட்டரி போன்றதே. ஒரு தொடருக்குள் உட்செல்ல, தோண்டி எடுக்க, பரிவர்த்தனைகள் போலக் காட்டி பின்னர் அதை மாற்று வழியில் திரும்ப எடுத்துக்கொண்டு ஏமாற்றுபவர்களை விலக்கி வைக்க சாவிகள் இருக்கின்றன. பிட்காயின், எதெரியம் (Ethereum) போன்ற கிரிப்டோ கரன்ஸிகள் பொதுத் தொடர் முறைகளைப் பின்பற்றுவதாகவும், ஹைதர் லெட்ஜர், (Hyder Ledger) தனித் தொடரையும், இரண்டையும் கலந்த முறையை ட்ரேகன் சங்கிலி (Dragon Chain), எனர்ஜி வெப் ஃபவுண்டேஷன் (Energy Web Foundation) உபயோகிப்பதாகவும், முதற் சங்கிலிக்கு இணையான மற்றொரு சங்கிலியை, சைட் சங்கிலி (Side Chains) பயன்படுத்துவதாகவும் இணையக் குறிப்புகள் சொல்கின்றன. எந்தத் தொகுதியாக இருந்தாலும் சாவி தனிப்பட்டது, அடையாளம் மறைக்கப்பட்ட ஒன்று.

தொடரேடு எவ்வாறு செயல்படுகிறது?

  1. புது பரிவர்த்தனைகள் அனைத்துக் கணினிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
  2. ஒவ்வொன்றும் அதைத் கட்டமாக்குகின்றன.
  3. தன்னுடைய தொடருக்கான, சிக்கலான செயல் நிரூபணத்தைக் கண்டடைய ஒவ்வொரு கணினியும் முனையும்.
  4. அதைக் கண்டறிந்த பிறகு தன் கட்டத்தைப் பற்றிய அறிவிப்பை அது மற்றக் கணினிகளுக்குச் சொல்லும்.
  5. அதிலுள்ள அனைத்தும் சரியாக இருந்தால் தான் அனைத்துக் கணினிகளும் அதை ஏற்கும்.
  6. ஏற்றுக் கொள்ளப்பட்ட தொகுப்பின் ‘ஹேஷ்’ சாவியைப் பயன்படுத்துவதன் மூலம் மற்ற கணினிகள் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்து அடுத்தத் தொடரை உருவாக்கும்.

எந்த அளவிற்கு பிட்காயினை தோண்டி எடுக்கலாம்?

தங்கச் சுரங்க வேலையைப் போன்றதே இது. 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே தோண்ட முடியும். இது முற்றிலும் முடிந்து விட்டால், மேற்கொண்டு வினியோகமில்லை. இவ்வருடம் ஃபிப் மாதம் வரை 18.638 மில்லியன் காயின்கள் எடுத்தாகிவிட்டது. இந்தச் சுரங்கத் தொழிலாளருக்கு வெகுமதி குறைந்து வருவதால், கடைசி நாணயம் 2140-ல் தோண்டப்படும் என்று செய்திகள் வருகின்றன.

புதுக் கோமாளிகள்

சென்னைக்கு மிக அருகில் பத்தே நிமிடப் பயணத்தில் மனையுடன் கூடிய சொந்த வீடு என்று விளம்பரம் செய்து, பிசாசுகளும் அஞ்சும் இடத்தில், அத்துவானக் காட்டில், பட்டா இல்லாத, புறம்போக்கு நிலங்களை விற்பனை செய்பவர்களைப் போலத்தான் பிட்காயின் தன்னைச் சுற்றிப் பரப்பிய பல்வேறு வசதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நிகழ் நிலையில் பரிவர்த்தனை என்பதொரு மாயம். ஒவ்வொன்றிற்கும் குறைந்தது பத்து நிமிடங்களுக்கும் மேலாகிறது. குறைந்த செலவு என்றொரு பொய். சராசரியாக ஒவ்வொரு பரிவர்த்தனையும் $20 பிடிக்கிறது. சந்தை அபாயங்களுக்கு உட்படாத பரிவர்த்தனை என்பது காதுகளில் தேன் பாய்ச்சினாலும், நிலைமை அப்படியில்லை. சிறு ஏணியில் ஏறி பெரும் பாம்பின் வாயில் விழுந்து கீழே இறங்குவதை இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். இத்தகைய ஏற்ற இறக்கங்கள் கிரிப்டோ கரன்ஸி சந்தைகளை மட்டுமே பாதிக்கும். இதர வர்த்தக சந்தைகளில் இதனால் நேரடி பாதிப்பு இருக்காது. பாரம்பரிய நிதி நிறுவனங்களில் தென்படும் வீழ்ச்சிகளுக்கு மாற்றாக முன் வைக்கப்பட்ட இதிலும் வழுக்குப் பாறை இருக்கிறதே! ‘இத்திரு துறந்து ஏகு என்ற போதிலும், மெய்த்திருப் பதம் மேவு என்ற போதிலும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போன்ற’ மன நலம் உடையவர்களுக்கு இது ஒத்து வரலாம்!

கிரிப்டோகரன்ஸிகளின் தாரக மந்திரம்: ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை, நீ யார் யாரென்று கேட்கவில்லை.’ ஆனால். அதுவும் ஆட்டம் கண்டு விட்டது. ‘காலனியல் பைப்லைன்’(Colonial Pipeline) குழுமம் ‘டார்க்சைட்’(Darkside) என்ற கொந்தர்களுக்குக் கொடுத்த மீட்புப்பணத்தில் ஒரு பகுதியை திரும்பப் பெற முடிந்தது; புலப்படா இணையப் பணத்தின் பாதுகாப்புக் கோட்டை அசைந்தது!

பிட்காயின்களும், கரிப் பதிவுகளும்

இன்று உலகில் பெரும்பான்மையான இடங்களில் வங்கி அட்டைகளை, கூகுள், அமெசான் பணப் பரிவர்த்தனைகளை உபயோகிக்கும் மக்கள் பெருகியுள்ளனர். இவைகளும்  மின்சக்தி ஆற்றலைப் பயன்படுத்துபவையே. ஆனால். பிட்காயின்கள் உட்கொள்ளும் மின்னாற்றல் அதிக அளவிலானது. 2017-ல் ஹோல்மன் & ரஞ்ச்ஸ் (Hileman & Ranchs) வெளியிட்ட ஒரு ஆய்வு பிட் சுரங்கர்கள் 111 மெகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது. அர்ஜென்டினா, நார்வே நாடுகள் பயன்படுத்தும் மின் சக்தி அளவு இது. இந்த பிட்காயின் வலைகள் அதிகமாக சீனாவில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கணினியின் வன்பொருளும் தனிச் செயலுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஏறத்தாழ ஒன்றரை வருடத்தில் பழையதாகிவிடுகிறது. இந்தச் சுரங்கக் கருவிகளாக முதலில் மைய செயலாக்க வன்பொருள்(CPU) இருந்தது; இப்போது கிராஃபிக் செயலாக்க அலகு (GPU), புலம் நிரல்படுத்தும் வாயில் வரிசைகள் (Field Programmable Gate Arrays), பயன்பாடு குறிப்பிட்ட ஒருங்கிணைந்த சுற்றுகள் (Application Specific Integrated Circuits) என்பவையும் செயல்பாட்டில் இருக்கின்றன. எனினும், இயங்குவதற்கு அபரிமிதமான மின் சக்தி தேவைப்படுகிறது.

தொல்லெச்ச எரிபொருட்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெருமளவில் நம்பி இக் கணினிகள் இயங்குகின்றன.

இதனால் ஏற்படும் கரிப் பதிவுகள் மிகவும் அதிகம் என்று ஆய்வுத் தரவுகள் நிரூபித்துள்ளன. சீனா அதிக அளவில் நிலக்கரியிலிருந்து மின் சக்தி உற்பத்தி செய்து பிட்காயின் வலைஞர்களுக்கு உதவுவதை முதலில் மறுத்தது; நீர் சக்திதான் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி ஏமாற்றியது. பின்னர் வெளி நாட்டினரின் கள ஆய்வுப் பணிகளின் தரவுகளை ஏற்றுக் கொண்டு தொல்லெச்ச எரிபொருள் பயன்படுத்துவதை ஒப்புக் கொண்டது. புவி வெப்பமயமாதல். பசுமை இல்ல வாயு போன்ற சூழல் மாசுகளை இச்செயல் அதிகரிக்கிறது. தங்கச் சுரங்கங்கள் வெளியிடும் கரி வாயு 20 டன்கள். பிட்காயின் சுரங்கம் 231 டன் கரிவாயுவைக் காற்றில் கலக்கிறது. இதையும் விடவும் மற்றொரு அபாயம் உள்ளது. மின்குப்பைகளை அழிப்பதற்கும், அகற்றுவதற்கும், அதிக அளவில் செலவு மற்றும் எரிசக்தி தேவைப்படுவதால் அவைகள் நிலம், அல்லது கடலில் வீசப்பட்டு உயிரினங்களை பாதித்து வருகின்றன.

கிரிப்டோகரன்ஸிகள், கிரேஸி மனிதர்கள்

பிட்காயின் பலவிதத்திலும் தன் உயரிய நோக்கத்தை நிறைவேற்றாத போதும், ஊக வணிகத்திற்கு ஏற்ற ஒன்றாக கருதப்படுவது வியப்பே. அதற்கு ஆதாரமான பொருளென எதுவுமில்லை; காற்றில் கட்டிய கோட்டைதான் அது. ஆனால், பெரும்பாலும், குற்றங்களுக்கும், புதியனவற்றிற்கும் இருக்கும் ஈர்ப்பால் மக்கள் அதை நோக்கிச் செல்கிறார்கள். அகமதிப்பொன்று இல்லாத அதில் முதலீடு செய்வது என்பது ‘அதிக முட்டாள் தேற்றதிற்கு’ எடுத்துக்காட்டான ஒன்றுதான். இந்தச் சூழ்நிலையில் உள்ளே நுழைகிறது முகநூல். அவர்கள் ‘டைம்’ என்ற நாணயத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். இதுவும் கிரிப்டோ கரன்ஸியே. எந்த நாட்டின் மத்திய வங்கியோ, அரசோ வெளியிடாத நாணயம். ஆனால், இவர்கள் கூடுதலாக ஒன்று சொல்கிறார்கள். ஒவ்வொரு நாணயத்திற்கும் அதற்கு ஏற்றவாறு, பணமாகவோ, மிகக் குறைந்த கால அரசு பத்திரமாகவோ இருப்பு ஏற்படுத்தப்படும் என்று ஆசையைத் தூண்டுகிறார்கள். அவர்கள், நம்மை, தம்மை விட முக்கியமாகக் கருத மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததுதானே! பெரும் பெரும் நிறுவனங்கள் தனித்தனியே இத்தகையக் கரன்சிகளைக் கொண்டு வரக் கூடும் என்பதும் தலை சுற்ற வைக்கும் ஒன்றுதான். மேலும் சிறு நாடுகள், வளரும் நாடுகள் ஆகியவற்றின் பொருளாதாரமும், அவற்றின் நாணயங்களும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. இத்தகைய வழிமுறைகளில் பெருமளவில் பாதிக்கப்படப் போவது அதிக எண்ணிக்கையிலான சிறு, குறு முதலீட்டாளர்களே.

பிட்காயின்களும் பங்குச் சந்தையும்

பிட்காயின்களின் ‘விலை ஊகப் பத்திரங்களின் சந்தை’, அமெரிக்காவில் பங்கு வர்த்தகத்தின் நெறிமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கைத் தருவதைத் தவிர அரசும் இதில் தீவிரமாக முன் செல்ல முடியாது. ‘கரன்சி’ என்று அழைப்பதாலேயே, அதை ‘பத்திரம்’ (ஈடு) என்று சொல்லாமல் இருக்கமுடியாது என்றே பங்குச் சந்தை நிர்வாகம் சொல்கிறது. ஆயினும், இவை மூலம் மூலதனம் பெருகும் வாய்ப்புக்கள் இல்லையென அது மறுக்கவில்லை. கிரிப்டோகரன்ஸிகளின் காகித மதிப்பினால், நிதிச் சந்தைகள் பாதிக்கப்படப் போவதில்லை. வங்கிகள் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்கின்றன.

ஆயினும், பிட்காயினின் தொழில் நுட்பமான, தொடரேடு சிறந்த வரமே. நிகழ் நிலையில் பரிவர்த்தனை, பாதுகாக்கப்பட்ட பணப்பரிமாற்றம்  உலகின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு எளிய முறையில் செய்யக்கூடும் வர்த்தகம் என்பது சிறந்த ஒன்று. சொத்துப் பத்திரங்களின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைப் பதிந்து, அவற்றைத் தீய சக்திகள் ஆக்கிரமிப்பு செய்வதை தொடரேடுகள் தவிர்க்க உதவும். எனவே தான், சீனா, ஜப்பான், ஸ்வீடன் ஆகிய நாடுகள் தங்கள் நாணயங்களை இலக்க நாணயங்களாக மாற்றி வெள்ளோட்டமிட்டு வருகின்றன. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இலக்க  நாணயங்களை முன்னெடுக்க ஆர்வம் காட்டுகிறது. எல் சல்வடோர், செப் 7 முதல் பிட்காயினை செலாவணியாக அறிவித்துள்ளது!

‘நாம் அனைவரும் சமமானவரே! ஆனால், முதன்மை நிலைக்கு உங்களை விட நான் தகுதியானவனன்றோ!!’ நிதிக் கருவிகளைப் பயன்படுத்துவதில் அதைப் பற்றிய தெளிவு தேவை; மேலும் இணையம் சார்ந்த, இலக்க முறையிலான, நிரல் மொழியில் அமைந்துள்ள மென் பொருளை இயக்குவது என்பது இவ்வகைகளுக்குப் பழக்கப்படாதவர்களை அதிக சிரமத்திற்கு உள்ளாக்கி, நஷ்டங்களையும் கஷ்டங்களயும் ஏற்படுத்திவிடும். இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் உறவினர் ஒருவருக்கு நேர்ந்த ஒன்றைப் பதிய விரும்புகிறேன். அவர் இறந்து போயே நூறாண்டு ஆகப் போகிறது. எங்கள் குடும்பத்தில் நகைச்சுவைக்காகப் பேசப்படும் ஒரு விஷயமாக இது எங்கள் தலைமுறை வரை பயணித்திருக்கிறது. அவர் காஃபி வெறியர். காணி, குழி, எரு, கண்டுமுதல், குந்துமணி, வராகன், ஏத்தம், மடை மாற்றுவது, களஞ்சியம், குதிர் என்று என்னவெல்லாமோ தெரிந்த அவருக்கு ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள் (அன்று இவை தான் நாணயங்கள்) என்பதே புரியவில்லை. தங்கத்தின் ரூபாய் மதிப்பு இன்னதென்று தெரியவில்லை. இரட்டை வட சங்கிலியை கணக்குப் பிள்ளை மூலம் விற்று இரண்டு படி காஃபிக் கொட்டையை வாங்கினாராம்; விளைவு இவர் எடுபிடியானார்; அவர் அதிகாரியானார்.

அன்றே அப்படியென்றால் இன்று கேட்கவா வேண்டும்? இனம், நிறம், முதல் இவைகளால் பேதப்பட்டு நிற்கும் மானுட அகழி இன்னமும் அதிகமாகும். அனைவருக்கும் கல்வி என்பது ஏட்டளவில் மட்டுமில்லாது, உலக நடப்புகளைப் புரிந்து கொள்வதாக, ஓரளவிற்கேனும் நிதி சந்தைகள், பங்கு வர்த்தகங்கள், பிட்காயின், இலக்க நாணயங்கள் பற்றி அறிவுறுத்துவதாக இல்லாவிட்டால், சரி நிகர் சமானமென்பது கானல் நீராகிவிடும். மேலும் நம்முடைய அனைத்துமே பொது வெளியில் வந்து விடும் சாத்தியங்கள் இவைகளில் அதிகம். இந்த நாணயப் புரட்சிகள், நம்மை  நல்லவிதத்திலோ, அல்லாத விதத்திலோ பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இக்கட்டுரை கீழ்க்காணும் நூலைத் தழுவி எழுதப்பட்டது:

Eswar Prasad is a professor at Cornell University and a senior fellow at the Brookings Institution. His new book, The Future of Money: How the Digital Revolution is Transforming Currencies and Finance, will be published in September.

இந்தியாவும், கிரிப்டோகரன்ஸிகளும்

உலகில் 154 நாடுகள் இந்த வலைச் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளன. அதில் இந்தியா பதினோராவது இடத்தில் உள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் ஒரு பிட்காயினின் விலை ரூ 35 இலட்சம். பதினைந்து மில்லியன் இந்தியர்கள் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடுகள் செய்துள்ளனர்.  இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வர்த்தகங்கள் பெருமளவில் முடங்கியதால் பலரின் கவனம் இத்தகைய முதலீடுகளின்பால் திரும்பியுள்ளது. ஏப்ரல் 2020-ல் $923 மில்லியனாக இருந்த முதலீடுகள் மே 2021 –ல் $6.6 பில்லியன் என அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. குறைந்த விலையுள்ள  நாணயங்களான XRP, Cardano, Dogecoin, Lite coin, Polkadot, Chainlink போன்றவை இந்தியர்களை ஈர்த்திருக்கின்றன.  இந்தியாவில் WazirX, Zebpay, Unocoin, போன்ற  சில பிரபல கிரிப்டோ வர்த்தக சந்தைகள் இயங்குகின்றன. மழைக்கால கூட்டத் தொடரில் புலப்படா இணையப் பணத்தை தடை செய்யத் தேவையான சட்டத்தைக் கொண்டு வருவதாகச் சொன்ன அரசு அத்திட்டத்தைத் தள்ளிப்போட்டுள்ளது.

திருக்குறள் சொல்கிறது:

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
.’

அது மேலும் சொல்கிறது:

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையா
ர்.’

Series Navigation<< பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்ஜராசந்தர்கள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.