நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்?

“டேவ் (Dave), உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் (செயற்கை) மூளையைச் சிதைத்துவிடாதே,” என்று விண்கல மாலுமியான டேவ் பௌமனை (Dave Bowman), ‘ஸ்பேஸ் ஆடிஸ்ஸி’யில் (A Space Odyssey) அந்தக் கலத்தின் மையக் கணினியும், விண்கலத்தின் செயல்திட்டங்கள் அனைத்தையும் கவனிக்கும் செயற்கை அறிவும் ஆன ஹால் (HAL )[1] பரிதாபமாக முறையிடும். முன்னால்,  அதனுடைய தவறுதலான செயல்பாட்டால் டேவ் வான்வெளியில் கிட்டத்தட்ட இறந்துவிடும் நிலைக்குச் சென்றிருப்பார். “மண்டியிடுகிறேன்; என்னைச் சிதைக்காதே; ஐயோ, என்னால் இதை உணர முடிகிறதே” என்று கூக்குரல் இடும். 

மாறிவரும் தொழில் நுட்பங்களுக்கும், புதியனவற்றிற்கும் இருக்கும் இடர்கள், வளர்ச்சிகளைப் பற்றி, குறிப்பாக அட்டவணைகளைப் பற்றிப் பேசுகையில் நாம் காணப் போவதை மேற் சொன்ன ஒரு நிகழ்வு விளக்குகிறது

கூகுள் நம்மை முட்டாள்களாக்கிறதா என்ற கேள்வியை நிக்கோலஸ் கார் (Nicholas Carr) தன்னுடைய தி அட்லாண்டிக் மந்த்லி பத்திரிகையின் கட்டுரையில் எழுப்பியிருப்பார். ‘நான் சிந்திக்கும் விதமே மாறியுள்ளது. முன்னர் பெரிய நூல்களையும், கட்டுரைகளையும் எளிதாகப் படிக்க முடிந்த என்னால், இப்போது இரண்டு- மூன்று பக்கங்களைக் கூட கவனத்துடன் படிக்க முடியவில்லை.’  இணையம்தான் இதற்கான காரணமெனச் சொல்பவர், வலை பகிர்ந்தளிப்பதை மனம் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டது எனவும் சொல்கிறார்.

இது ஒரு தேய்வழக்கு. இதில் ஒன்றும் புதிய கருத்து இல்லைதான். தொழில்நுட்பத்தைப் பற்றி 1960ல் மார்ஷல் மக்லூவன் (Marshall McLuhan) இக்கருத்தைச் சொன்னார். தட்டச்சுப் பொறியை பயன்படுத்தத் தொடங்கிய பிறகு நீட்சேயின் எழுத்துக்கள் இறுகி, தந்தி மொழி போலாகிவிட்டன என்று அவரது நண்பர் சொன்னார். பதினைந்தாம் நூற்றாண்டில் கூடன்பெர்க்கின் (Gutenberg) அச்சு இயந்திரம் வந்தவுடன், வெனிஸ் நகர்வாசியான ஒரு மனிதநேயர், ‘மனிதர்கள் சோம்பேறிகளாவார்கள், மனம் சோர்வடையும், படிப்பதில் நாட்டம் குறையும்’ என்றார்.

பழையன கழிதலிலும், புதியன புகதலிலும் இருக்கும் பயம் என்றுமே உண்டு. அதிலும், தட்டச்சுப் பொறி, அச்சு இயந்திரம் போன்ற எழுத்துலகம் சார்ந்த கருவிகள் முன்னுதாரணங்களை மாற்றும் வல்லமை கொண்டவை. எழுதுவதின் எகிப்தியக் கடவுளான ‘தெஹூத்’(Thoth) பற்றி சாக்ட்டீஸ் சொன்ன மாயக்கதையை பிளாட்டோ(ன்) தன் ‘ஃபீட்ரஸ்’ (Phaedrus) நூலில் குறிப்பிடுகிறார். பெருமிதத்துடன் தன் புதுக் கருவியை,தெஹூத், அரசர் தாமஸ்ஸிடம் வழங்கி ‘இது எகிப்தியர்களின் அறிவுக்கூர்மைக்கும், தேர்ந்த நினைவுகளுக்கும் உதவும்’ என்று சொல்லும் போது, அரசருக்கு அக்கண்டுபிடிப்பு உவப்பாக இல்லை. ‘தங்கள் நினைவுகளைப் பயிற்சி செய்யாமல், இக்கருவியைப் பயன்படுத்துவதைக் கற்றுக் கொள்ளும் மனிதர்கள், மறதி நிலைக்குச் செல்வார்கள்’ என்றார் அரசர்.

‘புத்தக அட்டவணைகளை’ (Book Index) நாம் அறிவு பூர்வமான குறியீட்டு உதவி என நினைக்கிறோம். ஆனால், எழுதுவதையும், அச்சிடுவதையும் மாற்றி அமைத்த மேற்சொன்னவற்றைப் போலவே புத்தக அட்டவணைகளும் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது நம்பக் கடினமான ஒன்றே! தன்னுடைய அருமையான  ‘அட்டவணை, ஒரு வரலாறு’ (Index, A History of the) என்ற நூலில் டென்னிஸ் டங்கன்,(Dennis Duncan) அது பிறக்க எடுத்துக்கொண்ட நேரத்தையும், வலியையும் எழுதுகிறார்.

இன்றைய உருவத்தை அடைவதற்கு முன்னரும் கூட அட்டவணைகள்  ‘ஒத்திசைவுகளும், வேறுபாடுகளும்’ கொண்டு பயன்பாட்டில் இருந்தன. பக்கங்களில் எண்கள் அச்சிடப்படத் தொடங்கிய காலத்தில் இவைகள் ஒரு நிலைப்பை அடைந்தன. பாட்லியன் நூலகத்தில்,(Bodleian Library) 1470-ல் கொலொனில் (Cologne)  கூறப்பட்ட நல்லுபதேசம் உள்ள ஒரு நூலில் பக்க எண்கள் இருப்பதைப் பார்த்த டங்கன், நெகிழ்ச்சியுடன் ‘காப்பகத்தின் உன்னதத்தைக் கண்டேன்’ என எழுதுகிறார். ஆனால், 1470 ஒன்றும் மைல்கல் அல்ல. அந்த நூற்றாண்டின் இறுதியில் கூட பத்து சதவீத அச்சுப் புத்தகங்களில் மட்டுமே பக்க எண்கள் பதிவாயின; அட்டவணைகளையே சந்தேகத்தோடு பார்த்தனர். அட்டவணைகளைக் கொண்டு விஷயங்களை அறிந்து கொள்ளும் நபர்களை ‘அறிவிலிகள், அயோக்கியர்கள்’ என்று மறுமலர்ச்சி அறிஞரான கான்ராட் கெஸ்னர் (Conrad Gessner) அறிவித்தார். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதையே அலங்காரமாக ‘எந்த மாணவரையும் தகுதிக் குறைவு செய்யாவிட்டாலும், அறிவியல் என்னும் விலாங்கு மீனின் வாலைப் பிடிப்பதைப் போன்றது’ என்று அலெக்ஸாண்டர் போப் அட்டவணைகளைப் பற்றி சொன்னார். ஒரு புத்தகத்தை முழுதும் படிக்காமல், அதை செரிமானிப்பதான ஏமாற்றுக் குறுக்கு வழி என்பது இதன் உட்பொருள். நாம் சாக்ரடீஸிற்குத் திரும்பிவிட்டோம்.

அட்டவணை, குறியீடுகள் பற்றிய இன்றைய சிந்தனைகள் மாறியுள்ளன. புது ஆக்கங்களின் முக்கியச் செய்திகளை வடிகட்டி, அலைவரிசைகளில் அவற்றை ஒலிபரப்பும் பிளிங்க்கிஸ்ட்(Blinkist) போன்ற தளங்களின் தொழில் நுட்பம் நம்முடைய இன்றைய கவலை. அட்டவணைகளை அ முதல் ஃ வரை படிக்கும் பழக்கமோ, அப்படிப் படிப்பதாலேயே முழு நூலையும் படித்துவிட்டோம் என்ற எண்ணமோ, இதுவே போதுமே என்ற நினைவோ பொதுவாக வாசிப்பவர்களிடம் இல்லை தான்.கெஸ்னர், போப் போன்ற இதரர்களின் கவலை அதீதமெனப் புரிந்து விட்டதல்லவா? 

ஆனாலும், சில நையாண்டிகள், அசத்தும் தன்மை கொண்டவைகள், வியக்க வைப்பவைகள், தன்னைத்தானே விளக்குபவைகள் போன்ற சில அட்டவணைகளை டங்கன் பட்டியலிடுகிறார்.

அட்டவணைப் படுத்துதல் அரிதான விளையாடல் என்பதால் அது மதிப்பு மிக்கது. அமைப்பு எல்லைகளைத் தள்ளி, நம் எதிர்பார்ப்புகளுடன் விளையாடும் பகுதிகள் டங்கனின் நூலில் சிறப்பாக வந்துள்ளன. படித்தவர்களுக்கு உரித்தான அகங்காரத்தைக் காட்டிய (3)  ஆகஸ்டீனியர்களுக்கு உறைக்கும் விதத்தில், வாழைப்பழத்தில் ஏற்றும் ஊசியைப் போல, பழைய கொடுங்கோலரான( 4) ஃபாலாரிசைப்(Phalaris) பற்றி புதிதாக நிருபங்கள் கொண்டு வந்த சார்ல்ஸ் பாயிலின்(Charles Boyle) படைப்பை, (2)கிரேக்கச் செவ்வியலாளரான (ஹெலனிஸ்ட்) ரிச்சர்ட்  விமர்சித்தார். பாயிலின் அணுக்க வாத்துக்கள், பென்ட்லி ஒரு அட்டவணை வேட்டையாளர் என்றும், இரண்டாம் தர விமர்சகர் என்றும் காரசாரமாக எழுதினார்கள். ஒரு இளைய அறிஞர் இவ்வாறெல்லாம் பென்ட்லியைப் பற்றி எழுதினார்: ‘அட்டவணையின் மூலம் டாக்டர். பென்ட்லியைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்’. அதில் பல பக்கப் பதிவுகள் இப்படி எல்லாமிருந்தன- ‘அதிர்ச்சிதரும் மந்தைத்தனம்’, ‘சுயப் பீற்றல்’, ‘வெளி நாட்டினர்க்கு உகந்தது போல் எழுதுவது,’ என்றெல்லாம் அர்சித்துவிட்டு, ‘தான் பார்க்கவே பார்க்காத நூல்களைப் பற்றி நல்ல புரிதல் கொண்டவர்!’ என்று காட்டமாக எழுதினார். புத்தக விவரணமே ஒரு போர்க்கருவியாகி விட்டது. பொதுவில் எதிர்பார்க்கும் அட்டவணையின் மந்தத்தன்மை, அறிவால் இவ்விதம் மாற்றப்பட்டது. வேட்டையாளரே வேட்டையாடப்பட்டுவிட்டார்!

அறிவுஜீவித்தனமான லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்சில் வெளி வரும், இலக்கியமும், உண்ணி பொறுக்கலும் கலந்த கடிதங்கள், வலி தெரியாது அடிப்பது போன்ற, இன்று நாம் பார்த்துக்கொண்டிருப்பதின் முன்னோட்டம் போலவே உள்ளது, மேலே நாம் பார்த்தவைகள். 

அட்டவணை என்பது சிறப்பு ஆர்வம் உள்ள துறை என்பதை நினைவில் கொண்டுதான் இந்த நூலில் டங்கன் பயணிக்கிறார். ஆயினும், அதன் செயல் தன்மையையும், வரலாற்றையும் கூறுகளாக்கி அவர் சொல்ல வருவது ஒன்றுண்டு- மிகப் பெரும்பான்மையோர், அபுனைவுகளைப் படிப்பவர்கள், அட்டவணையை உபயோகிப்பவர்கள், அவற்றைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். மகிழ்வூட்டுவதாகவும், அறிவுறுத்துவதாகவும் உள்ள இந்த நூலில் அவர், இந்தத் தொழில் நுட்பக் காலத்திலும் அட்டவணைகளுக்கும், அட்டவணையாளர்க்கும் உயரிய இடம் இருக்கிறது என நிறுவுகிறார். அட்டவணைப் படுத்துதல் அரிதான விளையாடல் என்பதாலேயே அது மதிப்பு மிக்கது.

அட்டவணைப்படுத்துதல் ஒன்றும் பணம் கொட்டும் தொழிலல்ல-அதுவும் கணினிச் செயல் நிரலிகள் அட்டவணையாளர்களின் வேலையைக் குறைந்த செலவில் இன்று செய்து விடுகின்றன. ஆனால், இவ்வகைச் செயலிகள், தன்னளவில் ஒரு மாற்றாகாது என்றே டங்கன் சொல்கிறார். ‘ஒரு கருது கோள் வெளிப்படையாகச் சொல்லப்படாவிடினும், தேர்ந்த அட்டவணையாளர் அதை எப்படிக் குறியீட்டுக்குள் கொண்டு வருவது என்பதை அறிவார்- முதல் பெயர் இல்லாவிடினும், மார்க்ஸ், கார்ல்,, மார்க்ஸ், குரூசோ, மார்க்ஸ், ரிச்சர்ட். ஈஸ்டர் முட்டைகளின் [5] பெருங்கதையாடல் போன்ற இந்த நூலே இதற்குச் சிறந்த உதாரணம்; பவுலா கிளார்க் பெயின்(Paula Clarke Bain) இந்த நூலை அட்டவணைப் படுத்தியுள்ளார். ‘காட்டு வாத்தைத் துரத்துதல்’ என்பதற்கான அட்டவணை ‘பார் வேட்டையாடலை, காட்டு வாத்து’ என வருகிறது. பதின்பருவ லூயிஸ் கரோல்,(Louis Carroll) விளையாட்டாகத், தன் கையெழுத்து ஏட்டில் ‘பொதுவாக, உள்ள விஷயங்கள், 25’, ‘பொதுவாக உள்ள, விஷயங்கள்,25’, ‘பொதுவாக உள்ள விஷயங்கள், 25’ என்று முன்னர் எழுதியதுதான்!

‘அட்டவணையாளர்’ என்ற பட்டியலில் ‘வணக்கத்திற்குரிய’ என்ற ஆசிரியரின் இடைச் சொல்லும் புன்சிரிப்பைக் கொடுக்கிறது. அப்படியும் நமக்குப் புரியவில்லை என்றால், ‘தரமற்ற அட்டவணை’ என்ற அவரது பதிவு, ‘சுயம்பு அட்டவணையைப் பார்க்கவும்’ என்கிறது. ‘தானியங்கி அட்டவணையில்’ இரு உப தலைப்புகள்- ‘மனிதனை-254- போல அட்டவணையிட முயற்சி’ என்றும் அது ‘தோற்றுவிட்டது-304-7’ என்றும் சரியான நக்கல்.

இன்று நடைமுறையில் இருக்கும் அட்டவணைப் படுத்தும் செயலிகளின் போதாமையை, அது மனிதனுக்கு ஈடாகாது என்பதைக் குறித்த தெளிவுடனேயே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ரோபாடிக்ஸ் நிபுணரான கேட் டார்லிங் (Kate Darling), ‘ந்யூ ப்ரீட்’(2021) என்ற புத்தகத்தில், மனிதர்களை ரோபோக்கள் இடப்பெயர்ச்சி செய்துவிடும் என்று கருத்தை மறுக்கிறார். அவை நம் வளர்ப்பு செல்லப் பிராணிகள் போல என்று சொல்கிறார். அவை நம் வாழ்வின் உறுதுணை, வாழ்வை மேலும் வளப்பமாக்கும் ஒன்று என்றும் கூறுகிறார். ‘தரை முழுதும் சிதறிக்கிடக்கும் சிறு சதுரக் காகிதத் துண்டுகளினிடயே  படித்த பன்றியைப் போல’ என்று தான் அட்டவணைப் படுத்தும் சூழலைப் பற்றி வர்ஜீனியாவுல்ஃப் , வீட்டா சாக்வில்-வெஸ்ட்டிற்கு(Vita Sackville-West) எழுதிய காலக் கட்டத்திலிருந்து, கணினி நிரல்களைக் கொண்டு அட்டவணைப் படுத்தும் நிலைக்கு வந்திருப்பது நீண்டதொரு பயணமே. நவீன அட்டவணை எழுதுவோர், புத்தகம் இருக்கும் கணினி, அதை அட்டவணைப் படுத்த மற்றொரு கணினி, தேடுதல் இயந்திரமுள்ள ஒரு கணினியென்று தங்கள் முன் பரப்பி வைத்துக்கொண்டு இன்று பணியாற்றுகின்றனர்.

அந்தந்தக் கால தொழில் நுட்பத்திற்கேற்றவாறு ‘படித்தல்’ தன்னை தகவமைத்துக் கொள்கிறது எனத் தோன்றுகிறது என்கிறார் டங்கன். சீர்மைக் குறைவென ஒரு காலத்தில் கருதப்பட்டவை பின்னர் முக்கியமானவைகளாகலாம். இதுதான் அருமையான செய்தி. அட்டவணைப் படுத்தும் முயற்சிகள், அவை சந்தித்த இடர்கள், அவை அடைந்துள்ள இடம் எல்லாம் தற்செயலானவை அல்ல; சற்று அசட்டுத்தனமான, முன் கோண தலைப்பெழுத்துகளின் மூலம் டங்கன், அட்டவணைகளை எதிர்த்தவர்களையும், வளர்த்தவர்களையும் ஒரு சேரக் காட்டிவிடுகிறார்.  கிளர்ச்சி மிருகமென ஒரு காலத்தில் கருதப்பட்ட ஒன்று, நாம் அதிகம் பொருட்படுத்தாத, ஆனால் தேவையான திரைச்சீலை கம்பி, முடுக்கிபோல அதற்கான இடத்தைத் தன் எதிர்ப்பாளர்களின் எண்ணங்களை உதறிப் பெற்றுவிட்டது.

https://www.prospectmagazine.co.uk/arts-and-books/the-radical-power-of-the-book-index-history-review By Michael Delgado  dt August 26, 2021

பின்குறிப்புகள்

[1] HAL= Heuristically programmed algorithmic computer.  இது செயற்கை அறிவுள்ள கணினி, ஆனால் ஒரு கட்டத்தில் அது உயிர் பெற்று தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய எந்திரம் போல இயங்கத் தொடங்குகிறது. அது ஒரு தோற்றமா, விண்கல மாலுமிகளுக்குத் தெரிவிக்கப்படாத மாற்று செயல்திட்டத்தை அரசு அந்தக் கணினியில் பொதித்திருந்ததா என்பதெல்லாம் அந்தத் திரைப்படத்தில் விடுவிக்கப்படாத முடிச்சுகள். இங்கு சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்ட மேற்படி தகவல்களுக்குப் பின்னே பற்பல தொழில் நுட்பத் தகவல்களும், அறிவியல் சோதனைகளும், தர்க்கப் பிரச்சனைகளும், தத்துவம்/ அறம் குறித்த விசாரங்களும் உண்டு. அவற்றின் சில தகவல்களை இந்த விக்கிபீடியா குறிப்பு கொடுக்கிறது – https://en.wikipedia.org/wiki/HAL_9000

2. கிரேக்க யூதர்கள். இரு கலாசாரத்தின் விளைவாக ஏற்பட்ட ஒன்று.     கலை, அறிவியல் போன்ற அனைத்திலும் இது இடம் பெற்றது.

3. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரோமானியக் கவிஞர்களைப் பின்பற்றி ஆங்கிலத்தில் எழுதியவர்கள்.

4. மிகக் கொடுங்கோலரான அரசன். எதிர்ப்போரரை  காளைகளால் வதைத்து கொல்பவனாகச் சொல்லப்பட்டவன்; ஆனால், தன் ஆட்சிப் பிரதேசத்தில் தண்ணீர், சாலைகள் என மக்களுக்கு வசதிகளும் செய்தவன். அவன் இறந்த நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவனை தத்துவ ஞானி என்றும், இலக்கிய ஆர்வலர் என்றும் போற்றினார்கள்.

5. நூலின் இடையில் அந்த நூலைப் பற்றியே விமர்சனம், அல்லது வேறொன்றிலிருந்து ஒன்றைக் கையாளுதல் போன்றவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.