
பரட்டைத் தலை, பல வார தாடியுடன், வேலை வெட்டி இல்லாத அழுக்குத் தமிழ் அராத்து ஹீரோக்கள், அழகான வட இந்திய மாடல் ஃபிகர்களை, கங்கனா ரனாவத்களையும், தீபிகா படுகோன்களையும் துரத்தி துரத்திக் காதலிக்கிறேன் பேர்வழி என்று வன்கொடுமை செய்வதும், கோடிகளில் பணம் வாங்கிக் கொண்டு அந்த அழகிகள் நம் தரித்திரம்+அழுக்குக் கதாநாயகர்களின் பின்னாடியே வழிந்து கொண்டு ஓடுவதுமாக தமிழ் சினிமா நம்மை மூன்று மணி நேர சாவடி அடிக்கும்போது, மலையாள சினிமா எங்கேயோ போய் விட்டது. அதுவும் சமீபத்திய ‘நவரஸா’வெல்லாம் வாந்தி வரவழைக்கிற கொலைக்குத்து ரகம். இல்லாவிட்டால் ஐந்து நிமிஷம் கூடத் தொடர்ந்து பார்க்கமுடியாத ‘ஜெகமே தந்திரம்; தான் நமக்கு வாய்க்கிறது. என்ன செய்வது? நம் தலைவிதி அப்படியாகி விட்டது.
ஏற்கனவே செம்மீன், தகடுகள், துலாபாரம் போன்ற யதார்த்த சினிமாவுக்கு பெயர்போன மலையாள சினிமா, ஹீரோவுக்கு சம்பளம் 80 கோடி, தயாரிப்புச் செலவு 200 கோடி என்றெல்லாம் நம்மைப் போல் பிதற்றுவது இல்லை. கஷ்டத்தில் நொடித்துக் காணாமல் போவதுமில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வருடத்திற்கு 400 முற்றிலும் முடித்த படங்களாவது முடங்கிக் கிடக்கின்றன என்று எல்லாப் பேட்டிகளிலும் மூக்கால் அழுகிறார்கள். ஏன், தற்கொலையே கூச செய்து கொள்கிறார்கள். அதுவும் தற்கால தமிழ்ப்பட நிலை இன்னமும் படு மோசம். ஹீரோக்கள் தான் கதையை, இயக்குனரை, சக நடிகர்களை, விநியோகஸ்தரை எல்லாவற்ரையும் முடிவு செய்கின்றனராம்.
சுத்தம்!
சில ஆண்டுகளுக்கு முன், நண்பர் ஜெயமோகன் திரைக்கதை எழுதிய ஒரு மலையாளப் படத்தில் குணச்சித்திர வில்லனாக நடிக்க எனக்கு ஒரு அழைப்பு வந்தது. கதையை எழுதி முடித்தவுடன் எனக்கு அது பொருத்தமான ரோல் என்று முடிவு செய்து ஜெயமோகன் என்னைக் கூப்பிட்டார். ஆனால், இயக்குனர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். ஜெயமோகனின் தீவிர சிபாரிசின் பேரில் அவர் என்னை அழைத்துப் பேசினார். படம் மொத்தமும் 75 சீன்கள் என்றும் 55 சீன்களிலாவது எனக்கு வேலை உண்டு என்றும் சொன்னார். முதலில் சரி என்று ஒப்புக் கொண்டேன்.
அதற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்ட தயாரிப்பு நிர்வாகி என்னிடம் 50 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கேட்டதுமல்லாமல், சம்பள விஷயத்தில் ரொம்பவும் கறாராக இருந்தார். விமானப் பயணம் எகானமியில்தான் என்றும் அடம் பிடித்தார். எனக்கு அப்போது கால் முட்டியில் ஒரு பிரச்னை இருந்ததால் என்னால் பிசினஸ் கிளாஸ் இல்லாமல் வரமுடியாது என்று நானும் சொல்ல, அந்தப் பட வாய்ப்பே எனக்குப் பறிபோனது. அதில் எனக்குப் பெரிய வருத்தம் இல்லையென்றாலும், அவர்களுடைய வெளிப்படையான நேரடி அப்ரோச் எனக்குப் பிடித்தது. மொத்தப் படத்துக்கும் எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு விலைக்கு விற்கிறார்கள், சாட்டிலைச் சேல்ஸ் எவ்வளவு என்று எல்லாவற்றையுமே அவர்கள் ஓப்பனாக என்னிடம் பேசினார்கள். நானும் அந்த வியாபாரம் எப்படி என்று புரிந்துகொண்டு ஒதுங்கி விட்டேன். ஜெமோவிடமும் கூப்பிட்டு விளக்கம் சொன்னேன். அவரும் புரிந்து கொண்டார்.
எதற்கு அந்த என் சொந்தக் கதை, சோகக் கதை இப்போது என்றால், மலையாள சினிமாவின் நேரடி வெளிப்படை அப்ரோச்சை நான் பர்சனாகலாகவே தெரிந்து கொண்டவன் என்று உங்களுக்கும் அதைத் தெரியப்படுத்தவே.
மலையாளம் மட்டுமல்ல, இந்திய சினிமாவே இப்போது மாறி விட்டது. அமெரிக்க அமேஸானும், நெட்ஃப்ளிக்சும் நேரடியாகவே இந்திய சினிமாவில் களம் இறங்கி விட்டார்கள்.
இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், தற்போதைய OTT மார்க்கெட்டின் உயிர்நாடியை, போரடிக்காமல் கதை சொல்லும் வித்தையை மலையாள இயக்குனர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள்.
வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள். ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள் என்பதையும் நான் கவனிக்கிறேன்.
கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர். ஒரு காலத்தில் அசட்டுக் காமெடிக்குப் பிரபலம் ஆகியிருந்த மலையாள சினிமா காலாவதி ஆகி விட்டது. சீரியசாக ஒரு விஷயததை எடுததுக்கொண்டு அதை அக்கு வேறு ஆணி வேறாக நிர்த்தாட்சண்யமாக அலசி சினிமாவின் உச்சக்கட்டத்தை சுலபமாக எட்டி விடுகிறது இன்றைய மலையாள சினிமா.
தமிழிலும் மலையாளத்திலும் ‘குருதி’ என்றால் ரத்தம் தான். ஆனாலும் Ritual Slaughter என்று பட விளம்பரத்தில் போட்டிருந்தார்கள். படத்தின் தலைப்பு, ஸ்டில்கள் எல்லாமே ரொம்ப டார்க் ஆக இருந்தன.
கொஞ்சம் தயங்கியபடிதான் படம் பார்க்க ஆரம்பித்தேன் என்பதே உண்மை.
கேரள அத்வான மலைக்காடு ஒன்றில் படம் ஆரம்பிக்கிறது. சின்னஞ்சிறு கிராமம். எண்ணினால் பத்து வீடுகள் கூடத் தேறாது. சமீபத்திய நிலச்சரிவு ஒன்றில் ஒரு ஹிந்து குடும்பமும் ஒரு முஸ்லிம் குடும்பமும் பல உறவினர்களைப் பறிகொடுத்துவிட்ட சோகப் பின்னணி. உடைந்து விட்ட ஒரே பாலம், வெளி உலக தொடர்புகளையும் துண்டித்து விடுகிறது. எங்கும் மழை, சகதி, சேறு, இருட்டு.
படம் த்ரில்லர் வகை என்பதால் முழுக் கதையும் சொல்லலாகாது. ஆனாலும் சில பல அடிப்படையான விஷயங்களை மேலோட்டமாகச் சொல்ல முடியும்.
தப்பியோடி வந்த ஒரு கொலையாளியும் அவனைத் துரத்தி வரும் ஆயுதப் போலீஸும், யாரும் எதிர்பாராத பல முஸ்லிம் தீவிரவாதிகளும் சேர்ந்து ஒரே வீட்டுக்குள், ஓர் இரவில், ஒருவனை வேட்டை ஆடுவது, அதன் அதிரடித் திருப்பங்கள் என்பது ரொம்பவும் சாமர்த்தியமான ஸ்க்ரிப்ட். யாருக்கு யார் நண்பன், எதிரி, உறவா, பகையா என்பதெல்லாம் ஆச்சரியத் திருப்பங்கள்.
அனிஷ் பன்யாலின் எழுத்து சாமர்த்தியமும், எதிர்பாரா நெத்தியடி வசனங்களும், கதை மாந்தரின் தனித்தனி குணாதிசயங்களும், மதச் சண்டைகளில், அடிப்படைவாதிகளின் தீவிரத்தில், எதையும் மழுப்பாமல் நேரடியாகப் பட்டவர்த்தனமாகக் கதை சொன்ன விதமும் …. அடேங்கப்பா! என் முதல் கன்கிராட்ஸ் அனிஷுக்கே.
அடுத்து, இயக்குனர் மனு வாரியருக்கும், காமெராமேன் அபிநந்தன் ராமாநுஜத்திற்கும் இரண்டு பெரிய பொக்கேக்கள்!
காமெரா செட்டப்புகளில், திடீர் க்ரேன் ஷாட்களில், காட்சிக் கோணங்களில் … நமக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ஒவ்வொரு கேரக்டரும் பின்னி எடுக்கிறது. உறுத்தாத கதை சொல்லல்! அதே சமயத்தில் கதை தொய்ந்து விடாமல், திடீர்த் திருப்பங்கள்!
படத்தின் பல காட்சிகளின் palpable tension எனக்கு Sidney Lumet ன் க்ளாசிக் ’12 Angry Men’ படத்தை நினைவூட்டியது. Edge of the seat என்பார்களே, அப்படியொரு ப்ளட் ப்ரஷர் பில்டர். இதய பலவீனம் உள்ளவர்கள் ‘குருதி’யைப் பார்க்காமல் இருப்பது நல்லது.
என்னதான் ரோஷன் மாத்யூ (கப்பேலா) பிரமாதமாகப் பண்ணினாலும், படத்துக்கு ஒரு ஸ்டார் வேல்யூ தேவை என்பதால் ப்ரித்விராஜ் சுகுமாரன் தேவைப்படுகிறார். அவர் வேலையை அவர் கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆனால் அங்கேயும் ஒரு ஆச்சரியம் நமக்குக் காத்திருக்கிறது. அவரே இந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர்! ஆனாலும் தயாரிப்பாளர் என்பதால் அவருக்குக் கதையிலோ காட்சி அமைப்புகளிலோ தனி ட்ரீட்மெண்ட்ஏதும் இல்லை. சாக்லேட் பாயாக நாம் பார்த்திருக்கிற ப்ரித்விராஜ் இதில் உணர்ச்சி பொங்கும் மதவெறியாளனாக, பயங்கரவாதியாகவே வருகிறார். அதற்குத் தேவையான ரௌத்திரம் அவர் கண்களில் தெறிக்கிறது. அந்தக் கேரக்டரின் தீவிர நம்பிக்கையை அவர் நம்மிடமும் சுலபமாகக் கடத்துகிறார் என்பது நேர்த்தியான நடிப்பு. சண்டைக் காட்சிகளில் நமக்கு வலிக்கிறது.
தற்கால இந்தியாவின், குறிப்பாகக் கேரளத்தில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தீவிர முகத்தையும், கதையூடே மதம் கடந்த ஒரு காதலையும், கதை மாந்தரின் உயிரை உலுக்கும் ஒவ்வொரு சோதனையையும், முடிவெடுக்கும் வேகத்தையும் கதை, படு வேகத்துடன் யதார்த்தமாக முன்னெடுக்கிறது.
அதுவும் அந்தக் க்ளைமேக்ஸ்! நான் எதிர்பார்த்த Cliche தான் என்றாலும், ஒண்ணாங்க்ளாஸ், சேட்டன்ஸ்!
பாசாங்கில்லாத நிதர்சனக் கதையின் க்ளைமேக்ஸுக்காகவே இந்தப் படம் ஆஸ்கார் பரிசு பெற வேண்டும்.
ஆஸ்கார் பரிசு வாங்குகையில் நண்பர் ஏ ஆர் ரஹ்மான், “All my life I have had a choice of hate and love. I chose love and I am here.” என்று ஏன் சொன்னார் என்பது ‘குருதி’யில் தெறிக்கும் உண்மை.
தமிழர்களாகிய நாம் ஒரு தமிழ்ப் படத்தில், ஒரு கற்பனைக் கதையில் தேவர், முதலியார், அய்யர் என்றெல்லாம் ஜாதிப் பெயர்கள் வந்துவிட்டாலே கூட நாம் மறியல், கடையடைப்பு, போராட்டம் நடத்தும் அசட்டு அரசியல் மக்குப் புண்ணாக்குகள் ஆகி விட்டோம். நமக்கு தூபம் போட்டு ஊதிப் பெருக்கி விட ஆயிரம் பொறுக்கிக் கட்சிகள். கொடுமை!
கமலின் விஸ்வரூபம் பட்ட பாட்டை நாடே அறியும்😢. அதில் எத்தனை அரசியல், தீவிரவாதப் பொறுக்கிகள் குளிர் காய்ந்தார்கள், காசு பார்த்தார்கள், அரசாங்கமே அவரை வன்மத்துடன் பந்தாடியது என்பதெல்லாம் நம் தமிழ் சினிமாவின் சோக வரலாறு. அதை நான் மிக மிக அருகில் கமல் வீட்டிலிருந்தே பார்த்து வெம்பிப் போனேன்.
ஆனால் சேட்டன்கள் ஒரு படத்தை, படமாக மட்டுமே பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டார்கள். அங்கே நடிகர்களும் புரட்சி வசனம், குறியீடு சீன்கள், மாஸ் காட்டுதல் என்றெல்லாம் யாரும் பெனாத்துவதும் இல்லை. ஸீன் வைக்கச் சொல்வதில்லை. பல படங்களிலும் ஹிந்து, முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், எடுத்துக்கொண்ட கதைக் கருவின் வெற்றிக்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவது பெரும் ஆரோக்கியமான நிலை.
அதற்காக அங்கே மதப் பிரசார நெடி சூழ் சினிமாவே இல்லையா என்று கேட்காதீர்கள். அதுவும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சமீபத்திய பெரும்பான்மை மலையாள வெற்றிப் படங்கள் கட்டுடைப்பனவாகவே இருக்கின்றன. அவை தமிழ் நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும், உலக சினிமாவிலும் மரியாதை பெறுவது சினிமா என்கிற கலைக்கே பெரும் வெற்றி.
‘ட்ரான்ஸ்’ நினைவிருக்கிறதா? கிறித்துவப் பசப்புரைகளை, ஏமாற்று மோசடிகளை அங்கே இரக்கமில்லாமல் சாடினார்கள். கேரளாவில் கிறித்துவப் பெரும்பான்மை உள்ள செண்டர்களிலும் அந்தப் படம் சக்கைப்போடு போட்டது.
‘குருதி’ மலையாளப் படங்களைப் பல படிகள் உயர்த்தி விட்டது.
குருதி -2 கண்டிப்பாக வரப் போகிறது. அதையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!
8/10
அருமையான இந்தப் படத்தை இதுவரை பார்த்து ரசிக்காதவர்களை, பார்த்து ரசிக்க வைக்கும் அட்டகாசமான விமர்சனம். வாழ்த்துக்கள்.
காணெக்காணெ டஃப் ஃபைட் கொடுக்குதே!!!
இந்த கட்டுரையை பாதி தாண்டும் போதே கண்டிப்பாக இவர் Trance படத்தை பார்த்திருப்பாரே, ஏன் அந்த படம் பற்றி ஏதும் சொல்லவில்லை என்று நினைத்தவாறே வாசித்தேன், இறுதியாக நீங்கள் அப்படத்தை தொட்டதும் தான் அப்பாடா என்று இருந்தது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் இன்னும் நிறைய ஸ்ரீநிவாசன் அவர்களின் படங்கள், அபர்ணா சென், ரித்துபோர்னோ கோஷ் அவர்களின் படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுங்கள், நமக்கு பல ஆச்சர்யங்களை தருவன இவர்களின் படங்கள்.