காவிய ஆத்மாவைத் தேடி… -3

This entry is part 3 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

முந்தைய பகுதி:

பல காவியக் கொள்கைகளைப் பற்றி இதுவரை பார்த்தோம். கொள்கையின் கொள்கை (meta theory) என்ற அளவில் ஒரு கொள்கையைச் சொன்னவர் க்ஷேமேந்திரர். ‘ஔசித்யவிசார சர்ச்சா’ என்ற தமது நூலில் காவியத்தின் உயிர் ஔசித்யமே என்று கூறுகிறார். ஔசித்யம் (Aucitya) என்றால் என்ன? எதற்கு எது பொருத்தமுற அமையுமோ அதை அதற்கு உசிதம் என்று கூறுவர். அவ்வாறு உசிதமாக அமையும் தன்மை ஔசித்யம். பொருத்தமுறப் பல காவிய நலன்களைக் கோப்பது ஔசித்யம் ஆகும். காவியம் இயற்றுவோரும், காவியத்தை ரசிப்போரும், கவியத்தை விமரிசிக்கும் விமரிசகர்களும் இந்த ஔசித்யத்தைக் கைக்கொள்ளுதலே சிறந்தது.

கி பி 1005 – கி பி 1050 ல் வாழ்ந்த போஜராஜன் மிகச்சிறந்த சாஹித்ய புலவன். (திறனாய்வுத் துறை ஆசிரியன்) சரஸ்வதீ கண்டாபரணம், சிருங்கார ப்ரகாசம் என்ற நூல்களை இயற்றியவன். போஜன் எழுதாத துறை இல்லை என்னும் அளவிற்குப் பன்னூல் யாத்தவன். குந்தகர் எல்லா அலங்காரங்களையும் வக்ரோக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேர்த்தது போல், போஜன் எல்லா காவிய நலன்களையும் குணம், ரீதி, அலங்காரம், விருத்தி, ரஸம் அனைத்தையும் அலங்காரம் (மொழிக்கு அழகூட்டுவது) என்று ஒன்று சேர்க்கிறார். காந்தி என்னும் குணத்தை ரஸத்தின் குணமாக்குகிறார். ‘குற்றம் கடிந்து, குணங்கள் கொண்டதாய், அணிகளைப் பாங்குறச் சேர்த்து இயற்றப்படும் காவியத்தில்தான் சுவை கேடின்மை விளையும்’ என்று போஜன் கூறுகிறார்.

மேலும் ரஸம் என்பதைப் பிரதானமாக்கி அதற்கு அலங்காரம் என்பதை அடிப்படை ஆக்குகிறார் போஜன். ‘ரஸம்’ என்ற கொள்கையிலும் சிருங்கார ரஸமே பிரதானம், சிகரம் என்பது போஜன் கருத்து. இந்த ஒற்றை ரஸமும் உண்மையில் ஒரு சேதனனுள் (அறிவுள்ள மனிதனுள்) ஒரு ரசிகனுள், ஒரு கவிஞனுள், ஒரு பண்பட்ட மனிதனுள் எழுகின்ற சாத்விக அஹங்காரமே என்பது போஜராஜனின் புதுவகையான உளவியல் சார்ந்த அழகியல் கருத்து. இந்த ஒற்றை அடிப்படை அஹங்காரமான சிருங்காரம் எட்டு தலைகளுள் ஒன்றான, ஆண் பெண் விழைவான இன்பச் சுவையைக் குறிக்காது. அந்த இன்பச் சுவைக்கும் சிருங்காரம் என்ற பெயரையே பயன்படுத்தி போஜனே இந்தக் கருத்துக் குழப்பத்திகு ஒரு காரணம் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் உண்மைதான். இந்த ஒற்றை ரஸமான அஹங்காரத்தை அபிமானம், சிருங்காரம் என்று போஜன் கூறுகிறார். இந்த அஹங்காரம் இரண்டாவது நிலையில் பல பாவங்களாகப் (49 பாவங்கள்) பிரிகிறது என்கிறார். கடைசி நிலையில் அனைத்தும் இந்த அஹங்காரத்துக்கே வந்து முடிகிறது என்றும் கூறுகிறார்.

பலர் பழங்காலத்திலும் (உதாரணமாக பரிமேலழகர்), தற்காலத்திலும் போஜரின் சிருங்காரத்தை ஆண் பெண் காமச்சுவை என்று கொண்டு விளக்கமும், விமரிசனமும் செய்துள்ளனர். திரு மு கு ஜகந்நாத ராஜா அவர்களும் தம்முடைய ஔசித்ய விசார சர்ச்சா என்பதின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் ப்ராய்டின் கொள்கைக்கு (காம இச்சை என்ற அம்சத்தில்) போஜனின் சிருங்காரம் முன்னோடி என்பது போல் கூறியிருப்பதும் மீள்சிந்தனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியதாகும்.

பதினோராம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் வந்த மம்மடர் (Mammaṭa) த்வனிக் கொள்கையை அதன் எதிர்வாதங்களான அனுமானக் கொள்கை முதலியவற்றிலிருந்து திறமான வாதங்களால் காத்து நன்கு நிறுவுகிறார். கவிதை என்பது தோஷங்கள் அற்றதாய், குணங்கள் கொண்டதாய், அலங்காரங்கள் உடைத்தாயிருக்கும் சொல்லும் பொருளுமான சேர்க்கை என்கிறார். மம்மடரின் நூல் காவியப் பிரகாசம் என்பதாகும். மம்மடரின் காலத்தோடு சாஹித்ய சாத்திரக்காரர்களின் படைப்பாக்கக் காலம் முடிவுக்கு வருகிறது எனலாம்.

மம்மடரைப் போலவே காவிய சாத்திரத்தின் பல்வேறு கூறுபாடுகள், கருத்துகள் குறித்து விச்வநாதர் என்பவர் தமது சாஹித்ய தர்ப்பணம் (கி பி 14ஆம் எநூற்றாண்டு) என்ற நூலில் எழுதும்போது, ரஸத்தைப் பற்றி யோக ரீதியான ஒரு விளக்கம் தருகிறார். அதாவது சத்வ குணம் மேம்பட்டிருக்கும்போது நம்மை நாமே ஆனந்த நிலையில், பந்தங்கள் நீங்கிய ஒருவித மோக்ஷ நிலையில் உணர்கிறோம். இது அநந்தம் (முடிவற்றது) என்பதைப் பற்றிய யோகியின் சாக்ஷாத்காரத்திற்கு ஒப்பானது. இந்த உணர்வு ஒருவித சமத்காரமாக, அனுபவ சாமர்த்தியமாகச் சொல்லத்தகும். இதுவே ரஸம். இந்தச் சாமர்த்தியம் என்பது மனத்தின் விஸ்தரமே (விரிவே) ஆகும். இந்த விரிவு என்பது வியப்பு அல்லது அத்புதம் ஆகும். இந்த வியப்பே எல்லா ரஸங்களுக்கும் அடிப்படை. இந்த அற்புத ரஸமே ஒரு பெரும் தனிச்சுவை. மற்றவை அதனுள் அடங்கும்.

ஜயதேவர் என்பவரின் அலங்கார நூலான சந்திராலோகத்திற்கு குவலயானந்தம் என்ற விளக்க நூலும், சித்ர மீமாம்ஸை என்ற அணி நூலும் எழுதிய அப்பய்ய தீக்ஷிதர் (கி பி 1556 – 1628) த்வனி சித்தாந்தத்திற்கு உடன்பட்டவர். அத்வைதம், சைவம், அலங்காரம், மீமாம்ஸை என்ற பல்துறை பலநூல் யாத்த மேதையாகத் திகழ்ந்த தீக்ஷிதர் பிறந்த ஊர் தமிழகத்தில் ஆரணிக்கருகில் உள்ள அடையபலம்.

வடமொழிக்குத் தமிழ்நாடு தந்த நன்கொடை தீக்ஷிதர் என்றால், ஆந்திரம் அளித்த கொடை பண்டிதராஜ ஜகந்நாதர் ( கி பி 1620 – 1660). ஷாஜஹான் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். ‘ரஸகங்காதரம்’ என்பது இவருடைய நூல். த்வனிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஜகந்நாதர், அழகுணர்ச்சியூட்டும் இனிமை தரும் சொல்லே கவிதை என்றார். காவிய அனுபவம் என்பது உள்முகமானது, அகவயப்பட்டது என்பது ஜகந்நாதஃரின் கருத்து. அதாவது காதலைப் பற்றிய காட்சிகளும், வர்ணனைகளும் இடம் பொழுது சூழ்நிலைக் குறிப்புகளோடு ‘ச்ருங்காரம்’ என்று சொல்லப்படாலும் அதில் வரும் காவிய ரஸத்தின் அனுபவம் அகம் சார்ந்த அனுபவம் ஆகுமேவொழிய, சாதாரண நடைமுறை வாழ்க்கையில் போல் புறத்தில் ஒரு தூண்டுதலால், உள்ளத்தே நிகழும் எதிர்வினையாக ஆகாது என்றார். (தமிழில் புறவயப்படுத்த முடியாமல் உள்ளத்தில் உணர்வாய் நிகழப்படுவதே அகம் என்ற கருத்து ஒப்பு நினைத்தற்குரியது)

மேலும் ரஸானுபவம் இந்த உலக அனுபவம் போல் அல்லாதது, சுயலாப வேட்கை அற்றது. ரஸானுபவமானது ‘துய்த்தலில் உண்மையாக’ இருப்பது. (அனுபவ சாக்ஷிகம்); உலக இயல்பற்ற உன்னத மகிழ்வாய் இருப்பது (அலௌகிக ஆஹ்லாதம்). இவையெல்லாம் கங்காதரரின் கருத்துகள். மனிதன் வேறு எந்தத் துறையிலும் தன்னுடைய மனத்தின் கோணல்களைப் பிறவியிலிருந்து, குழந்தைச் சூழலிலிருந்து உருவேற்றிக் கொண்டுவிட்ட சமுதாய, இன, குலச்சார்புகளைக் களைந்துவிட்டு, தனிப்பட்ட உணர்வு திகழும் மனிதனாக இயங்குவது கடினம். ஆனால் கலைத்துறையில்தான் மனித சித் என்பது தன்னை மூடியிருக்கும் ஆவரணங்களை (திரைகளை) எல்லாம் பொத்துக்கொண்டு, அந்தத் திரைகள் எல்லாம் அற்றுவிழ மயர்வறு மதியோடு திகழுதல் சாத்தியம் என்பது ஜகந்நாதரின் உயரிய கருத்துக் கொடைகளில் ஒன்று. இதற்கு அவர் அளித்திருக்கும் பெயர் ‘பக்ன ஆவரண சித்’ (திரையற்றுத் திகழ்மதி).

அலங்கார சாத்திரம் ஜகந்நாதருக்கும் பின்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ’காவ்ய கலாநிதி’க்காரர் ஸ்ரீகிருஷ்ண ஸுதீ என்பவர் காந்தா ஸம்மிதா என்ற கொள்கையை அடிப்படையாக வைத்துக் காவிய இலக்கணம் சமைத்திருப்பதாக கா.காயத்ரி தேவி கூறுகிறார். ‘காதலின் சல்லாபன் போல் ஸரஸ மொழிகளால் நிறைந்த வாக்கியமானது காவியம். காந்தா ஸம்மிதா, ப்ரபு ஸம்மிதா, மித்ர ஸம்மிதா என்று மூன்று தோரணைகளில் வாக்கியங்கள் அமையக் கூடும் என்பது அறிஞர்களின் கோட்பாடு. அதாவது ப்ரபு ஒருவன் அடிமைக்குக் கட்டளை இடுவது போல் ‘செய்’ செய்யாதே’ போ’ வா’ என்று கட்டளைத்தொனியில் அமைதல் ‘ப்ரபு ஸம்மிதா’. வேத வாக்கியங்கள் உதாரணம். நண்பனைப் போல் நல்லதும் கெட்டதும் எடுத்துரைத்து, எடுத்துக்காட்டி, இடித்துக்காட்டி வற்புறுத்துவது மித்ர ஸம்மிதா. சாத்திரங்களின் தோரணை இதுவாகும். காதலி போல, நேரடியாக இன்றி மறைமுகமாக, குறிப்பாக, குழைவோடு மனத்தையும், விருப்பத்தையும் தூண்டும் வகையில் சொல்லும் தோரணை ‘காந்தா ஸம்மிதா’.

சொற்பொருள் குற்றம் நீக்கி, குணங்கள் கொண்டு, அணிகள் பூண்டு வெளிப்படு காவிய எழிலை விரிக்கப் புகுவது அலங்கார சாத்திரம். எனவே காவியத்தின் இயல்பை விமரிசிப்பதுவே, காவியத்தைச் சார்ந்த ரஸம், குணம், அலங்காரம் இவற்றை விளக்குவதே அதன் வேலை என்பது ஆலங்காரிகளிடம் உள்ள கொள்கை. இதை இன்றைய ஸ்ட்ரக்ச்சுரலிஸம் (அமைப்புவாதம்) திறனாய்வுக் கொள்கையில் அடக்கலாம். ‘த்வனி’யில் மற்ற திறனாய்வுப் பார்வைகள் அடங்கும். காவியம் இயற்றியவர் மனோநிலை என்ன? எங்கு பிறந்தார்? எந்தச் சூழலில் வளர்ந்தார்? அவருடைய சமுதாயச் சூழல் அவருடைய எழுத்தில் தெரிகிறதா? எழுதியது ஆணா? பெண்ணா? பெண் எழுத்தின் நிலை என்ன? ஆதிக்கக் கலாசாரத்திற்கும் காவியத்தின் தன்மைக்கும் தொடர்பு உண்டா? – என்பன போன்ற இன்றைய திறனாய்வுத் துறைகளான Psycho-analytic, Feminist, deconstructive, post-colonial முதலியவற்றின்பாற்பட்ட பார்வைகளும், கேள்விகளும் வடமொழித் திறனாய்வுச் சூழலில் கேட்கப்பட்டால் அலங்கார சாத்திரம் என்ன பரிமாணங்கள் அடையக் கூடும்? ‘த்வனி’, ரஸம்’, ‘வக்ரோக்தி’, ‘ஔசித்யம்’, ‘ரீதி’, குணம் முதலிய அலங்கார சாத்திரக் கருத்துகள், வடமொழி காவிய சாத்திரப் பார்வைகள், தற்கால திறனாய்வுப் பார்வையோடு இணைந்து என்ன பரிமாணங்களைப் புலப்படுத்தும்?

கவிதைக்கு எது ஆத்மா? என்று கேட்டபடியே அலங்கார சாத்திரம், காவிய இயல்பின் விசாரம் கடந்த காலமெல்லாம் தாண்டி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1977ல் வாரணாசி இந்து பல்கலைக் கழகத்த்தைச் சேர்ந்த ரேவா ப்ரஸாத த்விவேதி சநாதனா, காவியத்தின் ஆத்மா அலங்காரமே, ‘போதுமானது என்ற பொருளில்’ என்று கூறுகிறார்.

‘கவிதையின் ஆத்மா எது?’ என்ற கேள்வியில், ‘கவிதையின் உடல் எது?’ என்ற கேள்வியும் தொனிக்கிறது. சொல்லும் பொருளும் சங்கமித்த இயைபுதான் கவிதையின் உடல் எனலாம். கவிதையின் ஆத்மா எது என்பதன் பதில், ‘ஆத்மா என்றால் என்ன?’ என்ற கேள்வியின் விடையிலிருந்து கிடைக்கிறது. ரசிகனின் கோணத்திலிருந்து பார்த்தார் பரதர். படைப்பவனின் கோணத்திலிருந்து பார்த்தார் ஆனந்தவர்த்தனர். கவிதை என்பது எங்கு இருக்கிறது? ரசிகனிடத்திலா, படைப்பவனிடத்திலா அல்லது இடைப்பட்ட நிகழ்வின் கணப் பிரதேசத்திலா? – கேள்வியின் முக்கோணம் சுழன்றபடிதான் இருக்கும்.

(முற்றும்)

Series Navigation<< காவிய ஆத்மாவைத் தேடி… – 2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.