ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை

(கோன்ராட் எல்ஸ்ட்டின் ஹிந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்)

ஆட்ரி ட்ருஷ்கியின் “Aurangazeb: The Man and the Myth” புத்தகத்தை முழுமையாக விமர்சிக்கத் தேவையான மூல ஆதார நூல்களைப் படிக்க நேரம் போதாமையால் அதைச் செய்யவில்லை. தேவை ஏற்பட்டால் செய்வேன். அதைவிட முக்கியமானதும் சிக்கல்கள் நிறைந்த ஹிந்து எண்ணங்களைப் பற்றியதுமான வரலாற்று ஆய்வில் முனைந்துள்ளேன். மேலும் இஸ்லாமிய வரலாறு எளிமையாகவும் அதைப் பற்றிய முடிவுகளுக்குத் திருத்தமும் வேண்டியிராததால், அதன் மேலுள்ள ஆர்வம் விட்டுப்போய்விட்டது. கோட்பாடு எனப் பார்த்தால் இஸ்லாம் தவறான ஒன்றாகும். வரலாற்று ரீதியில், இஸ்லாம் நம்பிக்கையில்லாதவர்களிடையே, அதிலும் முக்கியமாக, ஹிந்துக்களிடம் ஓர் எதிர்மறையான பதிவாகத்தான் உருவாகியுள்ளது. சமயச் சார்பற்றவர்களும், அவர்கள் பேச்சைக் கேட்டு ஏமாறும் வெளிநாட்டினரும், தொண்டை உலருமளவிற்கு நேரடியாகவும் நன்றாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை விவரங்களை மறுத்துக் கூறிக்கொண்டே இருக்கலாம். அதைக் கேட்பதற்குதான் ஆட்கள் யாருமில்லை.

இருந்தாலும் சில பொதுவான நோக்கீடுகளை இங்கே தர விழைகிறேன். ஔரங்கசீப்பின் கண்டனத்துக்குரிய செயல்களை இந்துக்கள் தவறாக எடை போடவில்லை. ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் மரபு வழியில்லாத முஸ்லிம்களுக்கும் இழைத்த குற்றங்களுக்காக ஹிந்துக்கள் ஔரங்கசீப் என்ற மனிதனையே முழுக்க முழுக்கப் பழிப்பது ஒரு தவறான கணிப்பாகும். அவர் தீமைகள் செய்தவன்; ஒரு தீய மனிதரல்லன்.

ஔரங்கசீப்பின் குற்ற உணர்வை வேறு மாதிரியாகக் காண்பிப்பதற்காக ஆட்ரி ட்ருஷ்கி செய்ததைப்போல் உண்மைக்குப் புறம்பான சுண்ணாம்புப் பூச்சை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. காசி விசுவநாதர் கோயில், கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்து அச்சிதிலங்ககளின்மேல் எழுப்பிய மசூதிகள் இன்றும் அவனது உருவ வழிபாட்டு எதிர்ப்புக்குச் சாட்சியாக நிற்கின்றன. ஆனால் அவன் தெய்வ நம்பிக்கையுடையவன், துறவியைப்போல் வாழ்ந்தவன் என்பது சரிபார்க்கப்பட்ட விவரம். அவன் மண்டையில் என்ன ஓடியது என்பது புதிராக இருந்தாலும், அவன் காலத்து வரலாற்றுக் குறிப்புகள் அவன் தனக்குத்தானே ஓர் உயர்ந்த நன்னடத்தையை வகுத்துக்கொண்டு அதன் வழி நடந்தவன் என்கின்றன. உதாரணமாக, அவன் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில்தான் ஜீவனம் நடத்தினான். மேலும், அவனது தந்தை வரிப் பணத்தை தாஜ் மஹால் போன்ற கட்டிடங்களில் விரயமாக்கியதைக் கண்டிக்கவும் செய்தான்.

ஹிந்துக்களிடையேயும், பலர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் துறவிகளைப்போல் வாழ்ந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஆனால், எவருமே உருவ வழிபாட்டை எதிர்க்கவில்லை. அதே குணங்களையுடைய ஔரங்கசீப்பிற்கு மட்டும் என்னவாயிற்று? அதற்கான பதில் அவன் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கோட்பாட்டினுள் புதைந்துள்ளது. அக்கோட்பாட்டின் பெயர் இஸ்லாம். சிலருடைய வாழ்க்கையில் திடீரென மதப்பற்று சேர்வது உண்டு. இவ்வாறு அவர்கள் புதிதாகக் கண்டுகொண்ட அல்லது மேன்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட அம்மதம் கொடுக்கும் புதிய பூச்சினால் அவர்களது நடத்தையில் பல புதிய மாற்றங்கள் தெரியும். இஸ்லாம் மதத்தில் தீவிர ஆர்வளமுள்ளவர்கள் நபிகளின் வாழ்க்கையிலும், வாய்மொழிகளிலும் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் உடையவர்களாக இருப்பர். இவர்கள், அதே குறிக்கோள்கள்களுடன் வளர்க்கப்பட்டும் நடைமுறையில் கொண்டுவர ஆர்வமில்லாத சராசரி இஸ்லாமியர்களைப் போன்றவர்களல்லர். ஔரங்கசீப் முதல் பிரிவைச் சேர்ந்தவன். சீரிய இஸ்லாமியன். எனவே ஆளும் வகுப்பினருக்கு எதிரான சட்டங்களை இயற்றினான். ஆனால் அவை இஸ்லாமியச் சட்டவியலுக்குப் பொருந்தியதாகவே இருந்தன. எந்த பயபக்தியும் மதத்தின் மேலிருந்த பேரார்வமும் அவனைத் துறவற நிலைக்குக் கொண்டுசென்றதோ அதேதான் அவனது உருவ வழிபாட்டு எதிர்ப்புக்கும் காரணமாயிருந்தது.

இஸ்லாமிய ஆட்சியாளர்களும் போர் வீரர்களும் விக்கிரகங்களை உடைத்தெறியும்போது அவர்களது முந்தைய தலைவர்கள் செய்ததைச் சுட்டிக்காட்டித் தாங்கள் செய்வதை நியாயப்படுத்துவர். அதிலும் முக்கியமாக, மெக்கா நகரம் சரணடைந்தபின், நபிகளும் அவரது மருமகன் அலியும் எவ்வாறு உருவ வழிபாட்டுக்காரர் காபாவின் 360 விக்கிரகங்களைத் தங்கள் கைகளாலேயே அகற்றினார்கள் என்பதையும் அதன் பிறகு அவர் “ஒளி வென்றது இருள் அகன்றது” எனப் பிரகடனம் செய்தார் என்பதையும் சுட்டிக்காட்டுவர். (நபிகளின் பழமையான சுயசரிதை சிரத் ரசூல் அல்லா இதை விவரித்துள்ளது). பின்பற்றத்தக்க முஸ்லீம் என்பவர் நபிகள் போலவே வாழ்பவர் என்பதை எந்த ஓர் இறையியலாளரும் மறுக்க முடியாது.

ஔரங்கசீப் இறுதிக் காலத்தில் வழிபாட்டு எதிர்ப்பை நினைத்து வருந்தினாலும் அவர் மனமோ செய்கையோ மாறவில்லை. விக்கிரங்களும் கோவில்களும் தொடர்ந்து உடைந்து கொண்டுதான் இருந்தன. அவனது சமகாலத்தவர்களால் அவரது கொள்கையை ஜீரணம் செய்ய முடியவில்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவனது மனமாற்றம், மனோபாவத்தில் ஏற்பட்ட மாறுதலினால் அன்று. இந்து ஆலயங்களை உடைத்ததைப் பற்றிய மன வருத்தம் இவனது மதத்தில் பற்றற்ற, சாபக்கேட்டில் உழன்றுகொண்டிருந்த இந்துக்கள்மீது திடீரென்று இவன் கொண்ட கருணையினாலுமன்று.. இதற்கும் காரணம் இவனது ஆழ்ந்த மத நம்பிக்கைதான். இவனது கோவிலுடைப்பை எதிர்த்து இந்துக்கள் கொதித்தெழுந்ததால் இஸ்லாமிய மதம் ஆட்டம் கண்டது. இதற்குமுன் இஸ்லாம், கிட்டத்தட்ட 200 வருடங்களாகப் பெரும்பான்மையான இந்துக்களைக் கீழ்ப்படிய வைத்தாலும் சமரசமாகப் போனதால் கலகங்களை உண்டு பண்ணாமல் மேலும் மேலும் செழித்தோங்கியும் வலிமை வாய்ந்ததாகவும் மாறிக்கொண்டிருந்தது. சிவாஜி இஸ்லாமிற்கு எதிராகக் கிளப்பிய கலவரங்களுக்குப்பின் இந்தியாவில் இஸ்லாம் சரிவுப் பாதையில் விழ ஆரம்பித்தது. நபிகளைப் போலவே வாழவேண்டும் என்ற லட்சியம், மதத்தைத் திடப்படுத்தி வலிமை மிகுந்ததாக ஆக்கி இறுதியில் உலகனைத்தையும் தன்வசமாக்க வேண்டும் என்ற இஸ்லாமின் மிகப் பெரிய இலக்கிற்குக் குறுக்கே வந்துவிட்டது.

நான் இப்புத்தகத்தைப் பற்றி இன்னும் ஒன்று சொல்லவேண்டியுள்ளது, ஆட்ரியின் புத்தகம் ஔரங்கசீப் செய்த அட்டூழியங்களை வெள்ளைப் பூச்சு செய்யும் வேலைக்கு ஓர் அடையாளம். ஹிந்து மதத்தையும் அதன் கருத்துகளையும் எதிர்த்து வெளிப்படையாக நடந்துகொண்டிருக்கும் போரில், கிழக்காசியப் பண்டிதர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு எண்ணம் என்பதைப் பழகுகிறார்கள். இவர்கள் எண்ணமெல்லாம் ஒன்றேதான். அவர்களிடையேயுள்ள போட்டி, யார் இந்த எண்ணத்தை உரக்கவும் அழுத்தியும் கூறுகிறார்கள் என்பதுதான். 2014ல் சூரிச் நகரத்தில் ஐரோப்பிய கிழக்கு ஆசிய ஆய்வு மன்றம் (Europian association for East Asian Studies) நடத்திய ஒருநாள் மாநாட்டில் கலந்துகொண்டேன். அதில் வாசிக்கப்பட்ட ஆய்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஔரங்கசீப்பின் சம காலத்தவர்கள் அவரைப் புகழ்ந்து பதிவு செய்துள்ள விவரங்களைக் குறிப்பிட்டனர். இத்தகைய விவரங்களைக் கண்டுபிடிப்பது அரிதன்று. அவர்களுடைய முன்னேற்றமோ பின்தள்ளப்படுவதோ, இன்னும் சொல்லப்போனால், அவர்கள் உயிரோடிருப்பதே ஔரங்கசீப்பின் கையில்தான் இருந்தது. ஸ்டாலினைப் பற்றிக்கூட அவரது சம காலத்தவர்கள் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். கல்வித் துறையாளர்கள் இவற்றைப் படித்துவிட்டு ஸ்டாலின் மற்றவர்கள் நினைக்கும் அளவிற்குக் கெட்டவர் அல்லர் என்னும் வேடிக்கையான முடிவிற்கு வருகின்றனர்.

ஔரங்கசீப் நல்லவன் என்பதைச் சுட்டிக்காட்ட உபயோகிப்பது, குரு கோபிந் சிங் எழுதிய Zafar Nama அல்லது வெற்றிக் கடிதம். இக்கடிதத்திலிருந்து வேண்டுமென்ற சில பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்தால் கோபிந் சிங்கை ஔரங்கசீப்பைப் போற்றுபராகவோ கருத்தியல் தோழராகவோ கருத வாய்ப்புண்டு. இத்தருணத்தில் குரு கோபிந் சிங்கின் நிலைமை என்ன? எங்கும் நகரமுடியாத வண்ணம் சுவரோடு சுவராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கெதிராக எல்லாச் சீட்டுகளையும் தம் கையில் பிடித்துவைத்திருந்தவரின் தயவு தேவைப்பட்ட சமயம். எனவே, ஔரங்கசீப்பைப் பற்றிய தமது சொந்தக் கருத்துகளைத் தவிர்த்துச் சுமுகமான கடிதம் ஒன்றை எழுதினார். குரு கோபிந் சிங்கின் சினமும் வெறுப்பும் இதயத்தின் அடியிலிருந்து எழுந்தவை. இதைக் கல்வித் துறையினர் சாதுரியமாக மறுக்கமுயன்றால் அது அவமானத்திற்குரியதாகும். ஔரங்கசீப் கோபிந்த் சிங்கின் தந்தையையும் நான்கு மகன்களையும் கொன்றவன். தனிமையில் அவர் ஔரங்கசீப்பை மிவும் மோசமான வார்த்தைகளால் திட்டியிருப்பார் என்பதைப் பாட்டாளி மக்கள்கூட ஒப்புக்கொள்வர். ஒருவர் பாகுபாடு தெரியாத கிழக்காசிய அறிஞராக இருந்தால் மட்டுமே ஔரங்கசீப்பை குரு உண்மையாகவே புகழ்ந்தார் என நம்ப இயலும்.

சுருங்கச் சொன்னால், ஆட்ரியின் ஆய்வுப் புத்தகம், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்போல் தோன்றும் புத்தகங்களோடு சேர்ந்தாலும், உண்மையில், மற்ற புத்தகங்களைப் போலவே இதுவும் சுயமரியாதையுள்ள இந்து மதத்தை எதிர்த்து நடந்துகொண்டிருக்கும் போரில் அதன்மேல் வீழ்ந்த மற்றோர் அடி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

(The author’s letter replying to a review of Audrey Truschke’s book Aurangazeb: The Man and the Myth, published in the National Interest on 22 April 2017.)

Series Navigation<< “கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.