ஒரு டெனிஸ் ஜான்சன் கவிதையும் சில குறிப்புகளும்
Man Walking to Work
The dawn is a quality laid across
the freeway like the visible
memory of the ocean that kept all this
a secret for a hundred million years.
I am not moving and I am not standing still.
I am only something the wind strikes and clears,
and I feel myself fade like the sky,
the whole of Ohio a mirror gone blank.
My jacket keeps me. My zipper
bangs on my guitar. Lord God help me
out by the lake after the shift at Frigidaire
when I stop laughing and taste how wet the beer
is in my mouth, suddenly recognizing the true
wedding of passage and arrival I am invited to.
வேலைக்கு நடந்து செல்லும் மனிதன்
புலரி என்பது இதையெல்லாம் கோடானுகோடி ஆண்டுகள்
மறைத்து வைத்திருக்கும் ஆழியின்
கண்ணுறக்கூடிய நினைவைப் போல்
நெடுஞ்சாலையின் குறுக்கே கிடத்தப்படும் தன்மையே
நானோ அசைவதுமில்லை. அசையாது நிற்பதுமில்லை.
காற்றடித்து அப்புறத்தப்படும் ஏதோவொன்றுதான் நான்.
நான் ஆகாயத்தைப் போல் கரைந்தழிவதை உணர்கிறேன்,
ஒஹையோ முழுவதும் வெற்றுக் கண்ணாடியாவதையும்.
என் ஜேக்கட்டே என்னை இருத்தி வைக்கிறது. சிப்பர்
என் கிட்டாரை உரசி மோதுகிறது. ஃபிரிஜிடேரின் ஷிஃப்ட்
முடிந்து குளக்கரையில் பியரின் நீர்மை நாவில்
உறைக்கையில், பெயர்ச்சியும் வருகையும் பிணையும் உண்மைச்
சங்கமம் காண விடுக்கப்பட்ட அழைப்பை திடீரென்று
சிரிப்படங்கக் கண்டு கொள்கையில் கடவுளே என்னைக் காப்பாற்று.

குறிப்பு
That same ocean rolls now; that same ocean destroyed the wrecked ships of last year.
Moby Dick, Herman Melville
கடல் காக்கும் ரகசியங்கள் முத்தும் பவழமும் அல்ல, அது கொண்ட உயிர்களும், சிலப்பதிகாரம், டெம்பெஸ்ட், மோபி டிக் என்று நம் இலக்கியங்கள் வரையும் பேரிழப்புகள், உடைந்த கனவுகளின் சித்திரங்களும்தான். கடல் ரகசியங்களின் நினைவுகளைக் கண்ணுறும் வகையில் புலப்படுத்தும் தன்மை கொண்ட விடியல் சாதாரண ஒன்றல்ல, அது சாலையின் (freeway) குறுக்கே விழுந்து கிடக்கிறது என்றால் அதன் பொருளும் அவ்வளவு மகிழ்ச்சிக்கு உரியது அல்ல- கடல் கொண்ட கப்பல்களின் கூடுகள் போல் துருவேறிய, வெறிச்சோடிய உலகில் ஒளி பாய்ச்சுகிறது இந்த விடியல்.
எண்பதுகளுக்கு முன் எஃகு வளையம் என்றும் உற்பத்தி வளையம் என்றும் போற்றப்பட்ட பிரதேசத்தின் பகுதியாய் விளங்கிய ஒஹையோவில், அதன் மகோன்னதங்கள் மங்கி ஒவ்வொரு தொழிற்சாலையாக மூடப்பட்டு தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பப்படத் துவங்கிய நிச்சயத்தன்மையற்ற எண்பதுகளில், நாம் பயன்படுத்தும் ஃப்ரிட்ஜை முதன் முதலில் உற்பத்தி செய்த ஃபிரிஜிடேர் தொழிற்சாலையில் காலை ஷிப்டிற்கு நடந்து போய்க் கொண்டிருக்கும் இந்தக் கவிஞன் (1916ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, அமெரிக்க அடையாளங்களில் முக்கியமான ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் 1919 முதல் இயங்கிய இந்த தொழிற்சாலை கவிதை எழுதப்பட்ட 1987ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான் ஐரோப்பிய நிறுவனமான எலக்ட்ரோலக்ஸ்சுக்கு விற்கப்பட்டது), குறிப்பிட்ட தனித்தன்மைகள் கொண்ட ஒருவனல்ல, இவன் வேலைக்கு நடந்து செல்லும் மனிதர்களில் எவராகவும் இருக்கலாம் என்பதை தலைப்பு சுட்டுகிறது.
இங்கு நான் அசைவதில்லை, என்கிறார் டெனிஸ் ஜான்சன். நான் அசையாது நிற்கவுமில்லை. நிற்பதும் நடப்பதும் என் செயலல்ல, காற்று என்னை நகர்த்திச் செல்கிறது என்ற அளவில்தான் இருக்கிறேன், அதிலும் இப்போது ஆகாயம் போல் கரைந்து கொண்டிருக்கிறேன். என் மாகாணம் முழுமையும் பிம்பம் மறைந்த கண்ணாடி போல் வெறிச்சோடிக் கிடக்கிறது. என் மேற்சட்டைதான் என்னை நிறுத்தி வைத்திருக்கிறது. பை வேறு கித்தாரில் அடித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த விடியலின் கடப்பு அதற்கும் அப்பால் உள்ள வேறொரு கடப்பு நிலைக்கு கொண்டு செல்கிறது- கடவுளே என்னைக் காப்பாற்று, என்கிறான் அவன், தான் வேலையிலிருந்து திரும்புகையில் நிகழவிருக்கும் ஒரு கணத்தை நினைத்தபடியே. வேலை முடிந்து குளக்கரையோரம் வந்து கொண்டிருக்கும்போது, தன் சிரிப்பு அடங்கிப் போகும் வகையில் நாவில் பியரின் நீர்மை உறைக்கிறது, எந்த உண்மையான திருமணத்துக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்பதை திடீரென்று அவன் கண்டு கொள்ளுகிறான்.
கவிதையில் எதுவெல்லாம் ‘மணம்’ செய்து கொள்கின்றன- விடியலும் கடலும் கலக்கின்றன, கடல் மறைத்த ரகசியத்தை விடியல் கண்ணுறும் வண்ணம் வெளிப்படுத்துகிறது, தன் தன்மையைக் கொண்டே. காற்றும் உடலும். உணர்வும் ஆகாயமும். குளக்கரையும் பியரும்- வெளியே விரிந்து கிடக்கும் குளம், விடியல் (கடல்), காற்று, ஆகாயம், கவிதை எழுதப்பட்ட காலகட்டத்தின் பின்புலத்தில் எஃகுக்கும் துருவுக்கும், பணி இருப்புக்கும் நீக்கத்துக்கும். இவற்றின் நீர்மை கவிஞனின் நாவில் பியரின் நீர்மையாய்த் தட்டுப்பட்டதும் அவனது சிரிப்பு உறைகிறது. அவன் புரிந்து கொள்கிறான், இங்கு உண்மையில் எதன் வருகைக்கும் வெளியேற்றத்துக்கும் திருமணம் நடக்கிறது என்பதை.
‘True wedding of passage and arrival,’ விடியல் சாட்சியாக இரவுக்கும் பகலுக்கும் நடக்கும் இந்தத் திருமணம் நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் கூடலில் முடியப் போவது அல்ல- சாலையின் குறுக்கே தடை, மறையாது தடுக்கும் உறையாய் சட்டை, வெறிச்சோடிய கண்ணாடி, ஏன், கித்தாரில் இடறும் பை.
கவிதையின் தலைப்பு வேலைக்குச் செல்லும் மனிதன் என்றாலும் கவிதை வேலை விட்டுத் திரும்பி வரும் மனிதனிடத்தேயே தன் உச்சத்தை கண்டடைகிறது. போக்குக்கும் வரவுக்கும் நிகழும் உண்மைத் திருமணம் இந்த முரண்பாட்டில் உறைந்து நிற்கிறது. ‘The dawn is a quality laid across the freeway’- சாலையின் குறுக்கே சாய்க்கப்பட்ட தன்மை கொண்டது விடியல்: போவதற்கும் வருவதற்கும் என்ன இருக்கிறது என்று கவிதை ஆரம்பத்திலேயே கேட்டு விடுகிறது. இந்த ஸ்தம்பித்தல்தான் இரண்டுக்கும் நிகழும் உண்மைத் திருமணம். ஆதலால், கடவுளை நோக்கி அந்த அலறல்.
மூலத்தில் கூறுகளையும் அதை இம்மொழிபெயர்ப்பு எவ்வாறு கைப்பற்றுகிறது என்பதையும் சற்று பேசிவிடுவோம். கவிதை ஆங்கில செய்யுள் வடிவான Sonnet என்ற பிரசித்தி பெற்ற வடிவத்தில் இயற்றப்பட்டிருக்கிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு சிசிலியில் தொடங்கி டாண்டே, பெட்ரார்க், போன்ற இத்தாலியக் கவிஞர்களினூடே இங்கிலாண்டை பதினாறாம் நூற்றாண்டில் வந்தடைந்து சர் தாமஸ் வையட், ஹென்ரி ஹோவர்ட், போன்றவர்களால் வார்த்தெடுக்கப்பட்டு ஷேக்ஸ்பியரில் அதன் உச்சத்தை எட்டும் இக்கவிதை வடிவத்திற்கு ஒரு நீண்ட வரலாற்றுத் தொன்மமும் உண்டு. இத்தாலிய வடிவமும் (முதல் பகுதி எட்டு வரி ஆக்டேவாகவும் பிற்பகுதி ஆறு வரிகளைக் கொண்ட செஸ்டட்டாகவும் அமைந்திருப்பது) ஆங்கில வடிவமும் (நான்கு வரிகள் கொண்ட மூன்று குவார்ட்டெய்ன்களையும் ஒரு இருவரி கப்லட்டையும் கொண்டது) சற்றே வேறுபட்டிருண்டாலும் இரண்டுமே காப்ரியல் ரொசெட்டி அவ்வடிவத்தைக் கச்சிதமாக வரையறுத்ததைப் போல், “ஒரு கணத்திற்கான நினைவுச் சின்னத்தை” (moment’s monument) கட்டி எழுப்புகின்றன. கவிதை உரைப்பவனின் ஒரு உணர்வில் தொடங்கி தெளிவையும் ஆழத்தையும் சென்றடைவதே இவ்வடிவத்தின் பலம்.
டெனிஸ் ஜான்சனின் கவிதையும் பதினான்கு வரிகளைக் கொண்டிருக்கிறது. எட்டுவரி ஆக்டெட்டில் காலையில் வேலைக்கும் செல்லும் பாட்டாளிக் கவிஞன் ஆறு வரி செஸ்டட்டில் பின்னே நிகழவிருக்கும் மாலையில் வீடு திரும்புகிறான். ஆனால் வழமையான சாண்ட் சந்த அடிப்படைகளை ஜான்சன் துறக்கிறார். சாண்ட்டில் வழக்கமாக பயண்படுத்தப்படும் இயாம்பிக் பெண்டாமீட்டர் வரிகள் அனேகமாக இல்லை என்றே கூறலாம். வரிகளின் சிலபில் எண்ணிக்கைகள் பத்து சிலபில்களில் தொடங்கி பதிமூன்று பதினைந்து என்று முறையின்றி நீள்கின்றன. வரிகளின் சந்த இயைபு (zipper, frigidaire, beer; true, to…) சற்றே வித்தியாசமாகவே நம் செவிகளிலில் தொனித்தாலும் அவற்றிற்கே உரிய தனித்துவமான தர்க்கத்தையும் நமக்கு புலப்படுத்துகிறது.
எளிய மக்களுக்கு கடவுள் தேவைப்படுகிறார் என்று சொல்கிறோம், ஆனால் இது போன்ற கடப்பு நிலைகள் அவர்களுக்குச் சாத்தியமா என்றும் சந்தேகிக்கிறோம். உண்மையில், சமயம் அளிக்கும் அசௌகரிய உணர்வுகளை தன்னலம் மற்றும் பேராசையால் துறந்த நம்மை விட தெய்வ நம்பிக்கை கொண்ட ஏழை எளியவர்களுக்கே கடப்பின் சாத்தியம் கூடுதல். எனவே, நடப்பதற்கு மிகவும் ஆபத்தான ஃப்ரீவேயில் நடந்து செல்லும் ஏழை, உழைக்கும் வர்க்கத்தினன், அவனா இந்தக் கவிஞன் என்ற கேள்விக்கே மூலத்தில் இடமில்லை. ஆங்கில கவிதையில் அத்தகைய ஒருவன் பயன்படுத்தி இருக்க முடியாத சொல் எதுவும் இல்லை, எல்லாம் சாதாரண சொற்கள்தான், தமிழ்தான் செவ்வியல் மொழியை நோக்கித் திரும்புகிறது.
சாதாரண dawn புலரியாகிறது, ocean ஆழியாகிறது. மொழியாக்கத்தின் போதாமையால் ஃப்ரீவே நெடுஞ்சாலையாய் மாறிய காரணத்தால் The dawn…laid across the freeway என்பதில் உள்ள ரோட்பிளாக் தமிழில் இழக்கப்படுகிறது. என் மாகாணம் முழுமையும் பிம்பம் மறைந்த கண்ணாடி போல் வெறிச்சோடிக் கிடக்கிறது- the whole of Ohio a mirror gone blank, என்பதன் மொழியாக்கம் திருப்தியான ஒன்றல்ல. என் சட்டைதான் என்னை நிறுத்தி வைத்திருக்கிறது. பை வேறு கித்தாரில் அடித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு, ஜேக்கட் மொழியாக்கம் செய்யப்படவில்லை. Zipper என்று சொல்லப்படும் ஜிப் வைத்த பை இங்கு பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அந்தச் சொல் பயன்படுவதில்லை. நமக்கு துணிப்பையும் பைதான், டிபன் பாக்ஸ் வைத்திருக்கும் பையும் பைதான். இங்குள்ள பையில் பியர் பாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன். Lord God help me -யின் எளிய இரட்டிப்பையும் அதன் உடனடித் தன்மையையும் மொழிபெயர்ப்பு இழந்து விடுகிறது (‘நாதா தெய்வமே’ என்று மொழிபெயர்ப்பின் முதல் வரைவுகளில் இடம் பெற்றிருந்தாலும் அவற்றின் ஒவ்வாமையினால் நிராகரிக்கப்பட்டன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.) இம்மாதிரியான இழப்புகள் பல, ஆனால் மொழிபெயர்ப்பும் பதினான்கு வரிகளில் அமைந்திருப்பது ஒரு சிறிய வெற்றியே.
மொழிபெயர்ப்பின் கதி இருக்கட்டும், கடவுள் இதில் பேசப்படுபவனுக்கு ஏதும் செவி சாய்த்ததாய் தெரியவில்லை. 1987க்குப் பின் வந்த நாற்பது ஆண்டுகளில் இவன் நிலை இன்னும் மோசம்தான் ஆகியிருக்கிறது, உற்பத்திப் பணி என்ற ஆண் மிடுக்கு அளித்த வேலை பறி போய், அதன் சுயமரியாதையும் பறி போய், உழைக்கும் வர்க்கத்தை ஏழ்மைக்கும் குடிக்கும் போதைப் பொருளுக்கும் பின்னர் தற்கொலைக்கும் இட்டுச் சென்ற அமெரிக்க சுதந்திரச் சந்தை அதே எண்பதுகளில் ராணுவ பலத்துடன் உலகெங்கும் எடுத்துச் சென்ற வெற்றிப் பதாகைகள் இன்று காபூலில் விழுந்து கிடக்கின்றன. தனி மனித அவலத்தை தோல்வி என்று அலட்சியப்படுத்தி வெற்றிகர மனிதர்களைக் கொண்டாடி எழுந்த நியோலிபரலிசக் கோட்பாடு, சுயநலம், பேராசை என்ற அயன் ராண்டிய பொன் பிரதிநிதி டிரம்ப்பில் தன் வெறுமையின் உச்சம் தொட்டு (தொழிலதிபர்களே உண்மைச் செயல்வீரர்கள்!) எத்தனை தள்ளிப் போட்டாலும் தவிர்க்க முடியாத தேசீய அவமானத்தில் வந்து முடிந்திருக்கிறது. இதுவும் ஒரு திருமணம்தான், வருந்தத்தக்கது எனினும், தவிர்க்க முடியாத வகையில் அதன் நரகம் துவக்கத்திலேயே நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
ஆனால் இவ்வாறு இருண்மையாக இக்கவிதையைப் பற்றி யோசிப்பது தேய்வழக்காக இருக்கக்கூடுமோ என்று சந்தேகித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் ராபர்ட்டோ கலாசோ ஹோல்டர்லினைப் பற்றி ஒரு முறை கூறியது நினைவிற்கு வந்தது. செவ்வியல் காலத்து “திவ்யமைகள்” (divinities) அறிவொளி காலத்தில் நாடுகடத்தப்பட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரொமாண்டிசிஸ இயக்கத்தின் கலைஞர்களால் (குறிப்பாக ஜெர்மனியில்) மீண்டும் கண்டெடுக்கப்படும் பின்னணியில் ஹோல்டெர்லினைப் பற்றி கலாசோ பேசுகிறார். ஹோல்டர்னினுக்கு “அருகேயும் / பற்றுவதற்கு அரிதாகவும்” இருக்கும் இறைமை கிரேக்கர்களின் முன்வரலாற்று காலத்தில் தோன்றிய விதத்தில் தற்காலத்தில் தோன்றுவதில்லை என்பதைக் குறிப்பிடுகையில் கிரேக்கக் கடவுளான அபோலோ ஆர்கோனாட்ஸிற்கு தோன்றிய விதம் நமக்கு அபலோனியஸ் ரோட்ஸின் வார்த்தைகளில் அளிக்கப்படுகிறது
“… இப்போது, அழிவிலா சாஸ்வத ஒளி இன்னமும் உதித்திராது, அனைத்துமே இன்னமும் இருளால் சூழ்ந்திராத வகையில் ஒரு ஒளிர்வு இரவின் மீது படரத் தொடங்குகையில், அதாவது உறக்கத்திலிருந்து விழித்தவர்கள் நாள் புலருகிறது என்று கூறும் வேளையில்…. உழைத்துக் களைத்திருந்த அவர்கள் கரை தொட்டார்கள்… அவர்கள் முன் லெடோவின் புதல்வன் (அதாவது அபோலோ) வலக்கையில் வெள்ளி வில்லையும் தோளில் அம்பறாத்தூணியையும் ஏந்தியபடி தோன்றினான்… அவனை தரிச்சத்தவர்கள் தாளவொண்ணா திகைப்பால் ஆட்கொள்ளப்பட்டார்கள்…குனிந்த தலையுடன் அவர்கள் அசையாது நின்றிருக்க அவன் வெகுதொலைவில் கடலைக் கடந்து காற்றில் கரைந்து கொண்டிருந்தான்” ஆனால் இறைமையுடன் இப்படிப்பட்ட எதிர்பாரா சந்திப்புகள் நிகழ்கையில் தாங்கள் என்ன செய்தாக வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது: ஆர்ஃபியஸின் வார்த்தைகளில் ” பயம் வேண்டாம், நம் அனைவருக்கும் புலரியில் நடந்து செல்லும் தோற்றத்தை அவன் அளித்ததால், இத்தீவைப் புலரி அப்போலோவின் புனித ஸ்தலமாக நிறுவுவோம்” என்று கூறிவிட்டு தெய்வங்களுக்குக் காவு கொடுக்க அவர்களை வற்புறுத்துகிறான்.
சமகாலத்தில் இப்படிப்பட்ட பிரசன்னங்கள் நிகழ்ந்தால் அதை நாம் எப்படி அடையாளம் காண்போம் என்பதைப் பற்றி நண்பருக்கு எழுதிய கடிதமொன்றில் ஹோல்டர்லின் சிந்திக்கிறார். ஓஹையோவின் ஃரீவேயில் குறுக்கே நீண்டிருக்கும் புலரியின் வெளிச்சத்தில் கவிதையின் கடவுளான அபோலோவை நினைத்துப் பார்க்கிறேன். வில் என்பது இசைக்கருவியின் வில்லாகவும் இருக்கலாமே, அம்பராத்துணியும் ஒரு வித பைதானே? மாறுவேடத்தில் வரும் இறைமையை நாம் அடையாளம் காண்போமா? அப்படியே அடையாளம் கண்டாலும் அவ்விறைமைக்கு நம்மிடம் கூறுவதற்கு என்ன இருக்கிறது: பாட்டாளிகள் பாக்கியவான்கள்; அவர்களே இப்பூவுலகை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்றா?
நம்பி கிருஷ்ணன்.
Sep 12, 2021
சிறப்பான விமர்சனம்.
காயமே இது பொய்யடா.