இவர்கள் இல்லையேல்

பத்மா ஸச்தேவ் 

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

(மூல நாவல் டோக்ரி மொழியில் எழுதப்பட்டது. பத்மா ஸச்தேவ் ஞானபீடம் விருதைப் பெற்ற ஓர் எழுத்தாளர்.)

வாழ்க்கைக் குறிப்பு

பத்மா ஸச்தேவ்  புகழ் பெற்ற இந்தியக் கவிஞர் மற்றும் நாவலாசிரியராவார். டோக்ரி மொழியின் முதல் பெண் கவிஞரான கருதப்படும் இவர்,  இந்தி மற்றும் உருது மொழிகளிலும்  தனது படைப்புகளை எழுதியுள்ளார். இவருடைய ” என் பாடல்களும் என் கவிதைகளும்” தொகுப்புக்காக,  இவருக்கு 1971 இல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 2001 இல் இந்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்தது. மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேச அரசுகளின் விருதுகள்,  சரஸ்வதி சம்மான் விருது போன்ற  பல மதிப்பிற்குரிய  விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

ஜம்முவில் உள்ள பூர் மண்டல் என்னும் சிறிய கிராமத்தில் ஏப்ரல் 1940இல்  பிறந்தார். சமஸ்கிருத பேராசிரியரான இவரது தந்தை, 1947ல் இந்தியப் பிரிவினையின்போது  மூண்ட கலவரம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  ஆரம்ப காலங்களில் ஜம்மு வானொலி நிலையத்தில் பணியாற்றிய பத்மா, பின்னாட்களில் தில்லி மற்றும் மும்பை வானொலி நிலையங்களிலும் பணியாற்றினார்.உருதுவிலும்  ஹிந்தியிலும் சம அளவு புலமை பெற்றிருந்த போதிலும், இவர் தன்னுடைய தாய்மொழியான டோக்ரி மொழியில் எழுதுவதையே பெரிதும் விரும்பினார். சிறு கிராமத்தில் பிறந்த இவர்,  தன்னுடைய திறமையால் தனது தாய்மொழியான டோக்ரியை அதன் சிகரங்களுக்கு கொண்டுச் சென்றார்.  சிறு கிராமத்திலிருந்து வந்த போதிலும் திலலி மற்றும் மும்பை இலக்கிய வட்டாரங்களில் இவர் மிகவும் வெற்றிகரமாக  வலம் வந்தார். 

பத்மா, தனது எண்பத்தியோராம்  வயதில், ஆகஸ்டு 4, 2021ல் மும்பையில் காலமானார்.இவரது அறிவு,  திறமை மற்றும் வாழ்க்கையின் மீதான தீராத காதலுக்காக நண்பர்களால் அன்புடன் நினைவு கூறப்படுகிறார்.

இவர்கள் இல்லையேல்

யுக மாற்றம் நிகழும் போதெல்லாம், அது தன்னுடன் புதிய தைரியத்தை, புதிய காலைகளை, புதிய மாலைகளை, புதிய சட்டங்களை, புதிய நடைமுறைகளை, புதிய மக்களை மற்றும் புதிய காதல்களைக் கொண்டு வருகிறது. பொருட்கள் பழையனவாகிப் போனாலும, புது உற்சாகத்துடன் ‘இன்று புதிதாய்’ பிறக்கின்றன. துளியும் மாறாதது ஏதாகிலும் உண்டா என்றால், குழந்தையின் சிரிப்பு , தாயின் தாய்மை உணர்வு மற்றும் காதலின் பைத்தியக்காரத்தனம் மட்டுமே. சில சமயம் உறவுகளும், நம்மைப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கொண்டிருக்கும். 

முன்னாட்களில், வசதி படைத்தவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள், தலைமுறை தலைமுறையாக தங்கள் முதலாளிகளிகளோடு கூடவே இருந்து வந்ததனால், அவர்களது குடும்பத்தில் ஏறத்தாழ, ஒரு உறுப்பினராகவே மாறிவிட்டிருப்பார்கள். அவர்களுடைய குழந்தைகளும், அதே  வீட்டு முற்றத்தில் விளையாடித் தான் வளர்ந்திருப்பார்கள். அதே முதலாளிகளின் தோட்டங்களிலிருந்து கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை திருடித் தின்றிருப்பார்கள். அவர்களது குழந்தைகளின் பழைய துணிமணிகளை உடுத்தியிருப்பார்கள். அவர்கள் வீட்டு முற்றத்தில், குளிரில் நடுங்கிக்கொண்டு, முதலாளி வீட்டினரின் பழைய செருப்புகளையோ, ஸ்வெட்டர்களையோ அல்லது நைந்துபோன கம்பளிகளையோ கூட பெற்று உபயோகப்படுத்தியிருக்கக் கூடும். வேலைக்காரர்களின் ஒட்டு மொத்த குடும்பமுமே முதலாளியையோ அல்லது முதலாளியம்மாவையோ சந்தோஷப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். இரவில், முதலாளிக்கு கால் பிடித்துவிடுவார்கள். கால் பிடித்து விட்டுக் களைத்துப் போகையில், முதலாளியின் கட்டிலுக்கு கீழே மூட்டை போல விழுந்து விடுவார்கள்.  கண் விழிக்கையில், கருணை உள்ளம் கொண்ட முதலாளி, சற்றேனும் கோபமுறாமல், அவர்களுக்கு வேலையும் கொடுப்பார்.

பல வீடுகளில், வயதாகிப்போகும்போது, இந்த வேலையாட்கள், வீட்டு விவகாரங்களில் அறிவுரை கூறுவதும் உண்டு. வீட்டுப் பெண்கள் திருமணமாகி, புகுந்த வீடு செல்கையில், இந்த வேலையாட்களின் மனைவிமார்கள் தான், சீதனவெள்ளாட்டி போல, செல்லமாக வளர்ந்த அந்தப் பெண்களுடன் கூடவே சென்று,புகுந்த வீட்டில்  அப்பெண்கள் சகஜமாக வேரூன்ற, எல்லா முயற்சிகளையும் எடுப்பதுண்டு. முதலாளிகளுக்கும் வேலைக்காரர்களும் இடையேயான உறவு தொடர்ந்து உறுதிபட்டுக்கொண்டே இருக்கும்.  இந்த உறவுகளுக்கு, வேறு பல பரிமாணங்களும் உண்டு. ஆனால், இன்றளவும், இவர்களுடைய உதவி இல்லாமல் குடும்பம் என்னும் கடலைக் கடந்து மீள்வதென்பது மிகவும் கடினமான காரியம் என்பதை மட்டும் நான் நிச்சயமாக அறிவேன். வீட்டில் இவர்களை சொந்தம் என நினைத்துப் பழகி,  இவர்கள் சென்ற பிறகு நான் பலமுறை வருந்தியிருக்கிறேன். ஆனால், யார் எவ்வளவு நாட்கள் வீட்டில் இருந்தார்களோ, அவர்கள் இருந்தவரை, நான் அவர்களை வீட்டின்  ஒரு உறுப்பினராகவே கருதியிருக்கிறேன்.  அவர்கள் விட்டுப் போகையில், மிகவும் வருந்தியதும் உண்டு. இன்று கூட, எவரேனும் என்னை சந்திக்க வரும்போது, உள்ளூர ஒரு சந்தோஷம் தலை தூக்குகிறது. இன்றும், இவர்கள் இல்லாமல் குடும்பங்கள்  சரிவர நடப்பதில்லை. இவர்கள் எல்லோரையும் பற்றி எழுதி நான்  என் மன பாரத்தை குறைத்துக் கொள்ள விரும்புகிறேன்.  இதனை, ஒருவகையான கடன்  தீர்த்தல் போலவும் நன்றி தெரிவித்தல் போலவும் கருத விரும்புகிறேன்.

அத்தியாயம் 1. லப்பூ அண்ணா

வீட்டு வேலையாட்களில், வீட்டிலும் வாழ்க்கையிலும், எல்லோரையும் விட முதலில் நினைவுக்கு வரும் பெயர் லப்பூ அண்ணா நான்.  நான் பிறப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னாலேயே லப்பூ அண்ணா வீட்டில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக அம்மா சொல்வார்.  குழந்தைப் பருவத்தில், என்னை மடியில் அமர்த்தி சோறூட்டி இருக்கிறார். தோளில் சுமந்து ஊர்சுற்றிக் காட்டியிருக்கிறார். தன் முழங்காலில் அமரவைத்து ஊஞ்சலாட்டியிருக்கிறார் . வீட்டில் அடிக்கடி அவரைப் பற்றி பேச்சு எழும்.  சில வருடங்கள் முன்பு அவர் என்னை சந்தித்தபோது, அம்மாவிடம், “சித்தி, இது நம்ம பத்தோ தானே?” என்று விசாரித்தார். அம்மா, “உனக்கு அடையாளம் தெரியவில்லையா என்ன?”  என்று  கேட்டார்.. “அடையாளம் தெரியாமலென்ன, இவள் பெயர்தான் ராம்வன் ரேடியோவில் தினமும் ஒலிக்கிறதே!” என்றார். அதோடு நிற்காமல், என்னைப்போலவே போலிக்குரலில் பேசியும் காட்டினார்.

“ஹுண் துஸ் டோக்ரி ச கபரான் ஸுனோ”

(இப்பொழுது நீங்கள் டோக்ரி மொழியில் செய்திகளை கேட்கலாம்)

அம்மா எப்போதாவது என்னை ‘பத்தோ’ என்று அழைப்பதுண்டு. ஆனால், இந்த  செல்லப்பெயர் அம்மா என் மீது அன்பாக இருக்கும் போது மட்டுமே உபயோகப்படுத்தப்படும். அத்தகைய வாய்ப்புகளை மிகக் குறைவாகவே நான் அவருக்கு கொடுப்பேன் என்பது வேறு விஷயம். அம்மா பெரும்பாலும் என் நடவடிக்கைகளால் என் மீது கோபமாகத் தான் இருப்பார். வீட்டில் அம்மாவுக்கு உதவியாய் நான் எதுவுமே செய்ததில்லை. ஆனால் வீட்டை விட்டு வெளியேவோ  அல்லது கடைத் தெருவுலோ, எந்த வேலை இருப்பினும் நான் அதைச் செய்ய உடனடியாகத் தயாராகி விடுவேன்.  அம்மா எப்பொழுதும் உற்சாகமாக இருப்பார்.. அவருக்கு எல்லாவற்றையும் தானே தன் கைப்படச் செய்தால்தான் பிடிக்கும். லப்பூ அண்ணா, எப்போதாவது சந்திக்க வரும்போதெல்லாம், ஏதாவது ஒரு பழங்கதையைக் கட்டாயம் சொல்வது வழக்கம். அவர் என்னிடம் சொல்வார் – பத்தோ பிறந்தபோது பாட்டி  முகத்தை சுளித்துக் கொண்டாள். அவரை எல்லோரும் பேபபே என அழைப்பார்கள்.  மருமகள் வந்த உடனேயே, என் மகன் மீது பொறுப்பைச்  சுமத்தி விட்டாள் என்று கூறுவர். ஆனால், என் அப்பாவோ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாராம். . அப்பா, பேபேயிடம், “அம்மா இவள் லக்ஷ்மி . நான் இவளை சரஸ்வதியாகவும் ஆக்குவேன். இவள் மிகவும் புத்திசாலியாக விளங்குவாள் பாருங்கள்.”

என்பாராம். நான் பிறந்த போது, அப்பா, குழந்தைகளுக்கான அரையாடை (நாப்கின்) தைப்பதற்காக , மரச் சட்டகத்தில் சுற்றப்பட்ட மூன்று தான்களை வாங்கி வந்தாராம். அந்நாட்களில் மிகவும் பிரசித்தமாக இருந்த, சாவி கொடுத்துச் சுற்றினால், மரச்சட்டகத்திலிருந்து, 

தேவையான அளவு துணியை எடுத்துக் கொள்ளும் வகையில் சட்டகங்கள் அமைந்திருந்தனவாம். பேபே, அரையாடையைத்   தைப்பதற்காக, தன்னுடைய, இற்று, சாயம் போன  பழைய மல்மல் துணியைத் தந்துவிட்டாராம். கூடவே, ” இவளுடைய அம்மா மகாராஜா ஹரி சிங்கின் பெண்ணா என்ன?  இவளுடைய மகளுக்கு ஏன் புத்தம் புது துணியில் அரையாடை தைக்க வேண்டும்? என்றாராம். பேபே, தன் மூன்று மகள்களுக்கும் மூன்று மரச் சட்டகத் துணி தானை  தந்து விட்டதாக பின்னர் தெரியவந்தது.பேபேயை எதிர்த்து யாரும் எதுவும் பேசியதில்லையாம்.

லப்பூ அண்ணா, என்னிடம் இந்த கதையை கூறியபோது, நான் என்  பாட்டியை விட்டுக்கொடுக்காமல் ” “என் பேத்தியின் மிருதுவான உடலை, தடிமனான முரட்டுத் துணி ரணமாக்கி விடும்என்று நினைத்து, பேபே தன் பழைய மிருதுவான மல்மல் துணியை அரையாடையைத் தைத்திருக்கலாம் எனச் சொன்னேன.

லப்பூ அண்ணா, “, அட என்  பைத்தியக்கார பத்தோ! உனக்கு என்ன தெரியும்? நீ பேபேயை எங்கே பார்த்திருக்கிறாய்?பேபேயும்  உன்னை கவனித்துக் கொண்டதில்லை. ஆனால் சித்தப்பா எப்போதும் சந்தோசமாகத்தான்  இருந்தார். அதனால் தான், பேபே அதிகம் வாயைத் திறக்க முடியவில்லை சித்தப்பா மிகுந்த ஆசையோடு உனக்கு “பத்மா “என்று பெயர் வைத்தார்,” என்றார்.

அம்மா சொல்வார் –  லப்பூ அண்ணாவுக்கு கீல்வாதம் ஏற்பட்டதாம்.  அப்பாதான் லாகூரில் ஆஸ்பத்திரியில் சேர்த்து , ஆங்கிலேயே டாக்டரிடம் காட்டி, லப்பூ அண்ணாவுக்கு வைத்தியம் பார்த்தாராம்.  அப்பா செய்த இந்த உதவியை லப்பூ அண்ணா, ஒருபோதும் மறக்க வில்லை. பின்னர், அப்பா அவரை மிட்டாய் கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்து விட்டாராம். அதற்குப் பிறகு, அவர் ராம் வனில், சினாப்  நதிக்கரையில், சொந்தமாகக்  கடை ஒன்றை துவங்கி,பாலும் தயிரும் வியாபாரம் செய்து வந்தாராம்.  எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பாலையும் தயிரையும் சேர்த்து செய்த “கல்டியா “எனும் ஒருவகை பாலாடைக் கட்டியை மறக்காமல் கொண்டு வருவார். இதைத்தவிர, மலைப்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய பல்வேறு பரிசுப் பொருட்களையும் கொண்டு வர அவர் மறந்ததேயில்லை.  அம்மாவை “சித்தி, சித்தி”  என்று  பாசத்துடன் அழைத்து தனக்கு விருப்பமான உணவு வகைகளை சமைத்துத் தரச் சொல்வாரர். “சித்தி, உங்கள் கையால் சமைத்த  ராஜ்மாவும், நெல்லிக்காய் சேர்த்து செய்யும் உணவுப்பொருட்களையும் சாப்பிட்டு யுகங்கள் ஆகிவிட்டன,” என்பாராம். அம்மாவும், மிக மகிழ்ச்சியுடன் லப்பூ அண்ணாவின் விருப்பங்களை பூர்த்தி செய்து வைப்பார். அவருடைய திருமணம் குறித்து பலமுறை, பல்வேறு இடங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், திருமணம் மட்டும் கடைசிவரை நடக்கவே இல்லை. இது குறித்த வருத்தம் அவருக்கு எப்போதும் இருந்தது.

உண்மையில் எதைப் பற்றி நான்  சொல்லிவிடக்கூடாது என  தப்பிக்க நினைக்கிறேனோ, அந்த விஷயம் இதுதான். லப்பூ அண்ணா , எங்களுக்கு உறவு முறையில் சகோதரர் தான். அப்பாவுக்கு தூரத்துச் சொந்தமான அண்ணா ஒருவர் இருந்தார். அவருடைய மனைவி, அவரைச் சற்றும் மதிக்க மாட்டாராம். எனவே, அவர் மனைவியின் அவமரியாதை நிறைந்த நடத்தையைத் தாங்க முடியாமல், வருடத்தில் பெரும்பாலான நேரத்தைத் தனக்கிருந்த விவசாய நிலத்தைப் பராமரிப்பதிலேயே செலவழித்து வந்தாராம். அவ்வாறிருக்கையில், அவர் அதே இடத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழத் தொடங்கி, பின்னர் அவரை ஒரு முறையில் திருமணம் செய்து கொண்டாராம். விவசாயமும் நன்றாக நடந்தது.  லப்பூ அண்ணாவும்  பிறந்துவிட்டார்.  இந்த விஷயம், அந்த கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்த போதிலும் , பெரியம்மாவிடம் சொல்லுகிற தைரியம் எவருக்கும் இல்லை.  பெரியப்பா இறந்தபோது , பெரியம்மா லப்பூ அண்ணாவின் தாயாரை, பெரியப்பாவின் உடலை கடைசியாக ஒருமுறை பார்க்கக்கூட விடவில்லையாம்.  அவரும் லப்பூ அண்ணாவுடன், நிலத்திலேயே, எப்படியோ காலத்தை ஓட்டிக் கொண்டு இருந்தாராம். அவரும் இறந்த பிறகு, பத்து – பன்னிரண்டு வயதிலேயே லப்பூ அண்ணா அனாதையாக நின்ற போது, என் அப்பா தான் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.  இறுதிவரை, லப்பூ அண்ணா எங்கள் குடும்பத்துடன் தொடர்பிலிருந்தார்.

பல வருடங்களுக்கு முன்பு, அம்மா, ஒரு சமயம், லப்பூ அண்ணாவுக்காக, கல்யாணத் தரகர் வேலை கூட பார்த்திருக்கிறார்.  நல்ல வசதியான குடும்பத்து விதவைப்பெண் . அவருக்கு ஒரு மகளும் இருந்திருக்கிறாள். அவருடைய கணவனின் மறைவுக்குப்பிறகு, அவருக்கு கிடைத்த  ஓய்வூதிய தொகையை வைத்துக்கொண்டு, அந்த பெண்மணி, தன் மகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இதனால் அவருடைய புகுந்த வீட்டினர்  அவர் மேல் கோபமாக இருந்தனர்.  அந்த பெண், தன் மகளை நகரத்தில் இருந்த ஒரு பெரிய  பள்ளியில் சேர்த்திருந்தார். லப்பூ  அண்ணா, என் அம்மாவின் அனுமதியுடன் அவரை நளதமயந்தி படத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் விஷயம் அதற்கு மேல் நகரவில்லை. அந்தப் பெண்மணி, ஒரு நாள் என் அம்மாவிடம் வந்து, ” என் மகளைப் பற்றி யோசியுங்கள். நாளை அவளுக்கு திருமணம் நடக்கையில், தகப்பனாரின் இடத்தில், லப்பூவை நிறுத்த முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி விட்டு தன் செல்ல மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாராம் . அம்மாவும் அவரை மன்னித்து அனுப்பிவிட்டார்.

லப்பூ அண்ணா, மலைப் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பல வருடங்கள் கூட வைத்திருந்தார். ஆனால், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அம்மா சொல்வார்  – இந்த பைத்தியக்காரனிடம் அந்த மலைவாசிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடு என்று எத்தனையோ முறை சொன்னேன்.  ஆனால், பிராமணனாகப் பிறந்ததற்காக இவனுக்கு இருப்பதுபோன்ற கர்வத்தை, நான் வேறு எந்த அசல் பிராமணனிடம் கூட பார்த்தது கிடையாது. அப்படி என்னதான் பிராமணர்கள் இவனுக்கு தூக்கி கொடுத்து விட்டார்களோ தெரியவில்லை. சொந்தத் தகப்பனே  தன் பெயரைக் கூட இவனுக்குத் தரவில்லை. பிராமணனுக்கு பிராமணனே தான்  எதிரி. பிராமணனின் மனைவியோ, வீட்டு வாசலைக் கூட தாண்டவிடல்லை. இந்த பைத்தியக்காரன் திருமணம் ஆகாமலேயே  இருந்து செத்து தொலைப்பான். பூதமாகி இந்த பூமியிலேயே அலைந்து திரிவான்.”

இறப்பதற்கு முன்பே, லப்பூ  அண்ணா, தன் கடையை, பக்கத்தில் வசித்து வந்த ஒரு பையனின் பெயரில் எழுதிக் கொடுத்துவிட்டார். அவர், ” நான் இறந்த பின் நீ என் உடலுக்கு எரியூட்டு.  வருடம் முழுவதும் எனக்கு நேதி (தினமும் ஒரு வேளை உணவை ஏதேனும் ஒரு மரத்தடியில் வைத்தல்) தந்து கொண்டிரு. வருட முடிவில், எனக்கு திவசம் செய்” என்று அந்த பையனிடம் சொல்லி இருந்தாராம் . அந்தப் பையனும் லப்பூ அண்ணாவின் ஈமக்கிரியைகளை, சொந்த  மகன் செய்வது போல சிரத்தையுடன் செய்தான். இன்றும்  ஒவ்வொரு வருடமும் அவருக்கு திவசமும்  செய்து கொண்டிருப்பான் என நான் நினைக்கிறேன். உயிருடன் இருப்பவர்களிடம் கூட அவ்வளவு பயப்படுவதில்லை. இறந்து போனவர்களிடம் தான் நாம் மிகவும் பயப்படுகிறோம்.. அம்மா சொல்வார்,  “உயிருடன் வாழ்வதை  விட அவனுக்கு இறப்பதை பற்றித்தான் அதிகம் கவலை இருந்தது. வாழ்நாள் முழுவதும், மரணத்தை எதிர்பார்த்துக்  காத்திருந்தான். பிராமணன் என்பதில் பெரும் கர்வம் இருந்தது அவனுக்கு.”

சில காலம் முன்பு வீட்டில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள, லப்பூ அண்ணா வந்திருந்தார். அவர் சொன்னார் ” நான் எப்போதும் கையில் ஒரு மூட்டையைச்  சுமந்து கொண்டுதான் அலைகிறேன். எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வந்துவிடக்கூடும் இல்லையா.  சினாப் நதியின்  அலைகளைப்  பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.  கடையிலும் வியாபாரம்  சுமாராக நடந்து கொண்டிருக்கிறது.” வீட்டில்  வேலை செய்தவர்களில், நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்டது லப்பூ அண்ணாவைப் பற்றித்தான். அவரை மரியாதையோடு நடத்த வேண்டும் என்று அம்மா கற்றுத் தந்திருந்தார். லப்பூ அண்ணா வயதில் மூத்தவராக இருந்தபோதிலும், அம்மாவின் கால்களைத் தொட்டு வணங்குவார். மரியாதை கொடுப்பார். உடல் ஒத்துழைத்தவரை, அம்மா தன் கடைசி மகனை கூட்டிக் கொண்டு ராம்வன் சென்று, அங்கு சில  நாட்கள் தங்கியிருந்துவிட்டுவருவார். திரும்பி வந்ததும் மிகவும் சந்தோஷமாக சொல்வார் –  பாவம், இந்த பைத்தியக்காரனின் தலையெழுத்தில் நல்ல சாப்பாடு என்பது எழுதப்படவேயில்லை .  அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் நான் என் கையால் சமைத்துக் கொடுத்து விட்டு வந்தேன்.” இன்று அம்மா இல்லை. லப்பூ அண்ணாவும் இல்லை.  ஆனால், அவருடைய நினைவுகள், இன்றும் மனதில் நிலைத்திருக்கின்றன. அம்மாவின் அறிவுரையின் பேரில் நாங்கள அவருக்கு முழு மரியாதை கொடுத்து வந்தோம். அங்கீகாரம் கிடைக்காத போதிலும், உறவு முறையில், அவர் எங்களுக்கு மூத்த அண்ணனாகவே இருந்தார்.

(தொடரும்)

Series Navigationஇவர்கள் இல்லையேல் – ராம்லால் >>

2 Replies to “இவர்கள் இல்லையேல்”

  1. சாகித்ய அகாதமி விருது பெற்ற டோக்ரி மொழி எழுத்தாளர் திருமதி பத்மா சச்தேவ் அவர்களின் குறிப்பிடத்தகுந்த படைப்பு. தமிழில் இம்மொழிப் புனைவும் அல்புனைவும் மொழியாக்கப்பட்டதில்லை, இதுவரை. திருமதி அனுராதா கிருஷ்ணஸ்வாமி தொடங்கி வைக்கிறார் தன் சரளமான மொழிபெயர்ப்பு மூலம். அவருக்கு என் அன்பான வாழ்த்துகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.