இடுகாட்டு மோட்சம்

சும்மா… அடிச்சுத் தெறித்துக் கொண்டிருந்தது மழை. மழைன்னா மழை அப்படியொரு மழை. ஊர்ப்புறத்தின் பள்ளங்களிளெல்லாம் பிஸ்கெட் கரைந்த தண்ணீரின் நிறத்தில் வெள்ளம். சாதாரண மழைக்கெல்லாம் தலையை மட்டுமாவது வெளியே காட்டிக்கொண்டிருக்கும் பழையாற்றின் ஆனைப்பாலம், இம்முறை முங்கி வழிந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் இவ்வருடமும் பெருவெள்ளம் ஊரைச் சூழ்வதற்கான சாத்தியத்தை, நேற்றிரவே எல்லோரும் கணித்திருந்தனர். அடி அடியென அடித்தும், வெறி அடங்கா பைத்தியக்கார ரவுடியென, மழை சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது.

சுற்று வட்டார ஊர்களைவிட சற்றுத் தாழ்ந்த நிலமாதலால் மூன்று நாள் தொடர் மழைக்கு கூட ஊர் தாங்காது. பெருவெள்ளம் வந்து விடும். வெள்ளம் வந்தால் இரண்டு மூன்று நாளைக்கு கிராம மக்களின் நடைமுறை வாழ்கை முற்றிலும் பாதிப்படைந்து விடும். ஊரைவிட்டுப் போனவர்கள் உள்ளே வர முடியாது, வந்தவர்கள் வெளியே போக முடியாது. சப்பாத்துச் சாலையில் பெருக்கெடுக்கும் வெள்ளம் எந்த போக்குவரத்தையும் அனுமதிக்காது. பெருவெள்ளத்தில் நீந்திச் சென்று கல்யாணம் கழித்த தம்பதிகளின் கதைகள், மருத்துவ அவசியத்திற்காக நோயாளிகளை கட்டிலோடுத் தூக்கி பெரு வெள்ளத்தை கடந்த கதைகள், அறுவைச் சிகிச்சைக்காக அக்கரைச் செல்ல முடியாத காரணத்தினால், முக்கிச் சுகப்பிரசவம் அடைந்த தாய்மார்களின் கதைகளென “பெருவெள்ளம் சார்ந்த கதைகள்” ஊருக்குள் ஏராளமாய் கேட்கக் கிடைக்கும்.

ஆயிரம் இடைஞ்சல்கள் இருந்தும், “பெருவெள்ள நாட்களை” அவ்வூரின் அநேக பேருக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. இயற்கையின் மழையை எந்த உயிருக்குத்தான் பிடிக்காது. நடைமுறைப் பணிகளிலிருந்து ஒய்வு கொடுக்கும் ஒரு ரகசியத் திருவிழாவாகவே, மொத்த ஊரும் பெருவெள்ளத்தை கொண்டாடிக் களிக்கிறது. நடைமுறை நிகழ்வுகளின் மாறுதல் எல்லா மனங்களுக்கும் பிடிக்கும் தானே. முக்கியமாகப் பெருவெள்ளம் ஊரைச் சூழ்ந்து விட்டால் வேலைக்குச் செல்ல வேண்டாம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். கடல் சூழ்ந்த தீவைப்போல், ஊரைச்சுற்றி தண்ணீர் நிற்க, சூடாக இட்லியோ, ஆப்பமோ, தோசையோ தின்று விட்டு, மேற்படி ஒரு சுக்கு காப்பியும் குடித்து விட்டு, தோளில் குத்தும் கம்பளித் துண்டோடு பெரு வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பதென்பது, அலாதியான சுகம் கொடுக்கக் கூடியது. பெரு வெள்ளத்தை “வாய் பார்க்கும் சுகம்” அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அளவான பெருவெள்ளமென்பது இயற்கை பேரிடரில் சேராது. வேண்டுமென்றால் இயற்கை பேரிடரின்பமெனக் கிண்டலாகக் கூறிக் கொள்ளலாம்.

பெருவெள்ளத்தின் பொழுதுகளில் ஊர் இளவட்டங்கள் ஓன்று கூடிச் சாலை நீரில் ஆடிக்களிக்கும். சிறார் கூட்டம் தண்ணீர் இறைத்து விளையாடி மகிழும். சில அதிகப்பிரசங்கிகள் வெள்ளத்தில் வந்த தண்ணிப் பாம்பையோ, தவளையையோ பிடித்து நண்பர் மேலிட்டுப் பயமுறுத்துவதும் நிகழும். மழைக் குளிரில், கணுக்காலுக்கு மேல் ஆடையுயர்த்தி நடந்து வரும், இளஞ்சிட்டுகளைக் காண்பதற்காகவே காளையர் கூட்டமொன்று சாலைகளில் காவல் நிற்கும். மனமொத்த ரகசிய காதல்களின் “கண் ஜாடை சம்பாஷணைகள்” பெருவெள்ளத்திற்கிடையில் அரங்கேறும். ஆங்காங்கே கிடந்தக் குப்பைகளை தண்ணீர் அடித்து சென்றதால் “ஊரே” கழுவி விட்டதுபோல் தோற்றமளிக்கும். ஏதேனும் தவிர்க்க முடியாத அவசியத்திற்காக வெள்ளத்தை கடந்தே தீரவேண்டுமென்ற கட்டாயம் உள்ளவர்களுக்கு, “உயர்தர ஆலோசனை” கூறுவதற்கென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில பெருசுகள் தெருக்களில் லாந்தும்.

“தெள்ளாந்தி பத்தோடு ஏறி, சீதப்பால் போயிருங்கோ… அதான் பெஸ்ட் ரூட்… இப்படி போனா மாட்டிக்கிடுவியோ…”

“தடம் பார்த்து மெதுவா போனா… போயிரலாம்… நடந்துகிட்டே இருக்கணும்… இடைல நின்னு யோசிச்சம்னா… தண்ணி உள்ள இழுத்துரும்…”

“இது என்ன… வெள்ளம்… நம்ம கரிச்சட்டிக்கு கல்யாணத்துக்கு வந்ததே வெள்ளம்… எப்பா… என்னா இழுப்பு… அதுலேயே நான் நீந்தி கடந்தவனாக்கும்…”

“ரெம்ப அவசரம்னா… ஆரம்பிள்ளைட்ட சொன்னா… கயிறு கட்டி கடத்தி விட்டுருவான்… ஆனா ஒரு ஆளுக்கு அம்பது ரூவா கேட்பான்…”

“ராத்திரிய மட்டும் கழிச்சிட்டேள்னா, தண்ணி வடிஞ்சிடும்… நாளைக்கு காலையில போயிரலாம்… இப்ப ஒருவாடு வெள்ளம்லா …போகாண்டாம்…”

-என குறுக்கும் நெடுக்குமாய் ஏகப்பட்ட அறிவுரைகள், அவசரமாய் வெள்ளத்தை கடக்க நினைப்பவர்களுக்கு “முழு இலவசமாகக்” கிடைக்கும்.

அப்படிப்பட்ட ஒரு பெருவெள்ள நாளில்தான் ஊர் முதலடியும், பஞ்சாயத்து தலைவருமான சண்முகம் பிள்ளை இறைவனடி சேர்ந்திருந்தார். ஊரின் திரிந்த மொழி வழக்கில் அவர் பெயர் “சம்மம் பிள்ளை” என்ற ரீதியிலேயே உச்சரிக்கப்படும். ஏதேனும் கோப ரீதியில் உச்சரிக்கும்போது மட்டும் “சட்டம்பி சம்மம்புள்ள” என்று மெருகு கூட்டப்படும். சம்மம் பிள்ளைக்கு வயசு எழுபத்தெட்டு ஆனாலும் மேனி சிணுங்காத உடற்கட்டு. சுருங்கியத் தோளெங்கும் அழுக்கை உருட்டி ஒட்டி வைத்தது போல் மருவுகள். காது மடல்களில் வெள்ளிக் கம்பியென தெறித்து நிற்கும் முடிகள். பண்ணையார்மார்களின் அத்தியாவசத்திற்குரிய வீரம், கோபம், காமம் எல்லாம் சற்றுக் கூடுதலாகவே உண்டு. ஏழ்மையின் சுவடறியாத “போக” வாழ்க்கை, எல்லோரிடமும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டெனப் பேசச்சொல்லும் போல. எளியவர் வறுமை தெரியாமல் பலநேரம் வார்த்தைகளை உதிர்த்து விடுவார் சம்மம் பிள்ளை. ஏதேனும் நல்ல மனநிலையில் இருந்தால் வாரியும் வழங்கி விடுவார். சம்மம் பிள்ளையைப் பாரிவள்ளல் என புகழவும் முடியாது. இரக்கம் கெட்ட கம்சன் என இகழவும் முடியாது. யாருக்கும் விளங்காத இறைபொருளாய் இரண்டிற்கும் இடைப்பட்டக் குணநலத்தோடு வாழ்ந்து, இன்று இறந்திருந்தார் சம்மம் பிள்ளை.

சம்மம் பிள்ளையின் மரணம், யாருமே எதிர் பார்க்காத திடீர் மரணம். நல்ல சாக்காலம். சாயங்காலம் பெருவெள்ளத்தைப் பார்த்து, கூட்டத்தோடு கூட்டமாய் பல கதைகள் பேசி, வயல் களைப் பறிப்புக்கு வரும் குமருகளை நோக்கி, காம கண்ஜாடைகள் காட்டி, இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து, தேங்காய், உப்பு, பச்சைமிளகாய் போட்டு நுணுக்கிய உதிரி துவையல் வைத்து, சுடச், சுட நாலு நல்லஎண்ணெய் தோசைத் தின்று விட்டு அம்மம்மா-வென படுத்தவர்தான். விடியக்காலை நாலரை மணிக்கு, மனைவி கோசலை எழுப்பும் போது, எந்திரிக்கவே இல்லை. எப்போது வந்து “காலன்” உயிரை எடுத்தான் என்பது எமதர்மராஜனுக்கே வெளிச்சம். நிலவரம் கலவரமாகி, உள்ளூர் டாக்டர் பரிசோதித்து, சம்பம் பிள்ளையின் இறப்பை உறுதி செய்தார். அருகிலிருந்த சொந்த பந்த பெண்கள் துக்கம் தாளாது, குலுங்கி அழ ஆரம்பித்த அந்த விநாடியில்…

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…

அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்…

வண்டாட்டம்…

வண்டாட்டம்…

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்… —

ஏ.ஆர். ர‌மணி அம்மாள் பாடிய முருகன் பாடல்… ஊர் கோவில் ஒலிபெருக்கியில், கோவில் வாட்ச்மேன் கணேசனின் கைங்கர்யத்தில் உச்ச ஸ்தாதியில் ஒலிக்க ஆரம்பித்திருந்தது. பண்ணையார் இறைவன் திருவடி பற்றிய, விஷயம் தெரியாமல் பக்திப்பாடல்களை வழக்கம்போல் ஒலிபரப்பிக் கொண்டிருந்தான் வாட்ச்மேன் கணேசன்.

ஊருக்குள் மரணம் நிகழும் போது, கோவிலில் பக்திப்பாடல்கள் ஒலிப் பரப்புவதில்லை. அது ஒரு சமிக்கை போல. கிராமத்தின் பாடல் ஒலிக்காத காலை, ஊருக்குள் மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும். ஆனால் இன்று மரணம் நிகழ்ந்தது வாட்ச்மேன் கணேசனின் காதுக்குச் செல்லாததால், விடியற்காலையிலேயே குன்றத்தில் குமரனை ஆட விட்டிருந்தான். அடை மழையிலும், தவறாத பணிக்கடமையைச் செய்த கணேசனின் “பணிப் பொறுப்பை” சிலாகித்து ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு “குமரனின் கொண்டாட்டப் பாட்டை நிறுத்த” கோவிலுக்கு விரைந்தான் பண்ணையார் வீட்டு வேலைக்காரன் முத்தையன்.

காலையும், மாலையும் பக்திப்பாடல்களை ஒலிபரப்பும் இந்த யோசனை யார் மூலம் தொடங்கியதோ தெரியவில்லை. தற்போதெல்லாம் கிராமத்து மனிதர்களை எழுப்பி விடுவது TMS, சீர்காழி, சூல மங்கலம் சகோதரிகள் அல்லது வீரமணியின் குரல்தான். ஊருக்குள், சற்று பெரிய சைஸ் கோன் ஐசை போலிருக்கும் ஐந்தாறு ஒலிப்பெருக்கிகளும் சேர்ந்து பாடத் துவங்கினால், ஒரு மனிதனும் நிம்மதியாக உறங்க முடியாது. குழந்தைகள், வயதானவர்கள் உட்பட எல்லோரையும் விடியற்காலையில் புரண்டு… புரண்டு… படுக்க வைக்கும் ஆற்றல், அந்த ஒலிபெருக்கிகளின் சப்தத்திற்கு உண்டு. அவ்வாறே பழகிப், பழகி சில பேருக்கு இப்பாடல் இல்லாத நாட்களில் காலைக்கடன் கழிப்பது கூட பெரும் சிரமமாகிப் போனது. அதையும் மீறி, பாடலின் சப்தத்தை பொறுத்துக்க கொண்டு, தூங்குவது என்பது சிம்மச்சொப்பன வகையில் சேர்ந்தது. வெட்டி வீராப்பில் ஒரு ஆசைக்கு வேண்டுமென்றால் கண்ணை மூடிப் படுத்தே கிடக்கலாம். ஆனால் “விடியற்காலை சுக உறக்கம்” என்பது இன்றுவரை இக்கிராம மக்களுக்கு “வசப்படாத விஷயமே”. சற்று கல்நெஞ்சத்தோடு விடாப்பிடியாகக் தூங்க முயன்றாலும்… பாடலின்,

“உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை”

நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை” – என்ற வரிகள் வரையே தாக்கு பிடிக்க முடியும். பின்பு வரும்…

“வேல்முருகா…

வெற்றி வேல்முருகா…

அரோகரா… “- என்ற பக்தி ஆவேச கோசத்தில் தூங்கிக் கிடந்த அத்தனை பேரின் கண்களும் திணறி விழிக்கும். கிராமத்தில் பக்திமணம் கமழ யார் கண்டு பிடித்ததோ இந்த ஏற்பாடு. இருந்தும் சாமிக் குத்தம் ஆகிவிடக்கூடாது என்ற பயத்தில் யாரும் பெரிய எதிர்ப்பெதுவையும் காட்ட வில்லை. மேலும் சாமி வந்து கண்ணைக் குத்தி தண்டித்து, ஒற்றைக் கண்ணால் கழிய, யாரால் முடியும்.

கணேசனைச் சந்தித்துப் பிரசிடெண்ட் இறந்த விஷயத்தைச் சொன்னான் முத்தையன். அவரசமாய் பாட்டை நிறுத்திவிட்டு, முத்தையனிடம் லேசாக வருத்தப்பட்டு, வெகுவான ஆச்சர்யம் காட்டினான் கணேசன். அக்கிராமத்தின் காற்றெங்கும், பாடல் நிறுத்தப்பட்ட விடியற்காலையின் “மௌனம்”.

“நேத்து சாயங்காலம்தான், மணிக்கு கடையில ரெண்டு செந்துளுவன்பழம் சேர்ந்தாப்புல தின்னாரு… இப்ப செத்து போனாருன்னு சொல்லுகியேன்னு” – என்ற கிண்டல் தொனியோடு வருத்தப்பட முனைந்தான் கணேசன்.

“செந்துளுவன் பழம் தின்னுட்டு… சாகப்புடாதா என்ன… – என முத்தையன் ஆசுவாசபட, அந்த வினாடியில் மீண்டும் ஒரு பாட்டின் சப்தம்.

ஊரின் தெற்கு மூலையிலிருந்து முக்கால் கிலோமீட்டர் தூரமுள்ள கிறிஸ்தவ சமுதாய மக்கள் வாழும் திரித்துவபுரத்திலிருந்து.

நன்றி இயேசுவே… உமக்கு நன்றி இயேசுவே…

பெரும் சாபம் தீர்த்து எமை காத்த,

உமக்கு நன்றி இயேசுவே…

உமக்கு நன்றி இயேசுவே…

கணேசனும், முத்தையனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கணேசா… என்னடே, இது…?

இது தெரியலையா… இது இயேசு பாட்டாக்கும்…

அது தெரியி, இது எத்தர நாளா… நடக்குன்னு கேக்கேன்…

இப்பம் ஒரு மூணு நாளாதான்… நம்ம சாமி பாட்ட கேட்டிட்டே உறக்கம் முழிச்சா… அவ்வோ சாமி கோவப்படாதா என்ன… அதான் இப்பம் ரெண்டு மூணு நாளா, அவனுகளும் பாட்டு போடுகானுகோ… வெளிநாட்டு பயோனியர் ஸ்பீக்கர் எப்படி காதை கிழிக்கு பார்த்தியா… நம்ம ஊதுகுழல்களையும் தூர தூக்கி போட்டுட்டு, இந்த மாதிரி வாங்கணும்… முத்தையா… நம்ம ப்ரெசிடென்ட்ட சொல்லு கேட்டயா… – தன்னை மறந்து கூறிவிட்டு, பின்பு சுயநினைவுக்கு வந்தவனாய், “இனி எங்க போட்டு சொல்ல… அவருதான் பாட்டை… நிறுத்தியாச்சே” – என்று சொல்லிக் காமெடி அடித்தான் கணேசன்.

ஊருக்குள்ள இளவு விழுந்திருக்கும் போது, இப்படி பாட்ட போட்டு கொளுத்தலாமா கணேசா? அங்க யாராங்கும் பாட்டு போடுகது? ஒரு போன போட்டு நிறுத்த சொல்லு டே… – முத்தையன் உண்மையான கவலையோடு கூறினான்.

கணேசனுக்கு நிலைமை குஷியாக இருந்தாலும், முத்தையன் சொன்ன படி போன் போட்டு பேசி விட்டு,

யாரு செத்தாலும் பாட்ட நிறுத்த முடியாதுன்னு சொல்லுகான் முத்தையா…

யாரு…

நம்ம லாசருதான்…

யாரு ? குண்டு லாசரா?

ஆமா… – என்று கணேசன் சொன்ன அந்த வினாடி, முத்தையனுக்கு பழைய சம்பவமொன்று நினைவுக்கு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, பிரசிடெண்ட் தோட்டத்தில் தென்னைக் கருக்கு(இளநீர்) பறிக்கும் “களவு” அதிகமாக இருந்தது. ஓன்று ரெண்டென்றால் முத்தையனும் கண்டு கொள்ள மாட்டான். ஒவ்வொரு முறையும் ஏழெட்டு குலைகள். அறுபது எழுபது காய்கள். வெள்ளரித் தோட்டத்தில் புகுந்த எருமை மாடுகளென, ஏதோ ஒரு கூட்டத்தின் கைங்கர்யம். இளநீரை குடிப்பதோடு நிறுத்தாமல், இளநீரில் குளித்து, குண்டி கழுவியும் பார்த்துக் கொண்டது, மனிதப் போர்வையிலிருந்த அந்தக் குரங்கு கூட்டம். நாளுக்கு நாள் இளநீர் திருட்டு அதிகரிக்க, பொறுக்க மாட்டாமல் தென்னை மரத்தண்டில் பிளேடு துண்டுகளைச் சொருகி வைக்க பிரசிடெண்ட் சொல்ல, முத்தையனும் அவ்வாறே செய்திருந்தான். கிரிக்கெட் விளையாடிக் களைத்த ஒரு மாலைக் கருக்கலில் திரித்துவபுரத்தைச் சார்ந்த லாசரும் அவன் நண்பர்களும், “பிளேடு” விஷயம் தெரியாமல் “கள்ளக்கருக்கு” குடிக்க மரத்தில் ஏற, உடம்பெங்கும் கண்டதுண்டமாய் பிளேடின் கீறல்கள். நிலவு இருட்டில் ரத்த சகதியில் துடித்தழுதனர் இளைஞர்கள் அனைவரும். ஐந்தாறு நாட்கள் ஆஸ்பத்திரி வாசத்திற்குப் பின்பே அனைவராலும் எழுந்து நடக்க முடிந்தது.

சம்பவம் கேள்விப்பட்டு முத்தையன் மிதப்பில் திரிய, பிரசிடெண்ட் மீதும் வேலைக்காரன் முத்தையன் மீதும் கொலை வெறியில் இருந்தார்கள் திரித்துவபுர இளவட்டங்கள் அனைவரும். அதிலும் ஏதேனும் ஒரு திருவிழா சமயத்தில் சம்பந்தப்பட்டவரின் தலையில் “குத்தாலம் துண்டையோ” அல்லது “சாக்கையோ” போட்டு மூடி, அவர் சுதாரித்து முடிப்பதற்குள், முப்பது, நாற்பது குத்துக்களைச் சரமாரியாக குத்தும் “கும்மாங்குத்து” பரிபாடியை, பிரசிடெண்ட் மேலோ அல்லது முத்தையன் மேலோ ஏவுவதற்கு சாதகமானச் சூழ்நிலையை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர் குண்டு லாசரும் அவன் குழுவினரும்.

தற்கால பின் நவீனத்துவ சிந்தனைகளின் தாக்கமோ, என்னவோ, நடந்த சம்பவத்தால் “முதலாளித்துவத்தின் மீது” கடும் விரக்தியிலிருக்கும், இவர்களிடம் சென்று, பாட்டை நிறுத்த சொன்னால் எப்படி நிறுத்துவார்கள்? முத்தையனுக்கு பல யோசனைகள் வருவதும் போவதுமாக இருந்தது.

அந்த நிமிடத்தில் முதல் பாட்டு முடிந்து, அடுத்த பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.

பயப்பட மாட்டேன்… நான்

பயப்பட மாட்டேன்…

இயேசு என்னோடு

இருப்பதினால்…

இரண்டாவது பாட்டைக் கேட்டதும் கணேசனுக்கு சிரிப்பு பொங்கியது. நேரடியாக முத்தையனின் முகம் நோக்கியே ஏளனச் சிரிப்பு சிரித்தான் கணேசன்.

யார்ட்ட கேட்டிட்டு இவனுக… இப்படி பாட்டை போட்டு கொளுத்துக்கானுக்கோ ? – ஏதோ நினைப்பில் முத்தையன் கூறினான்.

யார்ட்ட கேக்கணும்…? கேட்டேல்லா பாட்டை… அவனுகோ எதுக்கும் பயப்பட மாட்டானுகளாம் – மீண்டும் கணேசனின் கிண்டல் தொனிப் பேச்சு.

வாக்கு தர்க்கம் முற்றி சண்டைக்கு வழிவகுத்துவிடும் என்பதால், பதிலேதும் சொல்லாமல் சைக்கிளை கிளப்பினான் முத்தையன்.

மனதிற்குள் மட்டும் கடுமையான கோபத்தின் குரல்கள்.

“இவ்வளவு கொழுப்பா… இவனுகளுக்கு… இவனுகளுக்கு பாட்டை எப்படி நிறுத்தணும்னு எனக்கு தெரியும்னு”- என்று கூறிக் கொண்டே ஊரின் வடகோடியிலிருந்தத் திரித்துவபுரத்திற்கு பிரியும் மின்சார பகிர்மான ட்ரான்ஸ்பார்மரை நோக்கி சைக்கிளை அழுத்தினான் முத்தையன். அடுத்த ஆறாவது நிமிடத்தில் இயேசு இருக்கும் தைரியத்தில் யாருக்கும் பயப்படாமல் பாடிக்கொண்டிருந்த திரித்துவபுர ஸ்பீக்கர் மின்சாரமில்லாது “பேரமைதி” காத்தது.

காலைச் சூரியன் சொரியும் ஒளியுடனேயே ப்ரசிடென்டின் இறப்பு செய்தியும் எல்லோர் வீட்டுக்குள்ளும் பரவியது. காரியம் சாதிக்க நினைக்கும் பெண் மக்களின் கண்ணீரைப் போல், மழைவேறு விடாமல் தூறிக் கொண்டேயிருந்தது. பிரசிடெண்ட் வீட்டுக்கு முன் பச்சை ஓலைக் கட்டி பந்தல் போடப்பட்டிருந்தது. அது என்ன குறியீடோ… என்னவோ… ஒரு ஒற்றைப் பெஞ்சும் வீட்டு வாசலை அலங்கரித்தது. ஒரே மகன் அருணாச்சலம் உள்ளூரில் இருப்பதால் தடபுடலாய் ஏற்பாடுகள் நடந்தேறின. திருநெல்வேலி தாசில்தாருக்கு வாழ்கை பட்டுப் போன, மகளின் குடும்பமும் பெருவெள்ளம் கடந்து வந்திருந்தனர். சம்மம் பிள்ளையின் பேரப்பிள்ளைகள் சப்பாத்து வெள்ளம் கடக்கையில் சிரிப்பாய் சிரித்துத் தொலைத்தனர். சிரிப்பு சத்தத்தோடு அப்பாவின் சாவிற்கு செல்வதற்கு மகளுக்குச் சங்கடமாயிருந்தது. வீட்டு வாசலை அடைந்ததும் ஆக்ரோஷமாக கூவி, ஒரு அழுகை ஒப்பாரி வைத்தாள் மகள். நாலைந்து குலுங்கலோடு அழுகையை முடித்துவிட்டு, விருந்தினர் வருகையில் மட்டும் அளவோடுச் சிணுங்கிக் கொண்டிருந்தாள். பெய்து கொண்டிருக்கும் மழையால், பெரிதான கூட்டம் இல்லை. உள்ளூர் காரர்கள் அங்குமிங்கும் வருவதும், போவதுமாக இருந்தனர்.

பெருவெள்ளம் வடியாமல் பிணமெடுக்க முடியாது. சுடுகாட்டு பள்ளமெங்கும் வெள்ளக்காடு. சுடுகாட்டு ஈசனின் வடிவமாகிய சுடலை மாடனே, கழுத்தளவு தண்ணீரில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார். எதிராளி முண்டன் சாமி, தண்ணீருக்குள் மூழ்கி, முப்பது மணிக்கூர் கழிந்திருந்தது. வெள்ளம் வற்றிய பிறகுதான், கொஞ்சம் வெற்றிலை, பாக்கு, பழத்தை வைத்து மூச்சிருக்காவென சோதிக்க வேண்டும். சுடுகாட்டு சாமிகளே தத்தளிக்கும் இந்த சூழ்நிலையில், ஆசாமி ப்ரசிடெண்டை கொண்டு போய் எங்கே அடக்குவது. எப்படியும் இன்று அடக்கமில்லையென்று அனுமானித்த நிலையில், கைகால்கள் விரைப்பதற்குமுன் சவத்தைக் குளிப்பாட்டி ஐஸ் பெட்டிக்குள் அடைந்திருந்தார்கள். ஆளாளுக்கு மழை எப்போது நிற்கும் என்ற சாயலில் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கோ… இடி மின்னலுடன் கருமேகமாய் திரண்டு அடுத்த மழையைத் கொட்டித் தீர்ப்பதற்கு தயாராய் இருந்தது வானம்.

மூன்றாம் நாளில் சுடலையும் பெருவெள்ளத்தில் முங்கிய செய்தியை கேட்டதும் தான் மகன் அருணாச்சலம் முடிவை மாற்றினான். அப்பாவின் சிவலோக பதவியின் பயணம் சுடலையின் சுடுகாட்டுவழி அல்ல. இயேசு சாமியின் இடுகாட்டின் வழியென்று. ஆம்… வேறு வழியில்லை. மழை நிற்பதாகத் தெரிய வில்லை. இன்று கூட ஒரே சீராகப் பெய்த வண்ணமே இருக்கிறது. இறந்த உடல், இரத்தம் சுண்டிக் கருக்கத் தொடங்கியிருந்தது. இன்னும் தாமதிப்பது சரியல்ல.

“அப்பாவுக்கு, சூடே ஆகாது… காப்பி கூட சூடா குடிக்க மாட்டா… அதான்… கடவுளு இந்த நிலைமையை உண்டாக்கியிருக்கான்” – என மூக்கைச் சிந்திக் கண் கலங்கினாள் மகள்.

திரித்துவபுர பெரியவர்களிடம் அனுமதியும் கேட்டாயிற்று. எதிர்பார்த்தபடியே இளவட்டங்கள் ஆக்ரோஷமாகப் போர் கொடி தூக்க, “ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தை காட்டுங்கள் – என்பது மாதிரியான பைபிள் வசனங்களை கூறி, அவர்களையும் சம்மதிக்க வைத்திருந்தனர் அறநிலை போதகர்கள். சர்ச்சின் விரிவாக்கப் பணிகளுக்கு பிரசிடெண்ட் மகன் அருணாச்சலம் கொடுத்த பெரிய தொகையொன்று “சர்ச் போதகர்களை” மகிழ்ச்சி படுத்தியிருந்தது. ஒரே ஒரு நிபந்தனைதான். பிணத்தை எரிக்க கூடாது. கிறிஸ்தவ முறைப்படி பெட்டியிலிட்டு புதைக்க மட்டுமே செய்ய வேண்டுமென்ற “அன்பு” கட்டளையைப் பிரசிடெண்ட் குடும்பம் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டது. சில உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பையும் மீறி, சம்மம் பிள்ளையின் இறுதிப்பயணம் ஒருவாறு முடிவாகியிருந்தது. பிணத்தைச் சவப்பெட்டியில் அடக்கி, புதைக்கும் பொறுப்பு லாசர் மற்றும் குழுவினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. கோபத்தில் வாய் திறந்த லாசரின் வாயில் ஒரு அப்பத்தை திணித்து, நெற்றியில் சிலுவையிட்டு ஆவேசம் தணித்தார் சர்ச் பாதர் சாலமன்.

இந்து முறைப்படியிலான இறுதிச்சடங்குச் சம்பிரதாயங்களை முடித்து, பாடைப் படகேறி கிறிஸ்தவ சிமித்தேரி வந்தடைந்திருந்தார் சம்மம் பிள்ளை.

குழிக்குள் உடலை இறக்கும் பணிச் செய்ய, கிறிஸ்தவ இளைஞர்கள் தயாராய் இருந்தனர். சம்மம் பிள்ளையின் தூரத்து சொந்தக்காரன் ஒருவன், முழு போதையில், “ஏன் அருமை சித்தப்பாவை, யாம்ல… இந்த இழவு குழிக்குள்ள தள்ளுகியோன்னு” மழையில் நனைந்த படியே தூரத்தில் சளம்பிக் கொண்டிருந்தார்.

லாசருக்கு கோபம் கோபமாக வந்தது. அடக்கி கொண்டான். பாடையிலிருந்து சம்மம் பிள்ளையை சவப்பெட்டிக்குள் மாற்றத் தொடங்கினர். என்ன கோபமோ, என்னவோ, பெட்டிக்குள் போக பிரசிடெண்ட் மறுத்தார். எப்படி திருப்பிப் பார்த்தாலும் உடல் பெட்டிக்குள் அடங்க மறுத்தது. காலை மடக்கி ஐஸ் பெட்டிக்குள் வைத்தது பெரிய தப்பாக போயிற்று. மடக்கிய கால்கள் நிமிராமல் சவப்பெட்டியைத் தட்டி நின்றது. லாசர் கண்ணைக் காண்பிக்க, ஒரு வெள்ளை வேஷ்டியைப் பந்தல் போல் பிடித்து, பிணத்தை சுற்றி மறைத்தனர். உள்ளே சென்ற லாசர், சம்மம் பிள்ளையின் மடித்தக் காலை தன் தோளில் வைத்து, நிமிர்க்கும் பொருட்டு முழுப்பலத்தையும் கூட்டி ஒரு அழுத்து அழுத்தினான். முட்டெலும்பு நகரவோ, உடையவோ செய்த மாதிரி “மடக்”கென்று ஒரு சப்தம். சுற்றி நின்ற சம்மம் பிள்ளையின் குடும்பத்தார்கள் குழிக்குள் எட்டிப் பார்த்தார்கள்.

நீட்டிய காலோடு சவப்பெட்டிக்குள் நீண்டுப் படுத்திருந்தார் சம்மம் பிள்ளை. பதட்டமடைந்த எல்லோருக்கும் பெருத்த சந்தோசமாக இருந்தது. வேஷ்டிபந்தலுக்குள் லாசருக்கு கூட நின்று உடம்பை பிடித்திருந்தவன், “செத்தப்பொறகும், அவருக்கு காலை ஒடச்சு… பழி தீர்த்திட்டயே மச்சான்” என்று லாசரின் காதுக்குள் கிண்டல் தொனியோடு கிசு கிசுக்க, குண்டு லாசரும் லேசாகப் புன்னகைத்தான். இந்துக்கள் அனைவரும் ஒரு கைப்பிடி மண்ணெடுத்து குழிக்குள் இட்டு, “ஆமென்” என்றனர். அதைக் கேட்ட சர்ச் பாதர் சாலமன் பரவசத்தோடு, அல்லேலூயா… ஆமென்…! என்றார்.

மழை வெள்ளத்தால் சம்மம் பிள்ளை பட்டப்பாடு, அடுத்த நாள் தினசரிகளில் “மத நல்லிணக்கம்” என்ற பெயரில் செய்தியாக வெளி வந்திருந்தது.

***

2 Replies to “இடுகாட்டு மோட்சம்”

  1. பிணத்துக்கு மதமில்லைதான் இதை கிராமியச்சூழலோடு உறுத்தாத எள்ளலோடு இடுகாட்டுமோட்சத்தை சொல்லியிருக்கும் சிவாவுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.