ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை

This entry is part 2 of 48 in the series நூறு நூல்கள்

ராஜேஷ் சந்திரா

“கொடும்பாவி” என்ற வார்த்தையோடுதான் இலங்கை இனப் பிரச்னை எனக்கு அறிமுகமானது.  பள்ளிப் பாடங்கள் படித்துக்கொண்டிருந்த ஒரு மாலையில் தெருவில் வழக்கத்துக்கு அதிகமான சத்தம் கேட்க வெளியே வந்தால் எதையோ எரித்துக் கொண்டிருந்தார்கள்.  என்னவென்று கேட்க ஒரு அண்ணன் ஆவேசமாக “ஜெயவர்தனேவின் கொடும்பாவியை எரிக்கிறோம்” என்று கூவினார்.  அதற்கு அடுத்த வாரம் இலங்கையில் நடந்த கலவரத்தைக் கண்டித்து ஒரு வாரம் விடுமுறை விடடார்கள்.  மாணவர்கள் விவஸ்தையில்லாமல்  விடுமுறைக்காக சந்தோஷமாகக் கைத்தட்டினோம். ( இன்று ஃபேஸ்புக்கில் மரண செய்திகளுக்கு லைக் போடுகிறார்கள்.  பரிணாம வளர்ச்சி அடையவில்லை.)

2000-களில் தமிழ் வலைப்பதிவுகளில் மிக உணர்வுபூர்வமாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் இலங்கை.  இயக்கங்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற இரு வண்ணங்கள் மட்டுமே பூசப்படும்.  இயக்க எதிர் நிலை எடுப்போரின் சாதி, பெற்றோர் கற்பு ஆகியவை விமர்சையாக விவாதிக்கப்படும்.  இவர்களில்  பலருக்கு இதன் முழுப் பரிமாணமும் தெரியாது.  யாரோ சொன்னார்கள் என்று இவர்களும் கோஷ்டிக் கானத்தில் சேர்வார்கள்.   கிடைக்காதது உண்மை நிலவரம்.  அதனால் எதிலும் சேராமல் மவுனம் காத்தாலும் இலங்கை நண்பர்கள் கிடைத்தார்கள் .  அவர்கள் வழியே சில தெளிவுகள்  கிடைத்தாலும் இன்றும் இயக்க வரலாறுகள் மர்மமானவையே (அதிலும் LTTE பற்றிய உண்மைகள் இன்னும் குறைவு).

இந்த நிலையில் ஷோபாசக்தியின் படைப்புகள் அறிமுகமாயின.  முதல் நாவலான “கொரில்லா” முதன் முறையாகப் படிக்கும்போது அதன் இலங்கைத் தமிழைவிட நேர்கோட்டில் செல்லாத  நாவல் அமைப்பு குழப்பியது.  என்றாலும் கதாசிரியரின் சவாலை ஏற்று அதனுள் புகுந்தபோது அங்கதம் கலந்த வாழ்க்கைக் குறிப்புகள் ஷோபாசக்தி எழுதியவைகளைப் படிக்க வைத்தன (வைத்துக் கொண்டிருக்கின்றன).

“கொரில்லா” நாவல்  1970-90-களில் ஈழத்தில் நடந்த பல உண்மை சம்பவங்கள் வழியே பல உண்மை மற்றும் கற்பனைக் கதாபாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறது.  முதல் பாகத்தில் யாக்கோப் அந்தோணிதாசன் (ஷோபாசக்தியின் பாதிப்புள்ள பாத்திரம் ) அடைக்கலம் வேண்டி ஃப்ரெஞ்சு அதிகாரிகளுக்கு விண்ணப்பம் எழுதுகிறார்.   முதலில் இந்திய அமைதிப் படையினரால் இயக்கத் தொடர்பு உள்ளவர் என்று குற்றம் சாட்டப்பட்டு (இயக்கத் தோழர்களுக்கு விளம்பரத்தட்டி எழுதியதால்), உதைபடுகிறார் .  அவர்கள் இலங்கையை விட்டு நீங்கியபின் LTTE கைது செய்கிறது (அவர் சக போராளிகளைக் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில்).  விடுதலை ஆனபின் இப்போது போரில் இலங்கை ராணுவத்தின் கொடுமை (போராளி என்ற சந்தேகம்).  கொழும்பில் கைது செய்யப்பட்டு, பின் ஒரு தமிழ் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்து போலி பாஸ்போர்ட்டில் ஃப்ரான்ஸில் அடைக்கலம்.

இரண்டாம் பாகத்தில் ரொக்கிராஜ், குஞ்சன்வயல் என்ற கிராமத்தில் அறிமுகமாகிறான்.  இவன் தந்தையிடம் அடிவாங்கிய ஒரு போலீஸ் அதிகாரி அவருக்கு வைத்த பெயர் கொரில்லா.  அதனால் ரொக்கிராஜுக்கும் அந்தப் பெயர்.  அவனும், அவன் தங்கையும் தந்தையின் அடாவடியை வெறுக்கிறார்கள்.  ஒரு நாள் வீட்டில் சொல்லாமல்  ரொக்கிராஜ் இயக்கத்தில் சேர்கிறான்.  அவனுக்கு இயக்கம் வைத்த பெயர் சஞ்சய் (அவன் பக்கத்தில் நின்றவனுக்கு ராஜீவ்…இது இந்திரா இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்த காலம்).  இந்தப் பெயரை வைத்து அவன் தந்தை போகிறபோக்கில் அடிக்கும் ஒரு வசனம் கவனமாகப் படிப்பவர்களுக்குப் புரியும்.  பயிற்சியை முடித்தவுடன் இயக்கம் அவன் கிராமத்துக்கே காவலுக்கு அனுப்புகிறது.  தயக்கத்துடனே வருகிறான்.  அவன் அஞ்சிய மாதிரியே தந்தையோடு மோதல் ஏற்படுகிறது.  இதனிடையில் இயக்கத்துக்கு  நெருக்கமான ஒருவரை இவனும், தோழனும் தாக்கிவிடுகிறார்கள்.  அதில் ஏற்பட்ட கசப்பில் இயக்கத்திலிருந்து விலக, அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டு இயக்கச் சிறையில் சில நாட்கள் செலவிடுகிறான்.  பிறகு கொழும்பில் வேலை செய்வதோடு முடிகிறது.

மூன்றாம் பாகம் ஃப்ரான்ஸில் அந்தோணிதாசன் தோழர் ஒருவரின் பார்வையில் கதை தொடர்கிறது.  கம்யூனிசம், கிறிஸ்தவம்,  சற்று வசதியுள்ள இலங்கைத் தமிழர் லொக்கா என்ற தனிநாயகம் என்று நூலறுந்த பட்டமாக அந்தோணிதாசன் வாழ்க்கை அலைந்து ஒரு கொலைக்கான விசாரணையில் உண்மையில் அவர் யார் என்பதோடு முடிகிறது.

கதைக்களம் இந்தியத் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் புதியது.  இதற்கு முன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதியிருக்கலாம்.  ஆனால் தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயமோகன்,

 சாரு நிவேதிதா என்று படித்தவர்களுக்கு ஷோபாசக்தி கதைகூறும் முறையும், நிகழ்வுகளை ஒரு அலட்சிய பாவனையில், பகடியுடன் பயங்கரவாதத்தை எழுதும்  முறையும் தொந்திரவு செய்யும்.   அவரின் அரசியல் சாய்வுகளை நான் பேசப் போவதில்லை.  ஒரு கதாசிரியராகவே இங்கு அவரின் படைப்புகளைப் பேசமுடியும். (ஆனால் படைப்புகளே அரசியல்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்).  

கதை 1970-90-களின் ஈழத்து வரலாறோடு பின்னிப் படர்ந்திருக்கிறது.  இலங்கை ராணுவமும், இயக்கமும் மக்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள நடக்கும் அரசியல் போட்டியாகவும், இரு தரப்பும் பயங்கரவாதத்தை தயக்கமில்லாமல் பிரயோகிக்கவும் செய்கின்றன.   இவர்களின் ஊடாக ஒரு தனி மனிதனின் இருத்தலை நாவல் காட்ட முயல்கிறது.  இதில் ரொக்கிராஜோடு இணையாமல் சில நிகழ்வுகள் புகைப்படங்களாக வந்து போகின்றன.  உதாரணமாக, குமுதினி படகுப் படுகொலைகள், அவன் தங்கை பிரின்சி நடத்தும் தற்கொலைத் தாக்குதல், அவன் அத்தை முறையாக வேண்டிய ஜெயசீலி, சபாலிங்கம்  கொலை (இவர் LTTE-க்கு எதிரான புத்தகம் ஒன்றை எழுதியதால் 1994-ல் கொல்லப்படடார்), நாவலின் பல கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்போதே எவ்வாறு இறந்தார்கள் என்ற குறிப்புகளுடன் வருவது போன்றவற்றை சொல்லலாம்.  ஒரு வகையில் ரொக்கிராஜ் இயக்கத்தில் சேர்ந்து, விலகி, அதன் போக்கை அவதானிப்பதாக இந்த சம்பவங்கள் அமைகின்றன.

ஷோபாசக்தியின் கதைகள் மேல் பார்வையில் அங்கதங்களோடு வந்தாலும், கவனத்தைக் கோருகின்றன.  அசோகமித்திரன் வீட்டு வாழ்க்கையின் வன்முறைகளை சாதாரண மொழியில் எழுதி படிப்பவரை ஏமாற்றுவது போன்றது இது.

உதாரணமாக, ரொக்கிராஜ் இந்திராகாந்தி கொல்லப்படட செய்தியை 

ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு வரும்போது அவன் தந்தை கொரில்லா “பத்தாயிரம் சனத்துக்கு கொட்டையை வெட்டி நலம் அடிச்சவள் செத்துப் போனாள்….அதுக்கு இந்தப் பொடி என்ர சோத்தைத் திண்டு போட்டெல்லோ லஸ்பீக்கர்ல வசனம் பேசுது” என்று கருத்து விடுகிறான்.  இது ரொக்கிராஜுவின் இயக்கப் பேரோடு பொருத்தினால் வரும் அர்த்தமே வேறு.   தன் தந்தையை இயக்கத் தோழர்களோடு கைது செய்ய வரும் இடத்தில் தந்தை பயமே இல்லாமல் ஆயுதத்தோடு வர , இவர்கள் பயந்து பின்வாங்கி ரொக்கிராஜ் திடீரென்று தன்  நண்பனிடம் “அந்த கிரனேடை எடுத்து அடி” என்று கத்த, இப்போது கொரில்லா பின் வாங்குகிறான்.  கண்ணிவெடியாகப் புதைக்கப்பட்டிருந்த சிலிண்டரை கொரில்லா திருடி விற்று காசு பார்க்க, இயக்கம்  மகனை உதைக்கும் இடம். 

நாவலில் இரண்டு இடங்களில் மட்டும் கேள்விகள் எழுந்தன.

1) பிரின்சி-யின் இந்திய அமைதிப்படையின் மீதான தற்கொலைத் தாக்குதல்.  ஷோபா இது நடந்த அடுத்த மாதம் அமைதிப்படை இந்தியா திரும்பினர் என்று சொல்கிறார்.  மேலும் பிரின்சியின் இயக்கப் பெயரையும் அடிக்குறிப்பில் தருகிறார்.  எனக்குத் தெரிந்த வரையில் பெண் கரும்புலிகள் தற்கொலைத் தாக்குதல் LTTE இயக்கத்தின் பெயரால் அப்போது நடக்கவில்லை.  அப்படியே அது இயக்கத் தூண்டுதல் இல்லாமல், தனி ஆள் தாக்குதலாக இருந்திருந்தாலும் இந்தியப் பத்திரிக்கைகள் இதைப் பேசியிருக்கும்.

2) குமுதினி படுகொலை நடந்தபின் உடல்களை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல LTTE இயக்கம் உதவியது என்று கதையில் வருகிறது.  ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று டிசே தமிழன் பதிவு ஓன்றில் தெரிகிறது (https://www.blogger.com/comment.g?blogID=9143217&postID=110731808470277070).   இந்தப் புள்ளி ஒரு சந்தேகம் மட்டுமே.  எனக்கு இதன் முழு விவரம் கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கியத்தில் கொரில்லா-வின் பங்கு என்ன?  கதை ஒரு இன அழிப்பின் ஆவணம், அதை எழுதியவரும் அந்த வரலாறில் தன் இளம் பருவத்தைக் கழித்தவருமாக இருப்பதால் முக்கியமான படைப்பாக ஆகிறது.  இன்று தமிழ் இலக்கிய உலகில் ஷோபாசக்திக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது,  அவரின் நிஜ வாழ்வு அரசியல் பலருக்கு உவப்பற்றதாக இருக்கலாம்.  ஆனால் அதை மட்டும் பார்த்து அவரின் இலக்கியப் படைப்புகளை இழக்க முடியாது.

இலங்கை இனப்போரின் இறுதியைக் கண்ட அனைவருக்கும் நாவலில் வரும் ஒரு இடம் எழுத்தாளனின் கணிப்பு எவ்வளவு சரியானது என்று காட்டும் :  குமுதினி படுகொலைக்கு எதிர்த்  தாக்குதல் நடத்தி, இராணுவத்தினரைக் கொன்று கணக்குப் பார்க்கும்போது ரொக்கிராஜ் தன்னையும் மீறிஅண்ணே நாங்கள் கதைக்கிறது பிழையோ? இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை.” 

  • கொரில்லா – ஷோபாசக்தி 
  • பதிப்பாளர்: அடையாளம் / கறுப்புப் பிரதிகள் 
  • பக்கங்கள்: 200
  • https://www.commonfolks.in/books/d/guerilla
Series Navigation<< பருவம் – சகாப்தத்தின் குரல்கள்அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் >>

One Reply to “ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.