விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2

This entry is part 30 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

சென்ற பகுதியில், லாப நோக்குடைய வியாபாரங்கள் தங்களது லாபத்திற்குச் சவால் வரும் நேரத்தில், எப்படி விஞ்ஞானத்தை வளைக்கின்றன என்று சில நுட்பங்களை ஆராய்ந்தோம். இன்னும் சில விஞ்ஞானத் திரித்தல் முறைகளை மேலும் இந்தப் பகுதியில் ஆராய்வோம்.

நான்காவது முறை, ஓர் எதிர்கால நிகழ்வைத் துல்லியமாகச் சொல்லாத விஞ்ஞானக் கோட்பாட்டை அர்த்தமற்றது என்று கேலிசெய்வது. ஓர் உதாரணம் பார்ப்போம். இன்றைய பிரபஞ்ச பெளதிகத்தின் மிக முக்கிய ஒரு விஞ்ஞானக் கோட்பாடு பெரு வெடிப்பு கொள்கை (big bang theory). இன்று ஆராய்ச்சி வளரவளர, சில அடிப்படைக் கேள்விகள் இன்னும் பதிலில்லாமல் இருக்கின்றன. அதில் ஒன்று, இருள் பொருள் (dark matter), மற்றும் இருள் சக்தி (dark energy). இவ்வகைத் தடுமாற்றங்கள் ஏற்படும்போது, விஞ்ஞானிகள் மூலக் கொள்கையைக் குறைசொல்வதில்லை. மாறாகப் புதிய புரிதலுக்கு ஏற்றபடி, விஞ்ஞானக் கோட்பாட்டை மெருகேற்றவேண்டும் என்றே சொல்லுவார்கள். ஏனென்றால், சரித்திரம் இவ்வகை மாற்றங்கள் பலவற்றால், விஞ்ஞானிகளுக்கு எப்போதும் பாடம் கற்பித்துக்கொண்டே வந்துள்ளது. உண்மையான விஞ்ஞானிகள், இவ்வகைத் தருணங்களில் மிகவும் முன்நோக்கிய பார்வையுடனே இருப்பார்கள். அட, இது ஓர் அருமையான புதிய முயற்சிக்கான / புரிதலுக்கான சந்தர்ப்பம் என்பதே இவர்களின் மனநிலை. மாறாகக் குழப்பிக் குட்டையில் மீன் பிடிப்பவர்கள், பெரு வெடிப்புக் கொள்கை வெறும் டுபாகூர் விஞ்ஞானம். இருள் பொருள் மற்றும் இருள் சக்தியைக்கூட விளக்காத உதவாக்கரை கோட்பாடு என்று கதை கட்டிவிடுகிறார்கள். இன்றும் இணையத்தில் இது போன்ற பல தில்லுமுல்லுத் தளங்கள் மேதாவிகள்போல உலாவருகின்றன.

இந்த முறையின் இன்னொரு நுட்பம், ஒரு சரியான முடிவுக்கு வரத் தவிக்கும் பரிசோதனை முடிவுகளை ஊதி வாசித்து, அடிப்படைக் கோட்பாடே தவறானது என்று சொல்லிவிடுவது. இது சிகரெட் தொழிலில் நடந்த ஒன்று, 1930–களில், புள்ளியியல் துறை அதிகம் வளரவில்லை. புள்ளியியலில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கச் சோதனைக் கோட்பாடுகள் (theory of experiments) பெருவாரியாக வளரவில்லை. புகைபிடித்து, நுரையீரல் புற்றுநோய் வருவது என்பது முன்பே நாம் சொன்னதுபோல, ஒரு 60 ஆண்டுகள் பிடிக்கும் விஷயம். இந்த 60 ஆண்டுகள் தொடர்ந்து புகைபிடிக்கும் மனிதர்களிடம் தரவுகள் சேகரிப்பது மிகவும் கடினம். புள்ளியியல் நிபுணர்கள் நடத்திய ஒவ்வொரு சோதனையையும், சிகரெட் தொழில் முறியடித்தது. இந்தச் சோதனைகளின் முடிவுகளை வைத்துக்கொண்டு, விஞ்ஞானிகள் சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும் என்று சும்மா கதைகட்டுகிறார்கள் என்று சிகரெட் தொழில் சொல்லிவிட்டு, லாபம் பார்க்கப் போய்விட்டது. இன்று, நாம் இந்தக் கால கட்டத்தைத் திரும்பிப் பார்த்தால், நமக்குத் தெளிவாவது என்னவென்றால்:

  1. சோதனைகளில், குறைந்த தரவுகளோடு ஒரு தீர்க்கமான முடிவெடுக்க முடியாது
  2. சோதனைக் கோட்பாடுகள் வளர்ச்சியடைய வேண்டியது அவசியம்
  3. Cohort analysisஎன்ற நுட்பம்மூலம், சந்தேகத்திற்கு இடமின்றிக் குறைந்த தரவுகளுடன் மூல விஞ்ஞானத்தை நிரூபிக்கமுடியும்

ஐந்தாவது முறை, தற்சான்றை வைத்து (anecdotal evidence), உண்மையான புள்ளியியல் மற்றும் விஞ்ஞான முறைகளைப் பயனற்றது என்று பிரச்சாரம் செய்வது. இதில், உடனே மனதிற்கு வரும் விஷயம் பறக்கும் தட்டுகள் (flying saucers). எந்த ஒரு தேர்ந்த விஞ்ஞானியும் பறக்கும் தட்டுக்களைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், சிலர் இரவில் பார்த்ததாகக் கூறுவர். மேலும், இது வேற்றுக் கிரக ஊர்த்தி என்று கதை கட்டிவிடுவார்கள். இவர்களுக்குத் தனியாக இயக்கம், இணையதளங்கள் என்று ஒரு பெரிய இயக்கமே உள்ளது. சிலர் கொஞ்சம் ஓவராக, வேற்றுக் கிரக மனிதர்களைப் பார்த்ததாகவே கதை கட்டிவிடுவார்கள். இந்த நுட்பம், புவிச் சூடேற்ற விஷயத்தில் நிறையவே நடக்கிறது. ஜனவரி மாதத்தில், 10 நாள்கள் மிகவும் குளிராக இருந்தால், அதை வைத்துக்கொண்டு, புவிச் சூடேற்றம் சும்மா டுபாகூர் என்று சொல்லுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்னோர் உதாரணம், பெட்ரோலில் ஈயம் கலந்தவர்கள், அதனால் உடல்நலத்திற்கு எந்தக் கெடுதலும் வராது என்று சொல்லிவந்தார்கள். விஞ்ஞானம் ஒரு புறமிருக்க, இவர்கள் அமெரிக்க சர்ஜன் ஜென்ரல் அமைத்த கமிட்டியை, இந்த நுட்பம்கொண்டே சாய்த்தார்கள். இதில் பொது மக்கள் நல்ல முடிவு வெளிவரும் என்று எதிர்பார்த்தும், இந்தக் கமிட்டி மூன்று வடமேற்கு அமெரிக்க நகரங்களில், கராஜ்களில் வேலை செய்யும் ஊழியர்கள், கார் ஓட்டுனர்கள், பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சில தொழிற்சாலை ஊழியர்கள் என்று சிலரைத் தேந்தெடுத்து தரவுகளை சேகரித்தார்கள். இவர்களின் முடிவு?

“எங்களது பார்வையில் ஈயம் கலந்த பெட்ரோலால், மனித உடலுக்கு எந்தப் பாதகத்தையும் எங்களால் திட்டவட்டமாக நிரூபிக்க இயலவில்லை. இதில் மேலும் ஆராய அரசாங்கம் முன்வர வேண்டும்.”

இப்படிச்செய்து, அரசாங்க மற்றும் பொதுமக்கள் சந்தேகப் பார்வைக்கு முற்றுப்புள்ளி வைத்து, லாபம் ஈட்டப் போய்விட்டார்கள்.

இன்னோர் உதாரணம், கடலில் சிந்திய கச்சா எண்ணெய் கரைக்கு வந்து பறவைகள் தவிக்கும்போது, அவற்றைச் சுத்தம் செய்வது மற்றும் மருந்துகள் தந்து சரிக்கட்டுவது. இது ஒரு விஞ்ஞான அடிப்படையில் நிகழும் விஷயமன்று. இவ்வாறு, சரிசெய்ய முயற்சி செய்யப்பட்ட பறவைகள் முற்றிலும் இயல்பு நிலைக்கு மாறவில்லை என்று ஆராய்ச்சி செய்து முடிவாவதற்குள், எண்ணெய் நிறுவனங்கள் தப்பிவிடுகின்றன. இவை யாவும் தற்சான்று முறை உதாரணங்கள்.

ஆறாவது முறை, எதிர்ப்புகளை மட்டும் வளரவிட்டு, முடிவுகள் பற்றி ஒன்றும் சொல்லாதிருத்தல். ஒரு கருத்தை எதிர்ப்பது மட்டும் விஞ்ஞானம் அன்று. உதாரணத்திற்குக் குவாண்டம் பெளதிகப் போக்கு ஐன்ஸ்டீனுக்குப் பிடிக்கவில்லை. அவருக்குச் சாத்தியக்கூறுகள் அடிப்படையான பெளதிகத்தில் ஒப்புதல் இல்லை. அவர் தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டாலும், அவரால் சரியான தீர்வு ஒன்றையும் தரமுடியவில்லை. இதனால், குவாண்டம் பெளதிகத்திலிருந்து அவர் விலகியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால், விஞ்ஞானத் திரித்தல்காரர்களுக்கு இந்தக் கவலை எல்லாம் கிடையாது. கேள்விமேல் கேள்வி எழுப்பி, எந்தத் தீர்வும் சொல்லாதிருப்பது இவர்களின் லாப நோக்கான வியாபாரம் தொடர ஒரு வழி. உதாரணத்திற்கு, ஓஸோன் அடுக்கு விஷயத்தில், ஆரம்ப கால ஆராய்ச்சி செய்த ரோலேண்ட் மற்றும் மோலினா இவ்வகைக் குழப்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். இவர்களது விஞ்ஞானம் சரியில்லை என்று குழப்ப முயற்சித்தார்கள். ஆனால், எது சரியான விஞ்ஞானம் என்று சொல்லமாட்டார்கள்! வளர்ச்சியடையாத விஞ்ஞான முடிவுகளை நம்பி அரசாங்கம், சட்டங்களை உருவாக்கிப் பலருடைய வாழ்வாதாரத்தைக் குலைக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்வகை எதிர்ப்புகளில், எவ்வகையில் நிரூபணம் தேடவேண்டும் என்று எதுவும் சொல்லமாட்டார்கள். வெறும் எதிர்ப்பு மட்டும்தான். இதைப் பொது மக்கள், ஏதோ புகைகிறதே, சும்மாவா என்று அடிப்படை விஞ்ஞானத்தைச் சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டால், இவர்களுக்கு வெற்றி! ரோலேன்ட் மற்றும் மோலினா 25 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி அடைந்ததும், இந்த எதிர்ப்புகளுக்காக எவரும் வருத்தம் தெரிவிக்கவில்லை!

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, இன்னொரு முறையும் கையாளப்படுகிறது. அதாவது, போதுமான தரவுகள் விஞ்ஞான நிரூபணத்தில் இல்லை என்று சொல்லிவிடுவது. இது, மின் சிகரெட் மற்றும் புவிச் சூடேற்றம் முதலிய இரண்டு விஷயங்களில் இன்றும் கையாளப்படுகிறது. முடிவு பிடிக்காவிட்டால், எளிதில் விஞ்ஞானிகளில் தரவில் கோளாறு சொல்வது மிகவும் எளிது. இதைத்தான், சிகரெட் நிறுவனங்கள் பல்லாண்டுகளாகச் செய்துவந்தன. கடைசியில், விஞ்ஞானம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் கடினமான வேலையைச் செய்யவேண்டி வந்தது. விஞ்ஞானம் இவ்வாறு உழைத்து வருகையில், வியாபாரங்கள் லாபம் பார்த்துவந்தன.

ஏழாவது முறை, விஞ்ஞானத் தொழிற் சொற்களைப் பயன்படுத்தி, நுகர்வோர் / பொதுமக்களைக் குழப்புவது. இந்த நுட்பத்தைப் பொதுவாக விஞ்ஞானம் படிக்காத அரசியல்வாதிகள் உலகெங்கும் பயன்படுத்தி வருகிறார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விஞ்ஞானம் படிக்காதவர். கொரோனா வைரஸ் பிரச்சினையில், விஞ்ஞானம் தெரிந்தாற்போலப் பேசிப் பலமுறை விமர்சனத்திற்குள்ளானார். ஜெர்மனியின் தலைவர் ஆஞ்சலா மெர்கல், இப்படி மாட்டிக்கொண்டதாக எங்கும் நீங்கள் படிக்கமாட்டீர்கள். ஏனென்றால், அவர் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

அரசியல்வாதிகளை விட்டுவிடுவோம். வணிக நிறுவனங்கள் விஞ்ஞான தொழிற் சொற்களைப் பயன்படுத்திக் குழப்புவதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு, டூபாண்ட் நிறுவனம் விஞ்ஞானமே தெய்வம் என்று சொல்லிவந்தது. ஆனால், தான் தயாரிக்கும் குளிர்விக்கும் திரவங்கள், ஓஸோன் அடுக்கை அழிப்பது தெரிந்திருந்தும், அதை மறுத்த கையோடு, ‘உண்மையான விஞ்ஞானத்திற்காகக் காத்திருக்கிறோம்’ என்றும் சொல்லிவந்தது. இறுதியில், நெருக்கடிகள் அதிகமாகத் தன்னுடைய விஞ்ஞான இமேஜும் பாதிக்கப்படக்கூடாது, வியாபார லாபமும் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கத் தொடங்கியது. இதனால், குளிர்விக்கும் புதிய திரவங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. திடீரென்று, சரியான மாற்றுக் குளிர்விக்கும் திரவங்கள் சோதிக்கப்பட்டபின்பு, புதிய திரவங்களுக்குச் சத்தமின்றி மாறியது. புதிய திரவங்களை உருவாக்கிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக விஞ்ஞானக் குறிப்புகளை வெளியிட்டது, பழைய திரவங்களை மெதுவாக சந்தையிலிருந்து நீக்கிவிட்டு, விஞ்ஞானத்தைப் பின்பற்றும் ஒரு மிகப் பொறுப்புள்ள நிறுவனம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டது.

வழக்கமான விஞ்ஞானிகளை மிரட்டுதல், அவர்களது ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் கைவைத்தல் என்பது எல்லாம் பழங்கதை. கடந்த 60 முதல் 80 ஆண்டுகளாகப் பெரிய நிறுவனங்கள், நேரடியாக விஞ்ஞானத் திரித்தல் வேலைகளைச் செய்வதில்லை. மாறாக, ஒரு தொழில் அமைப்புக் கழகம் (industry association) அல்லது பொதுத் தொடர்பு நிறுவனம் மூலமாக (PR firms) இவ்வகைத் திரித்தல்கள் ரகசியமாகச் செய்யப்படுகின்றன. மேற்குலக விஞ்ஞான ஆராய்ச்சி உதவித் தொகைகள் பல இவ்வகை அமைப்புகளிடமிருந்தே வருகின்றன. மிகப் பெரிய மேற்குலகப் பல்கலைக்கழகத் தலைவரின் வேலை என்பது நாம் ஓர் உன்னதப் பணி என்று நினைக்கிறோம். இது உண்மை என்றாலும், பல்கலைக்கழகத் தலைவர்கள், இன்று இவ்வகை நிதியுதவியை நாடுதலையே ஒரு பெரிய வெற்றியாக நினைப்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு வளர்ச்சி(?).

இந்தப் பின்னணியில், புவிச் சூடேற்றம் பற்றி அடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்.

Series Navigation<< விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.