
இறப்பு நிகழ்ந்த வீட்டில் உள்ளே நுழையும்போதே இந்த இழப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுற்றுச்சூழல் சொல்லாமல் சொல்லிவிடும். உறவினரின் இறப்புக்கு சென்ற பொழுது இறந்தவரின் மகன் முகமலர்ச்சியோடு வரவேற்றது சற்று ஆச்சர்யமாக இருந்தது. அவரது மனைவி சாவகாசமாக துணியை மடித்துக்கொண்டிருந்தார். இன்னொரு ரத்த உறவு தி ஹிந்துவில் பொருளாதார பக்கத்தில் இருந்து அரசியல் செய்திக்கு மாற நுட்பமாக பேப்பரை மடித்தார். இருந்த சொற்ப உறவுகளும் ஒரு திருமணத்திற்கு வந்த மனநிலையில் இருந்தார்கள். சிலர் சோககால மேக்கப்பிலும் இருந்தார்கள். என்ன திடீர்ன்னு இந்தப்பக்கம் என்று யாரவது கேட்டுவிடுவார்களோ என்று அச்சமாக கூட இருந்தது. யாராவது ஒருகாலத்தில் தன் தாய் தந்தைக்கு செல்லப் பிள்ளையாகவும் கணவனுக்கு அன்பு மனைவியாகவும் ஒருநிமிடம் கூட விட்டுவிலகாத குழந்தைகளுக்கு தாயாக இருந்த அந்த மூதாட்டியின் பூதஉடல் ஒரு ஓரமாக கிடத்தப்பட்டு இருந்தது. தலைமாட்டில் புகைந்துகொண்டிருந்த ஒரு ரூபாய் ஊதுபத்தி பெயருக்காவது யாரவது அழுது தொலைங்களேன் என்று சொல்வது போலிருந்தது..
ஊரே ஆழ்ந்து உறங்கிகொண்டிருக்கும் போது சொல்லப்படும் மரணச்செய்தி மரணத்தை விடகொடுமையானது. முன்பு வீட்டுக்கு தந்தி வந்தாலே அது துக்க செய்தியாக இருக்குமோ என்று ஒப்பாரிக்கு மனதளவில் தயாராவது போல நள்ளிரவில் மொபைல் ஒலித்தாலே அது மரண செய்தியாக இருக்குமோ என்ற முன்முடிவுக்கு வரவேண்டியிருகிறது.
நன்னிமா (அம்மாவின் அம்மா) மௌத்தா போயிருச்சுடா?
சிறுவயதில் இருந்தே நன்னிமாவின் கைகளுக்குள் வளர்ந்த எனக்கு இது நிச்சயம் இது பேரதிர்ச்சி. என்றாலும் போனில் அழைப்பு வரும்போது மணி அதிகாலை 2. திருச்சியில் இருந்தேன். இறப்பு காரைக்குடியில். அவசரமாக கிளம்பி சென்று பேருந்து பிடித்து அமரும் போது வரை ஒன்றுமே புரியவில்லை. தூக்கத்தில் இருக்கிறேனா அல்லது துக்கத்தில் உறைந்து விட்டேனா என்று கூட விளங்கவில்லை. பஸ்ஸ்டாண்டில் அண்ணன் அழுதபடியே நிற்கிறான், என்னை அழைத்து செல்ல. எனக்குதான் அழுகையே வரவில்லை. இதுகுறித்து கொஞ்சம் குற்றஉணர்ச்சியாக கூட இருந்தது.. வீட்டுக்குள் நுழைந்ததும் யார் யாரோ என்னை கட்டி பிடித்து அழுகிறார்கள். எதுவுமே தோன்றவில்லை.
வீட்டில் எல்லா சடங்குகளும் முடிந்து உடலை பள்ளிவாசலுக்கு எடுத்து சென்று சிறப்பு தொழுகைக்கு எல்லோரும் ஆயத்தமானோம். அப்போது ஒரு பெரியவர் மூக்குப்பொடியை எடுத்து கொஞ்சம் உதறிவிட்டு மூக்கில் வைத்த போது தென்பட்ட என் நன்னிமாவின் சாயலை இப்போது நினைத்தாலும் வரும் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியாது..
இழவு வீடுகளில் சாப்பிடுவது ஒரு கலை. துக்கமாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் நம் வயிறும் சந்தோசமாக இருக்கவேண்டும். இங்க கொஞ்சம் சோறு வரட்டும் என்று சொல்பவர்களை நோக்கி கண்கள் மொய்க்காமல் இருக்கவேண்டும். பழக்கதோஷத்தில் சிலர் பாயசம் கேட்கும் சம்பவங்களும் நடக்கும். இன்னும் சிலருக்கு துக்கத்தில் அதிகமாக பசிக்கும். வேட்டியை சற்று தளர்த்தி விடுவதை யாரவது பார்த்தால் அசிங்கமாகி என்ற காரணத்துக்காக பலர் துக்க வீடுகளில் சாப்பிடுவதே இல்லை. ஒரு நண்பனின் அப்பா இறந்ததற்கு சென்றேன். வீட்டை நெருங்கும் முன்பே ஒரு கும்பல் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தது. இன்னொரு கும்பல் மது வாங்கப் பணம் கேட்டு நண்பனை அழக் கூட விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. நண்பரது வீடு கொஞ்சம் சிறியது என்பதால் உடலை வீட்டுக்கு வெளியே வைத்திருந்தார்கள். அதற்கு அருகே சாப்பாடு நடந்துகொண்டிருந்தது. சாப்பிடுபவர்கள் இயற்கைக் காட்சியை ரசித்துக்கொண்டே சாப்பிடுவது போல சில மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்த இறந்தவரின் உடலை பார்த்துக்கொண்டே சாப்பிட்டது பார்ப்பதற்கு அவ்வளவு உகந்ததாக இல்லை.
உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்கிற சாபம் மிக பிரபலம். இறப்பை விட கொடியது அது நிகழும் விதம். உறவினர் பேருந்து விபத்தில் இறந்த பொழுது அவருடன் இறந்தவர்கள் எட்டு பேர். உரு தெரியாத அளவிற்கு கோரமான விபத்து அது. தகவல் தெரிவிக்கப்பட்ட போது அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். வாழ்வில் அரசு மருத்துவமனைக்கு செல்லாத அந்த உறவினர் சவக்கிடங்கில் எந்த நிலையில் இருக்கிறாரோ என்று நினைக்கும் போதே மனம் நொந்தது. உடலை அடையாளம் காட்ட ஒருவரை அழைத்தார்கள். சாக அழைத்தது போல் அனைவரும் பின்வாங்கினர். வீரமானவராக அறியப்பட்ட சித்தப்பா டீ குடிக்கச் செல்வதாகச் சொல்லி கிட்டத்தட்ட தப்பித்து ஓடினார். இறுதியில் உறவினரின் மனைவியே சென்று பிணவறை செல்லும் முன்பே சரிந்து விழுந்து மயக்கமானார். பின்பு முழுமையாகச் சிதைந்து போயிருந்த ஆறு உடல்களில் உறவினரின் உயரம் ஒத்திருந்த உடலை பார்த்து குத்துமதிப்பாக அழுதுவிட்டு வந்தார்கள்.
சில நேரம் மரணத்தை விட அதைச் சார்ந்தவர்கள் எதிர்கொள்ளும் நிலை கொடியது. எனது அத்தை மகன் இளவயதிலேயே சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் தீவிர சிகிச்சையில் இருந்து இறந்து போனான். அங்கிருந்து உடலை ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காளையார்கோவில் கொண்டுவர வேண்டும். சிலர் ஆம்புலன்சில் வர சிலர் பின்னால் காரில் வந்தார்கள்.. சுமார் ஆறு மணிநேர பயணத்துக்கு பிறகு ஊருக்கு வந்தது. அதுவரை மகன் நலமுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக பொய் சொல்லி நம்பவைக்கப்பட்ட தந்தைக்கு திடீரென்று வீட்டுவாசல் முன் நிற்கும் அமரர் ஊர்தி என்ன உணர்வை கொடுத்திருக்கும்?
வீட்டில் இறப்பு நிகழ்வது ஒரு வரமே. மருத்தவமனை வாசலில் ஒரு பெரியவரை இருவர் ஆளுக்கு ஒருபக்கம் கை தாங்கலாக அழைத்து வந்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஊர் அருகில் உள்ள ஒரு கிராமம். அப்போது வந்த ஒரு பேருந்தில் உள்ள நடத்துனர் இவர்களிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க இவர்கள் ஊரை சொல்லவும் நடத்துனர் வம்படியாக இவர்களை பஸ்ஸில் ஏற்றியிருக்கிறார். அந்த பெரியவர் ஏற்கனவே இறந்து நான்கு மணி நேரமாகியிருகிறது.. ஊர் வந்ததும் இறங்கியவர்கள் நடத்துனருக்கு நன்றி சொன்னது மட்டுமின்றி விசேசமாக ஐம்பது ரூபாயை கையில் திணித்திருகிறார்கள். நடத்துனர் புரியாமல் விழிக்க விளக்கம் சற்று சத்தமாக சொல்லப்படவே பயணிகள் மத்தியில் விஷயம் பரவி நடத்துனர் வேலையில் இருந்தே நிறுத்தப்பட்டார். இது அந்த நடத்துனரே என்னிடம் சொன்னது..
சில வீடுகள் இறப்பிற்கு பழகப்பட்டிருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்பார்கள். அந்த நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யத் தெரிந்த சொந்தங்கள் வாய்ப்பது முன்ஜென்மத்து புண்ணியம்.
“குழிக்கு சொல்லிட்டேன்!”.
“பெரியப்பா உயரம் தெரியாம எப்பவும் போல ஆறுக்கு ரெண்டு தோண்டிறப் போறானுங்க.. ஏழுக்கு ரெண்டு சொல்லிரு. கூட காசு கேட்டா குடுத்துத் தொலஞ்சிருங்க. கடைசி நேரத்துல குழி பத்தாம தேவையில்லாத டென்சன்!”
“செல்லையாகிட்ட சவுக்கு கட்டை வாங்காதீங்க. போனவாட்டியே ஏமாத்திப்புட்டான். பழைய பஸ்ஸ்டாண்டுக்கு பக்கத்துல ஒரு கடை இருக்கு அங்க வாங்குங்க. நம்ம பெரியம்மா மவுத்துக்கு அங்கதான் வாங்குனோ!”.
“அஜரத்து வர்ரதுக்குள்ள லிஸ்ட்ல இருக்குற சாமானை வாங்கிட்டு வந்துருங்க!”
“காடா துணி வாங்கியாச்சு!”
“சரி விடு. போனவங்க திரும்பியா வர போறாங்க? வீட்ல சமைக்கமா பிரசிடென்ட் ஓட்டல்ல ஆர்டர் பண்ணிருக்காங்க போல. ஆறுனா நல்லாருக்காது. வா சாப்பிட்டு வந்துருவோம். குழியில கிழவியை இறக்கி எல்லா வேலையும் பாக்க உடம்புல தெம்பு வேணாம்?
எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீ நிம்மதியா அழு என்று உடன் நிற்கும் உறவுகள் இருந்தால் துக்கமே சற்று குறைந்தது போல் தோன்றும்.
பொதுவாக நான் முன்பே சொல்லியபடி, இஸ்லாமியர்கள் உடல்களை அடக்கம் செய்யும் போது தொழுகை நடத்துவார்கள். அப்போது இறந்தவரின் ரத்த உறவு முன்னால் வந்து, எனது —— யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால் என்னிடம் சொல்லுங்கள். அந்த கடனுக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் என்பார். சில நாட்களுக்கு முன்னால் இறந்து போன தந்தையின் உடல்முன் நின்று அவரது மகன்,.
“என் தந்தை யாருக்காவது உதவி செய்வதாக வாக்களித்து அந்த உதவியை செய்ய முடியாமல் போயிருந்தால் அதை என்னிடம் தெரிவியுங்கள்.” என்றார் தந்தை அளித்த வாக்குறுதி மதிப்பறிந்த மகன்.
இன்றைய பிளக்ஸ் கலாசாரத்தில் மரணமும் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டது. அரைமணிநேரத்துக்கு முன்பு இறந்ததாக சொல்லப்பட்ட பெரியவருக்கு எப்படி அதற்குள் பத்துக்கு பனிரெண்டு அடி பிளக்ஸ் வைத்தார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும். அன்னாரது இழப்பால் வாடும் அட்டகாசம் ஆனந்தன், வரலாறு வடிவேல், விவேகம் விவேகானந்தன் மற்றும் குடும்பத்தார்கள் என்று அடிக்கப்பட்ட பிளக்ஸ்கள் இழவு வீட்டுக்கு செல்லும் வழி என்பதை சொல்லாமல் சொல்லும். யார் வம்பு தும்புக்கும் போகாமல் மஞ்சள்காமாலையால் மரித்த நபர்களின் கண்ணீர் அஞ்சலிகளில் இரண்டு சிங்கங்கள் வெறியோடு கர்ஜனை செய்வது ஏதாவது ஒரு குறியீடாக கூட இருக்கலாம்.
துக்க வீடுகளில் போயிட்டு வர்றேன் என்று சொல்லகூடாது என்று சொல்வார்கள். காரணம் அந்த போய்ட்டு வர்றேன் மற்றொரு துக்கத்திற்கான முன்னுரையாக மாறிவிடக்கூடாது என்கிற நல்லெண்ணம். இந்த கொரொனோ தொற்றில் நண்பரது வீட்டில் யாரும் போய்ட்டு வருகிறேன் என்று சொல்லவே இல்லை. வாரா வாரம் அவரது வீட்டுக்கு துக்கம் கேட்டும் போகும்படி மூன்று தொடர் மரணங்கள்.
வழியனுப்ப வந்தவர்களே சில நேரம் பயணமாகி விடுவார்கள். எல்லா மரண காரியத்திலும் கூடவே நிற்கும் தூரத்து உறவு பெரியத்தா ஒருவர் நெருங்கிய உறவில் ஏற்பட்ட (எத்தனை நெருங்கிய உறவு?) ஒரு மரணத்திற்கும் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துகொண்டார். இடுகாட்டில் குழிவெட்டுவதை பார்வையிட சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம். அவர் பார்வையிட்ட குழிக்கு அருகிலேயே இன்னொரு குழி தோண்டப்பட்டது.
நன்கு பழகிய ஒரு பெரியவரின் இறப்பு அது. சொந்தபந்தங்கள் கூடி நின்று அழுது கொண்டிருந்தபோது ஒரு போதை நபர் தீவிரமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். ஏன் சாவுக்கு எனக்கு தகவல் சொல்லவில்லை என்று எச்சில் ஒழுக பேசினார். பேசிய முறை தவறு என்றாலும் பேசுவது சரி என்றே மனசுக்கு பட்டது. சிறிது நேரம் அழுதுகொண்டே இருந்தார். திடீரென உரத்த குரலில் அழுத போது இன்னொரு இழவு விழுந்துருச்சா? என்று பதறியபடி வெளியே இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். சற்று நேரத்தில் துக்கம் நிறைந்த பழைய பாடல்களை சிறப்பாகவே பாடினார்.
“எழவு வீட்ல எவன்டா எட்டுகட்டி பாடுறது?” மீண்டும் வெளியே இருந்தவர்கள் வெளியே வர இவரை பார்த்ததும் ஒதுங்கிக் கொண்டார்கள்.
இப்போது குரலை சரி செய்தார். ஏதாவது இரங்கற்பாவாக இருக்கும் என்று காதுகளை தீட்டிக்கொண்டு கேட்கதயாரானேன். ஆரம்பித்தார்,
“என்னய ஒதுக்கி வச்ச இப்ப உன் நடுவீட்ல நிக்கிறேன்டா! உன்னால என்னை என்னடா பண்ண முடியும்? தயிரியம் இருந்தா வாடா ஒத்தைக்கு ஒத்த போட்டுப்பாப்போம். எந்துருச்சு வாடா புழுத்தி!”
எதிர்சவால் விடவேண்டியவர் நாடிக்கட்டு கட்டப்பட்டு சலனமில்லாமல் படுத்திருந்தார்.
***
மிக அருமை..! மரணங்கள் குறித்து ஒரு உயிரோட்டமுள்ள எழுத்துக்கள்.
பெற்ற கடன் மட்டும் அல்ல கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டிய ஒன்றே அருமை
மிகவும் அருமை! என்ன ஒரு எழுத்து.
கடைசி பாரா அருமை. வாழ்வின் அபத்தம்