மூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்

ஒரு நாகாலாந்து கவிதை

தமிழாக்கம் :கோரா 

முன்னுரை

தொன்மங்களும், புராணக் கதைகளும், மானுடப் பண்பாட்டின் அங்கங்கள்.

நாகர்களிடையே அவர்களின் வாய்மொழிப் பாரம்பரியம் (oral tradition ) பிறந்தது  பற்றிய பழங்கதை ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. ஆதியில் நாகர் இன மூதாதையர்கள் தம் மொழிக்குரிய  எழுத்துக்களை  விலங்குத்  தோலில் பொறித்து அதை அனைவரும் பார்த்துக் கற்றுக் கொள்ளும் விதமாக சுவரில் தொங்க விட்டிருந்தார்கள். பின்னொரு நாள் அதை ஒரு நாய் கீழே இழுத்து முழுவதையும்  புசித்து பசியாற்றிக் கொண்டது. எழுத்துக்களை இழந்த நாகர்கள் வாய்  மொழிப் பாரம்பரியத்துக்கு மாறி  விட்டார்கள். பின்னர் நாளாக நாளாக  மனிதனின் தவிர்க்க முடியாத நினைவகம்  மற்றும் செயலாக்க மாறுபாடுகள், வாய் மொழிப் பாரம்பரியத்தின் இலக்கிய உள்ளடக்கம் மற்றும் கவிதை மொழியின் படிப்படியான செறிவு குறைப்புக்கு இட்டுச் சென்றன என்கிறார் நாகாலாந்தின் நிகழ்காலத்  தகைசால் கல்வியாளரும் எழுத்தாளரும்  நாட்டுப்புறவியலாளருமான டெம்சுலா ஆவ். வாய் மொழிப் பாரம்பரியங்களின்   இயல்பான நிலையின்மையைக் குறிப்பிடுகையில் அந்தப் புராதன  நாயைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து அதன் வயிற்றினுள்  தன்  ஒட்டுமொத்த படைப்புகளையும் போட்டுவிட வேண்டும் என்ற ஆவேசம் அவர் மனதில் எழுகிறது என்று இக்கவிதையில் கூறி இருக்கிறார். 

மொழிபெயர்ப்புக் கவிதை

கதை சொல்லல் என் பெருமைக்குரிய பரம்பரை சொத்தென்று

நம்பியே என் வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். 

தாத்தாவழிப்  பரம்பரைச் சொத்தாக  

நான் அனுவிப்பவையே  என் 

முதன்மைப் பொக்கிஷங்கள் ஆகிவிட 

பிற  வரலாற்றுப் பதிவர்களிடம் இருந்து 

சேகரித்து சேர்த்தவை.

என் புலமையைக் கூட்டின.   

எனக்குரிய வேளை வந்ததும்  குருதியோட்டத்தில்

கதையும் கலந்து பிரவகித்தது போல் கதை சொன்னேன் 

ஏனெனில் ஒவ்வொரு  சொல்லாடலும்   

என் உயிர் விசைக்கு   புத்துயிர்ப்பு அளித்தது  

மேலும்  ஒவ்வொரு கதையும் என்  இனம் சார்ந்த

நினைவுக் குறிப்புக்கு  வலு சேர்த்தது.

ஆறு கற்கள் வெடித்து உயிரினமாய்  

நாங்கள் தோன்றியது  எக்கணம் என்றும்   

எங்கள்  முதல் மூதாதையர் 

பண்டைய கிராமங்களை நிறுவி 

இயற்கை விசைகளை வழிபட்டது எங்ஙனம் 

என்றும் அக்கதைகள் உரைத்தன.  

மாவீரர்களும்  புலி உருவேற்கும்  அரக்கர்களும்  

கதைகள் மூலம்  உயிருடன்  வந்தார்கள்

அதேபோல் ஒரு காலத்தில் எம் உடன் பிறப்புகளாய் இருந்த    

வெவ்வேறு விலங்குகளும் வந்தன 

மனித மொழியைக் கண்டுபிடித்த பின்னர் அவர்களை நாம்  

காட்டுமிராண்டிகள் என்று அழைக்க  ஆரம்பித்து விட்டோம்.    

எப்போதும்   தாத்தா எச்சரித்து வந்தார்  

கதைகளை ஞாபகத்தில் வைக்காதது  

பெரும் ஆபத்து விளைவிக்கும் என்று:         

நாம் நமது வரலாற்றையும்   

தேசத்தையும்   மிக நிச்சயமாக 

நம் இயல்பான அடையாளத்தையும் இழப்போம் என்றார்.

எனவே நான் கதை சொன்னேன் 

அதை இனம் சார்ந்த என் பொறுப்பாக எண்ணி  

எம் இருத்தலிய வரலாறு மற்றும் இன்றியமையா பாரம்பரியம்

அழியாமல் நிலை நிறுத்தும் கலையை  

இளம் மனதுகளில் இதமாக  உட்புகுத்தி 

அடுத்த தலை முறைக்கு கடத்தும் நோக்கில். 

ஆனால் இப்போது ஒரு  புது சகாப்தம் உதயமாகி விட்டது.

நய வஞ்சகமாகப் பழைமையை  இடம் பெயரச் செய்து விட்டது.

என் சொந்தப்  பேரன்மார்கள் எங்கள் கதைகள்    

இருண்ட காலத்திலிருந்து வந்த புராதன  வெற்றுரைகள், 

இப்போது  காலாவதியாகி விட்டவை என்று சொல்லிப்   

புறந்தள்ளி விட்டனர்  

யாருக்கு வேண்டும் இந்த சம்பந்தமில்லாத  கதைகள் 

சாதாரண  புத்தகங்களே போதும்  என்கிற சூழலில்?

சொந்தங்களின் நிராகரிப்புகள்  என் 

கதைப் பாய்வைத்   தடுத்து விட்டன.

பின்னடைவை ஏற்ற என் கதைகள்   

ஒருகாலம்  கதைகள் அதிர்ந்த  என் மனதின்  

எட்டாத இடைவெளிகளில் ஒடுங்கித் தணிந்து 

கற்பனைக்கெட்டா அமைதி கொண்டதெனத்  தோன்றுகிறது.

எனவே நினைவு தவறி சொற்கள் தடுமாறும் நேரங்களில்  

ஒரு விலங்கின் ஆவேசத்தால் ஆட்கொள்ளப் படுகிறேன் 

மூல முதலான  அந்த திருட்டு நாயைப் பிடித்து  

அதன் புராதன வயிற்றிலுள்ள மூலச் சுவடிகளுடன்

என்  கதைகளையும் சேர்த்து விட

( ஆசிரியரின்  Songs From the Other Life -கவிதைத் தொகுப்பிலிருந்து)

அருஞ்சொல் விளக்கம்

ஆறு கற்கள் : Ao நாகர்கள் வட கிழக்கு இந்தியா நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெரும்பான்மை நாகர் இனப் பிரிவு. Ao நாகா தொன்மத்தின் படி அவர்களின் மூதாதையர் (ஆண் -3, பெண் -3) ஆறு கற்களில் இருந்து உதித்தவர்கள். அவர்கள் இயற்கையை வழிபட்டனர்.

புலி உருவேற்கும் அரக்கர்கள் (were-tigers): புலியின் வடிவத்துக்கு உருமாறக் கூடிய  உயிரினம். Ao நாகா தொன்மங்களில் பேசப் படும் கற்பனை விலங்கு.

கவிஞர் குறிப்பு

டெம் சுலா ஆவ் – இந்திய கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் இனவியலாளர்.  1945-ல் ஜோர்ஹட் (அஸ்ஸாம்)-ல் பிறந்தார். நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலையில்  (NEHU ) முனைவர் பட்டம் பெற்று அங்கேயே 1975-முதல்  இங்கிலிஷ் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார் .பின்னர்(1992-97) வேற்றுப் பணி அடிப்படையில் திமாப்பூர் (நாகாலாந்து )-ல் உள்ள  வடகிழக்குப் பிரதேச பண்பாட்டு மையத்தின் நெறியாளராகப் பணியாற்றினார்.  பத்மஸ்ரீ (2007) மற்றும் சாகித்திய அகாடமி (2013) விருதுகளைப் பெற்றார். வட கிழக்கு இந்தியாவின் முக்கிய இலக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப் படுகிறார்.

சுட்டி

மூலக் கவிதையையும் அது குறித்த சில தகவல்களையும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம்.

https://heritage-india.com/old-storyteller-nagaland-poem/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.