மலைமேல் பறக்கும் வீடு

அம்மாவின் தலைவலி மருந்தை
இந்த மதியத்தில் யாரோ
திறந்துவிட்டார்கள்.
வெக்கையின் காதில் முணுமுணுக்கிறது
யூக்கலிப்டஸ் மந்திரம்
வியர்த்துக்கிடக்கும் முதுகில்
குளிரேற்றுகிறது வெறுந்தரை.
ஒரு சிறிய காற்றிற்கு
மலைமேலென உயர்ந்துவிட்டது
என் வீடு.
பிறந்தநாள் பலூன்

பிறந்தநாளுக்கு பிந்தைய நாள்
ரொம்பவும் மெதுவாக விடிகிறது
பிறந்தநாள் முடிந்தவன்
இன்னும் உறங்குகிறான்
அவன் எழுந்தால்
பழைய வயது முடிந்துவிடும்.
இலை உதிர்வது போல
‘ஹேப்பி பர்த்டே’ வில் இருந்து
ஒரு மஞ்சள் நிற பலூன்
இறங்குகிறது.
மெல்ல அது
தொட்டுத்தொட்டு வருகிறது.
வீட்டின் ஒவ்வொரு
மழுங்கிய முனையையும்
நீரால் நிறைந்தவை

குளத்தில் இறங்கும்முன்
மழை துவங்கிவிட்டது
குளிக்கலாமா என்றவன்
யோசித்துக் கொண்டிருக்கையில்
மழை வலுத்து
சுருட்டி வைத்த ஆடைகளும்
நனையத் துவங்கின.
பார்த்திருக்க
நீராய் நிறைந்தெழுந்து
வானம் முழுதும்
நிரம்பிய குளத்திற்குள்
அவன்
ஏற்கனவே குதித்திருந்தான்.