பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பாரதியின் அறச்சீற்றம் வெளிப்போந்த வாக்கியம் அது. ரஷ்ய நாடு  செய்து வரும் கணினி குற்றங்கள், அமைப்பு ரீதியான கட்டமைப்புகளுடன் உலகை நாசம் செய்கிறது.

லா ச ரா ஒரு கதையில் எழுதுவார்: “நாமறியாமல் நம் வீட்டினுள்ளே பின் வாயில் வழியாக நுழைந்த வெய்யில்….” கொந்தர்கள் (Hackers) என்பவர்கள் நம்முடைய கணினியை நாம் அறியாமல் இயக்கி அதன் செயல்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்பவர்கள். இந்தக் கொந்தர்கள் கணினியின் செயல்பாடுகளில் திறமை கொண்டவர்கள் தான். ஆனால், பணம், புகழ், சவால் போன்ற பல காரணிகளால் தீச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். கள்வனின் கைகளில் உள்ள துப்பாக்கிக்கும், காவல் துறையினர் கைகளில் உள்ள துப்பாக்கிக்கும் நோக்கங்கள் வேறல்லவா? யூனிக்ஸ் செயல் அமைப்பைக் கொண்டு வந்த டென்னிஸ் ரிட்சி மற்றும் கென் தாம்சன் கொந்தர்கள் தான்; ஆனால், அந்தத் திறத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினார்கள். 

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையில் இப்போது ஒன்றுமில்லை. கூகுளாரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு செய்தி திரையில் வருகிறது ‘உங்கள் கோப்புகள் செயலிழந்து விட்டன. நீங்கள், நாங்கள் குறிப்பிடும் தொகையை மீட்புப் பணமாகத் தந்தால் உங்கள் கோப்புகள் மீண்டும் உயிர் பெறும்.’

நீங்கள் திடுக்கிடுவீர்கள், திகைப்பீர்கள்; கணினியின் அத்தனைத் தகவல்களையும் மீள் கட்டமைப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல; கேட்பதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தொழில் தேங்காது முன்னே செல்லும். ஆயினும் நீங்கள் மன்றாடிவிட்டு, பிட்காயினாகவோ வேறேதும் கிரிப்டோ கரன்ஸியாகவோ, (புலப்படா இணையப் பணம் என்று மொழி பெயர்க்கலாமா?) அனேகமாகப் பெரும்பாலும் ரஷ்யாவைச் சேர்ந்த அந்தக் கொந்தர்களுக்குத் தருவீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் காவல் துறையில் கூட பதிவு செய்ய மாட்டீர்கள்- உங்களுக்குத் தெரியும் அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக பல நேரங்களில் ஆகிவிடும் என்று.

விலைவாசி ஏறுவதைப் போல், கொந்தர்கள் மீட்புப்பணத்தை ஏற்றிக் கொண்டே வருகிறார்கள். மே மாதத் தொடக்கத்தில் ‘காலனியல் பைப்லைன்’(Colonial Pipeline) குழுமம், தங்கள் குழாய்களில் மீண்டும் எண்ணெய்வ ருவதற்காக $5 மில்லியன் தொகையை ‘டார்க்சைட் ரேன்சம் வேர்’(Darkside Ransomware) குழுவிற்குத் தந்தார்கள். (சில தொகையை நீதித்துறை மீட்டெடுத்தது.) இந்தக் கொந்தர்களால் தென் கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில், சில நாட்களுக்கு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பதட்டம் விளைந்தது. ஜூன் மாதத்தில் அசைவ உணவு பதப்படுத்தும் நிறுவனமான ஜேபிஎஸ்,(JBS)  ரஷ்ய அடிப்படை ஆர் ஈவில்(REvil- Ransomeware Evil) என்ற மீட்புப்பண அயோக்கியர்கள் அமைப்பிற்கு $11 மில்லியன் கொடுக்க வேண்டி வந்தது. சமீபத்தில், வாமனனின் மூன்றாவது அடியைப் போல, பெரிதாகி, ஆயிரம் கம்பெனிகள் உபயோகிக்கும் தொழில் நுட்ப சேவை குழுமத்தினைக் கொந்தி $70 மில்லியன் மீட்புப் பணம் கேட்டார்கள். இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோர் சிறியதில் தொடங்கி ‘பெரிதினும் பெரிது’ கேட்பவராக, சிறப்பாகத் தங்கள் பிரிவுகளை, அதாவது, பெயர்த்தல், மீட்புப்பணம் கோரல், வசூலித்தல், தங்கள் ‘பாட்’ படைகளை (Bots) அனுப்பி அழித்தல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல் புரிகிறார்கள்.

இத்தகைய கொந்தல், மருத்துவ மனைகள், பள்ளிகள், நகர நிர்வாகப் பணி அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பையும், செயல் ஆற்றலையும் அதிக அளவில் பாதித்து சில நேரங்களில் ஸ்தம்பிக்கச் செய்து விடும். சுலபமான ஏமாற்று ஈமெயில்கள் மூலமாகக் கணினிகளைக் கொந்தி, சுய விவரங்கள் மற்றும் கடவுச் சொற்களைத் திருடி, ‘பணத்தைக் கொடுத்து உன் விவரங்களை மீட்டுக் கொள்’ என்பதுதான் இவர்கள் மேற்கொள்ளும் ஒரு வழிமுறை.

உலகின் பல நாடுகள், பல நிறுவனங்கள், சிறிய அளவிலும், பேரளவிலும் கணினிப் பெயர்த்தலால் அதிக நஷ்டங்கள் அடைந்து வருகின்றன. நம் காலத்தின் மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று கணினி கொந்தல்களைச் சொல்லலாம். அதன் வீச்சும், ஆழமும் கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை ஜூன் 2021-ல் நேரில் சந்திக்கையில் இந்தக் கணினி கொந்தர்களின் மேல் ரஷ்ய அரசாங்கம் முழுக் கவனம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இத்தகைய கொந்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடம் எதையும் மறைக்காமல் பகிர வேண்டும் என்ற சட்டம் கொண்டு வருவதைப் பற்றியும் அமெரிக்க அரசவையில் பரிசீலனைகள் நடை பெறுகின்றன.

தனி ஒரு நபருக்கோ, தனிப்பட்ட நிறுவனங்களுக்கோ ஏற்படும் பாதிப்பு என்று இதைக் கடந்து போக முடியாது. இது உண்மையில் ஒரு போர், மாயாவிகள் தொடுக்கும் போர். வரைமுறைகள், போர் முறைமைகள் இல்லாத ஒன்று. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்கி, அதை முடக்கி, முக்கிய நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிப்பதன் வழியே அந்த நாட்டின் இறையாண்மைக்கே கேடு விளைவிக்கக்கூடிய ஒரு தீச் செயல் இது.

பெரிய அமைப்புகளை விட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தான் பெரும்பாலும் இவர்களின் இலக்கு. கன்னம் வைப்பதையும் கவனமாகத்தான் செய்ய வேண்டும் (திருடர்களின் பால பாடம்) சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தொழில் முடக்கம் என்பதும், மீட்புப் பணம் கொடுப்பது என்பதும் மரண அடிக்குச் சமம். எத்தனை எத்தனை நிறுவனங்கள் இதில் மாட்டினார்களோ.

நாம் காப்பீடுகளைப் பற்றி சிறிது பார்ப்போம். உயிர் காப்பீடு,  உடல் நலக் காப்பீடு போல,  கடத்தல் மற்றும் மீட்புப்பண காப்பீடும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.  அதிலும் , இந் நாட்களில், கணினிக் கொந்தல்களில், மேம்பட்ட தொழில் நுணுக்கங்கள் பயன்படுத்தப் படுகின்றன. கோப்புகளே  தேவையற்று கணினியில் உள்ள செயல்பாடுகளை பீடிக்கும் வகையில் தீ நுண்மிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் உட்செலுத்தி  தொழிலை முடக்க முடியும்.  இத்தகைய  இழுப்புகளை ஈடு செய்யும் கே அன்ட் ஆர்  காப்பீடுகள்( Kidnapping and Ransomware Policy)உருவாக்கப்பட்டுள்ளன. இவை கடத்தல், பணம் கேட்டு மிரட்டல், தீ நுண்மி அல்லது வேறு வகையில் கணினியை முடக்குதல் போன்றவற்றினால் ஏற்படும் இழப்பிற்கு ஈடு செய்யும் வண்ணம் உருவாகி வந்துள்ளன. கணினிச் சேவைகள் முடக்கப்படுவதை ஈடுகட்ட தனிக் காப்பீடுகளும் எடுத்துக் கொள்ளலாம். இவைகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில்  அதிக அளவில் பரவலாக்கப்பட்டு வருகின்றன.   வருடத்திற்கு ஏறத் தாழ $445 பில்லியன் உலக வர்த்தகம் இந்தக் கொந்தல்களால் பாதிக்கப்படுகிறது என்று தரவுகள் சொல்கின்றன. (Fortune 500) ஃபார்சூன் 500 நிறுவனங்கள் இத்தகைய காப்பீடுகளை எடுத்துக் கொள்ளும் அவசியத்தில் இருப்பது போலவே  நடுத்தர நிறுவனங்களும் இவ்வகைக் காப்பீடுகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது குற்றங்களின் வீர்யத்தைக் காட்டுகிறது.

எஃப் பி ஐ,(FBI) 2020க்கான இணைய குற்ற அறிக்கையில், ஐக்கிய அமெரிக்க நாடுகளில், ‘2471 தாக்குதல்களும், $29.1 மில்லியன் மீட்புப்பணமும்’ என்று தகவல் தருகிறது. தனி நபர் விவரங்கள் பாதிக்கப்படுவதை பதிவு செய்வது சட்டமாக உள்ளது; ஆனால், மீட்புப்பணம் கொடுத்து கணினியின் செயல்பாட்டை மீண்டும் பெறுவதை நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள கட்டாயங்கள் எதுவுமில்லை. இதையும் நேர் செய்ய சட்டத் திருத்தங்களை ஆலோசித்து வருகிறார்கள்.

தகவல்களைச் சலித்து தரவுகள் தரும் ஜெர்மானிய நிறுவனமான ‘ஸ்டேடிஸ்டா’(Statista) சொல்கிறது: ‘உலகம் முழுதுமாக 304 மில்லியன் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன; இது 2019ம் ஆண்டைவிட 62% அதிகம். அதிகமாகப் பாதிக்கப்பட்டோர், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், ஆலோசகர்கள் போன்றவர்கள்.’ 

சிறு துளி பெரு வெள்ளம் தான். ஆனால், ஊரே வெள்ளக்காட்டில் இருக்கையில் கிணற்று நீர் எந்தளவிற்குப் பயன் தரும்? சிற்சிறு செயல்களான ஒட்டுதல், நச்சுக் கொல்லிச் செயலிகள், இரு முறைகள் கொண்டு கணினியைத் திறக்கும் ஏற்பாடுகள் எல்லாம் யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றவையே. அதற்காக, அவை தேவையற்றவை என்பதல்ல வாதம். ஒவ்வொரு பாதுகாப்பு வளையமும் தேவையே. சில்வரேடோ கொள்கை முடுக்கத்தின்(Silverado Policy Accelerator) முதல்வரும், மீட்புப்பண செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்தவருமான திமெத்ரி அல்பெரோவிட்ச்,(Dmitri Alperovitch) இந்தச் சவால்களை சந்திப்போம் என்று சொல்கிறார். “பாதிப்படையக்கூடிய பல விஷயங்கள் நம்மிடம் உள்ளன. சிறு நிறுவனங்கள், தீயணைப்புத் துறை, நூலகங்கள் இவற்றால் பெரும் பாதுகாப்பு தொழில் நுட்பச் செயலிகளை வாங்கவும் இயலாது, பயன்படுத்துவதும் வல்லுனர்கள் இல்லாமல் இயலாது.”

ரஷ்யாவிலிருந்து இத்தகைய தீமைகள் அதிக அளவில் தொடங்குவதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள; தீர்வையும் அங்கிருந்து தொடங்குவது நல்ல பலனைக் கொடுக்கலாம். இந்த மாயப் போர் செய்வதில் சீனா, வட கொரியா, ஈரான் நாடுகளும் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். வியப்பான ஒற்றுமை இவை அனைத்தும் எதேச்சதிகார நாடுகள்-இவைகளின் பாதுகாப்புத் துறையினருக்கு இத்தகைய கொந்தர்கள் யாரென்பதும் தெரியும், அவைகளை நொடிகளில் செயலிழக்கச் செய்யவும் முடியும். எனவே, இந்த அரசுகள் இவற்றை மட்டுறுத்தாதற்கு காரணங்கள்- இவைகளின் மூலம் பெறப்படும் கையூட்டுப் பணம், அரசுக்கு சார்பான அவர்களின் செயல்பாடுகள்.

திருடர்களுக்கும் தொழில் தர்மம் ஒன்று உண்டு. தன்னைக் காப்பவர்களை அவர்கள் தாக்க மாட்டார்கள். ரஷ்யன், உக்ரேனியன், பெலாருசியன், தாஜிக், ஆர்மீனியன், அஜர்பெய்ஜானி, ஜார்ஜியன், கசாக், கிர்கிஸ், துர்க்மென், உஸ்பெக், ரோமேனியன், போன்ற மொழிகளைப் பயன்படுத்தும் கணினிகளை ஆர்ஈவில் குறிப்புகள் தாக்குதல் செய்வதில்லை என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது ஒரு விஷயமேயில்லை. தங்கள் நாட்டிலும், தங்கள் நட்பு நாட்டிலும் இத்தகைய விஷமச் செயல்களில் ஈடுபடுவோரை, ஈடுபடப் போகிறவர்களை அடையாளம் காணவும், தேவையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்காவினால் முடியும். பல ரஷ்ய கணினிக் குற்றவாளிகளை அடையாளப்படுத்தி குற்றப்படுத்துதலை வாஷிங்டன் செய்துள்ளது. எவ்கேனி போகசேவ்வின் (Evgeniy Bogachev) தீச்செயற்களால் $100மில்லியன் அளவிற்கு பண இழப்பு  ஏற்பட்டுள்ளது.( இவரை (!) இப்படியும் அழைக்கிறார்கள்- அதிர்ஷ்டம் 12345) இவரைப் பற்றிய துப்பு கொடுப்போருக்கு $3 மில்லியன் பரிசளிப்பதாக எஃப் பி ஐ அறிவித்துள்ளது.

புடின், இத்தகையோரின் மீது நடவடிக்கை எடுப்பதுதான் முக்கியம். இந்தக் கொந்தர்களைப் பாதுகாக்கும் ரஷ்ய அரசை, அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்குமாறும், தீச்செயல்களைத் தடுக்குமாறும் அமெரிக்க அதிபர் தனது நேரடி ஜூன் சந்திப்பில் தெரிவித்ததோடு 16 முக்கியத் துறைகள்  இத்தகைய ஆபத்துக்களுக்கு உள்ளாவதையும் எடுத்துக் கூறினார்.

ஆயினும் இதற்கு இரு வாரங்களுக்குப் பின் ஆர்ஈவில், கேசியாவின்(Kaseya) மேலாண்மை  தகவல் தொழி நுட்பத் துறை செயலியை, நூற்றுக்கும் அதிகமான சிறு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒன்றை, பெயர்த்து வணிகத்தை முடக்கியது. ‘அவர்கள் செயல்படுவார்கள் என எதிர்பார்த்தோம்’ என்று சொன்ன பைடன் தொலைபேசியில் ரஷ்ய அதிபருடன் பேசினார்; புடின் செயல்படாவிடில், ஆர்ஈவில் கணிப்பொறி நீக்கப்படுமா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று அமெரிக்க அதிபர் சொன்ன பதிலுக்கு நல்ல பலன் இருக்கிறது. கறுப்பு வலையிலிருந்து திடீரென ஆர் ஈவில் காணாமல் போனது. இது நம்புவதற்கு உகந்ததாக இருந்தாலும், ஆர் ஈவில் தானகவே தன்னை மறைத்துக் கொண்டு, பின்னர் வேறு அவதாரம் எடுத்தும் வரலாம்; நிழல் உலகில் இது நடை பெறும் சாத்தியங்கள் கொண்டது.

அயல் நாட்டிலுள்ள வணிக அமைப்புகளில் இந்தக் கொந்தர்கள் தொடுக்கும் அச்சுறுத்தல்கள் பற்றி புடின் அதிகக் கவனம் செலுத்துவார் எனச் சொல்வதற்கில்லை. அவரையோ அவரது நண்பர்களையோ இந்தக் கொந்தர்கள் பாதிக்காத வரை  இது ஒரு துருப்புச் சீட்டாகக் கூட பயன்படலாம். அரசாங்க அமைப்புகளில் குழப்பத்தை உண்டாக்குதல் அல்லது தேர்தல்களில் தலையிட்டு ஆட்சி அமைப்பையே கேள்விக்குறியாக்குதல் போன்ற செயல்பாடுகளை அரசு இராணுவக் கொந்தர்கள் செய்கிறார்கள்; இப்படி உள் நாட்டு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதை கண்டறிந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்றவர்கள் பொருளாதார கட்டுப்பாடுகளை இத்தகைய நாடுகளின் மேல் விதிக்கிறார்கள். ‘இதைப் பற்றி ஒன்றுமறியேன்’ என்று சொல்வது எந்த அதிபரின் பதவிக்கும் ஒத்து வராது; ஆனால், மற்றக் கொந்தர்களைப் பற்றியோ, அவர்களை அடக்குவது பற்றியோ புடின் பொறுப்பு எடுத்துக் கொள்ள மாட்டார். ஜூனில் அவர் சொன்னார்: “இது அபத்தமானது; நகைப்பிற்குரியது; தீம்செயல் செயலிகளுக்கெல்லாம் எங்களைப் பொறுப்பாக்குவது முட்டாள்தனமானது.”

மேலை உலகுடன் பிணையெனப் பேச ‘இந்த தீச்செயல்களை ஒடுக்குவோம்’ என்ற பேரத்தை ரஷ்யா முன்வைக்கலாம். ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்கை ரைபகோவ்,(Sergei Rybakov) ஜூனில் நடைபெற்ற இரு அதிபர்களின் சந்திப்பின் போது, குற்றம் சாட்டும் விதமாக, அமெரிக்கா மற்ற பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி குறிப்பிடுவதை விட, இந்த கொந்தர்களைப் பற்றி சிறப்பு கவனம் காட்டுகிறது எனச் சொன்னார் இவர் பாதுகாப்புத் தந்திர பேச்சு வார்த்தைகளில் ரஷ்யாவின் சார்பில் பங்கெடுத்தவர் என்பதால் நாம் இந்தப் பத்தியின் தொடக்கத்தில் சொன்ன கூற்று வலுவாகிறது. பேரம் பேச உதவும் பல அம்சங்களில் மீட்புப்பண அயோக்கியத்தனம் ஒன்று இவர் குறிப்பால் சொல்கிறார். அல்பெரோவிட்ச் சொல்கிறார்: “அமெரிக்க அதிபர் இத்தகைய கொந்தல்களை நிறுத்த வேண்டுமென்று ஆழமாக விரும்புகிறார். ஆனால், பைடனுக்கு முன் அதிபராக இருந்த ட்ரம்ப், எந்த ஒரு இணையக் குற்றத்திற்கும் ரஷ்ய அதிபருக்கும் தொடர்பில்லை என்று சிறப்புச் சான்றிதழை அளித்து வந்த காரணம் தான் தெரியவில்லை. பைடன் தன்னை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பாதுகாப்பாளனாகக் கருதுகிறார்; அவர்கள் தான் இதில் அதிக சேதம் அடைகிறார்கள்.” வில்சன் சென்டரில்(Wilson Center) உள்ள கென்னன் அமைப்பின்(Kennan Institute) தலைவரும், ரஷ்ய விவகார நிபுணருமான மேத்யூ ரோஜன்ஸ்கி (Matthew Rojansky) மற்றும் அல்பெரோவிட்ச், வாஷிங்டன் போஸ்ட்டில், புடினுக்கு, ‘செய் அல்லது விளைவைச் சந்தி’ என்று துணிகரமான செய்தியை அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்கள். அமெரிக்க அதிபர், வலிக்கும் இடம் பார்த்து அடிக்க வேண்டுமென்றும் ஆலோசனை சொல்கிறார்கள்; ரஷ்ய அரசின் அதிக வருமானத் துறைகளான எண்ணெய் மற்றும் வாயுவின் மீது பொருளாதாரத்தடைகளைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

உண்மையில் பொது வெளி அச்சுறுத்தல்கள் ரஷ்யாவிடம் செல்லுபடியாவதில்லை. குப்புற விழுந்தாலும், அதனால் மீசையில் மண் ஒட்டினாலும், அது வெளி உலகிற்குத் தெரியாமல் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அவர்கள்; எனவே, ஒருவருடன் ஒருவராக நேரடியாகப் பேசுவது பலன் தரும். ஆயினும், அந்தப் பேச்சு வார்த்தைகள் நடைமுறைக்கு வந்துள்ளதா என்றும் கவனிக்க வேண்டும்.

குரங்கிற்கு துணையாகும் கள்ளைப் போல இந்தக் கொந்தர்களுக்கு  ‘கிரிப்டோ கரன்ஸிகள்’. இந்தக் கரன்ஸிகளின் தடத்தைப் பின்பற்றுவதோ, அவைகளை மீட்பதோ கடினமான செயல். எனினும், காலனியல் பைப்லைன் விவகாரத்தில் அமெரிக்க அரசு $2.3 மில்லியன் கரன்சிகளை மீட்டெடுத்திருக்கிறது. உள் நாட்டு பாதுகாப்பு குழு அறிமுகப்படுத்த உள்ள கிரிப்டோகரன்ஸியைப் பற்றிய சட்டம் என்பது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மீட்புப்பண அச்சுறுத்தல்களுக்கு எதிரான பல சட்டங்களும் அறிமுகமாகும். கணினி கொந்தல்களால் பாதிக்கப்பட்ட முக்கிய தொழில் நிறுவனங்கள் கட்டாயமாக அரசிடம் அதைத் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவும் சட்ட அமலாக்கத் துறை காங்கிரசை வலிமையாகக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தீச்செயல்களையும், புலப்படா இணையப் பணத்தையும் கட்டுப்படுத்துவதும், அழித்து ஒழிப்பதும் அவற்றை பல் முனை தாக்குதலுக்கு ஆட்படுத்துவதும் நேரமும், முயற்சியும் தேவைப்படும் ஒன்று. சிக்கலான ஒன்றும் கூட. ‘எங்களைக் கொந்தர்கள் தாக்கினார்கள்; மீட்புப் பணம் கொடுத்து மீண்டோம்’ என்று சொல்லி தங்கள் குழுமத்தின் சந்தை மதிப்பை இழக்க பல நிறுவனங்கள் விரும்புவதில்லை. வணிக மற்றும் தொழில் முனைவோரின் மீது மேன்மேலும் சுமைகளை ஏற்றும் விதிமுறைகளை  வகுக்க சட்டம் இயற்றுவோரும் தயங்குகிறார்கள்.

ஆயினும், ரஷ்யா முதலான கணினி பெயர்த்தல் நாடுகள், தொடர்ந்து பல நாடுகளின் இலக்கக் கட்டமைப்பை இவ்விதமாகத் தாக்கி அழிப்பதை தடுக்க வேண்டும். சிக்கலான சவால்தான் என்றாலும், அழிக்கும் காட்டெருதின் கொம்பை வளைத்து அதை வெல்லத்தான் வேண்டும். இல்லையெனில் தான் கெட்டதும் இல்லாமல், சந்திர புஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்தானாம் என்ற தமிழ் சொலவடை போல், மற்ற  எதேச்சாதிகார நாடுகளும் இந்த குறுக்குக் குற்ற வழியில் உலகப் பொருளாதாரத்தை நாசம் செய்து விடும்.

இது உலக அரசியலோ, உசித நட்பு பேணுவதைப் பற்றியோ அல்ல என்பதையும், உலகை அச்சுறுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயல்  என்பதையும் புடின் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசும் இதை நசுக்க வேண்டும். மெத்தனம் உதவாது என்பதை ரஷ்ய அதிபர் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனா

UNC என்ற சீனாவின் உளவுக் கும்பல் 2019-ல் இஸ்ரேலில் நடத்திய இணையக் கடத்தல்கள் இரு நாட்களுக்கு முன்னர் வெளியானது. அவர்கள் ஈரானிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பகையைப் பயன்படுத்தி ஈரானியர்களின் பெயர்களை தங்கள் பெயராக உபயோகித்து இஸ்ரேலின் வணிக, நிதி மற்றும் அரசு நிறுவனங்களின் பாதுகாப்புக் கோப்புகளை வெற்றிகரமாக பெயர்த்திருக்கிறார்கள். தங்களுடைய மிகப் பெரும் தரை மற்றும் கடல் வழி செயல்பாடுகளுக்கெதிரான கட்டமைப்புகளைத் தாக்குவது நோக்கமாகக் கூறப்படுகிறது. சீனா உலகம் முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர நினைக்கிறது. (திபெத்திய சிறுவர் சிறுமியரை கட்டாய இராணுவப் பயிற்சியில் இணைக்கிறது. முக்கியமாக நம் அருணாசல பிரதேசத்தின் எல்லையில் இது நடக்கிறது.)  

இந்தியாவிற்கு எதிரான கொந்தல்கள்

அக்டோபர், 2020-ல் மும்பையில் மின் வினியோகம் தடைபட்டு, மருத்துவ மனைகள், மாநகர மின் போக்குவரத்து, பங்குச் சந்தை முதலானவை பல மணி நேரங்களுக்குச் செயலிழந்து போயின. இந்தியாவின் சக்தி கேந்திரங்களில் சீனாவின் ‘ரெட்எகோ’ செய்த கொந்தலினால் வணிக இழப்பு ஏற்பட்டு பொருளாதாரச் சீர்கேடுகள் வர வேண்டுமென்று எதிர்பார்த்து செய்யப்பட்ட ஒன்று இது. மும்பையில் நடந்ததைத் தொடர்ந்து தெலுங்கானாவின் சக்தி மையங்கள், டி எஸ் ட்ரான்ஸ்கோ, டி எஸ் ஜென் கோ பாதிப்புக்கு உள்ளாயின. 2017-ல் இந்தியப்படை விமானமான சுகாய் 30 சீனாவின் இணைய வழித் தாக்குதல்களால் வீழ்ந்தது. கொந்தர்கள், தற்போது திறன் கைபேசி, கணினி மற்றும் ட்ரோனை ஒருங்கிணைத்து தாக்குதல் செய்கின்றனர். பண்டிகை மாதங்களான அக்டோபர், நவம்பர்களில் நிகழ்நிலையில் பொருள் வாங்கும் பலரின் கணக்குகள் தாக்கப்பட்டன. இதன் பின்னணியிலும் சீனாதான் செயல்பட்டிருக்கிறது. 2019-ல் 50,000க்கும் மேற்பட்ட இணையத் தாக்குதல்கள் இந்தியாவின் மீது நிகழ்ந்ததாகச் சொல்லும் ஒரு அறிக்கை இந்தியாவின் மீது சீனாவின் இணையத் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறது.

2019-ல் அதிகத் தாக்குதலுக்கு இந்தியா உள்ளானது என்று பெங்களுருவிலுள்ள சுபெக்ஸ் என்ற நிறுவனம்சொல்கிறது. ஸ்லோவேனியாவிலிருந்து 74,988, தாக்குதல்கள், உக்ரைனிலிருந்து 55,772, செக் குடியரசிலிருந்து 53,609, சீனாவிலிருந்து 50,000, மெக்ஸிகோ 35,201 உருவாகி வந்ததாக அந்த அமைப்பு மேலும் சொல்கிறது. சீனர்கள் இந்தியாவின் மீது நடத்தும் தாக்குதல்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், வியட்னாம் நாடுகளிலிருந்து வரும். ஆனால், 2019 பிற்பகுதியில் சீனாவின் நான்கு உட்பிரதேசங்களிலிருந்தே இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன; அவற்றை மறைக்கவும் அந்த நாடு முயலவில்லை என்பதில் வியப்பு மட்டுமன்று, மறைமுக சவாலும் இருக்கிறது. நாம் செயல்பட வேண்டிய, காப்பாற்ற வேண்டிய, சுதந்திரக் குடியரசு நாடாக இருக்க வேண்டிய முக்கிய கட்டத்தில் இருக்கிறோம் என்பதை ஆட்சி செய்வோர், எதிரணியில் இருப்போர் உணர்ந்தால் நன்மை உண்டு.

சிறுவர்கள் பாடும் பாடல் ஒன்று

சித்துண்ணி, சித்துண்ணி செத்தியா?
நானேன் சாறேன் ஜகதீசா?
ஒரு மரத்துப் பழம் தின்னு
உன் தலேல கொட்ட உமிழ்ஞ்சு…’

‘Some men just want to watch the world burn’

Alfred Pennyworth in The Dark Knight.

***

Series Navigationபிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.