1
குழந்தையின் மழலையில்
இருந்த விலைமதிப்பற்ற
அர்த்தத்தை
கேளாத செவிடனாய்
நான் இருந்தபோது
குழந்தை பேசியது
கடலின் ஓசைக்கு ஏற்ப
இரவில் ஒளிரும்
நட்சத்திரம்
கேட்கும் வண்ணம்
இதுவரை என் ஞாபகத்தில்
இருக்கும் அடுக்குகளிலிருந்து
இப்படி நான் காண்கின்ற
ஒன்றைக் கேட்கிறேன்
ஒரு பிரத்தியேகமான
ஒரே ஒரு வைரம்
அது அக்குழந்தைக்கானது
பேசும் மொழியின்
ஓசைகள் இசை போல்
என் காதில் விழவில்லை
என்றாலும் உள்ளத்தில்
மகிழ்ச்சி
2

அமைதியாக இருந்தது இயற்கை
அது அமைதி என்று தெரியாமல்
இலைகளின் ஓசை காற்றை
தனித்தனியாகப் பிரித்தது
அது சொல்லிய
கதையில் வந்த கற்பனை
கண் முன்னே விரிந்தது
சாலையில் நடந்த மக்கள்
ஈஷர் ஓவியம் போல்
இங்கும் அங்கும் என
நடந்துகொண்டிருந்தார்கள்
அது எது
எனக்குக் கேட்காத ஒன்று
யாரோ ஒருவர் தனித்து
கேட்டுக்கொண்டிருக்கிறார்
யாருக்காக ஒலிக்கிறது அப்பாடல்
நான் போய்ச் சேருவதற்குள்
அப்பாடல் முடிக்கப்படாமல்
இருக்க வேண்டும்
என் பயணம்
என்னைத் தாமதப்படுத்துகிறது
என் வண்டியின்
சக்கரங்கள் உடைந்துபோனது
3
அவன் எதையும் அறியவில்லை
புரியாமலும் ஆட்டம் நிற்காமலும்
ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை
பித்த நிலையில்
பித்தனின் போக்கு
அர்த்தமற்ற பேச்சு அவனுக்கானது
லயிப்புடன் கூடிய
பாவனை உட்பட
இதை எல்லோரும்
பரவலாகச் செய்யும்போது அது
முக்காலமும் நிறைந்திருக்கும்
இந்த எண்ணத்தால்
உலகம் நகர்ந்துக்கொண்டிருந்தது
புரிதலிலோ அறிதலிலோ
இல்லாத வலு
வேறெங்கோ இருக்கிறது
அவன் சொன்னதை நாமும்
நீ சொன்னதை அவனும்
ஒத்துக்கொண்டால் போதும்
எல்லாம் சரியாகிவிடும்
எனக்கென்ன பதில்
என்பதைத் தவிர
4

மழை பெய்து கொண்டிருந்தது
ஈரமான காற்றை வீசியபடி
மனதைக் குளிரவைத்து
கற்பனையில் அற்புதத்தை
நிகழ வைத்து
தனிமையின் அலங்காரத்தை
மீட்டெடுத்த அந்த
மழை இன்னும்
பெய்து கொண்டிருந்தது
ஊரை நனைத்து
விடாப்பிடியாகச் சாசுவதமான
தண்ணீரைக் கதவு போல்
மூடி காட்டியபடி
உள்ளத்தில் விடுதலையை
திறந்து விட்ட
அந்த மழையின்
உதையை வீசும் காற்றுடன்
வாங்கிய அந்த
மரத்தைப் பார்த்தேன்
நான் எவ்வளவு
சுயநலக்காரன்
5

எந்த வார்த்தைகளின் மீதும்
எந்த சொல்லின் மீதும்
அவர்களுக்கு உடன்பாடில்லை
எந்த நகர்விலும்
அவர்களுக்குப் பிரிவைத் தவிர
எந்த அர்த்தமும் இல்லை
ஒன்றாக இருப்பது
போல் நடித்து அத்தோடு
நிறுத்தி கொள்கிறார்கள்
நம்மை நாம்
ஏமாற்றிக் கொள்ள
தயாராக இருக்கவேண்டும்
வலியோடு வாழ
பழகிக்கொள்ளவேண்டும்
காத்திருக்கிறார்கள் இதைவிட
மோசமான நிலைக்கு
என்பது போல்
அவர்கள் போராடுகிறார்கள்
யார் கண்ணுக்கும் தெரியாமல்
நிழலோடு யுத்தம் செய்து
பலத்த காயத்தோடு
மீண்டும் மீண்டும்
இறந்து போகிறார்கள்