தடக் குறிப்புகள் – 4

This entry is part 4 of 4 in the series தடக் குறிப்புகள்

ஆடம் இஸ்கோ

இங்கிலிஷ் மூலத்திலிருந்து தமிழாக்கம்: மைத்ரேயன்

(பாகம் 4- தொடர்ச்சி)

நான் எப்போதுமே நகர்ந்து கொண்டே இருக்கப் பார்த்தேன். எப்போதும் முன்னோக்கி, மேலும் மேலும் பயணித்து, அடுத்த பெட்ரோல் நிலையத்தில் ஒரு உரையாடலை நோக்கி அல்லது இரண்டு சாரி போக்குவரத்து இருந்த ஒரு சிறு நகரை நோக்கி. அதனால் வட டகோட்டா மாநிலத்தில், மைனாட் எனும் ஊரின் அருகே ஒரு நபரைச் சந்தித்தபோது, அவர் எனக்கு உயரத்தை நோக்கிப் பயணிக்க ஓர் வாய்ப்பு கொடுக்க முன்வந்தார், அதை இயற்கையாக ஏற்றுக் கொண்டேன். அவருடைய குழுவினர் ஒரு தொலைகாட்சி ஒளிபரப்புக் கூண்டை நிர்மாணிக்க வேலை செய்து கொண்டிருந்தனர், அதன் உச்சிக்கு என்னையும் இழுக்க அவர் விரும்பினார். அதற்கு ஒரு சறுக்கல் ஏற்றப் பொறியையும், ஜின் கப்பியையும் பயன்படுத்த நினைத்திருந்தார். அது அடிப்படையில் ஒரு மேல்தூக்கியும், கப்பியும் கொண்ட அமைப்பு. அதை அந்தக் கூண்டின் உச்சியில் இணைத்து விட்டு, அதைக் கொண்டு தொழிலாளர்களையும், வேலைக்கான சாதனங்களையும் மேலே இழுத்துக் கொள்ளலாம். அவர் வேலைக்கான தோல் கையுறைகளையும், சிவப்பு தலைக் கவசத்தையும், முழு உடலுக்குமான சேணக் கட்டையும் பொறுக்கி எடுத்துக் கொண்ட போது, நான் தயங்கவில்லை- அல்லது அதிக நேரம் தயங்கவில்லை.. இது வட டகோட்டா மாநிலத்தின் சமவெளி நிலப்பரப்பை உயரத்திலிருந்து காண ஓர் அரிய வாய்ப்பாகத் தெரிந்தது.

சறுக்கலேற்றப் பொறியின் எஞ்சின் திணறலோடு உயிர் பெற்றபோது, பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி எனக்குச் சுருக்கமாக, துரிதமாக அறிவிக்கப்பட்டது. ரோரி கிலாண்டின் கால்கள் என் கால்களுக்குச் சில வினாடிகள் முன்பு தரையை விட்டு நீங்கின. எனக்குப் பயமாக இருந்தது, திடீரென நான் பளுவே இல்லாதவனானேன். சறுக்கலேற்றப் பொறி எங்களை அந்த தொலைகாட்சி ஒளிபரப்புக் கூண்டின் பக்கவாட்டில் மேலே இழுத்துப் போயிற்று, பத்து, ஐம்பது, நூறு அடிகள் தரைக்கு மேலே கொண்டு போயிற்று. “உங்களுக்குத் தெரியுமா, சில தினங்களில், நாங்கள் இதன் மேல் இருக்கிற போது, பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் விமானம் இந்தப் பக்கம் வருவதை காண்போம், அப்போது அந்த விமானியின் கட்டுப்பாடு அறைக்குள்ளே நாங்கள் பார்க்க முடியும்.” நாங்கள் வானை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம், இருநூறடி, முந்நூறு, நானூறு அடிகள்: “மேற்கில், நீங்கள் காற்றையே பார்க்க முடியும். கீழே இருந்தபடி தானிய வயல்களில் அந்தக் காற்றை நீங்கள் ஒருபோதும் பார்க்க முடியாது. அந்தக் காட்சியை இந்த உயரத்திலிருந்து நீங்கள் காணும் வரை, அதைப் பற்றி நீங்கள் யோசிப்பது கூட இல்லை.” நேரே கீழே நான் பார்த்தபோது, பொம்மை ட்ரக்குகளையும், அவருடைய பணிக்குழுவினரையும், அவர்கள் எங்களைப் பார்ப்பதையும், பார்த்தேன். நீல ஏரிகளையும், பசும் மேய்ச்சல் வெளிகளையும், கருநிற மேல்பரப்புடைய சாலைகளையும், காற்றில் அலையடிக்கும் கோதுமை வயல்களையும் பார்த்தேன். எண்ணூறு அடியில் நாங்கள் மேல் நோக்கி நகர்வதை நிறுத்தினோம், கொஞ்சநேரம் அங்கேயே தொங்கிக் கொண்டிருந்தோம், தொலைகாட்சி ஒளிபரப்புக் கூண்டிலிருந்து, எட்டில் ஐந்து பாகம் அங்குலத் தடிமனே  உள்ள கம்பிக் கயிற்றில் தொங்கினோம். “எத்தனை பிரமாதம், இல்லியா?” ரோரி கிலாண்ட் காற்றினூடே கத்தினார். நான் என்ன பதில் சொன்னேன் என்று எனக்குக் கறாராக நினைவில்லை, ஆனால் அது இப்படித்தான் இருந்திருக்கும், “இது பித்துப் பிடிக்க வைக்கும்படி அதிசயமாக இருக்கு.’

இது நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு இருக்கும்; வட கிழக்கு மாண்டேனா மாநிலத்தில் ஃபோர்ட் பெல்நாப் ஏஜென்ஸி என்கிற ஊர், நகோடா மற்றும் ஆனீ பழங்குடி அமெரிக்கர்களின் ஒதுக்கீட்டு நிலப்பரப்பில் உள்ளது. அது அந்தப் பழங்குடியினரின் தலைமை நிர்வாகத் தலமும் கூட.  அங்கு, பெட்ரோல் நிலையமாக இல்லாத ஒரே ஒரு ரெஸ்ட்ராண்டில் ஒரு சீஸ்பர்கரை உண்டு முடிக்கவிருந்தேன். அப்போது உயரமான ஓர் இளைஞர் கதவைத் திறந்து உள்ளே வந்தார். தாமஸ் மோலினா, கோழித் துண்டுகள் கொண்ட இரவுணவைக் கேட்டு வாங்கியபோது, ஒரு கௌபாய் தொப்பி அணிந்திருந்தார், ஆனால் என் மேஜையில் எனக்கு எதிரே இருந்த காலி நாற்காலியில் அமர்ந்தபோது தொப்பியைக் கழற்றி விட்டார். நான் காலியான சாலைகளில் பயணம் போய்க் கொண்டிருந்தேன் – ஒவ்வொரு உரையாடலுக்கும் இடையே முப்பத்தி இரண்டு, நாற்பத்தி ஐந்து, அறுபத்தி ஆறு மைல்கள் போல பயணிக்க நேர்ந்தது. என் வயதொத்த ஒருவருடன் கொஞ்ச நேரம் உரையாடுவது குறிப்பாக அருமையாகத் தெரிந்தது. அவரிடம் என் பெயரைச் சொன்னேன். அவர் அந்த பழங்குடி ஒதுக்கீட்டு பரப்பில் தற்கொலைகளைத் தடுக்க உதவும் குழுவில் பணி புரிவதாகத் தெரிவித்தார். “இந்த வருடம் ஏற்கனவே எட்டு பேர்களை நாங்கள் இழந்து விட்டோம்.” என்று சொன்னார். எல்லாமே தற்கொலைகள், என்றார். அதில் அவருடைய நெருங்கிய நண்பரும், முதல் ஒன்றுவிட்ட சகோதரரும் ஒருவர். அவர் குடிபோதையில் இருந்தபோது ஒதுக்கிடம் ஒன்றில் தூக்கிட்டுக் கொண்டார் என்று சொன்னார். “நான் வளர்ந்து வருகையில் இப்படி இழந்த சகோதரர்களில் இவர் நான்காவது.” சொன்னதும் தாமஸ் சற்றுத் தயங்கினார்.  “சொந்த சகோதரர்கள் இல்லை, ஆனால் நீங்கள் எப்படி எனக்குச் சகோதரர் போலவோ, அப்படியான சகோதரர்கள்.” அப்போது அவருடைய கோழித் துண்டங்கள் ஒரு ஸ்டைரொஃபோம் டப்பியில் இடப்பட்டு மேஜைக்குக் கொண்டு வரப்பட்டன, கூடவே (துணைப் பண்டமாக) சாறும் ஒரு சிறு குப்பியில் ப்ளாஸ்டிக் மூடியோடு வந்தது. அவர் சொன்னார், “எங்களுடைய பாரம்பரிய முறைகள்தான் எங்களைக் காப்பாற்றப் போகின்றன- ஸ்வீட்க்ராஸ், புகைபிடிக்கும் குழாய், நீராவிக் குளியலறை, அவைதான் எங்களைக் காப்பாற்ற முடியும். போதைப் பழக்கமும், போதை மருந்துகளும், வறுமையும் எங்கள் வாழ்க்கை முறையாகிவிட்டன, பண்பாடாகவே ஆகி விட்டன என்கிறார்கள் எங்கள் முதியோர்கள், ஆனால் நாங்கள் அதை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.” அவர் உற்சாகமாகப் பேசினார்.  “நாங்கள் எங்கள் பாரம்பரிய முறைகளைக் கொண்டு இதையெல்லாம் மாற்ற வேண்டும். அதற்குத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.” தன் தொப்பியை மேஜையிலிருந்து எடுத்துக் கொண்டு அவர் வாயிற்கதவைத் திறந்து வெளியே போனார். நான் அவரைப் பிறகு பார்க்கவே இல்லை.

மாண்டானா மாநிலத்தின் எல்லைப் புறத்தில், ப்ளாக்ஃபீட் பழங்குடியினருடைய தனிக் குடியிருப்பில் இருந்த ப்ரௌனிங் நகரத்தை நெருங்கியபோது, நான் இன்னமும் தாமஸ் மோலினாவின் ஒன்று விட்ட சகோதரரைப் பற்றி, குடிபோதையில் தூக்கிட்டுக் கொண்டாரே அவரைப் பற்றியே இன்னமும் நினைத்துக் கொண்டிருந்தேன். பெரும் சமவெளியின் ஊடே சுமார் மூன்று வாரங்களாக நான் பயணம் செய்திருந்தேன், ஒவ்வொரு நாளும் கடுமையான எதிர்காற்றுகள் சைக்கிள் ஓட்டுவதைக் கடினமாகவும், துன்பகரமானதாகவும் ஆக்கி இருந்தன: சாதாரணமாக எட்டு மணி நேரம் சைக்கிள் இருக்கையில் அமர்ந்து ஓட்டும் பயணம் இப்படிக் காற்றோடு போராடுவதால், பன்னிரண்டு அல்லது பதிநான்கு மணி நேரப் பயணமாக ஆகி விட்டிருந்தது. சைக்கிள் இருக்கையில் தினசரி அமர்ந்து ஓட்டுவதால் உட்காரும் இடங்களில் ஏற்பட்டிருந்த புண்கள் நோய்ப்பட்டதாக ஆகின, நான் போதுமான, சரியான உணவை உண்ணாமல் காலம் தள்ளினேன், காற்றின் ஓசையில் சிந்திப்பதைக் கூடச் சரியாகச் செய்ய முடியவில்லை. ஆனால் சைக்கிள் ஓட்டிச் செல்வதைத் தவிர அந்தப் பெருவெளியில் செய்வதற்கு வேறேதும் வழியில்லை. அப்போது தூரத்தில் ராக்கி மலைகள் நெடிதுயர்ந்து நிற்பது கண்ணில் பட்டது. மூன்று வாரங்கள் நடுக்கடலில் தத்தளித்தபின் திடீரென்று நிலம் தென்பட்டது போல இருந்தது.

ப்ரௌனிங் ஒரு சிறிய ஊர், அதில் ஒற்றை மையத் தெருவுக்கு மேற்பட்ட தெருக்கள் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் வழி தெரியாமல் தொலைந்து போகக் கூடிய அளவு பெரிதாக இருந்தது. சங்கிலித் தொடரால் ஆன வேலி ஒன்றின் முன்னால் இருந்த புல்வெளியில் புல் வெட்டும் எந்திரத்தால் புல் அறுத்துக் கொண்டிருந்த ஒரு குள்ளமான வழுக்கைத் தலையரை வழி கேட்டேன். நான் அன்றிரவு தங்குவதற்கு அங்கிருந்த சூதாட்டக் கேளிக்கை விடுதி ஒன்றில் ஓர் அறையை ஒதுக்கச் சொல்லிக் கேட்டிருந்தேன். குளித்து விட்டு, நல்ல படுக்கை ஒன்றில் சில இரவுகள் ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். அதன் பிறகுதான் லோகன் கணவாய் வழியே என்னால் போக முடிந்திருக்கும். அவர் அந்தத் தெருவில் நீளப் போய், வலது பக்கம் அது திரும்பும்போது திரும்பி, சில தொடர் வண்டிக் குடியிருப்புகளையும், ஒரு பாலத்தையும், சில நாய்களையும் தாண்டிப் போகச் சொன்னார். “அந்த நாய்கள் அனேகமாக தொல்லை செய்யாது,” என்றார். “அங்கே மையத் தெருவைப் போய்ச் சேர்ந்ததும், மேற்கு திசையில் சில தெருக்களைத் தாண்டிப் போங்கள், அங்கே ஒரு மளிகைக் கடையைத் தாண்டினால் அந்த விடுதி தெரியும்.” நான் சில நிமிடங்கள் கழித்து அவரிடமே திரும்பினேன் – நான் வந்தபோது அவர் கேட்டார்- “என்ன ஆயிற்று, அதற்குள்ளேயே வழி தெரியாமல் தொலைந்து போய் விட்டீர்களா?” நான் தொலைந்து போகவில்லை, ஆனால் ரொம்பவே தனிமைப்பட்டுப் போயிருக்கேன் ஐயா. உங்களுக்கு என்னோடு பேசச் சில நிமிடங்கள் அவகாசம் இருக்கா? என்று அவரிடம் சொன்னேன்.

அவர் புல் வெட்டும் எந்திரத்தை நிறுத்தி விட்டார். “வாப்பா, வா, வந்து உட்காரு,” என்றார். அங்கே நடைபாதை ஏதும் சாலையோரம் இல்லை. அங்கேயே மண்ணில் அமர்ந்தோம். நான் எங்கே இருந்து வந்திருக்கிறேன் என்று கேட்டார், நான் சொன்னேன். அவர் அங்கேயிருந்தே, அங்கேதான் இருந்து வந்தவர். “நாங்க ஆம்ஸ்காபி பிக்கானி ஜனங்க, ப்ளாக்ஃபீட் இனம்,” என்றார். அந்தப் பெயர் எனக்குத் தெரியவில்லை என்பது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. “பேரைக் கேட்டாலே பயப்படச் செய்யும் கூட்டம்ப்பா நாங்க. அதனாலதான் எல்லாரும் எங்களை வெறுக்கறாங்க,” என்றபடி சிரித்தார். “ஆனால் நான் முழு-ரத்த ப்ளாக்ஃபீட் இல்லை. பாதி- முழு ரத்தம்தான்.” ப்ளாஸ்டிக்கில் மூடி ஒட்டப்பட்டிருந்த ஓர் அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார், அது 41/64 பங்கு ரத்த அளவு என்று காட்டியது. “என் அம்மா இன்னும் கூடுதலான அளவுள்ளவள்.” அந்த வீடு அவருடையதா என்று கேட்டேன், அவர் அங்கே வேலை மட்டுமே செய்வதாகத் தெரிவித்தார். ”நான் இங்கே இருந்து கொண்டு இப்படித் தோட்ட சுத்தி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன், இந்தக் குப்பை மேட்டு ஊரில் எனக்கு வேறு வேலைகள் கிடைக்க வழியே இல்லை.” என்றார். அந்த வீட்டு முன் புறத்தில் ஒரு பழையதான வேகப்படகு சாம்பல் கட்டுமானக் கற்களின் மேல் இருத்தப்பட்டிருந்தது.  “இங்கே பாழாப் போன வேலைகள் எதுவுமே இல்லை.” சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்களுக்குப் பல வளங்களையும், உதவிகளையும் கொடுக்கப் போவதாக உறுதிசொன்னார்கள், ஆனால் அதற்கு மாறாக அரசுடைய செயல்திட்டங்களில் பலவற்றையும் வெட்டி விட்டார்கள், இங்குள்ள நிலத்தையும் பிளப்பதற்குத் திட்டங்கள் போடுகிறார்கள் என்றார். “நான் ஒரு தீயணைப்புப் படைக்காரனாகப் பதினாறு வருடங்கள் வேலை செய்தேன். இப்ப பாருங்க- நான் எப்படிச் சிறுமைப்பட்டிருக்கேன்னு- உங்களுக்குப் புரியுதா? இதெல்லாம் ரொம்ப முட்டாள்தனமானது.”

அவர் இதைப் பற்றி எப்படி உணர்கிறார் என்று கேட்டேன்.

“எனக்குக் கதறி அழணும்போல இருக்கு.”

நான் அவர் தோளைத் தொடக் கையை நீட்டவிருந்தேன், ஆனால் கையைப் பின்னே இழுத்துக் கொண்டேன்.

“எனக்கு அத்தனை கோபம் வருது. உங்களுக்குத் தெரியுமா, இந்த ஆட்கள் எல்லாம் எங்களை ஓத்துப் பணம் பண்ணனும்னுதான் பார்க்கறாங்க, ஓத்து இருட்டுல தள்ளிட்டுப் போறாங்க. நாங்க என்னதான் செய்ய முடியும்?”

என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவர் தன் மனைவியை இரண்டு வருடங்கள் முன்பு இழந்ததாகச் சொன்னார். “அவள் கார் ஒண்ணு இடிச்சுத்தான் போனாள். நிஜமா ரொம்ப மோசமாத்தான் செத்தாள்.”

நான் உன்னைப் பற்றி நினைத்தேன்.  நெருக்கடியான போக்குவரத்து இருந்த ஒரு அகன்ற சாலையின் நடுவே எப்படி மூளை செத்துப் போய் நீ இறந்தாய் என்று யோசித்தேன். கார் ஒன்று மோதி நான் இறந்தால் என் சிதைந்த உடல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன். அந்த யோசனைகளை என் மனதிலிருந்து நீக்கி விட்டு, அவருடைய மனைவியைப் பற்றிச் சொல்லுமாறு அவரிடம் கேட்டேன். “பாருங்க, அவ வீட்டுக்கு வந்தா, என்னைக் கூப்பிட்டுக்கிட்டா, எங்கிட்ட சொன்னா, ‘செல்லம், என் கிட்டே வந்து படுத்துக்க, என்னைப் பிடிச்சுக்க, நான் எப்பவும் உன் கிட்டவே இருப்பேன்.’ நான் வேலைக்குப் போனேன், அவளும் வேலைக்குப் போவா, அவ எனக்கு உண்மையான அன்புன்னா என்னதுன்னு காட்டிக் கொடுத்தா. எனக்கு அது முன்னபின்னெ கிடைக்காம இருந்த ஒண்ணு, ஏன்னா நா வளர்ந்த குடும்பம் ரொம்பவே அடிதடிக் குடும்பம்.” என்றவர், மேலும் பேசியதில் தன் வாழ்க்கை முழுதும் அவர் சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டி இருந்தது என்றார். மூன்று வயதிருக்கையில், அவருடைய பள்ளி ஆசிரியர்கள் அவருடைய காலணிகளில் மணிகளைக் கட்டி வைத்தார்களாம், ஏனெனில் அவர் எப்போதும் பள்ளிக் கூடத்தை விட்டு ஓடிப் போகவே முயன்று கொண்டிருந்தாராம். “நான் என் வீட்டுக்குப் போய் என் அம்மாவைப் பாதுகாக்க விரும்பினேன்.”

அவர் சற்றுப் பேசாமல் இருந்தார்.

“எனக்கு நாலு வயசிருக்கும்- நான் புதர்களில் ஒளிந்து கொண்டிருப்பேன், நானும் என் சகோதரனுமாக, இத்தனை உயரமிருக்கும் அந்தப் புதரெல்லாம், அங்கேயே என் அப்பா உள்ளே இருந்து கத்துவது கதவைத் தாண்டிக் கேட்கும்.”

அவர் அதை நினைவு வைத்திருக்கிறாரா என்று கேட்டேன்.

அவர், தான் எல்லாவற்றையும் நினைவு வைத்திருப்பதாகச் சொன்னார்- அடிதடி, அம்மாவைக் காப்பாற்றியது, காலையில் விழிக்கும்போது சமையலறையெங்கும் போதையில் மயங்கிக் கிடந்த உறவினர்கள், அவர்களைத் தாண்டிக் காலை எட்டி வைத்துப் போய் ஃப்ரிட்ஜில் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று பார்த்தது- எல்லாமே. “சொல்லப் போனா, நாங்க ரெண்டு பேரும் எங்களையே வளர்த்துக்கிட்டோம்.” அவர் தானே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார், பிறகு கல்லூரிக்குப் போய்ப் படித்து, ஹெலிகாப்டர்களிலிருந்து கீழே குதித்து காட்டுத் தீயை அணைக்கப் போராடுவதைக் கற்றுக் கொண்டிருக்கிறார். “ஜனங்களுக்கு உதவறத்துக்குத்தான் நான் விருப்பப்பட்டேன், ஏனெனில் நான் சின்னவனா இருக்கையில ரொம்பவே அடிபட்டிருக்கேன்.” அவர் நன்றாக வாழ்ந்தவர், ஒரு படகு, நல்ல கார், இந்த ஊரிலிருந்து கொஞ்சம் மைல்கள் தள்ளி ஒரு இடத்தில ஒரு வீடு, அது  ‘பேர் பா’ங்கற இடம், எல்லாம் வாங்கி இருந்தார். “எனக்கு நல்ல பேர் இருந்தது,” அவர் சொன்னார். “இந்த ஊர்ல நான் நடந்து போவேன், வயசாளிங்க கூட என் கையைக் குலுக்குவாங்க. அவங்க யார்னே எனக்குத் தெரிஞ்சிருக்காது. பாருங்க, கடைக்குப் போகையில, வேறே வேலையாப் போறத்தெ, ஜனங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருந்தது, அதை எல்லாம் நான் எப்படியோ தொலைச்சுப்புட்டேன், எப்படின்னுதான் தெரியல்லை.”

அவர் குடிபோதையில் காரோட்டியதற்குக் கைதானார், சிறைக்குப் போயிருக்கிறார். தன் வீட்டைச் சகோதரிக்கு விட்டுக் கொடுத்தார், வெளியே வந்தபிறகு, வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வேறொரு பழங்குடி அமெரிக்கக் குடியிருப்பில் புதிய வேலை ஒன்றைத் தேடிப் போனார். அது பலிக்கவில்லை. இப்போதுதான் சில தினங்கள் முன்பு ஊருக்குத் திரும்பியதாகச் சொன்னார். “எனக்குப் புரியலை,” என்றார். “இதெல்லாம் புதிரா இருக்கு, இந்தப் புதிர்ல ஏதோ ஒரு பாகம் காணாமப் போயிருக்கு. தம்பி, கொஞ்ச நாளா உலகம் என்னை புட்டத்தில உதைச்சுகிட்டிருக்கு.”

அவர் உரக்கச் சிரித்தார், அழத் தொடங்கும்வரை சிரித்தார்.

“நான் எதைத் தேடறேன்னே எனக்குத் தெரியலை, காணாமப் போன அந்த புதிரோட பாகம் எதுன்னுதான் தெரியலை.”

அவர் தீவிரமாக அழுது கொண்டிருந்ததால் அவருக்குப் பேச வார்த்தைகள் கிட்டவில்லை. போகட்டும் விடுங்க, பரவாயில்லை பாருங்க என்றெல்லாம் நான் சொன்னேன், பிறகு அவருடைய தோளைச் சுற்றி என் கைகளைப் போட்டு அரவணைத்தேன், இந்த முறை நிஜமாகவே செய்தேன். அவருடைய கழுத்தின் பின்புறம், தோட்டத்தில் ஒரு பிற்பகல் பூரா வேலை செய்த பிறகு வியர்த்து வழியும் என் அப்பாவை நினைவூட்டியது. வேறென்ன அவரிடம் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவரோ நிறுத்துவாரில்லை. நான் ஏதாவது வார்த்தைகள் கிட்டுமா என்று பரபரக்கத் தேடினேன்: உங்களுக்குத் தெரியுமே, நான் ஊரூராச் சுற்றி வரேன், எப்படி ஒரு வாழ்க்கையை வாழறதுன்னு புரிஞ்சிக்கத்தான் முயற்சி செய்யறேன், தெரியுமா, சும்மா வாழறதே அத்தனை கஷ்டமா இருக்கு, சும்மா வாழவே, சாதாரணமா ஒரு வாழ்க்கை வாழறதே, அப்புறம் சந்தோஷமா இருக்கறதுங்கறது வேற இருக்கு, அது-”

“எனக்கும் இந்தக் குப்பை எல்லாம் முன்னயே தெரிஞ்சிருந்தது. நான் உளவியலை எல்லாம் படிச்சிருக்கேன், அதெல்லாம் எனக்கு உதவவே இல்லை.”

நீங்க நம்பிக்கையே இல்லை என உணர்கிறீர்களா?

“நான் உள்ளே செத்துப் போயிட்டேன்.”

இல்லை, என்றேன்.

நான் நிதானித்தேன். பிறகு, நீங்க அப்படி நினைக்கல்லை, என்றேன்.

“ஆமாம். அப்படித்தான் இருக்கேன். நான் இந்த உலகத்துல திரிஞ்சுகிட்டு இருக்கேன், கடவுள் என்னை ஏன் இன்னும் அழைச்சுக்கலைன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.”

என்ன சொல்ல வரீங்க?

“என்னோட பாழாப் போன வாழ்க்கையை முடிக்கணும்ங்கிறேன்.”

இல்லை, இல்லை, என்றேன். ஆனால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

“இந்த வருசம் எனக்கு நாற்பது வயசாகப் போறது, என்னோட வாழ்க்கைல நான் ஒண்ணையும் செய்து கிழிக்கலைன்னு எனக்குத் தோணறது. நான் பெருமிதப்பட எதையும் செய்யலை. நான் உலகத்துல இருந்திருக்கேன், ஆனா நான் சந்தோசமாகக் கூட இல்ல.”

நீங்க நிறைய உயிர்களைக் காப்பாத்தி இருக்கீங்க ஐயா, அது கொடி கட்டிப் பறக்கறது. நான் சொல்றது என்னன்னு உங்களுக்குப் புரியுதில்லையா? நீங்க யாரோட உயிரையோ காப்பாத்தி இருக்கீங்க, அது எல்லாரையும் பாதிக்கிறது. அவங்களுக்கு உங்க பேர் தெரியாம இருக்கலாம், ஆனா நீங்கதான் அதைச் செய்தீங்க.

“இல்லாமலா? நான் பல உயிர்களைக் காப்பாத்தத்தான் செய்தேன். ஆனா இப்ப அதுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை.”

அவர் மறுபடியும் அழத் தொடங்கினார்.

“நான் எதுக்குப் பிரயோசனம்?”

அந்த வார்த்தைகள் காற்றில் சிறிது நேரம் மிதந்தன, பிறகு அவர் சுதாரித்துக் கொண்டார். மேலும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம், அவர் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொலைகாட்சியில் பார்ப்பதாகச் சொன்னார், அவரால் பல்கலையின் (அமெரிக்க) கால்பந்துக் குழுவில், தன் துவக்க வருடத்திலேயே எப்படிச் சேர முடிந்தது என்றும்,  ‘ஜெமினி’ விண்வெளிக் கலத்தின் மாலுமிகளில் ஒருவரை, அதன் வெளிக்கதவை மூடியவரை , ஒரு முறை சந்திக்க முடிந்ததைப் பற்றியும் பேசினார். அப்போது, பாகவதர் போல முடியை வைத்திருந்த பருமனான ஆண் ஒருவர் ஒரு டீஸல் பிக் அப் ட்ரக்கை ஓட்டிக் கொண்டு வந்தார், அந்த ட்ரக்கில் புல்லின் பசும் கறைகளோடு இருந்த ஒரு டி ஷர்ட்டை அணிந்திருந்த பெண் பயணியின் இருக்கையில் அமர்ந்தபடி ஜன்னல் வழியே இரைச்சலிட்டார், வேலையை விட்டுப் போகும் நேரம் ஆகி விட்டது என்ற கூவல் அது. “நான் தேறிடுவேன்,” என்றவர், “உனக்குப் பயணம் நல்லபடியா அமையணும், அதுக்கு நான் பிரார்த்தனை செய்யறேன்.” என்றார். நான் அவருடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன் என்று சொன்னபோது அவர் தன்னிடம் தொலைபேசி ஏதும் இல்லை என்றும், தன் பெயரையும், ஜிமெயில் முகவரி ஒன்றையும் கொடுத்தார்.

அன்றிரவே நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து பிறகு ஏதும் எனக்குக் கிட்டவில்லை.

என்ன ஆயிற்றென்று எனக்குத் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? நீ கூடத் தற்கொலைதான் செய்து கொண்டாயா? நம் ஊரில், கடந்த சில வருடங்களில், க்வெண்டன் போதை மருந்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டு இறந்தான், ஸ்பென்சர் தன் காரை ஒரு குப்பை லாரி மீது மோதிப் போய் விட்டான், ஜே தன் தலையில் சுட்டுக் கொண்டு இறந்தான். நீ இறந்த போது நாங்கள் எல்லாரும் பதினைந்து வயதினராக இருந்தோம்.

இறுகக் கெட்டிக்கப்பட்ட கல் கப்பி சாலைகளும், விறுவிறுப்பான போக்கு வரத்து இருந்த நாலு சாரி நெடுஞ்சாலைகளும். பெட்ரோல் நிலையம், கல் கப்பிக் குழிகள், பேஸ்பால் விளையாட்டு மைதானம். ஒரு கட்டத்தில், வாஷிங்டன் மாநிலத்தின் கீழைப் பகுதியில், தன் வீட்டு முன்புறத்துப் புல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நீல டி ஷர்ட் அணிந்த ஒரு மனிதர் கையை நீட்டி உயர்த்தி, என் கையைத் தட்டி என்னை உற்சாகப்படுத்தினார். அன்று மாலை சூதாட்டத்தில் எண்பது டாலர்களை நான் இழந்தேன். பிறகு காஸ்கேட் மலைச் சரிவுகளை சைக்கிளில் கடந்தேன், கொலம்பியா ஆற்றின் கரையோரமாகப் பயணம் செய்து டிஸப்பாயிண்ட்மெண்ட் வளைகுடாவைச் சென்றடைந்தேன். ஓரெகன் மாநிலத்தில் பஸிஃபிக் மாக்கடலைப் பார்த்தது என் கண்களில் நீர் வரச் செய்தது.

சர்ச், முகாமிடும் திடல், ரயில் நிலையம்.  லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஆம்ட்ராக் நெடுந்தூரப் பயண ரயில் ஒன்றில் ஏறினேன், உயர்தர கொத்து மாட்டு மாமிசத் துண்டுகள் கொண்ட குழலப்பத்தை ரயிலின் பார்வையாளர் வண்டியில் உண்டபடி இரண்டு நாட்களைக் கழித்தேன். வெளியே பாலைவனம் வேகமாகக் கடந்ததை ரயிலின் பெரிய அழுக்கான கண்ணாடி ஜன்னல்கள் வழியே பார்த்தேன். கலிஃபோர்னியா, அரிஸோனா, நியூ மெக்ஸிகோ, அனேகமாக சொந்த ஊருக்கே திரும்பி, டெக்ஸஸுக்கு மறுபடி வந்தேன்: நானும், என் சைக்கிளும், காற்றும்.  ரயிலிலிருந்து இறங்கி சில நாட்கள் கழித்து, சாலைப் பயணத்தில், நெடும் ஓக் மரங்களின் தோப்பின் நடுவில், மடக்கு நாற்காலிகளில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணையும், அவருடைய குழந்தையையும் பார்த்தேன். அவர்களுடைய அனைத்துப் பொருட்களும்  உள்புறம் தெரிகிற பெரிய ப்ளாஸ்டிக் பை ஒன்றில் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களருகே ஒரு ப்ளாஸ்டிக் மடக்கு மேஜையின் மீது பக்கவாட்டில் பள்ளங்கள் கொண்ட ஆரஞ்சு நிற பத்து காலன் தண்ணீர் கூஜா ஒன்றிருந்தது; இரண்டு மைய அரசுக் காவலாளர்கள் ஒரு நீல நிறத் தயார் கூடாரத்தின் கீழே காவலாக நின்றனர். அந்தப் பெண்ணும், குழந்தையும் முகாம்களில் அமர நாம் வாங்கும் நாற்காலிகளோடு பிணைக்கப்பட்டிருந்தனர்.

அவன் தன்னைக் கொன்று கொண்டானா? நானும் என்னைக் கொன்று விடணுமா? இந்தச் சொற்கள் என் தலையில் தேனீக்கள் போலச் சுற்றிச் சுழன்றன.

***

ஒழித்துக் கட்டுகிற வெப்பத்தில் மைல் மைலாகச் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போகையில் மாதக்கணக்கில் இதுதான் தலைக்குள் ஓடியது.  ‘அவன் தற்கொலை செய்து கொண்டானா, நீயும் தற்கொலை செய்து கொள்ளணும்,’  இப்படியே வீட்டுக்கு வந்து சேரும்வரை சைக்கிளை மிதித்துக் கொண்டே இருந்தேன். இறுதியில் ஓரிடத்தில் நின்றேன், டெக்ஸஸ் மாநிலத்தில் ரோமா நகர் அருகே, ஒரு சங்கிலிக் கணு வேலியின் முன்னே, பாலைவனத்துப் புதர்க் குவியல் ஒன்றின் அருகே ஓய்வெடுக்கவென்று அமர்ந்தேன். என் கண்பார்வை இலக்கிழந்து நீந்தியது. முந்தைய ஊரில் என் தண்ணீர் பாட்டில்களை நிரப்ப மறந்து போயிருந்தேன். இங்கோ நூறு டிகிரிக்கு மேல் வெப்பம் தாக்கியது. நிழலே இல்லாத அந்த வெளியில் மரித்துப் போகப் போகிறேன் என்று நினைத்தேன். காற்று இல்லை, மேகங்கள் இல்லை, கார்களோ, ட்ரக்குகளோ இல்லை, அமெரிக்க அரசின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்புச் சுழலும் விளக்குகளும் தட்டுப்படவில்லை, தண்ணீர் இல்லை. எனக்கு தண்ணீர் வேண்டும். செத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். செத்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பதைப் பற்றி யோசிக்கிறேனே என்று என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டி இருந்தது. எழுந்து நின்று, மறுபடி சைக்கிளில் ஏறிப் பயணம் துவங்கினேன். சும்மா மிதிடா, மனுசா! அதை ஒரு பாட்டாகப் பாடினேன்: மிதிடா மனுசா, மிதிடா, வீடு வரை மிதி! அப்போது தடாலென்று கீழே விழுந்தேன், இந்த உலகத்தை விட்டுப் போயிருந்தேன். இல்லை, நான் இன்னும் சாகவில்லை, கடவுளே நன்றி. அதனால் நான் மறுபடி எழுந்தேன், சில மைல்கள் தாண்டியதும், ஒரு புதர் அடர்ந்த ஒதுக்குப் புறத்தில் நின்ற அமெரிக்க எல்லைப் பாதுகாவல் படையின் கவசம் போர்த்திய பிக் அப் ட்ரக்கின் ஜன்னலில் தட்டினேன். நான் ஏதும் கேட்கு முன்னரே, அதன் ட்ரைவர் என்னிடம் ஐஸ் போலக் குளிர்ந்த தண்ணீர் பாட்டில் ஒன்றைப் பயணியர் இருக்கையில் இருந்த குளிர்பெட்டியிலிருந்து எடுத்து நீட்டினார். நான் நிறுத்தாமல் குடித்து முடித்தேன். இன்னொன்றை எடுத்து நீட்டினார். அதையும் குடித்து முடித்தேன். மூன்றாவது பாட்டிலை நான் குடித்த போது நாங்கள் கொஞ்சம் ஏதாவது பேசி இருக்கலாம். நான் இப்போது சுதாரித்தேன். அவர் என்னிடம் நான்காவது பாட்டிலை நீட்டினார். அதுவும் ஐஸ் போலக் குளிர்ச்சி. எனக்குப் பார்வை திரும்பியது. நான் கேட்டேன்: எத்தனை வருடங்களாக இதைச் செய்கிறீர்கள்?

“அஞ்சு.”

முன்னால் ராணுவத்தில் இருந்தீர்களா?

“இல்லை, இதில் நேரே சேர்ந்தேன்.”

உங்களை மாதிரி ஒருத்தர் இதிலே ஏன் சேர்கிறார்?

“ஓ, எனக்குத் தெரியல்லை. இது பரபரப்பாக இருக்கும்னு நெனச்சேன்.”

இந்த வேலைல ஏதாவது நினைவுகள் மனசில தங்கற மாதிரி இருக்கா?

“இல்லை. அப்படி ஒண்ணும் நிஜமாவே இல்லை. சில சமயம் யாரோ ஒருத்தர் சொல்றது கொஞ்சம் நம்ம கிட்டே ஒட்டிகிட்டு இருக்கலாம்னு தோணறது.”

அவர் தயங்கினார்.

“நான் சொல்றது புரியுதா? இப்ப மாதிரி, நான் எப்பவும் நான் இங்கே கண்டு பிடிக்கற ஜனங்க கிட்டே பேசிக்கிட்டுதான் இருக்கேன். எப்படி இருக்காங்க, அவங்களோட பயணம் எப்படி இருந்தது. தெரியுதில்லையா, நாம் இப்பப் பேசற மாதிரிதான் அவங்க கிட்டேயும் பேசுவேன்.”

வழக்கமாக கதைகளில் பெரும்பாலானவை சாதாரணமாகத்தான் இருக்கும், என்றார். “ஒரு ஆள் சொன்னார், அவரோட அம்மா, மனைவி, மேல மூணு குழந்தைங்க எல்லாம் இங்கே வர்றப்ப இறந்து போய்ட்டாங்கன்னார். நான் அவர் கிட்டே கேட்டேன். “இதுக்கு அத்தனை மதிப்பு உண்டா?” அவர் சொன்னார், “இல்லவே இல்லை. அதுக்கு இது தக்கதே இல்லை. கடவுளே, இதெப்படி அத்தனை மதிப்புள்ளதா இருக்கும். எதுவுமே அத்தனை மதிப்புள்ளது இல்லை.” அவருடைய குழந்தைகள் ஒரு ஓடத்தில் ஆறு ஒன்றைக் கடந்தபோது இறந்திருந்தனர். அவருடைய மூன்று குழந்தைகளும். ரொம்ப நாள் முன்னால, ஒரு வருஷம் முன்னால, அவங்க எல்லாரையும் நாங்க இங்கே பிடிச்சிருந்தோம்.”

இந்த மாதிரி கதை ஒன்றைக் கேட்டால் அதை அவர் எப்படிக் கையாள்கிறார் என்று கேட்டேன். தான் வேலை செய்கிற இடத்தில் நடப்பதைப் பற்றி யாரிடமும் தான் பேசுவதில்லை என்று சொன்னார். “எங்களுக்கு இதைப் பத்திப் பேசணும்னா அதுக்கு சில பேரை அவங்க கொடுக்கறாங்க, வேணுமுன்னா நான் அவங்க கிட்டே பேசலாம், ஆனா இல்லை, நான் யார் கிட்டேயும் பேசறதில்ல.”

உங்க மனைவி கிட்டே கூடவா?

“இல்லை. நிஜமாவே இல்லை. குறைஞ்சது, வேலையைப் பத்தி பேசறதில்லை. நான் ஒரு மாதிரி எனக்குள்ளேயே எல்லாத்தியும் வச்சுக்கிடறேன்.”

அது எப்படி இருக்கு?

“அது பழகிப் போயிடுத்து. எனக்கு ஜிம்முக்குப் போகிறது பிடிக்கும், அப்படின்னா நிறையவே போகப் பிடிக்கும். அப்படித்தான் நான் எல்லாத்தையும் சமாளிக்கிறேன்னு நினைக்கிறேன். வலுவாக ஆகிறதாலெ, ஜிம்முக்குப் போகிறதால, அந்த மாதிரி.”

ஆனா உங்க மனைவி கிட்டே பேசறதே இல்லை, அப்படியா?

“நிஜமாவே இல்லைங்க!”

அந்தக் கதையைப் பத்தி எப்பவாவது திரும்ப நினைக்கிறீங்களா?

“சில நேரம் உண்டு. அதிகமா இல்ல. அது ரொம்ப நாள் முன்னெ நடந்தது. ஆனா சில நேரம் இதைப் பத்தி நினைக்கறப்ப-”

அவர் மேலும் பேச நான் காத்திருந்தேன்.

“நான் துக்கமாயிடறேன்னு நினைக்கிறேன்,” என்றார், “ஆனா ரொம்ப நேரம் அப்படி இருக்கறதில்ல.”

ஒரு பதினெட்டு சக்கர ட்ரக் கடந்து போயிற்று, அதிலிருந்து ஒரு ஹார்ன் சத்தம் எங்களை நோக்கி வீசப்பட்டது.

“இவங்கல்லாம் நல்ல மனுசங்க. எல்லையைத் தாண்டி வரவங்கள்ளெ நிறைய நல்ல மனுசங்க இருக்காங்க, அவங்க யாருக்கும் ஒரு கெடுதியும் நினைக்கறவங்க இல்ல. அவங்க யாரையும் காயப்படுத்த விரும்பறதில்லை, நானோ என் வேலையத்தான் செய்யறேன். உங்களுக்குத் தெரியுமே, சட்டத்தை அமல்படுத்தறேன். நிறைய பேர் நாங்க இந்த மக்களை வெறுக்கறோம்னு நினைக்கறாங்க, ஆனா அவங்க நம்மைப் போலத்தான் இருக்காங்க, ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்லை. எப்பவும் வந்து கிட்டே இருக்காங்க. இன்னிக்கே காலைல ரோட்லயே ரெண்டு கூட்டத்தைப் பிடிச்சோம். அவங்களைப் பிடிக்க அந்தப் புதர்க்காட்டுக்குள்ள கூடப் போக வேண்டி இருக்கலை.”

வீட்டில் இருந்து ஐநூறு மைல்களுக்குள்தான் இருந்தேன். என் பயணத்தில் இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி இருந்தது. டெக்ஸஸில் நியூ ஃபால்கன் என்ற ஊரின் அருகே ஒரு பெட்ரோல் நிலையத்தின் விற்பனையாளரான ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். அவருக்கு நீல நிறக் கண்கள், மென்மையான குரல், நான்கு குழந்தைகள். அவரிடம் ஒரு கோக் வாங்கினேன், அவர் அறுவடை துவங்குவதற்கு ஒரு வாரம் முன்னால் தன் இரண்டாவது குழந்தையை இழந்து விட்டதாகச் சொன்னார். “நாங்க உருளைக் கிழங்கு ஏத்தற லாரிகளை வச்சிருக்கோம்” என்றார். ”என் புருசன் எதிர்ல, அந்த லாரி கிட்டதான் அந்தப் பையனோட விபத்து நடந்தது. அவர் அந்த லாரியோட சில பாகங்களை பழுது பார்த்துகிட்டு இருந்தார். என் பையன் ஒரு பெல்ட்டைத் தொட்டான், அந்த பெல்ட்தான் உருளைக் கிழங்கை எல்லாம் லாரியிலேருந்து வெளியில கொட்டற பெல்ட். அவன் அதைத் தொட்டதுமே, அதுல மாட்டிக்கிட்டான்.” அவன் பெயர் மார்கரீட்டோ ஜூனியர். அவன் இறந்த போது அவனுக்கு எட்டு வயது.

“எட்டே வயசு,”அவர் சொன்னார்.

நாங்கள் எட்டு வயதானவர்களாக இருந்த போது, தகர டப்பிகளை உதைக்கிறது, திருடனும் பொலீஸ்காரனும் விளையாட்டு, ஜின் ரம்மி விளையாட்டு எல்லாத்தையும் பழைய கல் சுரங்கத்தில போய் விளையாடுவோம். அது நாங்க போன துவக்கப் பள்ளியிலேருந்து கீழே போற பாதையிலதான் இருந்தது. ஒரு சாயங்காலம் நீ தடுக்கிக் கீழே விழுந்தபோது, உன் உதடு கிழிந்து போயிருந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. 

“மார்கரீட்டோ வடக்கு டகோட்டாவுலதான் செத்துப் போனான்,” என்றார் அவர். நான் அங்கே அடித்த எதிர்காற்றை நினைத்தேன். “ஒருத்தரால உஷ்ணத்துலேருந்து பிழைச்சுட முடியும், ஆனால் சரியான மேலங்கியும், எரிபொருளும் இல்லாம வட டகோட்டாவோட குளிர்காலத்துல நம்மால பிழைக்க முடியாது,” என்றார். தன் பதினேழாவது வயதுலேருந்து ஒவ்வொரு வருடமும், தன் குடும்பத்தோடு வட டகோட்டாவுக்கு வசந்த காலத்தில் காரோட்டிச் சென்று, அங்கே உருளைக் கிழங்குகளை விதைத்து, அறுவடை செய்து, பிறகு விற்பனைக்குத் தயாராக்கி விட்டு, தட்பவெப்ப நிலை ஐஸ் போலக் குளிரத் தொடங்கியதும் திரும்பி வந்து விடுவார் என்று மிர்த்தலா காண்டு என்ற அந்தப் பெண்மணி சொன்னார். ”எனக்குக் குளிர்காலம் பிடிக்காது,” என்றார்.

வாயிற்கதவு கிணுகிணுத்தது; ஒரு வாடிக்கையாளர் உள்ளே வந்தார், பதினைந்து டாலர்களுக்கு இரண்டாவது பம்பில் பெட்ரோல் வேண்டும் எனக் கேட்டார். நாங்கள் மறுபடி தனியாக ஆனதும், நான் மிர்த்தலாவிடம் தன் மகனைப் பற்றி அவர் எதை இன்னும் அதிகம் நினைவு வைத்திருக்கிறார் என்று கேட்டேன். “அவன் வட டகோட்டாவை மிகவும் நேசித்தான் என்பதைத் தான் நினைவு வைத்திருப்பதாகச் சொன்னார். “டெக்ஸசுக்குத் திரும்பும் நேரம் வரும்போது, அவன் எப்போதும் எங்களிடம் கேட்பான், “நாம இங்கேயே இருக்கலாம, இங்கேயே இருந்துடலாமா?” நாங்கள் சொல்வோம், “எதுக்கு?” அதற்கு அவன் பதில் சொல்வான், “நான் என் நண்பர்களை ரொம்ப விரும்பறேன், அதனால.”  அதுக்கு நாங்க எப்போதுமே சொல்வோம், “நாம இங்கே குளிர்காலத்துல இருக்க முடியாது. ரொம்ப செலவாகும். நம்ம கிட்டே குளிர்காலத்துல தப்பிப் பிழைக்க வேண்டுகிற பணம் இல்லை.”

வேற என்ன?

மார்கரீட்டோ மரங்களின் நடுவே விளையாடுவதை மிக விரும்பினான் என்றார். “எப்பவாவது நீங்க டாப்பென் -ங்கற ஊர் பக்கம் போனீங்கன்னா,” பலமாநில நெடுஞ்சாலை எண் 94 இல் பிஸ்மார்க்குக்கும் ஜேம்ஸ்டௌனுக்கும் நடுவில் அது இருக்கு, “நீங்க அங்கே கொஞ்சம் நிறுத்தி அவனைப் போய்ப் பாருங்க.” நான் அதைச் செய்ய முயல்வேன் என்று சொன்னேன், ஆனால் எனக்குத் தெரியும் நான் அதை ஒருநாளும் செய்யப் போவதில்லை என்று. “அங்கே ஒரு அழகான கல்லறை இருக்கு.” என்றார். “அதுல நீல பெயிண்ட் பூசியிருக்கும்.”

ஐநூறு மைல்கள் தாண்டிய பிறகு, ஒரு வருடம் சாலைப் பயணத்தில் செலவழித்த பின்னர், அந்தக் கடைசி இரவு நெருங்குகையில் சூரிய அஸ்தமனம் சிவப்பாகவும், மஞ்சளாகவும் நேர்ந்தது. நான் ஃப்ரெட்ரிக்ஸ்பெர்க்கிலிருந்து கிளம்பி ஜான்ஸன் சிடி ஊடாக சைக்கிள் ஓட்டிப் போய், உனக்குப் பிடித்தமான அந்த ஆற்றின் பெயரைத் தாங்கிய மாநில பூங்காவில் இரவுக்குக் கூடாரம் அமைத்தேன். எல்லாமே பழகியவையாகத் தெரிந்தன: பிகான் மரங்கள், மர பிக்னிக் மேஜைகள், முகாமிடும் வெளிகளை மேலிருந்து பார்வையிட, சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட மேல்தள மேடையிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும், கரிய ரிப்பன் போன்ற ஆஸ்ஃபால்ட் பாதை, ஆறுக்கு அருகே, வாதுமை, சிகமோர், மற்றும் ஹாக்பெர்ரி மரங்களின் அடர்ந்த தோப்புக்குள் ஒளிவாக அமைக்கப்பட்டிருந்தது, பதினாறு வயதிருக்கையில், ஒரு இரவில், நான் வீட்டிலிருந்து நழுவி வெளியேறி, இந்த பார்வை மேடைக்கு காரை ஓட்டிச் சென்றேன். அன்று பௌர்ணமி நிலவு, அந்த நிலா பாய்ச்சிய ஒளி சுண்ணாம்புக் கல் மேடையில் விழுந்த போது அது பகல் போலவே தெரிந்தது. வீடு திரும்பும்போது, தப்பாமல், அங்கு இருந்த குறைவான நீர் ஓடும் பாதையைக் கடக்கும் போது என் காரில் ஒரு டயரில் காற்றுப் போய் அது தட்டையானது. அந்தச் சம்பவத்தை நினைக்கையில் நான் சிரித்தேன்: இரவு உணவுக்கு, என்னுடைய கடைசி பெட்டி மாகரோனியைச் சமைத்தேன். தலையிலணியும் விளக்கைக் கொண்டு இரவில் படித்தேன்.

ஜாக் கில்பர்ட் என்ற ஒரு கவிஞரின் கவிதையை இத்தனை மைல்கள் தூரத்துக்கும் என் சைக்கிளின் இருபுறம் தொங்கும் பைகளில் சுமந்து வந்திருந்தேன். கில்பர்ட் , இறந்து போன தன்னுடைய மனைவி மிச்சிகோவைப் பற்றி எழுதிய  “ஹைலைட்ஸ் அண்ட் இண்டர்ஸ்டிஸீஸ்” என்ற தலைப்பு கொண்ட அந்தக் கவிதையை நான் உரக்க ஒப்பிக்கும்போதெல்லாம், மிச்சிகோ என்ற அந்தப் பெயருக்குப் பதில் நான் கேட்டிருந்த, எனக்குத் தெரிந்திருந்த பல பெயர்களைச் சொல்வேன். அதை மிர்தலாவுக்குப் படித்துக் காட்டினேன். நியூ ஃபால்கன் என்ற ஊரில் டெக்ஸஸ் மாநிலத்தில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் அவரைச் சந்தித்திருந்தேன்.  ஆனால் அங்கு “மிச்சிகோ” என்ற பெயருக்குப் பதில் “மார்கரீட்டோ” என்று மாற்றிச் சொன்னேன். உன்னுடைய ஈமச்சடங்கில் நான் மறுபடி பேச முடியுமென்றால் இந்தக் கவிதையை நான் படிப்பேன், ஆனால் உனக்கு நினைவிருக்கும், அன்று நான் ஒரு தேய்வழக்கான கவிதையை ஒப்பித்தேன், ஏனெனில் நீ இறந்தபோது, நாம் மிக இளையவர்களாக இருந்தோம், வேறேதும் சொல்லத் தெரியாதிருந்தோம். முகாமிட்ட இடத்தில் நிலவு வானில் எழுவதைப் பார்த்து அமர்ந்திருந்த அன்று எனக்குத் தோன்றியது, உறங்குமுன் அந்தக் கவிதையை மறுபடி ஒரு முறை உரக்கப் படிக்கலாம் என்று:

நாம் நினைக்கிறோம் வாழ்வுகள் பெரும்பாலும் அசாதாரணமானவை,

துக்கமானவை என்று. திருமணத்தை நாம் குழந்தைகள், விடுமுறைகள்,

அவசர அவதிகள் என்று நினைவு கொள்கிறோம். அசாதாரணமான பகுதிகளாக.

சிறந்த கணங்களோ ஆனால், ஏதும் நிகழாத நேரங்கள்தான்.

தனிக் கவனம் இல்லாமலே ஓர் அம்மா குழந்தையைத்  தூக்கி

எடுத்து, வாலர் தெருவைக் கடந்து, மற்ற பெண்களுடன்

பேசியவண்ணம், அவளைச் சுமந்து போகிற மாதிரி.

அவள்  அவற்றை எல்லாம் நினைவில்

கொள்ள முடிந்தால் என்ன?

நினைவில் தங்குவனவற்றுக்கு இடையே நடக்கின்றன

நம் வாழ்க்கைகள். மிச்சிகோவோடு வழக்கமாக உண்ட

இரண்டாயிரம் காலை உணவு நேரங்களை நான்

இழந்து விட்டேன். அவளில்லாமல் பெரிதும்

நான் இழந்தவை நான் மறந்து விட்ட சாதாரண நிகழ்வுகளே.

உனக்குத் தெரியும், இந்த பெர்ட்னேலஸ் ஆற்றில் – புயல் அடித்துச் சில வாரங்கள் கழித்து, தண்ணீர் தெளிந்த பின் – நாம் நீந்துவது வழக்கம். உயர்நிலைப் பள்ளி வருடங்களில், ஒரு தடவை, எனக்கு நினைவிருக்கிறது, நாம் இங்கு உல்லாசமாய் உணவுண்டோம், தர்பூசணி, லே உருளை வறுவல்கள், மற்றும் வாட்டப்பட்ட விலா எலும்பு மாமிசங்கள்.  நீ ஒரு பிகான் மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறினாய், அங்கிருந்து கீழே உள்ள உலகத்தை நோக்கி உற்சாகமாய் கூவினாய், உரக்கக் கத்தினாய். யாருக்கும் உன்னோடு சேர்ந்து அங்கே போகத் தைரியம் இல்லை. அங்கு யாரெல்லாம் இருந்தார்கள் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் இப்போது, கடைசியில், நிலா ஆற்றின் மேலே தொங்குகிறது. அப்படித்தான் அது இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

***

Series Navigation<< தடக் குறிப்புகள்

One Reply to “தடக் குறிப்புகள் – 4”

  1. மொழி பெயர்ப்பு எனத் தோன்றாத வகையில் இயல்பாய் விரிகிறது. இழப்பு, வலி, வேதனை, புலம் பெயர்தல், அகதிகளெனத் தஞ்சமடைதல், வாழ்வதன் அபத்தமான விபரீதம் ஆகியவை பற்றிப் பேசினாலும், உணர்ச்சிகரமாக எழுதப்படாமலேயே துயர்களைக் கடத்திய விதம் சொற்களுக்கு அப்பாற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.