சொல்வனம் வழங்கும்… கிண்டில் புத்தக வெளியீடு

சொல்வனம் வெளியீடாக “வீடும் வெளியும்” நூல் கிடைக்கிறது.

எழுதியவர்: ச அனுக்ரஹா

புத்தகத்தை வாங்க:

முன்னுரைகளில் இருந்து சில நறுக்குகள்:

அ.முத்துலிங்கம்

இந்தத் தொகுப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் புதுமையை விரும்புபவன். நாலு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட தொகுப்பு. ’வீடும் வெளியும்’ என்ற தலைப்பின் கீழ் 11 கவிதைகள், இரண்டு சிறுகதைகள். ’நகரமும் நானும்’ என்ற பிரிவின் கீழ் 9 கவிதைகள், ஒரு சிறுகதை. ’அவர்களும் நானும்’ என்பதின் கீழ் 9 கவிதைகளும் இரண்டு சிறுகதைகளும். கடைசியாக ’மழையும் மற்றவையும்’ என்ற தலைப்பின் கீழ் 12 கவிதைகளுடன் ஒரு சிறுகதை.

இந்த தொகுப்பிலே காணப்பட்ட ஆறு சிறுகதைகளும் அவற்றின் அமைப்பிலும், புதுமையிலும் கவனத்தை ஈர்ப்பனவாகவே இருக்கின்றன. எல்லாக் கதைகளுமே வியப்பூட்டின; சிந்திக்க வைத்தன.

கவிதையும் சிறுகதையும் கலந்து கட்டப்பட்டிருக்கும் இந்தக் கதம்பத்தை நான் விரும்புவதற்கு காரணம் இதன் புதுமைதான். தொகுப்பில் காணப்படும் சித்திரங்களும், பன்முகத்திறமை கொண்ட ஆசிரியர் வரைந்தவைதான். கவிதையானாலும், சிறுகதையானாலும் அவை ஒரு புது செய்தியை வெளிப்படுத்துகின்றன.

மைத்ரேயன்

இந்தப் புத்தகத்தில் வெளியாகுபவை, பெரும்பாலும் சொல்வனம் இணையப் பத்திரிகையில் வெளி வந்தவை. தொகுப்பாகப் படித்த பின், இவை புத்தகமாக வெளிவர இத்தனை ஆண்டுகள் ஏன் ஆயின என்று கேட்கத் தோன்றியது. ச.அனுக்ரஹா அவர்களுடன் சுமார் பத்தாண்டுகள் பரிச்சயம் இருப்பதால், ஒரு முக்கியக் காரணத்தை மட்டும் யோசித்தேன். அவர் நிதானித்து, யோசித்து எதையும் செய்பவர் என்பது அது.

இந்தப் புத்தகத்தின் மையத்தில் இருக்கும் குணங்கள், தன்மைகள்- நிதானம், கவனம், ஆழ்தல். பொருட்கள், நிகழ்வுகள், மனிதர்கள் எல்லாமே ஊன்றிக் கவனிக்கப்பட்டு, தன்மையில் ஆழ்த்தப்பட்டு, ஆற்றிச் சலித்த பின் கிட்டும் முடிவுகளாக நமக்குத் தரப்படுகின்றன. சிலசமயம் நிச்சயமின்மை, சிலசமயம் கால-இட மயக்கம், சிலநேரம் நெட்டுயிர்ப்பு, சிலநேரம் எளிய கவனிப்புகளின் கிளர்ச்சி. அனேக நேரம் சொற்றொகுப்பில் கிட்டும் ரசவாதம்.

தான் கடந்து வந்த காலக்கட்டங்களை, அனுபவங்களால் தான் மாறிய விதங்களை இந்தப் பகுப்பில் அவர் அமைத்திருப்பது தற்செயலா, இல்லை அவரது வழக்கமான ஆழ்ந்த யோசிப்பின் விளைவா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கடப்பு நியதியை நான் இதில் கண்டேன்.

பத்தாண்டுகள் பொறுத்திருந்து விட்டு, இப்போதாவது ஒரு புத்தகத்தைத் தொகுக்கலாமா, இது தகுமா, நிற்குமா என்று யோசனையோடு இருக்கும் அனுக்ரஹா பொறுமைசாலி என்பதோடு, வேறொரு கால, தூல இயக்கத்தில் மனதைச் செலுத்தி இருப்பவர் என்பது இந்தப் புத்தகத்தில் தெரிய வரும்.

அமேசான் கிண்டில் மூலமாகக் கிடைக்கும் முந்தைய நூல் தொகுப்புகள்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.