கசடதபற – மின்னூல்கள்

1970களில் தீவிர இலக்கியச் சிற்றிதழ்களில் ஒன்றாக இருந்த ‘கசடதபற’, பல முன்னணிப் படைப்பாளர்களின் விளைநிலமாக விளங்கிய ஒன்று. வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஞானக்கூத்தன், அம்பை போன்றோரின் முக்கியமான பல படைப்புகள் ‘கசடதபற’வில் வெளியானவை. வெகுஜனப் பத்திரிகைகளுக்கு மாற்றாக தீவிர இலக்கியத்துக்காக இயங்கிய வெகு சில சிற்றிதழ்களில் ஒன்று இது. இந்த இதழின் பிரதிகளை, எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் பெரு முயற்சியெடுத்து அமேஸான் கிண்டில் மின்னூல்களாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்.

முறையாக ஆவணப்படுத்தப்படாமல், தொலைந்துபோன புத்தகங்கள், படைப்புகள், மேதைகளின் இசைக்கச்சேரிகள், திரைப்படங்கள், எழுத்தாளர்களின் நேர்காணல்கள் ஏராளம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் திரையிடப்பட்ட முதல் திரைப்படமான ‘சீதா’ (1934)வின் பிரதி இன்று நமக்குக் கிடைக்கவேயில்லை. இத்தனைக்கும் இது ப்ருத்விராஜ்கபூர் போன்ற பிரபலங்கள் நடித்து வெனிஸ் திரைவிழாவில் விருது பெற்ற திரைப்படம். பல ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைமேதைகளின் அரிய இசைப்பதிவுகள் முறையான கவனிப்பில்லாமல் கறையானுக்கு இரையாகியிருக்கின்றன.

சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் வல்ல வித்துவான்கள் பலர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்கள். பாடுவோரும் பாராட்டுவோரும் இல்லாமையால் வரவர அக்கீர்த்தனங்கள் மறைந்து போயின. ஆயிரக்கணக்கான தமிழ்க் கீர்த்தனங்கள் இந்நாட்டில் முன்பு வழங்கி வந்தன. கர்நாடக ராகங்களின் கதிக்கு மிகவும் பொருத்தமாக அவை அமைந்திருந்தன. அன்று நான் கேட்ட அவை, இன்று இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. “தமிழில் கீர்த்தனங்களே இல்லை” என்று கூறவும் சிலர் அஞ்சுவதில்லை. எல்லாம் சற்றேறக் குறைய அறுபது வருஷங்களில் நிகழ்ந்த மாறுபாடு. இந்த மாறுபாட்டின் வேகத்திலே லிங்கப்பையரின் சாகித்தியங்களும் அகப்பட்டு மறைந்தன.” என்று ‘என் சரித்திரத்தில்’ குறிப்பிடுகிறார் உ.வே.சாமிநாதையர்.

இந்தச் சூழலில்தான் விமலாதித்த மாமல்லனின் இந்தப்பணி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. விமலாதித்த மாமல்லனுக்கு இச்சிற்றிதழின் பிரதிகள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவை வெறும் நாற்பது வருடங்களுக்கு முன்னரே வெளியானவை. (நல்லனவற்றை இழப்பதில் நமக்கிருக்கும் வேகம் வியக்கத்தக்கது!) பல எழுத்தாள நண்பர்களையும் தொடர்பு கொண்டு தேடித்தேடிச் சேகரித்துக் கொண்டிருக்கிறார். (இந்தக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில் இதழ் 16 இன்னும் அவருக்குக் கிடைக்கவில்லை.) இன்னும் ஒரு பத்தாண்டுகள் இந்தப்பணி தள்ளிப்போயிருந்தால் இப்பிரதிகள் கிடைப்பதன் சாத்தியம் இன்னும் குறைந்திருக்கும். அவர் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்த இது ஒன்றே போதுமானதாக இருக்கிறது. இப்பிரதிகளை மின்னாக்கம் செய்வதும் அத்தனை எளிதான பணியில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் ஸ்கேன் செய்து, மின் எழுத்துருவுக்கு மாற்றி, பிழை திருத்தம் செய்து வெளியிட வேண்டும். ஒவ்வொரு பக்கத்துக்கும் ஏராளமான நேரம் செலவழிக்க வேண்டும். இத்தனையும் செய்து, இவற்றை மிகக்குறைந்த விலைக்கும் வெளியிடுகிறார். ஒரு இதழின் விலை ரூ.49. Kindle Unlimited கணக்கு இருந்தால் இவற்றைக் கடன் வாங்கியும் படிக்கலாம். இதுபோக ஒவ்வொரு இதழையும் குறுகிய காலத்துக்கு இலவமாகவும் தருகிறார்.

‘கசடதபற’ சிற்றிதழ்களுக்கு முன் ‘கவனம்’ சிற்றிதழின் முழுத்தொகுப்பையும் மின்னாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். பல தமிழ் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய புத்தகங்கள் மின் வடிவம் பெறவும் உதவி செய்து வருகிறார். விமலாதித்த மாமல்லனின் இந்தப் பணி நம் போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியது.

விமலாதித்த மாமல்லன்

கசடதபற இதழ்களின் மின்பிரதிகளை இங்கே வாங்கலாம்.

One Reply to “கசடதபற – மின்னூல்கள்”

  1. ஜமா வணக்கம், தங்களின் இந்த முயற்சியால் கசடதபற இதழ்களை பார்த்தேயிராத பலருக்கும் இவ்விதழ்களை வாசிக்க கிட்டிய பெரிய வாய்ப்பு. மிக்க நன்றி. நான் திரு. கோணங்கி அவர்கள் வெளியிட்ட கல்குதிரை இதழ்களுக்காக திரு. ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்புகொண்டேன், ஆனால் இதழ்கள் இல்லை என்று அறிந்தேன். கிடைத்தால் அவற்றை பதிப்பிப்பீர்களா.

    விஜி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.