ஆப்கானிஸ்தானின் தொடரும் துயரங்கள்

பி. எஸ். நரேந்திரன்

ஆப்கானிஸ்தான் மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. தாலிபான்கள் காபூலையும் கைப்பற்றி ஆஃப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாக ஆகி விட்டார்கள்.ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் கவிழ்ந்து வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் ஏறக்குறைய ஒரு ட்ரில்லியன் டாலர்கள் (1000 பில்லியன் டாலர்கள் அல்லது ஏகப்பட்ட ரூபாய்கள்) செலவழித்த அமெரிக்கா ஒரே இரவில் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து அவமானகரமான வகையில் வெளியேறிச் சென்றுவிட்டது. உலகின் மிக வலிமையான வல்லரசான, அத்தனை விதமான நவீன ஆயுதங்களையும் குவித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் இந்தத் தோல்வி உலக நாடுகளிடையே மிகப்பெரும் அவப்பெயரை பெற்றுத் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தோல்வியைக் குறித்து ஆதியோடு அந்தமாக ஆராயப் போகும் அமெரிக்கர்கள், அப்படி ஆராய்ந்தபிறகு ஏதாவதொரு கதையைச் சொல்லி அந்த ஆராய்ச்சியை மூலையில் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

இன்னொருபுறம், இரண்டாம் உலகப் போரைத் தவிர்த்து அமெரிக்கா நடத்திய அத்தனை போர்களும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. அது வடகொரியாவாக இருந்தாலும் சரி அல்லது வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் என அத்தனை போர்களிலும் அமெரிக்கா தோல்வியுடனேயே திரும்பியிருக்கிறது. வடகொரியாவில் போரை நடத்திக் கொண்டிருந்த அமெரிக்க ஜெனரல் வடகொரியர்களால் பிடிக்கப்பட்டு சிறைக்கைதியாக இரண்டு வருடம் இருந்த அவமானமும் அதில் அடக்கம். கொல்லப்பட்டு பிணமாக நாடு திரும்பும் அமெரிக்கப் போர்வீரர்களைக் கண்டு பொங்கியெழுந்த அமெரிக்கப் பொதுமக்கள் சில போர்களை நிறுத்தினார்கள். மற்றபடி அமெரிக்கா சென்றவிடமெல்லாம் துரதிருஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

அடிப்படையில் அமெரிக்காவின் எண்ணம் இம்மாதிரியான போர்களில் வெற்றி பெறுவதில் இருப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அதில் உண்மையும் இருக்கிறது. அவர்களின் குறிக்கோளெல்லாம் ஆயுத விற்பனையும், அந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் லாபகரமாக இயங்குவதும் மட்டும்தான். புதிய நாடுகளின் மீது படையெடுத்துச் செல்லும் அமெரிக்க ராணுவம் அந்தப் பகுதிகளில் தங்களின் நவீன ஆயுதங்களைப் பரிசீலனை செய்கிறது. அந்தப் பரீசிலனையின் முடிவுகளை பிற நாடுகளுக்குக் காட்டி விற்பனை செய்வது அதன் குறிக்கோள். எங்கள் ஆயுதம் எவ்வளவு வலிமையானது பார்த்தாயா? எப்படி கொத்தாக பலரைக் கொன்றோம் என்கிற தகவல்களைச் சொல்லி பிற நாடுகளின் மீது அந்த ஆயுதங்களைத் தலையில் கட்ட முயற்சி செய்வார்கள். ஆப்கானிஸ்தானிலும் அதுவேதான் நடந்தது.

இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவழித்த ஒரு ட்ரில்லியன் டாலர் பணம் அனைத்துமே மீண்டும் அமெரிக்காவிற்கே சென்றது என்கிற தகவல் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகளுக்கு பீரங்கிகளில் இருந்து சூயிங்கம் வரையில் அமெரிக்காவிலிருந்தே வந்து கொண்டிருந்தது. அமெரிக்கா ஒற்றை டாலரைக் கூட வெளி நாட்டுப் பொருட்கள் வாங்கச் செலவிடவில்லை. அமெரிக்க ஆயுதத் தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்கள் குவிந்தன. அங்கிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டன. அதுபோல அங்கிருந்த அமெரிக்க ராணுவ வீரனுக்குத் தேவையான் உணவு, உடை என எல்லாமுமே அமெரிக்காவிலிருந்தே சென்றது. அதன் தொடர்பான தொழிற்சாலைகள் பணத்தில் கொழித்தன.

இன்றைக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்க ராணுவம் அங்கிருந்த பெரும்பாலான ஆயுதங்களை, பீரங்கிகளை, ராணுவ கவச வாகனங்களை, ட்ரோன்களை அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பியிருப்பதனை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில் பிஸினஸ் முடிந்து விட்டது. தேவையான அளவுக்கு அமெரிக்க ஆயுதத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து பணம் சம்பாதித்துவிட்டன என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அவற்றைத் திரும்ப எடுத்துச் செல்லும் செலவு. அதனை யார் கொடுப்பார்கள்? போர்களைத் துவக்கிய அமெரிக்க அரசியல்வாதிகளோ அல்லது பில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்த ஆயுத நிறுவனங்களோ அவற்றைக் கொடுக்க மாட்டார்கள். இனி அந்த ஆயுதங்கள் எக்கேடு கெட்டால் எவனுக்கென்ன?

தாலிபான்கள் கைப்பற்றிய நவீன ஆயுதங்களை வைத்துக் கொண்டு அவர்கள் சும்மாயிருக்கப் போவதில்லை. அந்த ஆயுதங்கள் அவர்கள் வழியாக பாகிஸ்தானுக்குச் செல்லும். பாகிஸ்தான் அந்த ஆயுதங்களை இந்தியாவிற்கு எதிராகப் பிரயோகம் செய்யும். பின்னர் அதே அமெரிக்கர்கள் இந்தியர்களிடம் “அதைவிடவும்” நவீன ஆயுதங்கள் விற்பதனைக் குறித்து இந்தியாவிடம் பேரம் பேசுவார்கள். அமெரிக்காவுக்கு இது ஒரு பிஸினஸ் மட்டுமே. சாதாரண ஆப்கானியைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

எல்லா அமெரிக்கர்களும், அரசியல்வாதிகளும் அப்படியானவர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்க ஆயுத லாபி மிக வலிமையானது. அவர்களை எதிர்த்து யாரும் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடமாட்டார்கள். அமெரிக்கப் பொதுமக்கள் சோஷியல் மீடியாவில் பொங்கிவிட்டு அடங்கி அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அதற்குமேல் சாதாரண அமெரிக்கனால் ஒன்றும் செய்ய முடியாது என்பது நிதர்சனம்.

தாலிபான், பாகிஸ்தான், சீனக் கூட்டணி இந்தியாவிற்குப் பெரும் சவாலாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தியா அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. இருப்பினும் எதிர்வரும் காலம் கவலைக்குறிய காலம்தான்.

***

பிரிட்டிஷ்காரர்களின் முதலாம் ஆப்கன் போரைக் குறித்து சுருக்கமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வங்காளத்தில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் மெல்ல, மெல்ல இந்தியாவின் பிற பகுதிகளையும் கைப்பற்றி ஆள ஆரம்பித்தனர். தொடர்ந்த போர்களாலும், முகலாய அரசின் வீழ்ச்சியாலும் பாதிக்கப்பட்டிருந்த வட இந்தியப் பகுதிகளை மிக எளிதாக அவர்களால் கைப்பற்ற முடிந்தது. வடக்கில் பஞ்சாபைத் தவிர்த்து ஏறக்குறைய பெரும்பாலான பகுதிகள் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. பஞ்சாபில் பெரும் வீரரான மகாராஜா ரஞ்சித் சிங் ஆண்டுகொண்டிருந்தார். அவருடன் மோத விருப்பமில்லாத பிரிட்டிஷ்காரர்கள் அவருடன் உறவாடிக் கொண்டிருந்தார்கள். ரஞ்சித் சிங்கின் ஆட்சி ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் வரையில் பரவியிருந்தது. கடுமையான போர்க்குணம் கொண்ட ஆப்கானிகள் கூட அவருடன் மோதுவதனைத் தவிர்த்தார்கள் என்றாலும் ரஞ்சித் சிங்கிற்கு ஆப்கானிஸ்தான் எப்படிப்பட்ட நாடு என்பது நன்றாகத் தெரியும். எனவே அவரும் அமைதிகாத்து வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆப்கானிஸ்தானின் மீது படையெடுக்க ஆசை வந்தது. அதற்கு முக்கியக் காரணம் சர் வில்லியம் ஹே-மக்னாக்டென் (1793-1841). 

இந்த சர் வில்லியம் ஹே-மக்னாக்டென் ஒரு மெத்தப்படித்த மேதாவி. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கியப் பதவியில் இருந்தவர். அதாகப்பட்டது கவர்னர் ஜெனரலுக்கு (ஆக்லண்ட்) ஆலோசகர். பிரிட்டிஷ்காரர்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆளாவிட்டால் ரஷ்யா அதனைப் பிடித்துவிடும். அதற்குப் பின்னர் நேராக இந்தியாவுக்குத்தான் வருவார்கள் என்றார் மக்னாக்டென். புகழ்பெற்ற பிரிட்டிஷ் உளவாளியான சர் அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் (1805-41) ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யா வரைக்கும் சென்று உளவு பார்த்துவிட்டு வந்திருந்தார். ரஷ்யாவுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கலாம் என்றாலும் அதுகுறித்து வெளியில் எதுவும் தெரியவில்லை.

(சர் அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் ஒரு சுவாரசியமான மனிதர். இந்தியாவிலிருந்து காபூல் வழியாக புகாராவரையில் சென்று ரஷ்யர்களை உளவு பார்த்துவிட்டு வந்ததைக் குறித்தான அவரது புத்தகம் இன்றைக்கும் படிக்கச் சுவையானது. காபூலில் ஒரு ஆப்கானி பெண்ணைக் காப்பாற்றித் தன் வீட்டில் வைத்திருந்ததற்காக ஆப்கானிகள் அவரைத் துண்டு, துண்டாக வெட்டி மரக்கிளைகளில் தொங்கவிட்டு விட்டார்கள். விருப்பமிருப்பவர்கள் பர்ன்ஸின் புத்தகத்தைப் படிக்க சிபாரிசிக்கிறேன். அது ஒரு தகவல் சுரங்கம். தேடிப்பார்ப்பவர்கள் கண்டடைவார்கள். அவருடைய “Travels into Bukhara” ஒரு அருமையான புத்தகம். வரலாற்றில் ஆர்வமுடையவர்களுக்குப் பிடிக்கக்கூடும்.)

அந்த காலகட்டத்தில் தோஸ்த் முகமத் என்பவர் ஆப்கானிஸ்தானை காபூலில் இருந்து ஆண்டு கொண்டிருந்தார். என்ன காரணத்தாலோ அந்த தோஸ்த் முகமதின் மீது வெறுப்பு கொண்ட வில்லியம் மக்னாட்க்டென், ஆக்லண்ட்டிடம் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கோள் மூட்டிக் கொண்டிருந்தார். தோஸ்த் முகமதை பிரிட்டிஷ்காரர்கள் எதிரியாகப் பாவிக்கவேண்டும். அவரை நீக்கிவிட்டு, அவரது எதிரியான ஷா-சுஜாவை ஆப்கானிய அரசராக நியமிக்க வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லுகிறார்.

அத்துடன் நில்லாமல் ஆப்கானிஸ்தானை எப்படிப் பிடிப்பது என்பதற்கான ஆவணங்களையும் தயார் செய்து ஆக்லண்டுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் அங்கிருந்த பிரிட்டிஷ் உளவாளிகள் ஆப்கானிஸ்தானில் எல்லாம் அமைதியாக இருக்கிறது. எனவே அதன் மீது படையெடுக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள் எனத் தகவல் அனுப்பி வைக்கின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானிய படையெடுப்புக்கு உதவுமாறு ரஞ்சித் சிங்கிடமும் வேண்டுகோள் விடுக்கிறார் மக்னாக்டென். ஆச்சரியப்பட்டுப் போன மகாராஜா ரஞ்சித் சிங் அந்த எண்ணத்தைக் கைவிடும்படி எடுத்துச் சொல்லுகிறார். அதில் இருக்கும் ஆபத்துக்களை விளக்குகிறார். ஆனாலும் மக்னாக்டென் பிடிவாதமாக ஆப்கானிஸ்தானின் மீது படையெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

“ஆப்கானிஸ்தானுக்குள் உள்ளே நுழைவது சுலபம். ஆனால் அதிலிருந்து எப்படி வெளியே வருவீர்கள்?” எனக் கேள்வி கேட்டுவிட்டு பட்டும்படாமலும் இருக்கிறார் ரஞ்சித் சிங்.

அவர் கேட்டதிலும் நியாயம் இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய ஒரே வழி கைபர் கணவாய்தான். அந்தக் கணவாயின் இருபுறமும் மலைகளும் குன்றுகளும் இருக்கின்றன. அந்தக் குன்றுப்பகுதியிலிருந்து எவரேனும் தாக்குதல் தொடுத்தால் கணவாயில் செல்லும் படைகளை துவம்சம் செய்துவிடலாம். ஆனானப்பட்ட முகலாய அரசர் அக்பர் கூட அந்த இடத்தில் சிக்கித் தவித்தார். பின்னர் மலைகளுக்குப் படைகளை அனுப்பி ஏகப்பட்ட உயிர்ச்சேதங்களுக்குப் பின்னர் தப்பிய வரலாறு இருக்கிறது.

மேற்படி இந்த ஷா-ஷுஜாவிடம்தான் கோஹினூர் வைரம் இருந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து தோஸ்த் முகமதால் விரட்டியடிக்கப்பட்ட ஷா-ஷுஜா குடும்பத்துடன் அங்கிருந்து தப்பி பஞ்சாபிற்கு வந்து மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் அடைக்கலமானார். அவரிடமிருந்து கோஹினூரைப் பிடுங்கிக் கொண்ட ரஞ்சித் சிங், பின்னர் அவரை சிறையில் அடைத்து வைத்தார். இருப்பினும் ஷா-ஷுஜா சிறையிலிருந்து தப்பி ஓடினார். பின்னர் சர் வில்லியம் மெக்னாக்டன் ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்துச் செல்கையில் அவருடன் கூடச் சென்றார் ஷுஜா. அவரை எப்படியாவது ஆப்கானிஸ்தான அரியணையில் அமர்த்துவது என்கிற நோக்கத்துடன் இருந்தார் மெக்னாக்டன். இருப்பினும் காபூலில் பிரிட்டிஷ் படைகளின் தோல்விக்குப் பிறகு தோஸ்த் முகமதின் ஆட்கள் அவரைக் கொலை செய்துவிட்டார்கள்.

அதற்கும் மேலாக ஆப்கானிஸ்தான் ஒரு பாலைவனம். அங்கிருந்து காபூல் போய்ச் சேரும் வரையில் குடி நீருக்குப் பிரச்சினை இருக்கும். அதற்கான முன்னேற்பாடுகளையெல்லாம் செய்யாமல் போனால் தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு சாக வேண்டியதுதான். இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்ஸாண்டரே கூட இந்தப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் தவித்துப் போனவர்தான். தண்ணீருக்கு மேலே உணவு கிடைப்பது குதிரைக் கொம்பு. இன்னொருபக்கம் குளிர் வாட்டியெடுக்கும். சரியான பாதைகள் இல்லை…இன்னபிற….

அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்காத மக்னாக்டென் கவர்னர் ஜெனரலை சரிக்கட்டி ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்துப் போனார். அந்தப் படையெடுப்பில் நிகழ்ந்த கோரங்கள் படிப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைப்பவை. கிழட்டு மேஜர் ஜெனரல் வில்லியம் எல்பின்ஸ்டன் தலைமையில் ஆப்கானிஸ்தானின் மீது பிரிட்டிஷ்காரர்களின் முதலாம் ஆப்கன் போர் பெரும் தோல்வியில் முடிவடைந்தது மட்டுமல்லாமல், அங்கு சென்ற படைவீரர்கள், அவர்களின் குடும்பங்கள் என அத்தனைபேர்களும் உயிரிழந்தார்கள். பிடிபட்டவர்கள் புகாரா சந்தையில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்…அதையெல்லாம் எழுதினால் ஒரு புத்தகமே எழுதவேண்டியிருக்கும்.

மேஜர் ஜெனரல் வில்லியம் எல்பின்ஸ்டன் இந்தியர்கள் மீது, இந்தியப் படைவீரர்கள் மீது வெறுப்பு கொண்ட ஒரு மனிதர். இந்தியப்படைவீரர்களை “நீக்ரோக்கள்” என்று அழைத்து மகிழ்ந்த ஆசாமி. இந்த மாதிரியான போரினை நடத்த முற்றிலும் தகுதியற்ற ஒரு மனிதர். மக்னாக்டென் சிபாரிசில் படைத்தலைவராக ஆன அந்த ஆசாமியால் பிரிட்டிஷ்காரர்கள் படுதோல்வி அடைந்தார்கள். காபூலில் இருந்து தப்பித் திரும்பி வரும் வழியில் போர்க்காயங்களாலும், பேதியாலும் ஜெனரல் வில்லியம் எல்பின்ஸ்டன் இறந்து போனார்.

மக்னாக்டென்னும் தப்பவில்லை. காபூலில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ்காரர்கள் ஆப்கானிகளுடன் சமாதானம் பேச விழைந்தார்கள். ராணுவ முகாமுக்கு சிறிது தொலைவில் ஆப்கானிய அக்பர்கானுடன் சமாதானம் பேசச் சென்ற மக்னாக்டென்னை அக்பர்கான் கொலை செய்தான். மக்னாக்டென்னின் பேராசையும், கண்மூடித்தனமான முட்டாள்தனமும் அவரை பலி கொண்டது.

அதன் பிறகு பிரிட்டிஷ் படைகள் சின்னாபின்னமாகின. அங்கிருந்து உயிருடன் திரும்பி வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

***

பிரிட்டிஷ் உளவாளியான அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் மிகுந்த துடிப்புள்ளதொரு இளைஞர். பல மொழிகளைப் பேசும் திறமை கொண்டவரான அவரை உயர்பதவிகள் தேடிவந்தன. ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் இரண்டு முறை பயணம் செய்து (1830-32 மற்றும் 1836-38) கிழக்கிந்திய கம்பெனிக்காக உளவு வேலைகளைத் திறம்படச் செய்தார். அவரது இரண்டாவது பயணத்தின் போது ரஷ்யர்கள் ஆப்கானிஸ்தானை ஆண்ட தோஸ்த் முகமதுடன் நட்பு பாராட்ட விழைந்து கொண்டிருப்பதனைக் காண்கிறார். அப்படியான நட்புறவு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகிக்கிற பர்ன்ஸ், தோஸ்த் முகமதுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என கல்கத்தாவிலிருந்த கவர்னர் ஜெனரல் ஆக்லண்டிற்குத் தெரிவிக்கிறார்.

ஆனால் அவரது ஆலோசனையை நிராகரிக்கிற ஆக்லண்ட், எளிதாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியவரான ஷா-ஷுஜாவை ஆதரிக்கிறார். எனவே வேறு வழியின்றி அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் ஆக்லண்ட் மற்றும் சர் வில்லியம் மெக்னாக்டனின் திட்டத்திற்கு உடன்படுகிறார். பர்ன்ஸ் உதாசீனப்படுத்தப்பட்டு அவரது திறமைகள் அனைத்தும் உபயோகமின்றிப் போயின. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தன்னை ஒரு முக்கியஸ்தராக உயர்த்திக் கொண்ட அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் பின்னர் கொலை செய்யப்பட்டு இறந்து போனார். 

அலெக்ஸாண்டர் பர்ன்ஸின் வாழ்க்கையில் இருந்த இன்னொரு முக்கியமான நபர் அவரது முன்ஷியான (செகரட்டரி) மோகன்லால் காஷ்மீரி. பர்ன்ஸின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, அவரது வலதுகரம் போலச் செயல்பட்டவர் அவர். அவர்களிருவரும் சேர்ந்தே ஆப்கானிஸ்தானுக்கும், மத்திய ஆசியாவிற்குப் பயணம் செய்தார்கள். மிகுந்த புத்திசாலியான மோகன்லால் காஷ்மீரி பல மொழிகள் அறிந்தவர். ஆங்கிலத்துடன், உர்தூ, காஷ்மீரி மற்றும் பாரசீக மொழிகள் அறிந்த மோகன்லால், அலெக்ஸாண்டர் பர்ன்ஸுடன் புகாரா வரையில் பயணம் செய்தார். 

1839-ஆம் வருடம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்துச் செல்கையில் அந்தப் படைகளுடன் சென்ற அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் தன்னுடைய உளவுத்துறை அதிகாரியாக மோகன்லால் காஷ்மீரியையும் கூடவே அழைத்துச் சென்றார். துரதிருஷ்டவசமாக மோகன்லாலின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட பர்ன்ஸ் அதன் காரணமாக பரிதாபமாகக் கொலையுண்டு இறந்துவிட்டார்.

காபூலில் தோற்கடிக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முக்கியஸ்தர்கள் பலரையும் ஆப்கானிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக மோகன்லால் பலரிடமிருந்தும் ஏராளமாகக் கடன் வாங்கினார். அதன் மூலம் பல பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும், மோகன்லால் வாங்கிய கடனை எவரும் திருப்பித்தரவில்லை. அவர் வாங்கிய 79,496 ரூபாய்  (1800களில் அது மிகப் பெரிய தொகை) கடனை இறுதிவரை அவரால் திரும்பச் செலுத்த இயலவில்லை. கடன் தொல்லையால் அவதிப்பட்ட மோகன்லால் பிரிட்டனுக்குப் போய் கிழக்கிந்திய கம்பெனியின் உயரதிகாரிகளைச் சந்தித்தும் எதுவும் நடக்கவில்லை. இங்கிலாந்து அரசி விக்டோரியாவையும் சந்திக்கிறார் மோகன்லால். ஆனாலும் எவரும் பணம் தர மறுக்கிறார்கள். 

பின்னர் கொல்லப்பட்ட அலெக்ஸாண்டர் பர்ன்ஸின் குடும்பத்தைச் சந்திக்கிற மோகன்லால் அவர்களிடம் பர்ன்ஸ் எழுதிய குறிப்புகளை ஒப்படைக்கிறார். பின்னர் அதனையே ஒரு புத்தகமாகவும் ப்ரிட்டனில்  வெளியிடுகிற மோகன்லால் சொந்தமாக தோஸ்த் முகமது பற்றிய 900 பக்க வாழ்க்கை வரலாற்றையும் எழுதி வெளியிடுகிறார். இறுதிவரை ஆப்கானிஸ்தானில் அவர் பட்ட கடனின் துயரம் அவரை விரட்டிக் கொண்டே இருந்தது. அலெக்ஸாண்டர் பர்ன்ஸைக் கொண்டாடுகிற வெள்ளைக்காரர்கள் அவருக்கு இணையானவராக இருந்த மோகன்லாலை முற்றிலும் உதாசீனப்படுத்திப் புறக்கணித்தார்கள்.

***

முதலாவது பிரிட்டிஷ்-ஆப்கானிஸ்தானத்துப் போர் இவ்வாறு பெரும் தோல்வியில் முடிந்தது. ஏறக்குறைய 60,000 பிரிட்டிஷ் துருப்புகள், அதில் 90 சதவீதம் இந்தியர்கள், கொல்லப்பட்டார்கள். எஞ்சியவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

அங்கிருந்து பின்வாங்கிச் சென்ற பிரிட்டிஷ் படைகள் பெரும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளானார்கள். உணவின்றி இறந்தவர்கள் ஒருபுறமென்றால், ஆப்கானிஸ்தானத்துக் குளிரில் விறைத்து இறந்தவர்கள் இன்னும் பலர். இறுதியில் சில நூறு பேர்கள் மட்டுமே ஜலாலாபாத் நகரை வந்தடைந்தார்கள்.

பின் வாங்கிச் சென்ற பிரிட்டிஷ் படையினரின் துயரத்தைக் குறித்து லேடி சாலே போன்றவர்கள் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் பலர் அந்தக் கொடூரங்களைக் குறித்துப் பல குறிப்புகளை எழுதிச் சென்றிருக்கிறார்கள். ஒரே உதாரணத்தை மட்டும் இங்கு பார்ப்போம்:

“இடையறாது தொடர்ந்து குண்டு மழையின் காரணமாக இரவு ஒன்பது மணியளவில் எஞ்சியிருப்பவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் அல்லது பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்படுவார்கள் என்னும் நிலைமை உருவாகியது. இடைவிடாமல் தொடர்ந்து நடந்ததின் காரணமாக படையினர்களில் பலர் பசியாலும், தாகத்தாலும் பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். ஆப்கானிகள் பிரிட்டிஷ் படையினரை இருபத்து நான்கு மணிநேரமும் பின் தொடர்ந்து விலங்குகளைப் போல அவர்களை வேட்டையாடிக் கொன்று கொண்டிருந்தார்கள்.

அவர்களிடமிருந்து தப்புவதற்காக நிற்காமல் செல்வது என்கிற முடிவு எடுக்கப்பட்டு அனைவரும் பின்வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். மலைகளின் நடுவில் இருக்கும் கணவாய்களின் துவக்கத்தில் முள் மரங்களால் ஆன ஆறடி உயர வேலிகள் போடப்பட்டிருந்தன. அந்த முள்வேலிகளை வெறும் கையால் பிடுங்க முயன்றவர்களின் கைகளில் ரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அவ்வாறானவர்கள் துல்லியமாகக் குறிவைக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். அங்கிருந்து தப்பியவர்கள் மிகச் சிலரே.

அவ்வாறு அங்கிருந்து தப்ப முயன்று முடியாமல் போனவர்களில் ஒருவரான சிப்பாய் சீதாராம் கீழ்க்கண்ட குறிப்பினை விட்டுச் சென்றிருக்கிறார்.

‘ஜெனரல் சாகிப் அந்த இடத்திலிருந்து சென்றபிறகு படையணிகளிடையே ஒழுங்கு குறைந்தது…இதன் காரணமாக ஆப்கானிகள் எங்களை மிக எளிதாகத் தாக்க ஆரம்பித்தார்கள்… எங்களின் சிப்பாய் அணியிலிருந்த சிலர் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரிகளிடம் சென்று சரணடைந்தார்கள்… இப்படியாக என்னுடைய ரெஜிமண்டிலிருந்த பலர் காணாமல் போனார்கள். நான் ஐரோப்பிய சிப்பாய்களின் ரெஜிமெண்ட்டுடன் என்னை இணைத்துக் கொண்டேன். அப்படி அவர்களுடன் ஒட்டிக் கொண்டதால் என்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும் என நான் நம்பினேன்…

ஆனால் அந்தோ!… யாரால் விதியை வெல்ல முடியும்? சாலையில் எடுத்து வைத்த எங்களின் ஒவ்வொரு அடியிலும் நாங்கள் பலரை இழந்து கொண்டிருந்தோம்… முன்புறமிருந்தும், பின்புறமிருந்தும், பக்கவாட்டிலிருந்தும் மட்டும் நாங்கள் தாக்கப்படவில்லை. மலைகளின் உச்சியிலிருந்தும் எங்களைத் தாக்கிக் கொன்றார்கள்… உண்மையில் அது நரகமேதான். அந்த பயங்கரத்தை வார்த்தைகளால் என்னால் விளக்கவே இயலாது… இறுதியில் சாலையை மறித்துக் கட்டப்பட்டிருந்த ஒரு சுவற்றினை நாங்கள் வந்தடைந்தோம்… அதனை உடைக்கும் முயற்சியில் இருந்த எங்களின் மொத்தக் குழுவும் அழிக்கப்பட்டு விட்டது… எங்களின் சிப்பாய்கள் கடவுளைப் போல தீரத்துடன் போரிட்டார்கள் என்றாலும் எண்ணிக்கையில் அதிகமிருந்த எதிரி எங்களை எளிதாக வெல்ல முடிந்தது… அந்த இடத்தில் ஒரு துப்பாக்கி குண்டு என் தலையில் தாக்கியது…’

சிப்பாய் சீதாராம் தலையில் பட்ட காயத்தின் காரணமாக மயங்கிக் கீழே விழுந்து விட்டார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகிற அவர், தான் ஒரு ஒரு குதிரையின் மீது குறுக்காக வைத்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பதனைக் காண்கிறார். அந்தக் குதிரை மிக வேகமாக காபூலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது… என்னை ஒரு அடிமையாக விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதினை நான் உணர்ந்து கொண்டேன்… புஷ்த்து மொயிலும் எனது மொழியிலும் என்னைக் சுட்டுக் கொன்றுவிடும்படி அல்லது கழுத்தை அறுத்துக் கொல்லும்படி நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டேன்… ஆனால் என்னைப் பிடித்தவன் நான் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்காவிட்டால் அதே இடத்தில் என்னை ஒரு முஸ்லிமாக மதமாற்றம் செய்துவிடுவதாக மிரட்டினான்…

குதிரை வேகமாக காபூலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது… அந்தச் சாலையில் இருந்த பயங்கரங்களை என்னால் விவரிக்கவே இயலாது… அடர்ந்த பனியின் அடியிலிருந்து கைகளும், கால்களும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தன… ஹிந்துஸ்தானிகளும், ஐரோப்பியர்களும் அரைகுறையாக பனியில் புதையுண்டு கிடந்தார்கள்… அந்தக் காட்சிகளை நான் உயிருடன் இருக்கும்வரையில் மறக்கவே இயலாது…

போரிலிருந்து பின்வாங்கித் தப்பிச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் படைகளில் தப்பிப் பிழைத்தவர்கள் மிகச் சிலரே. டாக்டர் ப்ரைடன் என்பவரும் அவர்களில் ஒருவர். ‘அங்கு நிலவிய குழப்பம் மிகப் பயங்கரமானது’ என நினைவு கூர்கிறார் ப்ரைடன்.

‘…நில்லு…நில்லு…படையணியுடன் சேர்ந்து நட…என்கிற கூச்சல் எங்கினும் எழுந்து கொண்டிருந்தது….கணவாயைத் தாண்டியதும் மிகச் சிரமப்பட்டு மீண்டும் படையணியுடன் இணைந்து, அவர்களின் முன்னால் நடக்க ஆரம்பித்தேன்…இருட்டில் சிறிது தூரம் நாங்கள் நடந்த பிறகு நாற்புறமிருந்தும் சூழப்பட்டோம்….இந்த நேரத்தில் என்னுடைய வேலைக்காரன் என்னிடம் ஓடிவந்து தான் காயம்பட்டிருப்பதாகச் சொன்னான்… தன்னுடைய குதிரையை இழந்திருந்த அவன் தன்னையும் என்னுடன் அழைத்துச் செல்லும்படி கெஞ்சிக் கேட்டு கொண்டான்… அதனைச் செய்வதற்கு முன்னர் ஆப்கானி ஒருவன் தன் வாளினைக் கொண்டு என் தலையில் வெட்டினான்… நான் என்னிடமிருந்த ஒரு புத்தகத்தால் தடுத்திருக்காவிட்டால் என் தலை தனியாக வெட்டப்பட்டிருக்கும்… என் தலையிலிருந்து ஒரு சிறிய அளவிலான எலும்புத் துண்டு வெட்டப்பட்டு நான் ஏறக்குறைய மயக்க நிலையை அடைந்தேன்…

குதிரையின் கீழிருந்து முழங்காலில் நிற்க முயற்சி செய்கையில் இன்னொரு வெட்டு அதே வாளில் இருந்து வருவதனைக் கவனித்தேன்… அதனை என் வாளினால் தடுக்க முயல்கையில் என்னை வெட்ட வந்தவனின் விரல்கள் வெட்டுப்பட்டிருக்க வேண்டும்… அவன் அங்கிருந்து உடனடியாகத் தப்பி ஓடினான்… அவன் தலையிலிருந்த குல்லா கீழே விழுந்துவிட்டது… என்னுடைய வேலைக்காரன் இறந்துவிட்டான்… நீண்ட காலமாக என்னுடன் இருந்தவன் அவன்… தடுமாற்றத்துடன் மீண்டும் படையணிகளுடன் சேர்ந்தேன்… கணவாயைக் கடக்க எல்லோரும் மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கையில் மலை மீதிருந்து கீழே ஓடிவந்த ஆப்கானி ஒருவன் எனது பின்புறத்திலிருந்து எனது தோளினை வெட்டினான்….’

மிக மோசமாகக் காயம் பட்ட டாக்டர்.ப்ரைடன் முன்னால் சென்று கொண்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவரின் குதிரையின் வார்களைப் பிடித்துத் தொங்கியபடி அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார். வழியெங்கும் இறந்து கிடந்த சிப்பாய்களின் உடல்களைத் தாண்டி அவரை அந்தக் குதிரை இழுத்துச் சென்று கொண்டிருந்தது… வழியில் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உடையெங்கும் ரத்தத்துடன் ஏறக்குறைய இறக்கும் தருவாயிலிருந்த சிப்பாய் ஒருவன் டாக்டர் ப்ரைடனின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி அவருக்கு தனது குதிரையைக் கொடுக்கிறான்… யாரும் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் நீங்கள் இந்தக் குதிரையை எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லுகிறான் அவன்… அவனுக்கு நன்றி சொல்லுகிற ப்ரைடன் அந்தக் குதிரையில் ஏறி இருளில் விரைந்து செல்கிறார்…”

பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கிச் செல்கையில் ஆப்கானிகளின் கையால் அடைந்த துயரங்களின் ஒரு சிறு துளி இது. ஆர்வமுள்ளோர் இணையத்தில் தேடிப்படித்துக் கொள்க.

***

ஆப்கானிஸ்தான் உலக நாடுகளின் சவக்குழி என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமான ஒன்று. ஆனானப்பட்ட அமெரிக்கர்களும், ப்ரிட்டிஷ்காரர்களும் மிகுந்த விலைகொடுத்து அதனை உணர்ந்து கொண்டார்கள்.

இப்போது சீனாவின் முறை வந்திருக்கிறது. இனிவரும் காலம் சுவாரசியமான ஒன்றாக இருக்கப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை.

***

One Reply to “ஆப்கானிஸ்தானின் தொடரும் துயரங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.