ஆபரேஷன் அணில்

வழக்கம் போல ஞாயிறன்று காலையில் ஓட்ட பயிற்சிக்கு செல்வது போலத்தான் அந்த ஞாயிறும் சென்றேன்.

வார நாட்களில், அலுவலக வேலையை முடித்தபின் மாலையில் சில நாள் நடை, சில நாள் ஓட்டம் என்று செல்வேன். ஏப்ரல் மே மாதங்களில் இரவு எட்டு வரைக்கும் டெக்ஸாஸில் வெய்யில் அடித்தாலும் வேறு வழி இல்லாமல் தான் மாலையில் நடை பயிற்சிக்கு செல்வேன். வார நாட்களில் காலை வேளையில் நடை பயிற்சிக்கு சென்று வந்த பின் அலுவலக பணி துவங்குவது என்பது ரயிலை பிடிக்க செல்லும் பதற்றத்தை தரும் என்பதால் வெய்யில் சுட்டாலும் பரவாயில்லை என்று மாலையில்  செல்வதை வழக்கமாக கொண்டேன்.  

சனி மற்றும் ஞாயிறன்று மட்டும் காலையில் செல்வேன். எங்கள் குடியிருப்பின் உள்ளேயே ஒரு செயற்கை ஏரி உண்டு. அந்த ஏரியை சுற்றித்தான் நான் நடப்பதும், ஓடுவதும் வழக்கம். வார நாட்களில் நடை பயில்வோர், சைக்கிள் விடுவோர், ஓட்ட பயிற்சி செய்வோர் , தத்தம் செல்ல நாய்குட்டிகளை நடைபயில அழைத்து வருவோர், விளையாடும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் என்று நல்ல கூட்டம் இருக்கும்.  சனி ஞாயிறன்று காலையில் கூட்டம் மிக குறைவாகவே  இருக்கும். காலையில் வரும் சூரிய ஒளியில் ஓட்ட பயிற்சி மேற்கொள்வோர், அந்த குறிப்பிட்ட நேரத்தில் வெளியே உலாத்த தம் நாய்க்ளை பழக்கியுள்ளோர் என்று இவர்கள் மட்டுமே, ஏழு எட்டு பேரை  தான் நான் இது வரை பார்த்துள்ளேன். 

ஏரியின் ஒரு சுற்று 1.6 மைல். அதிலும் ஒரு புறம் ஏரியின் மூக்கு போல ஒரு சின்ன கால்வாய் பிரியும். முதல்முறை பார்த்தபோது சற்று அதிர்வாகத்தான் இருந்தது எனக்கு, ஏரிக்கு சுற்று சுவரோ, வலை தடுப்போ இல்லாதது கண்டு. நடக்கும் பாதையிலிருந்து சாய்வாக தொடங்கும் புல்தரையில் இறங்கினால் ஒரு நாலு அடி தூரத்தில் தான் ஏரி. அரைவாசி சுற்றுதான் இப்படி, மீதி அரைவாசி சுற்று தரையில் இருந்து நேராக ஏரி தண்ணீரில் நாம் கால் வைக்கும் தொலைவில் இருக்கும். வினோதம் என்னவென்றால் ஏரியின் மூக்கு பகுதிக்கு மட்டும் 3 அடி தடுப்பு சுவர் உண்டு.

அங்கு நின்று தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு, ஏரியில் மிதக்கும் வாத்துகளுக்கு ரொட்டி துண்டுகளை வீசி வேடிக்கை காட்டுவார்கள்.

ஏரியை சுற்றிலும் பத்தடிக்கு ஒரு மரம் என்று நிறைய மரங்கள் உண்டு.

என்ன வகை மரங்கள் என்று எனக்கு தெரியவில்லை. குளிர் காலத்தில் விறகு கட்டை போல காய்ந்து போய் நிற்கும் இந்த மரங்கள் தான் வெய்யில் கால முடிவில் வெள்ளை, வயலட், பிங்க் என்று பூத்து குலுங்கும்.

 ஒவ்வொரு மரத்தை சுற்றியும் மூன்று நான்கு அணில்களாவது ஓயாமல் ஓடிக்கொண்டும், மரத்தில் ஏறுவதும் இறங்குவதும், மரத்தின் காய்களை கடிப்பதுமாக ஒரு நிமிடத்தில் இவை அனைத்தையும் செய்து பரபரவென்று சுற்றும். அத்தனை அணில்களை நெருக்கத்தில் இங்கு தான் பார்த்தேன். இவை போக மரம்கொத்தி பறவை, ஆரஞ்சு நிற வயிற்று பகுதி கொண்ட எனக்கு பெயர் தெரியாத பறவை, சிட்டு குருவி, காகமா குயிலா என்று கண்டுகொள்ள முடியாத ஒரு பறவை  என்று நிறைய உண்டு. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே ஓடுவது கொஞ்சம் புத்துணர்வு தருவதாக இருக்கும்

ஏரிக்கும் எனக்கும் என்ன பந்தமோ ஏதேனும் புது அனுபவத்தை தந்து கொண்டே இருக்கிறது.

வேறு எந்த விஷயத்தில் அடுத்தவர் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்கிறேனோ இல்லையோ உணவு விஷயத்தில் “இது சாப்பிடலாமா” என்று யோசிக்கக்கூட மனதிற்கு வாய்ப்பு கொடுக்கமாட்டேன். அந்த கொள்கையினால் நான் கபளீகரம் செய்த பாலடைக்கட்டிகளும், மெக்ஸிகன் உணவும் கண் முன்னே தோன்ற, இன்று எப்படியும் ஐந்து சுற்று ஓடி விட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு ஒரு நாள் ஏரியின் ஒருபாதி வளைவு முடிந்து நடக்கும் போது, வீடுகள் உள்ள பகுதிக்கு செல்ல சின்ன ஒரு சாலை பிரியும்  இடத்தில்  சற்று வேகத்தை குறைத்தேன். அங்கு தான் ரியான் தன் சைக்கிளுடன் நின்றுகொண்டு

 “ஆர் யூ விசாகன்’ஸ் மாம்? ஐயம் ரியான்” என்று சாலையின் இந்த பக்கம் நடந்த என்னை பார்த்து உரக்க கேட்டான். நான் இங்கிருந்தே “நோ டியர்” என்று சொன்னது அவன் காதில் விழவில்லையோ என்னவோ. மீண்டும் ஒருமுறை  அதே கேள்வியை கேட்டான். எங்கே ஆர்வத்தில் சாலையை தாண்ட முயற்சிப்பானோ என்ற பயத்தில், நான் தாண்டி சென்று, நான் விசாகனின் அம்மா இல்லை என்று சொன்னவுடன், “நான் விசாகனுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன், அவன் எப்போ வருவான்” என்றான். இது என்னடா’வம்பா போச்சு என்று நினைத்துக்கொண்டே, “விசாகன் யார் என்றே தெரியாது”, என்றேன். “இல்லை நீங்கள் அவன் அம்மா” என்ற அந்த ஆறு ஏழு வயது சிறுவனிடம் அதற்கு மேல் கேள்வி கேட்காமல், யாராவது ரியானை அழைத்து செல்ல வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். ” உன் வீடு எங்கே, கொண்டு விடட்டுமா” என்று கேட்டதற்கு, ” என் பாட்டி சிறிது நேரத்தில் வருவார்” என்று என் முகத்தையே பார்த்த அவனுக்கு என்ன சொல்லி நகர்வது என்று தெரியாமல், அவன் அருகிலேயே நின்றேன்.  சிறு தயக்கம் கூட இல்லாமல் .அடுத்த நொடி பேச ஆரம்பித்தவன் தான். தன்னிடம் இருக்கும் தனக்கு பிடிக்காத கார் பொம்மை, டயர் போன டிரக், சிகப்பு முகமூடி, சென்ற வாரம் அவனுக்கு பல் விழுந்தது, சைக்கிளை பிடியுங்கள் என்று சொல்லி விட்டு, வாயை திறந்து பல் விழுந்த இடத்தை காட்டி “தெரிகிறதா” என்றதோடு எனக்கு எப்போ பல் விழுந்தது என்ற கேள்வியுடன் பேசிக்கொண்டே போனான், அவன் பாட்டியும் வந்தார். “நீ என் வீட்டிற்கு வருகிறாயா நாம் கேக் சாப்பிடலாம்” என்று கேட்டு என்னை போக விடமாட்டேன் என்று நின்று கொண்டான். நீ என்னடி அம்மா மந்திரம் ஏதாவது வச்சுட்டியா என்ற தொனியில் அவனின் பாட்டி என்னை பார்த்துக்கொண்டே சைக்கிளை மெதுவாக என் கையிலிருந்து விடுவித்துக்கொண்டார். ஒரு வழியாக நாளையும் வருகிறேன் என்று சொல்லி ரியானை அனுப்பிவைத்தேன். அதன்பின் வாரத்தில் எப்படியும் ஒன்றிரண்டு நாட்கள் அவன்  சைக்கிள் விடும்  போது என்னை கண்டால் ” விசாகான்ஸ் மாம் ” என்று கத்தி கூப்பிட்டு கைஆட்டுவான் . விளையாடுவோமா என்றோ என்னை விட வேகமாக ஓடுவாயா என்றோ கேட்டு என்னிடம் இரண்டு நிமிடம் பேசிய பின்னர் தான் நகருவான். சில நாட்கள் ரியனை காணாமல் நான் கண்களை சுழற்றி  அவன் வழக்கமாக விளையாடும் பகுதி முழுக்க அலசி இருக்கிறேன். அவனின் பாட்டி விளையாட்டு நேரத்தை முன்னபின்ன சிறிது மாற்றி இருக்கக்கூடும்.

அந்த ஞாயிறன்று நடக்கும் போதும் ஏனோ எனக்கு ரியானின் ஞாபகம் வந்து ஏக்கமுடன்  சிறு புன்னகையும் முளைத்தது. 

இதெல்லாம் என்ன வகை அன்போ என்று நினைத்தவாறு நடந்து கால்வாய் அருகில் வந்த போது தான் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் கயறு போன்ற ஒன்றை கால்வாய் பகுதியின் சுவற்றை ஒட்டி தண்ணீருக்குள் விட்டு கொண்டே எக்கி எக்கி பார்ப்பதை கண்டேன். தண்ணீர் சுமார், ஏழு அடி  கீழே இருந்தது,

அப்படி என்ன இருக்கு என்று அருகில் சென்று பார்த்தேன். என்னை கண்டவுடன், காத்திருந்தவர் போல, முகம் வியர்வையில் நனைந்திருந்தாலும் பளிச்சென்ற புன்னகையுடன் ” கடவுளே, என் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு ஓடி வந்தேன்” என்று எதிர்புறம் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பை கைகாட்டினார் . 

நான் அவர் காட்டிய குடியிருப்பை கவனிக்காமல் அவரின் வெள்ளை பற்களை வெறித்து பார்த்தேன். அது என்னவோ இந்த ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு பற்கள் அவ்வளவு வெண்மையாக இருக்கின்றன.

அவரோ தண்ணீருக்குள் கையை காட்டி படபடவென்று பேசினார். “ஷி இஸ் தேர் , தெரிகிறதா உங்களுக்கு” என்று அவர் சொல்ல, அது என்னவென்று  யூகிக்க நான் ஐந்து வினாடி அதிகம் எடுத்துக்கொண்டதை ( என்றைக்கு என் மூளை வேகமாக செயல்பட்டிருக்கிறது) புரிந்தவர் “அவள் ஒரு அணில்” என்றார்.

அணில் ஒன்று மரத்தில் தாவும் போது தவறி கால்வாய் தண்ணீருக்குள் விழுந்து இருந்தது. சுற்று சுவரில் ஏறி மேலே வர தெரியாமல், தண்ணீருக்கும் சுவருக்கும் இடையில் இருந்த சிறு படி போன்ற ஒரு பகுதியில் தொத்திக்கிண்டு படுத்திருந்தது.

நிறைய முறை மேலே ஏற முயன்று தண்ணீருக்குள் விழுந்திருக்கும் போல, உடலில் இன்னும் ஈரம் இருந்தது. நல்ல புஸு புஸு என்றிருக்கும் வால் நீரில் நனைந்து பிசிறு பிசிறாக நின்றது.

இப்போது ஆப்ரிக்க அமெரிக்கர் “ஒரு வழியா உங்களுக்கு புரிஞ்சிருச்சா” என்று கொஞ்சம் தெளிவு வந்தவர் போல என்னை பார்க்க, நான் ரொம்ப சீரியசாக, “எப்படி வெளியே எடுப்பது” என்று கேட்டேன். அது தான் தனக்கும் தெரியவில்லை என்று என்னை பார்த்தார். மறுபடியும் தன் அடுக்குமாடி குடியிருப்பை கைகாட்டி, தன் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஏதோ ஒன்று விழுந்துவிட்டது என்று நினைத்ததாகவும், அருகில் வந்தவுடன் தான் அணில் என்று கண்டதாகவும். “அவள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அந்த சிறு சுவற்றில் தொத்திக்கொண்டுள்ளாள்” என்று அணிலை அது என்று சொல்லாமல் அவள் என்றே விளித்தார்.

“அவள் பயந்திருக்கிறாள், தெரிகிறதா உங்களுக்கு அவள் உடல் மேலே ஏற முயன்று களைத்திருப்பது” என்று கூறும்போது. ஒரு குழந்தையை காப்பாற்றும் பதற்றம்  அவரிடம் இருந்தது.

அப்போது தான் கவனித்தேன் அவர் தண்ணீருக்குள் விட்டுக்கொண்டிருந்தது ஸ்கிப்பிங் கயறு.

“இதை எப்படி அணில் பிடித்து மேலே ஏறும்” என்று கேட்டால் எங்கே அழுது விடுவாரோ என்று நினைத்து “அணிலுக்கு கயிறை பிடிக்க வேண்டும் என்று தெரியதல்லவா. நாம் வேறு ஏதாவது செய்யலாம்” என்று சொல்லி சுற்றும் முற்றும் பார்த்தேன். வெறும் மரக்குச்சிகள் தான் கிடந்தன.

நாம் ஒரு வாளியை  விட்டு பாக்கலாமா என்று அவரிடம் கேட்டேன்.

“நல்ல ஐடியா, பதற்றத்தில் எனக்கு தோன்றவில்லை, என் காரேஜில் இருக்குமா என்று பார்க்கிறேன். அது வரை அணிலை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு ஓடினார்.

ஐந்து நிமிடத்தில் கையில் ஒரு ஆரஞ்சு நிற உயரமான வாளியுடன் வந்தார். ஸ்கிப்பிங் கயிறை வாளியில் கட்டி இறக்கினோம். வாளி உயரமாக இருந்ததாலும், அணில் தொத்திக்கொண்டிருந்த சுவர் உட்புறம் மடங்கினாற் போல இருந்ததாலும், அணில் அருகில் வாளியை கொண்டுசெல்ல முடியவில்லை. வாளியின் நிழல் தன் மீது விழுந்தவுடன் பயத்தில், அணில் தன்னை மேலும் குறுக்கிக்கொண்டு சுவருடன் ஒட்டிக்கொண்டது. இவரோ “ஹேய் நண்பா, நாங்கள் உன்னை காயப்படுத்தமாட்டோம், வா” என்று கூறிக்கொண்டே எப்படியாவது அணிலை வாளிக்குள் குதிக்கச்செய்ய முயன்றார்.

பக்கத்தில் கிடந்த சிறு குச்சிகளை, என்னை அணில் மீது படுமாறு போட சொன்னார். பயந்து வாளிக்குள் ஏறும் என்ற எண்ணத்தில். நான் போட்ட நான்காவது குச்சிக்கு அணில் தண்ணீருக்குள் தாவியது. தத்தி தத்தி நீந்தி, மறுபடியும் சுவரில் ஏறிக்கொண்டு மூச்சுவிட்டது.

“நாம் அவளை ரொம்ப களைப்படைய செய்கிறோம்” என்று இவர் கூறியபோது அணிலை விட இவரை பார்க்க தான் எனக்கு பாவமாக இருந்தது. 

என் வீட்டில் கொஞ்சம் அகலமான பழக்கூடை இருந்தது. அதை எடுத்து வரலாமா என்று யோசிக்கும் போது, ஒரு மணி நேரமாக வாளியை பிடித்து மரத்து போன கைக்கு ஓய்வு கொடுக்க ” நீங்கள் கொஞ்ச நேரம் முயல்கிறீர்களா” என்று வாளியை ஸ்கிப்பிங் கையருடன் என்னிடம் தந்தார். இது என்னடா ரியானிடம் மாட்டியது போல உள்ளதே என்று நினைத்து கொண்டே வாங்கினேன். நானும் வாளியை சுவற்றில் உரசி சத்தம் எழுப்பி, லேசாக தண்ணீரின் மேல் தட்டி என்று குரங்காட்டி போல பல வித்தைகளை முயன்றேன். ஒன்றுக்கும் அணில் அசையவில்லை. சிறிது நேரத்திற்கு முன்னர் வந்து எட்டி பார்த்துவிட்டு, ஒன்றும் கேட்காமல் சென்ற வேறொரு நடைபயில்பவர் போல நாமும் போய் இருக்கலாமோ, இந்த ஆப்ரிக்க அமெரிக்கர் அணில் மேலே வராமல் நகர மாட்டார் போல உள்ளதே என்று விழித்துக்கொண்டிருந்தேன். 

உண்மையில் அணில் சிரமப்பட்டதோ இல்லையோ இவர் துடிப்பதை அவரின் முகம் சொன்னது. “சரி நீங்கள் செல்வதானால் செல்லுங்கள்” என்று அவர் சொல்லி இருந்தால் அந்த முகத்தை பார்த்த பின் அவரையும் அணிலையும்   அங்கே விட்டுவிட்டு போக கால் எடுக்க வரவில்லை.

நாங்கள் இருவருமே பார்க்கலாம் எவ்வளவு நேரம் ஆனாலும் அணிலை மேலே எடுக்காமல் நகருவது இல்லை என்ற பாவனையில் முகத்தைவைத்துக்கொண்டு அடுத்து என்ன யுக்தி என்று யோசிக்கும் போது

“ஹேய் மேன்” என்று கையை அசைத்தவாறு, இரு கோல்டன் ரிட்ரீவர் நாய்களைப் பிடித்துக்கொண்டு, இடது கையில் பச்சை நிறத்தில் இலைகளுடன் கொடி ஒன்று படர்ந்திருப்பது போன்ற பச்சை குத்தியிருந்த  ஒரு அமெரிக்கர் எங்களை நோக்கி வந்தார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் முகத்தில் ஒரு ஒளி.

” என்ன தேடுகிறீர்கள்” என்று அவர் கேட்க,  இவர் “அணில் ஒன்று மேலே வர உதவ முயல்கிறோம்” என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு சிறு உயிரை இவ்வளவு மதிக்கிறாரா மனுசன் என்று நினைத்தேன்.

“பரவாயில்லை, வாளி கொண்டு முயன்றிருக்கிறீர்கள், அணிலுக்கு வாளிக்குள் ஏற தெரியதல்லவா” என்று அந்த அமெரிக்கர் கயிற்றின் நீளம், வாளியின் உயரம், தண்ணீர் கிடந்த ஆழம் இவற்றை தனக்குள்ளே பேசியவாறே அனுமானம் செய்துகொண்டு அதி பயங்கர மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கும் தீவிரத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார், ” ஐ ஹாவ் அன் ஐடியா இருங்கள் நாய்களை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்” என்று சொல்லிச் சென்றார்.

இனி இவர் என்னத்த கொண்டு வர போகிறாரோ என்று அருகில் இருந்த திட்டில் அமர்ந்தேன்.

இன்னிக்கு நடையாவது ஓட்டமாவது, அவ்ளோ தான். வீட்டிற்கு போனவுடன் காலை உணவுக்கு உப்புமா செய்யலாமா என்று யோசிப்பதற்குள் அமெரிக்கர் திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் போது, அவர் மீன் பிடிக்க செல்லும் போது பாசி, இலைகளை அகற்ற பயன்படுத்தும் ஒரு கைப்பிடி வைத்த  வலை ஒன்றை நெஞ்சோடு அணைத்தபடி ஓட்டமும் நடையுமாக வந்தார்.

வலை தனியாகவும், கை  பிடிகள் நாம் வேண்டும் நீளத்திற்கு பூட்டி கொள்ளும் விதத்தில் சிறு பகுதிகளாகவும் இருந்தன. தரையில் கை பிடிகளை வைத்து முழு நீளத்திற்கும் பூட்டி, வலையை தண்ணீருக்குள் விட்டார், “எப்படியும் அவளை காய படுத்தாமல் எடுக்க முயல்வோம்”  என்று சொல்லி எங்கள் “ஆபரேஷன் அணிலை” துவக்கினார். 

அணிலை லேசாக சுரண்டி கரண்டியால் எடுப்பது போல, அது இறுக்கமாக பற்றி கொண்டிருந்த சுவற்றில் கொஞ்சம் சுரண்டி அணிலை லேசாக வலைக்குள் தள்ளுவதுபோல முயன்றார். முதலில் மிரண்ட அணில் அடுத்த நிமிடம் இறுக்கத்தை விட்டு வலையின் நுனி வரை வந்தது அடுத்த பத்தாவது வினாடி வலைக்குள் அணிலை தள்ளி மேலே தூக்கினார், அணில் தண்ணீருக்குள் தாவ வாய்ப்பு தராமல் சட்டென்று மேலே கொண்டுவந்துவிட்டார். ஒரே தாவில் அணில் மரத்தில் ஏறி அமர்ந்து எங்களை பார்த்தது.  நாங்கள் மூவரும் கைகளை’தட்டி குதித்தோம். “அவள் நம்மை தான் பார்க்கிறாள்” என்று ஆப்ரிக்கா அமெரிக்கர் எங்கள் இருவரையும் கட்டியணைத்து “ஓஹ் எவ்வளவு நல்ல ஒரு அனுபவத்தை இன்று நமக்கு தந்துள்ளாள், அவளுக்கு நன்றி” என்று அணிலுக்கு நன்றி கூறினார்.

***

One Reply to “ஆபரேஷன் அணில்”

  1. அப்பாடா…அணிலை காப்பாத்தியாச்சு. ரியான் என்ன ஆனான். அருமையான எழுத்து நடை. வர்னனைகள் நிகழ்விடத்தைக் கண்முன் கொண்டுவந்தன. நிகழ்வுகளோடு ஒன்றிப்போகவைத்த எழுத்து நடை. பாராட்டுகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.