ஸ்வர்ணலதா குப்பா

“ஆசிய அமெரிக்கர்கள்”, அதாவது அமெரிக்கர்களாகிவிட்ட ஆசியர்கள். இவர்களை நான்கு பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம். சீனர்கள், தென்கிழக்கு ஆசியநாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவில் குடியேறிய முதல் ஆசிய இனத்தவர் சீனர்கள்தான்.1850 களில் சீனாவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் வறுமையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு பிழைப்புக்காக அமெரிக்க மண்ணைத் தேடிச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து ஜப்பானியர்களும், வியட்நாம் போரையொட்டி மற்ற தென்கிழக்கு ஆசிய நாட்டினரும் அமெரிக்காவில் குடியேறத் துவங்கினர். இந்தப் பட்டியலில் இந்தியர்கள் மிகத் தாமதமாக 1965ம் ஆண்டையொட்டித்தான் அமெரிக்க மண்ணில் தடம் பதித்தனர்.
கால் நூற்றாண்டுக்கு முன்புவரை, அரபு நாடுகள் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்றே அடையாளம் கொண்டிருந்தன. மேற்குலகோடு ஒப்பிட ஏழ்மை இங்கே எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. மதம் மற்றும் தங்களுடைய கலாச்சார விழுமியங்களைத் தீவிரமாக கடைபிடிக்கிறவர்களாகவும் ஆசியர்கள் இருந்தனர்.
ஆரம்ப நாட்களில் முதல் தலைமுறையினர் பிழைப்புக்காக மட்டுமே அமெரிக்க மண்ணிற்கு வந்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் பெரும்பான்மையினர் இங்கிருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்காக குடியேறியவர்கள்தான் .
அந்த வகையில் அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களைத் தவிர்த்து இங்கிருக்கும் அனைவருமே வந்தேறியவர்கள்தான். இன்று ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள்தொகையில் செவ்விந்தியர்காள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளனர். 60%வெள்ளையர்கள், 18%லத்தின் அமெரிக்கர்கள், 12%கருப்பினத்தவர்கள், 6%ஆசியர்கள், மற்றவர்கள்4% வசிக்கின்றனர்.
ஆரம்பநாட்களில் ஐரோப்பியர்கள் தங்கள் படைபலம் மற்றும் ஆயுத பலத்தினால் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி மற்றும் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டதால் மற்ற இனக்குழுக்கள் அனைவருமே வெள்ளையினத்தவர்களை அண்டிப் பிழைப்பவர்களாக, அவர்களிடம் வேலை செய்யும் இரண்டாம் நிலை குடிமக்களாகவே தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
அமெரிக்க வரலாற்றின் நெடுகில் இந்த இனக்குழுக்கள் தங்களின் இருப்பை, வலிமையை, அதிகாரத்தை நிலைநிறுத்தும்பொருட்டு தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும், ஒரு கட்டத்தில் தங்களுக்குள் அத்தனை இணக்கமில்லாத எல்லைகளை உருவாக்கிக் கொண்டனர். இதனால் அவ்வப்போது உரசல்கள், மோதல்கள் தலை தூக்குவதும் பிறகு ஓய்வதும் இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதையெல்லாம் ஏன் இப்போது பேச வேண்டி வருகிறது என்றால், கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்கர்களின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் 149% அதிகரித்திருப்பதாக கலிஃபோர்னியா மாநில பல்கலைகழக ஆய்வறிக்கை கவலை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக ஆசியர்கள் அதிகமாக வாழும் பெருநகரங்களில் இந்த குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
காலங்காலமாக இதுபோன்ற அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் இங்கே நடந்து கொண்டிருந்தாலும் இப்போது அதிகரித்திருப்பதற்குச் சொல்லப்படும் காரணம் கொரோனா வைரஸ் தான். இந்த கொரோனா வைரஸை சீனாதான் உருவாக்கி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லாம் பரப்பி விட்டதாக ஒரு எண்ணப்போக்கு எப்படியோ உருவாக்கப்பட்டு விட்டது. அதன் விளைவாக உருவான வெறுப்புணர்வுக்கு இங்கிருக்கும் சீன வம்சாவளியினரும், மற்ற பிற ஆசியர்களும் இலக்காகி இருக்கின்றனர்.
கொரோனாவை முன்வைத்து இப்படி ஒரு வெறுப்பரசியலும், தாக்குதல்களும் ஏற்படும் நிலமை வரும் என அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறக்கூடாது என்பதற்காகவே ஜெர்மன் மீஸில்ஸ், வெஸ்ட் நைல் வைரஸ், மெர்ஸ், எபோலா, ஜிக்கா என தொற்றுப் பரவிய ஊரின் பெயரைச் சேர்த்து வைரஸ்களுக்குப் பெயரிட்டுக் கொண்டிருந்ததும் இந்த விஷயத்தில் கோவிட்19 என பெயரிடப்பட்டு கவனமாக கையாளப்பட்டது. இருந்தும் இந்த காலகட்டத்தில் மட்டுமே ஏறக்குறைய 3,800 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ‘ஸ்டாப் ஏஏபிஐ ஹேட்’ (Stop AAPI Hate) மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல்களினால் பெருமளவில் பெண்களும், முதியவர்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சில உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. பல குடும்பங்கள் முடங்கிப் போயுள்ளன.
அமெரிக்காவில் சீனர்கள் மீதான வெறுப்புணர்வு என்பது புதிதில்லை. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த சீன குடியேற்றத்தின் வேகத்தைக் கண்டு மற்ற இனக்குழுக்கள் அப்போது மிரண்டு போனது. இதனை “Yellow Peril” என வரலாறு குறிப்பிடுகிறது. எங்கே தங்களுடைய நிலமும், வளமும்,கலாச்சாரமும், வேலை வாய்ப்புகளும் சீனர்களினால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்கிற பதட்டம் மற்ற இனக்குழுவினரிடையே உருவானது.
கடும் உழைப்பாளிகளாயிருந்த சீனர்கள், தங்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவ விடாதவர்களாய் இருந்தனர். ஒரு கட்டத்தில் வெள்ளையினத்தவர் உள்ளிட்ட மற்ற நடுத்தர மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் சிறிய அளவில் தொழில்களைத் துவங்கி, அவற்றை வெற்றிகரமாகவும் நடத்தவும் துவங்கினர். இத்தகைய போக்கினை அப்போதைய வெள்ளை மேலாதிக்க ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கத்தினரோ ரசிக்கவில்லை. அவர்களின் உழைப்பையும், வருவாயையும் சுரண்டும் வகையில் அவர்களுக்கு எதிரான பல்வேறு விதிகளும் சட்டங்களும் அப்போது இயற்றப்பட்டது வரலாறு.
சீனர்களை அடியொற்றி குடியேறிய பிற தென்கிழக்கு ஆசியர்களும் அந்த காலகட்டத்தில் சீனர்களாகவே அடையாளம் காணப்பட்டனர். இதற்கு உதாரணமாக 1982ல் ஜப்பானிய கார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியினால் அமெரிக்க கார் தொழிற்சாலைகள் நலிவடைந்த போது, டெட்ராய்ட் நகரில் இரு அமெரிக்கர்கள், சீன அமெரிக்கரான வின்சென்ட் சின் என்பவரை ஜப்பானியர் என நினைத்து அடித்துக் கொன்ற நிகழ்வினை குறிப்பிடலாம்.
ஆசிய அமெரிக்கர்களில் இந்திய வம்சாவளியினர் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் மிகத் தாமதமாக 1965க்குப் பிறகுதான் அமெரிக்க மண்ணில் கால் பதித்தனர். இப்படி குடியேறியவர்களில் பலரும் உயர் கல்வி கற்றவர்களாகவும், பொருளாதார ரீதியில் வசதி படைத்தவர்களுமாக இருந்தனர். இதனால் ஆரம்பந்தொட்டே இந்தியர்கள் மருத்துவம், கல்வி, பொறியியல் என பல்வேறு உயர் வருவாய் பிரிவுகளில் உயர் பதவிகளை அலங்கரிப்பவர்காளாகவும், மரியாதைக்குரியவர்களுமாக தங்களை கட்டமைத்துக் கொண்டிருந்தனர்.
1980களுக்குப் பிறகு கல்வி கற்பதற்காக அமெரிக்க மண்ணிற்கு வந்து மேற்கல்வியினை முடித்து நல்ல வேலைகளில் அமர்ந்தது இன்னொரு தலைமுறை. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடுமையான தேவை ஏற்பட்ட போது அந்தப் பதவிகளை மொத்தமாய் இந்தியர்களே எடுத்துக் கொண்டது வரலாறு. உலகின் இரண்டு மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இந்திய வம்சாவளியினர்தான்.
இன்று அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ள இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவி வரை எட்டியிருப்பது மற்ற அனைவரின் கண்களை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது அமைந்திருக்கும் பைடன் அரசில் பல்வேறு உயர் பதவிகள் இந்தியர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருவதையும் மறந்துவிடக் கூடாது.
சீனர்களிடம் காட்டப்படும் வெளிப்படையான வெறுப்புணர்வு, இந்தியர்களிடம் இலைமறையாக காட்டப்படுகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம். 9/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் சீக்கியர்கள் பலரும் தாக்கப்பட்டதும் இஸ்லாமிய வெறுப்புகளுக்கு இந்தியர்களும் பலிகடா ஆவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இது வெளிப்படையாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்குள் நாம் நம்மை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நம்முடைய இருப்பினை தக்கவைத்துக் கொள்வது மட்டுமே நம்மை இது போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து ஓரளவாவது காப்பாற்றும்.
இந்த வருடத்தின் துவக்கத்தில், ஆசிய அமெரிக்கர்கள் மீதான குற்றச்செயல்களை பகுப்பாய்வு செய்ய அமைக்கப்பட்ட ஒரு குழுவின் அறிக்கையின் படி, கடந்த கால் நூற்றாண்டில், ஆசிய அமெரிக்கர்கள் மீதான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபடுவது வெள்ளையரல்லாத மற்ற இனக்குழுவினரே என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் கல்வியறிவில் குறைந்தவர்களாகவும், பொருளாதாரரீதியில் நடுத்தர மற்றும் பின் தங்கியவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆசிய அமெரிக்கர்கள் தங்களுடைய திறமையினால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முதன்மை பெற்று வசதியான வாழ்க்கை வாழ்வதாகவும் ஒரு பிம்பம் இங்கிருக்கும் பிற சிறுபான்மை மக்களிடம் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
இப்படி வசதியான வாழ்க்கைத் தரத்தினைக் கொண்ட ஆசிய அமெரிக்கர்களினால் தங்களுடைய சமூக, பொருளாதார வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும், தங்களுடைய எதிர்காலம் இருண்டு போவதற்கு ஆசிய அமெரிக்கர்களே காரணம் எனக் கருதுவதால் உண்டான வெறுப்புணர்வினால் இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாக இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர்.யா ஜாங் குறிப்பிடுகிறார். கடந்த 1992ல் அமெரிக்க சிவில் உரிமைகள் ஆணையமும், இதே போன்ற ஒரு கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.
எல்லாம் சரிதான், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் உண்டு. ஆனால் இது மட்டும் நூற்றாண்டைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் இன்னமும் தீரவில்லை என ஆராய்ந்தால் ஒரு முழு பூசணிக்காய் காரணம் இருக்கிறது. அதுதான் அரசியல்.
அமெரிக்க அரசியலின் இரண்டு பெரும் கட்சிகளுமே தொன்றுதொட்டு இனவாத அரசியலை முன் வைத்தே ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றவும், தக்கவைக்கவும் முனைகின்றன.
மேலாதிக்க வெள்ளையினத்தவர்களையும், மத அடிப்படைவாதிகளையுமே மட்டுமே பெரும்பான்மையாக கொண்ட கட்சியானது, சக சிறுபான்மை மக்களிடையே பிளவையும், வெறுப்புணர்வையும் தூண்டிவிடுவதன் மூலமாக தங்களின் தனிப் பெரும்பான்மையை நிலை நிறுத்திக்கொள்ள முனைகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை பெயரளவுக்கு சமத்துவம் பேசினாலும், மற்ற இனக் குழுக்களை இரண்டாம்தர குடி மக்களாகவே கருதுகின்றனர்.
மற்றோரு பிரிவினரோ, மிதவாத வெள்ளையின மக்களை ஒன்றிணைத்து, தங்களுக்குள் பிரிந்து கிடக்கும் பிற இனக்குழுக்களின் ஆதரவினை மட்டும் பெற்று, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதாக இருக்கிறது. இவர்களின் அரசியல் களத்தில் இன்றுவரை சிறுபான்மை மக்கள் தொடர்ந்து பகடைக் காய்களாகவே இருந்து வருகின்றனர்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு முதலே ஆசிய அமெரிக்கர்களின் மீதான பாகுபாடான நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், மக்கள் கூட்டம் நிறைந்த பேருந்து, ரயில் நிலையங்களில் தொடரும் தாக்குதல்கள் அதிகரிக்கத் துவங்கியிருப்பதை கவனிக்கலாம். இந்த குற்றச்செயல்களைக் கையாளும் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாடுகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இதற்கு அப்போது ஆட்சியில் இருந்த ட்ரம்ப்பின் நடவடிக்கைகளையும் காரணமாக கூறுகின்றனர். அவருடைய பல நடவடிக்கைகள் திட்டமிட்டே சிறுபான்மை மக்களின் மீதான வெறுப்புணர்வை தூண்டிவிடும் வகையில் இருந்தது.
கொரோனா பெருந்தொற்றை, “சீன வைரஸ்” என்றும் “குங் ஃப்ளூ” என்றும் திரும்பத் திரும்ப கூறுவதன் மூலமாக அவர் எதை சாதிக்க விரும்பினார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவருடைய ஆதரவாளர்கள் இந்தப் போக்கினை இன்னும் தீவிரமாக பொதுவெளியில் பரப்ப முயன்றதையும் யாரும் மறந்துவிட முடியாது. அதன் விளைவுகளைத்தான் இன்று நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
தற்போதைய அதிபர் பைடன், தான் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான, அதிலும் குறிப்பாக சீனர்களின் மீது வெறுப்பை உமிழும் சொல்லாடலை ஃபெடரல் அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் நிர்வாக நடவடிக்கையில் கையெழுத்திட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த மே 20, 2021 அன்று கோவிட்19 வெறுப்பு குற்ற மசோதாவில் (“Covid-19 Hate Crimes Act”) கையெழுத்து இட்டதன் மூலமாக, ஆசிய அமெரிக்கர்களுக்கான சட்டப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவினை இரு பெரும் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
இதனையடுத்து, “கோவிட்19 தொடர்பான வன்முறை மற்றும் வெறுப்பு குற்றங்களின் விசாரணைகளைத் துரிதப்படுத்த நீதித்துறையில் தேவையான ஆட்களை நியமிக்கவும், மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு உரிய மானியங்களை வழங்கி வழக்குகளின் அறிக்கைகளை மேம்படுத்தச் செய்யவும் வழி பிறந்திருக்கிறது. கலிஃபோர்னியா போன்ற குற்றச் செயல்கள் அதிகம் நடந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாநில நிதியில் இருந்து $1.4 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது போன்ற அரசின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு நம்பிக்கையைத் தந்தாலும் எந்த அளவில் தீர்வுகளைத் தரும் என்பதில் இன்னமும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆசிய அமெரிக்கர்களிடையே போதுமான ஒற்றுமை உருவாகவில்லை, அதனால்தான் அவர்கள் எளிதில் தாக்குதல்களுக்கு இலக்காகின்றனர், என்றொரு பரவலான கருத்து நிலவிவருகிறது. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆசிய அமெரிக்கர்கள் என பொதுமையாக அடையாளப்படுத்தப் பட்டாலும், அவர்கள் தங்களுடைய இனக்குழுவுக்குள் மட்டுமே இணக்கமானவர்களாக இயங்குகின்றனர். சீனர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு பிரிவினராகவும், இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு பிரிவினராகவும், இஸ்லாமியர்கள் மற்றும் வளைகுடா நாட்டினர் மற்றொரு பிரிவினராகவும் இயங்கிவருகின்றனர்.
இதனை மனதில் கொண்டே, அனைத்து ஆசிய அமெரிக்கர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் வகையில் “18மில்லியன் ரைசிங்” எனும் ஆன்லைன் அமைப்பு 2012ல் தொடங்கப்பட்டது. அப்பொழுது அமெரிக்காவில் சுமார் 18 மில்லியன் ஆசிய அமெரிக்கர்கள் இருந்தனர். இது இன்றைய அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 6%.
இந்த ஆன்லைன் இயக்கத்தின் முக்கியமான நோக்கமே, அமெரிக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் ஆசிய அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே. அதற்கான முன்னெடுப்புகளை, விழிப்புணர்வை ஆசிய அமெரிக்கர்களிடம் உருவாக்குவதும். இளைஞர்களை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்குமான இயக்ககமாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆசியர்களை குறிவைத்து தாக்குபவர்களை வெறுப்புக் குற்றங்களின் அடிப்படையில் வழக்குகள் பதியாமல் அவர்களை விடுவிக்க முயற்சிக்கும் செயலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது இந்த இயக்கம்.
எதிர்கால சந்ததியினருக்காக, நம்மைச் சூழ்ந்திருக்கும் இடர்களை, சவால்களை எதிர்கொள்ள, நாம் அனைவருமே நம்முடைய இன, மொழி, மத அடையாளங்களைத் தாண்டி மனிதநேயத்துடன் ஒன்றிணைய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே பிரிவினை எண்ணங்களைத் துறந்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மனதில் கொண்டு மனிதம் வளர்க்க உறுதியேற்போம்.
Jimmy Carter, 39th President of the U.S
“We become not a melting pot but a beautiful mosaic. Different people, different beliefs, different yearnings, different hopes, different dreams.”