விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1

This entry is part 29 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

நேர்மையான விஞ்ஞானம் எப்படி நடக்கிறது என்று முந்தைய பகுதியில் சற்றுப் பார்த்தோம். இந்த முறைகள், பல நூறு ஆண்டுகளாக விஞ்ஞான உலகில் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன. சில விஞ்ஞானிகள், தங்களது ஆராய்ச்சியை வெளியிட இந்த முறைகள் மிகவும் நேரம் பிடிக்கிறது என்று குறை சொல்வதும் உண்டு. ஆனால், இந்த முறைகள் தவறானவை என்று எவரும் சொல்வதில்லை. இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த முறைகளை நெறிப்படுத்த, சில நல்ல விஷயங்களையும் விஞ்ஞானிகள் செய்துவருகிறார்கள். இன்று, நாம் இணையம் என்று சாதாரணமாகச் சொல்லிவரும் விஷயமே, விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சியை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள உருவான தொழில்நுட்பம்தானே! இந்தப் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, ஒரு தேர்ந்த விஞ்ஞான ஆராய்ச்சி ஏடு, ஆராய்ச்சி மற்றும் சோதனை முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு, இதற்கே பிரத்யேகமான ஒரு வழங்கியில் விஞ்ஞான உலகுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இது அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகம் வழங்கும் அருமையான சேவை. உலகின் எந்த விஞ்ஞானி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஓர் அறம் நிறைந்த உலகம் இப்படியிருக்க, மறுபுறம் திரித்தல்காரர்களின் ஜாலங்களையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். இவர்கள், பல முறைகளைப் பல்லாண்டுகளாகப் பயன்படுத்திவந்துள்ளனர்.


முதல் முறை, விஞ்ஞான முடிவுகளில் வேண்டுமென்றே ஒரு சந்தேக நிழலை உருவாக்குதல். முந்தைய பகுதியில், எப்படி விஞ்ஞான முன்னேற்றம் கருத்து வேறுபாடுகளால், நேர்மையான வாதங்களால் முன்னேறுகிறது என்று பார்த்தோம். இந்தக் கருத்து வேறுபாட்டையே ஒரு ஓட்டையாகப் பயன்படுத்தி, நேர்மையான விஞ்ஞானத்தை வீழ்த்தும் முயற்சி இது. சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வருமா என்று விஞ்ஞானிகள் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயன்று வந்தபோது, சிகரெட் தொழில், இந்த முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் பொது வெளியில் இருப்பதால், எளிதில் வேறுபடும் கருத்துக்களை நையாண்டிசெய்து, வியாபர லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம். அத்துடன், விஞ்ஞான ஆராய்ச்சி ஏடுகளில் முடிவுகள், சந்தாதாரர்களுக்கு மட்டுமே வெளியிடப்படும். இதனால், சிகரெட் நிறுவனங்கள், படித்த விஞ்ஞானிகளை இதற்காகவே தங்களுடைய நிறுவனத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள்.


அத்துடன், எந்தக் கருத்து வேறுபாடு, பொது மக்களைக் குழப்ப நல்லதோர் ஆயுதம் என்பதையும் கண்டறிவது போலி விஞ்ஞானியின் வேலை. சில மிகவும் டெக்னிகலான கருத்து வேறுபாடுகளில், பொது மக்களுக்கு ஈடுபாடு குறைவு. எந்த ஒரு கருத்து வேறுபாட்டிலும் பல கோணங்கள் இருக்கும். உதாரணத்திற்குக் கால்நடைகள் வெளியேற்றும் மீதேன், எப்படி ஓஸோன் அடுக்கைத் தாக்க வாய்ப்புள்ளது என்று ஒரு விஞ்ஞான கேள்வி எழுப்பியிருக்கலாம். உடனே, குளிர்சாதனப் பெட்டிக்கு குளிரும் திரவம் தயாரிக்கும் நிறுவனம் என்ன செய்யும்? தன்னுடைய தயாரிப்பு ஓஸோன் அடுக்கைப் பாதிக்கும் என்று அதற்கு நன்றாகத் தெரியும். இந்த விஞ்ஞானக் கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, “குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் குளிரும் திரவத்தைவிட, கால்நடையால் வரும் தாக்கம் அதிகம்” என்று செய்தியைத் திரித்து வெளியிட்டுவிடும்.


இந்தச் சந்தேக நிழலை எங்கு உருவாக்குவது? விஞ்ஞான ஏடுகளிலா? நிச்சயமாக இல்லை. அங்கு இந்தப் பருப்பு வேகாது. ஏனென்றால், விஞ்ஞான ஏடுகளை உருவாக்குபவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் விஞ்ஞான முறைகளில் தேர்ந்தவர்கள். இதனால், பொதுப் பத்திரிக்கைகளில் இவ்வகை விஞ்ஞான அடிப்படை இல்லாத சந்தேகங்களை உருவாக்குவது எளிது. ஒரு நியூயார்க் டைம்ஸ், ஒரு வாஷிங்டன் போஸ்ட் அல்லது ஒரு கார்டியன் என்று இவ்வகைப் பத்திரிகைகள் இவ்வகை மசாலாக்களை வெளியிடும். சில சந்தர்ப்பங்களில், ஸயண்டிஃபிக் அமெரிக்கன்கூட இவ்வகை அரைகுறை விஷயங்களை வெளியிட்டுள்ளது. அத்துடன், இங்கு சொன்ன பத்திரிகைகள் பொது மக்களைச் சென்று சேரும் அருமையான ஊர்திகள். லாப நோக்குடைய வியாபாரங்களுக்கு அவர்களது வாடிக்கையாளர்கள்மீதே கண். இவ்வகைப் பத்திரிகைகள் பெரும்பாலும் வியாபார வாடிக்கையாளர்கள் படிக்கும் ஒன்று.


இந்த முறையில் இன்னொரு மறைமுகப் பயனும் வியாபாரங்களுக்கு உள்ளது. விஞ்ஞானத்தை எதிர்ப்பதைவிட மிக முக்கியம், அரசாங்கக் கட்டுப்பாடுகளை ஒத்திப்போடுவது. அரசாங்கக் கட்டுப்பாடுகள் தள்ளிப் போடப்பட்டால், இன்னும் சில வருடங்கள் லாபம் பார்க்கலாம். அல்லது, புதிய லாப வழிகளைக் கண்டுபிடிக்க இடைப்பட்ட காலம் உதவலாம். இது, வியாபாரங்களுக்கு மிகவும் முக்கியம். கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் அதிகார வர்கத்தினரும் படிக்கும் பத்திரிக்கைகள், நாம் மேலே சொன்ன உதாரணங்கள். அதிகார வர்கத்தைக் குழப்புவது மிகவும் அவசிய வியாபார தந்திரம்.


இரண்டாவது முறை, ஒரு சின்ன விஞ்ஞானக் குழப்பக் குழு ஒன்றை ஏற்படுத்திப் பொது மக்கள் / நுகர்வோரைக் குழம்பச் செய்வது. இந்தக் குழுவில் இடம்பெற பெரிய விஞ்ஞான உலக சாதனையாளர்களாக இருக்கத் தேவையில்லை. மிக முக்கியமாக, சாதுர்யமாக, சாதாரணர்களைக் குழப்பத் தெரிந்திருக்கவேண்டும். இந்த முறையின் முதல் கொள்கை, விஞ்ஞானக் கருத்து ஒற்றுமை (consensus) என்பதற்கும், ஒருமுகப் போக்கிற்கும் (unanimity) உள்ள வித்தியாசத்தைக்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துவது. உதாரணத்திற்கு, ஓஸோன் அடுக்கில் உள்ள ஓட்டைக்கு மிக முக்கியக் காரணம், அந்தக் கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட குளிர்விக்கும் திரவங்கள் என்று விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டது. நிச்சயமாக, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க இன்னும் ஆதாரங்களைத் தேடும்போது எழுந்த ஒரு கேள்வி, கால்நடைகள் வெளியேற்றும் மீதேன் வாயு. இது எந்த அளவிற்கு ஓஸோன் அடுக்கை பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தது. விஞ்ஞான ஆராய்ச்சியில் இது ஓர் அன்றாட நிகழ்வு. இதைக் கையில் எடுத்துக்கொண்ட குழப்பக் குழு, என்ன செய்தது? கால்நடைகள், மனிதனைவிட மோசமாக ஓஸோன் அடுக்கை அழிக்கின்றது என்று கதை கட்டிக் குழப்ப முயற்சித்தது. இது அதிகார வர்கத்தை, விஞ்ஞான ஆராய்ச்சிமீதுள்ள நம்பிக்கையை இழக்கச்செய்யும் ஒரு முறை. விஞ்ஞானச் சதி நடந்துவிட்டது என்று கூக்குரல் எழுப்பிக் குழப்பிவிடுவது. உதாரணத்திற்குப் பெட்ரோலில் ஈயம் கலப்பதில் அபாயம் உண்டு என்று தெரிந்தும், இதனால் லாபம் பார்க்கும் தொழில் என்ன செய்தது? முதலில், அரசாங்கப் பொதுநல மருத்துவம், விஞ்ஞானச் சதியில் ஈடுபடுவதாக நம்பவைத்தது. அரசாங்க முடிவைச் சீர்குலைக்கத் தனக்கு வேண்டியதுபோல, சில சாதகமான புள்ளி

விவரங்களுடன், அரசாங்க முடிவை முறியடித்துத் தான் மிகவும் உத்தமம் என்று மீண்டும் ஈயக் கலவையைத் தயாரிக்கத் தொடங்கியது.


அடுத்த நுட்பம், லாப நோக்குள்ள நிறுவனங்களின் போக்கை ஆதரிக்கும் விஞ்ஞானிகளை உயர் பதவியில் அமர்த்தி, லாபத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வது. பெட்ரோலில் ஈயம் கலப்பதில் வந்த சலசலப்பை ஜி.எம். எப்படிக் கையாண்டது என்று பார்த்தோம். ராபர்ட் கெஹோ (Robert Kehoe) என்னும் விஞ்ஞானியைத் தன்னுடைய நிதி உதவியால், அத்துறையின் வித்தகர் என்ற நிலைக்குக் கொண்டுசென்றது, பாதிக்கப்பட்ட நிறுவனம். அத்துடன், பேட்டர்ஸனின் விஞ்ஞான முடிவுகளை முறியடிக்க கெஹோ பயன்படுத்தப்பட்டார். இவருடைய நற்சான்றிதழ் எல்லா சந்தேகங்களையும் ஒதுக்கி, ஜி,எம். மற்றும் குழுவினருக்கு ஏராளமான லாபம் ஈட்ட வழிவகுத்தது.


தனக்குச் சாதகமில்லாத விஞ்ஞான முடிவை வெளியிடும் விஞ்ஞானியைப் பற்றி அவதூறு பரப்புவது. ஓஸோன் விஷயத்தில் அருமையான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட ரோலேண்ட் மற்றும் மோலினா (Rowland and Molina) என்ற இரண்டு விஞ்ஞானிகளும் இந்த நுட்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ரசாயனத் தொழில், இவர்களின் ஆராய்ச்சியைக் கேலிசெய்தது மட்டுமல்லாமல், இவர்களது விஞ்ஞானம்மீதும் ஓட்டை உள்ளதாகத் தாக்கியது. இவர்களை என்னமோ கதை வசனம் எழுதுபவர்களைப்போலப் பாவித்து, இவர்களது விஞ்ஞானமே ஒரு கற்பனை விஷயம் என்று கதை கட்டிவிட்டது. நல்ல வேளையாக, இந்த இரு விஞ்ஞானிகளும் துவண்டு போகவில்லை. அத்துடன், மறைமுக மிரட்டல்கள் மற்றும் ஆராய்ச்சி உதவி நிதி என்று சங்கடங்கள் பல கோணங்களிலும் ரசாயனத் தொழிலால் கையாளப்பட்டது.


மூன்றாவது முறை, தனக்கு சாதகமில்லாத முடிவுகளைத் தவறான மாதிரியுருவிலிருந்து வருவதாகக் கதை கட்டிவிடுதல். இதில் பல உப நுட்பங்கள் அடங்கும். ஒரு விஞ்ஞான மாதிரியுரு (scientific model) என்பது, ஆராய்ச்சி வளர வளர, மெருகேற்றப்படும் விஷயம். ஆனால், இதன் ஆரம்ப காலத்தில், முழுமை பெற்றிருக்காது. பெரும்பாலும், புள்ளியியலில் சொல்லும் தனித்த தரவுகளுக்கு (outlier) முழுவதும் விளக்கம் இருக்காது. ஆனால், முடிவுகள் பெரும்பாலான மாதிரியுருக்களில் சரியாகவே இருக்கும். இந்த தனித்த தரவுகள், எந்தெந்த சில தருணங்களில், இந்த மாதிரியுரு சொல்லும் முடிவுகள் சரியாக இருக்காது என்று விளக்கவே பயன்படும். இவ்வகை மாதிரியுரு சொல்லும் முடிவு, தனக்குச் சாதகமாக இல்லையென்ற பட்சத்தில், லாபத்தில் குறியாக இருக்கும் நிறுவனம் என்ன செய்யும்? இந்த மாதிரியுருவே தவறானது என்று தன்னிடம் உள்ள விஞ்ஞானிகள்மூலம் வதந்திகளைப் பரவச்செய்யும். இதற்கு ஓர் உதாரணம், ஓஸோன் அடுக்கு பற்றிய ஆராய்ச்சி நடந்து வந்தபோது, பூமியில் எரிமலைகள், அவ்வப்போது வெடித்து வானத்தில் ஏராளமான மீதேனைக் கலந்துவிடும் என்று ஒரு விஞ்ஞானி கேள்வி எழுப்பினார். உடனே, லாப நோக்குள்ள குளிர் திரவ ரசாயன நிறுவனங்கள், ஓஸோன் அடுக்கை மனிதத் தயாரிப்புகள் அழிக்கின்றன என்று சொல்லிவரும் விஞ்ஞான மாதிரியுரு தவறானது என்ற கதையைப் பரவவிட்டது. நல்லவேளை, பிற்காலத்தில் இந்த மாதிரியுருத் தனித்ததரவு விளக்கப்பட்டது. சராசரி எரிமலைகள் ஓர் ஆண்டில் எத்தனை வெடிக்கின்றன மற்றும் அதன் மீதேன் அளவு எத்தனை என்று கணிக்கப்பட்டது. இதனால், இரு விஷயங்கள் எரிமலைகளைப் பற்றியும் தெரியவந்தது. முதலாவதாக, எரிமலைகள் வெளியேற்றும் மீதேன், மனித தயாரிப்புகளைவிடக் குறைவு. இன்னொன்று, எரிமலைகள் வெளியேற்றும் வாயுக்கள், பூமியின் 100 முதல் 200 அடிக்குள்ளேயே பெரும்பாலும் தங்கிவிடுகின்றன. அவை ஓஸோன் அடுக்கை அடைய அதிக வாய்ப்பில்லை. ஆனால், இவ்வகை விஞ்ஞானம் வளர்ந்து, சரியான அளவுகளை வெளியிடும்வரை, ரசாயனத் தொழில் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து வெற்றிகண்டது என்னவோ உண்மை.


விஞ்ஞான ஆராய்ச்சியில் சில சிக்கல்கள் நேரும்போது, அதுவரை தனக்குச் சாதகமான முடிவுகள் வராத பட்சத்தில், லாப நோக்குள்ள நிறுவனம், என்ன செய்கிறது? அந்த ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் கை வைக்கிறது. நிதி ஒதுக்கீடு இல்லாத விஞ்ஞான ஆராய்ச்சி கைவிடப்படும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் நுட்பம் இது. பல சந்தர்ப்பங்களில், இது வெற்றி அடைந்தாலும், சில பிடிவாதமான விஞ்ஞானிகள், தங்களுடைய ஆராய்ச்சியைத் தொடர புதிய வழிகளைக் கண்டுபிடித்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஈயம் கலந்த பெட்ரோல் விஷயத்தில் ஆராய்ச்சி செய்த பேட்டர்ஸனுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உதவிவந்த ஆராய்ச்சி நிதி வற்றியது. ஆனால், பேட்டர்ஸன் துவளவில்லை. அவரது குறிக்கோள், ஈயத்தால் மனித குலத்திற்கு நேரும் ஆபத்தை எப்படியாவது தவிர்க்கவேண்டும் என்பது. புதிய வழிகளில், அரசாங்க நிதியுதவிகளைப் பெற்று, அவரது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இவருடைய இந்த வெற்றிக்கு இரு காரணங்கள் இருந்தன. முதல் விஷயம், அவருக்குப் பல வகை நிதியுதவி அமைப்புகள் பற்றித் தெரிந்திருந்தது. பல விஞ்ஞானிகளுக்கு இவ்வகையான நிர்வாக விஷயங்கள் தெரியாது. இரண்டாவது, பேட்டர்ஸன் பலதுறை நிபுணர். இதனால், ஒரு துறையின் நிதியுதவியில் தனக்கு முக்கியமான இன்னொரு துறை ஆராய்ச்சியையும் தொடரமுடிந்தது. இன்று விஞ்ஞானத்தில் மிக அதிகச் சிறப்புத் தேர்ச்சி (specialization) இருப்பதால், பல விஞ்ஞானிகளுக்கு இந்த முறைகள் சாத்தியமில்லை. வியாபாரம் எளிதில் வென்றுவிடுகிறது.


இந்த முறையில் உள்ள இன்னொரு நுட்பம் – தனக்குச் சாதகமான முடிவுக்கு வராத விஞ்ஞானத்தில் ஆழம் இல்லை; இன்னும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவேண்டும் என்று இழுத்தடிப்பது. பல சமயங்களில், வியாபாரங்கள் இந்த நுட்பத்தால் வெற்றி பெற்றுவிடுகின்றன. அரசாங்கம், விசாரணைக் கமிஷனுக்குமேல் கமிஷன் அமைத்து, முடிவுக்கு வருவதற்குள் பிரச்சினை முற்றிவிடும் அல்லது பிரச்சினையைத் தீர்க்க நேரமிருக்காது. இந்த நுட்பத்தின் மிகப் பெரிய உதாரணம் புவிச் சூடேற்றம் – இதைப் பற்றி விரிவாகப் பிறகு பார்ப்போம். மற்றோர் உதாரணம், டிடிடி மருந்து – இன்னும் ஒப்புக்கொண்ட நாடுகள் அனைத்தும் அமுல்படுத்தாமல் இழுத்தடிக்கின்றன. இன்னொரு முக்கிய உதாரணம், மின் சிகரெட்டுகள். இதில் உடல்நலக் கேடு உள்ளது என்ற சந்தேகம் இருந்தும் ஆராய்ச்சி முடிவுகள் இன்னும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கவில்லையாதலால், பல மின் சிகரெட் நிறுவனங்கள் ஏராளமான லாபம் ஈட்டி இளைய சமூகத்தினரைக் கெடுத்தும் வருகின்றன. இதை முழுவதும் நிரூபிக்க நேரமாகலாம். சிகரெட்டிற்குப் பலியான உயிர்களைவிட, அதிகமான இழப்பு நேரலாம் என்று பல சமூக ஆர்வலர்கள் அஞ்சுவதில் நியாயம் உள்ளது.


அடுத்த பகுதியில் மேலும் பல விஞ்ஞானத் திரித்தல் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

Series Navigation<< விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்றுவிஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.