
இளையராஜா, ’கீதாஞ்சலி’ என்ற ஒரு தனிப்பட்ட இசை வெளியீடு ஒன்றைச் செய்துள்ளார். அதைப் பற்றியது அல்ல இந்தக் கட்டுரை. என்னைவிட அழகாக இந்த இசை வெளியீட்டை விமர்சிக்கப் பலர் உள்ளனர். திரையிசையமைப்பாளராக இருந்தும், எப்படியோ எனக்கு கீதையைப் புரிய வைத்து விட்டவர் இளையராஜா. எதற்கு கீதையைப் புரிந்து கொள்ள ராஜா வேண்டும்? இது, ஏதோ மொட்டைத்தலையையும் முழங்காலையும் முடிச்சு போடும் முயற்சியாகத் தோன்றலாம். தொடர்ந்து படியுங்கள், புரிய வரும்.
என்னுடைய ஒரு நண்பர், கீதையைப் படித்து, மற்றவர்களுக்குப் புரிய வைப்பதில் ஆர்வம் கொண்டவர், யுடியூபில் உள்ள கீதை சம்பந்தமான காணொளிகளைப் பார்த்துவிட்டு, சிலாகிப்பார். கிதையைத் தவிர மற்ற விஷயங்களையும் என்னிடம் பகிர்வார். அவருடைய வேலை, அலுவலக அரசியல், குழந்தைகள், படிப்பு என்று உரையாடல் நீளும். அவருக்கு என்னுடைய விஞ்ஞான விஷயங்கள் மற்றும் இளையராஜா பிடிக்காது. நானோ பொருமையாக, அவரது கீதை சிலாகிப்புகளைக் கேட்பேன். .இந்த கீதை விஷயத்தில் உள்ள விநோதம் என்னவென்றால், அவருடைய வாழ்வில் குறையாகப் பகிரும் ஒவ்வொரு விஷயமும் கீதை உபதேசத்திற்கு எதிராகவே இருக்கும்!
கடந்த பன்னிரண்டு வருடங்களாக ராஜாவின் இசையை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி வந்துள்ளேன். என்னுடைய மனைவிக்கு எப்பொழுதும் எழும் கேள்வி, ‘ஏன் ராஜாவின் இசை பற்றி எப்பொழுதும் ஆராய்ச்சி? அதுல என்ன காசா பண்றீங்க? உங்களோட தொழில் என்ன இசையா? ஏன் எல்லோரையும் போல, பாட்டைக் கேட்டோமா போனோமான்னு இருக்கக் கூடாது? இது தேவையா?”
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல, நம் அன்றாட வாழ்க்கை விஷயங்களை சற்று ஆராய வேண்டும். குறிப்பாக, நம் வேலை சார்ந்த விஷயங்களை அலசுவோம். அது எந்த வேலையாயிருந்தாலும் பொருந்தும்.
அலுவலக வேலையில், நம்மிடம் ஒரு வேலை ஒப்படைக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். முடிந்த அளவு, முழு கவனத்துடன், அந்த வேலையை முடித்துக் கொடுத்து விடுவோம். மேலாளர், சில சமயம், நம்மை அழைத்து, ‘இந்த விஷயங்கள் உங்கள் வேலையில் விட்டு விட்டீர்கள். கவனமாக அடுத்த முறைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வது சகஜம். இந்த நிகழ்வு, பெரும்பாலும் நமக்கு ஒரு சின்ன சோகத்தையே ஏற்படுத்தும். ராஜாவின் இசை பற்றி ஆராய்ச்சி செய்து, கட்டுரை வெளியிடும் பொழுது, இது போன்ற நிகழ்வு மிகச் சாதாரணம். அவர், பெயர் தெரியாத பல படங்களில், இசையில் சில நுணுக்கங்களை அள்ளி வீசுவது வழக்கம். எந்த ஒரு ஆராய்ச்சியாளரும், முழுமையாக ராஜாவை ஆராய்ந்து விட்டேன் என்று மார் தட்டிக் கொள்ள வழியில்லாத அளவிற்கு, ராஜா பல்லாயிரம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி விட்டார். வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், ‘இதை விட்டு விட்டீர்கள்’, என்று யாராவது சுட்டிக் காட்டினால், எனக்கு, சோகத்தை அது ஒருபோதும் உண்டாக்கியதில்லை. அடடா, இதை கவனிக்கத் தவறி விட்டோமே என்று சுட்டிக் காட்டியவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஒரு மகிழ்வையே கொடுக்கும். காசுக்காக வேலை செய்யும் இடத்தில் சோகம், எதிர்பார்ப்பில்லாமல், நம் இசை அனுபவத்தைப் பகிரும் பொழுது மகிழ்ச்சி. இதைத் தானே கீதை சொல்லுகிறது?
அலுவலக சூழலில், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு என்பது மிகவும் போட்டி மற்றும் பொறாமையை உண்டாக்கும் விஷயம். நீங்கள் அருமையாக வேலை செய்து பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கீறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பார்வையில், சற்றும் தகுதியில்லாத ஒருவருக்கு, அந்தப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டால், உங்களுக்கு கோபம், ஏமாற்றம், விரக்தி எல்லாம் உண்டாவது இயற்கை. இப்பொழுது ராஜா இசைச் சூழலுக்கு வருவோம். என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்த இந்த பன்னிரண்டு ஆண்டுகளில், பல முறை, புதியவர்கள், புதிய இசை விஷயங்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். ரசிகர்களின் கவனம், புதியவர்கள் பக்கம் திரும்பும் பொழுது, ஏமாற்றமோ, கோபமோ ஒரு போதும் வந்ததில்லை. மாறாக, புதியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஆராய்ந்து அவர்களை ஊக்குவிக்கவே தோன்றும். அவர்களும் ஏதேதோ, ‘நீங்கள் செய்த ஆராய்ச்சியைப் பார்த்துதான் நாங்களும் இப்படி செய்ய முடிகிறது’ என்று சொல்வதெல்லாம், வேறு உணர்வையே எழுப்புகிறது. அடடா, புதிய தலைமுறையினர், ராஜாவின் இசையைக் கூர்ந்து கவனிப்பது மகிழ்ச்சி, என்றே தோன்றும். காசுக்காக வேலை செய்யும் பொழுது ஏற்படும் கோபம், ஏமாற்றம், விரக்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பகிரும் இசை ரசனையில் காணாமல் போகிறது. இதைத் தானே கீதை சொல்லுகிறது?
உங்கள் அலுவலில், துறையில், நீங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம். புதிதாகப், படித்து விட்டு வந்த ஒருவர் உங்களுக்கு இணையாகவோ அல்லது மேலோ அமர்த்தப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல் அரசியலுக்கு தகுந்த சூழல் இது. புதியவரிடமிருந்து கற்றுக் கொள்ள உங்களது ஈகோ அனுமதிக்காது. அல்லது, உங்களது அனுபவம் தடுக்கும். நல்ல வேளையாக, கணினி மென்பொருள் துறையில் இந்தப் பிரச்சினை அதிகம் வருவதில்லை. புதிதாக வந்தவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் உங்களை விட நன்றாகத் தெரியும், பழக்கமிருக்கும். அவர்களிடமிருந்து கற்பது சகஜம். இங்கு வயது வித்தியாசம் எல்லாம் செல்லாது. ஆனால், மற்ற துறைகளில், அனுபவம், வயது போன்றவை இன்னும் ஒரு பெரிய அரசியல் காரணியாக உள்ளது. ராஜாவின் இசையுலகிற்கு வருவோம். எனக்கு அவரது இசை நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர், என்னை விட வயதில் சிறியவர்கள். அதில் எந்தப் பிரச்சினையும் எனக்கு இன்று வரை வந்ததில்லை. மாறாக, அவர்கள் எனது குரு என்று சொல்லிக் கொள்வதில் பெருமையே மிஞ்சுகிறது. வயதை விட ஞானம் தான் முக்கியம். இதைத் தானே கீதை சொல்லுகிறது?
நம் வேலையில், சில சமயம் புதியவர்கள் குறுக்கிட்டு,, நமக்குப் புரியாத புதிய விஷயங்களை்ப் பற்றி விளக்கும் பொழுது, நம்மில் ஒரு அச்சம் தோன்றுவது இயற்கை. அதாவது, புதிய வல்லுனர் வந்துவிட்டால், நமது கதி என்னாவது என்ற அச்சம். நம்மில் பெரும்பாலானோர், புதிய விஷயங்களை அரவணைக்காமல், பல அலுவல் அரசியலில் ஈடுபட இதுவும் ஒரு காரணம். புதியவரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது, அவர்களுக்கு தேவையான, அன்றாட விஷயங்களில் குறுக்கீடு, பாரபட்சம், எல்லாம் இந்த அச்சத்தின் வெளிப்பாடு. ராஜாவின் இசைக்கு வருவோம்.
இதில் உள்ள அனைவரின் ஒரு மிக முக்கிய புரிதல்,
எந்த ஒருவருக்கும், அவரது இசை நுணுக்கங்கள் முழுவதும் புரிய வாய்ப்பில்லை.
இதனால், புதிய வருகைகள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறது. புதிய கோணத்தில் ராஜாவின் இசையைப் பற்றி ஆராய்ச்சியோ, விளக்கமோ கொடுத்து விட்டால், உடனே அங்கீகரிக்கப்படுவார். அனைவரின் குறிக்கோளும், இசை ரசனையாக இருப்பதால், யாரும் புதியவரின் முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்பதில்லை. மாறாக, கேள்வி ஒன்று உதித்தால், ‘இந்தப் புதிய ஆய்வாளர் இதை விளக்கக்கூடும்’, என்று புதியவரை களத்தில் இறக்கி அழகு பார்ப்பவர்கள் நிறைய உள்ளனர். அப்படியே, புதியவருக்கு, கேள்விக்கான பதில் தெரியவில்லையானால், அவர் ஒருபோதும் கிண்டலடிக்கப்பட மாட்டார். பல முறை, ‘எனக்குத் தெரியாது’ என்று நான் பதிலளித்ததுண்டு. யாருமே அதைக் குறையாக நினைப்பதில்லை. அடுத்த முறை, இன்னொரு கேள்வி, நம்மை நோக்கி வரும்பொழுது, இந்த மனநிலை ஊர்ஜிதமாகிறது. வேலையில் புதியன அச்சுறுத்தினாலும், எதிர்பார்ப்பில்லாத இசை ரசனைச் சூழலில் புரிதலை நோக்கி நகருகிறது. இதைத் தானே கீதை சொல்லுகிறது?
அலுவலகங்களில், குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே உள்ள அமைப்புகளில், ஒரு இந்தியர் உயர்ந்தால், நாம் பெருமைப்படுவோம். எப்படியோ, ஒரு இனத்தவரின் முன்னேற்றம் மட்டுமே நமக்குப் பெரிதாகத் தெரிகிறது. இந்தியச் சூழலில், ஒரு தமிழர் உயர்ந்தால் மற்ற தமிழர்கள் பெருமையடைகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ, நாம் தரத்தைப் பின்தள்ளி, இனத்தை முன் வைக்கிறோம். ராஜாவின் இசையுலகில் இந்த பாகுபாடுகள் எதுவுமே இருப்பதில்லை. ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவர், மிகப் பெரிய மருத்துவர், சுய முயற்சியில் உயர்ந்த தொழில் முனைவர், மென்பொருள் வல்லுனர், வங்கி மேலாளர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ராஜாவின் இசையில் ஆர்வம் கொண்டவர்கள் தங்களது சமூக அந்தஸ்தை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. எல்லோருடைய நோக்கமும் சிறந்த இசை ரசனை மட்டுமே. ஒரு இசை சார்ந்த நுணுக்கம் என்று வந்து விட்டால், எல்லோறும் களத்தில் இறங்கி விவாதிக்கிறார்கள். சரியாகச் சொன்னால், அது யாராக இருந்தாலும் சரி, புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். குறிக்கோள் ஒன்றாக இருந்தால், அதுவும் இசை ரசனையாக இருந்தால், தங்களுடைய மற்ற விஷயங்களை பொருட்படுத்துவதே இல்லை. இதைத் தானே கீதை சொல்லுகிறது?சொந்த வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள், போட்டி, பொறாமை என்று பல மனித உணர்ச்சிகள் இருந்தாலும், ராஜாவின் இசை என்ற ஒரு சூழலுக்கு வந்து விட்டால், இந்த ரசனைக்காக தங்களது நேரத்தை செலவிடும் பலரும், குருஷேத்திரப் போரில் சொன்ன கீதையின் பல பாடங்களை பின்பற்றுவது ஒரு வியப்பான நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். எப்படியோ, ராஜாவின் இசை, கீதையை சில ஆர்வலர்களுக்கு, அவர்களை அறியாமல், பின்பற்ற வைத்திருப்பது பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய சமகால நிகழ்வு.
இசை ஒரு மனிதனை உயர்ந்த களத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
என்று ராஜா ஒரு முறை சொன்னார். அவருடைய ரசனை சார்ந்த சூழலில், அவசியம், அதை அவர் வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டார்.