
ரங்கா அண்ணா எப்போது எங்கள் மில்லில் வேலைக்குச் சேர்ந்தாரென்று எனக்குச் சரியாக நினைவில்லை. ரங்கா அண்ணா பற்றி எனக்கு தெளிவாக நினைவிலிருப்பது சில காட்சிகள்தான்.
அப்போது மில்லிற்குள்ளேயேதான் எங்கள் வீடும் இருந்தது. மில் என்று ஒரு அடையாளத்திற்காகக் கூறப்பட்டாலும் நீங்கள் நினைப்பது மாதிரி தொழிற்கூடங்களுக்கு உரிய சட்ட திட்டங்களுடன், வெவ்வேறு பிரிவுகளில், சீருடை அணிந்து பணியாளர்கள் வேலை செய்யும் பெரிய மில் இல்லை அது.
அங்கு வேலை செய்தது ஏழு ஆண்கள், பதினாறு பெண்கள், வண்டி ஓட்ட ஒரு வண்டிக்காரர், ஆமாம் சரக்கு எடுத்து வர மாட்டு வண்டி தான், ஒரு கணக்குப்பிள்ளை, இரவு காவலாளி ஒருவர், இவர் சிலோன்காரர். இவர்கள் மட்டுமே. மேல் நிர்வாகம், வெளி வேலைகள் அனைத்தையும் என் அப்பா பார்த்துக் கொள்வார். மில்லில் ஆட்கள் வருகை, தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வது ஆகியன என் அம்மாவின் பொறுப்பு. இப்படி தான் எங்கள் துணி பதனிடும் மில் செயல்பட்ட்டது .நான் கூறுவது இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நடத்திய’ மில்லைப்பற்றி.
அப்போது மில்லிற்குள் இருந்த வீடும் ஒன்றும் பெரிய வசதிகள் நிறைந்த வீடு அல்ல. மூன்று தனி தனி அறைகள். அவற்றை வரவேற்பறை, படுக்கையறை என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். கடைசியில் ஒரு சமையலறை, கூரையில்லாத குளியலறை, சிறு ஆஸ்பெஸ்டாஸ் துண்டு போடப்பட்ட கழிவறை. முன்பக்கம் ஒரு பெரிய காரைபோட்ட களம் இருக்கும். இதுதான் எங்கள் வீடு.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, எங்கள் மில்லையும், பக்கத்து இடத்தையும் பிரிப்பதற்காக இடையில் இருந்தது மதில் சுவரல்ல. சில தென்னைமரங்கள்தான். அதிலும் அவை நடப்பட்டதே ஒரு மரம் எங்கள் பக்கம் சாய்வாகவும் இன்னோர் மரம் அவர்கள் பக்கம் சாய்வாகவும் நடப்பட்டிருக்கும். இதுவே அவரவர் மரம் என்பதற்கு அடையாளம். தென்னை மரத்தில் மாதம் ஒருமுறை தேங்காய் இறக்க காலையிலேயே ஆட்கள் வருவார்கள். அவர்கள் தலையை கண்டவுடன் நாங்கள் குளியலை அவசர அவசரமாக முடிப்போம்.
வீட்டின் அருகிலிருக்கும் மரத்தில் அவர்கள் ஏறும்முன்னர் குளித்தால்தான் உண்டு. அப்படி தேங்காய் இறக்கும் நாட்களில் வேலையாட்கள், (அவ்வளவு காலையில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு வந்திருப்பார்கள்) ஆளுக்கு இரண்டு மூன்று தேங்காய்களை எடுத்துக்கொள்வார்கள். ரங்கா அண்ணா ஒன்றையும் தனக்கு எடுத்துக்கொள்ளமாட்டார்.
“உனக்கு வேண்டாட்டி எங்களுக்குத்தான் குடுக்கிறது” என்று மற்றவர்கள் கூறுவதை காதில் போட்டுகொள்லாமல், தேங்காய்களை மூட்டை சேர்த்து காரை களத்தில் கொண்டுவந்து சேர்ப்பார்.
ரங்கா அண்ணாவுக்கு ஒடிசலான உடம்பு, தலை நிறைய செம்பட்டை முடி. வேலை செய்யும்போது பழைய சட்டை, வேட்டி தான் அவரின் உடை.வேலை முடிந்தவுடன் அவ்வளவு பழசாக இல்லாத வேறு சட்டை, வேட்டி.வேலையாட்கள் எல்லாருமே இப்படி தான், சீருடையெல்லாம் இல்லை.
மதிய உணவு நேரம் என்று குறிப்பாக இல்லாவிட்டாலும், ஒன்றரை இரண்டு மணி வாக்கில் வேலையை நிறுத்திவிட்டுத் தண்ணீர்த் தொட்டியில் கை கால் கழுவிவிட்டுச் சாப்பிட தூக்கு போசியுடன் அனைவரும் உட்காரும்போது ரங்கா அண்ணா எங்கள் வீட்டின்முன் வந்து நிற்பார். அது சாப்பாடு கேட்டு இல்லை. இரண்டு ரூபாய் கேட்பார். இது நாள்தோறும் நடக்கும் வழக்கம்.
என் அம்மா, ” சோறு போடட்டுமா ரங்கா” என்று கேட்பார். ” இல்லைங்க ரெண்டு ரூவா….” என்று எப்போதும் வாக்கியத்தை முடிக்கமாட்டார். கை கால் கழுவிவிட்டு, அந்த ஈரத்தைக்கூட துடைக்காமல் வந்து நின்றதால் அவர் பாதம் வைத்த இடத்தை சுற்றி தண்ணீர் வழிந்திருக்கும்.
ராமு, ரங்கா அண்ணா பின்னாடியே அவர் காலை உரசிக்கொண்டு நிற்கும்.
சில நாட்களில் என் அப்பா மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தால் உள்ளேயிருந்து குரல் கொடுப்பார். ” ரங்கா…எதுக்கு இப்போ ரெண்டு ரூவா…”. கண்டிப்பாக எதற்கு என்று என் அப்பாவிற்கு தெரியும். தினமும் நடக்கும் இந்த காட்சியில் ஒரு முறைகூட காசு எதற்கு என்று ரங்கா அண்ணா சொல்லி நான் கேட்டதில்லை. ஆனால் வாங்காமல் நகர மாட்டார். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ” ஏனுங்க, ஆளுங்க சத்தம் போடுவாங்க” என்று மெலிசான குரலில் கேட்பார். “சரி இந்த மோரை குடி தாரேன்” என்று அம்மா, ரங்கா அண்ணாவுக்கு என்று எப்பவும் வைத்திருக்கும் மோரை ஒரு போனியில் ஊற்றுவார். கட கடவென்று குடித்துவிட்டு இரண்டு ரூபாயை எதிர்பார்த்து கண்கள் பளபளக்க நிற்பார். இதற்குள் என் அப்பா ” சட்டையில ரெண்டு ரூவா இருக்கும் பாரு” என்று என்னிடம் சட்டையை காட்டுவார். ஓடி சென்று எடுத்து ரங்கா அண்ணாவிடம் கொடுத்தவுடன் ” பாப்பா” என்று மட்டும் தான் சொல்வார், அப்புறம் சிட்டாக பறந்து விடுவார். அவரின் ஓட்டை சைக்கிளை அவர் எடுக்கும்போதே ” ரங்கா பத்து நிமிசத்துல வா பாக்கலாம், லேட் பண்ணுனீனா அப்பொறம் பாத்துக்க ” என்று மற்ற வேலையாட்கள் குரல் கொடுப்பார்கள். எதையும் காதில் வாங்க மாட்டார்.
ஆனால் பதினைந்து நிமிசத்தில் வந்துவிடுவார். வரும்போது ஒரு கோணல் சிரிப்பு இருக்கும்.
எப்பவும் போல யாரிடமும் பேசாமல் வேலையை செய்வார். முன்னிலும் வேகமாக செய்வார்.
சம்பளம் எல்லாம் வாராந்திர சம்பளம்தான் மில்லில். அதுவும் ஒரு மீட்டருக்கு 20 காசு என்று கூலி. மொத்தமாக அந்த வாரம் எவ்வளவு மீட்டர் ஓட்டினார்கள் என்று கணக்கு பார்த்து, பெண்கள் கூலியை கழித்தது போக மிச்ச தொகையை ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள். இதில் யாராவது அந்த வாரம் ஒரு நாள் இரண்டு நாள் வேலைக்கு வரவில்லை என்றால் அதை லீவுக்காசு என்று ஒரு கணக்கில் அவர்களுக்கு சேரவேண்டிய பங்கில் கழிப்பார்கள். ரங்கா அண்ணா லீவே எடுக்க மாட்டார். ஆனால் மற்ற ஆட்களிடம் கழிக்கும் லீவுக்காசை ரங்கா அண்ணாவுக்கு கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். அப்பா காதுக்கு ரங்கா அண்ணாவுக்கு அந்த வாரம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று வந்தபின் ஒரு பஞ்சாயத்து நடக்கும். அப்போது ரங்கா அண்ணா ” அவியலே வச்சுக்கிட்டும்ங்க ” என்று எந்த சலனமும்மின்றி சொல்வார். அப்பா தான் கட்டாயப்படுத்தி ரங்கா அண்ணா பங்கை வாங்கித்தருவார்.
ஒரு நாளும் அவர் யாரிடமும் சண்டையிட்டோ, கோபப்பட்டோ எனக்கு ஞாபகம் இல்லை. சொல்லப்போனால் அவர் பேசுவதே அம்மாவிடமும், சிலோன்கார அய்யனிடமும் மட்டும் தான்.
சில இரவு நானும் ரங்கா அண்ணனும் , சிலோன்கார அய்யன் பற்ற வாய்த்த பீடியை அணைக்காமலே அப்படியே வாய்க்குள் மடக்கி வைத்து பின் வெளியே கொண்டுவருவதை எங்கள் வாய் கொள்ளா சிரிப்புடன் பார்த்திருக்கிறோம்.
வாராவாரம் ரங்கா அண்ணனின் அம்மா கூலி போடும் நேரம் வந்து மில்லில் இருக்கும் கறிவேப்பிலை மரத்தின் கீழ் ஒரு சிறு கல்லில் உட்கார்ந்திருப்பார். அவர் ரங்கா அண்ணனை விட ஒடிசல். நல்ல தடியான தண்டு இருந்த மூக்குத்தி போட்ட தடம் அவரின் இடது மூக்கில் தெரியும் கூலி வாங்கியவுடன் ரங்கா அண்ணா அவரின் அம்மாவிடம் மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டு, ” எடுத்துக்கிட்டு குடு மா” என்று மரத்தை சுரண்டுவார்.
எண்ணி பார்க்க தெரியாத அவரின் அம்மா அதிலேயே பாதி ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு ” என்கூட ஊட்டுக்கு வா ரங்கா, சோறு ஆக்கறேன்” என்பார். மிச்ச பணத்தை வாங்கிக்கொண்டு பதில் சொல்லாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவார் ரங்கா அண்ணா.
இரவு காவலுக்கு சிலோன்கார அய்யன் ஏழு மணிக்கு தான் வருவார், அவர் இரவு ரங்கா அண்ணா வரும் வரைக்கும் மர கேட்டை பூட்டமாட்டார். இரவு ரங்கா அண்ணா மில்லில் தான் தங்குவார்.
நாங்கள் காற்றுக்காகக் களத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ரங்கா அண்ணா கையில் ஒரு பொட்டலத்துடன் வருவார். அதில் அல்வா அல்லது ஜிலேபி என்று ஏதாவது ஒரு இனிப்பு இருக்கும். அதில் பாதியை ராமுவுக்கு போடுவார். மிச்சம் அவருக்கு. இப்போதும் அந்த கோணல் சிரிப்பு இருக்கும். ராமு, ரங்கா அண்ணா பக்கத்திலேயே அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருக்கும்.
இருந்திருந்த மாதிரி எழுந்து போய் தண்ணீர் தொட்டியில் மிதந்து கொண்டிருக்கும் சின்ன வாளியில் ஒரு வாளி தண்ணீர் கோரி கறிவேப்பில்லை செடிக்கு ஊற்றுவார். அம்மா, சிலோன்கார அய்யன் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்.
அந்த வருடம் மே மாசம், இன்னும் பள்ளி திறக்க இருபது நாள் இருக்கும் போது டயர் வண்டி உருட்டிக்கொண்டு வைக்கோல் வண்டியின் பின்னாலிருந்து ரோட்டை தாண்டும்போது எதிரில் வந்த காரில் அடிபட்டு என் தம்பியை கோயமுத்தூர் கே.ஜி ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் செய்தார்கள். அடிபட்ட அன்று அம்மாவும், அப்பாவும் கோயமுத்தூர் போனதுதான் மூன்று வாரம் வீட்டிற்கே வரவில்லை. நானும் அக்காவும் எங்கள் மில்லுக்கு பக்கத்துக்கு இடத்த்துக்காரர் வீட்டில் தான் இருந்தோம். அந்த ஆச்சி தான் எங்களுக்கு சாப்பாடு போட்டு பார்த்து கொண்டார். பள்ளி திறந்ததும், எங்கள் வீட்டில் இருந்து கிளம்பி, ஆச்சி வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு போய் வந்தோம்.
இரவு எங்கள் வீட்டிலேயே படுத்துக்கொள்வோம். ரங்கா அண்ணா, ராமு, சிலோன்கார அய்யன் எல்லாரும் தான் காவல். அப்பா இல்லாத அந்த மூன்று வாரமும் ரங்கா அண்ணா இரண்டு ருபாய்க்கு என்ன செய்தார் என்று நினைப்பேன்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள், ரங்கா அண்ணா செய்தித்தாளில் சுற்றிய நாலு கடலை மிட்டாய்களை வாங்கி வந்து அதே மெல்லிசான குரலில் “பாப்பா” என்று கையில் கொடுத்து விட்டு போவார்.
அப்பா இல்லாவிட்டாலும் கணக்குப்பிள்ளை மில்லில் வேலை நிற்காமல் பார்த்துக்கொண்டார்
மூன்றாவது வாரம் மில்லில் ஒரே பரபரப்பு. ” ரங்கன் பாரு போயிட்டு வந்திருக்கான்” என்று ஆளாளுக்கு பேசினார்கள். விஷயம் இதுதான். ரங்கா அண்ணா, அம்மா, அப்பா, தம்பியை பார்க்க கோயமுத்தூருக்கு சைக்கிளில் போய்விட்டு வந்திருக்கிறார். எங்கள் ஊருக்கும் கோயமுத்தூருக்கும் சரியாக நூறு கிலோமீட்டர் ( அதனால் தான் ஈரோ 100 என்றே பஸ் உண்டு ). போக வர இருநூறு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்திருக்கிறார்.
நாற்பது நாள் கழித்து வீட்டிற்கு தம்பியை கூட்டிக்கொண்டு அம்மாவும், அப்பாவும் வந்தார்கள். அம்மாவுக்கு, பக்கத்து இடத்துக்கார ஆச்சி தான் கொஞ்சநாள் உதவி செய்தார்கள்.
தம்பியை பற்றியோ, அச்சிடேன்ட் பற்றியோ அம்மாவும் அப்பாவும் பார்க்க வந்தவர்களிடம் பேசுவதை விட, ரங்கா அண்ணா படிக்கச் தெரியாமல், கே.ஜி என்று ஆஸ்பத்திரி பெயரை மட்டும் கேட்டு கேட்டு நூறு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து ஆஸ்பத்திரிக்கு வந்து நின்ற போது அடைந்த ஆச்சர்யத்தை தான் மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். ஒரு நாள் முழுக்க ஆஸ்பத்திரியிலேயே இருந்துவிட்டு வந்திருக்கிறார் ரங்கா அண்ணா.
ஆனால் அதன் பின்னர் ரங்கா அண்ணா எதையும் கண்டுகொள்ளவில்லை. எப்படி 100 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்ச என்று கேட்டால் எதுவும் சொல்லமாட்டார். வழக்கம் போல இரண்டு ரூபாய் கேட்டு மதியம் நிற்பார். எங்களுக்கு கடலை மிட்டாய் வாங்கி தருவது மட்டும் அம்மா வந்துவிட்டதால் நிறுத்திவிட்டார் .அப்போ அப்போ ஒரு நாள் வேலைக்கு லீவு போடுவார், அப்பா கேட்டால் திருச்சி போய்ட்டேங்க என்பார். “அங்க திருச்சில என்ன ரங்கா.. ” என்றால் ஒன்றுமே சொல்லாமல் சிரிப்பார்.
அப்பாவிடம் சொல்லவில்லை, ஆனால் அம்மாவிடம் மட்டும் தான் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்றதாக சொல்வார்.
” சாமி பார்த்தியா” என்று அம்மா கேட்டால் ” இல்லீங்க கோயில் மண்டபத்துல படுத்திருந்துட்டு வந்துருவனுங்க” என்பார். ” ஏ ரங்கா மண்டபத்துல போய் படுக்கறதுக்கா இங்க இருந்து போன” என்றால் “ஆமாங்க” என்பார்.
நான் எட்டாம் வகுப்புக்கு சென்று விட்டேன். ரங்கா அண்ணா நிறைய நாள் வேலைக்கு வரவில்லை. ஆனால் மில்லில் தான் சுருண்டு படுத்துக்கொள்வார். அப்பா அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போனார். ஆனால் அவர் உடம்புக்கு என்ன என்று அவரோ, அம்மாவோ பேசி நான் கேட்கவில்லை. மாத்திரை கவர், ரங்கா அண்ணா தன் வேட்டி சட்டையை சுருட்டி வைத்திருக்கும் தண்ணி தொட்டி பக்கத்து கூரையில் சொருகப்பட்டிருக்கும்.
வேலை செய்யாத நாட்களில் ரங்கா அண்ணா இரண்டு ரூபாய் கேட்டு வந்ததில்லை. அம்மா தரும் தயிர் சோறு, உப்புமா என்று அதில் நாலு வாய்க்கு மேல் சாப்பிடமாட்டார், ராமுவுக்கு தான் போடுவார். எந்நேரமும் அம்மா தந்த ஒரு ட்ரான்சிஸ்டாரை வைத்து பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பார். அவரின் தலைமாட்டில் தான் ராமு உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருக்கும்.
ஒரு நாள் அம்மாவிடம் ரங்கா அண்ணா தன் தலையை பிடித்துக்கொண்டு “நானும் கம்பளிப்பூச்சி ஆயிருவேனுங்களா” என்று கேட்டது, “அப்டி எல்லாம் ஆகமாட்ட ரங்கா, மாத்திரையை சாப்பிட்டு படு” என்று என் அம்மா சொன்னது இவை எதுவும் எனக்கு புரியவில்லை. ரங்கா அண்ணாவிடம் அந்த கோணல் சிரிப்பு இப்போதெல்லாம் இல்லை. இனிப்பு சாப்பிடுவதையும் நான் பார்க்கவில்லை.
ஒரு சனிக்கிழமை, பள்ளி விடுமுறை. நேரமாக குளித்துவிட்டு காரை களத்தில் உட்கார்ந்து கொலுசு திருகாணியை திருகிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தேன். ரங்கா அண்ணாவின் அம்மா கருவேப்பில்லை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தார்.
அப்பா சிறிது நேரத்தில் வெளியே வந்தவுடன் “ஊட்டுக்கு கூப்டா, திருச்சி போகோணும்ங்கறானுங்கோ” என்று அழுதார். அப்பா, ரங்கா அண்ணாவின் அருகில் சென்று ” என்ன ரங்கா பண்ணுது, ஆஸ்பத்திரிக்கு போலாமா” என்று கேட்டார். ” ஒண்ணுமிலீங்க திருச்சி போய்ட்டு வந்திருவேனுங்க” என்று தன் மழுங்கிய கால் நகங்களை தடவிக்கொண்டே சொன்னார். ” சரி உங்க அம்மாவையும் கூட்டிட்டு போ” என்று அப்பா நூறு ருபாய் கொடுத்தார். ” வேட்டி ஒன்னு தாங்க” என்று அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டு ” சாப்பிட்டு போ ரங்கா” என்று சோறும் குழம்பும் எடுத்துக்கொண்டு போன அம்மாவிடம் ” தயிர் சோறு போடுங்க” என்று சாப்பிட்டுவிட்டு மஞ்சள் பையில் இன்னுமொரு சட்டையை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினார்.
ராமுவை நீவிவிட்டு, என்னை பார்த்து “பாப்பா” என்றார். அப்பா என்ன நினைத்தாரோ எங்கள் மில் தொலைபேசி எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதி ரங்கா அண்ணாவிடம் “பாக்கெட்ல வச்சுக்க ரங்கா” என்றார். எதுவும் சொல்லாமல் ரங்கா அண்ணா வாங்கிக்கொண்டார். அந்த திங்கள்கிழமை நான் கண்ணில் சூட்டு கொப்புளம் வந்ததால் பள்ளிக்கு செல்லவில்லை. மத்தியானம் அம்மா தான் தொலைபேசியை எடுத்தார். பக்கத்து இடத்துக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த அப்பாவை கையை ஆட்டி கூப்பிட்டார். அப்பா வந்து பேசி, தொலைபேசியை வைத்த பின் ” நானே போய் பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு, சட்டைப்பையில் பணத்தை சரிபார்த்துக்கொண்டு கிளம்பினார்.
செவ்வாய்க்கிழமை நான் பள்ளிக்கு கிளம்பும் வரை அப்பா வரவில்லை.
அன்று சாயந்திரம் அப்பா, அம்மா, பக்கத்து இடத்துக்காரர், எல்லாரும் ரங்கா அண்ணாவின் அம்மா பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அம்மாவின் கையை பிடித்த படி, ரங்கா அண்ணா கொண்டுபோன மஞ்சள் பை அவர் அம்மாவின் அருகில் தரையில் இருப்பதை பார்த்தேன். ” கோயிலுக்கு போய் சேரவே மத்தியானம் ஆயிருச்சுங்க. சாமி கும்பட போலாமானு கேட்டனுங்க. சித்த கழிச்சு போலாம்னு சொல்லிட்டு அல்லைல இருந்த மண்டவத்துல படுத்தானுங்க. என்ன நெனச்சானோ தெரியலீங்க. உடனே எந்திரிச்சு போய் புளி சோறு வாங்கிட்டு வந்து தந்துட்டு அதுல ஒரு வாய் தான் தின்னானுங்க. படுத்துக்கிட்டான். நான் ரெண்டு வாய் சாப்ட்டேனுங்க, ரங்கன் என்னை பாத்துகிட்டே அரை கண்ண மூடி தூங்குனானுங்க. லேசா இருட்டும் போதே அட வெளக்கே போட்டுட்டாங்க கோயில்லன்னு, ரங்கா ரங்கானு எழுப்புனங்க , பேச்சு இல்லீங்க. எப்போ அந்த உசுரு போச்சுன்னே தெரீலீங்க” என்று நெஞ்சு விம்ம சொல்லிவிட்டு சன்னமான குரலில் அழுதார். ராமுவும் அந்த மஞ்சள் பையையே பார்த்துக்கொண்டிருந்தது.
ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form: