புன்னகைக்கும் அப்பா

இரை விழும் நேரத்திற்கு காத்திருக்கும் ஓநாய் கூட்டத்தை போல நாங்கள் அந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்தோம். 

*********

இல்லை. இவர் ‘அவர்’ இல்லை. எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ‘அவரின்’ சாயல் கிஞ்சித்தும் இவர் மேல் படர்ந்திருக்கவில்லை. இவர் ‘அவர்’ இல்லை. ‘அவரா’க இருக்கவும் முடியாது.

நான் பார்த்து ஆகர்சித்தது இவரையா? இல்லை! எனக்கு நிச்சயமாக தெரியும். இல்லை! இவர் ‘அவர்’ இல்லை.

‘அவர்’ வேறொருவர். ரொம்ப கம்பீரமானவர். டாம்பீகமானவர். கணீர் கணீரென பேச கூடியவர். விசேஷங்களில் தழைய தழைய பட்டு வேட்டி கட்டிக் கொண்டு வலைய வருபவர். கம்கட்டில் அப்பிய பாண்ட்ஸ் பவுடர் மணமணக்க நரிவிசாக இருப்பவர்.  “என்ன மாப்ள”, “எம் பொண்ணு”, என்று எல்லோரையும் வாய் கொள்ள உரிமையாக அழைப்பவர். நொடி பொழுதில் நாகமாக கூடியவர்.தூரத்தை பற்றிய எந்த கவலையுமின்றி விறு விறுவென அனாயசமாக மைல் கணக்கில் கூட நடக்கக்கூடியவர். 

ஆனால் இவரிடமோ அவரின் எந்த அடையாளங்களும் தென்படவில்லை. இவர் உடலில் அந்த  திமிர் இல்லை. எரியும் கண்களின் கோவமான பார்வை இல்லை. தடித்த உதடுகளில் புகையிலையின் சாறு  ஒட்டியிருக்கவில்லை. கன்னங்கள் ஒட்டி போயிருக்கின்றன. சவரம் செய்யாத ஒருமாத தாடியில் சுணங்கிக்கிடக்கிறார்.

தலைமயிர், புருவம், இமைகள், மீசை, தாடி, நெஞ்சு, கை கால், என்று உடலில்  ஒரு இடம் விடாமல் எல்லா மயிர்களும் சொல்லி வைத்தாற்போல வெள்ளி வெள்ளியாய் முளைத்து கிடக்கிறது. தேடிப் பிடித்தாலும்  ஒன்று கூட கருப்பாக அம்புடவில்லை. எல்லாமும் வெளுத்து போய்விட்டது.  இடுப்பில் சுற்றியிருந்த கைலியை மட்டும் விலக்கி பார்க்க ஏனோ மனமில்லை. அது இங்கிதம் கருதி அல்ல.

நாட்கணக்காக விளக்காததால் வெற்றிலைக் காரை  படிந்த பற்கள் ஏதோ போல கெட்டிப் போயிருந்தன. வாயை பிளந்து பிளந்து அவர் விடும் மூச்சில் லேசான நாற்றம் கலந்து வந்தது. அடுப்படி சுவர் போல மேலண்ணத்தில் கரிப் பிடித்திருந்தது. 

‘எல்லாம் சரி தான். உப்பு மட்டும் தான் ஒரு கல் ஜாஸ்தி போயிடுச்சி. ஒரு கல். அவ்ளோதாங்…நாபகம் வச்சுக்கினும்னு எம் புள்ள சமச்சா போல…கழுத… அந்த ‘ழ’ வை  அழுத்தம் திருத்தமாக எத்தனை சுத்தமாக  உச்சரிப்பார் மனுஷன்). பரவால்ல பரவால்லமா விடு, விடு,’  சாப்பாட்டைத் துல்லியமாக மதிப்பிடும் அந்த சிவப்பு நாக்கு வெந்து போயிருக்கு இவருக்கு. இவர் நிச்சயமாக அவர் கிடையாது.

தலை மாட்டில் நின்று கொண்டு இவருக்கு  அம்மா ஏன் தலைகோதி விடுகிறாள் என்பது மட்டும் எனக்கு புரியவேயில்லை. சிதிலமடைந்த பழங்கால அழும் அவயாம்பா சிற்பம் போலிருகிறாள். அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போயிருந்தது அவளுக்கு. கருத்த முகத்தில் மூக்கு மட்டும் வெடைத்து சிவந்திருந்தது.

ஏ…யய்யா…ஏங் ராசா…என்னிய வுட்டு புட்டு போயிட்டியா…எங்சாமீ…கொல்லி போட பிள்ளைங்க கூட இல்லாம நீயும்  ஒன்னுமில்லாம போயி என்னியும் இப்பிடி அநாதி பொணமா ஆக்கிபுட்டியே அட பாவி மனுசா…நீ உருப்படுவயா…என் ராசாவே! ஏங் மகராசாவே…ஐயோ…ஐயோ…ஆ…

எதிர் படுக்கையில் யாரோ ஒரு மனிதனின் மாரில் முட்டி மோதி குய்யோ முறையோ வென்று அழுது கொண்டிருந்தாள் வயசான அம்மாள் ஒருவள்.  ஓவென குரலெடுத்து அவள் அழுத சத்தத்தில் நான் நின்றிருந்ததை நிமிர்ந்து பார்த்து அம்மா கவனித்தாள். தாண்டி வந்து கட்டிக்கொண்டாள். குலுங்கினாள்.  செருமினாள். பின் அழுதாள்.

எப்பா…

ரா…சு…

தம்பீ…எப்போப்பா வந்த. நயிட்டுக்கு சாப்பிட்டியா?கார்லயா வந்த?

அம்மா அப்படி கேட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அம்மாவை பொருத்தவரை பஸ், ரயில், ஆட்டோ… ஏன்,   ஸ்கூட்டரில் வந்தால் கூட  அதையே தான் கேட்டிருப்பாள். அப்பாவுக்கு சைக்கிள் விட தெரியாது. அவர் கூட எங்கு போனுனாலும் நட பயணத்தில் தான். அதனால் அம்மாவுக்கு நடக்கிறத தாண்டி எல்லாமே கார் பயணம் என்றாகிவிட்டது.

ராசுப்பா… உங்க அப்பாவ பாத்தியா…பாரு…ய்யா…மூக்கை உறிஞ்சிக்கொண்டே ரெண்டாவது முறையாக அப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் அம்மா! இந்த முறையும்  நான் அப்பாவை அழுமுகமாகவே எதிர்கொள்கிறேன்!

பாருப்பா…ராசு…ஒன்னியதான் பாக்கணும் பாக்கணும்னு  ராத்திரி முழுக்க தூங்கமா  சொல்லிக்கிட்டு இருந்தாங்க… பொட்டு தூக்கம் இல்ல கண்ணுல. ரவ சோறு இறங்கல வாயில. ரெண்டு நாள்ளா ஒரே பொலம்ப…எம்புள்ள வருது…எம்புள்ள வருதுன்னு…அரிப்பா அரித்து எடுத்துட்டாரு… பாருப்பா…உங்கப்பாவ பாரு.ஏதாவது பேசுப்பா அவுங்ககிட்ட. இந்தா இந்த தண்ணிய அவுங்களுக்கு கொஞ்சம் குடு, வட்டாவை நீட்டினாள்.

நான் கண்களை சுருக்கி  அம்மாவை பார்த்தேன்.  அவள் தூங்கிக்கொண்டிருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். எதையோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஒரு ஆள் மட்டும்  கூட இருங்க. மத்தவங்க எல்லோரும் கிளம்புங்க. டாக்டர் வர்ற நேரம். பாத்தாக்கா சத்தம் போடுவாங்க….பேசன்ட பாக்க வந்தவங்கலாம் வெளிய போங்க பள்ளிக்கூட பிள்ளை மாதிரி ஒப்புவித்து முடுவா திரும்பினாள் அந்த பணி நர்ஸ். 

எனக்கு தேவையில்லாமல் நிற்பதை போல இருந்தது.அங்கிருந்து நகர்ந்துவிடாமல் என்றபோது, உங்கப்பாவ பாருடா…ரா…சூ… அம்மாவின் உடைந்த குரல்.

இல்லை . இவர் அவர் இல்லை…மனதுக்குள் நான்.

உங்கப்பாவ பாருடா… அழுதுகொண்டே மீண்டும் அவள்.

இல்லை இவர் அவராக இருக்க முடியாது…மீண்டும் நான்.

உங்கப்பாவ…

இல்லை….

மனதுக்குள் தேவையில்லாததொரு தர்க்கதின் கூச்சல். பேரிறைச்சல். ஆழ்மனதிலிருந்து வந்த அச்சத்தக் கோர்வை ஆஸ்பத்திரி சுவர்களில் மோதி மோதி உடைகிறது. காது சவ்வுகளை கிழித்துக் கொண்டு  மண்டைக்குள் குடைகிறது. ரெண்டு கைகளால் காதை அழுத்தி பொத்திக் கொண்டேன். அச்சத்தத்தில் இப்போது உடல்முழுவதும் அதிர்கிறது அச்சத்தில்!

“உங்கப்பாவ பாருடா…”

“உங்கப்பாவ பாருடா…”

எனக்கு அந்த மாதிரி ஒரு அப்பாவை பார்த்தது போன்ற உணர்வு இம்மி துகள் அளவு கூட இல்லை! முயன்று பார்த்தும் நினைவில் வரவில்லை. கலகலப்பாக!இயல்பாக!சந்தோஷமான!சிரித்த முகத்துடன் ஒரு அப்பாவை! 

அவரின் பழைய கருப்பு வெள்ளை போட்டோக்களில் ஒன்று விடாமல் தேடி களைப்பானது தான் மிச்சம்.  மருந்துக்கு கூட அவைகளில் சிரிப்பு இல்லை. ஏதோ பிடிவாதமாக சிரிப்பை அடக்கிகொண்டு தான் போஸ் கொடுத்திருக்கிறார் எல்லா தருணத்திலும். 

சிரிப்பின் மீது அப்படியென்ன பகை. ஏன் அத்தனை கோவம்  இருந்தது என்பது எங்களுக்கு தெரியாது. எதையும் எங்களிடத்தில் அவர் பகிர்ந்துகொண்டதில்லை. இதோ இப்போது இந்த நொடி வரையில். 

நாங்கள் பார்த்து வளர்ந்ததெல்லாம் எப்போதும் ஏதோ  மிடுக்குடனே இருக்கும் அப்பாவை தான்.  வாய் விட்டு சிரிக்க நோகுமென்று உதட்டு ஓரங்களிலே அடக்கும் அப்பாவை தான்.  

அப்பயி தவறியபோதும் அழாதவர் அக்கா கல்யாணத்தின் முந்தைய இரவில் குடித்துவிட்டு பொருமி பொருமி அழுது புலம்பியதாக அவருடன் அந்த இரவை கழித்த அண்ணன் சொன்னது நினைவில் வந்துபோகிறது.

அவர் புதிர்களின் புனைவு. முரண்களின் உரு. 

சினிமா நாடகம் என்று பொழுதுபோக்கில் நாட்டம் இல்லாதவர், தெருவோர ஆர்கெஸ்ட்ரா முடியும் பின்னிரவு வரை கூட  நின்றுகொண்டே ரசிப்பவர். 

தெரியாமல்  சினிமா பார்க்க போகும் அம்மாவை சத்தம்போடும் அதே அப்பா தான் நாலாவது படிக்கும் என்னிடம் டிக்கெட்டுக்கு சில்லறை காசு கொடுத்து தனியாக  சினிமாவுக்கு போய் வர சொன்னவர்.

எப்பவாவது மிகையாக குடித்திருந்தாலோ, ரொம்ப சந்தோஷமாக இருந்தாலோ  அவர் முணுமுணுக்கும், “காலங்களில் அவள் வசந்தம்” வரிகள் மட்டும் அவர் குரலிலேயே காற்றில் இன்னமும் கரையாமல் மிதந்தபடி இருக்கிறது. வீடு முழுக்க நிறைந்து தளும்புகிறது.

அவரச அவசரமாக  வேலைக்கு கிளம்பி அஞ்சரை மணி ரயிலை பிடிக்க விடு விடுவென நடந்து தெருமுனையில் மறையும் அப்பாவின் உருவம், ரயிலில் விற்கும் பலாச்சுளை, காராமணி சுண்டல், வெள்ளரிபிஞ்சு, கொய்யாக்கா, சென்னாகுன்னி கருவாட்டுத்தூள் என்று  கையில் எதையாவது பிடித்துக்கொண்டு களைப்பாக இரவில் தான் தோன்றும்.

வண்டிக்கு நேரம் ஆகிவிட்டதாக அம்மாவை சத்தம்போட்டுவிட்டு கடுப்புடன் கட்டிசோறு எடுத்துபோகாத  மதியங்களில் அவர் சாப்பிட்டதே இல்லை.  தன் பசியை மறக்க செய்துவிட்டு அந்த காசில் எங்களுக்கு மெது பொட்டலம் வாங்கிவரும் அப்பா  தான் கண்களில் நிழலாடுகிறாரே தவிர

சிரித்துப் பேசி கலகலப்பான சாதாரண ஒரு அப்பாவை உணர்ந்த மாதிரி எனக்கு நினைவில்லை. 

ஏங்க…என்னங்க…. தோ… ராசு வந்துருக்கான் பாருங்களே…செத்த முழிச்சு தான் பாருங்களே. நீங்க தானே கேட்டுகிட்டே இருந்தீங்க…த பாருங்க புள்ள அழுவுறான்…புள்ளைங்க எல்லாம் அழுவுதுங்க பாருங்க. அப்பிடியே இருங்காதீங்க…எழுந்திரிங்…க…எழுந்திரிச்சி உக்காருங்க. 

ஒருபக்கமாக வாயை கோணிக்கொண்டவரின் தலையை மடியில் தாங்கிக்கொண்டு ’அப்படியெல்லாம் பண்ணாதீங்க,’… எதுவும் சொல்ல முடியாது அம்மா அழுதாள்.  பாசமும் அழுகையும் அவளிடம் எப்பவுமே கையிருப்பு இருக்கும். எங்கேயாவது ஒளித்துவைத்திருப்பாள்.

’இந்தாப்பா இந்த தண்ணிய உங்கப்பாவுக்கு கொடு,’ மூக்கை சிந்தி புடவையில் துடைத்து கொண்டாள்.

நான் ஏனோ வட்டாவை  வாங்க மறுத்தேன்.எனக்கு உடல் லேசாக உதறியது. காதின் பின்பக்கத்தில் சர்ர்ரென வெப்ப காற்று. அடிவயிற்றில் ஏதோ உலப்பல்கள். சீழ் வைத்த புண்ணை குளத்து மீன்கள் கவ்வி இழுப்பது போல உள்ளுக்குள் ஏதோ கடுகடுத்தது.

அம்மாவின் அழுகையையும், பதட்டத்தையும் காணும் போது இவர், அவராக இருப்பாரோ என்ற ஐயம் அப்போது தான் உரைத்தது  எனக்கு.

ஒருவேளை இவர் அவராக இருந்து இந்த தண்ணீர் அவரின் கடைசி தண்ணீராகி போனால்……உள்ளிருந்து அந்த குரல்.

ச்சீச்சீ… என்ன கற்பனை இது. நான் தலையை குழுக்கிக்கொண்டேன். நீர் கோர்த்த கண்களை அகல திறந்து வைத்தேன். 

வாதகனத்தில் விழுந்த உடல் மீது பாம்பு ஊர்வதை போல இருந்தது. அது கையறு நிலை. கைமீறிய தருணம். 

பட்டாளத்திலிருந்து நீ வந்ததே இவரை அள்ளி வைக்க தான்.…மீண்டும் அதே குரல் குரூரமான அமைதியில் ஒலித்தது. 

அப்படி ஒரு நினைப்பு வந்ததற்கு உண்மைக்கு வெட்கப்பட்டேன். எனக்கே என்மேல் அருவெறுப்பாக இருந்தது. குனிந்து நின்றேன். தரை பார்த்தேன்.  மனதில் நினைப்பது எல்லாமும் உலகுக்கு கேட்காதபடி இருப்பது தான் நல்லது!

ஏங்க…என்னங்க…தோ ராசு வந்துட்டான் பாருங்க…கண்ண தொரங்க… நேத்திக்கு சொல்லிக்கிட்டு இருந்திங்கல்ல காலையில புள்ள வந்துடுவான்னு. தோ …வந்துட்டான் பாருங்க.  எழுந்திருச்சி பாருங்…க…குலுங்கினாள். ஆச்சரியம் தான். அவளிடம் கண்ணீர் இன்னமும் மிச்சமிருக்கிறது!

பித்து பிடித்தவள் போல  மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தாள். இடையிடையே மாரில் அறைந்துகொண்டாள்.

என்னவெல்லாமோ பேசி பேசி இவரை கண் முழிக்க வைக்க அவள்  போராடிய போராட்டமும் கெஞ்சல்களும் இவருக்கு கேட்கவில்லை போலும். அப்படியே பிரக்கனையின்றி கிடந்தார். 

போன பொங்கலுக்கு பார்த்து,  சண்டை பிடித்து, கோவித்து கொண்டு வேலைக்கு கிளம்பும் போது  வெத்து மாரோடு வீட்டுவாசல் கதவோரம் நின்று கொண்டிருந்தவர் இவர் கிடையாது. 

கண்கள் நீர் திரையிட்டு மறைத்து கொண்டது. இமைகளை சிமிட்டி கொண்டே நின்றேன். நெஞ்சு விம்மி விம்மி வரும் அழுகையை தொண்டையில் புதைக்க நான் போராடியது அம்மாவுக்கு மட்டும் தெரிந்திருக்கலாம். என்னையே பார்த்தாள். அவளுக்கு  என்னை ஓய செய்ய வேண்டுமா வேண்டாமா என்று புரியாது தவித்தாள். 

அது அவளின் கையறு நிலை! கைமீறிய தருணம்!

என்னங்க…என்னங்க… அம்மா சதா இரைந்துக்கொண்டே இருந்தாள். அழுது கொண்டே இருந்தாள். என்னையும் அவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தாள்.

நான் செய்வதறியாது தவித்தேன். ஏன் என்று தெரியவில்லை, நான் அழுபவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். 

அப்போதெல்லாம் எனக்கு வெனவு தெரிந்துவிட்டிருந்தது. அப்பா சாப்பிட உட்கார்ந்தாலே எனக்கு பயமாக இருக்கும்.  ஏதோ ஒருவித பதற்றம் வந்து தொத்திகொள்ளும். 

உப்பு இல்ல, காரம் பத்தல, எதுக்கு தெரியாதத செய்யணும், கொஞ்சமா வையி, சமைக்கும்போதே ஒருவா போட்டுபாரு, அது இதுன்னு ஏதாவது குறைசொல்லிக்கொண்டே தான் சாப்பிடுவார்கள். அம்மாவை திட்டி தீர்ப்பதற்காக தான் அவர் சாப்பிட உட்காருகிறாரோ என்று கூட எனக்கு தோன்றும். அவரிடம் திட்டு வாங்காது அம்மாவின் நாள் முற்று பெறாது.

என்னடா உங்கப்பா இன்னைக்கு ஒன்னும் சொல்லல…ஏன்…என்னாச்சு…கொளம்பு நல்லா இருந்திச்சா…என்று கேட்டு ஈ என்று ஒரு சாடை செய்யும் போது அம்மா அவ்வளவு அழகாக இருப்பாள். அதற்காக வேண்டியே அப்பா அம்மாவை திட்டாமல் இருந்திருக்கலாம். அடிக்கடி அப்படி அம்மாவை பார்ப்பதற்கு எங்களுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை. 

அவருக்கு சாப்பாட்டில் ஏதோ தீராத  அதிருப்தி. அது கோவமாக மாறி அம்மாவை குதறும். ஆனால் அந்த கோவத்தை ஒருநாளும் எங்கள் மீது அவர் காட்டியதேயில்லை. 

எங்களை  அவர் அடித்ததும் கிடையாது. ப்ச்…அவரின் கைகள் அப்படியேனும் எங்களை கொஞ்சமாக ஸ்பரிசித்திருக்கலாம் தான்.

ஆனால் ஒருமுறை அவர் வாங்கிவந்திருந்த சுவீட் பாக்ஸை யாருக்கும் தராது பறித்துக்கொண்டு ஓடிய என்னை மறித்து வெளுத்தது இப்ப இல்லை அப்பவும் வலிக்கவில்லை. எனக்கு வலித்துவிடக் கூடாது என்றே தான் அடித்திருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.

அம்மாவை அவர் கொடுமை செய்வதாக சிறுவயதில் நான் நினைத்துக்கொள்வேன். அவரை மனதுக்குள் வைவேன். ஆனால் ஒருநாள் அம்மா முடியாது படுத்தபோது,  ‘அம்மா’… ‘எடி…அம்மா’ …வென்று பதறியடித்தவாறு அவர் உச்சரித்த பதத்தில் கொஞ்சமாக காதலும் கலந்திருந்தது அப்போது தான் எனக்கு புரிந்தது. 

அங்ங…அங்ங…ங்…ஆ…

தீடீரென உச்சஸ்தாதியில் துடித்தார் படுக்கையில் இருந்தவர். உயிரின் அழைப்பு! உடம்பை அங்கும் இங்குமாக முறுக்கினார். விரல் சூப்பும் குழந்தை போல கட்டைவிரலை உயர்த்தி  சின்னதாக ஒரு செய்கை.

தண்ணீ கேக்குறாங்க, குடு …குடு…இந்தா குடு…

நான் அசைவின்றி நின்றேன்.

அவளே தேக்கரண்டியில் வைத்து சொட்டு சொட்டாக வார்த்தாள். ஏதோ முனகிக்கொண்டே மூன்று வாய் முழுங்கியவர் நாலாவது வாய்க்கு சட்டென கோபமாகி,  ப்…ச்…போ…ரு…

ஒளி மங்கிக்கொண்டிருந்த பஞ்சடைந்த கண்களால் அம்மாவை முறைத்த அந்த நொடியில் எனக்கு உடல் சில்லிட்டது. மயிர்க்கால்கள் உயிர்த்துகொண்டன. கை கால்களில் சன்னமான உதறலை உனர்ந்தேன். அமுக்குப் பிசாசு  நெஞ்சை அழுத்துவது போல மூச்சு திணறியது. நிமிர்ந்து பார்த்தேன். அம்மாவும் தான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அனிச்சையாகச் சிரிப்பு வந்துவிட்டது.  நாங்கள் சிரித்தோம் அழுதுகொண்டே.

அந்த ஒற்றை பார்வை பொளேரென்று ஓங்கி அறைந்ததில் என் எல்லா குழப்பங்களும் வத்திபோயின. நான் ஊர்ஜிதபடுத்திகொண்டேன். இவர் அவர் தான்! அவரே தான்!

என் அப்பா!

அது ஒரு மழைநாள். காய்கறிகள் வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பும் வேளையில் சட்டென பிடித்துக்கொண்டது. புளியமரமும் கொடுக்காப்புளியும்  ஒன்றோடொன்று உரசி சிலிர்த்து கொண்டன. மழைகுருவிகளின் கீச்சுகளுக்கு தவளைகள் குதியாட்டம் போட்டபடி இருந்தன. சாலையில் ஒரு திடீர் அருவி, திடீர் குளம் குட்டை என்று செயற்கை செய்திருந்தது அந்த மாலை நேரத்து மழை. சின்ன சின்னதாக சில ஓடைகள், அதில் சில கப்பல்கள். ஒன்று ஒருபக்கமாக சாய்ந்தபடியும்,  ஒன்று முற்றிலும் மூழ்கியநிலையிலும்,  சிலவை கரைதட்டியும் நின்றன. யாரோ என் வயத்துக்காரர்களின் காரியம் தான். மார்கெட் கொட்டகையில் நாங்கள் ஒதுங்கினோம். எங்களை மேலும் கீழுமாக ஏறிட்டுவிட்டு உள்ளே அனுமதித்தது  அந்த நாய்.  தெருநாய்கள் கருணை மிக்கவை. தொப்பலாக நனைந்திருந்தது அது. சதா உடம்பை உதறியபடியே இருந்தது. 

ஒடுங்கியபடியும் நடுங்கியபடியும் நின்ற கோழி ஒன்று என்னையே முழித்து முழித்து பார்த்தது. நான் கீற்றுகளின் நுனியில் முளைக்கும் துளிகளை பறித்துகொண்டிருந்தேன். தூறல் நின்றதும் நாங்கள் கலைந்து சென்றோம். யாரிடமும் யாரும் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை பஸ் பயண நட்பு போல. நாங்கள் சதசதவென்று அந்த செம்மண் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். மொத்தம் எட்டு கால்கள். அவற்றில் சேறுபடாத ரெண்டு மட்டும் வெள்ளி கொலுசிட்டு அம்மாவின் மடியில் குந்தியிருந்தன. 

ஒருகையில் தங்கை மற்றொன்றில் காய்கறி கூடை. ரெண்டையும் கெட்டியாக பிடித்திருந்தாள் அம்மா. நான் முன்னால் சென்றுகொண்டிருந்தேன். 

தேங்காய்கீத்தும் (அங்கே தேங்காய் பத்தை என்பார்கள்) பூண்டும் (வெள்ளபுடுக) வாங்கும் அந்த முனைகடையில் ஒரு கருத்த உருவம் எங்கள் வருகையை கண்டு ஒளிந்ததை நான் மட்டும் கவனித்தேன். மொத்த உடம்பும் வெளியே தெரிய தலை மட்டும் உள்ளே மறைந்தது. அதன்  வாயில் தீப்பற்றியது போல எரிந்து கொண்டிருந்தது. கைக்கும் வாயுக்குமாக சின்னமாக ஒரு தீப்பந்தம் மாறிக்கொண்டிருந்தது. அந்த உருவத்தை சுற்றிலும் புகைபரப்பு. 

கோடுபோட்ட தொள தொளவென்ற அரைக்கை சட்டை. பச்சை டயல் கடிக்காரம் கட்டியிருந்த கைகளில்  மொசுமொசுவென முடி. கால்களில் ஒருபக்கமாக தேய்ந்து போன அதே லக்கானி ஸ்லிப்பர் செருப்பு. நாங்கள் நடக்க நடக்க அந்த உருவம் சமீபத்தில் தெரிந்தது. உற்று பார்த்தேன். ஆனால் கூப்பிடத் தான் வாய் வரவில்லை. எனக்கு தெரியும். அது நீங்கள் தான் அப்பா! 

திரும்பி பார்த்தேன். இடுப்பில் வழுவும் தம்பியை உலுக்கி உட்காரவைத்தபடி வந்துகொண்டிருந்தாள் அம்மா. அவள் உங்களை பார்த்துவிடகூடாது என்று ஏனோ மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

நீங்களும் என்னை பார்த்துவிட்டீர்கள் தான். நாம் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டோம்.

நாங்கள் அதை வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை.  எங்களின் அந்த சந்திப்பு இன்றுவரையில் அம்மாவுக்கு தெரியாத ரகசியம் தான்.

தம்பி அம்மாகிட்ட சொல்ல கூடாது சரியா என்று அவரோ, நீ தான அங்க நின்ன சிகரெட்டு குடிச்ச என்று நானோ கேட்டுகொண்டதில்லை. அது நாங்கள் சந்தித்து கொண்ட அந்த அறை நொடி  பொழுதில் கண்கள் எழுதிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். A gentlemen’s deed.

சிகரெட் பிடிப்பதை அவர் நிறுத்திவிட்டாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் அதற்குபின் முனைக் கடையிலோ வேறு எங்கேயோ புகைசூழ நிற்கும் அப்பாவை நான் பார்த்ததேயில்லை!

என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. கடைசியில் நீங்கள் தான் வென்றீர்கள். நான் உங்களின் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக தகர்த்துகொண்டிருக்கிறேன்.  அந்த ஒப்பந்தத்தை நான் இன்று மீறிவிட்டேன். 

அம்மாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே மனம் பிறழ்ந்து பிதற்றியதை அவள் நிச்சயம் கேட்டிருப்பாள். அம்மாவிடம் உங்களிடம் கோவித்துக்கொள்ளாமல் இருக்க சொல்லுகிறேன். அவள் உங்களிடம் கோவிக்கமாட்டாள், நீங்க எழுந்திரியுங்கள் சித்தப்பா! வாங்க…நாம நம்ம வீட்டுக்கு போவோம்! எழுந்திருங்க சித்தப்பா!

கண்களில் தேங்கியிருந்தது இப்போது வெதுவெதுவென இறங்கி கொண்டிருந்தது கன்னங்களில். நான் புதைத்து வைத்திருந்தது லேசான செருமல்களாக முளைத்துக்கொண்டிருந்தது தொண்டையில்.  முககவசம் அணிவதும் ஒருவகையில் சௌகரியம் தான். நான் அழுதுக் கொண்டிருந்தேன். எனக்கு மட்டுமே தெரியும் படி.

அப்பாவை அருகில் சென்று உற்றுப்பார்த்தேன்.  அவர் இன்னும் கருத்துப் போயிருக்கிறார். முகம் பாளம் பாளமாக வெடித்து சுருங்கியிருந்தது. 

வெத்து மாரோடு ஒருக்களித்து படுத்திருந்தார்.  அந்த ஓராள் படுக்கையில் ஒரு மூலையில் கிடந்தார். காலம் அதன் கொடூரமான கைகளை கொண்டு சகட்டுமேனிக்கு கிறுக்கிவைத்திருந்தது அவர்மேல்.

சிக்கடைந்த அக்குள் முடிகளை பார்ப்பதற்கு கவலையாக இருந்தது. அவைகளை ஒருநாளும் அவர் வளர விட்டதேயில்லை. முதுகு வழியாக மூச்சு விடுவது போல முதுகெலும்புகள் விரிந்து சுருங்கி கொண்டிருந்தன. 

காதோரம் சென்று லேசாக கிசுகிசுத்தேன். சித்தப்ப…சித்தப்பா…

ஆம்! அப்படித்தான் அவரை நான் அழைப்பேன். காரணம் இன்னது என்றெல்லாம் ஒன்னுமில்லை, எப்போதிலிருந்து அப்படி கூப்பிட்டு கொண்டிருக்கேன் என்று சத்தியமாக எங்கள் இருவருக்குமே தெரியாது. எப்பவோ சும்மா கூப்பிட போய் ஏதோ பட்டபெயர் போலவே அது மாறிவிட்டது அவருக்கு. ‘சித்தப்பா’ .  

நான் கூப்பிடபோய் என் நண்பர்கள் எல்லோரும் அவரை அப்படியே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி அழைக்காதே  என்று அவர் என்னை ஒருக்காலும் வற்புறுத்தியதேயில்லை இன்று வரையில். 

நானூறுனு மொதவே நெனைக்க கூடாதுப்பா. ஐநூறுக்கு ஐநூறு வாங்கணும்னு மனசு வச்சா தான் நானூறு எடுக்க முடியும். படிச்சா தான் நமக்கு எல்லாம். நல்லா படிங்க என்பார் யாரை எப்போது தெருவில் பார்த்தாலும். எங்கள் எல்லோர் படிப்பை பற்றியும் மனுஷன் அப்படி கவலை கொள்வார். 

அது எங்கள் பள்ளிநாட்கள். என் இரவுகள்  உள்ளாடைகளில் வெளுத்த காலங்கள் அவை. எங்கள் மூளைகளில் பெண்ணின் முலைகள் மட்டுமே இருந்த பருவம். நண்பர்கள் சிலரும் நானும் வீட்டு வாசலில் நின்று கொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். இடையில் எங்கள் பேச்சை ஊடறுக்க கனைத்துகொண்டோ, ராசு என்று என் பெயரை உச்சரித்துக்கொண்டோ அவர் வீட்டிலிருந்து வெளியே வருவதெல்லாம் நாகரிகத்தின் உச்சம்!

சித்தப்பா…சித்தப்பா…நான் கூப்பிட்டது அவருக்கு கேட்டிருக்காது. கேட்டிருந்தாலும்  ஓவ் என்று திருப்பி கேட்கும் நிலையில் அவர் இல்லை. அவர் உடலில் வெப்பம் குறைய ஆரம்பித்திருந்தது. முடை வீச துவங்கியிருந்தது. இமைகளை திறக்க முயன்று முயன்று பார்க்கிறார். அடிவயிற்றில் கை வைத்து துலாவுகிறார். 

நான் அருகில் சென்று சொன்னேன். சித்தப்பா…நான் ராசு… ராசு…நான் வந்துட்டேன்.…நீங்க ஏன் இங்க… என்னாச்சு உங்களுக்கு…கண்ணை தொறந்து பாருங்க…நான் பேசுறது கேக்குதா…வாங்க …எழுந்திரிங்க நம்ம வீட்டுக்கு போவோம்… 

அசைவில்லை!

ஏங் சித்தப்பா…வயித்த வலிக்குதா? டாக்டரை கூப்பிடவா?

வயிற்றை தடவிக்கொண்டே இருந்தார்.

பசிக்குதா…

ஆம் என்பது போல வேகமா தலைஆட்டினார்.

ஐயோ…ஐயோ…அம்மாவின் மிச்சம் கேட்டது.

நான் உடைந்து அழுதேன். 

அரசுப் பள்ளியில் என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டு பெரியகோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து நாம் மென்ற சப்பாத்திகள் இன்னுமும் வாயோரமாக அழுத்துகின்றன அப்பா. தொக்கில் காரம் பத்தவில்லை என்று நீங்கள் சொன்னதையும் ,ம்…க்கும் என்று அம்மா அலுப்பாக முக்கியதையும் ஏனோ தீடீரென நினைவில் வருகிறது.

கைலியை ஏத்தி விட்டுகொண்டே இருந்தவரிடம் ஏங்க…ஒன்னுக்கு போனுமா என்று கேட்டு அம்மா அவரின் அடிவயிற்றை வருடிவிட்டது தான் காதல்! நாற்பது வருடமாக உள்ளுக்குள்ளே கிடந்து உழன்று கனிந்த காதல்!

அடிப்படையிலேயே மனிதர்கள் மிக மிக மேன்மையானவர்கள்.  உறவெல்லாம் சும்மா ஒப்புக்கு தான். இரண்டாம் பட்சம் தான்.  கிடையில் கிடக்கும் சக மனிதனின் பீ மூத்திரத்தை அள்ளி போட வேண்டிய தேவை தான் அப்படி என்ன இருக்கிறது மனிதனுக்கு. ஆனாலும் செய்கிறான். அவன் என்  அப்பனுக்கும் அம்மாளுக்கும் பெண்டு பிள்ளைக்கும் செய்யவில்லை தான். செய்யமாட்டான் தான். அதனால் என்ன? அவன் அப்பன் ஆத்தாளுக்கும் செய்கிறானே..அது போதாதா அவன் மேன்மையானவன் என்பதற்கு. 

கண்களை துடைத்துவிட்டுக்கொண்டே நான் அவரிடம் பேசலானேன். நடுசாமம் வரையில் அம்மா விழித்திருந்தாள் என்று தான் நினைக்கிறேன். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் அங்ங…அங்ங…ங்…ஆ…கொட்டிக் கொண்டிருந்தார்.  எங்களுடன் சில அதிகாலை பறவைகளும் ஐந்து மணி சூரியனும் சேர்ந்துகொண்டார்கள்.  விடிந்துவிட்டிருந்தது.  நான் இத்தனை வருடத்தில் பேசாத ஒட்டுமொத்தமாக பேசியது அவருக்கு கேட்டிருக்குமா என்பதை என்னால் அறுதியிட்டு கூற முடியாது. ஆனால் என் பேச்சின் சில இடங்களில் அவர் அழுதார். கண்ணீர் வழிந்தது. 

எழுந்திரிச்சி வாங்க…சித்தப்பா…நாம நம்ப வீட்டுக்கு போவோம்.

அப்பாவின் முப்பதாம் நாள் படையலுக்கு  அவரின் மூக்குக் கண்ணாடி, அவரை உடலாக எடுத்துவந்து அணிவித்த வேஷ்டி சட்டை, பேன, ஸ்படிகமணி மாலை என்று குவித்து வைத்திருந்தார்கள்.  பெரிய தலைவாழையிலை. அவருக்கு விருப்ப உணவு என்றெல்லாம் இல்லை, கறி, மீன், கோழி, கருவாடு எல்லாம் சமைத்து பரப்பினார்கள். வேண்டுமென்றே உப்பு கம்மியாக போட்டு சமைத்திருந்தார்கள். எல்லாம் அம்மாவின் வேலை தான். அப்பா வந்து குறை சொல்ல வேண்டுமாம்!

இறுதியாக தேடி தேடிக் கண்டுபிடித்துவிட்டிருந்தோம் அந்த பொக்கிஷத்தை! லேசாக புன்னகைக்கும் அப்பாவை!அது தங்கையின் மணநாள் ஆல்பத்தில் இருந்தது. அந்த மகிழ் நொடியை உறைய வைத்த அந்த ஒளி கலைஞனுக்கு தான் நன்றி சொல்லணும்!

ஃபோன்பில், கரண்ட் பில், லாண்டரி பில், பால் பாக்கி, மளிகை பாக்கி இவைகளை கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் அவர் பேனாவின் கிறுக்கல் சத்தம் ஓய்ந்துபோய் வீடு வீடாகவே இல்லை. 

அவர் விலக்கி வைத்திருந்த  அந்த நிசப்தத்தை எங்களால் பொறுத்துகொள்ளவே முடியவில்லை.  அப்பா என்பவர் தனி மனிதனா? எழுபது வருட வாழ்க்கை!

மனிதன் என்பவன் வெறும் ரத்தமும் சதையுமானவனா? மாடகுழியில் இறக்கிவைத்து உப்பும் மண்ணும் தள்ளி மூடிவிடுவதால் அவன் இறந்தவன் ஆகிவிடுவானா என்ன? 

மனிதன் என்பவன் நினைவுகளின் தொகுப்பு. அவன் யாரேனும் ஒருவரின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறான் ஒவ்வொரு நொடியிலும்!

பத்தாவதில் நான் அதிக மார்க் எடுத்ததற்கு நீங்கள் வாங்கி வைத்த பூ போட்ட கண்ணாடி உங்கள் பிம்பத்தைத் தேடுமே! அதுக்கு என்ன பதில் சொல்வேன்.  அப்பா!

நீங்கள் வாங்கி வைத்த பிராந்தி பாட்டில்களை என்ன செய்வது அப்பா!

கட்டியவைத்த பழைய பேப்பர் பண்டில்களை எவ்வளவு விலைக்கு போடட்டும்? சொல்லுங்கப்பா!

காயலான் கடைக்காரனிடம் பேரம் இனிமேல் யார் பேசுவது?

மீன்கார கிழவியிடம் கறார் காட்ட நீங்கள் எங்கே?

மிலிட்டரி கேன்டீனில் நான் வாங்கிவரும் ரம் பாட்டில்களில் உங்கள் கோட்டாவை யாருக்கு கொடுக்க?

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சன்னமாக  புகைப்படத்தில் புன்னகைக்கிறார் அப்பா!

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.