பிபூதிபூஷணின் மின்னல்

This entry is part 12 of 12 in the series மின்னல் சங்கேதம்

பழைய வங்க நாவல்கள் மீது, குறிப்பாக பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா படைப்புகளின்மீது எனக்குப் பெரிய மோகம் உண்டு. தமிழில் அச்சில் இல்லாத “ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்” மலையாளத்தில் கிடைத்தது. அதைப் படிப்பதற்காகவே மலையாளம் கற்றுக்கொண்டேன். மொழிபெயர்க்கப்படாத பிபூதிபூஷண், தாராசங்கர், ஆதீன் பந்தோபாத்யாயாவின் நாவல்களின் வங்க எழுத்துகளை இணையத்தில் தேடி வெறுமனே எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன்.

இச்சயமத்தில்தான் பிபூதிபூஷணின் “ஆஷானி சங்கேத்” நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2016-இல் “Distant Thunder” என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அதை உடனடியாக வாங்கிப் படித்தேன். 1940களில் ஆங்கிலேயர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வங்கப் பஞ்சத்தைக் கோடி காட்டும் நாவல். சத்யஜித்ராயின் திரை வடிவம் மூலம் பலரையும் சென்றடைந்த ஒன்று. அளவில் மிகச் சிறியது. அதை மொழிபெயர்த்தால் என்ன என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஆனால் ஓர் இந்திய மொழி் நாவலை ஆங்கிலம் மூலம் தமிழுக்குக் கொண்டுவருவது மிகப்பெரிய அநீதியாகப்பட்டது.

பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா

ஓர் இந்தியப் படைப்பு ஆங்கிலத்துக்குச் செல்லும்போது அதில் பல கலாசார, சூழல் நுணுக்கங்கள் தவறிப்போகின்றன. அப்படித் தவறிப்போவதைத் தவிர்க்கவும் முடியாது. பாதேர் பாஞ்சாலியின் முதல் காட்சியில் ஏகாதசிக்கு அடுத்தநாள் ஒரு கிழவி அவல் சாப்பிட்டு விரதத்தை முறித்துக்கொள்வாள். இது ஆங்கிலத்தில் சுற்றிவளைத்துச் சொல்லப்பட்டிருக்கும். ஆங்கிலத்திலிருந்து இது தமிழுக்கு வந்தால் அத்தனை சுற்றிவளைப்பும் தமிழுக்கும் வந்துசேரும். அதைப்போலவே உரையாடல்கள். ஓர் இந்திய மொழியின் உரையாடல் இன்னொரு இந்திய மொழிக்கு வந்துசேரும்போது இருக்கும் லாவகம், ஆங்கில வழி மொழிபெயர்ப்பில் சாத்தியமில்லை. சில இந்திய மொழி நாவல்கள் ஆங்கிலம் வழியே தமிழுக்கு வந்து சேர்கையில் மிகவும் செயற்கையாக ஒலிப்பது இதன் காரணமாகத்தான்.

இந்நிலையில் என் முழங்காலில் சிறிய காயம் ஏற்பட்டது. சிறிய காயம்தான் என்றாலும், மென்திசுவில் ஏற்பட்ட உள்காயம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அதிக நேரம் நிற்காமல், நடக்காமல் ஓய்வாக இருக்கவேண்டியிருந்தது. அதன் காரணமாகக் கிடைத்த நேரத்தில் ஆஷானி சங்கேத் நாவலை மொழிபெயர்த்தால் என்னவென்று யோசனை வந்தது. இணைய வழியிலேயே பெங்காலியை எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்டேன். இணையம் வழியாகவே வார்த்தைகளைத் தேடித் தேடி அர்த்தம் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

பெங்காலி மூலத்தையும், ஆங்கில மொழிபெயர்ப்பையும் வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தேன். பி்ள்ளைகளை விளையாட்டுப் பயிற்சிகளுக்கோ, இசை, நடன வகுப்புகளுக்கோ அழைத்துச் செல்லும்போது காரிலேயே அமர்ந்து தமிழ்மொழியாக்கம் செய்தேன். ஒரு மணி நேரத்தில் இரண்டு வாக்கியங்களே மொழியாக்கமாகியிருக்கும். ஒரு சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில்கூட ஆனது. இணையமெங்கும் தேடிச் சலித்து, பெங்காலி நண்பர்களைக் கேட்க வேண்டியிருந்தது. ஆங்கிலத்திலிருந்து மட்டுமே மொழியாக்கம் செய்திருந்தால் அதிகபட்சம் ஒரு மாதத்தில் செய்திருக்க வேண்டிய வேலையை முடிக்க எனக்குக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகின. ஆனால் இதில் கிடைத்திருக்கும் மனநிறைவு அனைத்தையும் ஈடு செய்வதாக இருக்கிறது.

”பேய்ங்க ஜாதி பார்க்கறதில்ல” என்று ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பதற்கும், “பூதங்கள் பிராமணனா போஷ்டனான்னு பார்க்கறதில்ல” என்று பெங்காலி வழி மொழிபெயர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இது பிபூதிபூஷண் முழுமையாக முடிக்காமல் விட்ட படைப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் எனக்கு இது அவர் தன்னுடைய நோக்கத்தைச் சரியாக வெளிப்படுத்திவிட்ட ஒரு முழுமையான படைப்பாகவே படுகிறது. 1940களில் செயற்கையாக வங்காளப் பகுதியில் உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் ஆரம்பத்தைச் சொல்லும் நாவல் இது. கொஞ்ச கொஞ்சமாக ஒரு கிராமம், ஒரு வருட காலத்தில் பஞ்சத்தின் பிடியில் விழுகிறது. அரிசி விலை அதிகமாகிக்கொண்டே சென்று, எத்தனை காசு கொடுத்தாலும் கிடைக்காது என்ற நிலைக்குச் செல்கிறது. மக்கள் அரிசியில்லாமல் வெறும் பருப்பு வகைகளைச் சாப்பிடுவது, கிடைத்த பழங்கள், கிழங்குகளைச் சாப்பிடுவது என்றாகி, அவையும் கிடைக்காமல் நத்தைகளையும், பூச்சிகளையும் பிடித்துத் தின்னும் நிலைக்குச் செல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் கிடைக்காமல் போக, அங்கே ஒரு பட்டினிச்சாவு, அந்த கிராமத்தின் முதல் சாவு நிகழ்கிறது.

அதுவரை, பஞ்சத்தை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த கிராமத்தினர், பட்டினி கிடந்து ஒருவர் செத்தும் போகக்கூடும் என்ற அதிர்ச்சியான உண்மையை நேருக்கு நேர் பார்க்கிறார்கள். அந்தச் சாவுதான் பின் நிகழப்போகவிருக்கும், பெருமழைக்கான, பிரளயத்துக்கான முதல் மின்னல் அறிகுறி. இந்த மின்னலடிப்பு நிலைக்கு வரும்போதே பலர் பட்டினி கிடக்கிறார்கள், நத்தைகளைத் தேடிச் சேற்றை அளைகிறார்கள், பல மைல் தூரம் வீடுகளை விட்டுக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு உணவு தேடி அலைகிறார்கள். வானம் கருக்கும்போதே இப்படிச் சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்ட எளிய மக்கள், பெருமழை பொழிந்து வெள்ளமாகும்போது என்ன ஆவார்கள் என்பதை நம் கற்பனைக்கே விட்டு, நாவலை முடிக்கிறார் பிபூதிபூஷண்.

இந்நாவலின் அவலச்சுவை நிறைந்த சில பகுதிகளை மொழிபெயர்க்கையில் மிகுந்த மன வேதனையாக இருந்தது. குறிப்பாக, ஒரு கைப்பிடி அரிசிக்கு மக்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் காட்சிகளின்போது.

’ஆவணி மாத மத்தியில் அனங்காவைப் போன்ற நம்பிக்கையாளர்களுக்கும் கவலை தொற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டது. நெல்லும், அரிசியும், சந்தையிலிருந்து கற்பூரம்போல முழுமையாக ஆவியாகிவிட்டன. ஒரே ஒரு தானியம் நெல்கூட எங்கும் தென்படவில்லை. கோபிநாத்பூர் போன்ற பெரிய சந்தையில்கூட அரிசி இல்லை. மக்கள் காலிக் கூடைகளோடு அலைந்து கொண்டிருந்தார்கள். சந்தைகளிலும், கடைகளிலும் புலம்பல்கள் ஒலித்தன. மூட்டை மூட்டையாக நெல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டுவின் கடையும் இப்போது காலியாகக் கிடந்தது. தெருவெங்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்திருந்தனர். இத்தனை நாட்களாய் இவர்கள் எங்கே இருந்தார்கள்? யாருக்கும் கேட்கும் தைரியம் இல்லை. பிச்சைக்காரர்களில் பலர் வெளியூர்க்காரர்கள்போல இருந்தார்கள். ஒரு நாள் அனங்கா சமையலறையில் வேலையாக இருந்தபோது, கந்தலாடை அணிந்த, எலும்பும் தோலுமாக இருந்த ஐந்தாறு பெண்களும், நிர்வாணமாகவும், அரைகுறையாகவும் உடையணிந்து, இளைத்துத் தோலாகிப்போன சிறுவர்களும், சிறுமியரும் வீட்டு வாசலுக்கு வந்து, “கஞ்சி இருந்தா குடுங்கம்மா, நாங்க கஞ்சி குடிக்கறப் பழக்கம் – “ என்று இறைஞ்சினர்.’

மக்கள் இப்படி அலைந்து கொண்டிருக்கையில், கல்கத்தாவின் கிடங்குகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் யாருக்கும் பயனில்லாமல் ஏராளமான மூட்டை அரிசிகளைப் பதுக்கி வைத்திருந்த வரலாற்று உண்மை வெளியான காலத்தின் இந்தப் பக்கத்திலிருந்து இதைப் படிக்கவே முடியவில்லை! இதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம், பிபூதிபூஷண் அப்போது நிலவியிருந்த, “விளைச்சல் பொய்த்ததால் உருவான பஞ்சம்” என்ற பொது நம்பிக்கையை எங்கேயுமே நாவலில் பஞ்சம் உருவானதற்கான காரணமாகச் சொல்லாமல், போர்க்காலத்தின் காரணமாக ஏற்பட்ட பஞ்சம் என்றே மக்கள் உரையாடல் வழியே தருகிறார். அரசாங்கம் தானியங்களை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்ததும் உரையாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

இயற்கை வர்ணனைக்கு அதிகம் வாய்ப்பில்லாத இந்நாவலில்கூட பிபூதிபூஷணின் முத்திரையான சூழல் சித்திரிப்புகளில் இயற்கை விவரணையும் வந்து போகிறது. பெண்கள் ஒன்றுகூடி நெல்லைக் குத்தும் இடத்தைக்கூட இப்படித்தான் வர்ணிக்கிறார்:

”ஹரி காபாலியின் வீட்டில் களி மண்ணாலான இரண்டு அறைகள் இருந்தன. ஒரு பக்கம் பசலைக் கீரைக்கொடி படர்ந்திருந்தது. இன்னொரு பக்கம் வேலியிட்ட நிலத்தில் பரங்கிக்காய், பீர்க்கங்காய், கத்திரிக்காய் எல்லாம் பயிரிடப்பட்டிருந்தது. பசலைக் கீரைக்கொடிக்கு அருகே தானியங்கள் புடைப்பதற்கான தீம்கி இருக்கும் தீம்கிகர் என்ற அறை இருந்தது. அங்கே சில பெண்கள் கூடியிருந்தார்கள். ஹரி காபாலியின் மூத்த மனைவி அங்கிருந்தாள். அக்கம்பக்கத்துப் பெண்கள் இரண்டு மூன்று பேர்கள் இருந்தார்கள். தீம்கிகர்-ஐச் சுற்றிலும் சேப்பங்கிழங்கு, ஊமத்தைச் செடிகள் மழைநீரில் விளைந்திருந்தன. கூரையில் கோவைக்காய்க் கொடி படர்ந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. எல்லாம் சேர்ந்து மழைக்குப் பின்னான, பசிய மணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன.”

மொழிபெயர்ப்பதற்கு சவாலாக இருந்தவையும் இப்படிப்பட்ட இயற்கை வர்ணனைகள்தான். பெங்காலியில் குறிப்பிடப்படும் சில தாவரங்களை இனங்கண்டுகொள்வது எளிதாக இருக்கவில்லை.

ஆனால் ஆச்சரியப்படுத்தும் வகையில் சிறு பிள்ளைகளை மிக நன்றாகக் காட்சிப்படுத்தக்கூடியவரான பிபூதிபூஷண், இந்நாவலில் கங்காசரணின் இரு பிள்ளைகளையும் வெகு மேலோட்டமாகவே சித்திரித்திருக்கிறார். பல முக்கியமான தருணங்களில் அவர்கள் நிலை என்னவென்று சொல்லப்படவேயில்லை. பிபூதிபூஷண் பெருநாவல்களின் எழுத்தாளர். அவற்றில் பல்வேறு துணை கதாபாத்திரங்களும், கிளைக் கதைகளும் வந்துபோகும். இக்குறுநாவலில் அதற்கான இடமில்லாமல் போனாலும், பல்வேறு கிளைக் கதைகளும், கதாபாத்திரங்களும் வந்துபோகின்றன. ஆனால் பெருநாவலில் அவற்றுக்குக் கிட்டும் முழுமை, இக்குறுநாவலில் கிட்டவில்லை.

இந்நாவல் சத்யஜித்ராயின் திரைவடிவம் காரணமாக மிகவும் புகழ்பெற்றது. திரை வடிவம் நாவலிலிருந்து அதிக மாற்றமில்லாமல் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உரையாடல்கள்கூடப் பெரும்பாலும் நாவலில் இருந்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்திரைப்படத்தின் ஆங்கிலத் தலைப்பாக சத்யஜித்ராய் கொடுத்தது – Distant Thunder – தூரத்து இடிமுழக்கம். ‘ஆஷானி’ என்ற பெங்காலி வார்த்தைக்கு மின்னல் என்பதுதான் அதிகமும் சொல்லப்படும் அர்த்தமாக இருந்தாலும், இடி என்ற பொருளையும் சில அகராதிகள் கொடுப்பதைப் பின்னர்தான் கவனித்தேன். ‘தூரத்து இடிமுழக்கம்’ என்பது சரியான ‘பொருளை’த் தருவதாக இருந்தாலும், அந்தப் பெயரில் ஏற்கெனவே ஒரு தமிழ்ப்படம் இருப்பதால், அதைத் தலைப்பாக வைப்பதைத் தவிர்க்கலாம் என்று தோன்றியது. ’சங்கேத்’ என்ற வார்த்தை – சங்கேதம் என்று தமிழில் இருக்கிறது. சமிக்ஞை, அறிவிப்பு, எச்சரிக்கை என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ’மின்னல் முன்னறிவிப்பு’, ‘இடி எச்சரிக்கை’ என்றெல்லாம் பலவாறாக யோசித்துவிட்டு, மூலத்தலைப்பை நினைவூட்டும்படி ‘மின்னல் சங்கேதம்’ என்றே இருக்கட்டும் என்று அந்தத் தலைப்பில் சொல்வனத்தில் தொடராக வந்தது. இப்போதும்கூட இத்தலைப்பில் எனக்கு முழுத் திருப்தி என்று சொல்ல முடியாது. புத்தகமாகத் தொகுக்கையில் நல்ல தலைப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.

நாவலின் உரையாடல்களை ஆரம்பத்தில் தூய தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அது நாவலுக்கு ஆங்கிலத் தன்மையைக் கொடுப்பதைக் கவனித்துப் பேச்சு வழக்குக்கு மாற்றினேன். அதேபோல அக்கால அளவைகளான மணங்கு, மைல் போன்றவற்றையும், ஜில்லா, தமாஷ் போன்று பெங்காலி மூலத்திலிருந்த – தமிழுக்கு ஏற்கெனவே அறிமுகமான – இப்போது புழக்கத்திலில்லாத வார்த்தைகளையும் அப்படியே உபயோகித்துக்கொண்டேன். பெங்காலிப் பெயர்களை மொழிபெயர்ப்பதில் சில இடங்களில் பெங்காலி உச்சரிப்புகளையும் (காந்தோமணி), சில இடங்களில் தமிழாகவும் (சக்ரபர்த்தி – சக்ரவர்த்தி) மொழிபெயர்த்திருக்கிறேன். சில மாதங்களாகச் செய்த நெடிய மொழிபெயர்ப்பில் உண்டான இத்தகைய முரண்களைப் புத்தகமாகத் தொகுக்கும்போது திருத்தவேண்டும்.

இந்த மொழிபெயர்ப்பு சுணங்காமல் முன்னகர்ந்ததற்கு பாஸ்டன் பாலாவும், ரவிசங்கரும் முக்கிய காரணங்கள். தவறாமல் நினைவூட்டி, திருத்தங்கள் சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்கள் சொல்வனத்தில் வெளிவர உதவியாக இருந்தார்கள். இருவருக்கும் நன்றி. இன்று தீவிர வாசிப்பு என்பதே மிகவும் சுருங்கிவிட்டது. அதிலும் இதுபோன்ற மொழிபெயர்ப்பு நாவல்களைப் படிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவு. இது முதன்மையாக என் மகிழ்ச்சிக்காகச் செய்த மொழிபெயர்ப்பு. அப்படியிருந்தும் இதை யாரேனும் தொடர்ந்து படித்திருந்தால் அவர்களுக்கும் என் நன்றி. நான் முன்பே சொன்னதுபோல, நான் முறையாகப் பெங்காலி கற்றவன் அல்லன். ஆர்வம் அல்லது ஆர்வக்கோளாறில் இணையம் வழி எழுத்துக்கூட்டிக் கற்றுக்கொண்டு செய்த மொழிபெயர்ப்பு. பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள், திருத்திவிடுகிறேன். ”துமி கி கராலே?” என்று சட்டையைப் பிடிக்காதீர்கள். எகிறிக் குதித்து ஓடிவிடுவேன். முழங்கால் சரியாகிவிட்டது.

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 11

6 Replies to “பிபூதிபூஷணின் மின்னல்”

  1. You have done a wonderful work, Sir. Congrats and Thanks. Amazing to know how dedicated you have been. But for your great translation, I would not have been able to read this short but poignant novel.
    The novelist’s and your translation have a greater impact than the film.
    And thank you very much for giving the toutube link for the film as well.
    If possible, kindly give your translation of Tagores ‘Home Coming’ , Sarath’s’ Deliverence’

  2. படிக்கும் போதே உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாவல்.புதிதாக மொழியைக் கற்று அதையும் செம்மைப்படுத்தி இயல்பான நடையில் கொடுத்துள்ள உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  3. தங்களுடைய மொழிபெயர்ப்பு மிக அருமையாக அமைந்துள்ளது.

    ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது அவ்வளவு நன்றாக இராது எனும் உங்கள் கருத்தை நான் மறுக்க வேண்டியுள்ளது. தாகூரின் பல படைப்புகளை ஆங்கிலத்திலிருந்தே நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில மொழிபெயர்ப்புகளும் மிக அழகாக இருந்தன. இவற்றுள் சில ஆங்கில வடிவங்கள் தாகூராலேயே மொழிபெயர்க்கப்பட்டவை. ஒரு படைப்பின் காவிய, கருத்து நயத்திலும் அழகிலும் நம்மை மறந்து ஒன்றிவிட்டால் மொழிபெயர்ப்பும் தானே சிறப்பாக அமைந்து விடும் என்பது என் கருத்து.

    எல்லாரும் எல்லா மொழிகளையும் கற்கவியலாது. ரஷ்ய மொழி தெரியாததால் நம்மில் பலரும் ‘அன்ன கரேனினா’வையும், ‘போரும் அமைதியும்’ புதினத்தையும், தாஸ்தயாவ்ஸ்கியின் ‘கரமசாவ் சகோதரர்க’ளையும் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து படிக்கவில்லையா?ஜெர்மானிய ‘தாமஸ் மன்’ எழுத்துக்களை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து படித்து ரசிக்கவில்லையா? எத்தனை அருமையான ஜப்பானியப் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பாகக் கிடைக்கின்றன.

    ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிப்பதனால்தான் உலக இலக்கியங்களைப் பற்றியும் அவற்றின் பெருமைகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறே கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அஸ்ஸாமிய மொழி புதினங்களை ஆங்கிலம் வாயிலாகத்தானே அறிமுகப் படுத்திக்கொண்டு ரசிக்கிறோம்?

    சாஹித்ய அகாதமியின் ஒரு பெரும் சிறப்பான பணியே இந்த மொழிபெயர்ப்புகள் தானே!

    தங்கள் மொழிபெயர்ப்பு அருமையாகவே இருந்தது. அற்புதமான ஒரு வங்கத்துப் படைப்பைத் தமிழுலகிற்கு எடுத்துக் காட்டியது. தொடர்ந்து மொழிபெயர்ப்புகளைத் தாருங்கள். நன்றி.

  4. > ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது அவ்வளவு நன்றாக இராது

    இதில் சில எண்ணங்கள்:
    1. வங்க (இந்திய) மொழியை அப்படியே (ஒலிக்கவிட்டால்) வாசித்தால், அதில் இருக்கும் சம்ஸ்கிருத / பொதுவான பாரத வார்த்தைகள் புலப்படும். அவற்றை அப்படியே தமிழில் உபயோகிக்கலாம்.

    2. உறவுகள் – அத்தை, மாமா, மைத்துனர் போன்ற முறைகளை ஆங்கிலத்தில் உணரமுடியாது (அம்மாவின் அக்காவிற்கும் அப்பாவின் தங்கைக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்)

    3. சில பிரயோகங்களை மூல மொழியிலேயே தரலாம் – ஆங்கிலத்தில் இவ்வாறு செய்வார்களா என்று தெரிந்திருக்க நமக்கு வாய்ப்பில்லை. எனவே, அசல் நூலை ஒரு முறை எடுத்து மேலிருந்து கீழ் பார்க்கலாம். இடமிருந்து வலமாக புரட்டலாம். அதன் பின் அதை ஒலி வடிவத்தில் கேட்கலாம். கூகுள் போன்ற நிரலி கொண்டு வரிவடிவை மட்டும் மாற்றலாம் (thamizhil eluthiyathai ippadi padithu paarkkalaam – thanglish?)

    இதன் பிறகு மொழிபெயர்த்தால், அது சிறப்பான ஆக்கமாக அமையும்.

  5. மொழியாக்கம் குறித்து இந்தக் கட்டுரை நேற்று கண்ணில் பட்டது: https://robmclennan.blogspot.com/2021/08/mark-goldstein-part-thief-part-carpenter.html?m=1

    அதில் இருந்து:
    In one section, he translates a single poem ten different ways, offering translation as a shaping and reshaping of form, playing off structures and rhythms utilized by poets including Susan Howe, Robert Creeley, Amiri Baraka, Ted Berrigan and Gertrude Stein. Through Goldstein, translation isn’t a simple matter of allowing readers of one language the opportunity to experience writing originally produced in another language, but a way in which words are shaped, categorized and shifted, and the possibility of a far more open sequence of choices.

    a single, coherent argument that connects translation to appropriation— the act of reworking and changing forms (and, for more conceptual works, context)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.