பருவம் – சகாப்தத்தின் குரல்கள்

This entry is part 1 of 45 in the series நூறு நூல்கள்

மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள்.

பருவம் என்பதை பல அர்த்தங்களில் கொள்ளலாம். எளிமையாக வருடத்தின் நான்கு பருவங்கள். விரிவாக ஒரு சகாப்தம் (epoch) என்று வரையறுக்கலாம். இந்நாவல், முடிவற்ற காலத்தில் ஒரு துளியை (மானிடப் புரிதலுக்கு அது ஒரு சகாப்தம்) விரித்துக் காட்டுகிறது.

இந்திய மொழிகளில் கன்னடம், மலையாளம், ஒரிய, மராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல மகாபாரதப் புனைவுகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. எஸ். எல். பைரப்பா எழுதிய “பருவம்” கன்னடத்திலிருந்து எழுத்தாளர் பாவண்ணனால் தமிழுக்கு வந்துள்ளது.

பாரதத்தின் அழகே அது எழுத்தாளரின் பார்வைக்கேற்ப வளைந்து கொடுப்பதுதான். பீமனின், அர்ச்சுனனின், திரௌபதையின், கர்ணனின், வெண்முரசு தொடர்கள் போன்று மின்னலைப் போல மின்னி செல்லும் பாத்திரங்களின் பார்வைகளில் கதைகளை எழுத முடியும்.

பைரப்பா பாரதத்தின் முக்கியக் கதாபாத்திரங்களின் குரல்களை ஒரே தொகுப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

பைரப்பாவின் பாரத அறிமுகம் அவரது தாயின் வழியே ஆரம்பமாகிறது. பின் வியாச பாரதம் முழுவதும் படித்து, ஐந்து வருடங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து, ஆராய்ந்து, வட இந்தியாவில் சுற்றி, பாரதத்தின் தொன்மையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அளாவி, எழுதப்பட்ட நாவல்.

பாண்டவர் அஞ்ஞாத வாசம் முடிந்து ஹஸ்தினாபுரியில் தூது செல்லும் கால கட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது. மத்ர தேசத்து அரசன் சல்லியன் தன் பேத்தி இரண்யவதியோடு அவள் திருமணத்தைப் பற்றி பேசுகிறான். அங்கிருந்து பாண்டவர், கௌரவர் பற்றிய பேச்சோடு கடந்த காலம் விரிகிறது. பாண்டவர்கள் பிறந்த விதம் குறித்த விவாதம் எழுகிறது. அவன் மகன் துரியோதனன் பக்கம் செல்ல ஆசைப்படுகிறான். ஆனால் பாஞ்சால தேசத்தின் தூதுவன் பாண்டவர்களின் மகனுக்கு இரண்யவதியை மணம் முடிக்கலாம் என ஆசைகாட்டுகிறான். சுசர்மன் அவன் மனதைக் கலைத்து துரியோதனன் பக்கம் திருப்புகிறான். இப்படியான அரசாங்க சதுரங்கத்தில் பல காய்கள் நகர்த்தப்படுகின்றன.

ஹஸ்தினாபுரியில் குந்தி பாண்டுவை மணந்ததிலிருந்து நடந்தவைகளை அசை போடுகிறாள். பாண்டுவின் தலைக்கனம், அவரின் இயலாமை, அதனால் நியோக முறையில் பிறந்த பாண்டவர்கள் என்று அவள் கதை விரிகிறது. பீஷ்மர், திருதராஷ்டிரன் முதற்கொண்டு கௌரவர்கள் வரை, அவளின் நடத்தையை சந்தேகிக்கும் வார்த்தைகளை அவர்கள் பேசக் கேட்கும்தோறும் அவளின் கையாலாகாத வேதனை அவளைக் கிழிக்கிறது.

திரௌபதி, பீமன், அர்ச்சுனன், சாத்யகி, பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், விதுரன், காந்தாரி, திருதராஷ்டிரன் என அனைவரும் அவரவர் பார்வையில் இறந்த காலத்தை நியாயப்படுத்தி குருஷேத்திரம் வருகிறார்கள். பின் நடந்தது குல நாசம்.

திரௌபதி, பீமன், அர்ச்சுனன் உறவுச் சிக்கல்களை மிக அற்புதமாகக் கையாண்ட நாவல் இது. திரௌபதியின் ஆற்றாமை வெளிப்படும் இடங்கள் காவியம். ஐந்து கணவர்களைப் பெற்றும் அவள் நிராதரவாக, ஒரு உண்மையான உறவுக்கு ஏங்கும் எளிய மனம் கொண்ட பெண்ணாக அவளை சித்திரித்திருக்கிறார். அவளின் சோக எண்ணங்களும், அர்ச்சுனன் மேல் கொண்ட காதலும், அவள் பீமனின் எளிய மனதால் ஈர்க்கப்படுவதும், அர்ச்சுனன் பலதார மணம் கொண்டதை வேதனையுடன் ஏற்றுக் கொள்வதிலும், எங்கே பீமனும் அதுபோல கடோத்கஜனை சந்திக்கப் போன இடத்தில் இடும்பையோடு இணைந்து விடுவானோ என்று சாதாரண யோசனைகளில் மூழ்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். இவள் துச்சாதனனின் ரத்தத்தை எதிர்பார்த்திருக்கும் அரசி அல்ல. தன்னை வென்றெடுத்தவனின் உதாசீனத்தால் மறுகும் மனைவி.

பீமனோ இடும்பையைக் கைவிட வேண்டிய சூழல் அமைந்ததை எண்ணி வருந்துகிறான். போருக்கு முன் ராட்சத இனத்தின் தலைவனான் தன் மகனின் துணை வேண்டிச் செல்லும்போது அவனின் எளிய மனம் கௌரவர்கள், இடும்பை, கடோத்கஜன் என்று சுற்றி வருகிறது.

அர்ச்சுனன் கிருஷ்ணனை சந்திக்க துவாரகைக்கு சுபத்ரையுடன் செல்லும் வழியில் பாஞ்சாலிக்கும், தனக்கும் இருந்த உறவு, ஐவருடன் அவள் வாழ ஆணையிடப்பட்டதால் வந்த கசப்பு என்று அவன் தரப்பு நியாயம் எழுகிறது.

நாவலில் படிப்பவர் மனதுக்கு நெருக்கமாக வருபவை குந்தி, திரௌபதி, பீமன் மற்றும் அர்ச்சுனனின் நினைவோடைகள். கிரேக்கப் புராணங்களில் கதாபாத்திரங்கள் தனிமொழியில் தங்கள் சோகத்தை சொல்லிப் புலம்பும். பருவம் நாவலின் கதாபாத்திரங்கள் அதையே செய்கின்றன.

திரௌபதியின் குரல் இது:

“இத்தனை ஆண்களைத் தாங்கிக்கொள்கிற சக்தி கிருஷ்ணைக்கு எப்படி வந்தது? ….ஆனால் ஒவ்வொரு இரவும் மனம் அர்ஜுனனக்காக ஏங்கியது. நான்கு பாண்டவர்களையும் நான் அர்ஜுனன் என்கிற எண்ணம் வழியாகத்தான் உணர்ந்தேன்.

….பீமனின் மனசுக்குள் வேறெந்த பெண்ணைப் பற்றிய எண்ணம் என்றாவது வந்திருக்குமோ என்னமோ! ஆனால் என்னோடு முழுக்க முழுக்க ஓட்டிக் கொண்டு விட்டான்.”

கதாபாத்திரங்களின் குரல்கள் மிக எளிமையானவை. சாதாரண ராஜாங்க சிந்தனைகளைத் தவிர, இதர இடங்களில் வேறு தொனியில் ஒலிப்பதில்லை. தரையில் கால்பாவி நடக்கின்றன. ஆனால் அவற்றின் உள்பிரதிகள் கவனிக்கப் படவேண்டியவை.

உதாரணமாக அபிமன்யுவிற்கு விற்பயிற்சி தரும் அர்ச்சுனன் ஏன் திரௌபதி வழி பிறந்த தன் மகனுக்குத் தரவில்லை? பீஷ்மர் ஏன் துரியோதனன் பக்கம் போரிட இசைந்தார்? காந்தாரி கண்களைக் கட்டிக்கொண்டதன் உண்மைக் காரணம் என்ன (கதையில் அவள் கட்டை அவிழ்க்கும் இடம் அபாரமான குறியீடு. உண்மையில் அரசிக்கான மனநிலையைப் பெறும் ஒரே கதாபாத்திரம் அவளுடையது மட்டுமே)? காந்தாரி பெற்றது நூறு பிள்ளைகள் அல்ல. அவள் வயிற்றில் பிறக்காத மகன்கள் கொல்லப்படும்போது திருதராஷ்டிரன் மட்டுமே கண்ணீர் விடுகிறான்.

மற்ற நூல்களில் ஆடம்பரமாக வரும் குருக்ஷேத்ர களம் இதில் வேறொரு முகம் காட்டுகிறது. படைவீடுகள் அமைப்பதில் வரும் சிக்கல்கள், போரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வரும் அசௌகர்யங்கள் போன்றவை நவீனத்துவ பாணியில் அலசப்படுகின்றன.

முக்கியமாக பல தொன்மங்களை பைரப்பா கலைத்திருக்கிறார். பாண்டவர்களின் தந்தையர் தேவர்கள் என்பதை வேறு கோணத்தில் வைக்கிறார். வியாசர் பிறப்பு, கங்கை பீஷ்மரின் சகோதரர்களைப் பிரிப்பது, துரோணர் பிறப்பு, வளர்ப்பு, கர்ணன் பிறப்பு (சூரியனின் புத்திரன் அல்ல, ஒரு முனிவரின் புத்திரன்), ஜெயத்ரதன் கொலையில் கிருஷ்ணன் மாயம், உண்மையிலேயே அக்னியாஸ்திரம் என்பது எண்ணைத் துணியை உபயோகித்து எய்வது, என்று இதிகாசம் காட்டிய அமானுட நிகழ்வுகளை நடைமுறை நிகழ்வுகளாக மாற்றியிருக்கிறார். புன்னகைக்க வைக்கும் கோணங்கள்.

ஒரு குறையை சுட்டிக் காட்ட வேண்டும். ஏராளமான எழுத்து மற்றும் வாக்கிய அமைப்புப் பிழைகள். இத்தனைக்கும் இது இரண்டாம் பதிப்பு.

ஆரம்பத்தில் ஏன் பாரதம் எழுத்தாளர்களைப் பாதித்திருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. பைரப்பா தன் நாவல் ஆராய்ச்சிக்காக ஜெய்ப்பூர் நகர் அருகே “பீமன் குகை” என்னும் இடத்திற்கு செல்லும்போது பல புதுமணத் தம்பதிகளை சந்திக்கிறார். அவர்களில் ஒருவரிடம் இங்கு வழிபடும் காரணத்தைக் கேட்க அவர் “என் மனைவியின் மேல் யாராவது கண் வைத்தால் அவனைக் கொல்லும் சக்தியைப் பீமதேவன் கொடுப்பான்” என்கிறார்.

இதுவே.

  • பருவம் – எஸ். எல். பைரப்பா
  • மொழிபெயர்ப்பு : பாவண்ணன்
  • பதிப்பாளர் : சாகித்ய அகாதமி
  • https://www.commonfolks.in/books/d/paruvam
  • முதல் (தமிழ்) பதிப்பு : 2002
Series Navigationஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை >>

2 Replies to “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.