நான் விரும்புவது

மழையும், வெயிலும், அவற்றின் பற்றாமையும்
ஓர் அத்திப்பழத்திலோ அல்லது ஆப்பிளிலோ
உறைவது போல்
என் வாழ்க்கை என்னுள் வசிக்கவேண்டுமென
நான் விரும்புகிறேன்.

அதைத் துண்டு துண்டாக
சிதறியும்
சந்திக்க விரும்புகிறேன்
நீண்ட நுழைவாயில் மேசைமேல்
வைக்கப்பட்ட ஓர் உரையாடலாய்;

மேற்சட்டைப் பைக்குள்
பத்திரப்படுத்திய ஓர் ஏமாற்றமாய்;
மலிவுவிலைக் கடையொன்றின் ஓவியத்தின் ஒரு மூலையில்
கண நேரப் பார்வையில் அரைகுறையாய் அடையாளம் கண்ட
ஒரு கடந்தகால ஏக்கமாய்.

என் மகிழ்ச்சி
முதலில் என்னை நோக்கியும்
பின் என்னை விட்டு விலகியும்
அதன் இரு பலமான கால்களால்
படிகளில் இறங்கிப் போவதைக்
கண்டறிவதாய்.

இன்னும்,
கணக்கற்ற கோதுமைக் கதிர்கள்,
ரொட்டிக்கும் அடுப்புக்குமான
திருமணத்தில் நுழைவதற்கு முன்
எத்தனை முறை உடைக்கப்பட்டு,
அடிக்கப்பட்டு, இயந்திரக்கற்களிடையே
அனுப்பப்பட்டு –
அவற்றிலும் என் வாழ்வைக் காணட்டும் நான்.

என் அலங்கோலமான தருணங்களிலும்,
தனிமையிலும்;
திக்குமுக்காடிய நாட்களிலும்,
தயக்கமான நாட்களிலும்
சர விளக்குகளில் ஒன்றை அவிழ்க்க
நான் அடுப்பின் மேல் நின்றதைக் கண்ட
பல ஆண்டிறுதிகளிலும்.

என் இரவுகளில் கேட்கப்பட்டு,
சிலமுறை பதிலளிக்கப்பட்ட, கேள்விகளில்.

நாம் இன்னும் வாழ்ந்திருக்கையில்
என் வாழ்க்கைக்கு
சிறிது உப்பும், வெண்ணையும் சேர்க்க
நான் விரும்புகிறேன்,
இன்னுமொரு துண்டு ஆப்பிள்,
நீண்டு கொதித்த அத்திப்பழத்தின்
ஜாம் ஒரு தேக்கரண்டி.

முதன்முதலாய் ருசிக்கப்படும் வஸ்துபோல்
ருசிப்பின்
அப்போது நாம் ஆகியதுதான்* என்ன

********

  *ஆகியது – To have”become”              

மொழிபெயர்ப்பு: உஷா வை

ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் அமெரிக்கக் கவி, கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவரது கவிதைகள் 9 தொகுப்புகளாய் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவரது கவிதைகளைப் பற்றி இன்னொரு அமெரிக்க கவி ரோஸன்னா வாரன் சொல்வது:

அவரது (ஜேன் ஹெர்ஷ்ஃபீல்டின்) கவிதைகள் எளிமையாக தோற்றம் கொண்டவை ஆனால அப்படிப்பட்டவை அல்ல. அவரது மொழி, தன் தூய்மையிலும் ஒளிவின்மையிலும், பொருண்மை சாராத பல புதிர்களை எழுப்புகிறது… கூறு கூறாய், படிமம் படிமமாய், ஒரே சமயத்தில் மர்மமாகவும் மிகச் சாதரணமானதுமான மொழியில், ஹெர்ஷ்ஃபீல்டின் கவிதைகள் ஆழ்ந்த சிந்தனைக்கும் மாற்றத்துக்குமான இடத்தை உருவாக்குகின்றன.”

ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜென் பௌத்தக் கோட்பாடுகளில் ஈடுபாடு உடையவர். இவரது பல கவிதைகளில் அந்த பாதிப்பைக் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.