ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகள்
பன்னாட்டுக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பில் நடந்த போட்டிகளில் ஆறு முறைகள் தங்கம் வென்ற மேரி கோமின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அந்தப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்ற நாடுகளின் வரிசையில், ரஷ்யா சீனாவுக்கு அடுத்து இந்தியாவுக்கு மூன்றாம் இடம். ரஷ்யா 60 பதக்கங்களைம், சீனா ஐம்பது பதக்கங்களயும், இந்தியா 36 பதக்கங்களையும் வென்றுள்ளன. 2006, 2018 ஆண்டுகளில் பன்னாட்டுக் குத்துச்சண்டைப் போட்டிகள் புதுடெல்லியில் நடந்துள்ளன. பன்னாட்டுக் குத்துச்சண்டைப் போட்டிகளில் ரஷ்யா சீனாவுக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர்கள் இந்தியக் குத்துச்சண்டை வீரர்கள் வீராங்கனைகள். இருப்பினும், 2020 ஒலிம்பிக் வரையில் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் அவர்கள் பெற்றிருக்கும் மொத்தப் பதக்கங்கள் மூன்று மட்டுமே, அவை மூன்றும் வெண்கலப் பதக்கங்கள்.
- 2008, பீஜிங், விஜேந்தர் சிங், வெண்கலம் (ஆண்கள் பிரிவு, 75கிலோ)
- 2012, லண்டன், மேரி கோம், வெண்கலம் (பெண்காள் பிரிவு, 51கிலோ)
- 2020, டோக்கியோ, லவ்லினா போர்கோஹெய்ன், வெண்கலம் (பெண்கள் பிரிவு, 69கிலோ)
2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியாவிலிருந்து ஆண்கள் பிரிவில் ஐந்து வீரர்களும், பெண்கள் பிரிவில் நான்கு வீராங்கனைகளும் சென்றனர். இவர்கள் பன்னாட்டுக் குத்துச்சண்டைப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய குத்துச்சண்டை சேம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள்போன்றவற்றில் பதக்கம் வென்ற அனுபவம் உள்ள தேர்ந்த போட்டியாளர்கள். ஆனாலும், ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்தியாவால்
டோக்கியோவிலும் வெண்கலத்துக்கு மேலே செல்ல முடியவில்லை.

மேரி கோம் போட்டிகள்
1. மேரி கோம் – ஹெர்னாண்டஸ்
மேரி கோம், இந்தியாவின் நட்சத்திரப் போட்டியாளர், ஐந்து முறைகள் ஆசிய அளவில் முதலிடம், ஆறு முறைகள் உலக அளவில் முதலிடம், இவையன்றி ஏற்கெனவே ஒரு ஒலிம்பிக் வெண்கலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம் போன்ற முந்தைய வெற்றிகளுடன் களம் இறங்கினார். தன்னைவிடவும் பதினைந்து ஆண்டுகள் இளமையான வீராங்கனை ஹெர்னாண்டசை (டொமினிக்கன் ரிபப்ளிக்) எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் துவக்கம் முதல் மேரி கோமின் கை ஓங்கி இருந்தது. முதல் சுற்றில் சடசடவென வீசப்பட்ட மேரி கோமின் வீச்சுகளுக்கு ஹெர்னாண்டசும் அதே முறையில் பதிலடி கொடுத்தார். ஆனாலும் மேரி கோமின் பலமான வலக்கை வீச்சு சரியாக ஹெர்னாண்டசின் முகத்தில் இறங்கியது. நடுவர்களின் முடிவு 3 – 2ஆக இருந்தது. மேரி கோமுக்கு முதல் சுற்றில் முன்னணிக்குச் சென்றார்.
முதல் சுற்றில் வாங்கிய வீச்சுக்கு இரண்டாம் சுற்றில் ஹெர்னாண்டஸ் சரியான பதிலடியை மேரி கோமின் நெற்றியில் இறக்கியபோதும், மிகவும் கவனமாக சுற்றைக் கையாண்ட மேரி கோமுக்கு ஆதரவாக இரண்டு நடுவர்களும் ஹெர்னாண்டசுக்கு ஆதரவாக ஒரு நடுவரும், வெற்றி தோல்வியின்றி இரண்டு நடுவர்களும் முடிவைத் தந்தனர். மேரி கோம் இரண்டு சுற்றுகளில் வென்று முன்னணியை நிலையாக்கினார்.
இறுதிச் சுற்றில் இருவரும் தாங்கள் திறன் அனைத்தையும் காட்டி விளையாடினார்கள். மேரி கோம் தன்னுடைய வீச்சுகளை ஹெர்னாண்டசின் மேல் இறக்கியதைப் போல் ஹெர்னாண்டசால் இறக்கிய இயலவில்லை, வீசிய வீச்சுகள் தவறின. மேரி கோம் முன்னேறி வென்றார்.
2. மேரி கோம் – வேலன்சியா
இரண்டாம் போட்டியின் முடிவால், முதல் வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மேரி மோமுக்கு இரண்டாம் போட்டி கொலம்பியாவின் வீராங்கனை வேலன்சியாவுடன் நடந்தது. முதல் சுற்றின் துவக்கத்திலேயே வேலன்சியா வலிமையாகத் தாக்கத் துவங்கினார். அந்தத் தாக்குதல்தல் மேரி கோமின் வீச்சுத் திட்டங்களைக் குலைத்தன. முதல் சுற்று வேலன்சியாவுக்கு ஆதரவாக முடிந்தது.
முதல் சுற்றில் விட்டதை இரண்டாம் சுற்றில் மேரி கோம் பிடித்தார். அருமையான வீச்சுகளை வேலன்சியாவின் மீது வீசித் தன்னை நிரூபித்தார். வீச்சுகளை இறக்கி முன்னணிக்கு வந்தார். மூன்று நடுவர்கள் மேரி கோமுக்கு ஆதரவாகவும், இரண்டு நடுவர்கள் வேலன்சியாகவுக்கு ஆதரவாகவும் புள்ளிக்ளைக் கொடுத்தனர். இருப்பினும், முதல் சுற்றில் வேலன்சியாவின் வலிமையான தாக்குதல்களால் அவருக்கு நான்கு நடுவர்களிடமிருந்து கிடைத்த புள்ளிகளை மேரி கோமால் சமன்படுத்த இயலாமற்போனது.
மூன்றாம் சுற்றிலும் மேரி கோம் திறமையாக விளையாடினார். கடைசியில் நடுவர்களின் திர்ப்பு அவருக்கு சாதகமாக அமையவில்லை. 4 – 1 கணக்கில் முதல் போட்டியை வென்ற மேரி கோம், 3-2 கணக்கில் இரண்டாம் போட்டியில் தோல்வியைத் தழுவினார். ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.

லவ்லினா போட்டிகள்
1. லவ்லினா – நாதீன்:
பன்னாட்டுக் குத்துச்சண்டைப் போட்டிகளில் லவ்லினா இரண்டு முறைகள் மூன்றாம் இடத்திலும், ஆசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு முறைகள் மூன்றாம் இடத்திலும் வந்து குத்துச்சண்டை உலகில் தனது இடத்தை நிரூபித்துள்ளவர். அவர் தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மானிய வீராங்கனை நாதீனை வென்றார்.
தன்னுடைய இடக்கை நேர்க்குத்துகளைத் திறமையாக வீசினார் நாதீன். குத்துச்சண்டையில் ‘ரீச்’ என்றழைக்கப்படும் கைகளின் நீளம் லவ்லினாவுக்கு சாதகமாக அமைந்தது. ஜெர்மானியரின் மீது குத்துகளை லாகவமாக வீசினார். லவ்லினாவும் ஜெர்மானியரும் சரிக்கு சமமாக மோதினாலும், முதல் சுற்றின் முடிவு லப்லினாவுக்கு ஆதரவாக வந்தது. 3 -2 கணக்கில் முதல் சுற்று முடிந்தது. முதல் சுற்றில் கிடைத்த மேலாதிக்கத்தை வீணாக்காமல் இரண்டாம் சுற்றில் அதிரடியாக இறங்காமல் பொறுமையாக தேவைப்படும் அளவுக்கு மட்டும் வீச்சுகளை வீசினார். இரண்டாம் சுற்றும் 3 – 2 கணக்கில் முடிந்தது.
நாதீனும் திறமையாக விளையாடிய போதும், லவ்லினாவின் ‘ரீச்’ நாதீனை தூரத்தில் வைத்தது. நினைத்தபடி குத்துகளை லவ்லினாவின் மீது வீச முடியாமல் தடுமாறினார். தன்னுடைய ‘ரீச்’சின் பலனால் நாதீனை நெருங்கவிடாமல் வைத்தும், குத்துகளை சரியாக வீசியும் தேர்ந்த அனுபவத்தில் இறுதிச் சுற்றுக்குப் பின் 3 – 2 கணக்கில் வென்றார்.
2. லவ்லினா – நியென் ஷின்
நான்கு முறைகள் ஒரு வீராங்கனையிடம் தோற்று இன்னொரு முக்கியமான போட்டியில் அதே வீராங்கனையைத் தோற்கடித்து முன்னேறும் சாதனையை நிகழ்த்தினார் லவ்லினா. தன்னுடைய போட்டியாளர் ஷென்னுடன் நடந்த முந்தைய போட்டிகளில் தோற்று, இந்தப் போட்டியில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் களம் இறங்கியதாகச் சொல்கிறார். சுயமுன்னேற்றப் புத்தகங்களில் விவரிக்கப்படும் நிகழ்வுகளைப் போல் நடந்தது லவ்லினாவுக்கு இந்தப் போட்டி.
எந்தத் திட்டமும் இல்லாமல், ஷின்னின் வீச்சுகளுக்கு பதிலடி கொடுத்து முதல் சுற்றில் 3 – 2 கணக்கில் முன்னேறி, இரண்டாம் சுற்றில் 5 – 0 என மேலாதிக்கம் செய்தார். மூன்றாம் சுற்று முடியும் வரையில் வெற்றி உறுதியாகாது. மூன்றாம் சுற்றிலும் 4 -1இல் முன்னேறி, மொத்தத்தில் 4 – 1 கணக்கில் வென்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
குத்துச்சண்டைப் போட்டிகளில் கால் இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு வெண்கலப் பதக்கம் உறுதி. அந்த அடிப்படையில் லவ்லினா இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். கால் இறுதியில் வென்றால், வெள்ளி, தங்கம் என முன்னேறலாம்.
3. லவ்லினா – பூசேனாஸ்:
முதல் சுற்றில் வீராங்கனைகள் இருவரும் ஆக்ரோஷமாகத் துவங்கினர். நடுவர் வந்து இடையில் அமைதிப்படுத்தும் அளவுக்கு ஆக்ரோஷம் இருந்தது. லவ்லினாவின் திட்டம் வீச்சுகளைத் தடுத்து ஆடுவது போல் தோன்றியது. சில அற்புதமான வீச்சுகளை லவ்லினா வீசியிருந்தும், முதல் சுற்று அவருக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டாம் சுற்றிலும் தன்னுடைய ஆக்ரோஷத்தைக் குறைக்காத துருக்கியர் பூசேனாஸின் வீச்சுகளைத் தடுக்க லவ்லினா சிரமப்பட்டார். லவ்லினாவின் ஒன்றிரண்டு வீச்சுகள் தவறின. முன்னேறியே தீரவேண்டிய இரண்டாம் சுற்றில் நடுவரின் முன் சிறிது அவசரப்பட்டதால் புள்ளிகளை இழந்தார். சோர்வாகக் காணப்பட்டார். மூன்றாம் சுற்று முழுக்க பூசேனாஸ் ஆதிக்கம் செலுத்த, லவ்லினா தோல்வியடைந்தார்.
கால் இறுதிச் சுற்றை அடைந்ததற்கான வெண்கலப் பதக்கம் பெற்றார்.

பூஜா ராணி போட்டிகள்
1. பூஜா ராணி – ஷைப்:
தன்னை விடவும் பத்து வயது இளமையான ஷைபை பூஜா ராணி தன்னுடைய அருமையான கால் நகர்வுகளாலும், உடற் பின்னல்களாலும் வென்றார். ஷைபின் வீச்சுகள் பூஜா ராணியின் உடற்பின்னல்களால் வீணாயின. தலையைத் தாழ்த்திப் பக்கவாட்டில் நகர்ந்துப் பின் நிலைக்கு வருவது உடற்பின்னல் என அழைக்கப்படும். அந்த பின்னல்கள் பூஜா ராணிக்கு வெற்றியத் தந்தன. அல்ஜீரிய வீராங்கனையால் பூஜா ராணியின் ஆளுமையை எதுவும் செய்ய இயலாமற்போனது. மிகத் தெளிவான வெற்றியாக 5 – 0 கணக்கில் எந்த எதிர்ப்பும் இன்றி ஷைபை பூஜா ராணி வென்றார்.
2. பூஜா ராணி – லீ கியான்
பூஜா ராணியின் முயற்சிகள் அனைத்தும் சீன வீராங்கனை கியானின் முன் எடுபடவில்லை. பூஜா ராணி ஆக்ரோஷமாக முன்னேறிய நேரத்திலும் கியான் அமைதியாகப் பின்னால் நகர்ந்து தவிர்த்தார். ஒன்றிரண்டு வீச்சுகள் வீசப்பட்டு வேகமின்றி முடிந்த முதல் சுற்றில் கியான் 5 – 0வில் முன்னணியில் நின்றார். இரண்டாம் சுற்றும் லீ கியானுக்கு சாதகமாக முடிந்தது. பூஜாவை ஏற விட்டு, வந்ததும் சரியாகக் குத்துகளை வீசினார். பூஜாவால் ஏதும் செய்ய இயலவில்லை. மூன்றாம் சுற்று முடிவதற்கு முன்பே கியானின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
பூஜா ராணி ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறினார்.

பெண்கள் அணியிலிருந்து வந்த இன்னொரு இந்திய வீராங்கனை கௌர் முதல் போட்டியிலேயே 5 – 0 கணக்கில் தோற்று வெளியேறினார்.
ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் ஜப்பானிய வீரர் ஒகாஸாவாவுடன் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்தார். மனீஷ் பிரித்தானிய வீரர் லூக்கிடம் தோல்வியடைந்தார். ஆஷிஷ் குமார், அமித் இருவரும்கூட தங்கள் முதல் போட்டியில் தோற்றனர்.
ஜமாய்கா வீரரை வென்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய வீரர் சதீஷ் குமார், உஸ்பெக் வீரர் பகோதிரிடம் தோல்வியடைந்தார். பகோதிரின் ‘ரீச்’சும், சதீஷுக்கு ஏற்கெனவே முந்தைய போட்டியில் உண்டாகிய காயம் பிளந்துகொண்டதும் சதீஷ் தோல்வியடைய முக்கியமான காரணங்கள்.
ஒன்பது போட்டியாளர்கள் – ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் என்னும் அளவில் இந்தியக் குத்துச்சண்டை வீரர்கள் / வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் இடத்தைத் தேர்ந்துள்ளனர். ஆசிய அளவில், உலக அளவில் போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்தும் ஒலிம்பிக்கில் இதுவரையில் வெண்கலப் பதக்கத்துக்கு மேல் இந்தியக் குத்துச்சண்டைப் போட்டியாளர்களால் வெல்ல முடியவில்லை என்னும் நிலை 2024 பாரிசில் மாறவேண்டும். பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லவேண்டும்.