தலைமைச் செயலகம்

பொதுவாக நாம் நினைவையும், மறதியையும் மனதுடன் இணைத்துப் பேசுவோம். ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்று பி. சுசீலா கேட்கும் போது அந்த மனதைக் கைகளில் எடுத்து சீர்படுத்த நினைக்காதவர்கள் உண்டா? கவிஞர், பின்னர் இரண்டு மனம் கேட்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன்- நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று.’ மனம் என்பது வெகு இயல்பாக நம் மொழியில் வந்து விடுகிறது. ‘மனதார வாழ்த்துகிறேன்’, ‘மனதைத் தொட்டுச் சொல்கிறேன்’, ‘மனசாட்சி இருந்தா இப்படியெல்லாம் பேசுவார்களா?’, ‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்’, ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’, ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ இவைகள் குறிப்பது ஒன்றுதான்- நினைவு மனதின் செயல் பாடு என்ற மரபில் வந்தவர்கள் நாம். ஆம், அகத்தியர் சொல்கிறார் ‘மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை.’ அப்பர் சுவாமிகள் பாடுகிறார்: “மனமெனும் தோணி பற்றி, மதியெனும் கோலை ஊன்றி, சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது, மனனெனும் பாறை தாக்கி, மறியும் போதறிய வொண்ணா  துனையுனு முணர்வை நல்கா வொற்றியூருடைய கோவே”

மூளைக்கும், மனதிற்கும் வேற்றுமைகள் இருக்கிறதா? மனதின் ஒரு பகுதி மூளையா அல்லது மூளையின் ஒரு பகுதி மனமா? மனம், சித்தம், புத்தி இவைகளின் தள எல்லைகள் என்ன? இவற்றிற்கான அறுதியான பதிலை தெளிவாக அறிந்திருக்கிறோமா? சைவர்கள் ‘நினைவை’ ஆகாய அம்சம் என்றும், நினைவும், காற்றும் இணைவது ‘பாய் மனம் அல்லது பேய் மனம்’ என்றும், நினைவும் தீயும் புத்தி என்றும், நினைவும் நீரும் சித்தம் என்றும், நினைவும், நிலமும் அகங்காரமென்றும் சொல்கிறார்கள்.

நினைவு என்பது கவனித்தல். குறியாக்கம் செய்தல், தொகுத்தல்

இன்றைய அறிவியல் மூளையைப் பற்றி, அதன் செயல்பாடுகள் பற்றி, அதில் அடங்கியுள்ளவைகளைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. ஒரு செயல் அல்லது ஒரு நிகழ்வு நடைபெறுகையில் உங்கள் புலன்கள் அதை தகவலாகத்தான் அறிகின்றன. முன் நுதல் புறணி(Prefrontal) பகுதியில், மூளை, இந்தத் தகவல்களை நரம்புச் செயல்பாடுகளாக, மொழியாக்கம் செய்கிறது. இதற்குக் குறியாக்கம் (Encoding) என்று பெயர். இந்தக் குறியாக்கங்கள் முன் நெற்றிப் புறணியிலிருந்து மூளையின் பின்புற மேட்டிற்குக் (Hippocampus) கொண்டு செல்லப்படுகிறது. இங்கே அந்த நரம்புச் செயல்பாடுகள் நிலையான வடிவம் பெறுகிறது. ந்யூரானின் இந்த வடிவங்கள் அந்தத் தருணத்தின் நினைவாகிறது. ஆனால், இதுதான் ஞாபகமா, அப்படியென்றால் அது எவ்வாறு இயங்குகிறது?

எத்தனை வகைகள்?

நம் அன்றாட வாழ்வில் மூவகை ‘நினைவுகள்’- கருத்து சார்ந்தவை(Semantic), காட்சி சார்ந்தவை,(Visuals – episodic) தொடுகை (தோல் போன்ற- Tactile) சார்ந்தவை. முன் நுதல் புறணி, காட்சி மற்றும் கருத்து நினைவுகளைத் தொகுக்கிறது. ரூபாய் நோட்டுக்களில் ஜோராக, வாய் நிறையப் புன்னகையை ஏந்தி சிரிக்கும் காந்தியை அதன் மதிப்பு  என்னவென்று பார்த்து செலவு செய்கிறோம்- அதாவது ரூ 20/-க்கு அரை முழம் (!) பூ வாங்கினால் ரூ 500/-ஐக் கொடுப்பதில்லை. நம் மூளை அதை மட்டும் அந்த நேரத்தில் கணக்கில் கொள்கிறது; அதே நேரம் அந்த ரூபாய்த் தாளைப் பெறுபவர் அது போலியில்லையா என்றும் கவனிக்கிறார்- இங்கே மதிப்பும், ஏற்பும் நடை பெறுகின்றன- இதற்கு உதவுவது மேலே குறிப்பிட்ட இரண்டு ‘நினைவுகள்’. ரூபாய்த்தாள், குறியாக்கச் செயல்பாடு மூலம் முன்  நெற்றிப் புறணியில் பதிந்து தொகுப்பாகிறது; அது நினைவில் நிலை பெறவேண்டுமென்றால் மூளையின் பின்புற மேடு அதைத் நரம்பு வடிவங்களாக எடுத்துக் கொள்கிறது. மீள மீள நீங்கள் அந்தத் தாளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பதித்துக் கொண்டால், இந்த நரம்புச் செயல்பாடு உள்ளே பயணித்து நிலையான வடிவம் பெற்று, தேவை ஏற்படும் போது நினைவில் இருந்து எழுந்து வருகிறது. அது மட்டுமல்ல, இது ‘நீள் ஆயுள் நினைவு’(Long term memory) என்ற தகுதியையும் பெறுகிறது. 

இதற்கு மாற்றாக, அத்தியாயம் சார்ந்த (episodic) நினைவுப் பதிவுகள் ‘நிகழ்வு நினைவுகள்’ என அறியப்படுகின்றன. அதிலும் நம்மைப் பாதித்த நிகழ்ச்சிகள், மகிழ்வான ஒன்றோ, இல்லையோ, நினைவில் நிலையான வடிவமாகப் படிந்து விடுகின்றன. இந்த ‘நினைவு’ சக்தி மிக்கது, மீண்டும் மீண்டும் அதைப் போன்ற நிகழ்வுகளில் நினைவில் எழுவது–ஓரு வீட்டில் ஒருவன் திருட வந்தால் அந்தத் தெருவாசிகள் அதைப் போன்ற, அவர்கள் அனுபவித்த, பார்த்த, கேட்ட நிகழ்ச்சிகளைச் சொல்லத் தொடங்கி விடுவார்கள் அல்லவா? அத்தனை வீர்யமுள்ள இந்த ‘நினைவு’ சரியாக இல்லாமலும் போகலாம். இது இயல்பான ஒன்றுதான். ஜனவரி 28, 1986-ல் ஃப்ளோரிடாவின் நீல வானத்தில் மேலெழும்பி வெடித்து தீப்பந்து போல் சிதறிய ‘சேலஞ்சர்’ விண்கல விபத்தை பல இலட்சக் கணக்கானோர் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்தனர். எமோரி (Emory) பல்கலையைச் சேர்ந்த இரு உளவியல் பேராசிரியர்கள், விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு, தங்களிடம் படிக்கும் மாணவர்களை, விபத்து நிகழ்ந்த போது அல்லது அதைப் பற்றிக் கேள்விப் பட்ட போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை எழுதித் தரச் சொன்னார்கள். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் இதே மாணாக்கர்களை அந்த நாளை நினைவு கூர்ந்து எழுதச் சொன்னார்கள். அத்தனை மாணவர்களின் நினைவும் மாறியிருந்தது. ‘சேலஞ்சர்’ வெடித்த போது எழுதியதற்கும், இப்போது எழுதியுள்ளதற்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிய போது, தாங்கள் தற்சமயம் எழுதியுள்ளதுதான் சரியானது என்றும், முன்னர் சொன்னது சரியில்லை என்றும் மாணவர்கள் சொன்னார்கள். இதிலிருந்து நாம் ஒன்றை அறிந்து கொள்ளலாம். புலன் மூலம் அறிந்து அதை நரம்பு செய்திகளாக மூளை பெற்றுக் கொண்டு சேமித்து, தேவையான நேரங்களில் கையாண்டு, என்று அற்புதத் திறன் இருந்தாலும் ‘நினைவு’ முற்றிலும் சரியாகத்தான் இருக்கும் என்பதில்லை.

நம் நினைவுகள் 100% உண்மைகளா?

புலன்களின் ஆற்றல் அளப்பரியதுதான்; ஆனாலும், முழுதுமாக ஒரு நிகழ்வு அப்படியே உள் நுழைகிறது என்பதில்லை. நம் கோணங்கள், ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிகழ்வின் எல்லைகளாகக் கூடும். இந்தப் புலன் செய்திகளை, நாம் நரம்புச் செய்திகளாக மொழி பெயர்க்கையில் நம் நம்பிக்கைகள், சார்புகள் போன்றவை மிகுந்த ஆதிக்கம் செலுத்தும். இறுதியாக அந்த நரம்புச் செய்திகளை நிலையான வடிவமாக படைப்பூக்கத்துடன் வடிகட்டி, சேமித்து, தேவையானால் மீளெடுத்து உபயோகிக்கிறோம். சேமிப்புக் கிடங்கை நாம் அணுகத் தேவையில்லையென்றான நிலையில், ‘நினைவின்’ நரம்பு இணைப்புகள் பின் வாங்குகின்றன; இடைவெளி ஏற்பட்டு மறதி உண்டாகிறது.

மீளெடுக்கும் ‘நினைவு’ துல்லியத்தைத் தக்க வைப்பதில்லை. நரம்பு வடிவங்களை மீளழைத்து, இடைவெளிகளை ‘கண்டுபிடித்த செய்திகளால்’ நிரப்புகிறோம். நேற்றை, இன்றாக, நம் எண்ண ஒட்டங்களுக்கேற்ப, நாம் விரும்பும் வண்ணம் அந்த நிகழ்வை வடிவமைக்கிறோம். ஒவ்வொரு நினைவு கூறலிலும், நாம் மீளெழுதியவற்றை பதித்துக் கொண்டு முன்னர் பதியப் பெற்றதற்கு விடை கொடுத்து விடுகிறோம். இதுதான் ‘அது’ என்றும் நம்புகிறோம். (இது ‘பொய் சொல்வதாகாது) ஏனெனில் இது ஒன்றுதானே இப்போது இருக்கிறது?

தசை நினைவுகள் (Muscle Memory) தனித்தன்மை வாய்ந்தவை

கருத்து சார் நினைவும், காட்சி சார் நினைவும் ஹிப்போ கேம்பஸ்ஸில் எப்படி நுழைகின்றன, இடம் பெறுகின்றன எனப் பார்த்தோம். ஆனால், தசை நினைவுகள்? அவற்றின் வசிப்பிடமே வேறு! மீள் பயிற்சியின் மூலமாக நம்முடைய இயந்திரப் புறணியில் (Motor Cortex) இத்தகைய நினைவுகளை நாம் உண்டாக்குகிறோம்.

ஹென்றி மொலைசன்(Henri Molaison) தன் சிறு வயதில் சைக்கிளை ஓட்டும் போது தவறி விழுந்து தலையோட்டு எலும்பு முறிந்துவிட்டது. சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு வலிப்பு வர ஆரம்பித்து மிக அதிகமாகியது; தன்னுடைய 27-ம் வயதில், அவர் அறுவை சிகிட்சை செய்து கொண்டார். அறுவை சிகிட்சை நிபுணர் வில்லியம் ஸ்கோவில்(William Scoville) பரிட்சார்த்த முறையில், ஹென்றியின் மூளைப் பின்புற மேட்டை அகற்றினார். வலிப்புகள் குறைந்தாலும் ஹென்றிக்கு நீடித்த நினைவுகள் இல்லாமல் போயின. ஆயினும், மூளையின் இயந்திரப் புறணியில் நினைவுகள் செயல்பட்டன. அதென்ன, இயந்திரப் புறணி நினைவுகள்? நீங்கள் வீணையில் மந்தர ஸ்தாயீயில் ஒரு ஸ்வரத்தை வாசிக்க விரல்களைக் கொண்டு செல்கையில், இயந்திரப் புறணியில் உள்ள ந்யூரான்கள், தண்டு வடத்தின் மூலம் உங்கள் தசைகளுக்கு செய்தி அனுப்புகிறது. அவைகளுக்கிடையே உள்ள இணைப்பு வலுவாகிறது, நரம்புப் பாதை நிலையாகிறது, பயிற்சியின் வழி இந்தப் பாதையை எளிதாகக் கையாள முடிகிறது,  பழக்கமாகப் பழக்கமாக இதற்கான தனிப்பட்ட மெனக்கெடல்கள் இல்லாமலேயே, இயல்பாக இந்தத் தசை நினைவுகளைக்(Muscle Memory) கொணர முடிகிறது. நம் ஹென்றிக்கு ஒரு ஆய்வாளர் வரைதலைக் கற்பித்தார்-ஆனால், வழக்கமான முறையில் இல்லாமல், வரையும் கரத்தினைக் கண்ணாடியில் பார்த்து, சிறிது சிறிதாக ந்யூரான்களின் பாதை ஏற்பட்டு, பழக்கத்தினால் நிலை பெற்று, வரையும் கருவியினை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஹென்றியால் வரைய முடிந்தது. இதுதான் மாற்றி யோசிப்பதோ? தசை நினைவுகள் மூளைப் பின்புற மேட்டைச் சார்ந்ததாக இல்லாதிருப்பது வரமல்லவா?

மறதி என்பது வரமா, சாபமா, உதவியா, உபத்திரவமா?

சாலமன் ஷெரெஷெவ்ஸ்கி (Solomon Shereshevsky) என்பவருக்கு எதையுமே மறக்க முடியவில்லை. நினைவுக்களஞ்சியத்தில் அவர் மறக்க நினைத்தவைகளும் சேர்ந்து பதரும், நெல்லும் கலந்து மனிதர் தவியாய்த் தவித்துவிட்டார். அர்த்தமற்ற எண்கள், பெயர்கள், மூளையிலிருந்து நகர மறுக்க, உளவியலாளர்கள் முப்பதாண்டுகளாக அதைப் பார்த்து மலைத்துப் போனார்கள். காமனை எரித்த சிவனின் சக்தி மட்டுமிருந்திருந்தால் அவர் நினைவுக் குப்பை போகி கொண்டாடியிருக்கும்.

மறதி சங்கடமானதுதான், ஆனாலும் மறதியும் தேவையே! நமது ‘செயல்படும் நினைவு’ இதில் உதவிகரமாக இருக்கிறது. காலையில் பால் புட்டியை இயந்திரத்தனத்துடன் எடுப்போம்; அது இல்லையென்றால் தான் அதைத் தருவிக்க என்ன செய்ய வேண்டுமென்ற எண்ணம் வரும். நம்முடைய வழக்கமான தினசரி செயல்களுக்கு நம்முடைய செயல்படும் நினைவு உதவுகிறது. அது சூழலில் நிலவும் தரவுகளையும், நிகழ்வுகளையும் நமது புலன்களின் மொழியெனக் கொண்டு ஒரு நிகழ்விலிருந்து மற்றொன்றிற்குச் செல்லும். இந்தச் செயல் நினைவு முக்கியமானது என்றாலும் தற்காலிகமானது. அந்த ரூ 20/- தாள் நினைவில் இருக்கிறதா? அதில் கையெழுத்திட்டிருப்பவர் யார்? கையெழுத்து இருந்ததா என்ன? எத்தனை மொழிகள் அதில் இருந்தன? எத்தனை முறை பார்த்த தாள், ஆனால், தேவையற்ற நினைவு/செய்தி எனக் கருதுவதை மட்கிப் போக விடுவது நல்லதே. அதைப் போலவே நாம் மறக்க நினைக்கும் ஒன்றை, நம்மைத் தொந்தரவு செய்யும் ஒன்றை விடாமுயற்சியாலும், பயிற்சியாலும் மறப்பது நன்மையைச் செய்யும். அந்த நரம்புப் பாதை மங்கிவிடும்.

‘பிந்தைய மன உளைச்சல் சீர் கேடு’ (PTSD) உள்ளவர்களுக்கு இந்த நரம்புப் பாதையிலிருந்து விடுபடுவது மிகக் கடினமான ஒன்று. அந்த அதிர்ச்சிகரமான ஒன்று இப்போது நடப்பது போலவே அவர்களுக்குத் தோன்றும். அதிர்ச்சியிலிருந்து விலகுவதற்காக அவர்கள் மீள மீள அந்த சம்பவத்தை நினைத்து, அப்படி நினைக்கும் ஒவ்வொரு முறையும், அதற்கான சுப முடிவுகளைக் காட்சிப்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர முயல்கிறார்கள்.

சற்று முன் நாம் பார்த்த சாலமன் இதைத்தான் செய்து மீண்டார்- அர்த்தமில்லாத கிறுக்கல்களை எழுது பலகையில் நினைவால் எழுதி எழுதி அதை அழித்து அழித்து சுத்தக் கரும்பலகையாகச் செய்து தேவையற்ற நினைவாற்றலைப் போக்கிக் கொண்டார்.

பின்னர் செய்யலாம் என நாம் நினைத்தவைகள் முற்றிலும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல

மரபிசைக் கலைஞர்கள் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். உலகப் புகழ் பெற்ற செல்லோ இசைக் கலைஞரான யோ- யோ ம(Yo Yo Ma) $2.5 மில்லியன் மதிப்புள்ள தன் கருவியை ந்யூயார்க் நகரில் காரில் மறந்து விட்டு விட்டார். அது அயர்வோ, பதட்டமோ, கவனச் சிதறலோ, ஏதோ ஒன்று, அவர் காரை விட்டு இறங்குகையில் செல்லோவை மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சி குறிப்பிடுவது ‘பின்னர் செய்வோம்’ என்பது அத்தனை நம்பகமாக இருப்பதில்லை என்பதைத்தான். வண்டியில் ஏறும் நேரம் தொட்டிலில் தூங்கும் குழந்தையைக் கடைசியாகக் கைகளில் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைவில் குழந்தையை மறந்து போய் வீட்டைப் பூட்டிக் கொண்டு போன தி. ஜாவின் சிறுகதை நினைவிற்கு வருகிறதா? பாருங்களேன்- கதையின் தலைப்பை மறந்து விட்டேன்!

சிலவற்றை மறப்பது நல்லது, தேவையானது. ஆனால், மறக்கக் கூடாதவற்றை மறந்தால்..? 2008 முதல் 2013 வரை அமெரிக்க அறுவை சிகிட்சையாளர்கள் 772 சஸ்திர சிகிட்சைக் கருவிகளை நோயாளிகளின் உடலிற்குள் விட்டுவிட்டு தையல் போட்டுவிட்டார்கள். (ஒருக்கால் மீண்டும் செய்ய நேரிடும் சிகிட்சையின் போது அவை தயாராகக் கிட்டும் என்பதாக இருக்குமோ? இந்தியாவிலும் இதைப் போல நிகழ்வுகள் உண்டு. அவை பத்திரிக்கை செய்திகளாக வரும். (அந்த மருத்துவர் பெண்ணாக இருந்தால் சற்று அதிகக் காரசாரத்துடன் பேசுவார்கள்- ஆணாக இருந்தால் உதவி புரிய அங்கே இருந்த நர்ஸ் இதையெல்லாம் கவனிக்க வேண்டாமோ என்று ஆதங்கப்படுவார்கள்.) பொருட்பட்டியல் இவ்விதத்தில் மருத்துவர்களுக்கு உதவுகிறது. விமானிகளுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறந்து போவது என்பதை இயல்பென எடுத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை நம் அலைபேசியில் கூட ஒரு பதிவாக்கி, அல்லது குறிப்பேட்டில் எழுதி மறதியை வெல்லலாம். நாங்கள் நண்பர்கள் ஒரு பூங்காவில் கூடி கதை பேசிவிட்டு அவரவர் வீட்டுத் தின்பண்டத்தை எல்லோருமாகப் பகிர்ந்து உண்ணத் திட்டமிட்டோம். மிகுந்த ஆரவாரத்துடன் திறந்த என் வீட்டு  தின்பண்டப் பெட்டியில் எதுவுமில்லை; மாற்றி எடுத்து வந்து விட்டேன்.

நினைவு என்பது மெச்சத்தக்கது, மந்தமானதும் கூட 

பள்ளியில் படிக்கும் பலருக்கும் ‘பை’ என்பதன் மதிப்பு பையப் பைய மூன்று இலக்கங்கள் வரை சொல்ல வரும். 69 வயதான பொறியியலாளர், அகிரா ஹரகூசி (Akira Haraguchi) என்ற ஜப்பானியர், 111,700 இலக்கங்கள் வரை பிழையில்லாமல் சொன்னார். அர்த்தம் பொதிந்த உணர்ச்சிகளை நினைவு நீடித்து வைத்துக் கொள்ளும் என்பதால், அவர் ஒவ்வொரு இலக்கத்தையும், எழுத்தாக்கி, எழுத்தினை வார்த்தையாக்கி, வார்த்தைகளை வரிகளாக்கி இதைச் சாதித்துள்ளார். அவர் சதாவதானி இல்லை, கணக்கு மேதையும் இல்லை. நம்மைப் போன்ற சாதாரண மனிதர். நீங்கள் எப்படி பல வார்த்தைகளை, எண்களை, அரிய தகவல்களை நினவில் நிறுத்தியிருக்கிறீர்களோ அதைத்தான் அவரும் செய்திருக்கிறார், ஆனால், எண்களுக்கு உணர்வூட்டியிருக்கிறார். வியக்க வைக்கும் நினைவு, ஆனால் மறப்பதும் நடக்கிறதே. அகிராவிற்கு மனைவியின் பிறந்த நாள் நினைவிருப்பதில்லை. (உலகெங்கும் கணவன்மார்களின் சதித்திட்டம் இது)

‘நெஞ்சுக் குழில இருக்கு, நாக்கு நுனில இருக்கு ஆனா, முழுசா நெனவு வல்லியே?’ இந்த வசனத்தை நாம் கேட்கிறோம், சொல்லவும் செய்கிறோம். அடிக்கடி நடக்கும் இந்த மடத்தனம் நம் நாவின் நுனியில் நடக்கிறது. “எனக்கு நன்றாகத் தெரியுமே, அவர் அடித்த ஸ்கொயர் கட்டிற்காக நான் போட்ட சத்தத்தில், எங்கள் சீலிங் ஃபேன் கீழே விழுந்துடுத்து. பேரு தான், ‘கு’ல ஆரம்பிக்கும்டா. கவாஸ்கர் தங்கையை கல்யாணம் செஞ்சிண்டார்.”- குண்டப்பா விஸ்வனாத் என்ற பெயர் சொல்வதில் மறதி, ஆனால் மற்ற தொடர்புடைய செய்திகள் எப்படி வெளி வருகின்றன பார்த்தீர்களா? பெயர் நினைவு வராவிட்டாலும் பாதகமில்லை, ‘கூகுளார்’ துணையை நாடுவதில் தவறில்லை. பெயர்கள் புலனாகா வகையில் அமைந்தவை. அதனாலேயே அவை நுனி நாக்கில் தொங்கி விடுகின்றன. மேற்கண்ட எடுத்துக்காட்டில் கூட அவர் தொழில், அவர் விளையாட்டு, அந்த விளையாடல் நேர்த்தி போன்றவை நம் புலன்களில் கருத்தும், காட்சியுமாகப் படிந்துள்ளன. ஆனால், பெயர் அப்படி பதிவாகாது. இந்த இடத்தில் ஒரு நகைச்சுவை செய்தியைப் பார்ப்போம். ‘முதியவர் ஒருவர் தன் மனைவியைத் “தேனே, மானே, குயிலே” என்றெல்லாம் அழைப்பதைப் பார்த்த சிறுவன் ‘பாட்டியிடம் உங்களுக்கு அத்தனை அன்பா?’ என்று கேட்டான். நான் அவள் பெயரை மறந்து விட்டேன், அவளிடம் கேட்பதற்கும் பயமாக இருக்கிறது; அதுதான் இப்படி சமாளிக்கிறேன்” என்றார்.

வயது ஏற ஏற நினைவு தேயத் தேய

நிச்சயமாக எரிச்சல் தரும் ஒன்று இது. ஆனால், இது முற்றிலும் இயற்கையானதே. அல்சைமர் நோயோ இது? இல்லை, அது வேறு விதமானது

பொதுவாக நமக்கு இந்த அனுபவம் உண்டு. குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து எதை எடுக்க நினைத்தோம் என்பதை மறந்து அதை மீண்டும் மூடுவது, கத்திரிக்கோலை எங்கேயோ வைத்துவிட்டு தேடுவது. இவை பொதுவாக நம் ஐம்பதுகளில் ஏற்படத் தொடங்கும். நமக்கு இத்தனைக்கும் நடுவில் ஒரு பயம்; ‘நான் மூளையை இழக்கத் தொடங்கி விட்டேனோ?’ வயதாகி வரும் போது கருத்து சார் நினைவு மங்கி நுனி நாக்கில் தேங்கும் சொற்களில் நின்று விடுகிறோம். அற்புத அத்தியாய நிகழ்வு சார்ந்த நினைவுகளில் இடைவெளி  உண்டாகிறது. ஏற்கெனவே உதிர்ந்து நொறுங்கும் நிலையிலுள்ள ‘பின்னர் செய்ய வேண்டியவைப்’ பற்றிய நினைவுகள் நம்பும் நிலையில் எழுவதில்லை. இவை அனைத்துமே மூளையின் வேகம் குறைவதால், ந்யூரான் இணைப்புகளுக்கு வயதாவதால், அதிகரிக்கும் கவனக் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. இது கவலை தரும் ஒன்றல்ல. 

அமிலாய்ட் படலங்கள்(Amyloid Plaques) என அழைக்கப்படும் புரதங்கள் நம் மூளையில் சேர்வதில் இந்த அல்சைமர் உண்டாகிறது. நரம்புத் திசுக்களில் உள்ள இடைவெளிகளில் இத்தகைய புரதங்கள் காறைகளெனப் படிந்து நினைவைக் கறை படியச் செய்கின்றன. இடம், பொருள் சார்ந்த விஷயங்களை உணர்த்தும் மூளையின் முன்புறணியை இந்தப் புரதத் தகடுகள் பத்து வருடங்கள் போல ஆக்கிரமித்து நரம்புச் செய்திகளின் தோல்வியில் முடிகின்றன. வயதாவதால் வரும் மறதிக்கும், அல்சைமர் நோய் தாக்கத்தால் வரும் மறதிக்கும் வேறுபாடுகள் உண்டு. உதாரணமாகக் கார் சாவியைத் தேடுவது மறதி, கையில் சாவியிருந்தும் இது எதற்காக என வியப்பது அல்சைமர்.

வயதாவதால் வரும் மறதியையும், அல்சைமரின் கடும் தாக்கத்தையும் எதிர் கொள்ள வழி வகைகள் உள்ளன. அவை என்னென்ன?

நல வாழ் முறை

வயதான 678 கத்தோலிக்கப் பெண் துறவிகளின் வாழ்வியல் முறைகளை  இருபது ஆண்டுகளாக அல்சைமர் ஆய்வாளர்கள் கவனித்து வந்தனர். அவர்களது எண்ணம், செயல், நம்பிக்கையில் உள்ள உறுதி, மற்றும் உடல் சார்ந்த செயல்பாடுகளைக் குறிப்பெடுத்தனர். இறந்த பிறகு தங்கள் மூளைகளைப் பகுத்து ஆய்வு செய்வதற்கும் இந்தத் துறவிகள் ஒப்புக் கொண்டனர். சில அமிலாய்ட் தகடுகள், மூளைச் சுருக்கங்கள், மூளை அடர்த்தி குறைந்து வருவது போன்ற வயதான மூளையின் தன்மைகளை ஆய்வாளர்கள் இந்த மூளைகளிலும் பார்த்தார்கள்; ஆனால், எவருக்குமே அல்சைமர் நோய் இல்லை. நலமான, உடல் உழைப்பும் சார்ந்த வாழ்வு முறை, மூளை களைப்படைவதையும் குறைக்கிறது, அல்சைமர் போன்ற நோய் அணுகாமல் தடுக்கிறது. முறையான கல்வி, துடிப்பான சமூகச் செயல்பாடுகள், அர்த்தமுள்ள வேலை, மூளையைத் தூண்டும் பயனுள்ள பொழுது போக்குகள்  ஆகியவையினால் இந்தத் துறவிகள் புது நரம்பு இணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு மூளையை நலமாக வைத்திருந்திருக்கிறார்கள். இதன் விளைவால், அமலாய்ட் தகடுகள் நரம்புப் பாதையை ஆக்ரமித்தாலும், புதிதாக உண்டான மாற்று நரம்புப் பாதைகளை தலைமைச் செயலகமான மூளை பயன்படுத்திக் கொண்டு ‘டிமென்ஷியா’ போன்ற நோய்கள் பாதிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. நலமான, செயல்படும் வாழும் முறை நம் மூளையைப் பாதுகாக்கிறது 

இதை எப்படிச் செய்யலாம்? உடற் பயிற்சியோ, நடைப் பயிற்சியோ, புதிதாக ஒரு மொழி கற்றுக் கொள்வதோ, இசையோ, கலையோ நிச்சயமாக உதவும். அதே நேரம் தேவையான அளவில் உறங்கவும் வேண்டும். ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் இருந்தால் தான் மூளைப்பின்புற மேடு நாளின் நினைவுகளைச் சேமிக்க முடியும். தூக்கமின்மை தொடர்ந்தால் அல்சைமர் வரும் சாத்தியங்களும் உள்ளன. மன அழுத்தங்கள், தொடரும் மனச் சிக்கல்கள் நம் மூளைகளைப் பாதிக்கும். அழுத்தங்களைச் சமாளிக்க அவ்வகைச் சுரப்பிகள் செய்யும் அதிகப்படியான செயல்பாடுகள் மூளையின் நலத்தையும் பாதித்துவிடும். இத்தகைய நிலை தொடர்ந்தால் பின்புற மேடு சுருங்கிவிடும். தொடரும் விடாப்பிடியான அழுத்தங்களைத் தவிர்க்க முடியுமானால் நல்லதே. இல்லையெனில் தியானம், நன்றி, கருணை, இரக்கம் போன்ற பண்புகளை வளர்த்துக் கொண்டோமானால்,  இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், கவலைப் படுவது குறையும், மூளைப் பின்புற மேடு பெரிதாகும், நினைவுகளும், நரம்புப் பாதைகளும் நிலை பெறும். கண்களுக்குப் புலனாகாமல் நன்மை செய்பவை தியானம் முதலானவை.

நலமான வாழ்வியல் முறைகளுடன் நாம் நினைவை மேம்படுத்த சிலவற்றைச் செய்யலாம்.

எது எளிதாக இருக்கிறது, எண்களை நினைவு கூறுவதா அல்லது காட்சிகளை?

காட்சியும், கதையும் நினைவில் நிற்பதைப் போல எண்கள் நிற்பதில்லை.

மூளை காட்சிக்கு முன்னுரிமைக் கொடுப்பதை அறிந்த அறிவியல் இதழியலாளர் ஜோஷுவா ஃபோயர்(Joshua Foer)  இலக்கங்களை, மனிதர்களாகப், பொருட்களாகச், செயல்களாக உருவகிக்கும் குறியீடு ஒன்றை உருவாக்கி 2006-ல் அமெரிக்க ‘நினைவு மேதை’ போட்டியில் முதல் பரிசு வென்றார்.

கவனச் சிதறல்களை அகற்றி, செயல்படும் நினைவுகளின் கதவுகளை அகலத் திறந்து, காட்சிகளை ஊன்றிக் கவனித்து, உண்மையான செய்திகளில் ஈடுபட்டு வந்தோமென்றால் ஃபோயர் அளவிற்கு இல்லாவிட்டாலும் நம் மூளை நம்மைக் கைவிடாதிருக்கும். எதிலும் இருக்கும், தேவையான செய்தியில் நம்மை இணைத்துக் கொள்வது, (மன ரீதியாக) ஈடுபடுவது, நிகழும் ஒன்றை வெவ்வேறு வகையில் சிந்தித்து மிகச் சரியானதைத் தேர்ந்தெடுப்பது, இரவு உறங்கச் செல்லும் போது அன்றைய நாளில் நாம் சந்தித்த நபர்கள், வினோதங்கள், காட்சிகள், எல்லாவற்றையும் சிந்தையில் ஓட்டிப் பார்ப்பது போன்றவை நம் நினைவை வலுவாக்கும்.

நம் பெரியவர்கள் சொல்வார்கள் ‘உருப்பட வேண்டுமென்றல் உருப்போடு’ என்று. உரு ஏறத் திரு ஏறும். மீளச் செய்வது, மனப் பயிற்சி, பல்வேறு வகையான கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொண்டு நினைவை வளப்படுத்துதல், அலை பேசிகளில், குறிப்பேட்டில் பதிந்து அவற்றை நேரப்படி செய்யும் பழக்கமாக்குதல், கவலையற்ற மன நிலையை வளர்த்துக் கொள்ளுதல், ஏதேனும் பொழுது போக்கு விருப்ப வேலையில் ஈடுபடுதல், அமைதியாக உறங்குதல் இவையெல்லாம் மன நலம் மட்டுமல்ல, மூளை வளமும் கூட. குறிப்பேட்டில் எழுதுவதோ, நினைவூட்டும் மணி ஒலிப்பதோ மூளையின் செயல் திறனைப் பாதிக்காது.

தொகுத்துச் சொல்வதென்றால் இவ்வாறு சொல்லலாம்:

நம் படிப்பறிவு, பட்டறிவு, தரவுகள், வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தையும் நாம் நினைவில் கொள்வதென்பது அபாரமான செயல். மீள நினைவு கூறல், வியப்புகள், அர்த்தங்கள் இவைகளைக் கொண்டு நரம்புச் செய்திகளை, பன்னெடுங்காலம் பயன் தரும் நரம்பு வடிவங்களாக மூளை சேமிக்கிறது. ஆயினும் இந்த அற்புத நினைவாற்றலில், சில பொருத்தப்பாடற்ற, சரியாக இல்லாத செய்திகளும் இடம் பெறும்; அதுதான் மனித இனம். இந்த சறுக்கலைப் புரிந்து கொண்டால் அதை தவிர்ப்பதையும், எதிர் கொள்வதையும் நம்மால் செய்ய முடியும். அப்படியானால், நாம் என்ன செய்யலாம்?

மூளைக்கு நலமான உணவை எடுத்துக் கொள்ளலாம். அவை கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகையறாக்கள், கொட்டைப் புரதங்கள், முழு தானியங்கள், மீன், ஆலீவ் எண்ணை ( தமிழ் நாட்டில் நல்லெண்ணை) இவ்வகையான உணவுகள் அல்சைமர் ஏற்படும் அபாயத்தை பாதியாகக் குறைக்கின்றன என்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.

Book summary of Remember by Lisa Genova: The Science of Memory and the Art of forgetting


ஞாபகம் இன்றி கற்றல் இல்லை என உளவியல் ஆய்வாளர் விக்கென்ஸ் (Wickens) சொல்கிறார். ஜே கே யோக்(J K Yog) சொல்வது: “பயிற்சி என்பதற்கு இரு ஆதாரங்கள்- ‘என்னால் முடியும்’; மற்றொன்று ‘என்னால் முடியாது.’ உருப்போடும் சிந்தைகள் தசைகளை வலுவாக்கும்; பழக்கப் படுத்துவதால் மனதை அந்த திசையில் செலுத்த முடியும்; அது நம் குறிக்கோளை அடைய உதவும். இதில் மன மேலாண்மை இடம் பெறுகிறது- அதனால் நம் உணர்வுகளும், மன ஒட்டங்களும் சீரடைகின்றன. சிறந்த வாழ்விற்கு இதுதான் அடிப்படை.”

திரு வி.எஸ். இராமசந்திரனின் ‘Phantoms in the Brain நூலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

மனமானது, சிடுக்குகளற்ற நம்பிக்கை அமைப்பிற்காக போராடும்; ஏனெனில் சிக்கலான வாழ்க்கை அனுபவங்கள் அதை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது.

மனமும், உடலும் இரு வழிப் பாதை போன்றவை. அவை ஒன்றை ஒன்று பாதிக்கும் தன்மை உடையவை. உடல் ஆரோக்கியம், மன நலத்திற்குத் தேவை. செம்மையான மனம் உடற் செயல்பாட்டிற்கு உறுதுணை. 

வி.எஸ். இராமசந்திரன் ஷேக்ஸ்பியரின் கூற்றாக இதைச் சொல்கிறார்

‘Canst thou new minister to a mind diseased
Pluck from the memory a rooted sorrow,
Raze out the written troubles of the brain,
And with some sweet oblivious antidote
Cleanse the stuffed bosom of that perilous stuff
Which weighs upon the heart?’

நம் வேதாதங்கள் ‘சதுராத்மா’ எனக் குறிப்பிடுகின்றன

அவற்றின் படி நிகழ்வு புத்தியிலும், எண்ணங்கள் மனதிலும், மீளெடுத்தல் சித்தத்திலும், நடை பெறுகின்றன. அவை நடை பெறும் இடமாக உள்ளம் அல்லது அந்தக்கரணம் இருக்கிறது. அந்த உள்ளத்தின் தூய சைதன்யமாக இறைவன் இருக்கிறான். ஆன்மீகப் பெரியோர்கள் நம் பாரத தேசத்தில் மனதைப் பற்றிய பல செய்திகளைப் பதிந்துள்ளனர். பொதுவாக, மனதிற்கும், உணர்தலுக்குமான செய்திகளில் புத்தியைப் பற்றிய கூறுகள் குறைவே. அறிதல், முறைகள், தெளிதல், உள் நிறுத்தல், உபதேசித்தல், பயன்படுத்துதல் என்றே அறிவைப் பற்றிய  குறிப்புகள் உள்ளன. ‘வாக்கும், மனமுமில்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து’ என்று பாடுகிறார் ஒளவையார். சதாவதானி எனப் போற்றப்படும் செய்குத்தம்பி பாவலரையும், கதிரவேற் பிள்ளையையும் நினைத்துப் போற்றுவோம்.

4 Replies to “தலைமைச் செயலகம்”

  1. நினைவுகள் எனப்படுபவை நிலைத்து நிற்கும் நியூரான் வடிவங்கள், நினைவாற்றலில் மூளைப் பின்புற மேட்டிற்கு (hippocampus) பெரும் பங்கு உண்டு, நினைவுகள் 100% நம்பகத் தன்மை கொண்டவை அல்ல, போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உதாரணங்கள் உபகதைகள், நகையாடல் மூலம் அற்புதமாகக் கையாண்டிருக்கிறீர்கள். வயதானவரின் மூளை வேகம் குறைவது அல்சய்மர் அல்ல என்று தெளிவு படுத்தியதோடு, நினைவாற்றலைப் பேணுதலுக்குரிய வாழ்வு, உணவு முறைகளையும் குறிப்பிட்டு எழுதி இருப்பதால் இது நினைவுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரையாக (treatise) மிளிர்கிறது.
    வாழ்த்துகள்… கோரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.