தடக் குறிப்புகள்

This entry is part 3 of 4 in the series தடக் குறிப்புகள்

ஆடம் இஸ்கோ

தமிழாக்கம்: மைத்ரேயன்

யாரேனும் எனக்கு அவர்களுடைய ஊர்திகளில் அடுத்த ஊர் வரை இலவசமாகப் பயணிக்க அழைப்பு கொடுத்தால், நான் அவர்களுடைய கண்களை நேரே நோக்குவதை குறிப்பாகச் செய்து வந்தேன். (அந்த வண்டிகள், குதிரைகளை ஏற்றப் பயன்படும் தொடர் வண்டியாக இருக்கலாம், ஒரு பிக் அப் ட்ரக்காக அல்லது அப்போதே பிடிக்கப்பட்ட லூயிஸியானாவின் நீல நண்டுகளை ஏற்றிச் செல்லும் அரை ட்ரக்குகளாக இருக்கலாம். இவற்றின் பின்புறம் என்னை ஏற்றிச் செல்ல அழைப்பு வரும்.) அனேக நேரம் அன்பும், அரவணைக்கும் எண்ணமும்தான் அவற்றில் எனக்குத் தட்டுப்படும், ஆனால் சில சமயம் அங்கே கண்களுக்குப் பின்னே யாருமே இல்லாதது போலத் தெரியும். அங்கே ஒரு ஆவி குடியிருப்பது போலவும் தெரியும்- ஒரு மினுங்கல், கீற்றொளி, பொறி, ஏதோ நிரம்பித் ததும்புவது போல – அல்லது முழு வெற்றிடமாக, பாழ்வெளியாக, உள்ளீடற்ற துளையாக இருக்கும். ஒரு தடவை பளபளப்பான கண்கள் கொண்ட ஒருவர், ஐடஹோ மாநிலத்தின் வடபகுதியில், பாண்ட் ஒரேய் ஆற்றின்[1] பக்கவாட்டுச் சாலை வழியே பயணிக்க எனக்கு அழைப்பு விடுத்தார். பயணியின் இருக்கையில் அமர்ந்து சில நிமிடங்கள் கழிந்ததும் அவர் முழு போதையில் இருந்தார் என்று எனக்குப் புரிந்தது. அவர் இரட்டை மஞ்சள் கோட்டைக் குறுக்கே கடந்து ஓட்டியதைப் பார்த்தபோது,நான் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தேன். சில நாட்கள் கழித்து, வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில், ஒரு நகரின் பூங்காவில் கூடாரம் அடித்து விட்டு அதில் நான் தங்க ஆரம்பித்த போது, வெறித்த கண்கள் கொண்ட ஒருவன் என்னை நோக்கி வந்தான். அவன் அங்கிருந்து போய் விட வேண்டும், மறைந்து விட வேண்டும் என்றுதான் எனக்கு இருந்தது.  ‘மவனே, தயவு செய்து என்னை விட்டுப் போயிடு’, ஆனால் அவன் போகாமல் அங்கேயே இருந்தான். என்னிடம் சலாமி[2] மற்றும் ஆப்பிள்களைத் துண்டாக வெட்ட உதவும் சிறு மடக்குக் கத்திதான் இருந்தது, அது தற்காப்புக்கு அத்தனை பயன்பட்டிராது. நான் துப்பாக்கி ஏதும் வைத்திருக்கவில்லை, ஏனெனில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று எனக்குத் தெரிந்திராது.

பாக்கன் எண்ணை வயல்கள் வழியே, எண்ணை நிறுவனம் ஒன்றின் வெள்ளை பிக்-அப் ட்ரக் ஒன்றில், யூட்டா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரோடு பயணம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் எண்ணைக்காகத் தோண்டப்படும் ஆழ் துளைக் கிணறுகளின் காப்பு நடவடிக்கை ஆய்வாளர், வட டகோட்டா மாநிலத்தின் வாட்ஃபோர்ட் நகர் அருகே எனக்கு அவருடைய ட்ரக்கில் பயணிக்க அழைப்பு விடுத்தார். அவருடைய கண்களில் இருந்த நேர்மை ஒளி அபூர்வமானது, ஆச்சரியப்படுத்துவது, அதை நாம் உலகில் அத்தனை சந்திப்பதில்லை. அவருடைய விளிப்பை நான் சிறிதும் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டேன். இந்தச் சாலைதான் இதுவரை பயணித்ததில் மிகவும் ஆபத்து நிறைந்த சாலை. அங்கே எண்ணை ட்ரக்குகள் ஏராளம், பெரும் தண்ணீர் ட்ரக்குகளும் அளவுக்கு மீறிய எண்ணிக்கையில். நிலத்தில் துளைகிணறு தோண்டும் பெரும் துரப்பண எந்திரங்களும், தொடர் வண்டிகளை இழுத்துப் போகும் பெரும் ட்ரக்குகளும் அளவு கடந்த எண்ணிக்கையில். முடிவில்லாத ஆறாக ட்ரிப்ளெக்ஸ் பம்புகள், எண்ணைக் கிணறுகளில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் எந்திரங்கள், குழாய்களைச் சுருள் சுருளாக ஆக்கும் எந்திரங்கள், உயரத்தில் கட்டுமானங்களுக்கு உதவும், ஹைட்ராலிக்கால் இயங்கும் நடைபாதைகள், நெருப்பைத் தடுக்கும் மிதவைத் தண்டுகள், நிலத்தைப் பிளக்கும் எந்திரங்கள், இரும்பு வேலைகள் செய்ய உதவும் எந்திரங்கள், இடிப்பு, தோண்டுதல் வேலைகள் செய்யும் எந்திரங்கள், இணைப்புக் குழாய்கள், தற்காலிக கழிவறைக் கூண்டுகள் என்று பெரும் சுமைகளோடு செல்லும் ட்ரக்குகள், எல்லாம் என்னை ஓரம் கட்டிச் சாலையிலிருந்து துரத்தப் போவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தின. அதனால் நான் அந்த மனிதரின் ட்ரக்கின் பின்புறம் என் சைக்கிளை ஏற்றி விட்டு, ஓட்டுபவரின் கூண்டில் ஏறி அமர்ந்து கொண்டேன். அவருடைய முகம் தீவிரமாக வெய்யிலில் காய்ந்திருந்தது, சுருக்கங்களால் நிறைந்திருந்தது, அவர் சாம்பல் நிறமும் பச்சை நிறமும் கொண்ட நெருப்பு எதிர்ப்புத் தன்மையுள்ள முழு மேலங்கி அணிந்திருந்தார், அதன் இடது மேல் புறப் பையின் மேலே ரூலான் என்று சாய்ந்த எழுத்துகளில் அச்சாகி இருந்தது. பெட்ரோல் பங்க் கடையில் விற்கும் ஃப்ரிடோ அப்பம் ஒன்று அலுமினக் காகிதத்தில் சுற்றப்பட்டு, அவர் மடியில் வீற்றிருந்தது. கார் ஓட்டிக் கொண்டே சாப்பிடுவதில் ரூலான் சமர்த்தர், அவர் அசராமல் அலுங்காமல் ஓட்டுபவரும் கூட. அவர் சட்டையில் ஒரு சிறு கறை கூட இல்லை என்று நான் நினைத்தேன், அந்த ட்ரக் ஒரு மேட்டில் திடீரென்று இடித்து ஏறி இறங்கியது, அந்த ஃப்ரிடோ அப்பம் அவருடைய கால் சராயெங்கும் இறைந்தது. அவர் உரக்கச் சிரித்தார்.

அந்த நெடுஞ்சாலையில் பல நிமிடங்கள் கழிந்த பிறகு, தரை பிளத்தல்[3] என்பது எப்படி வேலை செய்யும் என்று காட்ட முடியுமா என அவரிடம் கேட்டேன், அதனால் அவர் என்னைத் தன் நிறுவனத்தின் வேலை நடக்கும் இடம் ஒன்றுக்கு ஓட்டிப் போனார். அது கடல் மீது ஓங்கி நிற்கும் ஒரு எண்ணைத் துரப்பண மேடை போலத் தோன்றியது, ஆனால் இங்கு கடல் என்பது ஒரு காய்ந்த வெளியாக, வறண்ட பூமியாக, அடர்ந்த தூசி படிந்த இடமாக இருந்தது. இந்த துரப்பண மேடையருகே, சிவப்பு ஹாலிபர்டன் நிறுவனத்தின் சீருடையாக முழு மேலங்கி அணிந்த, முகம் முழுதும் சேறு பூசியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவரைச் சந்தித்தோம். அவர் அந்த துரப்பண எந்திரங்களின் அருகே தொழிலாளர்கள் உறங்கும் தொடர் வண்டிகளில் ஒன்றின் பின்னே, உள்ளூர் வகை ராக்கூன்[4] குடும்பம் ஒன்று வாழ்வதைப் பற்றிக் கொஞ்ச நேரம் குறை சொல்லிக் கொண்டிருந்தார். சீருடை அணிந்த அவர் திரும்பிச் சென்றபின், ரூலானும் நானும் அந்த வேலைத் தலத்தைச் சுற்றி ஓட்டிப் போனோம். அது அந்த இடத்தை என் செல்பேசியில் படங்களாக எடுக்க உதவும் என்பது நோக்கம். அவர் தன் ட்ரக்கை நிறுத்தினார், பிறகு என்னிடம் பேசும்போது, அவர் வட டகோட்டா மாநிலத்தின் இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம், தான் இறந்து விட்டது போல அவருக்கு இருக்கும் என்றார். ”என் வாழ்வில் பாதியும் சாவை விட மோசமானது,” என்றார். அவருடைய குரல் கிட்டத்தட்ட தொண்டை கட்டிக் கொண்டது போல இருந்தது.  “நான் இந்த ட்ரக்கில் உட்கார்ந்து கொண்டு, என்னுடைய பயணம் முடிவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி அங்கே வீட்டில் இருந்தபடி அவளுடைய கனவுகளை வாழ்கிறாள், அவளையும், இரட்டைக் குழந்தைகளையும் பராமரிக்க உதவுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன், ஆனால் ஒரு கட்டத்தில் நான் என் ஆசைப்படியும் வாழ வேண்டி இருக்கும்.”

அவர் நீண்ட நேரம் பேசாமல் இருந்தார்.

“சில சமயம் நான் வீட்டுக்குத் திரும்ப மனதே இல்லாமல் இருக்கிறேன். இங்கேயோ காலம் செத்துப் போனால் போல இருக்கிறது.”

நான் காற்றில் எரிவாயுவின் நெருப்புப் பிழம்பு அலைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இதை நான் ஒரு தடவை கூட வாய்விட்டுச் சொன்னதில்லை. என் பாதி வாழ்க்கை, சாவை விட மோசமாக இருக்கிறது.”

அவருடைய ட்ரக் ஜன்னல் கண்ணாடிகள் மேலே இழுத்து மூடப்பட்டிருந்தன. ஏனெனில் வெளியே கனரக எந்திரங்கள், மீதேன், மிதித்து அழிக்கப்பட்ட புல்வெளி, புளித்த கச்சா எண்ணெய் ஆகியவற்றின் நெடி அடர்ந்திருந்தது. அது நரகம் போல நாறியது.

“சில நேரம் இனிமேல் வாழ்வதற்குக் காரணமே இல்லாமல் இருக்கிறேன்.” அவர் மறுபடி நீண்ட நேரம் சும்மா இருந்தார். “வாழக் காரணம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று கூட இல்லை- ஒவ்வொரு நாளும் நான் காலையில் எழுந்திருக்கிறேன், என் ட்ரக்கில் ஏறி உட்கார்கிறேன், சுற்றி ஓட்டி அலைகிறேன், என் வேலையைச் செய்கிறேன். என் வேலையில் நான் திறமைசாலி, எப்போதும் ஏதோ மனக்கசப்பில் வாழ்வதால் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூட முடியாமல் இருப்பார்களே சிலர்,  அவர்களைப் போல இல்லை நான். நான் ஒரு தொழிலாளி. சமீப காலமாக ஆனால், —”

அவருடைய கரங்கள் பெரிதாகவும், தூசி படிந்தும், சுருக்கங்களோடும் இருந்தன, அவருடைய உள்ளங்கைகளில் பல இடங்கள் காய்த்துப் போயிருந்தன, ஆனால் அவருடைய விரல் நகங்கள் பூரணமாகக் கச்சிதமாக இருந்தன, ஏதோ அவர் நக அலங்கரிப்புக்கு அப்போது அமர்ந்து விட்டு வந்தார் என்பது போல இருந்தன.

“எனக்குச் சொல்லத் தெரியவில்லை,” அவர் சொன்னார். “ஏதோ தப்பாக இருக்கிறது.” அது என்ன என்று அவர் நினைக்கிறார் என நான் கேட்டேன், அவர் சொன்னார், “இங்கே நேரம் செத்துப் போயிருக்கிறது. அதை வேறெப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அழுகிப் போவதாக உணர்கிறேன், நான் வீணாகிக் கொண்டிருக்கிறேன் என்பது போல இருக்கிறது.”  நாங்கள் சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தோம். “ஆனால் சரிதான். இது ஒன்றும் ரொம்ப மோசமாக இல்லை.” அவர் ட்ரக்கின் கியரைப் போட்டார், அடையாளம் குறிக்கப்படாத எண்ணை வயல் சாலைகளில் சிறிது நேரம் மௌனமாக ஓட்டிப் போனோம். அவர் மறுபடி பேசியபோது, அவருடைய மனைவி மனக் குழப்பம் வரக் கூடியவராக ஆகி இருக்கிறார் என்று நம்புவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள், எட்டு வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததிலிருந்து, அவரும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். “ஒரு நல்ல நாள் எது என்றால்,” அவர் சொன்னார், “மனைவியிடமிருந்து காலையில் ஒரு வார்த்தையாவது ஃபோன் செய்தியாக வந்திருக்கிற நாள்தான் அது.” இது அவருடைய மூன்றாவது திருமணம் என்றும், மூன்று திருமணங்களிலும் அவருக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும், இப்போது திருமண ரத்தை நாடக் கூடிய நிலையில் அவர் இல்லை, ஏனெனில் அப்போது அவரிடம் உள்ளவை அனைத்தையும் அவர்  மறுபடியும் இழந்து விடுவார் என்றும், “அது அவளையும் அழிக்கும், என்னையும் அழிக்கும், இரட்டைக் குழந்தைகளையும் நாசம் செய்யும், எனக்கு அதெல்லாம் வேண்டாம்,” என்றும் சொன்னார். “என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, சில வருடங்கள் முன்பு- நீங்கள் இதை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது, என் முழுப் பெயரையுமாவது பயன்படுத்தாதீர்கள்- சில வருடங்கள் முன்பு, நான் சோஃபாவில் படுத்துக் கொண்டு ஓய்வெடுத்தபடி இருந்தேன், பையன்கள் எதிரே ஒரு அறையில் லெகோ கட்டைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள், அவள் என்னை நோக்கி வந்து புலம்ப ஆரம்பித்தாள். என்னைத் திரும்பத் திரும்ப, மறுபடி மறுபடி அடித்தாள், பையன்கள் அப்படியே அதிர்ந்து போய் நின்றார்கள், அது நடப்பதைப் பார்த்தபடி இருந்தார்கள். அவள் என்ன நினைத்தாள் என்றால், நான் என் முதல் திருமணத்தில் பிறந்த மகளோடு நான் ஏதோ தவறான உறவு வைத்திருக்கிறேன் என்று நினைத்திருக்கிறாள். அதுதான் என்னவொரு முட்டாள்தனம். வழக்கமான பொறாமைதான் என்று தோன்றுகிறது, இல்லையா? ஆனால் என் மனைவி இப்படி யோசிப்பாள் என்பது எனக்குத் தாங்க முடியாதபடி கண்றாவியாக இருக்கிறது. அதோடு அவள் என்னைத் தாக்கி அடிக்கிறாள் என்பது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியாக நான் அவளைப் பிடித்து, தரையோடு அழுத்தினேன், அவள் நிறுத்தவில்லை என்றால் நான் பொலீசைக் கூப்பிடுவேன் என்றேன். அவள் கதறி அழ ஆரம்பித்தாள், நான் அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று அலறினாள், “நீங்க பொலீசைக் கூப்பிடக் கூடாது, அவங்க என்னோட பையன்களை என் கிட்டே இருந்து பிரிச்சு எடுத்துப் போயிடுவாங்க,’ என்றாள். அதனால் நான் சொன்னேன், ‘ அப்படியா, அப்போ நீ என்னை அடிக்கறதை நிறுத்தணும்.’ அவள், “ஓகே, ஓகே, நீங்க என்ன சொன்னாலும் சரி, பொலீசை மட்டும் கூப்பிடாதிங்க.” நான் பொலீசைக் கூப்பிடவில்லை என்று உறுதி கொடுத்ததும், மறுபடி அலற ஆரம்பித்து விட்டாள். அங்கேயோ எதிரே அந்தப் பையன்கள் இருக்கிறார்கள், அவள் மறுபடி என்னைப் பார்த்து அலறுகிறாள். நான் அப்போது,  ‘சரி, இது உதவாது,’ என்று பொலீசைக் கூப்பிட்டேன். அவங்களைப் பாராட்டணும், உடனே வந்தாங்க, கடவுள் அவங்களை ஆசீர்வதிக்கட்டும், அவளைக் கைது செய்தாங்க, அப்புறம் நான் பொலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எல்லாக் குற்றச் சாட்டுகளையும் வாபஸ் வாங்கிக் கொண்டேன், ஆனா, உண்மையைச் சொன்னா, அவள் அப்புறம் என்னை மன்னிக்கவே இல்லை. இது என்னவொரு குழப்படி, இல்லையா? அவள்தான் என்னைத் தாக்கினாள், ஆனா போன ரெண்டு வருசமா நான் பொலீசைக் கூப்பிட்டதை என் மேலே பழியா வச்சுகிட்டிருக்கா? நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியல்லை.” என்றார். “நீங்க என்ன நினைக்கிறீங்க?”

உன் அப்பா உன்னை அடிக்கிற வழக்கம் வைத்துக் கொண்டிருந்தார். அவர் தன் கைகளால், இடுப்பு வாரால், காஃபிக் கோப்பையால், ஒரு தடவை ஒரு ரீம் அச்சடிக்கும் காகிதக் கட்டால் – அது 500 தாள்கள் கொண்ட, ப்ளாஸ்டிக் தாள் இறுக மேலே சுற்றிய கட்டு, தயாரித்த நிறுவனத்தின் முத்திரை அதில் பச்சையிலும், நீலத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்த மேல் சுற்று அது- எல்லாம் உன்னை அடித்திருக்கிறார். உன்னுடைய அம்மா 911 எண்ணைக் கூப்பிட்டுப் புகார் அளித்திருக்கிறார், பிறகு என் அம்மாவைக் கூப்பிட்டிருக்கிறார், நீ என் வீட்டுக்கு வந்து இரவில் தங்கினாய். என் அம்மா போய் உன்னை அழைத்து வந்தார் என்று நினைக்கிறேன்; நீ முழு தூரமும் நடந்தே என் வீட்டுக்கு வந்திருப்பாய் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நீ உன் வீட்டுக் கொல்லைப் புறம் உள்ள தோப்புகள் வழியே நடந்து, அங்கே குறுக்கே ஓடும் நெடுஞ்சாலையைக் கடந்து, நடந்து வந்திருக்கலாம். ஒரு கை மின் விளக்கின் உதவியோடு நீ வந்திருக்கலாம். aன்று நீ சாலையைக் கடந்திருக்கக் கூடிய இடத்தில் இப்போது ஒரு போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்கு இருக்கிறது, ஆனால் அன்று அங்கு அப்படி ஏதும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு, அங்கே ஒரு விளக்கு நிறுவப்பட்டபோது எல்லாருக்கும் அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அன்று இரவு நீ என் வீட்டில் சாய்மானக் கட்டில் ஒன்றில் படுத்துத் தூங்கினாய், நான் புழங்கும் அறையில் தரையில் படுத்துத் தூங்கினேன். நான் தூங்கி விட்டேன் என்று நீ நினைத்ததால், உன் படுக்கைப் பைக்குள் நீ சுய மைதுனம் செய்து கொண்டிருந்தாய். மற்றபடி அந்த இரவைப் பற்றி எனக்கு அத்தனை நன்றாக நினைவில்லை.

நான் டப்பியில் அடைத்த சூரை மீன்களை, சிறு பைகளில் கிட்டுகிற மெய்ன்னைஸ் குழம்போடு டோட்டியா ரொட்டிகளில் சுற்றி வைத்து உண்டேன். துண்டுகளாக வெட்டப்பட்ட மூன்று ஆப்பிள்களை, நடெல்லா சாக்லெட் களிம்பில் குழப்பிக் கொண்டு அவற்றையும் இரவு உணவாக உண்டேன். இது ஜியார்ஜியா மாநிலத்தில் பார்ன்ஸ்வில் என்ற ஊரில் இருந்த ஒரு சர்ச் மற்றும் அதனருகே இருந்த கல்லறைக் காட்டுக்கு வெளியே நடந்தது. இருட்டிய பிறகு நான் அங்கு புல்வெளியில் என் படுக்கைச் சுருளை விரித்துக் கொண்டேன். 1990களில் தயாரிக்கப்பட்ட ஷெவ்வி ட்ரக் ஒன்று அந்த கார் நிறுத்துமிடத்தில் வந்து நின்றது, யாரோ வந்து, என்னை அங்கிருந்து கிளம்பிப் போகும்படி சொல்லப் போகிறார்கள் என்று நினைத்தேன். என் கையை ஆட்டி வரவேற்றேன்; காரின் புறவிளக்குகள் மங்கின. ட்ரக்கில் இருந்தவரிடம் சர்ச்சில் உறங்கலாமா என்று கேட்டேன், அவர் செய்தாலென்ன தவறு என்றார். அவர் முகத்தில் ஆழமான பள்ளங்கள் இருந்தன, சுருக்கங்கள் இல்லை, மாறாக தழும்புகள். என் அறியும் ஆவல் தூண்டப்பட்டதால், அவருடைய ட்ரக்கின் உள்புறத்து மங்கலொளியில் இருந்து அவரோடு உரையாடினேன். வெளியே சிகாடா சிள்வண்டுகளின் இரைச்சல் காதடைக்கும்படி உரத்து இருந்தது. அவருடைய கைகள் முழுதும் பச்சை குத்தி இருந்தது, அவற்றின் கீழே இருக்கும் தோலே தெரியவில்லை. அதோடு, அப்போது நிலாவும் மிகச் சிறியதாக இருந்ததால், பார்க்கப் போதுமான ஒளி இல்லை. அப்போது அவர், தான் ராணுவ வேலைக்காக ஆஃப்கானிஸ்தானுக்கு மறுபடி போக வேண்டும் என்று சொன்னார்.

அன்று மாலையில், ஜ்யார்ஜியா மாநிலத்தின் மொலீனா நகரில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கில் வெப்பமானியில் 104 டிகிரி (ஃபாரன்ஹைட்) உஷ்ணம் இருந்ததைக் கவனித்திருந்தேன். அங்கு வியாபாரத்தைக் கவனித்த பெண்மணி, அறை முழுதும் சில்லிட்ட பியர் புட்டிகள் நிரப்பப்பட்டு இருந்த ஒரு குளிர் பதன அறையில் ஒரு மணி நேரம் தங்கி என் உடல் சூட்டைக் குறைத்துக் கொள்ள அனுமதித்தார். ஆனால் aன்று இரவில், கோடைக் காலத்தின் காற்று இலைகளூடே வீசியபோது அனேகமாக குளிர் நிலையில் இருந்தது. ட்ரக்கில் இருந்த அந்த மனிதனின் மடியில் ஒரு குறிப்பெழுதும் புத்தகம் இருந்தது. அவர் தான் போர்க்களத்துக்கு அனுப்பப்படுமுன், தன் பெண் தோழிக்கு ஒரு கடிதம் எழுத முயல்வதாக என்னிடம் சொன்னார். ”அவளை இன்று இரவு சந்திக்க எனக்கு விருப்பமில்லை. அவளுடைய கவலையை அதிகரிக்க நான் விரும்பவில்லை,” என்றார்.

நான் தலையை அசைத்து ஆமோதித்தேன்.

“அவள் காலையில் வீட்டு வாயில் அஞ்சல் பெட்டியைச் சோதிப்பாள், அப்போது என் கடிதத்தை அதில் காண்பாள்,” என்றார். அந்தக் கடிதத்தை நான் படிக்கலாமா என்று கேட்க விரும்பினேன், ஆனால் கேட்கவில்லை. நான் உறங்கியபோது அவருடைய ட்ரக் இன்னும் கார் நிறுத்தும் தடலில் இருந்தது; காலையில் பார்த்தபோது, அவர் போய் விட்டிருந்தார்.

சில தினங்கள் கழிந்த பின், நான் இன்னொரு ட்ரக்கின் ஜன்னலைத் தட்டினேன்.  இல்லை, அது பல மாதங்களுக்கு அப்புறமா? குளிரூட்டப்பட்ட, டெக்ஸஸ் மாநில அரசு ஊர்தி அது. புழுதி படிந்த வடிகாலின் கரையில், துரு நிறத்தில், இருபத்தி ஆறு அடி உயரம் இருந்த பாதுகாப்பு வேலிக்குப் பக்கத்தில் அது நின்றிருந்தது. பாதுகாப்பு வேலி என்றால், எல்லைப் பாதுகாப்புச் சுவர் என்று பொருள். சீருடை அணிந்த இரு படைவீரர்கள் – ஒரு இளைஞனும், அவனை விட மிகவும் இளையவனான இன்னொருவனும்- வண்ணக் கண்ணாடிக்குப் பின்னிருந்து என்னை வரவேற்றார்கள்.  நில வெளியில் மறைப்பு கொடுக்கும் உடுப்புகளும், உடல் பாதுகாக்கும் கவசமும் அணிந்து, இருவரின் நெஞ்சில் இணைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கிகளோடு தோற்றமளித்தார்கள். அந்த சுவருக்குப் பின்னே அடர்ந்த புதர்களும், ரியோ கிராண்டே ஆறும் இருந்தன.

எனக்கு அருகில் இருந்த பக்கம் அமர்ந்திருந்த படைவீரனிடம் நான் கேட்டேன், அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவன் சொன்னான், “நான் என்ன செய்கிறார்போலத் தெரிகிறது? இந்த ட்ரக்கில் உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடிக்கிறேன், மான்ஸ்டர் பானத்தை அருந்துகிறேன், சட்ட விரோதமாக எல்லை தாண்ட முயல்வோரைக் கண்காணிக்கிறேன் – அவ்வளவுதாங்க. இதைப் பற்றி இதற்கு மேல் நான் ஏதும் சொல்ல முடியாது, இப்போது. நீ என்ன புடுங்க வந்திருக்கே இங்கே?”

கீழிறக்கப் பட்ட ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று வீசியது சுகமாக இருந்தது. ஒரு சைக்கிளில் அந்த ஆற்றங்கரைக்கு எது என்னை அழைத்து வந்தது என்று அவனுக்கு விளக்க முயன்றேன், ஆனால் எனக்குச் சரியான வார்த்தைகள் அகப்படவில்லை. அப்போது அவர்களிடம் நான் கேட்டேன், எத்தனை நாட்களாக அங்கே அவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்? அதே படைவீரன் சொன்னான், “நாலு மாசமா!” இன்னும் எத்தனை நாட்கள் அங்கேயே அவர்கள் இருக்க வேண்டும் என்று கேட்டேன். இன்னொரு, மிக இளையவனான படைவீரன் இரைந்து பேசினான்: “எங்களுக்கு அதைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது.” அதற்கு அந்த இன்னொரு படைவீரன் அந்த இளைய படைவீரனைப் பார்க்கத் திரும்பிச் சொன்னான்: “ஏய், நாம இங்கெ என்ன செய்றோங்கறதைப் பத்தி ஒருத்தர் கிட்டேயும் எதையும் பேசக் கூடாதுன்னு ஆணை இருக்கு. ஒளிப்படங்கள் கூடாது, நம்ம பெயரைக் கொடுக்கக் கூடாது, எதையும் சொல்லக் கூடாது. அதுதான் அவங்க நம்ம கிட்டே சொல்லி இருக்காங்க, நினைவிருக்கட்டும்.” இரண்டாவது வீரன் சொன்னான், “சரிதான், என்னைப் பேச விடப்பா.” அவன் அங்கே புது இடத்துக்கு, நான்கு தினங்கள் முன்னர்தான் வந்திருக்கிறான், எங்கேயோ ஒரு ராணுவ முகாமிலிருந்து, அது எங்கே என்பது முக்கியமில்லை என்றான். “நான் என் வேலையைச் செய்யவில்லை, நான் ஒரு போர்முனை மருத்துவ உதவியாளன். இதெல்லாம் முழு தண்ட வேலை. அவங்களுக்கு நான் மூச்சு விடற, சூடான ஓர் உடம்பு, ரெண்டு கண்கள், அவ்வளவுதான்.” அவன் என் வயதுக்காரனாகத் தெரிந்தான், ஆனால் என்னை விடக் குட்டையான முடி, என்னையும் விட அயர்ச்சி தெரிந்த கண்கள் அவனுக்கு. கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, உயிர்களைக் காக்கவென்று ராணுவத்தில் சேர்ந்ததாகச் சொன்னான். ஆனால் இங்கே, டெக்ஸஸின் வெப்பத்தில், உட்கார்ந்தபடி, நான் அவனைத் தனியே விட்டுப் போகும் வரை என்னோடு பேசிக் கொண்டிருந்தான்.

கரும்பு, உலர்ந்த புதர்கள், நூற்றுக் கணக்கான மானார்க் பட்டாம்பூச்சிகள். அந்த வெப்பத்தினூடே சைக்கிளை ஓட்டிச் சென்றபோது என் புத்தி தன் போக்கில் திரிந்தது. நூறு, நூறாகப் பல நூறு பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன, அவை எங்கே போய்க் கொண்டிருந்தன என்பது எனக்குத் தெரியவில்லை. திடீரென்று நாங்கள் மறுபடியும் பதினோரு வயதினராக ஆகி இருந்தோம், நீச்சல் குளத்தில் மாலைப் பொழுதைக் கழித்து விட்டு, பெகோஸ் நகரில் இருந்த ஒரு பெரும் மேட்டுப் பகுதியில் கீழ் நோக்கி சைக்கிள்களை ஓட்டி விரைந்து கொண்டிருந்தோம். காற்றின் ஓசை, மரங்களின் சப்தம், மீன் பிடிக்கும் ஒரு தூண்டில் கொம்பு நீரில் விழும் ஓசை . உன் சிரிப்பு. நீ சிரித்த ஒலியைக் கேட்க முடிந்ததாக நான் சத்தியம் செய்ய முடியும், ஆனாலும் என் வலது தோளுக்குப் பின்புறம் பார்த்தபோது, ஒரு பெரிய மேட்டிலிருந்து கீழ் நோக்கி ரியோ கிராண்டே ஆற்றைப் பார்க்க நான் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்போது நிலாவை விட உயிருள்ளவனாகவே உணர்ந்தேன்.

அவை அக்டோபர் மாதத்தின் துவக்க நாட்கள், என் பயணம் துவங்கி ஓராண்டுக்கும் மேல் ஆகி இருந்தது, மாலை மங்கும் நேரத்தில் நூறு டிகிரி (ஃபாரன்ஹைட்) இருந்திருக்கும், எனக்கு ஃபோனில் செய்தி வந்தது, என் இன்னொரு நடுப் பள்ளித் தோழன் இறந்து விட்டான் என்பது அது. நான் ஒரு மளிகைப் பேரங்காடியின் கார் நிறுத்தும் வெளியில் நின்று அந்தச் செய்தியைப் படித்தால், இறந்தது ஜே பீட்டர்ஸன்.

டெக்ஸஸ் மாநிலத்தின் மக் ஆலன் நகரில், பல மாநில நெடுஞ்சாலை அருகே இருந்த லா கிண்டா விடுதியில் ஒரு அறையை எடுத்தேன். சூடான குளியல் ஒன்று எனக்குத் தேவையாக இருந்தது. சொர்க்கம் என்பது பல வடிவங்களில் வரும், என்னைச் சுற்றி (குளியல் தொட்டியில்) காற்றுக் குமிழிகளோடு வெந்நீர் எழுகையில், பெட்ரோல் நிலையத்தில் நான் ஒரு சிறு வடிதொட்டியில் உடலைக் கழுவித் துடைத்துக் கொண்ட அந்த அரைக் குளியல் நடந்து இன்னும் ஒரு நாள் கூட ஆகி இருக்கவில்லை என்று நினைத்தேன். பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கொண்ட கைகழுவும் சோப், காகிதத் துவாலைகள், சுத்தமான உலோக வடிதொட்டி. கருப்பு சாண்டல் செருப்புகளணிந்த அந்த மனிதனை, தன் சகோதரி இறந்ததால் அவளுடைய குழந்தைகளை துவக்கப் பள்ளியிலிருந்து அழைத்து வரப் போய்க் கொண்டிருந்த அந்த மனிதனை நினைத்தேன். ஏன் என்னிடம் தன் சகோதரி இறந்து விட்டாள் என்று அவர் சொன்னார் என்பது இன்னமும் எனக்குப் புரிந்திருக்கவில்லை. அல்லது ஒருகால் எனக்குப் புரிந்துதான் இருந்ததோ, ஆனால் அவர் என்னிடம் அந்தக் கதையைச் சொன்னபோது அந்தக் கார் நிறுத்தும் தடலில் நான் ஏன் நின்று கொண்டிருந்தேன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை போலிருக்கிறது. அந்தச் சிந்தனை உதிர்ந்து போயிற்று; என் குளியல் தொட்டியில் நீர் வடிந்தது. அவனுடைய பெயரை இதற்குள் நான் மறந்து விட்டிருந்தேன் என்றாலும், நான் அவனை இழந்ததற்காக அழுதேன்.

நீரில் ஊறுவதிலிருந்து நான் வெளியே வந்தேன், என் கைபேசியைச் சோதித்தேன். நடுப் பள்ளியில் இருந்தபோது என் ஆசைக்கு இலக்காக இருந்த ஒரு நபரிடமிருந்து சில செய்திகள் வந்திருந்தன:

ஆஸ்டின் நகரில், ஒரு குப்பை மேட்டுப் பகுதிக்கருகே இருந்த திறந்த மேய்ச்சல் நிலத்தில், ஜே இன்று தன்னைத் தானே சுட்டுக் கொண்டான்.

அவனுடைய அப்பா அடுத்த நாள்தான் அங்கே அவனைக் கண்டு பிடித்தார்.

இது ரொம்பவே மோசம், தாங்க முடியாத சோகம்.

அவனுடைய இறுதிச் சடங்கில் நான் பேசப் போறேன், எனக்குச் சொல்லவேண்டியதெல்லாம் தலைக்குள்ளே முழுசாக இருக்கு, ஆனால் அவன் போய்ட்டதாலெ எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னு தெரியாத மாதிரி இருக்கு, வக்காளி, எனக்கு உன்னைத் தேடறதுடா, நான் உன்னை எத்தனை விரும்பினேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கக் கூடாதான்னு என் மனசு எப்படி ஏங்கறதுன்னு சொல்றதைத் தவிர வேறென்ன சொல்ல.

உன்னுடைய இறுதிச் சடங்கில் நான் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. உலகில் நமக்குத் தெரிந்த அத்தனை பேரும் அங்கே இருந்தார்கள் என்பது போலத் தெரிந்தது. முந்நாள் ஆசிரியர்கள், பழைய பெண் சகிகள், துவக்கப் பள்ளியிலிருந்த நண்பர்கள்; உன் பாட்டி-பாட்டனார்கள் முதல் வரிசையில், என்னுடையவர்கள் கடைசி வரிசையில் எங்கோ. முறையான ஒரு சூட்டை அன்று முதல் தடவையாக அணிந்திருந்தேன் என்று நினைவிருக்கிறது, இந்த நிகழ்ச்சிக்காக பார்ட்டன் க்ரீக் ஸ்கொயர் பேரங்காடியில் மேஸீஸ் கடையில் வாங்கினேன். அன்று ஜே அங்கே இருந்தானா என்று இப்போது யோசிக்கிறேன். உனக்குச் செலுத்திய என் நினைவஞ்சலியில், உனக்கு நான் விடைகொடுத்து வழியனுப்பியபோது என் குரல் நடுங்கியது.

***

மிஸௌரி மற்றும் மிஸ்ஸிஸ்ஸிப்பி ஆறுகளின் மருங்கே, சோயா அவரை வயல்கள் நிறைந்த நடுமேற்கு (அமெரிக்கா) ஊடாகவும், அமெரிக்காவின் தென் மாநிலப் பைன் காடுகள் மற்றும் பருத்தி வயல்களூடாகவும், (வடகிழக்கில்) நியூ ஹாம்ப்ஷயர், மெயின் மாநிலங்களில் மலைகள் என்று அவர்கள் அழைக்கிற குன்றுகள் மீதும் உன் சாவின் பளுவைச் சுமந்தபடி நான் சைகிளோட்டிப் போனேன்.  என் தலையின் பின்பகுதியில் கேட்ட அந்த தனிமை நிறைந்த குரலொலியின் இடைவிடாத உளைச்சல்,  அப்படியே இருந்தது. நீ ஏன் தற்கொலை செய்து கொண்டாய்? நீ தற்கொலைதான் செய்து கொண்டாயா? சில நேரம் நீ தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றே நான் நினைப்பேன். நீ அதைச் செய்திருக்க முடியாது. உனக்கு அது முடிந்திருக்காது. என் மீது உனக்கு ஏகப்பட்ட கரிசனம் இருந்தது. அப்படி நீ அக்கறை கொள்ளவில்லை என்றால் கூட, உன் சகோதரியை நீதான் பாதுகாக்க வேண்டும் என்று உனக்குத் தெரிந்திருந்தது. ஒருகால், சாலையைக் கடக்கும்போது இரு புறமும் பார்க்க வேண்டும் என்று கூடத் தெரியாத முட்டாள் பையனாக நீ இருந்தாயோ.

ஜூலை நான்காம் தேதி அன்று விடிகாலை மூன்றரைக்கு எழுந்து, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த நெடுஞ்சாலை வழியே இருட்டில் பயணத்தைத் துவங்கினேன். மெயின்  மாநிலத்தின் டர்னர் நகரில் ஒரு அணிவகுப்பை எதிர் கொண்ட போது நண்பகலாகி இருந்தது. தீயணைப்பு வண்டிகளும், ட்ராக்டர்களும் போவதைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த சேற்றுக் குளம்[5] என்ற பெயர் கொண்ட ஏரியில் மூழ்கி விடலாமா என்று யோசித்தேன். அதை கூகிள் நிலப்படங்களில் அந்தச் சாலையில் சில மைல்கள் முன்னே இருப்பதாகக் கண்டு பிடித்திருந்தேன். சில வாரங்கள் தள்ளி, மான்ஹாட்டன் பகுதியில் பழைய நண்பர்களோடு கழித்த ஒரு நீண்ட நண்பகல் உணவு நேரத்துக்குப் பிறகு, சுரங்க ரயில் முன்னே குதித்து விடலாம் என்றும் எண்ணினேன்.

நியூயார்க்கில் ஒரு ரயில் முன்னே குதிப்பது; சிக்காகோ நகரில் நண்பனின் அடுக்ககத்தின் இருபத்தி ஐந்தாவது மாடி ஜன்னல் வழியே குதிப்பது; மண்கலங்கலாக வளைகுடாவின் கரையை நோக்கி ஓடிய மிஸௌரி ஆற்றின் மீதிருந்த கான்க்ரீட் பாலத்திலிருந்து குதிப்பது. இந்த எண்ணங்களில் எத்தனை தூரம் நான் தீவிரமாக இருந்தேன் என்பதை இப்போது மறுபடி யோசித்துப் பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால், இத்தகைய எண்ணங்கள் பரவலாக இருப்பவையா என்று நான் யோசிக்கிறேன். கலிஃபோர்னியாவில் இருக்கும் என் நண்பன் ஒருத்தனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன், அவன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்:

பள்ளிக் கூடத்தின் பஸ் என்னை நடுப் பள்ளியிலிருந்து கொண்டு வந்து இறக்கி விட்டபின், கிளம்பிப் போக ஆரம்பித்தபோது, அதன் முன்னால் குதிக்கலாம் என்று நான் எண்ணியது எனக்கு நினைவிருக்கிறது. பள்ளிக் கூடத்தின் வாத்திய இசைக் குழுவில் நான் ட்ராம்போன் என்ற கொம்புவாத்தியத்தை வாசித்தேன், அந்த ட்ராம்போனின் மீது ஒரு பஸ் ஏறினால் அது எப்படி இருக்கும் என்று நான் யோசித்திருக்கிறேன். இவற்றை இப்போது எழுதுவது பயமுறுத்துவதாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை இந்த எண்ணங்கள் நிஜமாகவே க்ஷணத்தில் தோன்றி மறைபவை- முக்கியமானவை அல்ல, நான் இவற்றைச் செயல்படுத்தப் போவதில்லை. உன் எண்ணங்களும் இதே போல சடுதியில் தோன்றிக் கடந்து போவனவாக இருக்கின்றன என்று நம்புகிறேன், அவை அப்படி இல்லை என்றால் நீ என்னிடம் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். நீ விரும்பினால், நாம் இதைப் பற்றி பரஸ்பரம் வாக்குக் கொடுத்துக் கொள்ளலாம்.

சில தினங்கள் கழித்து என் நண்பனிடம் தொலைபேசி மூலம், என் உயிரை நான் மாய்த்துக் கொள்ள மாட்டேன் என்று நான் வாக்குறுதி கொடுத்தேன். அந்த வாக்குறுதி ஒரே நேரம் முக்கியமானதாகவும், பொருளற்றதாகவும் தெரிந்தது. என்னை நியூயார்க்கில் எது தற்கொலை செய்து கொள்ளாமல் நிறுத்தியது என்று என்னிடம் அவன் பிறகு கேட்டான். அந்த சப்வே-ரயில் கிரீச்சிட்டுக் கொண்டு அந்த நிலையத்தில் நுழைந்த போது, அறிமுகம் இல்லாத ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு நல்ல சேதி கொடுத்த அழைப்பு ஃபோனில் வந்தது என்று சொன்னேன். அவருடைய குரல்தான் என்னை நிறுத்தியது என்றேன்.

அதற்கு முந்தைய நாள் ப்ரூக்லினில் நான் என் மணிபர்ஸைத் தொலைத்திருந்தேன், ஃபோனில் மறுபக்கம் இருந்த மனிதர், அதை ஒரு மழைநீர் வடிகால்வாய் மூடியின் மீது பார்த்ததாகவும், என்னை வலையில் தேடிக் கண்டுபிடித்ததாகவும், முகப்புத்தகத்தில் என் தொலைபேசி எண் கிடைத்தது என்றும், அதன் பிறகு என்னை அழைப்பதாகவும் சொன்னார்: “ என்னை இப்போதே சந்திக்க உங்களால் வர முடியுமா?”  முடியாமலா இருக்கும். நான் அந்த சப்வே நிலையத்தின் படிக்கட்டுகளில் ஏறி, எதிரே பெஞ்சுகளோடும், நீரூற்றோடும் இருந்த பூங்கா வழியே மழையில் நனைந்தபடி நடந்து போய், அரை மைல் தூரத்துக்கு மேல் இருந்திராத இன்னொரு சப்வே ரயில் நிலையத்தின் படிகளில் இறங்கி உள்ளே போனேன். சில நிமிடங்கள் கழித்து, தொலைபேசியில் பேசிய அந்த மனிதர், ஒரு சைக்கிளோடு படிக்கட்டுகளில் இறங்கிக் கீழே வந்தார். என்னிடம் அவர் என் பர்ஸைக் கொடுத்தபோது, ஏதோ அங்கே இருந்தது நான் இல்லை என்பது போல, மெதுவாக நகர்ந்தோடும் காட்சி ஒன்றைப் பார்ப்பது போலப் பார்த்திருந்தேன்.

நகரின் மையத்திலிருந்து புற நகரை நோக்கிப் போகும் ஒரு ரயிலில் இருவரும் ஏறினோம். அப்போது கடந்து போன அபாரமான கோடைப் புயல்மழையைப் பற்றியும், வானநிலை பற்றியும் பேசிக் கொண்டு போனோம். வானிலை பற்றிப் பேசுவதை விரும்பி அனுபவிக்காதவர்களை எனக்குப் புரிவதில்லை, இடிமழையையும், நகரச் சாலையின் மரங்களிலிருந்து விழும் சூடான மழைத்துளிகளைப் பற்றியும் பேசுவதில் களிப்படையும் இன்னொரு நபரை பயணத் துணைவராகப் பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய பெயர் என்னவென்று நான் கேட்கவே இல்லை, அவரும் என் பேச்சைக் கேட்பதில் விருப்பமுள்ளவராகவே இருந்தார், அதனால் கொஞ்ச நேரத்திலேயே என்னுள் ஒலிக்கும் தனிமைப்பட்ட அந்தக் குரல் பற்றியும், உன் தற்கொலை பற்றியும், சொன்னபிறகு நான் ஏன் நாடெங்கிலும் சாலைகளில் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தேன் என்ற கேள்வியை எழுப்பினேன். அவர் நான் மேலும் பேசிச் சொல்லப்போவதைக் கேட்கத் தயாராகவே இருந்தார்.

நான் என் பாதங்களைக் குனிந்து பார்த்தேன், பிறகு நான் மேற்கொண்டு பேசாமல் இருக்கவும், அவர் என் கேள்விக்கு நானே சொல்லவிருக்கும் பதில் என்ன என்று கேட்டார், நான் அந்தச் சாலைகளில் பயணம் போவதால் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? உனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை என்பதால் நான் அதைச் செய்கிறேன் என்று ஒரு பதிலை அவர் சொல்வார் என்று நான் சந்தேகப்பட்டேன். நான் இந்த இருசக்கர சைக்கிள் பயணத்தின் மூலம் அமெரிக்காவைத் தேடினேன் என்று சொன்னேன், அதைப் போல ஏதோ ஒன்றை நான் கண்டு பிடித்திருந்தாலும், நான் கண்டுபிடித்ததாகச் சொன்னதை, வேறு யாரால் அறிந்து விட முடியும் என்று நான் யோசிக்கிறேன். அப்போது, நான் என் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளுமுன், ‘ட்ராவெல்ஸ் வித் சார்லி’ புத்தகத்தில் படித்திருந்த ஒரு பத்தி என் நினைவுக்கு வந்தது: “நிறைய எதார்த்தங்கள் அங்கு உள்ளன. இங்கே நான் முன்வைத்திருப்பது உண்மை, ஆனால் வேறு ஒருவர் அங்கெல்லாம் கடந்து வந்து, உலகைத் தன் பாணியில் மாற்றி அமைக்கும் வரைதான்.”  அந்த மனிதர் ஆமோதித்துத் தலை அசைத்தார். என் தலைக்குள்ளிருக்கும் குரலைப் பற்றி மேலும் ஏதோ சொல்ல நான் ஆரம்பித்தேன், ஆனால் அந்த எண்ணம் துரிதமாக மறுபடியும் ஸ்டைன்பெக்காகத் திரிந்தது “நம் காலை நேரக் கண்கள் வர்ணிக்கும் உலகம், நம் மாலை நேரக் கண்கள் வர்ணிப்பதிலிருந்து மாறுபட்டவை, பின்மாலையின் களைத்த கண்கள், நிச்சயமாக களைத்த பின்மாலை உலகைத்தான் வர்ணிக்கும், இல்லையா.” சுரங்கப் பாதை ரயில் மேற்புறம் வந்து ஓடியபோது, 125 ஆம் தெரு அருகே மழைத் துளிகள் ரயில் ஜன்னல்களில் தெறித்துச் சிதறின. என் புது நண்பர் என்னிடம் சொன்னார், அவரும் தனிமைப்பட்டவராக இருப்பதாகவும், சில நேரங்களில் சளைத்துப் போய் விடுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் மனதின் ஆழத்தில் ஒரு குரல் இருக்கிறது என்றார். “சிலருக்கு அது மற்றவர்களை விட உரக்கக் கேட்கிறது,” என்று சிரித்துக் கொண்டு சொன்னார். அவர் சொன்னது சரியா என்று நான் யோசிக்கிறேன். “சில சமயங்களில், உங்கள் புத்தி உங்களிடம் சொல்கிறவற்றில் பாதியை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். இந்த உணர்வுகள் எப்போதைக்குமாக நீடிப்பவை இல்லை; கவலையை விடுப்பா, எல்லாம் சரியாயிடும்.” அன்று இரவு, நான் என் களைத்த பின்மாலை நேரக் கண்களை மூடிக் கொண்டேன், அவற்றை மறுபடி திறந்தபோது அது காலை போலத் தெரிந்தது. ஓர் அற்புதம்தான்.

(தொடரும்)


[1] Pend Oreille River- பாண்ட் ஒரேய் என்று உச்சரிக்கப்படுகிறது. இது சில மாநிலங்களின் வழியே ஓடும் நதி. வாஷிங்டன் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதி, ஐடஹோ மாநிலத்தின் வடக்குப் பகுதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் தென் கிழக்குப் பகுதி வழியே வடமேற்குத் திசையில் ஓடி கொலம்பியா ஆற்றில் சேருகிற நதி. சுமார் 210 கிலோமீட்டர்கள் தூரம் பாய்கிறது.

[2] Salami- பூண்டு, உப்பு போன்ற பண்டங்கள் சேர்த்து, அரைத்து அல்லது கொத்தப்பட்டு, புளிக்க வைக்கப்பட்டு, உலர்த்தப்பட்ட மாமிசம் அடங்கிய குழலப்பம். இது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகைப் பாரம்பரியம் கொண்டதாக இருக்கும் பண்டம். மாடு, பன்றி, மான், சில நாடுகளில் கழுதை போன்ற மிருகங்களின் மாமிசம் பயன்படுத்தப்படுகிறது. உலகில் பலவகை சலாமிகள் உண்டு அவை பற்றிய ஒரு சிறு வர்ணனையை இங்கே காணலாம். https://northernnester.com/types-of-salami/

[3] Fracking= தரை பிளத்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறேன். மேலான சொல் தெரிந்தால் தெரிவியுங்கள், மாற்றலாம், அல்லது வருங்காலத்தில் பயன்படுத்த உதவும்.

[4] Raccoon- ராக்கூன் என்பது ஒரு வகை பாலூட்டி மிருகம். வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுவது. இரவு நேரங்களில் அதிகம் சஞ்சரிக்கும் மிருகம். குடும்பமாக, கூட்டமாக வாழக் கூடியது. தாவரங்கள், மாமிசம், மீன் எந்த வகை உணவையும் உண்ணும் மிருகம்.

[5] Mud Pond lake= சேற்றுக் குளம் என்ற ஏரி என்று மொழி பெயர்த்தேன்.

Series Navigation<< தடக் குறிப்புகள் -2தடக் குறிப்புகள் – 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.