டி மெல்லோ

அது ஒரு பெரிய ஓவியம். அற்புதமாகச் செய்யப்பட்டிருந்தது. மனிதர்கள் வரிசையாக, நெருக்கமாக ஒருவர் பின்னால் ஒருவர் குனிந்து காலைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அம்மணமாக. தலை குனிந்து மண்ணைப் பார்த்திருந்தது. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தனர். முதல் வரிசையில் இருந்தவர்கள் கவனத்துடன், நுட்பமாக வரையப் பெற்றிருந்தனர். அதே போல பின்னால் இருந்த வரிசைகளும், சற்றே மங்கலாக, போகப் போக விவரங்கள் குன்றி இருந்தன. அவர்கள் அவ்வாறு நின்றிருந்த கோலம் – பின்பக்கம் சற்றே தூக்கி, பழைய மாடல் ஹெரால்டு காரைப் போல – அதாவது ஏதோ தலைவன் ஒருவன் வந்து எல்லோரையும் பிட்டப் புணர்ச்சியால் விடுவிப்பான் என்பது போலவும், அல்லது ஒவ்வருவரும், தன் பின்னே நின்றவன், குறி சம்போகம் செய்வர் என்ற காத்திருப்புடன் இருப்பது போலவும் இருந்தது. மற்றும் அவர்கள் குனிந்து நின்றிருந்த விதம், மண்ணில் முகம் புதைக்கும் வான்கோழி போல, தன்னைச் சுற்றி நடப்பவை எதையும் காணாமல் இருப்பதற்கான  முயற்சியாகவும் தோன்றியது. 

இவ்வளவும், முக பாவனை இன்றி, அந்த பிட்டத்தின் வளைவில், குறங்கின் சரிவில், குனிந்த எருத்தின் கோணத்தில் வெளிப்பட்டன. கோடுகளின் பன்முகத் தன்மையில், கன வேறுபாட்டில், உணர்ச்சிகளையும் செயல்களையும் நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தார் ஓவியர். மேலும், படத்தின் பின் புலமாகவும், இரு மருங்கிலும், உயர்ந்த தேவதாரு, கடம்ப மரங்கள்,  அவற்றின் இடையே மலர்ச்  செடிகள், அதில் மொய்க்கும் வண்ணத்துப் பூச்சிகள்,  கீழே உதிர்ந்த பூக்கள், என  இருந்தன. மேலே படத்தின் நடுவிலிருந்து கமுகின் கீற்றைப் போல ஒளிக் கிரணங்கள் கீழ் இறங்கின, தேவனின் அருள் என. பினாஃப்தலீன் பிங்க்காக வானம். மொத்தத்தில் இவ்வுருவங்களைத் தவிர, படம்  முழுவதும் இயற்கையால் நிரம்பி இருந்தது காண்பார் யாருமின்றி. இந்த விவரங்கள் எல்லாம் அப்புறம் தான் வெளிப் பட்டன ஒவ்வொன்றாக, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும். முதலில் தெரிவது அந்தக் குனிந்த உருவங்களின் வரிசைதான், உருவங்கள் தான். 

இவை எல்லாம் தவிர அப்படத்தில் ஏதோ ஒன்று, அல்லது இவை எல்லாம் சேர்ந்து ஏதோ ஒன்று, எல்லோரையும் ஈர்த்தது – உலகின் தலை சிறந்த படங்கள் எல்லாம் செய்வது போல. படத்தின் தலைப்பு, ‘வாழ்வாங்கு’ என்றிருந்தது. கீழே ‘டி மெல்லோ’ என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது. படத்தின் தலைப்பிலிருந்து எல்லாமே, இச் சமூகத்தின் மேல் அம்புச் சரங்களால் தாக்குவது போலிருந்தது. ஆயிரமாயிரம் வார்த்தைகளை படத்தின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு சதுர அங்குலமும் பறைசாற்றின.

இது லலித கலா அகாடெமியின் இளம் கலைஞர்களுக்கான கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அப்பொழுது நான் ஆங்கில நாளேடு ஒன்றில் இளம் (கப்) ரிபோர்ட்டராக இருந்தேன்.  இம்மாதிரி கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை கவர் செய்ய அனுப்பி விடுவார்கள். யாராவது ஓவியரையும் பேட்டி காணச்சொல்லி அனுப்பியிருந்தார், எடிட்டர். இந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் டி மெல்லோவைத் தான் பேட்டி காண்பது என்று முடிவு செய்தேன். அவரைக் கண்டு பிடிப்பது ஒன்றும் கடினமாக இல்லை. ஜீன்ஸும் ஜிப்பாவும் அணிந்து கொண்டு, அந்த ஹாலிலேயே ஒரு ஓரமாக நின்றிருந்தார், வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டு. ஒரு மஞ்சள் கலந்த சிவப்பு நிறம்; ஒல்லியாக, உயரமாக இருந்தார். சற்றே நீண்ட முகம். உயர்ந்த தாடை. தலைமயிர் பரட்டையாக, சுருள் சுருளாக இருந்தது. கண்கள், ஒரு பெண்ணின் மையுண்ட கண்களைப்போல, அசாதாரண நீளத்துடன் இருந்தன. அவற்றில் ஒரு தனி பளபளப்பு, ஆழ்ந்த பொய்கையை ஒத்து. முகத்தில் உலகை எப்பொழுதும் வியப்புடன் பார்ப்பது போன்றதொரு நிரந்தரப் புன்னகை. பார்த்த உடனேயே எனக்குப் பிடித்துவிட்டது, அவரை. கிட்டத்தட்ட ஒரே வயது தான் இருக்கும் இருவருக்கும். ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருக்கலாம், என்னை விட. முகவரியைப் பரிமாறிக் கொண்டபின் சரளமாகப் பேச ஆரம்பித்து விட்டோம், நெடுநாள் பழகிய மாதிரி. நேர்க்காணலுக்கு உடனே சம்மதித்து விட்டார். வெளியே சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டோம். பக்கத்தில் ஒரு பெரிய பழங்காலக் கற்சிலை. 

முதலில் அவர் என்னைப் பற்றிக் கேட்டார். சுருக்கமாகச் சொன்னேன். படிப்பு, இந்த ரிபோர்ட்டர் வேலை, எழுத்தார்வம், இதுவரை பதிப்பான ஒன்றிரண்டு கதை, கவிதைகள் எல்லாவற்றைப் பற்றியும். பிறகே அவர் தன்னைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்:

எனக்கு சின்ன வயதிலிருந்தே கிராஃப்ட் நன்றாக வரும். பள்ளியில், என்ன சொல்வார்கள் அதை? – எஸ் யூ பி டபிள்யூ வா – அந்த பீரியடில் மிகக் கவனமாக சொன்னதை எல்லாம் செய்து முடிப்பேன். பிறகு ஏதாவது படம் என்ற பெயரில் கிறுக்குவேன். நடராஜன் என்று ஒரு ஆர்ட் டீச்சர் இருந்தார். அவர்தான் என் வேலையைப் பார்த்து விட்டு, நீ டிராயிங், பெயின்டிங் எல்லாம் முறையாகக் கற்றுக் கொள்ளேன். நல்ல கை இருக்கிறது உனக்கு, என்றார். (அப்பொழுது தனி வகுப்பில் சேர வெல்லாம் பணம் கிடையாது). ஆனால் அவர் அந்த வகுப்பிலேயே எனக்குப் பிரத்தியேகமாக வரைதல், பெயின்டிங், ஏன், கிளாஸ் பெயின்டிங் கூடச் சொல்லிக் கொடுத்தார். பிறகு வீட்டில், நல்ல ஆர்ட் காகிதத்தில், பள பள வென்று வருமே சில காலண்டர்கள்,  அவற்றின் பின் பக்கத்தில் எல்லாம் வரைந்து, பெயின்டிங்கும் செய்வேன். அவ்வளவுதான். தனியாக முயற்சி எதுவும் செய்ததில்லை.

பிறகு பள்ளிப் படிப்பை முடித்தபின், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். வீட்டில் நிர்பந்தத்தினால் ஏதோ ஒரு டிகிரி காலேஜில் சேர்ந்தேன். ஆனால் படிப்பில் நாட்டமில்லை. விளிம்பு நிலை, இடதுசாரி, அரசியல் கட்சிகளுடனும், சுற்றுச் சூழல் தொடர்பான அரசு சாரா நிறுவனங்களுடனும் சில காலம் சுற்றினேன். அவர்களின் கூட்டங்களுக்குச் செல்வது, அவர்களுடன் களப் போராட்டங்களில் பங்கேற்பது எனப் பல வாறு.  அவர்கள் வெளியிடும் கையெழுத்துப் பிரதிகளை (பாம்ஃப்லெட்) டிசைன் செய்வதிலிருந்து அவற்றிற்கான படங்களை வரைவது வரை எல்லாம் செய்தேன். 2, 3 பிரம்மாண்டமான புரட்சி  சுவர்சித்திரங்கள் (ம்யூரல்) கூடச் செய்துள்ளேன்.

இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றேன். ஏன் ஆன்மீகக் கூட்டங்களிலும் போய் நின்றேன். நிலை கொள்ளாமல் ஒரு மனது. 18, 20 வயதில் எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு ஆங்ஸ்ட் தான். அப்பொழுதுதான், தற்செயலாக மறுபடியும், அந்த நடராஜன் சாரைப் பார்த்தேன். என்ன செய்கிறாய் என்று கேட்கவே, சொன்னேன் எல்லாவற்றையும்.  அவர், அதெல்லாம் சரிதான். ஆனால் வாழ்க்கைக்கு ஆதார சுருதியாக ஒன்று வேண்டாமா? உனக்கு அது ஆர்ட் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பட்டப் படிப்பையெல்லாம் விடு. கலைப் பள்ளியில் சேர். நான் சொல்லி வைக்கிறேன். சிபரிசு லெட்டரும் எழுதிக் கொடுக்கிறேன் என்று கூறி, அமிஞ்சிக்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஒரு லெட்டெரை எழுதிக் கொடுத்தார். அத்துடன், அவரிடம் இருந்த வண்ணங்கள், தூரிகைகள், கான்வாஸ்கள் எல்லாவற்றையும் கொடுத்தார், இனி என்னால் வரைவதெல்லாம் முடியாது என்று. யாருக்கு வரும் இப்படி ஒரு மனசு? பிறகுதான் கலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றேன். இதுதான் எனது முதல் கண்காட்சி.

டி மெல்லோ பெயர் பற்றி?

அதுவா? (சிரித்துக் கொண்டே) என் பெயர் மணிவேல் –  D. மணிவேல். ரொம்ப சாதாரணப் பெயராக இருந்தது. அதை ஆங்கிலத்தில் வெவ்வேறு ஸ்பெல்லிங்களில்  போட்டுப் பார்த்தேன்: D Maniwel, D Monivel, D Monewel என்றெல்லாம். பிறகு அதையே ஒரு அனகிராமாக, ‘N’ க்கு பதிலாக, ‘L’ ஐ சேர்த்து, ‘de Mellow’ என்று எக்ஸாட்டிக்காக இருக்கட்டுமே என்று வைத்துக் கொண்டேன். நீங்களலெல்லாம் புனைப் பெயர் வைத்துக் கொள்வதில்லையா, அது போல! என்  பெயின்டிங் எல்லவற்றிலும் அவ்வாறே கையெழுத்திட்டேன், கலைக் கல்லூரியிலிருந்தபோதே.

இதை தயவு செய்து எழுதி விடாதீர்கள். இது ஆஃப் தி ரெகார்ட்! என் பெயர் ஒரு புதிராகவே இருக்கட்டும் என்றார்.

அவர் பெயரைப் பற்றிய தகவலை மட்டும் விட்டு விட்டு, ‘வாழ்வாங்கு’ ஓவியத்தைப் பற்றியும், டி மெல்லோவைப் பற்றியும் சுருக்கமாக எழுதினேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக எடிட்டர் அதை அப்படியே பிரசுரத்தி விட்டார். அதை டி மெல்லோவிற்கு கொண்டு காண்பித்தேன்.  

ஒன்றிரு நாட்களுக்குள் இந்தப் படத்தின் புகழ் பரவி மக்கள் வர ஆரம்பித்தனர். வெகு விரைவில் சட சட சட வென கோடை மழை போல் பெருக ஆரம்பித்தது கூட்டம். திரள் திரளாக, திரள் திரளாக, இதைப் பார்ப்பதற் கென்று கூட்டம் பெருகியது. அகாடெமி முன் கண்டறியாத கூட்டம். அலை மோதியது. முதியோர், இளைஞர், ஆண், பெண் என பல்வேறு பிரிவினர். பொறுமையுடன் வரிசையில் நின்று உள்ளே செல்லத் தவம் கிடந்தனர். அந்த வீதி இதுவரை கண்டறியாத போக்கு வரத்து. நிறுத்த இடமின்றி அண்மையில் இருந்த பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கார், பைக் என்று நிரம்பி வழிந்தது அதுவும். இதற்கிடையில் அங்கே ஒருவர் கேடரிங் செர்வீசும் ஆரம்பித்தார், இசை விழா போல. நல்ல வியாபாரம்.  ஜே ஜே என்று திருவிழா கோலம் பூண்டிருந்தது அந்த இடமே. புத்தகக் கண்காட்சியைக் காட்டிலும் பலமடங்குக் கூட்டம். தன் சரித்திரத்தில் முதன் முறையாக அகாடெமி கண்காட்சியின் காலத்தை நீட்டிக்க வேண்டியதாயிற்று. ஒரு முறை அல்ல, இரண்டு முறை!

அகாடெமிக்குப் பல விதத்தில் நன்மையானது. இப்படியொரு அகாடெமி இருப்பதென்றே நகரத்தில் பலருக்குத் தெரியாது. அப்படியிருக்க, தினமும் அதைப் பற்றி செய்திகள் வெளியாயின. பார்க்க வந்தவர்கள் அந்தப் படத்துடன் நில்லாமல், முழுக்க சுற்றிப் பார்த்ததால் அதன் முழுப் பரிணாமமும் மக்களுக்குத் தெரிய  வந்தது. வெளியிலுள்ள சிற்பங்களும் மக்கள் கவனத்தை ஈர்த்தன. மற்ற நிரந்தரக் கண்காட்சியிலுள்ள படங்களும் கவனத்திற்கு வந்தன. இவை யெல்லாம் போக, நாடு முழுவதும், தலை நகரிலும் கூட செய்தி பரவி, இவர்களுக்கு நல்ல பெயர் சேர்த்தது. மேலிடத்திலிருந்து பாராட்டுதலும் கிடைத்தது. கூடுதல் நிதி உதவியும் கிடைத்ததால், அவர்கள் டி  மெல்லோ விடமிருந்தே ஒரு தனி ஓவியம் கமிஷன் செய்து நிரந்தரக் கண்காட்சியில் சேர்த்தனர். கழுத்து என்ற தலைப்பில் ஒரு பெண்ணின் கழுத்தை வரைந்திருந்தார். முகமும், முகவாயும், தோளும் லைட்டாக, அவுட்லைன் மாதிரி வரையப் பட்டிருந்தது. கழுத்து, நீளமாக, மிக மிக அழகாக, கிரேஸ்ஃபுல்லாக இருந்தது. அதில் ஒரு நீண்ட ஆபரணம் – காசு மாலை போல வேலைப்பாடு மிக்க ஒன்று. அதன் முடிவில் இதய வடிவில் தொங்கும் ஒரு பென்டன்ட். அதிலும் முத்து முத்தாக வேலைப்பாடு. கழுத்துக்காக ஆபரணமா, ஆபரணத்திற்கான கழுத்தா என்ற ஒரு மயக்க நிலையில் மக்கள் பார்த்து ரசித்தனர்.

டி மெல்லோ விற்கு ரசிகர்கள் கூட்டமும் திரண்டது பெரிதாக. முக்கியமாக இளம் வயது ரசிகர்கள், அதிலும் பெண்கள், அவரை மொய்த்தனர், ஒரு கணமேனும் தனியாக விடாமல். சில பெண்கள் அப்பொழுதுதான் பிரபலமாகி வந்த ‘ஸ்மார்ட்’ போன்கள் மூலம் அவருடன் ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டனர். அவரை காஃபிக்கு அழைத்தனர். அவர் படங்களை வாங்க விழைந்தனர். நாளுக்கு நாள் அவரின் ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே போயிற்றே தவிர, குறையவில்லை. 

கண்காட்சி முடிந்தபின் ‘வாழ்வாங்கு’ என்ற அந்த படம், ‘Worldly Wise’ என்ற தலைப்பில் டில்லியில், அகாடெமியின் தலைமையகத்தில், காட்சிக்கு வைக்கப் பட்டது. இதன் புகழ் படம் வந்து சேர்வதற்கு முன்பே பரவி யிருந்ததால் அங்கும் அலை மோதும் கூட்டம். அகில இந்திய பத்திரிக்கைகளும் மீடியாக்களும் இதைக் ‘கவர்’ செய்தன. டி மெல்லோவை எல்லாச் சேனல்களும் பேட்டி கண்டன. இந்நிலையில், தலைநகரானதால், அதில் நிரம்பியிருந்த உலகச் செய்தி நிறுவனங்களும் இதைப் பற்றி எழுதி, ‘தி கார்டியன்’, ‘நியூ யார்க் டைம்ஸ்’, ‘நியூ யார்க்கர்’, ‘லே மாண்ட்’, போன்ற பத்திரிக்கைகளிலும் இந்த ஓவியத்தைப் பற்றியும், டி மெல்லோவைப் பற்றியும் செய்திகள் வெளியாயின. ‘வோக்’ பத்திரிக்கையில் அட்டைப் படச் செய்தியாகவே வந்தது. 

டில்லியில் பணத்திற்கா பஞ்சம்? கலாசார அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கல்வித்துறை, மற்றும் பல்வேறு தூதரகங்கள், என்று மாறி மாறி இவர் பெயரில் பார்ட்டி, ரிசெப்ஷன், என்று தடாலடி செய்தனர். அதில் டில்லியிலுள்ள பெரிய மனிதர்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் வருகை தந்து இவரை மொய்த்தனர். 

இப்படியொரு கூட்டத்தில் தான் இவருக்கு நைத்தானியும் பழக்கமானார். (அன்றைய விருந்தை அவர் கம்பெனி ஒன்று ஸ்பான்ஸார் செய்திருந்தது). சகஜமாகப் பழகினார். மும்பை வரும்படி அழைப்பு விடுத்தார், தன் கார்டைக் கொடுத்து. எப்பொழுது வேண்டுமானாலும் தனது பிரத்தியேக நம்பரில் கூப்பிடச் சொன்னார். ஏதோ மரியாதைக்குச் சொல்கிறார் என்று டி மெல்லோ விட்டு விட்டார். அவர் உலகின் முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவர் என்று தெரிய வந்ததும் இந்த எண்ணம் வலுப் பெற்றது. இவரைப் போலவே உலகளவில் பணக்காரர்கள் பட்டியலிலிருக்கும் மூல்தானி போன்றவர்களும், பாட்லிவாலா, வாசுதேவ மூர்த்தி பொன்ற தொழிலதிபர்களும், நம்மூர் பிரமுகர்களான பனையப்பன், ராஜாமணி போன்றவர்களும், இவருக்குப் பரிச்சயமானார்கள். செல்வந்தர்கள், பெரிய பதவியில் இருப்பவர்களெனப் பலர் நண்பர்களாக, ஆதரவாளர்களாகச் சேர்ந்தனர். 

கண்காட்சி எல்லாம் முடிந்து சென்னைக்குத் திரும்பிய பின்பும் டி மெல்லோ விற்குப் பார்ட்டிகளுக்குக் குறைவில்லை. ஒரு முறை நாங்கள் சந்தித்துக் கொண்டபோது பார்ட்டிக்கே நேரம் சரியாக இருந்ததாக அலுத்துக் கொண்டார். தவிர, முக்காலே மூன்று வீசம் பேருக்கு ஓவியத்தை பற்றி ஒன்றுமே தெரியாது நண்பரே என்றும் கூறினார். ஆனால் இவர் ஏதாவது கிறுக்கித் தந்தால் கூட வாங்குவதற்குத் தயாராக நின்றனர். அவரிடம் முடிக்காமல் அறைகுறையாக இருந்த படங்கள் எல்லாவற்றையும் ஒருவாறு முடித்துக் கொடுத்தார். தன் ஸ்டூடியோவே  காலியாகி விட்டது என்றார்.

இங்கொரு படத்தைப்பற்றிச் சொல்லி ஆகவேண்டும். ‘சிரிப்பு’ என்ற தலைப்பிட்ட அந்தப் படம், டி மெல்லோ வின் பழைய படங்களுள் ஒன்று. முடிவு பெறாமலிருந்த அந்தப் படத்தை, இந்தக் கண்காட்சியின் வெற்றிக்குப் பிறகு வெளியே எடுத்து முடித்தார் டி மெல்லோ. அதிக வேலை ஒன்றுமில்லை அதில். ஏறத்தாழ முடிந்த நிலையில்தான் இருந்தது. கொஞ்சம் லேசான ‘டச் அப்’பும் பின் புல (பேக் ரவுண்ட்) வேலையும் தான் பாக்கி இருந்தன; அதைச் செய்து முடித்தார். இதுவும் அதிகம் பேசப் பட்ட ஒன்று. 

இப்படத்தில் தலையில் முண்டாசுடன் ஒரு கிராம வாசி, பெருநகர் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருப்பது போலக் காட்டியிருந்தார்  ஓவியர். அவன் அண்ணாந்து பார்த்துப் பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தான், நின்ற நிலையில். பல், எகர், நாக்கெல்லாம் ரத்தச்சிவப்பாக வெற்றிலைக் காவி; கடவாயிலிலும் சொட்டிக்கொண்டிருந்தது. கண்கள் சுருங்கி, ஓரத்தில் பறவையின் கால் போலத் தடங்கள். சட்டென்று பார்த்தால் சிரிக்கிறானா, அழுது கொண்டிருக்கிறானா என்று எளிதில் முடிவுக்கு வர முடியவில்லை. அப்படி ஒரு எல்லை நிலையை, ஸ்படிகத்தின் உள்ளிருக்கும் ஈ என, சிறைசெய்திருந்தார் ஓவியர். காலத்தை நிறுத்தி வைத்தாற் போல.

இரு நிலைகளான இன்பம்/துன்பம், சிரிப்பு/அழுகை, விறுப்பு/வெறுப்பு போன்றவற்றின் எல்லைக் கோட்டை உணரச் செய்தது அவ்வோவியம். இன்னும் சற்றே ஆழமாகச் சென்று ஆண்/பெண் எல்லையையும் தொட்டது அது. அழகின் உச்சியே அந்த ஆண்/பெண் ணின் எல்லை நிலைதானே! அதைத் தானே அர்த்தநாரியும் விளக்குகிறது? 

சில நாட்களில்  ஜே ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட் டிலிருந்து அழைப்பு வரவே, மரியாதை நிமித்தம் டி மெல்லோ நைத்தானியைக் கூப்பிட்டு, தான் மும்பை வருகின்றபோது அவரைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் அவரோ தடபுடலாக ஏற்பாடெல்லாம் செய்து விட்டார். விமானச் செலவிலிருந்து எல்லாம் அவரே பார்த்துக் கொண்டார். இவரை ஒன்றும் செய்ய விடவில்லை அவர். மும்பையில் இறங்கியதிலிருந்து தனது விருந்தோம்பலால் திக்குமுக்காடச் செய்து விட்டார். இவருக்கென்று தனி கார் ஒன்று டிரைவருடன் ஏற்பாடு செய்து விட்டார். தன் வீட்டிலேயே தங்கும்படி சொல்லிவிட்டார். ஜே ஜே ஸ்கூலுடன் தான் பேசி விட்டதாகவும், அவர்கள் செய்திருந்த ஏற்பாட்டையெல்லாம் கான்சல் செய்து விட்டதாகவும் கூறினார். வீட்டிற்குச் சென்றவுடன் அவர் மனைவி அனிதாவையும், மகன் ராகேஷையும் அறிமுகம் செய்து வைத்தார். ஜே ஜே ஸ்கூலில் ஒரிரு  நாள் வேலைதான் என்றாலும் இவரை நாலைந்து நாட்கள் தங்களுடன் தங்கவைத்து விட்டனர். 

ராகேஷ் தன் லாம்போர்கினி காரில் மும்பை முழுக்க சுற்றிக் காண்பித்தான். தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்தான். அனிதாவும் ‘தம்பி, தம்பி’ என்று இவனை விடுவதாக இல்லை. டி மெல்லோவிற்கு மிக்க வியப்பு: இவ்வளவு நெருக்கமாக, எள்ளலவேனும் அகங்காரமோ, கர்வமோ, பணத்தின் சாயலே கூட இல்லாமல், இப்படி சமமாகப் பழகுகிறார்களே என்று.

நைத்தானி ஒரு நாள் டின்னர் சாப்பிடும் போது தன்னையும், தன் குடும்பத்தைப் பற்றியும் கூறினார். தாங்கள் எப்படி பரம்பரைப் பணக்காரார்கள் இல்லை என்றும், எப்படி தன் தந்தை 47இல் நாடு பிரிவினை ஆன போது, கையில் காசு இல்லாமல் கராச்சியிலிருந்து மும்பை வந்ததாகவும், அவருடைய கடின உழைப்பால் சிறிது சிறிதாக முன்னேறி, படிப்படியாக காசு பணமெல்லாம் சேர்த்ததாகவும், சிறு வயதில் தங்கள் குடும்பம் பட்ட கஷ்டங்களைப் பற்றியும், இப்பவும் தான் எப்படி உள்ளூர சிக்கனத்தையே விரும்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். 

ஒரு நாள் மதிய உணவின் போது, அனிதா நைத்தானிக்கு இரண்டு சகோதரர்கள் இருந்ததாகவும், அதில் இரண்டாமவர் இவருக்கு மிகவும் நெருக்கமென்றும், இளம் வயதிலேயே இறந்து விட்டதாகவும் கூறினார். மேலும், பார்ப்பதற்கு அவன் டி மெல்லோவைப் போலவே இருப்பான் என்றும், அதனாலேயே நைத்தானிக்கு உன் மேல் தனி பாசம் தம்பி என்று சொல்லி முடித்தார்.

நைத்தானி வெகு நாட்கள் பழகியபின் தான் மெதுவாகக் கேட்டார். தன் மனைவியை ஓவியமாக வரையச் சொல்லி. டி மெல்லோ சற்றே தயங்குவதைப் பார்த்து, சரி, விட்டு விடு என்றார், அவர். அதற்கு டி மெல்லோ, இல்லை, இல்லை; நான் போர்ட்ரைட் பெயின்டிங்கே செய்தது கிடையாது, அதற்குத்தான் தயங்குகிறேன். முதல் முதலில் அனிதா மேடமை டிரை செய்து விட்டு, சரியாக வரவில்லை என்றால் வருத்தமாக இருக்கும் என்றார். அதற்கு அவர்கள் இல்லை, இல்லை, நீ எப்படி செய்தாலும் ஓகே என்று சொல்லி அவரை சம்மதப் படுத்தினர். டி மெல்லோவும் ஒரு ஐந்தாறு ‘சிட்டிங்’ களில் செய்து முடித்தார். அவருக்கு அவ்வளாவாகத் திருப்தி இல்லைதான். அவ்வளவாக ‘முகப் புகழ்ச்சி’ கொடுக்கக் கூடிய பெயின்டிங் இல்லை. வயது தெரிந்தது. இருப்பினும், வயதிற்கு உள்ளிருந்து அவரின் இயற்கையான அழகு வெளியே தெரிந்தது, சைனீஸ் லாந்தர் விளக்கு மாதிரி. தெரியும் படி வரைந்திருந்தார். நைத்தானிக்குப் மிகவும் பிடித்திருந்தது. எல்லாவற்றிகும் மேலே, அவருக்கே – அனிதாவிற்கே – பிடித்து விட்டது. விடை பெறுகையில், நைத்தானி  2 கோடி ரூபாய்க்கு செக் ஒன்றை இவர் பையில் திணித்தார். இவர் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. இதோ பார்! நீ இந்த ஓவியத்தை செய்யாமல் இருந்திருந்தாலும் நம் நட்பு தொடர்ந்திருக்கும். நட்பு வேறு, தொழில் வேறு நண்பா. இந்த படம் எங்கள் வீட்டில் நடு நாயகமாக விளங்கும்.  தவிர, என் கை ராசியான கை என்று சொல்வார்கள். நீ மேன்மேலும் வளர எங்கள் ஆசிகள்  என்று சொல்லி இவரை அனுப்பி வைத்தார். 

நைத்தானியைத் தொடர்ந்து பலரும் இவரிடம் ஏதாவது போர்ட்ரைட் படம் செய்ய வற்புறுத்தினர். அதில் பார்ஸி ஒருவர் தன் ரேஸ் குதிரையை வரையும் படி கேட்டார்! டி மெல்லோ வேண்டா வெறுப்பாகச் செய்தாலும் அது அவரின் சிறந்த படங்களுள் ஒன்றாக அமைந்தது. அது ஒரு பெயர் வாய்ந்த குதிரை என்பதில் ஐயமில்லை. பூனாவாலா டிரைய்னிங் செய்து, ஜகதீஷ் ஓட்ட, இந்தியன் டெர்பையைக்  கைப்பற்றியிருந்தது, அந்தக் குதிரை.  தவிர மற்றும் பல ரேஸ்களையும் சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றிருந்தது.  கறும் பழுப்பு நிறத்தில் நின்ற அந்தக் குதிரையின்   தனி பள பளப்பில் அதன் உயிர்ப்பு வெளிப்பட்டது. கண்ணில் அதன் அபரிமிதமான அறிவையும், கால்களில் அதன் அசாத்தியமான ஆற்றல், துடிப்பையும்  அப்பட்டமாக உணர முடிந்தது. என்னேரமும் அது படத்தை விட்டு வெளியே ஓடிவிடும் என்று  நம்ப வைத்தது அப்படம். 

இச் சூழலில்தான் கிறிஸ்டியில் ‘வாழ்வாங்கு’ என்ற அந்தப் படம் ஏலத்திற்கு விடப் பட்டது. (டில்லி கண்காட்சி முடிந்த பின்பே அவர்கள் அப்படத்தை தாங்கள் உலக மேடையில் விற்றுக் கொடுப்பதாகக் கூறி எடுத்துச் சென்று விட்டார்கள்). மிகுந்த போட்டிக்குப் பின், 1.4 மில்லியன் டாலர்கள் கொடுத்து தனது பெயரைத் தெரிவிக்காமல் ஒருவர் இதை வாங்கினார். கலையுலகில் மட்டுமில்லாமல், உலகளவில் இது அதிர்வலைகளை உண்டாக்கியது. இவ்வளவு இளம் வயது இந்திய ஓவியரின் படம் இவ்வளவு உயர்ந்த விலைக்குப் போவது இதுவே முதன் முறை. வி. ஜி. கைடோண்டே, தையப் மேஹ்தா, எஸ். எச். ராஜா, எஃப். என். ஸௌஜா போன்றவர்களின் – மில்லியன் டாலர் – குழுவில் இணைந்து விட்டார் டி மெல்லோ.

அதற்கு அப்புறம் அவரைப் பிடிப்பது கடினமாகி விட்டது. ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட், லண்டன், பாரீஸ் ஆர்ட் காலேஜ், ரோட் ஐலண்ட் டிசைன் பள்ளி போன்ற உலகச் சிறப்பான பள்ளிகளி லிருந்தெல்லாம்  அவருக்கு அழைப்பு வந்தன. தவிர ஃபெல்லோஷிப், ரெசிடென்சி போன்றவை வந்து குவிந்தன. லண்டன், பாரீஸ், கிளாஸ்கோ, சான் பிரான்சிஸ்கோ என்று பறந்து கொண்டிருந்தார்.

எப்போதேனும் திடீரென்று, ஸ்காட்லாண்டிலிருந்து சிங்கிள் மால்ட் விஸ்கி கொண்டு வந்திருக்கிறேன் வா, என்றோ, உனக்கென்று ஃபிரான்ஸிலிருந்து பர்கண்டி ஒயின் வாங்கி வந்திருக்கிறேன் என்றோ கூப்பிடுவார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். அப்படித்தான் ஒரு முறை சொன்னார்: 

ஷிகாகோ சென்றிருந்த போது என் மாணவர்களுடன் சேர்ந்து ஒரு பெரிய ‘ம்யூரல்’ செய்தேன். கம்பராமாயணத் திலிருந்து  ஒரு காட்சியை, குகப் படலத்தில் குகன் பரதனைக் காணும் காட்சியை, ‘ட்ரிப்டிக்’ காக மூன்று பேனல்களில் வரைந்தேன். முதல் பேனலில், ‘வற்கலையி னுடையானை’ என்ற வரிக்குத் தகுந்த வாறு – குகன் தன் கண்களைக் கையால் மறைத்துக் கொண்டு பார்ப்பது போன்ற தொலை தூரத்துக் காட்சியாகவும், மத்திய தூரக் காட்சியாக நற்கலையில் மதியன்ன நகை யிழந்த முகத்தையும் காட்டியிருந்தேன். கடைசியாக அந்தக் கற்கனியக் கனிகின்ற துயரானைக் க்ளோஸப்பாகக் காண்பித்து, அதைக் கண்ணுற்ற குகன் , விற் கையினின்று இடை வீழ விம்முற்று நின்றொழியும் காட்சியையும் காண்பித்து இருந்தேன். மிகப் பரவலாக ரசிக்கப் பட்டு, மக்கள் இதைப் பாராட்டினர். 

ஆயிற்று, லலித கலா அகாடெமி கண்காட்சி நடந்து முடிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலேயே ஆகிவிட்டது. இதன் நடுவே எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், மெல்லிய கவிதைத் தொகுப்பும் வெளியாகி விட்டன. டி மெல்லோவும் ‘செட்டில்’ ஆகி விட்டார். 5 கோடி ரூபாயில் சிடியின் சென்டரிலேயே பனையப்பன் மூலமாக ஒரு பங்களா வாங்கி விட்டார். அதில் தனியாக ஸ்டூடியோ ஒன்றும் சகல வசதிகளுடன் நின்றது. போர்டிகோவில் 2 கார்கள். டி மெல்லோ நகரக் காட்சிகளை உள் வாங்கிய படியே நகரத் தெருக்களில் வலம் வர ஒரு உயர்தர சைக்கிள். கல்யாணமாகி, ஒரு குழந்தையும் இருக்கிறது. அதை தினமும் நர்சரி ஸ்கூலில் கொண்டு விட்டு, கொண்டு வருகிறார், காரில். மனைவி புவனா பெயருக்கு ஏற்றபடி ரொம்பப் பொறுமையானவர். 

வெகு நாட்கள் கழித்து, ஏன் வருடங்களாகியிருக்கும் – திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டார். வரமுடியுமா நண்பரே, உங்களுடன் பேசி வெகு நாட்கள் ஆகிவிட்டன? என்றார்.  

விட்ட கதை, தொட்ட கதை எல்லாம் பேசி முடித்தோம். புவனா சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு உள்ளே சென்று  விட்டார். அவ்வப்போது தின் பண்டங்கள் ஏதாவது தயாரித்துக் கொண்டு வைத்தார்.

நீங்கள் வெனிஸ் சென்றால், அங்குள்ள ‘சான் மார்க்கோ’ ஸ்கொயருக்கு அருகே நிறைய ‘ஆர்டிஸ்ட்’ கள் உட்கார்ந்திருப்பார்கள், நண்பரே! உங்களை உட்கார வைத்து, நீங்கள் கொடுக்கும் பணத்திற்கேற்ப பென்சில் ஸ்கெட்சோ, இன்க் டிராயிங்கோ, அல்லது பெயின்டிங்கோ செய்து தருவார்கள். அதில் ஒருவனைத்தான் நீங்கள் உங்கள்  கண்ணெதிரே பார்க்கிறீர்கள், நண்பரே. முழுக்க முழுக்க ஒரு போர்ட்ரைட் பெயின்டர் ஆக மாறி விட்டேன்! ரெவொல்யூஷ்னரி பெயின்டராக, ஒரு புரட்சிக் கலைஞனாக ஆக ஆசைப் பட்டேன். ஒரு போதும் நெகிழ்ந்து விடக் கூடாது, அந்த இருபதுகளில் இருந்த படியே சாயாது, நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் டி மெல்லொ – de mellow என்று பெயர் வைத்துக் கொண்டேன். இப்பொழுது பாருங்கள்! நெகிழ்ந்து போனதிற்கெல்லாம் அடையாளமாக, நெகிழ்வின் இலக்கணமாக,  ‘தி மெல்லோ’ – the mellow – ஆகி விட்டேன், என்றார், ஒரு சோகமான அரைச் சிரிப்புடன். 

ஒன்று தெரியுமா உங்களுக்கு? என்று தொடர்ந்தார், புதியதாக ஒரு ஒயின் பாட்டிலைத் திறந்த படியே. ஒவ்வொரு பெரிய வெற்றியும் தன் உள்ளே தோல்விக்கான வித்தையும் அடக்கி வைத்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஃப்ரூட்(ஸ்) ஆஃப் சக்ஸஸ் என்பார்கள். வெற்றியின் கனி. நாம் அதை வெறும் இனிப்புக்குத் தான் சொல்கிறார்கள் என்று ஏமாந்து விடுகிறோம். அதன் உள்ளே தோல்விக்கான விதையும் இருக்கிறது என்பதைச் சொல்ல மறந்து விட்டார்கள்! 

நிச்சயமாக நடராஜன் சார் எதிர்பார்த்த கலைஞன் நானில்லை! என்றார் மீண்டும் வெறுப்புடன்.

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.