சுவை
மலைக்கோயில்
தரிசனம் முடிந்து கீழிறங்கும்
பக்தர்களுக்கெனக் காத்திருக்கின்றன
கொழுத்த கோயில் புறாக்கள்
கீழிறங்கி வந்த பக்தர்கள்
அருகில் அங்காடி கடையில்
விற்கும் தானியப் பொட்டலங்களை
வாங்கிக் கொள்கிறார்கள்
மனிதர்களன் கைகளில்
தங்களின் இரைப்பையை
நிரப்பும் தற்காலிக
அட்சயப் பொட்டலங்களைக் கண்டதும்
அவர்களை நெருங்குகின்றன
இந்தப் புறாக்கள்
ஆசையோடு அவை நெருங்க
முகம் மலர
தானியங்களைத் தூவுகின்றனர் பக்தர்கள்
தங்களின் புண்ணியப் பட்டியலைக்
கொஞ்சம் நீட்டிக்க
சிதறிய தானியங்களை
அவசர அவசரமாக
கொத்தித் தின்னும்
புறாக்களைத் தொட
சிறுவர்கள் சிலர் நெருங்கி வந்து
கைகளை நீட்டுகின்றனர்
அந்தக் கைகளை
இலாவகமாக ஏமாற்றி
மீண்டும் இரையைக்
கொத்துகின்றன புறாக்கள்
எல்லாக் காட்சிகளையும்
அருகில் மரதில் அமர்ந்து
கண்டு கொண்டிருந்து
திடீரென கீ… கீ… கீ என
ஓசை எழுப்பிப் பறக்கிறது
தேடலின் சுவை அறிந்த
பச்சைக்கிளி ஒன்று.

தொடக்கம்
பேயாய் எரிந்து கொண்டிருக்கிறது காடு
வான் நோக்கி
கரும்புகை கூட்டங்களை
அனுப்பிக் கொண்டிருக்கிறது
இந்த தீ
பறவைகள் கூட்டைப் புறந்தள்ளி
உயிரே போதுமென
பறந்து வெளியேறுகின்றன
வன விலங்குகள்
தீயின் எதிர் திசை நோக்கி
ஓட்டம் பிடிக்கின்றன
இன்னும்
ஒரு சில மணி நேரங்களில்
காட்டின் முழு உருவமும்
மாறியிருக்கும்
அப்போது
அங்கெங்கோதான் கிடக்கும்
இத்தனையும் நிகழ்த்திய
அந்த ஒற்றைச் சருகின்
சாம்பல்.