சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள்

மழை

பல்லிய இசைக்குழு.
இடியுடன் கூடிய பெருமழை
அவர்கள் வாக்னரின் வரவேற்பிசையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மரத்தடி இருக்கைகளை விட்டு எழுந்து
கட்டிட மாடத்துக்குள் ஓடுகிறார்கள்,
பெண்கள் கெக்கலித்துச் சிரிக்க,
ஆண்கள் அமைதியாக இருப்பது போல நடிக்கிறார்கள்,
ஈரமான சிகரெட்டுகள் வீசியெறியப்படுகின்றன,
வாக்னர் தொடர்ந்து வாசிக்கப்படுகிறார்,
அவர்கள் அத்தனை பேரும் கட்டிட மாடத்துக்குள் நிற்கிறார்கள்.
பறவைகளும் கூட மரத்தை விட்டுவிட்டு
மாடத்துக்குள் ஒதுங்குகின்றன.
அடுத்து லீஸ்ட்டின் ஹங்கேரிய ராப்ஸெடியில்
இரண்டாம் பாடலை இசைக்கிறார்கள்.
இன்னும் மழை தொடருகிறது, ஆனால் பாருங்கள்,
ஒரு மனிதன் மழையில் தனியாக அமர்ந்து
கேட்டுக் கொண்டிருக்கிறான்.
பார்வையாளர்கள் அவனைக் கவனிக்கின்றனர்.
திரும்பி அவனைப் பார்க்கின்றனர்.
இசைக்குழு தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு மனிதன் இரவில் மழையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.
அவனிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது,
இல்லையா?
அவன் இசை
கேட்க வந்திருக்கிறான்.

*

மூலம்: “Rain” by Charles Bukowski

**

அந்நியர்கள்

நீங்கள் நம்ப மாட்டீர்கள்
ஆனால் இருக்கிறார்கள் சில பேர்கள்
நன்றாக உடுத்திக் கொள்வார்கள்,
நன்றாகச் சாப்பிடுவார்கள்,
நன்றாகத் தூங்குவார்கள்.
தங்கள் குடும்ப வாழ்வில்
மன நிறைவு கொண்டவர்கள்.
துயரமான தருணங்கள்
அவர்களுக்கும் உண்டு
ஆனால் மொத்தத்தில்
அவர்கள் பாதிக்கப்படுவதில்லை
பெரும்பாலும்
மகிழ்ச்சியாகவே உணருகிறார்கள்.
நீங்கள் நம்ப மாட்டீர்கள்
ஆனால் அத்தகைய மக்கள்
இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால் நான்
அவர்களில் ஒருவன் அல்ல.
ஓ அல்ல, நான்
அவர்களில் ஒருவன் அல்ல.
அவர்களில் ஒருவனாக
சற்றும் வாய்ப்பில்லாதவன்.
ஆனால் அவர்கள் இருக்கிறார்கள்
அங்கே.
நான் இருக்கிறேன்
இங்கே.
*

மூலம்: “The Aliens” by Charles Bukowski

**

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

இவரது கவிதைகள் மழுங்கலானவை என்றொரு கூற்று உண்டு. அன்றைய காலக் கட்டத்தில் கவிஞர்கள் ஒலிநயத்துடனான கவிதைகளை இயற்றுவதையே வழமையாகக் கொண்டிருந்தனர். உருவகங்களுடனும், மறை பொருட்களுடனும் எழுதுவதில் முனைப்பு காட்டி வந்தனர். சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளோ உரைநடை வடிவைக் கொண்டிருந்தன. ஆரவாரமான அவரது படைப்புகள் கவித்துவமற்றவை என்று ஒரு சிலர் வாதிட, மற்ற சிலர் அதே படைப்புகளை உணர்ச்சி வேகமுடையவை எனக் கொண்டாடுகிறார்கள்.

சார்லஸ் புக்கோவ்ஸ்கி இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றைத் தன் வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவர் படைப்புகளில் பரவலாக வெளிப்படும் அவநம்பிக்கை, கசப்புணர்வு ஆகியவற்றுக்கு இந்தக் காலக்கட்டங்களே காரண கர்த்தாவாகக் கைகாட்டப் படுகின்றது.
*

ஆசிரியர் குறிப்பு மற்றும் கவிதைகளின் தமிழாக்கம், படங்கள்: ராமலக்ஷ்மி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.