துயரங்களின் நாடகம் – செல்வசங்கரன்
வாழ்நாளில் உங்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களை மனதில் இருத்தி
ஒரு சொட்டு மாறாமல்
அப்படியே கண்களில் கொண்டு வந்து உட்கார வையுங்களென்றதும்
எல்லாருக்கும் கண்கள் சிவீரென்று ஆனது
என் சிவப்பினை அந்தச் சிவப்புகளோடு ஒப்பு செய்து பார்த்தேன்
சரி சரி எங்கு பதுக்கியிருந்தீர்களோ திரும்பவும்
அங்கேயே கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல
துயரங்களை பழைய இருப்பறைக்குக் கொண்டு சென்றார்கள்
எல்லாரது கண்களும் பழைய மாதிரி ஆனது
இந்த ஆசுவாச நிலைக்கு எல்லாரும் எனக்கு நன்றி கூற
என்னோடு எல்லாரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சிறிய திருப்தி
ஒருவரால் மட்டும் தன் துயரங்களை பழைய இடத்திற்கு
எடுத்துப் போக இயலவில்லை
வழியில் ஏதோ பிரச்சினை போல என்ற என் பேச்சு அவருக்கு
உவப்பளிக்கவில்லை
என் சட்டையைப் பிடித்தவாறு துயரங்களில்லாத என்னுடைய
பழைய வாழ்வைக் கொடுக்கப் போகிறாயா இல்லையா என்று
கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்
அவரது சிவீரென்ற கண்களைப் பார்க்க இன்னும் பயமாயிருந்தது
என் சிவப்புகளையும் அவருக்குக் காட்டினேன் அவருக்குத் திருப்தியில்லை
நன்றி சொல்லிக் கிளம்ப இருந்தவர்களிடம் திரும்பவும் எனக்காக
ஒரேயொருமுறை உங்களது துயர நினைவுகளைக்
கொண்டு வர முடியுமா என்றேன்
எப்படியும் இங்கிருந்து கிளம்பிப் போனால் ஒரு துயரம் உண்டு
அதற்குத் இந்த துயர நினைவுகளே எவ்வளவோ மேல் என்று
சம்மதம் சொன்னார்கள்
அங்கிருந்த எல்லாரும் துயர திசையை நோக்கி கைதொழுதோம்
எல்லாருடைய கண்களும் சிவீரென்றாயின
அந்த ஒருவர் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்
எல்லாரும் எல்லாரையும் பார்த்துச் சிரித்தோம்
என்னுடைய சிவப்பை சிவப்புகளோடு ஒப்பு செய்து பார்க்கையில்
அப்பொழுது வந்த எனது சிரிப்பைத்தான்
வெவ்வேறு வாய்களில் வைத்து வெவ்வேறு மாதிரி சிரிக்க
இவ்வளவு நேரமாக பழகிக் கொண்டிருந்தேன்
அவர்கள் என்னிடம் வந்து நாங்கள் கிளம்பலாமா என்றார்கள்

மறதி – பிரபுசங்கர் க
முகம் முழுக்க மஞ்சள் பூசி
தலை நிறைய எண்ணெய் தடவி
நேர் வகிடெடுத்து தலை சீவி
நாலணா அளவிற்குக் குங்குமமிட்டு
எப்போதும் பதினாறு கஜம் புடவையை
நேர்த்தியாகக் கட்டிக்கொண்டு
என் பிஞ்சு கைகளைப் பிடித்து
கம்பீரமாகச் சந்தைக்கு அழைத்துச் சென்ற
அதே அப்பத்தா தான்
இன்று எண்பது வயதில்
ஞாபக மறதியின் உச்சத்தில்
என்னை யாரென்று கேட்கிறாள்
ஐந்து நொடிகளுக்கொருமுறை
அவள் அணிந்திருக்கும் நைட்டியில்
அனிச்சையாய் துளி மறதியுமின்றி
முந்தானையைத் தேடிக் கொண்டிருக்கின்றன
அவள் விரல்கள்…

கஞ்சனூர்,கவிப்ரியா
பாடமெடுக்கின்றன
பயன் படுத்தாத வாய்ப்புகளுக்கும்,
உழைக்காத நாட்களுக்கும்,
முயற்சிக்காத தோல்விகளுக்கும்
நீதான் காரணமெனப் பாடமெடுக்கின்றன
மரத்தடியில் சோகமாக
நான் அமர்ந்திருக்கும் போதெல்லாம்
தலைமேல் விழும் பழுத்த இலைகள்
ஒவ்வொன்றும்..
தற்பெருமை
எப்போதும் விதையை மண்ணில்
போட்டுவிட்டு அண்ணாந்து பார்க்கிறேன்
கனிகள் வேண்டி ,
மண் என்னை பார்த்துச் சிரிக்கிறது
விளைச்சலையும் தந்து
மடிவதையும் சுமக்கும்
பொறுமைவாதியாய் நான் இருக்கிறேன்
என்று தற்பெருமை பேசும் விதமாக..