“கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்

(கோன்ராட் எல்ஸ்ட்டின் ஹிந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – வெண்டி டோனிகரின் இந்தியவியல் சிற்றின்பப் பள்ளியைப் பற்றிய விமர்சனம்.)

முன்னுரை

ராஜிவ் மல்ஹோத்ராவின் புதிய புத்தகம், ”Academic Hinduphobia: A Critique of Wendy Doniger’s Erotic School of Indology” ( Voice of India, Delhi 2016 426 pages) எவ்வாறு இந்து மதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் திறனற்ற வரலாற்று நிபுணர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அதிகாரமும் கௌரவமுள்ள பதவிகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளார்கள் என்பதைப் பற்றிய ஒரு முக்கியமான விளக்கவுரை. படிப்பதற்கு இனிமையான இப்புத்தகம், ஆசிரியரின் வளமான சொந்த வாழ்க்கைப் பயண அனுபவங்களை விவரிக்கிறது.

ராஜிவ் மல்ஹோத்ரா அவர்கள் ஹிந்து மதத்திற்குப் பல தசாப்தங்களாக விடாமல் தார்பூசிக்கொண்டிருக்கும் கல்வித் துறையினருக்கும் ஊடகங்களுக்கும் முறையான பதிலடி கொடுக்க மிகத் தாமதமாக வந்துள்ளவர். இவர்களின் நோக்கம், ஒரு சாதாரண மேற்கத்தியர் இந்துக்கள் அனைவரையும், ஜாதி, பசு, மசாலா இவை மூன்றுடன் ஒருங்கிணைத்துப் பார்ப்பது போன்றோ அல்லது மதச்சார்பற்றவர்களின் ஹிந்து எதிர்ப்பு என்னும் ஒருபுறச் சாய்வோ அன்று. இவ்விரு பிரிவினரின் கருத்துகளையே பொது மக்கள் கேட்டுக் கொண்டிருப்பதால் எதிர்வாதம் செய்பவர்களின் கருத்துகள் ஒலிக்காமல் போய்விடுகின்றன. ஆனால், அமெரிக்காவிலுள்ள இந்தியாவை எதிர்க்கும் ஸ்தாபனங்களை எதிர்த்துப் பேசவும் எழுதவும் பல வகையான திறமைகள் வேண்டியுள்ளது. மல்ஹோத்ரா இதைப் படிப்படியாகத்தான் வளர்த்துகொண்டுள்ளார். தற்சமயம், இவருக்கு நிகர் இத்துறையில் யாருமில்லை.

இப்புத்தகத்தில், அவர் ஹிந்துக்களிடமும், ஹிந்து மதத்தின்மீதும் பகையும் வெறுப்பும்கொண்ட கல்வித் துறையினரிடம் அவர் நடத்திய பழைய போராட்டங்களை ஆவணப்படுத்தியுள்ளார். இம்மனப்பான்மைக்குக் காரணம் ஹிந்து மதம் இவர்களது மதத்துடன் நடத்தும் போட்டியில் வென்றிடக்கூடும் என்ற பயமா, எதிர்வாதம் செய்யும் ஹிந்துக்களின் தரக்குறைவா, அவர்களது மதத்தின் முற்காலத்திய இனவெறி, ஏற்றத்தாழ்வுகள் போன்ற தீமைகளை ஹிந்து மதத்தின் தீண்டாமை, ஜாதி போன்றவற்றில் காண்பதா என்ற கருத்து வேறுபாடுகளை தற்சமயம் தீர்மானிக்க வேண்டாம்.

இப்போரில், கல்வித் துறையுடன் இணைந்துள்ள பகையாளிகள் அமெரிக்க வெளிநாட்டுறவுக் கொள்கையில் ஆர்வமுடையவர்களும் கிருத்துவ மதபோதகர்களுமாவர். இவர்கள் ஒருவரை ஒருவர் வலுப்படுத்துகிறார்கள். இந்துக்களை எதிர்க்கும் இப்பகைக் கூட்டம் மிக வலிமையானது. தந்திரமும் சமயோஜித புத்தியும் கொண்டது. இப்போர்களத்தில் இவர்கள் நிர்ணயித்திருக்கும் சட்டங்களைப் பற்றிய அறிவு இன்றியமையாதது.

அரக்கத்தனம்

இந்தியாவை சிறுமைப்படுத்துவதற்கு எவ்வாறு கிருத்துவ மரபுகள் இடதுசாரி நுட்பங்களை உபயோகிக்கின்றது என்பதை மல்ஹோத்ரா சரியாக சுட்டிக்காட்டுகிறார். ஹிந்துக்கள், மேற்கத்தியர்கள் அனைவருமே கிருத்துவர்கள் என நினைக்கின்றனர். இது தவறு. இருந்தாலும், மதச்சார்பற்ற மேற்கத்தியர்களும், இடதுசாரி மேற்கத்தியர்களும் ஒரு காலத்தில் கிருத்துவ மத வழி வந்தவர்களாதலால் அவர்களது உபாயங்களும் நினைவோட்டமும் கிருத்துவர்களை ஒத்ததாகவே உள்ளது. உதாரணமாகப் பெரும்பான்மையான கிருத்துவப் புனிதர்கள், மதத்திற்காக உயிர்த் தியாகம் செய்ததாக புனையப்படுவார்கள். பண்டைய கிருத்துவம் இத்தகைய உயிர்த் தியாகக் கட்டுக்கதைகள் மூலம் பொது மக்களிடையே கிருத்துவப் போதனைகளைப் பரப்புவது சுலபமாக இருந்தது.

இப்பாரம்பரியம் தற்போது சமயத்தைச் சாராதவர் வழியாகத் தொடர்கிறது. மேற்கத்திய மனித உரிமைக் கோட்பாட்டினரும், அவர்களிடம் பயிற்சியும் பணமும் பெற்ற பிற நாட்டினரும் உலகெங்கும் சென்று புதிய பாதிக்கப்பட்ட வகுப்பினர்களைத் தயார்செய்து அதன்மூலம் மக்களிடையே பிரிவினைகளை உண்டுபண்ணிப் பாதிக்கப்பட்டவர்களைத் தன்வசமாக்கிக் கொள்கின்றனர். இந்தியாவில், இதற்கான பெருமளவு நிதி, தவறிழைக்கப்பட்ட தலித் வகுப்பினரையும் இந்துப் பெண்களையும் பற்றிய செய்திகளை மக்களிடையே பரப்பும் இடைத்தரகர்களிடம்தான் போய்ச்சேர்கிறது.

இதை மல்ஹோத்ரா தனது “பிளவுபடும் இந்தியா“ எனும் கொள்கையைச் சமன்படுத்த உபயோகித்துள்ளார். இக்கொள்கை, எவ்வாறு பலவிதமான சக்திகள் ஹிந்துக் கலாசாரத்தைச் சிதைத்து மக்களிடையே பிரிவினையை உண்டுபண்ணும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுகூடி வேலைசெய்கின்றன என்பதை விளக்குகிறது. அதே சமயம், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி அதை ஒழிக்கவேண்டும் என்ற கங்கணத்தோடு வேலைசெய்யும் ஹிந்து மத வெறுப்பினரின் மனசாட்சி ஏன் இதை ஓர் உயர்ந்த காரியமாக எண்ணுகிறது என்பதையும் விளக்குகிறது. சமூகத்தில் மேம்பட்டவர்களாக இருந்தாலும் நாங்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களின் ஆதரவாளர்கள் என்று தன்னைத்தானே தட்டிக்கொள்ள உதவுகிறது. தம்மிடம் மேற்படிப்புக்காகச் சேர்ந்துள்ள ஹிந்துக்களைப் பார்க்கும்போது இவ்வெண்ணம் இவர்களிடையே மேலும் உறுதிப்படுகிறது.

மல்ஹோத்ராவின் பட்டியலில் நாம் எதிர்கொள்ளும் சில நபர்கள், சாரா கால்டுவெல், டேவிட் கார்டன் ஒயிட், தீபக் சர்மா, ராபர்ட் ஸிடென்போஸ், ஷங்கர் வேதாந்தம் ஆகியோராவர். இப்பட்டியலில் ஹிந்துப் பெயருடைய நபர்கள் இந்தியச் சிப்பாய்கள். சிப்பாய் என்னும் பதத்திற்கு நுட்பமான விளக்கம் தேவைப்படுகிறது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலையாக்கவும், சட்டபூர்வமானதாக்கவும் முயன்றுகொண்டிருந்த சமயம் தாங்களும் வளம் பெறவேண்டும் என்ற சுயநலத்துடன் பல இந்தியர்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது, அமெரிக்க இந்திய ஆய்வாளர்கள் மதச்சார்பற்ற இந்தியர்களுடைய சேர்க்கையினால் இந்துத்வத்தை வெறுக்கக் கற்றுக்கொண்டுவிட்டனர். காலனி ஆதிக்கத்தின்போது ஆங்கிலேயக் கலாசாரத்திற்கு மாறிய இந்திய மேல்வர்கத்தினர்தான் தற்சமயம் ஹிந்து எதிர்ப்பை மேற்கொண்டுள்ளனர். எப்படி இருந்தாலும், அமெரிக்கர்கள்தான் இந்த நடனத்தின் முன்னணியில் உள்ளனர். இந்தியர்கள் அவர்களுடன் சேர்ந்தாட முயற்சிக்கின்றனர்.

மல்ஹோத்ரா அவர்களை ஹிந்து விவரங்களில் ஆர்வமுள்ளவர்களின் வீட்டுப் பெயராக மாற்றியது ஒரு முக்கியமான சர்ச்சையைப் பற்றிய பல விதமான சம்பவங்களைக் கவனமாக நோக்குவதும் விவரிப்பதுமே ஆகும். அது, வெண்டி டோனிகரின் முத்திரை பதிந்த ஒளிவுமறைவு இல்லாததுபோல் தோன்றினாலும் சுற்றி வளைத்து இந்துக்களை எதிர்த்து எழுதப்பட்டுள்ள வாதங்களை அம்பலமாக்குவதாகும். இந்த ஓர் உதாரணத்தை முன்வைத்தே மல்ஹோத்ரா இந்துக்களைக் கூட்டிப் போராடத் தகுதியுள்ள போர்க்களத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளார். இதைப் படித்துப் பல இந்தியர்கள், வலிமை மிகுந்த பொறுமையற்ற இந்து வெறுப்புச் சக்திகளை எதிர்த்துப் போராட நேரிடையாகக் களத்தில் இறங்கியுள்ளனர். “நமது கையில் ஒன்றுமில்லை; எல்லாம் கர்மவினை” என்ற வாக்கியத்திற்குப் பின்னால் ஒளிந்துகொள்ள நினைக்கும் சோம்பேறித்தனத்திற்கு இனி மன்னிப்புக் கிடையாது.

இப்புத்தகத்தில் வரும் பாத்திரங்கள் பலவிதமானவர்களாகவும், சம்பவங்களும் விறுவிறுப்பாகப் போவதாலும், அதே சமயம், புதிய கருத்துகள் உருவடைவதாலும் படிக்கத் தெவிட்டாததாக உள்ளது. மல்ஹோத்ரா சொல்வதை முழுவதுமாகப் புரிந்துகொள்ள விழைபவர்கள் இப்புத்தகத்தைப் படித்தே தீரவேண்டும். இதில் செலவழியும் நேரம் பிரயோசனமான ஒன்று. நான் சில முக்கியமான பகுதிகளை மட்டும் ஒளியிட்டுக் காண்பிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

வெண்டி டோனிகரின் மனோபகுப்பாய்வு களேபரம்

கல்வித்துறையில் ஹிந்து வெறுப்பின் ஒரு முகம் ஹிந்து நாகரீகத்தைச் சிற்றின்பமாகக் கொச்சைப்படுத்தி விரிவாக பேசுவதோ எழுதுவதோ ஆகும். இதை உருவாக்கியவர் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வெண்டி டோனிகர். இவரது முன்னாள் ஆராய்ச்சி மாணவர்களும், ஊடகங்களும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிகைகளும் இப்பாணியையே பின்பற்றுகின்றன. முதலாவதாக, மல்ஹோத்ரா இப்பிரச்சினையின் தீவிரத் தன்மையையும் இயல்பையும் ஆவணப்படுத்துகிறார். நினைத்து பாருங்கள்! மனோ பகுப்பாய்வில் தகுதி பெறாத பேராசியர்கள் மனிதர்களைப் பகுத்தாய்வு செய்தால் தண்டிக்கப்படுபவர்கள், ஹிந்துக்களின் குரு ராமகிருஷ்ணரையோ அவர்களது கடவுள் விநாயகரையோ மனோ பகுத்தாய்வு செய்யத் தகுதியும் உரிமையும் உடையவர்களா என்று.

ஜெபிரீ க்ரிபால் என்பவர் ராமகிருஷ்ண பரஹம்சரைப் பற்றி ஒரு ஆய்வறிக்கையைச் செய்துள்ளார். அதைப் பற்றி ஒரு வங்காள விமரிசிகர்: “தவறான மொழியாக்கம், “வேண்டுமென்றே மூலங்களைத் திரித்துக் கையாளுதல்”, “வங்காள கலாச்சாரத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க அறிவின்மை”, “பிறழ்கூற்று” (misrepresentation), “சம்ஸ்க்ருதம், பெங்காலி இரண்டிலுமே குறைபாடுள்ள அறிவு” என வரைபடுத்தியுள்ளார். பல கல்விமான்கள் செய்வது போலவே, கிருபாலும், ராமகிருஷ்ணரைப் பற்றிய ஏதோ ஒரு செய்தியையோ காட்சியையோ கேள்விப்பட்டு அதைப்பற்றி முன்பின் யாருக்குமே தோன்றியிராத தவறான சந்தேகத்தை கிளப்பிக்கொண்டு, பின் அவராகவே மேலும் அனுமானங்களை வளர்த்துக்கொண்டு அதை ஆய்வறிக்கையில் உண்மைபோலவே எழுதியுள்ளார். அவர் முடிவென்ன? ராமகிருஷ்ணர் குழந்தை பருவத்திலேயே பாலியல் கொடுமைக்கு ஆளானார் என்பதே. கிருபாலின் தவறுகளை உற்று நோக்கும் வாசகர்கள் தர்மசங்கடப்படுவர். தொடையைப் பிறப்புறுப்பு என்றும் தலையை ஆண்குறி என்றும் தடவிக் கொடுத்தலைக் குதப்புணர்ச்சி என்றும் அசிங்கமாகவும் தவறாகவும் மொழிபெயர்த்துள்ளார். இத்தகைய மொழிபெயர்ப்பின்மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் சிறுவயதினரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற ஆதாரமற்ற அவதூறைக் கிளப்புகிறார். இக்கூற்று கிருபாலின் ஆரோக்கியமற்ற மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. மேலும் கலாசார உணர்ச்சிகள் மிகுந்துள்ள இக்காலத்தில், இத்தகைய ஆய்வறிக்கையை இந்துக்கள் மற்றும் வங்கத்தினருடைய உணர்ச்சிகளின் மிருகத்தனமான அத்துமீறல் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இது உண்மையான கூற்றாக இருந்தால் சம்பந்தப்பட்ட சமூகம் என்ன நினைக்குமோ என்று பாராமல் இதைக் கூறியே ஆகவேண்டும். அவ்வாறே இருந்தாலும், பாதிக்கப்பட்ட சமூகத்தினருடன் முன்னரே இதைப் பற்றிப் பேசி எச்சரிக்கையுடன், ஜாக்கிரதையாக உணர்ச்சிகள் அத்துமீறாமல் வெளியிடுவதுதான் முறை. ஆனால், ஹிந்துக்களின் உணர்ச்சிகள் என்று வரும்போது எதுவுமே தேவையில்லை. அது காலில் மிதிப்படக்கூடியது என்பதே பொதுவான நினைப்பு.

பால் கார்ட்ரைட் என்பவர் எழுதியுள்ள “Gane’sa: Lord of Obstacles,Lord of Beginnings” என்னும் புத்தக ஆய்வறிக்கையில் விநாயகரின் உடைந்த தந்தத்தை ஊனமடைந்த ஆண்குறி என்கிறார். மேலும் விநாயகரை அன்னை பார்வதியின்மேல் காம இச்சை கொண்டவர் (oedipus complex) என எழுதியுள்ளார். புராணங்களில் விநாயகர் பல துறைகளில் அறிவு செறிந்தவராக வருணிக்கப்பட்டிருந்தாலும் இனிப்புப் பண்டங்களில் ஆர்வமுள்ள சர்க்கரை வியாதிக்காரர்களுடன்தான் இப்புத்தகத்தில் ஒப்பிடப்பட்டிருக்கிறார்.

டோனிகருடைய புத்தகம் “The Hindus: An Alternative History முழுவதிலுமே தவறுகள் நிறைந்துள்ளன என்பதை விஷால் அகர்வால் கண்டறிந்து அதை ஒரு புத்தகமாகவே எழுதியுள்ளார். சம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றவர் என அம்மொழியில் பரிச்சயம் இல்லாதவர்களால் கருதப்பட்டாலும், பண்டைய சம்ஸ்க்ருத நூல்களின் சொதப்பலான மொழிபெயர்ப்பை மைகேல் விட்ஜெல் போன்ற சக துறையினரே கடுமையாக விமரிசித்துள்ளார்கள். இவர்கள் ஹிந்துக்கள்மேல் ஆர்வம் கொண்டவர்களல்லர். கல்வித் துறை அமைப்புகளில் சாதாரணமாக இத்தகைய புத்தகங்களும் ஆய்வுகளும், பதிப்பிற்கு முன்னரே பாரம்பரியத்தில் ஊறியுள்ளவர்களின் விமரிசனத்திற்கு உட்படுத்தப்படும். அவ்வாறு செய்திருந்தால், இம்மூவரின் தவறுகளும் அவதூறுகளும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்காது. ஆனால், ஹிந்து மத எதிர்ப்பு, கல்வித் துறையில் நன்றாக வேரூன்றியுள்ளதால் இத்தகைய நகைப்புக்கிடமான பிதற்றல்கள் புத்தகங்களாக உருவெடுக்கின்றன. எனவே மல்ஹோத்ரா எடுத்துக்கொண்டுள்ள போராட்டம் நியாயமானதும் தேவையானதுமாகும்.

RISA (Religion In South Asia) பட்டியல்

நான் “Argumentative Indian” புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, “தென் ஆசியாவில் சமயம்” (RISA) என்ற நிகழ்ச்சிக்கான பட்டியல் தயாரிப்பாளர் தீபக் சர்மாவும் அவரைச் சேர்ந்தவர்களும் நான் அதில் கலந்து கொள்வதைத் தடை செய்வதற்காகப் பட்டியலின் விதிகளை மாற்றியதையும் அதை ஆமோதித்த பல இந்து மத வல்லுனர்களுடன் நான் நடத்திய விவாதங்களையும் இப்புத்தகத்தில் சேர்க்கலாமா வேண்டாமா என தீவிரமாகச் சிந்தனை செய்தேன். எனது பக்கம் அவ்வளவு முக்கியமாகத் தோன்றாவிட்டாலும் வரலாற்றில் பதியவேண்டும் என்பதால் அதைச் சேர்த்தேன். இந்தியாவைப் பற்றிய முரண்பட்ட உலகக் கருத்துகளைப் படிப்பவர்களும் இந்தியப் பார்வையாளர்களும், பகட்டும் நீசத்தனமும் மிக்க இந்து எதிர்ப்புக் கூட்டம் தங்களது இருப்பை எவ்வாறு தக்க வைத்துக்கொள்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவர் என நம்புகிறேன். மல்ஹோத்ராவின் புத்தகம் 2003ல் இந்த அமைப்புடன் அவர் நடத்திய வாக்குவாதங்களை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள குட்டி சம்பவக் குறிப்புகள் வருங்கால வரலாற்று ஆசிரியர்களுக்கு உபயோகமாக இருக்கும். உதாரணம்: “Indra’s net“ புத்தகத்தில் மல்ஹோத்ரா சண்டைக்கிழுத்ததாகக் கூறும் அநத்தாநந் ராம்பச்சன் 2003ல் மல்ஹோத்ரா கட்சியில் இருந்தவர் போன்ற விவரங்கள். இதைவிட முக்கியமான விவரம் கார்ட்ரைட் விநாயகரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையைப் பற்றி இந்துக்களுடன் உரையாட ஒப்புக்கொண்டார் (பக்கம் 211) என்பதாகும். இதன் காரணம், அமெரிக்காவில் ஹிந்து மதம், இஸ்லாம், புத்த மதம்போல் சிறுபான்மையினரின் மதம் என்பதால் மற்ற சிறுபான்மை மதங்களைப்போல் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் மரியாதையுடன் நடத்தவேண்டும் என்ற எண்ணமாயிருக்கலாம். எனவே, இந்து மதம் இந்தியாவின் முதன்மையான மதம் என விவரிப்பது அமெரிக்கச் சூழலுக்குப் பொருந்துமா என்ற கேள்வியும் எழும்புகிறது. இத்தகைய சம்பவங்கள் சிறிதளவு நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு மாறுதலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மல்ஹோத்ரா சம்பந்தப்பட்ட சமீப நிகழ்வுகள், எதிர்மறைக் கருத்துடையவர்களை ஒதுக்குதல், நிறுவன பதவியோடு வரும் மேதாவித்தனம், ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்குக் காரணம் யாரென்றறியாத முதலாண்டு மாணவனின் மனப்பான்மை, தவறான தொடர்புடையவர்களாகக் கருதுபவர்கள்மேல் வெறுப்புணர்ச்சி ஆகிய அனைத்துமே மேற்கத்திய இந்திய ஆய்வாளர் மன்றங்களில் தொடர்வதைத் தெளிவாக்குகிறது.

மல்ஹோத்ரா, அவரது வாக்குவாதங்களுக்குப் பிறகு சிறிதளவு முன்னேற்றம் தெரிகிறது என நம்புகிறார். தென் ஆசிய சமயத்தின் வரலாற்றில் முதல் தடவையாக, எதிர்ப்புக் குரலை எழுப்பும் புலம்பெயர்ந்த ஹிந்துக்களை, “காவியுடுத்தவர்கள்”, “ஹிந்துத்துவ வெறியாளர்கள்”, “பாசிசக் கொள்கையினர்”, “பேரினவாதர்கள்”, “அச்சுறுத்தி டவுரி வாங்குபவர்கள்”, “முஸ்லீம்களைக் கொல்பவர்கள்”, “மாடக்கன்னிகளைக் கற்பழிப்பவர்கள்”, “தலித் வகுப்பினரைக் கீழ்மைப்படுத்துபவர்கள்” போன்ற தரக்குறைவான அடையாளங்களிடுவது நின்றுள்ளது. இது தற்காலிக நிறுத்தமா அல்லது நிலையானதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

ஹிந்துக்களின்மேலும் அவர்களது மதத்தின்மேலுள்ள வெறுப்பு மாறவில்லை என்ற எண்ணம்தான் பொதுவாக ஹிந்துக்களிப்பிடையே நிலவுகிறது. 2015ல் மல்ஹோத்ரா அவர்கள் பிறருடைய எழுத்துக்களைத் தன்னுடைமையாக்கிக் கொண்டார் என்ற பழியை அநியாயமாகச் சுமத்தினார்கள். இவ்வழக்கின் விவரங்களை விரிவாக அலசிப் பார்த்தபின் இது வீண் பழி மட்டுமல்லாமல் நகைப்புக்கிடமானது என்பதும் தெரியவந்தது. ஆனால், மிதவாத இந்து ஆய்வாளர்களும் இந்திய – ஆசிய ஆராய்ச்சியாளர்களும் (ரீஸா பட்டியலிலுள்ள பல நபர்கள் இதிலும் உள்ளனர்) கும்பலாக மல்ஹோத்ராவை எதிர்த்தனர். இச்சர்ச்சைக்குச் சம்பந்தமில்லாத காசு பெறாத விவரத்திற்காக இவர்மேல் ஆவேசம் அடைந்தனர். இத்தகைய ஹிந்து வெறுப்பு தொடர்ந்து நீடிப்பதால்தான் இப்புத்தகத்தை வரலாற்று ஆவணம் என எடுத்துக் கொள்ளமுடியாது. இதை வெறுப்புற்ற இந்து ஆய்வாளர்களுக்குச் சவாலிட வேண்டும் என்பதை இந்துக்களுக்கு விளக்கும் பாடப் புத்தகமாகக் கொள்ளவேண்டும்.

2003ல், பா.ஜ .க. ஆட்சியில், வரலாற்றுப் புத்தகங்களை ஹிந்துக் கண்ணோட்டத்தில் மாற்றி அமைத்ததைத் தவிர, ஹிந்து பாசிச ஆட்சி என்று 1990களிலிருந்தே புலம்பிக்கொண்டிருந்த இந்து ஆய்வாளர்களின் பயமுறுத்தல்களெல்லாம் பொய்த்தன. ( பா.ஜ .க. ஆட்சி முஸ்லீம்களின் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்ற இவர்களது சிறப்பறிவு முன்கணிப்பு தவறானதாக இருந்தபோதும் அதனால் இவர்கள் எந்தவிதமான விளைவுகளையும் சந்திக்க நேரவில்லை என்பதை இங்கே நினைவுறுத்த வேண்டியுள்ளது.) உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் கல்வித் துறையினர்கூட இம்மதிப்பீட்டிற்கும் உண்மைக்கும் உள்ள தூரத்தை அறியாமல் இருந்திருக்க முடியாது. மேலும், மோடி ஆட்சிக்கு வந்தபின், பல சர்வதேசக் கதவுகள் திறக்கப்பட்டு, இந்தியப் பார்வையாளர்கள் முன்பு அடித்துச்சொன்ன இந்துக்களின் வெறுப்பு காணாமற் போனபிறகும் இந்துக்களின் மேலுள்ள வெறுப்பு இவர்களிடம் சிறிதளவும் குறையவில்லை.

அர்த்தமற்ற அச்சம் (Phobia)

இப்புத்தகத்தின் பெரிய குறை, இதன் தலைப்பாகும். அறிவுக்கு பொருந்தாத அச்சம் என்ற மருத்துவப் பதத்தை அரசியல் காரணங்களுக்கு உபயோகிப்பதை நான் மறுக்கிறேன். உதாரணமாகச் சிலந்திகளை கண்டு பயப்படுதலை அர்த்தமற்ற அச்சம் (Arachnophobia) என மருத்துவம் கூறுகிறது. முதன் முதலாக அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஓரினச் சேர்க்கையினர் மேல் அச்சம் (Homophobia) என்பதாகும். இச்சொல் இனத்தவரிடமே பயம் என்ற அர்த்தத்தை கொண்டிருந்தாலும், ஓரினச் சேர்க்கையை அறிவுபூர்வமாகவோ உணர்வுபூர்வமாகவோ எதிர்ப்பவர்களைக் குறிவைக்கிறது. இச்சொல் ஓரினச் சேர்க்கையின் பாலுணர்வை உணர்த்தவில்லை. ஒரு குறிப்பிட்ட செய்கையை ஏற்றுக்கொள்ளாதலைப் பயம் அல்லது வெறுப்பு என்பதாக மாற்றியுள்ளது. எவ்வாறிருந்தாலும், இப்புதுச் சொல்லாக்கம் நடைமுறைக்கு வந்ததற்கு மேல்மட்டத்தினரின் செம்மறியாட்டு தலையாட்டுதலிற்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும்.

இதற்கு அடுத்ததாக நடைமுறைக்கு வந்த சொல் “இஸ்லாமியரிடம் அறிவிற்கு ஒவ்வாத அச்சம்” (Islamophobia). இச்சொல்லின் அர்த்தமும் இஸ்லாமியர்களின் மேலுள்ள வெறுப்பு என்று மாறியுள்ளதால் இஸ்லாமிய மதத்தைக் கண்டனம் செய்பவர்களையும் அம்மதத்தை ஏற்க மறுப்புவர்களையும் சுட்டிக்காட்டுவதாக அமைத்துள்ளது.1990களில், இவ்வார்த்தையை முதலில், இனவாதத்தை எதிர்ப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட Runnymede Trust என்ற ஆங்கிலேய நிறுவனம்தான் உபயோகித்தது. பிறகு, இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு ஊக்கமளித்ததால் அரசாங்கங்களும், ஊடகங்களும் பரவலாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டன. பாகுபடுத்தும் திறக்ச் சாதாரணமாகக் கையாளுதலை ஒரு குற்றமாக மாற்றிய பொய் வார்த்தை இது. இஸ்லாமிய மதத்தைக் கண்டனம் செய்பவர்கள் இஸ்லாமியர்களிடம் பயந்தவர்களோ வெறுப்புற்றவர்களோ அல்லர். அது ஓர் ஆசிரியர் மாணவனின் தவறான விடையைச் சிவப்புக் கோடிட்டுக் காண்பித்தலுக்கு ஈடாகும். ஆனால், அதிகாரம் மிக்கவர்கள் அளித்த ஊக்கத்தினால் இது வீடுகளில் புழங்கும் சாதாக்ச் சொல்லாகிவிட்டது.

இவ்வார்த்தைகள் மாதிரியே “Hinduphobia” என்ற வார்த்தையும் உருவாகியுள்ளது. சோவியத் அரசாங்கம் அதிருப்தியாளர்கள் கண்ணோட்டங்களை மனவியல் சொற்களாக மாற்றியதை ஏற்றுக்கொள்ளாதது போலவே மேற்சொன்ன வார்த்தைகளின் தவறான அர்த்தத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

ஆனால், அர்த்தமற்ற ஹிந்து மத வெறுப்பு என்பது நிதர்சனமாயுள்ளது.. இஸ்லாமுடன் ஒப்பிடும்போது இது இன்னும் தெளிவாக விளங்குகிறது. இஸ்லாமிய மதத்தின் பெயரைச் சொல்லி சிலரோ பலரோ கொலை செய்யப்பட்டால், அரசாங்கமும் ஊடகங்களும் முந்தியடித்துக்கொண்டு இஸ்லாமிற்கும் இக்கொலைகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று உறுதியளிக்கின்றன. ஆனால், ஹிந்து மதமென்றால் இவர்களது நடத்தை எதிர்ப்பதமாக உள்ளது. நல்வினை எதுவும் ஹிந்து மதத்துடன் சம்பந்தப்பட்டதன்று. ஆனால், மக்கள் பெருக்கம் முதற்கொண்டு பாலியல் கொடுமைகள் வரை அனைத்திற்கும் ஹிந்து மதமே காரணம் என்பர்.

முன்னொரு அத்தியாயத்தில் கூறியதுபோல் ஜெயின் கணிதம், கேரளக் கணிதம் என்பார்களே தவிர ஹிந்துக்களின் கணிதத்தை இந்தியக் கணிதம் என்று கூறுவார்கள். மணிசங்கர் அய்யர் ஒரு முறை, இந்தியாவின் பன்மைத்துவம், அகதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற நல்விஷயங்களைக் கூறிய அதே மூச்சில், இதற்கும் இந்து மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்தியாவின் காற்றில் உள்ள ஏதோ ஒன்றுதான் இவற்றிற்கு காரணம் என்றார். மத போதகர்களின் பிரசாரங்களும், மதச்சார்பற்ற ஊடகங்களும் பழங்குடி மக்கள் ஹிந்துக்களல்லர் என்றே பறைசாற்றுகின்றன. அதே சமயம், இம்மக்கள் முஸ்லிம்களுடனோ கிருத்துவர்களுடனோ கை கலந்தால் ஹிந்து கலகக்காரர்கள் என்று அறிக்கை விடுவார்கள்.

இவர்களை ஆட்டிப்படைக்கும் எதிர்மறைப் போக்கை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் நில்லாமல் அவர்களை அதற்காக வெட்கப்படுத்தவும் வேண்டும். Homophobia, islamophobia ஆகிய வார்த்தைகளை இவர்கள் உள்வாங்கிக்கொண்டு விட்டதால், Hinduphobia என்ற புதிய சொல்லாக்கத்தையும் இந்த பட்டியலில் சேர்த்தால்தான் இவர்கள் இதை நன்கு புரிந்துகொள்வர். இவர்களது மனம் திருந்தியபின், மொழியியல் சுத்தமானபின், இப்புதிய சொல்லாக்கங்களைக் கை கழுவிவிடலாம். அதுவரை, இவர்களது கருத்துகள் வியாபித்திருக்கும் இந்நேரத்தில் இவர்களை திரும்பிச் சாடுவதற்கு இவ்வார்த்தையைப் பிரயோகிப்பது எல்லோருக்கும் இணக்கமானதே.

(Book Review of “Academic Hinduphobia: A Critique of Wendy Doniger’s Erotic School of Indology” – Published on Pragyata.com 5, July 2016.)

Series Navigation<< தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.