எழுத்துசாமியும் பேச்சாண்டியும்

அவசர அவசரமாக இயற்கை பாரத்தை இறக்கிவைக்க இலுப்பை மரத்தைத் தேடினார். எப்போது பிறந்த மண்ணுக்கு வர நேர்ந்தாலும் மற்ற விஷயங்களில் எப்படியோ, காலைக் கடனை முடிப்பதற்கு அவர்கள் பூர்வீக வீட்டிற்குப் பின்புறமிருக்கும் இலுப்பை மரமும், மறைப்புக்கு அதன் சொந்தபந்தங்களான ஈச்சம் புதர்கள் செடி கொடிகளென்கிற இத்யாதிகள் வேண்டும். அவர் தகப்பனார் நகர வாழ்க்கைக்கு இணையான வீட்டையும் டாய்லெட் ஏற்பாடுகளையும் மகனுக்கென செய்திருந்தாலும், நம்ம எழுத்துசாமிக்கு அவர்கள் பூர்வீக வீட்டிலிருந்து ரெண்டு நிமிஷ நடையில் எதிர்ப்படுகிற புறம்போக்கு இலுப்பை மரத்தடியில் ஒதுங்கினால்தான் திருப்தி. அதன் அருகிலேயே இவர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் புளியமரமொன்று இருக்கிறது அவசரத்திற்குக்கூட அதில் ஒதுங்குவதில்லை. இலுப்பை மரம்தான் அவருக்கு ராசியான மரம். ஒவ்வொரு முறையும் உட்கார்ந்துவிட்டு, சொம்பு நீரைக் காலிசெய்துவிட்டு வீடு திரும்ப பிருஷ்டத்தின் ஈரம் காய்வதற்கு முன்பாக ஏதாவதொரு நல்ல சேதி வந்திருக்கிறது. 

கடந்த 20 ஆண்டுகளாகச் சென்னை வாசம், எழுத்துசாமிக்குப் பதிவுத் துறையில் டிபுடி டைரக்டர் உத்தியோகம். ஒவ்வொரு பத்திரப் பதிவும் கரன்சிகளைக் கொட்டுகிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதலமைச்சரைப் பார்த்து ஒரு மாலை போட்டுவிடுவார். ஐந்து வருடத்திற்கு முன்பாக ஒரு கிலோ தங்க நகைகளோடு சாலி கிராமத்தில் இரண்டு கிரவுண்டு நிலத்தையும் வரதட்சணையாகக் கொடுத்து மூத்த மகள் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தினார். எழுத்துலகம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியென எல்லாத் தரப்பினரும் ஆஜராகி இருந்தார்கள். உத்தியோகம் பதிவுத் துறை என்பதால் ரியல் எஸ்டேட் ஆசாமிகள் ஸ்பெஷலாகக் கண்டுகொண்டார்கள். 

உபதொழிலாக எழுத்தை வைத்திருக்கிறார். எழுத்தில் இன்றைய தேதியில் நான்கைந்து பேர் இவருடன் போட்டியில் இருப்பதுபோலப் பட்டாலும் அவர்களெல்லாம் இவருக்கு ஜூஜூபி. எதிரிகளைப் பல்லில் படாமல் விழுங்கும் சாமர்த்தியம். ஒருவரிடமும் பகையில்லை, தந்திரசாலி. இளைய தலையமுறையினரில் பலர் தீவிர ரசிகர்கள். தோளில் கைபோட்டுப் பேசுவார், அவர்களோடு தலையைச் சிலுப்பிச் சிகரெட் பிடிப்பார், பனை மரத்தின் கீழிருந்து கள்ளும் குடிப்பார், பாரில் உட்கார்ந்து சீயர்ஸ்ஸும் சொல்லுவார். அவர்கள் வாசிப்பில் உள்ள நம்பிக்கையில் அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அச்சுறுத்துவார். “தம்பி, உன் கவிதையைப் படிச்சேன், நல்லா வந்திருக்குதுங்க” என்றோ, “யாரு சிறுகதை சிங்காரியா, ‘சுக்கு மிளகு திப்பிலியில்’ ஒங்கதையை வாசிச்சேன்மா, மாமனாரோட மருமகள் ஓடிப்போக நினைக்கிற மனசை நல்லா சித்திரித்திருக்கிற, தத்ரூபமா வந்திருக்கு, அருமைம்மா !” எனத் தாராளமாகப் பாராட்டும் குணமும் உண்டு. 

அவருடைய கீர்த்திக்கும் எந்தக் குறையுமில்லை. கொறுக்குப் பேட்டை 13வது வட்டம் தோழர் முருகசாமி நினைவுப் பரிசிலிருந்து, தமிழ்நாடு, இந்தியா என்கிற வரைபடத்திற்குச் சொந்தமான பரிசுகள் வரை எல்லாவற்றையும் முறைப்படி எப்படி வாங்க வேண்டுமோ அப்படி வாங்கி இருக்கிறார். நாளிதழ்களிலும், சஞ்சிகைகளில் தொடர்ந்து அவரைப் பற்றி இரண்டொரு வரிகள் எழுதுகிறார்கள், ‘எனக்கும் இலக்கியம் வரும்’ என்கிற சினிமா நடிகர்கள் வீடு தேடி வருகிறார்கள். வட ஆப்ரிக்க குளுபுளு மொழியில் தம்முடைய கவிதை வெளிவந்தாகவும் அதை அந்நாட்டு அதிபர் வெளியிட்டதாகவும் சொல்கிறார். 

‘எட்டும் எட்டும் பதினாறு, எதிர்த்த வீட்டுப் பெண் யாரு’ன்னு கவிதை எழுதினப்போ நம்ம எழுத்துசாமிக்குப் பதினாலு வயது. பிறகு சிறுகதைகள், நாவல்கள் என்று எழுத ஆரம்பித்தார். செங்கணாச்சேரி செந்தூர் பாண்டியன்போலத் தமிழ் எழுத்துலக சாம்ராச்சியத்தைக் கட்டி ஆளும் கனவு அவருக்கு முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும்போதே இருந்தது. இரண்டொரு தொகுப்புகள் போட்டார். பதிவுத் துறை உத்தியோக உயர்வைக் காட்டிலும் எழுத்தில் பிரமோஷன் வாங்கணும், அதில்தான் பெருமை என்பது இலட்சியமாக இருந்தது. அதைத் தடித்தக் கழுத்தும் கனத்த சாரீரமும், நடந்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு(?) வாங்குகிற பாரியாள் சௌபாக்கியத்திடம் சொல்லவும் செய்தார். 

“என்னவோ செய்யுங்க, தம்படிக்குப் பிரயோசனமில்ல்லாத எழுத்துப் பொழப்பு, பையன் தலைக்கு மேல வளர்ந்துட்டான், வரிசையா மூணு பொண்ணுங்க இருக்கு, மறக்காம இருந்தா சரி”, என்ற மனைவியின் நியாயமான எச்சரிக்கையையும் அலட்சியம் செய்தவரில்லை. 

ஒருமுறை பரிசுக் குழுவில் இருந்த சக எழுத்தாளர் ஒருவர் “அண்ணே, முன்பின் நவீனத்துக்கான டபுள் டக்கர் நாவல் பரிசை இந்த வருஷம் நம்ம சொக்கப்பனுக்குக் கொடுக்கலாம்னு இருக்கோம், பத்து வருஷமா எழுதறான். ஆட்டோ டிரைவர், குடும்பமும் கஷ்டத்துல இருக்கு, அடிக்கடி எங்களையெல்லாம் வந்து பார்த்துட்டு டீ காபின்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போற பணிவான பையன். அவர் என்ன சாதின்னும் உங்களுக்குத் தெரியும், அதனால” என்று இழுத்தபோது இவருக்குக் கோபம் வந்துவிட்டது. குறுக்கிட்டார், “நீங்க ஒருத்தனும் எழுத்துக்குப் பரிசு கொடுக்கறதில்லைன்னு எனக்கும் தெரியும், அந்த தைரியத்துலதான் எனக்குக் கொடுங்கன்னு கேக்கறேன். கூடுவாஞ்சேரியில ஒம் பட்டா நெலத்துக்கு வில்லங்கம் எடுக்கனும்னு ரெண்டு மாசத்துக்கு முன்ன நீ சொன்ன ஞாபகம், பிரச்சனை முடிஞ்சுடுச்சா?” என இவர் கேட்க “இல்லை” என்பது எதிர்தரப்பு பதில். “என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது, பரிசு எனக்கு வேணும், ஒங் கூடுவாஞ்சேரி பிரச்சனை முடிஞ்சுதுன்னு வச்சுக்கோ” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார். எதிர்பார்த்ததுபோலப் பரிசு அவருக்குக் கிடைத்தது. இவருக்குப் போட்டியாக இருந்த இளைஞனுக்கு குடும்பக் கஷ்டத்தைவிட, நான்கைந்து பாட்டில்களை அந்த மாசத்துல கூடுதலாக வாங்க முடியுமென்ற கனவில் மண்ணைப் போட்டிருந்தார். 

லோக்கல் பரிசுகள், அவற்றோடு வாங்கிய கேடயங்கள், இடம் போதாமல் ஷோகேசில் நாட்டிக்கொண்டு கிடக்க, தேசிய விருதை வாங்கவில்லை என்ற ஒரு குறை நெடுநாளாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் சிலர் “என்ன எழுத்துசாமி, எல்லா பரிசுகளையும் வாங்கிட்டீங்க, தேசிய விருதை வாங்கலைன்னா எப்படி, அவரைப் பாருங்க வாங்கிடலாம், இவரைப் பாருங்க வாங்கிடலாமென” உற்சாகமூட்ட  இவரும் தம்முடைய ‘தாடியில் ஆங்காங்கே வெள்ளை மசுறு’ நாவலில் இரண்டு பிரதியை அனுப்பிவைத்தார். அவருடைய எழுத்துகளை வாசிக்கும் மனைவி திருப்தியுடன் தலையை ஆட்டியது அதொன்றுக்குத்தான் என்ற காரணம் ஒரு பக்கம், ஐம்பது வயதில் அந்தப் பரிசை வாங்கியவன் நானொருத்தனாகத்தான் இருக்கணும் என்கிற வைராக்கியம் இன்னொரு பக்கம். பரிசுக் குழுத் தலைவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். அவர் எழுதிய கவிதைகளையும் சிறுகதைகளையும் தெலுங்கு. மலையாளம், கன்னடம் எனத் தெரிந்தவர்களைக்கொண்டு மொழிபெயர்த்தார், ஒரு மலரும் வெளியானது. இவர் தந்திரங்கள் பலித்து தேசிய விருது செய்தியைப் பரிசுக் குழுத் தலைவர் அறிவித்தபோது அன்றும் நம்ம எழுத்துசாமி சொந்த கிராமத்து இலுப்பை மரத்தடியில் ஒதுங்கி முடித்து ஒரு சொம்பு நீரால் பிருஷ்டத்திற்கு அபிஷேகம் முடித்திருந்தார். 

தமிழ் அன்னையின் சுவாசமே தமது கவிதைகளிலும், சிறுகதைகளிலும், நாவல்களிலும் இருப்பதாக நம்பும் எழுத்துசாமிக்கு கடந்த ஒரு மாதமாக நெஞ்செரிச்சல். தம்முடைய இலக்கியப் புகழுக்கு ஈடு இணை எவருமில்லை என நினைத்திருந்தபோதுதான் அவருடைய நெடுநாளைய எதிரியான பால்ய வயது சினேகிதன் நமச்சிவாயம் வீடு தேடிவந்தார். 

உங்களுக்கு நமச்சிவாயம் என்ற பெயரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பதிலாக பேய்மழை பேச்சாண்டி என்றால் நீங்கள் புளகாங்கிதமடைந்து மெய் சிலிர்க்கக்கூடும். இடைநிலைப் பள்ளி ஆசிரியர், கூடுதல் தகுதி பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நமச்சிவாயம் பேசத் தொடங்கினார். ‘முத்தாலம்மனும் கம்பனும் ’ என்ற தலைப்பில் பேசியவர், முத்தாலம்மனை சீதை என்றார், தொடர்ந்து குஷ்பு, ரம்பா, மும்தாஜ் என பல ரேஞ்சுக்கு கம்பன் கதை நாயகியை ஒப்பிட்டுப் பாடியும் ஆடியும் பேச ஒட்டுமொத்தக் கிராமமும் வாய் பொளந்து கேட்டது. ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரும் தருமகர்த்தாவாவும் பேய்மழை பேச்சாண்டி என்ற பட்டத்தைக் கொடுத்துப் பெரிய கேடயமும் வழங்கினார்கள். அன்றைய தினம் ஊர்த் திருவிழாவுக்கு வந்திருந்த எழுத்துசாமி, அஜீரணம் காரணமாக  இரண்டு கோலி சோடாவை விழுங்கவேண்டியிருந்தது. 

மாநில விருது, மத்திய (ஒன்றிய?) விருது என வாங்கிக் குவித்துள்ளபோதிலும் அவருடைய மெய்க்கீர்த்திகளை அறிந்த ஊர் ஆசாமிகள் இன்றைக்கும் பத்துபேர்கூட தேறமாட்டார்கள். மாறாகப்  பேய்மழை பேச்சாண்டி என்கிற நமச்சிவாயத்தை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இவரிடமே “நம்ம நமச்சிவாயம் எங்கேயோ போயிட்டாம்பா. அடிக்கடி டிவி பொட்டியிலே வந்து போறான், ஒன்ன அப்படிப் பார்க்க முடிலை” எனக்கூறி அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். 

அந்த நமசிவாயம் வீடு தேடி வரவேண்டிய காரணமும் புரியாமலில்லை. சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு கிராமத்து இளைஞர்கள் இருவர் எழுத்துசாமியைப் பார்க்க வந்திருந்தனர். “இந்த வருட முத்தாலம்மன் திருவிழாவில் பிறந்த மண்ணுக்குப் புகழ்தேடிக் கொடுத்தவர்களைப் பாராட்டப் போகிறோம்” என்றார்கள். எதிர்பார்த்தது போலவே இவருடைய பெயரும், பால்ய சினேகிதன் பெயரும் அழைப்பிதழில் இருந்தன. இரு பெயர்களுக்கும் ஒரே எழுத்து வகையை உபயோகித்திருந்தார்கள், எழுத்தின் பரிமாணமும் ஒன்று போலவே இருந்தன. ‘எழுத்துசாமி’ என்ற பெயரை மேலேயும், ‘பேய்மழை பேச்சாண்டி’பெயரைக் கீழேயுமாக அச்சடித்திருந்தார்கள், இதை எப்படி எடுத்துக்கொள்வதென்கிற குழப்பம் எழுத்துசாமிக்கு இருந்தது. 

சரியாக ஒரு வாரம் கழித்து நமச்சிவாயம் வீடுதேடி வந்தார். விழாவையும் பரிசையும் நினைவூட்டிய சினேகிதன், “தவறாமல் வந்திடு, ஊர்ப் பசங்க ஏதோ விருது கொடுக்கப் போறாங்களாம்” என்றபோது அவர் கண்களில் தெரிந்த எள்ளலும், உதட்டோரம் வெளிப்பட்ட அலட்சியமும் கோபத்தையூட்ட, அதைச் சாமர்த்தியமாகச் சிரித்துச் சமாளித்தார். 

ஊர் உலகத்தையெல்லாம் ஜெயிக்க முடிந்த தம்மால் உள்ளூரில் ஜெயிக்க முடியவில்லை என்பதை நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தேடிவந்த இளைஞர்களில் ஒருவன் கதை கவிதகள்னு வாசிக்கிற பையன். ஆனால் இதுநாள்வரை வாய்திறந்து இவரைப் பாராட்டியவனில்லை என்கிறபோதும் பேச்சாண்டியா, எழுத்துசாமியா என்கிறபோது இவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. 

திருவிழா தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே கிராமத்துக்கு வந்துவிட்டார் . தமது வழக்கமான சாதுர்யத்துடன் ஊர்ப் பெரியவர்களைப் பார்த்தார். வெத்திலைப் பாக்குப் பழமென தட்டில வைத்து அவர்கள் காலில் விழுந்தார். வீடு திரும்பியபோது தகப்பனார், சத்தம் போட்டார் : “நம்ம கால்தூசிக்குப் பொறமாட்டானுவ, அவனுங்க காலில் போய் விழுந்திருக்க, நாளைக்குப் பின்ன நான் தெருவுல தலைகாட்ட முடியுமா?” என ஆதங்கத்துடன் கண்டித்தார். ஆனால், தந்தையிடம் “எனக்கு பேச்சாண்டி நமசிவாயத்தை எப்படியாவது தோற்கடிக்கனும், மான அவனமானத்தைப் பார்த்தா முடியுமா!” எனக் கேட்க நினைத்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஒன்றே ஒன்று பாக்கி, அதையும் நாளைக் காலை நிறைவேற்றிவிட்டால், கிராமத்து விருது தனக்கென்பது நிச்சயமென  உறங்கச் சென்றார். வெகு நேரம், புரண்டு நெளிந்து கடைசியில் எப்போது தூங்கினாரென்றே அவருக்குத் தெரியாது.

கண் விழித்தபோது நன்கு விடிந்துவிட்டது.  அவசரமாகத் தன்னுடைய  ‘பதி ‘எங்கு போகிறார் என்பதை விளங்கிக்கொண்டு உதட்டைச் சுழித்த வாக்கைத்துணை, “ஏங்க, ஒழுங்கா பாத்ரூம் கட்டி வச்சிருக்கிறப்ப எங்க கிளம்பிட்டீங்க, பூச்சி பொட்டு எதுனா கடிச்சா நாளைக்கு எங்க கதி?”  என்ற மனைவியின் பதிபக்தி எச்சரிக்கையைக் காதில் வாங்கவில்லை. கருமமே கண்ணாகத் தமது புண்ணிய ஸ்தலத்தைத் தேடி விரைந்தார், இரண்டு நிமிஷ நேரம் நடந்திருப்பார். இலுப்பை மரப் பிரகாரத்திற்குள் நுழைந்திருப்போம் என்ற நம்பிக்கையுடன்  வேட்டியை உயர்த்திய கையோடு தலையையும் உயர்த்தினார், இலுப்பை மரம் மட்டுமல்ல அங்கிருந்த புளிய மரமும் இல்லை,  வெறிச்சோடிக் கிடந்தது.  

“அதுகள சூளைபோட வெட்டி ஆறு மாசம் ஆவுது” என ஒரு குரல் அசரீரிபோல ஒலிக்கத் திரும்பினார், வேகமாக ஒருவர் நடந்துகொண்டிருந்தார், பார்க்கப் பேச்சாண்டிபோல இருந்தது. 

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.