இழைத்திருந்து எண்ணிக் கொளல்

கேட்டில் நுழைகையில் வழக்கம் போல் செக்யூரிட்டி ஒரு அரைக் கையுயர்த்தலில் வணக்கம் வைத்தார். அதே அரைக்கையுயர்த்தலில் பதில் வணக்கம் சொல்லியபடியே வண்டியை மெல்ல நகர்ந்து கையில் “அம்மா வந்துக்குறாங்க சார்” என்றார். வண்டியை நிறுத்தும் போதே லிப்ட் அருகில் படிக்கட்டில் அம்மா அமர்ந்திருப்பது தெரிந்தது. “உன்னைப் பார்க்க வரவா” என்று அவர் அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்கு “யெஸ்” என்று ஒற்றை வார்த்தையில் அலுவலக மீட்டிங்கின் பரபரப்பின் நடுவே நேற்று பதிலளித்திருந்தது நினைவு வந்தது. எப்போது வருவதாகத் திட்டமென்று கேட்டுக் கொள்ளவில்லை. அடுத்த நாளே வரவை எதிர்பார்க்காததால் சிறு தயக்கம் எட்டிப் பார்த்தது. சுத்தம் செய்யப்படாத வீடு கண்முன் வந்து போனது.

லிப்ட் அருகே செல்லச் செல்ல அம்மாவின் அருகிலிருந்த சூட்கேஸ் கண்ணுக்குப் புலப்பட்டது. “வாங்க. ரொம்ப நேரமாச்சா? மேல போயிருக்கலாமே?” என்றேன்.

“ சண்முகவடிவுன்னு ஒரு அம்மா வந்தாங்க. அவங்க கிட்ட பேசிட்டே அப்படியே நின்னுட்டேன். அவங்க இப்பதான் வெளிய போறாங்க நீ வந்துட்ட. உன் பக்கத்து வீடாமே அவங்க?”என்றார் என்னுடன் லிப்டில் ஏறியபடி. நான் ஏதேனும் சொல்வேன் என்று எதிர்பார்ப்பது போல் முகத்தை ஏறிடவும் “ம்ம்” என்றேன்.

உன்னோட அம்மான்னு சொன்னதும் ரொம்ப ஆச்சரியப்பட்டாங்க. இது வரைக்கும் அம்மா பத்தி பேசினதே இல்லையேன்னு சொன்னாங்க” என்றார். இதற்கு நான் பதில் சொல்ல மாட்டேனென்று தெரிந்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். இரண்டாம் மாடி வந்ததும் அம்மாவின் சூட்கேஸை எடுத்துக் கொள்ளக் குனிந்தவனை நிஜமாகவே பதறி “ அய்யோ நீ ஏம்ப்பா… நானே எடுத்துப்பேனே” என்றவரை ஒரு சின்னக் கையசைப்பிலும் தலையசைப்பிலும் தடுத்து விட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பூட்டைத் திறந்து உள்நுழைந்தேன். அம்மா வாசலில் தயங்கி நின்றார்.

“உள்ள வாங்க” என்றேன் சம்பிரதாயமாய்.

——–

“அம்மா… போன தடவை மாதிரியே இந்த தடவையும் லீவுக்கு சுஜிதா அத்தை வீட்டுக்கு கொண்டு போய் விடும்மா. ரமணி ரவியோடல்லாம் ஜாலியா விளையாடலாம்மா. கூட்டிட்டு போறியா?”

“பாக்கலாம்ப்பா…”

போகவில்லை. ஒரு நாள் இரண்டு நாட்களாகி இரண்டு நாட்கள் மூன்றானது. கிளம்புவதற்கான எந்த முயற்சியிலும் அம்மா ஈடுபடாத தோடு, அப்படி ஒரு விஷயம் இருப்பதையே மறந்து விட்டது போல் நடந்து கொள்வது மேலும் எரிச்சலூட்டியது.

நான்காம் நாள் பொறுக்க முடியாமல் மீண்டும் கேட்டேன். “ அம்மா  மூணு நாள் லீவு முடிஞ்சு போச்சும்மா. எப்பம்மா சுஜிதா அத்தை வீட்டுக்கு போவ போறோம்” என்றேன்.

“இந்த தடவை போகலப்பா. அப்புறம் பாக்கலாம்” என்று என் தலையைத் தடவிச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் அந்த இடத்திலிருந்து நகர்ந்த அம்மாவின் மேல் கோபம் கொப்பளித்தது. பின்னாலேயே போய் “சஜிதா அத்தை எனக்காக ஆசையா வெயிட் பண்ணிருப்பாங்க. போக விடாம பண்ணிட்டீங்கள்ல?” என்று கறுவினேன். பதில் ஏதும் பேசாமல் அம்மா தன் வேலையில் கவனமாயிருந்தார். கையில் கிடைத்த சர்க்கரை டப்பாவை பலம் கொண்ட மட்டும் வீசிக் கீழே எறிந்ததில் அது உடைந்து பிளந்து சமையலறை முழுவதும் சர்க்கரை சிதறியது.

அழுகை முட்ட வாசலில் இறங்கி சட்டையின் கைப்பகுதியில் கண்களைத் துடைத்தவாறே நடக்கத் துவங்கினேன்.

பள்ளி சென்று நண்பர்களைப் பார்த்ததும் அம்மாவினால் உண்டான ஏமாற்றம் கொஞ்சம் மறந்தது. பள்ளியில் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டிருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் யார் யார் எந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளப் போகிறோம் என்று பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

சுப்பு “டேய் நாம ரெண்டு பேரும் டான்ஸ்ல சேர்ந்துக்கலாம்டா” என்றான். உள்ளூர ஆசை இருந்தாலும் “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் போடா”. நீ வேணா சேர்ந்துக்க. நான் வரல” என்றேன் மெலிதான குரலில் உறுதியில்லாமல். “என்னாடா நீ. என்னை விட நீதான் சூப்பரா ஆடுவ. நீயே வர மாட்டேன்னு சொல்லுறியா” என்றான் சுப்பு. அந்த வார்த்தைகள் ஏனோ தேவையாய் இருந்தது. 

“இல்லடா. நீ போயிட்டு வா” என்றேன். “அதெல்லாம் இல்ல. உன் பேரையும் சேர்த்து தான் குடுக்க போறேன். நீ வர” என்று விட்டு எழுந்து போனான்.அவன் நிச்சயம் அதைச் செய்வான் என்று தெரியும். நான் எதிர்பார்த்ததும் அதைத் தான். ஆனால் எதிர்பாராத திருப்பமாய் நடனம் ஆடத் தேர்வு வைத்ததில் சுப்புவால் அவ்வளவு சரியாக ஆட முடியாததால் அவன் பின் வரிசைக்குத் தள்ளப்பட்டு நான் முன் வரிசையில் நிற்க வைக்கப் பட்டேன். இரண்டு நாட்கள் சோகமாய் இருந்து விட்டு சகஜ நிலைக்குத் திரும்பினான் சுப்பு. பள்ளியில் ஆண்டு விழாப் பரபரப்பில் இருந்ததால் வீட்டில் அம்மாவிடம் அவ்வளவாய்ப் பேசாதது பெரிதாய்த் தெரியவில்லை

அதற்குள் நடனத்துக்குத் தேவையான உடைகளுக்கென ரூபாய் கொண்டு வரச் சொல்லி வகுப்பு ஆசிரியை சொல்லி அனுப்பவும் அம்மாவிடமிருந்த கோபத்தை விட வேண்டியதாயிற்று. கேட்டவுடன் எதையும் கேட்காமல் பணம் கொடுத்தார் அம்மா. 

“என்ன டான்ஸ்னு கேக்க மாட்டியாம்மா?”

“என்ன டான்ஸ்பா?” வழக்கமான அதே உணர்வுகளற்ற குரல்.

“பஞ்சாபி டான்ஸ்மா. நான் முன்னாடி வரிசைல ஆடுறேன். அடுத்த வாரம் சனிக்கிழமை தான். அஞ்சு மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுடும். என் டான்ஸ் எப்போன்னு சொல்லல. அதனால அஞ்சு மணிக்கெல்லாம் வந்துரும்மா ஸ்கூலுக்கு”

“வந்துடறேன்பா” தலையைத் தடவிச் சொன்னாள்.

வரவில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆடினேன். மேடைக்குக் கீழிருந்த அவ்வளவு பெரிய கூட்டத்தில் எனக்கென்று நடனம் பார்க்க வந்தவர்கள் யாருமே இல்லை என்ற எண்ணம் ஏற்கனவே அம்மா மீதிருந்த எரிச்சலையும் என் சுயகழிவிரக்கத்தையும் புதிய அளவுகளுக்குக் கொண்டு போனது.

———–

பால் போடுகிறவருக்கு போன் செய்து நாளைக்கு ஒரு பாக்கெட் அதிகமாய்ப் போடச் சொல்லி விட்டு ப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்து இருவருக்குமாய்க் காபி கலந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். அம்மா மொபைலில் ஆழ்ந்திருந்தார். “காபி” என்றவாறு மேஜையில் வைத்ததும் நிமிர்ந்து பார்த்து விட்டு அதை எடுத்துக் கொண்டார். 

அமைதியான இரண்டு மூன்று மிடறுகள் உறிஞ்சல்களுக்குப் பின், “பெட்டி எதுக்குன்னு யோசிச்சிருப்ப” என்றார்.என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் முன் அவரே தொடர்ந்தார். “ அங்கே கொஞ்சம் பிரச்னை. சுந்தர் கூட. வேற தனி வீடு பார்த்திருக்கேன். அது ரெடியாக  கொஞ்சம் டைமாகும். ஆனா அதுவரைக்கும் அங்க இருக்க முடியும்னு தோணல” என்றார்.  இதைச் சொல்லும் போது தலையைக் குனிந்திருந்தார்.‌அவர் முகம் தெரியவில்லை. கையிலிருந்த கோப்பைக் காபியின் மேல் ஆடை படரத் துவங்கியிருந்தது.

அடுத்து வந்த நாட்களில் அம்மா பட்டும் படாமலுமே நடந்து கொண்டார். அம்மா வருவதாய்ச் சொன்னதுமே சிறிது சிறிதாய்க் கட்டமைத்து வைத்திருந்த  என் தனிமையின் உலகம் பற்றி எழுந்திருந்த கவலை, அம்மாவின் கையில் பெட்டியைப் பார்த்ததுமே அதிகரித்தது. என் அன்றாடங்கள் குலைக்கப்பட்டு விடுமோ என்ற சலனம் அதிகமாயிருந்தது. ஆனால் அதற்கெல்லாம் தீர்வைப் போல் “ப்ரேக்பாஸ்ட்?” என்ற என் ஒற்றைச் சொல் கேள்விக்கு “காலைல சாப்பிடற பழக்கம் விட்டுப் போச்சுப்பா” என்றும் “லஞ்ச்?” என்ற மற்றொரு ஒற்றை வார்த்தைக் கேள்விக்கு எனக்கு வெறும் ரசம் போதும்ப்பா. நான் பாத்துக்கிறேன். நீ எப்பவும் என்ன பண்ணுவியோ அப்படியே பண்ணிக்கோ” என்றும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். 

ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. மற்றொரு புறம் ஏமாற்றமோ என்று எண்ண வைக்கும் ஒரு உணர்வு மனதில் ஓடியது.தன் இருப்பு எந்த வகையிலும் என்னைத் தொந்தரவு செய்து விடக் கூடாதென்பதில் மிகவும் சிரமமெடுத்து கவனம் கொள்கிறாரோ என்று தோன்றியது. அம்மாவிடம் என்ன பேசுவதெனத் தெரியாமல் அல்லது விரும்பாமல் தான் பெரும்பாலான பொழுதுகள் கழிந்தன. அதையும் மீறி வார்த்தைகளையும் எண்ணங்களையும் திரட்டிக் கொண்டு போய்ப் பேசினாலும் ஓரிரு வாக்கியங்களில் முடிவுற்று விடுபவையாகவே இருந்தன அவ்வுரையாடல்கள். அது மாதிரியான ஒரு தருணத்தில், அம்மாவிடம் பேசுவதற்கென்று எதையோ யோசித்துக் கொண்டு அவரிருக்குமிடத்துக்குப் போகையில் அலைபேசி அடித்தது. சஜிதா அத்தை தான்.

வழக்கமான நலவிசாரிப்புகள். ஊர்ப் பேச்சுக்கள். தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல் என் அலுவலக விஷயங்கள் பற்றிய விசாரிப்புகள். உண்மையில் அத்தை என் அலுவலகம் பற்றியெல்லாம் விசாரிப்பது அலுவலகத்தில் எனக்கு ஏதேனும் பெண் தொடர்பு உள்ளதா என்பதை அவ்வப்போது உறுதிப் படுத்திக் கொள்ளத் தான் என்பது தெரிந்தே இருந்தது.

“சரி அத்த. அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க உடம்ப பாத்துக்கோங்க. அப்புறமா போன் பண்றேன். மாமாவ கேட்டதா சொல்லுங்க… சரி அத்த. பாக்குறேன். போனை வெக்கிறேன்” என்றவாறு அழைப்பைத் துண்டித்து பால்கனியிலிருந்து உள்ளே நுழைந்தவனை அம்மாவின் பார்வை தொடர்வது போலிருந்தது. அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன். புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள்.

அந்த மௌன இடைவெளியை இட்டு நிரப்ப ஏதேனுமொரு விளக்கம் தேவையென்று பட்டது. அம்மா எதிரிலிருந்த சோஃபாவில் போய் அமர்ந்தவன் இயல்பாய் மொபைல் திரையில் எதையோ பார்த்துக் கொண்டே பேசுவது போல் “சஜிதா அத்தை தான்” என்றேன். 

அம்மா நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டார். விளக்கம் இன்னும் தேவை என்று தோன்றியது. “ரொம்ப வருஷமா டச்ல இல்ல. இப்ப தான் கொஞ்ச நாளா பேசுறாங்க” என்றேன்.

“தெரியும்பா” என்றவர் அமைதியாக என்னைப் பார்த்தார். சட்டென்று “நானா யாரையும் வீட்டுக்கு வர வேணாம்னோ நம்மோட பேச வேணாம்னோ சொல்லலப்பா. “ என்றார்.

“தெரியும்” என்றேன்.

“சொல்லணும்னு தோணிச்சு. அதான்” என்றவர் எழுந்து போய் விட்டார்.

——–

இதோடு பல முறை ஆகி விட்டது இது போல். மைதானத்துக் போய் புட்பாலாவது விளையாடியிருக்கலாம். பள்ளிக்குச் செல்லும் போது பையிலேயே புட்பால் உடையை எடுத்துச் செல்லாமல் மறந்ததற்காக என் மீதே கோபம் வந்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. பூட்டிய வீட்டின் வாசலில் இது மாதிரி அமர்ந்திருப்பது ஒரு மாதிரி அவமானமாகக் கூட இருந்தது. 

“என்னாடா? சாவி இல்லையா? இங்க தனியா உக்காந்திருக்கற? அம்மா எப்ப வராங்க?” என்ற கரகரப்பான குரல் கேட்டு நிமிர்ந்தேன். தெரு முனையில் இருக்கும் பெரிய மீசைக்காரர். அரசாங்கத்தில் ஏதோ ஒரு உயர் பதவியில் இருப்பவர். எப்போதும் அவர் வீட்டு முன் மூன்று நான்கு அரசாங்கக் கார்கள் நிற்கும்.

“இல்ல அங்கிள். அம்மா இப்ப வந்துருவாங்க கொஞ்ச நேரத்துல” என்றேன்.

“ம்ம்” என்றபடி மீசையை நீவி விட்டுக் கொண்டவர், பேண்ட்டை மேலே ஏற்றி விட்டுக் கொண்டு “ இன்னா பையன் நீ. வளர்ற பையன். இப்படி ஒட்டரக் குச்சி மாதிரி இருக்கற? நல்லா சாப்பிட வேணாமா?” என்றபடியே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார். 

அவர் தொட்ட இடம் ஒவ்வொன்றும் அங்குலம் அங்குலமாய் வலித்தது. கத்தி அழக் கூடத் திராணியற்று அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தேன். “யார்கிட்டனா வாயத் தொறந்தா தொலைச்சுடுவேன் ஜாக்கிரத” என்றபடியே மீசையை நீவிக் கொண்டு வெளியேறினார்.

அவர் வெளியேறிய அந்த நொடியில் வீட்டுச் சாவியை வழக்கமான பூந்தொட்டியின் அடியில் வைக்காமல் சென்ற அம்மாவின் மேல் பரிபூரணமான வெறுப்பை உணர்ந்தேன்.அடுத்த இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல்.‌ஏன் எதனால் காய்ச்சல் என்று விசாரிக்க அம்மா தலைப்படவில்லை. அவ்வப்போது வந்து தலையைத் தடவுவதும் “தூங்கு சரியாயிடும்” என்று சொல்வதும் தவிர அம்மா பெரிதாக எதுவும் செய்து விடவில்லை.

வெகு நேரமாய் அம்மாவைக் காணாமல் , மங்கலான கண்களைத் தேய்த்துக் கொண்டு வந்தேன். வீடு முழுக்க நடந்து சுற்றினேன். அம்மா வேலைக்குப் போய் விட்டிருப்பது தெரிந்தது. மீண்டும் ஹாலுக்கு வந்தேன். மேசையில் இருந்த பாத்திரத்தைத் திறந்து பார்த்தேன். ரசம் சாதம் பிசைந்து வைக்கப் பட்டிருந்தது. அதனருகே ஒரு சிறிய தட்டு இன்னொரு சிறிய தட்டால் மூடி வைக்கப் பட்டிருந்தது. திறந்து பார்த்தேன். இரண்டு மாத்திரைகள் இருந்தன. ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன் அந்த மாத்திரைகளை எடுத்துக் கீழே போட்டு பலங்கொண்ட மட்டும் மிதித்ததில் மாத்திரைகள் பொடியாகிச் சிதறின.

அதன் பின்னான என் ஒவ்வொரு செயலும் அம்மாவைக் காயப் படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இருந்தது.வகுப்புகளை அட்டெண்ட் செய்யாமல் மைதானத்தில் சுற்றுவது, பள்ளிக்குத் தாமதமாய்ச் சென்று சுவரேறிக் குதிப்பது, வேண்டுமென்றே ஆசிரியரின் கண்ணில் பட்டு மாட்டிக் கொள்வது போல் பள்ளி வளாகத்துக்குள் புகைப்பது என்று நீண்டன என் செயல்கள்.

பொறுத்துப் பார்த்த பள்ளி நிர்வாகம் என்னுடன் சேர்த்து இன்னும் சில பசங்களின் பெற்றோரையும் வரச் சொன்னது. எதிர்பார்த்தது போலவே எல்லாப் பெற்றோரும் வந்திருந்தனர் அம்மாவைத் தவிர. அம்மாவை அவமானப் படுத்தி விட்டதாய் சந்தோஷப்பட்ட அதே நேரம், இதற்குக் கூட அம்மா வரவில்லை என்பது ஊசி போல் குத்தியது. 

———

நான் வீட்டுக்கு வரும் போது அம்மா இல்லை. குறுஞ்செய்தி ஏதும் அனுப்பியிருக்கிறாரா என்று மொபைலைப் பார்த்தேன். ஒன்றுமில்லை.‌வீட்டைத் திறந்து முகம் கழுவி காபி போட்டுக் கொண்டு அமர்ந்த போது அம்மா வந்தார். 

எதுவும் பேசாமல் சமையலறை சென்று இன்னொரு காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தேன். வாங்கிக் குடித்தவர் “ புதுசா பாத்திருக்கற வீடு இன்னும் ரெண்டு நாள்ல ரெடியாயிடும். புதன் அன்னிக்கு கிளம்பிடுவேன் “ என்றார்.

“என்ன பிரச்னை?” என்றேன். குரல் கனிந்திருந்தது. சூடான காபியினாலா என்று தெரியவில்லை. காபிக் கோப்பையைக் கையில் வைத்து உருட்டியபடி இருந்தார்.

“சொல்லணும்னு தோணிச்சுன்னா சொல்லுங்க” என்றேன். ரொம்பவும் குடைவதைப் போலவும் தெரிந்து விடக் கூடாது, விட்டேற்றியாகவும் தொனிக்கக் கூடாது என்ற கவனம் என் குரலில் இருந்தது.

“நிறையப் பிரச்னை” என்றார் வறண்ட சிரிப்புடன். அவர் சொன்ன தொனி அவர் மேலும் தொடரப் போகிறார் என்பதைக் காட்டியது. அமைதியாகக் காத்திருந்தேன்.

“என்னவோ ஒத்து வரல. நாங்க ரெண்டு பேரும் கல்யாண்ம பண்ணிக்கும் போதே அவருக்கு அம்பதுக்கு மேல. அப்ப என் வயசு அவருக்குப் பெரிய பிரச்னையா தெரில. இப்ப He feels am too old.  ஆனா அப்படி யோசிக்கும் போது த்ன வயசை மறந்திடறாருங்கறது தான் irony. “ மீண்டும் வறண்ட சிரிப்பு.

காப்பியை ஒரு மிடறு விழுங்கிக் கொண்டார். “தப்பான முடிவெடுத்துட்டோமோன்னு ரொம்ப பீல் பண்றார். தனிமையை ரொம்ப விரும்பறார் இப்பல்லாம்.‌இதைப் பத்தி பேசி சரி பண்ணலாம்னு ட்ரை பண்ணும் போதெல்லாம் பிரச்னை பெரிசாகி வாக்குவாதத்துல தான் முடியுது. திரும்பத் திரும்ப இழுத்துக் கட்ட தெம்பில்ல. தனித்தனியா இருக்கிறதே பெட்டர்னு தோணிச்சு. அதான்” என்று முடித்தார்.

கல்லூரி மூன்றாம் வருடம் படிக்கும் போது அப்பாவின் இறப்புச் செய்தி கிடைக்கப் பெற்றதும்  துக்க வீட்டுக்குப் போயே ஆக வேண்டும் என்று அப்பா வழிச் சொந்தங்களிடமிருந்து வரிசையாய் அழைப்புகள். பேசியவர்கள் பாத்ப் பேருக்கு மேல் எனக்கு யாரையும் தெரியவில்லை. இவ்வளவு நாட்களாய் இவர்களெல்லாம் எங்கே காணாமல் போயிருந்தார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது. தட்ட முடியாமல் அந்த வீட்டுக்குச் சென்ற போது, இறந்தவரைத் தவிர யாரையும் தெரியாமல் யாரோடும் ஒட்டாமல் தவிப்போடு ஓரமாய் ஒடுங்கி நின்று கொண்டிருந்தேன்.என்னைப் போலவே எதனுடனும் ஒட்ட முடியாமல் நின்று கொண்டிருந்த மற்றொருவர் என் அம்மா.அப்போது  என்னைப் பார்த்ததும் தவிப்பு நிறைந்த அம்மாவின் கண்களில் என்னைப் பார்த்ததன் நிம்மதி படரத் துவங்கியது. அதே  சாயல் அம்மா தன் பாரத்தை இறக்கி வைத்த இந்த நொடியிலும் அவர் கண்ணில் தென்பட்டது.

பேச்சை சகஜமாக்கும் பொருட்டு “ புது வீடு எங்கே?” என்றேன்.

“இங்கே தான் பக்கத்துல சந்தோஷ்புரம்.” என்றார்.

“பரவால்ல. அடிக்கடி வந்து பாக்கற தூரம் தான்” என்றேன் சட்டென்று.

நிமிர்ந்து பார்த்தவரின் புன்னகை இதமாக இருந்தது.

———–

“யாரைக் கேட்டு முடிவு பண்ணீங்க? நான் போக முடியாது”.

வியர்வை சொட்டச் சொட்டத் தொப்பலாய் நனைந்த சட்டையுடன் ஃபுட்பாலில் தோற்றிருந்த கோபமும் சேர்ந்து கொள்ள, கையிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீரைக் கூடக் குடிக்காமல் அம்மாவைப் பார்த்துக் குரலுயர்த்தினேன்.

“புரிஞ்சுக்கோ. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்‌. “

“என்ன நல்லது? இப்படியே பேசிப் பேசி மூணு வருஷமா எந்த சொந்தக்காரங்களையும் வீட்டுப் பக்கம் வர விடாம பண்ணிட்டீங்க. சரி ப்ரண்ட்ஸோட இருக்கற நேரமாவது நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா இப்ப ஹாஸ்டலுக்கு போங்கறீங்க” என்று குரலுயர்த்திக் கத்தினேன்.

“ சிகரெட் எல்லாம் பிடிக்கறியேப்பா. இவங்கள்லாமா உனக்கு பிரண்ட்ஸ்?” எப்படி இவரால் எல்லா விஷயத்தையு ஒரே மாதிரி உணர்ச்சியற்ற தன்மையுடன் அணுக முடிகிறது?

“ சரி அதுக்கு தான் ஸ்கூலுக்கு வந்து பாக்க சொன்னாங்கள்ல? அப்ப வந்திருக்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு ஹாஸ்டல்னா?” என்றேன்.

பதிலில்லை. 

“உங்களால என்ன முடியுமோ பண்ணிக்கோங்க .  என்னால ஹாஸ்டலுக்கெல்லாம் போக  முடியாது” கத்திய கோபத்தில் நெஞ்செரிச்சல் அதிகமாகியது.அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்திக் கொண்டேன்.

ஒரு பதின்வயதுச் சிறுவனின் கோபத்துக்கு என்ன பெரிதாய் மதிப்பிருந்து விடக் கூடும்? அது தான் என் விஷயத்திலும் நடந்தது.சாப்பிடாமல் பேசாமல் இருந்த உத்திகள் எதுவும் பலனளிக்கவில்லை. வழக்கம் போல் அம்மா அதிர்ந்து எதுவும் பேசாமல், தன் முடிவையும் மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக இருந்து நினைத்ததைச் சாதித்தார். 

“உடம்பை பாத்துக்கோ. நான் முடிஞ்சப்ப போன் பண்றேன். டேக் கேர்” சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்த அம்மாவிடமிருந்து பிரிந்திருக்கப் போகிறோம் என்ற உணர்வு முதன்முதலாய் ஒரு வித நிம்மதியளித்தது.

அதே உணர்வுடன் இடப்பக்கம் திரும்பி அந்த பிரம்மாண்டக் கட்டிடத்தை நோக்கி நடக்கத் துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் புதுச் சூழலுக்குப் பழகிக் கொண்டு புது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் பள்ளி முடிந்து கல்லூரி சேர வேண்டிய நேரம் வந்து விட்டது. நண்பர்கள் எல்லாரும் பணம் கொடுத்தாவது அந்தப் பள்ளியுடன் இணைந்த கல்லூரியிலேயே சேர்ந்து விடுவதென்றும் பிரியாமலிருப்பதென்றும் முடிவெடுத்திருந்தனர்.

என் முடிவும் அதுவாகத் தான் இருந்தது.

 “அந்த காலேஜ்ல ஃபீஸ் கொஞ்சம் அதிகம் போலயே. வேற பாக்கலாமா?” என்றார். 

“நாலு வருஷம் பழகின கேம்பஸ். அங்க சேர்க்கறதுன்னா சேருங்க. இல்லன்னா வேண்டாம்” என்றேன் விட்டேற்றியாக. அம்மாவுக்குச் செலவு வைப்பதை உரிமையாக நினைத்தேன்.“செய்யட்டுமே!”

அந்த “செய்யட்டுமே”வுக்குப் பின் அம்மாவால் நான் இழந்ததாக நினைத்துக் கொண்டிருந்த பல விஷயங்கள் காரணிகளாக இருந்தன. பதிலுக்கு அம்மா “ ஒழுங்கா படிச்சிருந்தா மெரிட்ல சீட் கிடைச்சிருக்கும்ல. இவ்வளோ சுமாரா மார்க் வாங்கிட்டு அடம் வேற புடிக்கிற?” என்று எதிர்க்கேள்வி கேட்டால் சொல்வதற்கு என்னிடம் பதிலிருக்கவில்லை.

அம்மா அந்தப் பணத்தைப் புரட்ட மிகவும் சிரமப்பட்டாரென்பதும் அத்தனை அலைக்கழிப்புகளைத் தந்து நோகடித்த அப்பாவிடம் கூடப் போய் உதவி கேட்டாரென்றும் கேள்விப்பட்டேன். பழகிய நண்பர்கள் வட்டம் பிரியாமல் பார்த்துக் கொள்வது தான் அப்போதைய முதல் குறிக்கோளாய் இருந்தது.

இந்த அட்மிஷன் விஷயத்தினால் அம்மா மேலிருந்த விலக்கம் கொஞ்சமே கொஞ்சம் நீங்கியது போல் தோன்ற ஆரம்பித்தது.‌ இடையில் ஓரிரு முறை நானாகவே போன் செய்து கூடப் பேசத் தலைப்பட்டேன். இரண்டாம் ஆண்டு முடிவில் அது போன்ற சலனங்களுக்கு மொத்தமாக முடிவு வந்தது. 

மற்றொரு ஃபுட்பால் தினத்தில் தான் அதுவும் நிகழ்ந்தது. விளையாடி முடித்து வியர்வை சொட்டச் சொட்ட வந்து மரத்தடி பெஞ்ச்சில் அமர்ந்து மொபைலை எடுத்துப் பார்த்தேன். அம்மாவின் இரண்டு அழைப்புகள் தவறியிருந்தன. சாதாரணமாக ஒரு முறைக்கு மேல் அழைக்க மாட்டார். பிறகு அழைக்கலாமா எனத் தோன்றிய எண்ணத்தை தவிர்த்து அழைத்தேன். 

“எப்படிப்பா இருக்க?”

“நல்லாருக்கேன் நீங்க?”

“இருக்கேன். உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”

“சொல்லுங்க”

எதுவும் சொல்லவில்லை. எதிர்முனை அமைதியாக இருந்தது.

“ஹலோ?” என்றேன்.

அம்மாவின் தொண்டைச் செருமல் லைனில் அவரது இருப்பைக் தெரியப் படுத்தியது. 

“ஆபிஸ்ல சுந்தர்னு ஒருத்தர்.. கலீக்… “

“ம்”

“கொஞ்ச நாளா பழக்கம். “

…..

“ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம்… நீ வரணும்னு..” பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பைத் துண்டித்தேன். அம்மாவுக்கு அந்த வாக்கியத்தைக் கோர்த்துப் பேசுமளவு தைரியம் வந்தது கோபமூட்டியது. அதை நேரில் வந்து கூடச் சொல்லாமல் மொபைலில் சொல்ல நினைத்தது மேலும் கோபமூட்டியது. விளையாட்டுக் கசகசப்பைத் தாண்டிக் காது மடல்கள் சூடாக எரியத் துவங்கின. திரையரங்கின் படமுடிவில் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்த திரை கடைசி அடியில் சடாரென்று கீழிறங்கி மொத்தமும் இருள் சூழ்ந்நததைப் போலிருந்தது. மழை வேறு தூறத் துவங்கியிருந்தது. மீண்டும் மொபைல் அழைத்தது. அம்மா தான். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீளமாக அடித்து ஓய்ந்தது. அதன் பிறகு அழைப்பு வரவில்லை. தனிமையை உணரத் துவங்கினேன்.அத்தனை நாட்களாய் இருந்த தனிமையைக் காட்டிலும் இது முற்றிலும் வேறானதாய் இருந்தது. நானாய் வரவழைத்துக் கொண்ட முந்தைய தனிமையின் பின் ஆயிரமானாலும் தெம்பைத் தந்து கொண்டிருந்த அம்மா எனும் பிம்பம் இந்தத் தனிமையில் இல்லை.

———

ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டிருந்த இரவுணவை இரண்டு பேரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்‌. 

“சாப்பாடு பரவால்லையா? இன்னிக்கு புது இடத்துல ஆர்டர் பண்ணிருந்தேன்” என்றேன். என் சகஜபாவம் எனக்கே ஆச்சரியமாய் இருந்தது.

ஏதோ யோசனையில் மவுனமாய்த் தலையாட்டினார்

“என்னாச்சு?” என்றேன்.

நிமிர்ந்தவர் “நான் இன்னும் கொஞ்சம் நெருக்கமான அம்மாவா இருந்திருக்கலாம்” என்றார்.

அமைதியாகத் தட்டின் உணவை அளைந்து கொண்டிருந்தேன். “நிறைய விஷயத்துல அப்படித் தோணுது.” என்றார்.

“அதெல்லாம் இப்ப எதுக்கு?” என்றேன் பலவீனமான குரலில்.‌நிஜத்தில் அம்மாவின் பாவமன்னிப்பு போன்ற இந்தப் பேச்சை நான் ரசிக்கிறேனோ என்ற எண்ணம் எழாமலில்லை..

“இல்ல சொல்லணும்னு தோணிச்சு.உனக்கு நல்லதுன்னு நினைச்சு பண்ண விஷயங்களை உங்கிட்ட சொல்லிப் புரிய வச்சிட்டு பண்ணிருக்கலாம்” என்றார்.

மெல்லத் தட்டில் கிடந்த ப்ரைட் ரைஸை வாயிலிட்டு மெல்லத் துவங்கியிருந்தேன். கீழே குனிந்திருந்ததால்  அம்மா என்னைப் பார்த்துப் பேசுகிறாரா என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

“உங்கிட்ட ரொம்ப நெருங்கி வர முயற்சி பண்ணா கொஞ்ச நஞ்சம் ஓட்டிட்டு இருக்கறதும் அறுந்துடுமோங்கற பயம் தான் எனக்கு. அப்கோர்ஸ், அதுவும் என்னுடைய தப்பான முடிவு தான். வாழ்க்கைல மத்த எல்லா விஷயத்துலயுமே எப்பவுமே தப்பான முடிவுகள் மட்டுமே எடுத்த மாதிரி. “ என்றவர் சற்று நிறுத்தி “சுந்தர் விஷயம் உட்பட” என்றார்.

“ஆறிடப் போகுது. சாப்பிடுங்க” என்றேன்.

——

“வாசலிலிருந்து ஹாலைக் கடந்து என்னறைக்குப் போகும் போது மற்றொரு அறையில் அம்மா பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அறை வாசலில் போய் நிலையில் சாய்ந்து கொண்டு “கிளம்பியாச்சா அதுக்குள்ள?” என்றேன்.

“ஆமாப்பா. ஏற்கனவே சொன்னேனே. புதன் கிளம்பறேன்னு. இங்கிருந்து பழைய வீட்டுக்குப் போய் என்னோட திங்ஸ் மட்டும் தனியா பேக் பண்ணிட்டு அப்புறம் தான் புது வீட்டுக்குப் போகணும். அந்த வேலை வேற இருக்கு” என்றார் நெற்றி வியர்வையைப் புறங்கையால் துடைத்தபடி புன்னகைத்துக் கொண்டே.

அந்தக் கணத்தில் அம்மாவின் மேல் இனம் புரியாத பரிவொன்று சுரந்தது. கல்லூரி மரத்தடியில் வியர்வைக் கசகசப்பில் மழைத் தூறலினிடையே தொலைந்து போன அல்லது தொலைந்ததாக நான் நினைத்துக் கொண்டிருந்த ஏதோ ஒன்று இந்த நொடியில் நிலைப்படியில் சாய்ந்திருக்கையில் திரும்பக் கிடைத்தது போல் இருந்தது.அது அம்மாவின் அண்மையாலா இல்லை அவரின் தவறான முடிவுகளின் விளைவான தோல்வியும் அதனால் வாய்க்கப் பெறப் போகும் அவளுக்குக் கிடைக்கப் போகும் தனிமையை எண்ணி ஏற்பட்ட மகிழ்ச்சியா என்று கேள்வியெழுப்பிய உள் மனதை அதட்டி அமைதிப்படுத்தினேன்.

“என்ன அவசரம்? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு வீக்எண்ட்ல ஷிப்ட் பண்ணிக்கலாமே? நானும் கூட வருவேனே?” என்றேன். உதட்டில் புன்னகை உறைந்திருந்தது. 

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

2 Replies to “இழைத்திருந்து எண்ணிக் கொளல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.