
நாராயணன் பி.யு.சி. படிப்பதற்கு அவன் வீட்டிலிருந்து நான்கு பஸ் ஸ்டாப் தள்ளியிருந்த மதுரைக் கல்லூரியிலேயே இடம் கிடைத்து விட்டது. அவர்களது காம்பவுண்டில் குடியிருந்த நாராயணனின் பெரியப்பா பிள்ளை வெங்கடேசன்- முதல் வருஷ பி,ஏ. படித்துக் கொண்டிருந்தவன்- பி.யு.சி. படிக்கும் போது நடந்துதான் கல்லூரிக்குப் போய் வந்தான். முதல் வருஷம் பி.ஏ. சேர்ந்ததும் அவன் தகப்பனார் அவனுக்கு ஒரு செகண்ட் ஹேண்ட் ஹெர்குலிஸ் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். ஆனால் நாராயணன் சைக்கிளில் போய் வருகிறேன் என்று சொன்னபோதும் குடும்பத்தில் முதல் முறையாகக் கல்லூரியில் சேர்ந்தவன் என்ற பெருமை தாங்க முடியாமல் அவனுக்கு ராஜமய்யர் பஸ் பாஸ் எடுத்து அனுப்பினார்.
ஆங்கில எழுத்து வரிசையில் பெயர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்களை உட்கார வைக்கும் பழக்கம் அக்கல்லூரியில் இருந்தது. நம்பீசனுக்கு அடுத்து நாராயணன். அதற்கு அடுத்து நீலகண்டன் என்று வரிசை இருந்தது. நாராயணனைப் போல நம்பீசனும் உயரமாக எடுப்பாக இருந்தான். இருவரின் நிறமும் மாநிறத்துக்கு மேலே. கிட்டத்தட்ட சிகப்பு. நம்பீசன் அந்த வருஷம்தான் மதுரைக்கு வந்திருப்பதாகப் பழகிய சில நாள்களில் நாராயணனிடம் சொன்னான். அவன் அப்பா ஸ்டேட் பாங்கில் மானேஜர் என்றும் சென்னையிலிருந்து மாற்றல் பெற்று மதுரைக்கு வந்ததாகவும் தெரிவித்தான். அவர்கள் வீடு டி.வி.எஸ். நகரில் இருந்தது. அவன் தினமும் சைக்கிளில்தான் வந்தான். புத்தம் புதிய ராலே சைக்கிள். பச்சை நிறப் பெயிண்டில் புதுமை மாறாது எப்போதும் பளபளப்பாக இருந்தது. மூடி போட்ட மணி, கறுப்புத் தோலில் கைப்பிடிப் பட்டைகள், பச்சை வண்ணப் பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்ட ஹாண்டில் பார், டயர் கவசங்களுக்கு உள்ளே இருந்த கம்பிகளில் சிவப்பு மஞ்சள் பச்சை வண்ணமடித்து அவை சுழலுகையில் மத்தாப்பூ போலக் கண்ணைக் கவர்ந்த சக்கரங்கள், மெத்தை போலக் குஷன் வைத்த சீட்டு அகலமான பின்புற கேரியர் என்று பார்க்கிறவர்களை அந்த சைக்கிள் அசத்திற்று. வண்டியின் ஒரு பக்கத்தில் கேரியருடன் இணைத்து ஒரு சிறிய இரும்புப் பெட்டி இருந்தது. அதுவும் பச்சை நிறம்தான். அதில்தான் புத்தகங்களையும் டிபன் பாக்ஸையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் வைத்து எடுத்துக் கொண்டு வருவதாக நம்பீசன் சொன்னான்.
அவர்கள் இருவரும் கல்லூரி ஆரம்பிப்பதற்குக் கால் மணி முன்னே வந்து விடுவார்கள். கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் அடர்ந்த மரங்களுக்குக் கீழேயுள்ள சிமெண்ட் படிகளில் ஒன்றில் உட்கார்ந்து கொள்வார்கள். படிப்பு (அடுத்தப்பிலே நாம எல்லோரும் முட்டித்தள்ற இஞ்சினீரிங் காலேஜ் போகணுமா, இல்லே ஆயுசு பூரா படிச்சிருடான்னு சொல்ற மெடிகலுக்குப் போகணுமா?), சினிமா (நேத்திக்கு நாம நல்ல வேளையா யாருக்காக அழுதான் பாத்துட்டோம். தியேட்டர்லே நாப்பத்தி நாலு பேர்தான் இருந்தா. நான் நிஜமாவே எண்ணிப் பாத்தேன், அதை நாளைக்குத் தூக்கிடறாளாம்; நம்ம ஜனங்களுக்கு கத்திக் கத்திப் பேசணும், இல்லே கத்திய சுத்திக் காமிக்கணும். அப்பதான் படம் பாத்த மாதிரி இருக்கும்!) அரசியல் (தமிழ் எங்க உயிர் மூச்சு செவிக்கு, மூணு படி அரிசி வயித்துக்குங்கற ஸ்ட்ராடஜி செமயா ஒர்க்கவுட் ஆச்சில்லே?)
சங்கீதம் சுப்புடு பாலமுரளிகிருஷ்ணாவ நக்சலைட் வித்வாங்கறாரே?
சரிதான், சுப்புடுவே நக்சலைட் விமரிசகர்தானே!) என்று பத்து நிமிஷங்களுக்குள் அவர்களிடையே ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கும். மத்தியானம் இருவரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிட்ட பின் கல்லூரிக்குள் பேசிக் கொண்டே நடந்து செல்வார்கள். அந்தப் பேச்சில் அவர்கள் தத்தம் கடந்த காலம் பற்றி, குடும்ப உறவுகள் பற்றி எதிர்காலத்தினை எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றிப் பேசுவார்கள். இத்தகைய பேச்சுகளில் கிடைக்கும் ஒருவித இளைப்பாறலை இருவருமே விரும்பியதை உணர்ந்தார்கள்.
ஒரு நாள் மாலை கல்லூரியிலிருந்து கிளம்பும் போது நம்பீசனிடம்,
“என் வீட்டுக்கு வாயேன். பக்கத்திலேதான் இருக்கு” என்று சொன்னான் நாராயணன்.
இருவரும் கிளம்பினார்கள். சைக்கிளை எடுக்கும்போது நம்பீசன் சிநேகிதனிடம் “நீ ஓட்டிண்டு வா. நான் பின்னாலே உக்காந்துக்கறேன்” என்றான்.
“புது சைக்கிளையா? நானா?” என்று நாராயணன் ஆச்சரியத்துடன் கேட்டான். வெங்கடேசன் அவனுடைய பழைய சைக்கிளையே நாராயணனுக்குத் தர பல தடவைகள் மறுத்திருக்கிறான்.
“ஒரு தடவை ஏறி உக்காந்து ஓட்டிட்டா அப்புறம் அது பழைய சைக்கிள்தான்.”
அவனுடைய பேச்சு நாராயணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
நாராயணன் ஒட்டிச் செல்ல நம்பீசன் பின்னால் உட்கார்ந்து கொண்டான். “தூரத்திலே சிகப்புத் தொப்பி தெரியறதான்னு மாத்திரம் கண்ணை வச்சுக்கோ” என்றான் நம்பீசன் சிரித்தபடி.
“பயமுறுத்தாதே. நானே புது சைக்கிள்ன்னு பயந்துண்டு ஓட்டறேன்.”
“ஆனா நீ ஓட்றதைப் பாத்தா யாரும் உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுன்னு சொல்லமாட்டா” என்றான் நம்பீசன். அது தன்னை உற்சாகப்படுத்துவதற்குச் சொல்லப்பட்ட வார்த்தை என்று நாராயணன் நினைத்தான். ஆண்டாள்புரம் அருகேதான் போலீஸ் ஸ்டேஷன். ஆனால் மாதத்தின் முதல் வாரம் என்றோ என்னவோ வழியில் போலீஸ் தலைகள் தென்படவில்லை. ஸ்டேஷனுக்கு எதிரே சென்ற மண் சாலையில் நாராயணன் சைக்கிளைச் செலுத்தினான். இன்னும் கொஞ்ச நேரம் போனால் இந்த இடம் பூராவும் ஐந்திலிருந்து எட்டாவது வரை படிக்கும் மாணவ மணிகளின் கூட்டம் அலை பாயும், விளையாட்டு மைதானம் இல்லாத அந்தப் பள்ளியின் குழந்தைகளுக்குப் பள்ளிக்குப் பின்னால் இருந்த தெருதான் விளையாடுமிடம். அவர்கள் வருவதற்குள் அந்த இடத்தைக் கடந்து விட்டோம் என்று நாராயணனுக்கு நிம்மதியாக இருந்தது.
அந்த மண் சாலையின் முடிவில் அவன் வீட்டுக்குச் செல்லுவதற்கு முன்னால் ஒரு புதுக் கட்டிடம் எழுந்து கொண்டிருந்தது. மணல், கற்கள், செங்கல்கள் என்று சாலையை வேலையாட்கள் ரணகளப்படுத்தியிருந்தார்கள் . அங்கேயே இறங்கி சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சென்றிருக்க வேண்டும். யோசிக்காமல் நாராயணன் சைக்கிளை விட்டதில் ஒரு பெரிய கல்லின் மீது முன் சக்கரம் இடித்து நாராயணனை நிலைகுலைய வைத்தது. நாராயணன் வலப்புறம் சரிய நம்பீசனும் கூடவே சாய்ந்து நாராயணன் மேல் விழுந்தான். சைக்கிள் சற்று முன்னே ஓடிச் சென்று கீழே விழுந்தது.
அவர்கள் இருவரும் விழுந்த இடம் சரளைக் கற்களால் நிரம்பியிருந்தது. நம்பீசன் நாராயணன் மேலிருந்து விடுபட்டு எழுந்து நின்றான். நாராயணனும் முனகிக் கொண்டு எழுந்தான். “பாத்து வரமாட்டீங்களா ரெண்டு பேரும்?” என்று சத்தம் போட்டுக் கொண்டு ஒரு ஆள் ஓடி வந்தார். அவர் கையில் சிமெண்ட் ஒட்டியிருந்த கரணை காணப்பட்டது. கொத்தனாராக இருக்கும். அவர் தரையில் விழுந்து கிடந்த சைக்கிளை எடுத்து நிமிர்த்தி வைத்தார். அவர் பார்வை சைக்கிளைச் சுற்றி வந்தது. “புது சைக்கிளா? நல்லா ஒட்டினீங்க போங்க. எல்லார் கண்ணும் பட்டே சைக்கிளுக்கு சிராய்ச்சிருச்சு பாருங்க!” என்று மட்கார்டையும் கேரியர் பெட்டியையும் காண்பித்தார். அவர்கள் எதுவும் பேசாமல் சைக்கிளை வாங்கிக் கொண்டார்கள். நம்பீசன் தள்ளிக் கொண்டு சென்றான். பின் சக்கரத்தில் ஏதோ தடுப்பது போல வண்டியை முன் செல்ல வொட்டாமல் இழுத்தது. நம்பீசன் வண்டியை நிறுத்திப் பார்த்துவிட்டு “பிரேக் வீலோட ஒட்டிண்டிருக்கு” என்றான். முன்னால் ஒருவனும் பின்னால் ஒருவனுமாக சைக்கிளை நகர்த்திக் கொண்டு நாராயணின் வீட்டை அடைந்தார்கள்.
“உள்ளே போறதுக்கு முன்னாலே இதைச் சரி பண்ணிடலாம்” என்று நம்பீசன் கேரியருடன் இணைத்திருந்த பெட்டியைத் திறந்து அதன் உள்ளிருந்த ஒரு நீண்ட பெரிய ஸ்க்ரூ டிரைவரையும் செவ்வக வடிவத்தில் இருந்த ஒரு இரும்புத் துண்டையும் எடுத்தான். பின் சக்கரத்துப் பக்கம் சென்று உட்கார்ந்து பிரேக் பதிந்திருந்த சக்கரப் பகுதியை பூமியோடு ஒட்டி இருக்குமாறு சுழற்றி நிறுத்தினான். பிறகு ஸ்க்ரூ டிரைவரின் நீண்ட நுனியைப் பிரேக்கிற்கும் சக்கரத்திற்கும் நடுவே நுழைத்துத் தரையில் வைத்திருந்த இரும்புத் துண்டத்தின் மீது படுத்தாற் போலிருந்த ஸ்க்ரூ டிரைவரின் மற்றொரு முனையைப் பலம் கொண்ட மட்டும் அழுத்தினான். சில நொடிகளில் பிரேக் சக்கரத்தின் மேலிருந்து விலகி வழக்கம் போல நின்றது. நம்பீசன் நாராயணனிடம் சைக்கிளைச் சற்று மேலே தூக்குமாறு சொல்லி விட்டுச் சக்கரத்தைச் சுற்றினான். இப்போது அது வழக்கம்போல வேகத்துடன் சுழன்றது.
நம்பீசன் வெளியில் எடுத்த பொருட்களைத் திரும்பவும் பெட்டியில் போடும்போது நாராயணன் “சைக்கிளைப் பாழடிச்சுட்டேன்” என்றான். அவன் குரலில் இருந்த துக்கம் நம்பீசனை ஒரு முறை சிநேகிதன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
“என்னாலே நீ திட்டு வாங்கப்போறே” என்றான் நாராயணன்
“என்னது?”
“உங்கப்பா திட்டப் போறார். ஏண்டா இன்னொருத்தன் கிட்டே சைக்கிளைக் கொடுத்தேன்னு.”
“முதல்லே நீ இன்னொருத்தன் இல்லே” என்றான் நம்பீசன். “திட்டு வாங்கறப்போ அதைப் பத்தி நான் யோசிக்கறேன். வா, இப்போ உள்ளே போகலாம்” என்று நம்பீசன் நாராயணனைக் கூட்டிக் கொண்டு வாசலை நோக்கிச் சென்றான்.
அவர்கள் இருவரும் உள்ளே சென்ற போது ஊர்மி அக்கா எதிர்ப்பட்டாள். நம்பீசனைக் கூர்மையாகப் பார்த்தாள். நாராயணன் அவனை அறிமுகப்படுத்தும் முன்பே நம்பீசன் அவளிடம் “நமஸ்தே அக்கா” என்றான்.
“நீ ஒண்ணும் கஷ்டப்பட வேண்டாம் இது யார்னு சொல்றதுக்கு” என்றாள் ஊர்மி நாராயணனிடம். “நம்பீசனா? வா வா. உக்காரு” என்றாள்.
கேட்டுக்கொண்டு உள்ளேயிருந்து வந்த அம்மா”அதான் கார்த்தாலேந்து ராத்திரி வரைக்கும் நம்பீச புராணம் கேட்டுண்டுஇருக்கோமே” என்றாள்.
“நான் இனிமே வாயைத் திறக்கப் போறதில்லே” என்றான் நாராயணன்.
நம்பீசன் வாய் விட்டுச் சிரித்தான்,
“யார் வந்திருக்கா? புதுசா குரல் கேக்கறதே?” என்றாள் அங்கே வந்த பாட்டி.
ஹாலுக்குள் நுழைந்தார்கள். சோஃபாவைக் காட்டி “உக்காந்துக்கோ” என்றாள் அம்மா நம்பீசனிடம்,
அவன் “மூணு பேரும் நில்லுங்கோ. நான் நமஸ்காரம் பண்றேன்” என்றான் நம்பீசன்.
“தீர்க்காயுசா, நன்னாப் படிச்சு மேலே மேலே வரணும்” என்று பாட்டி ஆசிர்வாதம் செய்தாள். அம்மாவும் அக்காவும் நம்பீசனை ஆசீர்வதித்துக் கையை உயர்த்திக் காண்பித்தார்கள்.
அம்மாவும் அக்காவும் உள்ளே சென்றார்கள்.
அம்மாவும் அக்காவும் இரு தட்டுகளில் அவர்களிருவரும் சாப்பிட எடுத்துக்கொண்டு வந்தார்கள். நம்பீசன் தட்டை வாங்கிப் பார்த்து விட்டு “ஆ! அடை அவியலா? எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு உங்களுக்கு எப்பிடித் தெரியும்? இவன்கிட்டே கூட நான் சொன்னதில்லையே இதைப்பத்தி” என்றான்.
“உன் சிநேகிதனும் அடைப் பிரியன்தான்” என்று அக்கா சிரித்தாள்.
அக்கா இரண்டாவது அடையைக் கொண்டுவந்து அவன் தட்டில் போட்ட போது நம்பீசன் அவளிடம் “இன்னொன்னும் போட்டுடுங்கோ. இன்னிக்கி ராத்திரி ஆத்திலே வெறும் மோர் குடிச்சாப் போறும்” என்றான்.
சாப்பிட்டு காப்பியைக் குடித்துவிட்டு நம்பீசன் கிளம்பினான். ‘எல்லோரும் ஒரு முறை அவன் வீட்டுக்கு வரவேண்டும்’என்று அழைத்தான். நாராயணன் அவனுடன் வாசல் வரை சென்று அனுப்பி விட்டு உள்ளே வந்தான்.
“கொழந்தை ரொம்ப ஒட்டிண்டு இருக்கான். வந்ததும் வராததுமா பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணனும்னு அதுக்குத் தோணித்தே! ரொம்ப சமத்து. மத்த காலேஜ் பசங்க மாதிரி தலையைச் சிலுப்பிண்டு நிக்காம…நன்னா வளத்திருக்கா” என்றாள் பாட்டி.
“பந்தா, பொய் வெக்கம்னு எதுவும் காமிக்காம நம்மாத்துக் குழந்தை மாதிரி பழகிண்டு…” என்றாள் அம்மா.
“அம்மா வாத்துப்போட்ட அடையை இறங்கி அடிச்சானேன்னு அம்மாவுக்குப் பெருமை தாங்கலே!” என்று சிரித்தாள் ஊர்மி அக்கா.
“ரொம்பச் சார்மிங்கா ஸ்மார்ட்டா இருக்கானேடா!”
“அவாத்துக்கு நான் போனாலும் அவனோட அக்கா இப்படிதான் சொல்லுவா!” என்றான் நாராயணன்.
“அப்பா! என்ன தலைக்கனம் இவனுக்கு!” என்றாள் ஊர்மி. “அவ என்ன பண்றா? படிக்கறாளா, வேலை பாக்கறாளா, இல்லே என்னை மாதிரி குமுதம் ஆனந்த விகடன் படிச்சிண்டு பொழுதைக் கழிச்சுத் தள்றாளா?”
“அவனுக்கு அக்காவும் கிடையாது. தங்கையும் கிடையாது. ஒரே பிள்ளை.”
“ஓ அதனாலதான் உன்னைப் பத்தி அப்படி ஓங்கி அடிச்சு விட்டியா?” என்று சிரித்தாள் அம்மா.
“எதுக்கு ஆஸ்திக்கு மட்டும்னு நிறுத்திண்டுட்டா? ஆசைக்கொண்ணும் பெத்துண்டு இருக்கலாமே?” என்றாள் பாட்டி.
“பாட்டி நீ அறுபது வருஷத்துக்கு மின்னாலே இருந்த மாதிரி இப்போ இருக்கணும்னு நெனைக்கிறியே” என்று ஊர்மி சொன்னாள் .
“ஏன் அப்ப நாங்க இருந்ததுக்கு என்ன குறைச்சல்?” என்று பாட்டி கேட்டாள்.
“கோவிச்சுக்காதே பாட்டி”
“நான் கோவிச்சுக்கலே. இப்ப மொதல் கொழந்தை பிறக்கறதுக்கு மின்னேயே ஒரு ஆறு மாசம், கொழந்தை பொறந்தப்பறம் ஒரு ஆறு மாசம் ரெஸ்டுங்கறா. ஈர்க்குச்சியா, இல்லேன்னா பூசணி மாதிரி, உடம்பை ஆக்கிண்டுடறா. நானும் பத்து கொழந்தைகளைப் பெத்தேன். தங்கினது என்னமோ மூணுதான். பிரசவம் ஆறதுக்கு மொத நா வரை இட்லிக்கு கல்லோரல்லே மாவு அறைச்சேன். ஒடம்பு ஈடு கொடுத்தது. நாலு சிறுசுகள் ஆத்திலே ஓடியாடிண்டு இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கு?”
பாட்டியை மறுத்துப் பேச யாருக்கும் வாய் வரவில்லை. அவளே மறுபடியும் பேசினாள்:
“இப்பதானே பத்திருபது வருஷமா எல்லாத்தையும் கட்டுப்பாடா வச்சுக்கணும்னு கிளம்பிருக்கா. வீட்டைச் சுருக்கினேள். அக்கம் பக்கம் சுருங்கித்து. ஊர் சுருங்கித்து. தேசம் சுருங்கித்து. லோகம் சுருங்கித்து. கடைசிலே ஜனங்கள் மனசும் சுருங்கிப் போயிடுத்து. யோசிச்சுப் பாத்தா நாம மனுஷா பண்றோம்னு நினைக்கிறதெல்லாம் பகவான்னா பண்றார். விரிச்சுக் காட்டின காலம் ஒரு வாட்டின்னா குறுக்கியும் காமிக்கிறேன் பார்த்துக்கோங்கோங்கறார்.”
அக்கா பேச்சை மாற்றினாள். “ஒரு நா நாம எல்லாரும் நம்பீசனாத்துக்குப் போயிட்டு வரணும் நாராயணா.”
ஊர்மி அக்கா சொன்னபடி குடும்பத்தோடு நாராயணன் போவதற்கு முன்னாலேயே ஒரு நாள் அவன் நம்பீசன் வீட்டுக்குப் போக வேண்டியதாயிற்று. அவனும் நம்பீசனும் பழங்காநத்தத்தில் இருந்த ஜெகதா தியேட்டருக்கு ஒரு சனிக்கிழமை மாட்னி ஷோவுக்குப் போனார்கள். படம் படு கண்றாவியாக இருக்கிறதென்று இடைவேளையின் போதே தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டார்கள். அப்போதுதான் மீதப் பொழுதைக் கழிப்பதற்குத் தன் வீடு அருகாமையில் இருந்ததால் அங்கேயே போய்விடலாம் என்று நம்பீசன் சொன்னான்.
அவர்கள் போனபோது நம்பீசனின் பெற்றோர் இருவரும் இருந்தார்கள்.
உள்ளே வந்த நாராயணனைப் பார்த்ததும் நம்பீசனின் அப்பா” வா நாராயணா! வா” என்று கை குலுக்கினார்.
நாராயணன் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான்.
“எப்படித் தெரியும்னு பாக்கிறியா? நம்பிதான் சொல்லியிருக்கானே. காலம்பற நீ நெத்திலே இட்டுண்டு வர்ற விபூதி சாயங்காலம் காலேஜ் முடிஞ்சு திரும்பிப் போற வரைக்கும் அப்படியே அழியாம இருக்கும்னு!”
நம்பீசனின் அம்மா குறுக்கிட்டு “அதுவும் இந்தக் காலத்துப் பசங்க நெத்திலே இட்டுக்கறதை பூஜா ரூம்லேந்து வெளியே வரச்சேயே அழிச்சு விட்டுண்டுன்னா வரதுகள். எதுக்கு மத்தவாளைஇழுக்கணும்?
நம்பாத்து பிரகஸ்பதியே இருந்ததே!” என்று நம்பீசனின் அம்மா சிரித்தாள்.
“அம்மா!” என்றான் நம்பீசன்.
“இவன் காலேஜிலே சேர்றதுக்கு மின்னாலே அப்படித்தான். சேந்து ஒரு வாரம்தான் ஆச்சு. ஒரு நா கிளம்பறச்சே பாத்தா நெத்திலே பளிச்சுன்னு சந்தனக் கீத்து. என்னடா இது வழக்கத்துக்கு இல்லாத வழக்கமா இருக்கேன்னு கேட்டேன். காலேஜுக்கு என் பிரெண்டு நாராயணன் இப்படித்தான் வராங்கிறான். ஓகோ அந்த சிநேகிதன் உள்ளங்கையிலே வைகுண்டத்தைக் காமிக்கிற கெட்டிக்காரன் போலன்னு நினைச்சிண்டேன். நல்லதாச்சு போ. குருவாயூரப்பன்தான் இப்பிடி நாராயணனா வந்து நம்பீசனுக்குத் தீட்சைகொடுத்துட்டான்னு நான் இவகிட்டே சொன்னேன்” என்று நம்பீசனின் அப்பாவும்சிரித்தார்.
நாராயணன் புன்முறுவலுடன் நண்பனை நோக்கினான்.
நம்பீசன் அவர்களைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தான்.
“பேசிண்டு இருங்கோ. நான் சாப்பிட எடுத்துண்டு வரேன்” என்று நம்பீசனின் அம்மா உள்ளே போனாள்.
“மேலே என்ன படிக்கப் போறதா இருக்கே?” என்று நம்பீசனின் அப்பா நாராயணனைக் கேட்டார்.
நாராயணன் நம்பீசனைப் பார்த்தான். பிறகு அவன் அப்பாவிடம் “எது பண்றதா இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் பண்றதா இருக்கோம்” என்றான்.
“என்னது?”
“இன்ஜினீரிங்கோ, மெடிக்கலோ, சயன்ஸோ காமர்ஸோ எது கிடைச்சாலும் எங்க ரெண்டு பேருக்கும் எங்கே ஒரே கிளாஸ்லே அட்மிஷன் கிடைக்கறதோ அங்கேதான் போய்ச் சேர்றதா இருக்கோம்” என்றான் நம்பீசன்.
அவர் திகைப்புடன் அவர்களைப் பார்த்தார்.
உள்ளேயிருந்து மூன்று தட்டுக்களில் கேசரியும், தூள் பஜ்ஜியும் கொண்டு வந்த நம்பீசனின் அம்மா “ஒரே காலேஜிலேன்னு சொல்லு. ஆனா ஒரே கிளாசிலேதான் கிடைக்கும்னு எப்படிச் சொல்லுவே?” என்றாள்.
“அட்மிஷன் ஆனப்பறம் உள்ளே போய் முட்டி மோதி வாங்கிடுவோம்” என்றான் நம்பீசன்.
“இது என்ன ஜல்லிக்கட்டா?” என்று நம்பீசனின் அப்பா சிரித்தார். “எப்படியோ நீங்க ரெண்டு பேரும் ஆசைப்படறதைக் குருவாயூரப்பன் நடத்திக் கொடுக்கட்டும்.”
நாராயணன் தூள்பஜ்ஜியை வாயில் போட்டுச் சுவைத்தான். “டேஸ்ட் காலேஜ் ஹவுஸையே வம்புக்கு இழுக்கறதே!” என்றான்.
எல்லோரும் சிரித்தார்கள்.
நாராயணன் கிளம்பிய போது பஸ் ஸ்டாப்பில் அவனைக் கொண்டுவிட நம்பீசன் கூடச் சென்றான்.
“நன்னா பதவிசா அமெரிக்கையா இருக்கான் இந்தப் பிள்ளை” என்றாள் நம்பீசனின் அம்மா. “எப்படியோ நம்பிக்கு ஒரு கெட்டிக்கார சிநேகிதம் கிடைச்சது.”
“என்னமா ஒட்டிண்டு இருக்கான்கள்! மேலே படிக்கறச்சேயும் சேந்துதான் இருப்போம்னு இப்பவே முடிவு பண்ணிட்டான்களே. ஏதோ லவர்ஸ் மாதிரின்னா…” என்றார் நம்பீசனின் அப்பா.
அவரது கடைசி வார்த்தைகளைக் கேட்டு நம்பீசனின் அம்மா சிரித்தாள்.

நாராயணன் காவேரியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். மாலையும் இரவும் மயங்கி முயங்கும் பொழுதில் கீச் கீச்சென்று சத்தமிட்டபடி பறவைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காவேரியோடு பேச வந்ததைப் போல எங்கிருந்தோ காற்று வந்து வீசிற்று. வானில் நட்சத்திரங்கள் போர்க்களமெனச் சிதறிக் கிடந்தன. எங்கேயோ பிறந்து இங்கே வந்து செழிப்பையும் செல்வத்தையும் தந்து விட்டு மறுபடியும் வேறு எங்கோ சென்று செல்வத்தையும் செழிப்பையும் கொட்டிக் கொடுக்க அலையும் காவேரியைப் பார்க்கும் போது மனதில் இனம் தெரியாத பரவசமும் நெருக்கமும் ஏற்படுவதை உணர்ந்தான். நம்பீசன் வந்திருந்தால் அவர்கள் இருவரும் காவேரி குடமுருட்டியாய்ப் பாய்ந்து அலையும் திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், நல்லூர் என்று திருவையாற்றிலிருந்து அங்குமிங்குமாக அலைந்து திரிந்திருக்கலாம். நம்பீசனுக்குப் பாலக்காடுதான் சொந்த ஊர். அவன் கல்பாத்திபுழா ஆறு பற்றி ஒரு மயக்கத்துடன் பலமுறை நாராயணனுடன் பேசியிருக்கிறான். அவனது வருணனையில் தென்னையும் கமுகும் பனையும் வாழையும், நெல் வயல்களும் சூழ்ந்த இயற்கையின் கம்பீரத்தை நாராயணன் ஆர்வத்துடன் கேட்டிருக்கிறான். .
திடீரென்றுதான் திருவையாறுக்கு அவர்கள் குடும்பத்தோடு கிளம்பி வந்தார்கள். செப்டம்பரில் கல்லூரித் தேர்வுகள் நடந்தன. பரீட்சை நடந்து முடிந்து ஒரு வாரம் லீவு விட்டார்கள். நாராயணனின் அத்தை பையனுக்குத் திருவையாறில் அப்போது கல்யாணம் நடக்க இருந்தது. முதலில் அம்மாவும் அப்பாவும் கல்யாணத்துக்குப் போவதாக இருந்தது. திடீரென்று அப்பாவுக்கு அவரது ஆபீஸ் கார் கிடைத்ததால் தள்ளிப் போய்விட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளையும் முடித்துவிடலாம் என்று அம்மா சொன்னாள் .அவர்கள் குடும்பத்தோடு நாராயணனுக்கு லீவு விட்ட மறுநாள் காலையில் தஞ்சாவூருக்குக் கிளம்பினார்கள். அவன் ஒரு வாரம் ஊரில் இருக்க மாட்டான் என்றதும் நம்பீசன் தனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்றான். அவனையும் தன்னுடன் வருமாறு நாராயணன் அழைத்தான். ஆனால் லீவின் போதுதான் அப்பா அம்மாவுடன் அதிக நேரம் இருக்க முடியும் என்பதால் அவன் பெற்றோர்கள் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்பீசன் சொன்னான். ஊருக்குப் போனபின் பேசுகிறேன் என்று நம்பீசனின் வீட்டு டெலிபோன் நம்பரை நாராயணன் வாங்கிக் கொண்டான்.
மாப்பிள்ளை அழைப்பு, கல்யாணம், கட்டுசாதக்கூடை என்று மூன்று நாள் விசேஷமாகக் கல்யாணம் நடந்தது. நாலாம் நாள் வீரசிங்கம் பேட்டை மாரியம்மன் கோயிலுக்குப் போய் அம்மனுக்குப் புடவை சார்த்தி அர்ச்சனைகள் செய்து குலதெய்வப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வந்தார்கள். இவ்வளவு தூரம் வந்ததால் ஊர்மிக்குச் சீக்கிரம் கல்யாணமாகப் பிரார்த்தித்துக் கொண்டு வரலாம் என்று அத்தையும் அத்திம்பேரும் அவர்களைத் திருமணஞ்சேரிக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அதில் முக்கால் நாள் பொழுது போய்விட்டது.
நாளை ஊருக்குக் கிளம்ப வேண்டும். ‘காலையில் எட்டு எட்டரைக்குக் கிளம்பினால் மத்தியானம் ஊருக்குப் போய் விடலாம். மிச்சமிருக்கும் பொழுதில் ஒய்வு எடுத்து விட்டு அதற்கடுத்த நாள் ஆபீசில் போய் விழ சரியாயிருக்கும்’ என்றுராஜமய்யர் சொல்லியிருந்தார். அப்படிச் சென்றால் நாளை மாலை நம்பீசனைப் பார்க்க அவன் உத்தேசித்திருந்தான். தான் வருவதையும் தங்கள் சந்திப்பையும் பற்றிச் சொல்லி விடலாம் என்றுதான் நாராயணன் அன்று மத்தியானம் தபால் ஆபீசுக்குப் போய் நம்பீசனுக்கு டிரங்க் கால் போட்டான். அரை மணி ஒரு மணி என்று காத்திருந்த நேரம் போய்க்கொண்டே இருந்தது. அவனைப் போலவே கல்கத்தாவுக்குப் போன் போட்டவர் “மதுரைக்குப் போட்டிருக்கேளா? நீங்க இங்கேர்ந்து மதுரைக்குப் போயிட்டுத் திரும்பி வந்துடலாம் இந்தக் கால் கிடைக்கிறதுக்குள்ளே!”என்று சிரித்தார். நாராயணனுக்குக் கோபம் வரவில்லை. சிரிப்பாகத்தான் இருந்தது. புதிய தொலைபேசி இணைப்புக்கு ஒருவர் மூன்று நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நாட்டில் இது ஆச்சரியத்தைத் தர வேண்டியதில்லை. ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு தபாலாபீஸ் பெண்மணி சொன்னாள்: அவன் கொடுத்த நம்பரில் யாரும் டெலிபோனை எடுக்கவில்லை. மணி போய்க் கொண்டே இருந்தது என்று.
ஆனால் மறுநாள் பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. காரில் பிரேக் சரியாக விழவில்லை என்று திடீர்ப் பிரச்சனை ஏற்பட்டு நாராயணனின் அத்திம்பேர் காரைத் தஞ்சாவூரில் அவருக்குத் தெரிந்த கராஜுக்கு எடுத்துச்சென்று சரி செய்துவிட்டு மத்தியானம் திரும்பினார். அதற்குப் பின் சாப்பாட்டுக் கடை முடிந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று படுத்தவர்கள் எழுந்திருக்கும் போது நாலு மணியாகி விட்டது. இருட்டுவதற்கு முன் பாதி தூரத்தைக் கடந்து விடலாம் என்று அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்பினார்கள். அப்படியும் ஊர் வந்து சேரும் போது ஒன்பது மணியாகி விட்டது. மறுநாள் கல்லூரியில் நம்பீசனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நாராயணன் இருந்து விட்டான்.
அன்று கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு நாராயணன் சென்ற போது நம்பீசன் வந்திருக்கவில்லை. வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னால் கல்லூரியில் மணி அடித்த நேரத்தில்கூட நம்பீசன் வரவில்லை. ஒரு வேளை வரத் தாமதமாகி விட்டது என்று நேரே வகுப்புக்கே வந்து விட்டானோ என்று அங்கு வந்து நாராயணன் தேடிய போதும் நம்பீசன் காணப்படவில்லை.
பதினோரு மணி சுமாருக்கு அவர்கள் வகுப்பில் ஆங்கிலப் பாட விரிவுரையாளர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது “எக்ஸ்க்யூஸ் மீ” என்றபடி உதவி பிரின்சிபால் வகுப்புக்குள் வந்தார். எழுந்திருக்க முயன்ற மாணவர்களைக் கையசைப்பால் உட்காரச் சொன்னார்.
“உங்களுக்கு ஒரு துக்கமான செய்தியை நான் கொண்டு வர வேண்டியதாகி விட்டது. நம்ம கல்லூரியில் இந்த வகுப்பில் படித்த மாணவன் நம்பீசன் நேற்றிரவு காலமாகி விட்டான்” என்று அவர் சொன்ன போது நாராயணன் “ஐயோ!” என்று அலறி விட்டான். அவன் பக்கத்திலிருந்த நீலகண்டன் அவனைப் பிடித்துக்கொண்டான்.
வகுப்பு உள்வாங்கிக் கொண்ட விஷயத்தினால் மாணவர்களிடையே சலசலப்பும் பேச்சொலியும் எழுந்தன.
அன்று அவர்களுக்கு வகுப்புகள் கிடையாதென்றும் நம்பீசனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்த மாணவர்கள் நம்பீசனின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அவனது வீட்டுக்குச் செல்லுமாறும் உதவி பிரின்சிபால் சொன்னார். நாராயணன் நிலைகுலைந்து அவனுக்கு முன்பிருந்த மேஜைமீது முகத்தைத் தாழ்த்தித் தலையைக் குனிந்து கொண்டான். ‘கிரேட் ஷாக், கிரேட் ஷாக்’ என்று மாணவர்கள் வாய்விட்டுச் சொல்லும் சத்தம் மெதுவாக அடங்கிக் கொண்டிருந்தது,
நீலகண்டன் “நாராயணா, எல்லாரும் நம்பீசன் வீட்டுக்குப் போகக் கிளம்பிட்டு இருக்காங்க. நீயும் எழுந்திரு” என்று சொல்லி அவன் தோளைப் பிடித்துக் கொண்டான். சில வினாடிகளுக்குப் பிறகு நாராயணன் எழுந்து தடுமாறி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். அவர்கள் இருவரும் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பைக் ஸ்கூட்டர் என்று வண்டிகளில் வந்திருந்தவர்கள் அவர்களின் பின்னால் சக மாணவரை ஏற்றிக் கொண்டார்கள். காலேஜ் பஸ்ஸில் மீதமுள்ள மாணவர்கள் ஏறிக் கொண்டார்கள். நாராயணனும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டான். பஸ் ஓடும்போது தென்பட்ட காட்சிகளைக் கண்கள் காணவில்லை. ஒருவருக்கொருவர் முணுமுணுப்புடன் பஸ்ஸினுள் இருந்த மாணவர்கள் பேசிக் கொண்ட சத்தத்தை அவன் காதுகள் நிராகரித்து விட்டன. மனமும் உடலுமே துயரமாக மாறி விட்டவன் போலிருந்தான்.
அவர்கள் வந்த பஸ் நம்பீசனின் வீட்டின்முன் வந்து நின்றதும் எல்லோரும் இறங்கினார்கள். நம்பீசன் வீட்டு வாசலில் கார்களும் மற்ற வண்டிகளும் நின்றிருந்தன. உள்ளேயும் வெளியேயும் மனிதர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். அங்கு நின்றிருந்த ஒருவரிடம் அப்போதுதான் வந்த ஒருவர் “என்ன ஆச்சு?” என்று கேட்டதை நாராயணன் பார்த்தான்.
அவர் “இன்டெர்னல் ஹெமரேஜாம்” என்றார். “நாலு நாள் முன்னாலே தலையை வலிக்கிறதுன்னாம், அடிக்கடி இப்படி வந்திருக்கு போல. அன்னிக்கி ரொம்ப வலிக்கிறதுன்னதும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போயிருக்கா. மூணு நாள் வச்சுப் பாத்தும் வலி அடங்கலே. நேத்தி ராத்திரி இப்பிடி ஆயிடுத்து. வெரி ப்ரெய்ட் பாய். சின்ன வயசு.ரொம்ப வயத்தெரிச்சலா இருக்கு” என்றார்.
எல்லா மாணவர்களும் வாசலில் வந்து நின்றபின் அவர்கள் வரிசையாக நம்பீசனின் வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஆழ்ந்த மௌனம் பேயைப் போல் படர்ந்திருந்தது. ஹாலின் நடுவில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் உடலைக் கிடத்தியிருந்தார்கள். தலைப்புறம் இருந்த ஒரு நாற்காலியில் நம்பீசனின் அம்மா தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் அருகே நம்பீசனின் அப்பா சோகத்துடன் நிற்பதை நாராயணன் பார்த்தான். அவர்கள் இருவரையும் பார்த்ததும் அவனுக்கு வயிற்றில் கத்தி சொருகுவதுபோல இருந்தது.
வரிசை மெதுவாக நகர்ந்து சென்றது. நாராயணன் நம்பீசனின் உயிரற்ற முகத்துக்கு அருகில் வந்ததும் அந்த முகத்தைப் பார்த்தான். எப்போதும் ஒளிரும் கண்களுடனும், நாசிக்குக் கீழே அடிக்கடி அவன் கை வருடிக் கொடுக்கும் அழகான மீசையுடனும், சிரிக்கும் உதடுடனும், உறுதியைத் தெரிவிக்கும் தாடையுடனும் உயிரோட்டத்துடன் பார்த்த முகம் சிலையைப் போலாகிக் காணப்பட்டது. இப்போதும் எந்தவிதமான மலர்ச்சியின்மையையும் காண்பிக்காத அந்த முகத்தைப் பார்த்ததும் நாராயணனுக்கு அடி வயிறு பற்றி எரிவது போலிருந்தது. பீறிட்டு வரும் ஆங்காரமான கையாலாகாத கேவலை வாய்க்குள் கர்சீப்பைத் திணித்துத் தடுக்க முயன்றாலும் அது பெரும் சப்தமாக வெளியே வந்து விழுந்தது. அதைக் கேட்டுத் திடுக்கிட்ட நம்பீசனின் அம்மா தலையைத் தூக்கிப் பார்த்த போது அவள் பார்வையில் நாராயணன் விழுந்தான்.
அவள் எழுந்து நின்று அவனைத் தலையோடு கால் வரைபார்த்தாள்.
“ஐயோ அம்மா!” என்று பெருங்குரலில் கதறியபடி அருகில் இருந்த கதவு வழியாக உள்ளே ஓடினாள். நம்பீசனின் அப்பாவும் அவள் பின்னாலேயே ஓடினார். நீலகண்டன் நாராயணனை மெதுவாகத் தள்ளிக்கொண்டே முன்னால் சென்று கொண்டிருந்தவர்களுடன் நடத்திச் சென்றான்.
கல்லூரியில் மாணவர்களைத் திரும்பிக் கொண்டுவிட வந்த பஸ் கல்லூரிக்கு எதிரே இருந்த பஸ் ஸ்டாப் அருகே வந்த போது நாராயணன் இறங்கிக் கொண்டான். அவன் செல்ல வேண்டிய பஸ் வந்ததும் ஏறிச் சென்று வீட்டை அடைந்தான். அப்போது மணி இரண்டு இருக்கும்
ஊர்மி அக்காதான் அவனை முதலில் பார்த்தாள் .
“என்னடா இன்னிக்கிக் கிளாஸைக் கட்டடிச்சிட்டியா? எங்கே உன் பிரெண்டு?” என்றவள் அவன் முகத்தைப் பார்த்ததும் “நாணா! என்னடா ஆச்சு? உன் மொகம் ஏண்டா இப்பிடி இருக்கு? உடம்பு சரியில்லையா?” என்று பதறியபடி கன்னத்திலும் கழுத்திலும் கை வைத்துப் பார்த்தாள்.
நாராயணன் அவள் தோள்மீது சாய்ந்து கொண்டு விக்கி விக்கி அழ ஆரம்பித்தான். அழுகையை அடக்க முயன்று தோற்று கேவியபடி அழுதான்.
ஊர்மி “அம்மா, இங்கே வாயேன். நாணாவுக்கு என்னமோ ஆயிடுத்து” என்று உள்ளே பார்த்துக் கத்தினாள்.
அவளுடைய சத்தத்தைக் கேட்டு அம்மா ஓடி வந்தாள்.
அவனுடைய அழுகையைப் பார்த்து “நாணா, என்னடா ஆச்சு? எதுக்குடா இப்பிடி அழறே! சொல்லுடா. ஐயோ எனக்கு வயத்தை என்னமோ பண்ணறதே” என்று அருகே வந்து அவன் முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள், “ஐயோ, என்னது இது மொகம் இப்பிடிப் பேயறஞ்ச மாதிரி இருக்கு? கண்ணெல்லாம் செவந்து…என்னடா ஆச்சு?” என்று அவனை உலுக்கினாள்.
நாராயணனுக்குத் தன்னை அடக்கிக் கொள்ள சில நிமிஷங்கள் ஆயிற்று. அவர்கள் ஹாலுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார்கள். ஐந்தாறு நிமிஷங்கள் யாரும் பேசவில்லை. நாராயணன் திக்கித் திக்கி விஷயத்தைச் சொன்னதும் அவர்கள் மிரண்டு விட்டார்கள். நாராயணன் வீட்டுக்குள் வந்த போது கண்ட அவன் முகத்தின் அதிர்வோடு இந்தச் செய்தியின் உக்கிரம் சேர்ந்து அவர்களின் பேச்சை அழித்தொழித்தது போலக் காணப்பட்டார்கள்.
அம்மாதான் மௌனத்தைக் கலைத்தாள்.
“நம்பியோட அப்பா அம்மாவைப் பாத்தியா?”
“அவா ரெண்டு பேரும் ஹால்லே நம்பியோட உடம்புக்குப் பக்கத்திலே இருந்தா. நம்பியோட அம்மா தலையைக் குனிஞ்சிண்டு ஒரு சேர்லே உக்காந்திருந்தா. அப்பா அவ பக்கத்திலே நின்னுண்டு இருந்தார். யாரும் அவாகிட்டே போய்ப் பேசலே. அவாளும் யார்கிட்டயும் பேசத் தோணாதவா மாதிரி அங்கே இருந்தா” என்றான் நாராயணன்.
“அவா உன்னைப் பாத்தாளோ?” என்று அம்மா கேட்டாள்.
“அவ அம்மா என்னைப் பாத்தா. உடனே கத்திண்டே உள்ளே ஓடிட்டா” என்றான் நாராயணன்.
“என்னது?”
“ஆமா. நம்பியோட அம்மா என்னைத் தலைலேந்து கால்வரைக்கும் பாத்தா. உடனே விருட்னு உக்கார்ந்த இடத்திலேந்து எழுந்து ‘ஐயோ அம்மா!’ ன்னு பெரிசா அழுதுண்டே ஆத்துக்குள்ளே ஓடினா” என்றான் நாராயணன்.
அறையில் ஆழ்ந்த மௌனம் நிலவிற்று. நாராயணனின் அம்மா சற்றுக் கழித்து அவனிடம் “நீ இன்னிக்கி அங்கே போயிருக்கக் கூடாது” என்றாள்
ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:
.
உள்ளம் விக்கித்துத் திகைத்துப் பேச்சற்றுப் போனது. அற்புதமான எழுத்து.
ஸிந்துஜா இழப்பின் ரணத்தை உணர்த்தி நெகிழ வைத்துவிட்டார்.