விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று

This entry is part 28 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இதுவரை, நாம் கடந்த இரு பாகங்களில், பலவிதமான விஞ்ஞானத் திரித்தல்களை விவரமாகப் பல்வேறு தலைப்புகளில் அலசினோம். குறிப்பாக, சக்திக்காக நடக்கும் திரித்தல்கள் மற்றும் மனித குல உடல்நலனுக்காக நடக்கும் அறப் போராட்டங்களைப் பற்றிப் பல்வேறு நிகழ்வுகளை அலசினோம். விஞ்ஞானக் கருத்துகள் ஒருபுறம், வியாபார லாபம் மற்றொருபுறம் என்ற அறப்போர் நடந்தவண்ணம் இருப்பதைப் பல்வேறு உதாரணங்களில் பார்த்தோம். ஆனால், மிக முக்கியமான விஷயம் ஒன்றைத் தெளிவுபடுத்துதல், இங்கு மிகவும் அவசியமாகிறது. லாப நோக்குடைய நிறுவனங்களும் விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கின்றன. லாப நோக்கற்ற மற்றோர் அணியும் அதே முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது. இதில் உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டுகொள்வது?

அறிமுகப் பகுதியில் சொன்னதுபோல, விஞ்ஞானம் என்பது ஒரு negotiated truth. இந்த உண்மையைக் காணும் பாதைகளில் பல்வேறு நோக்குகள், கருத்து வேறுபாடுகள் விஞ்ஞானிகளுக்கு இடையில் உருவாவது மிகவும் சகஜம். இப்படி இருக்கையில், லாப நோக்குடைய விஞ்ஞானத்தில் என்ன தவறு இருக்கப்போகிறது? நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கைகளை ஐன்ஸ்டீன் முழுவதும் சரியில்லை என்று நிரூபிக்கவில்லையா? அல்லது, உலகம் தட்டையானது என்ற கருத்தை எதிர்த்த கலீலியோவைத் தேவாலயம் தண்டிக்கவில்லையா? லாப நோக்குடைய விஞ்ஞானத்திலும் இவ்வகை கருத்து வேறுபாடுகள் இருப்பதில் என்ன தவறு? அதை ஒரு கருத்து வேறுபாடு என்று நாம் ஏன் கருதுவதில்லை? இதைப் புரிந்துகொள்ள, விஞ்ஞான அணுகுமுறைகள் எப்படி இன்றைய அளவிற்கு வளர்ந்து, விஞ்ஞானிகளைக் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், விஞ்ஞான வளர்ச்சிக்குப் பங்களிக்க முடிகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ‘சொல்வனம்’ பத்திரிகையில் நான் எழுதிய ‘விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி’ என்ற கட்டுரைத் தொடரைச் சற்றுப் படித்தால், இங்கு சொல்லும் விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புரியும்.

நாம் இங்கு லாப நோக்கற்ற ஒரு பெளதிகக் கோட்பாடு ஒன்றை உதாரணமாகக் கொள்வோம். 1915–ல் ஐன்ஸ்டீன், தன்னுடைய பொது ஒப்புமைக் கொள்கையை (General theory of relativity) உலகின் முன்வைத்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது மட்டுமின்றி, மிகவும் கிண்டலடிக்கப்பட்ட ஒரு கோட்பாடு இது. இந்தக் கொள்கையை முழுவதும் நிரூபிக்க ஏறக்குறைய 100 ஆண்டுகள் பிடித்தன. 2011–ல், மிகவும் திட்டவட்டமான சோதனை முடிவுகள் வெளிவந்தது. இந்த நூறாண்டு இடைவெளியில், ஐன்ஸ்டீன் மிகவும் கொண்டாடப்பட்ட பெளதிக விஞ்ஞானியானார். அது எப்படி? இத்தனைக்கும், நோபல் பரிசுக் குழு அவருக்கு ஒப்புமைக் கொள்கைக்காக பரிசளிக்கவில்லை. அதிக கருத்து வேறுபாடற்ற, ஒளிமின் கொள்கை ஒன்றிற்காகப் பரிசளித்தது. ஒப்புமைக் கொள்கை வேறுபாடுகளில் சிக்கிக்கொண்டுவிட வேண்டாம் என்பது நோபல் பரிசுக் குழுவின் கொள்கை. சமீப பெளதிக நிகழ்வு ஒன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். பீட்டர் ஹிக்ஸ் (Peter Higgs) என்ற பிரிடிஷ் அணு பெளதிக விஞ்ஞானி, 1961–ல் அணு நுண்துகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். இவருடைய ஆராய்ச்சியால், பெளதிக விஞ்ஞானிகள் இன்னும் கண்டறியாத நுண்துகள்கள் இருக்கும் என்று ஒப்புக்கொண்டனர். 2012–ல் இவருடைய பெயர்கொண்ட ஹிக்ஸ் போஸான் பெரிய ஹேட்ரான் மோதல் இயந்திரத்தின் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் கடைசியில்வரும் போலீஸைப்போல நோபல் பரிசுக் குழு, இவருக்கு 2013–ல் பரிசை வழங்கியது.

சரி, ஐன்ஸ்டீனும் ஹிக்ஸும் நம்முடைய இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் ஜோதிடர்கள்போல, ராகு, கேது பார்த்து இப்படி நடக்கும் என்று சொன்னார்களா? விஞ்ஞானக் கணிப்புகள் எப்படி நிகழ்கின்றன? எப்படிச் சில துறைகளில், குறிப்பாகப் பெளதிகத்தில், முன்கூட்டியே இயற்கையின் விளையாட்டைத் துல்லியமாக, விஞ்ஞானிகளால் சொல்லமுடிகிறது? இதுபோன்ற கேள்விகள் மற்றும் விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் பற்றிச் சற்று விரிவான அலசல் தேவை. இது புரிந்தால், லாப நோக்கு விஞ்ஞானத்தின் பலவீனம் தெளிவாகும்.

பொதுவாக, விஞ்ஞான ஆராய்ச்சி என்பது மூன்று கட்டங்களில் நிகழ்கிறது. இந்த மூன்று கட்டங்களும், விஞ்ஞானத்தைப் படிப்படியாக முன்னேற்றும் ஓர் அருமையான அமைப்பு. உண்மையான விஞ்ஞான ஆராய்ச்சிகள் யாவுமே இந்த மூன்று கட்டங்களைத் தாண்டிதான் வந்துள்ளன. இவை என்ன படிகள் என்று பார்ப்போம்.

முதல் படி, இந்தப் படியில், இரண்டு ஆரம்ப நிலைகள் உள்ளன. இதில் உள்ள முதல் நிலை, சில நோக்கப்பதிவு (observations), சில அளவீடுகள் (measurements) மற்றும் மேல்வாரியான ஒட்டுறவுகள் (correlations). இந்த நிலை, மிகவும் ஆரம்ப ஆராய்ச்சி நிலை. உதாரணத்திற்கு, உலகில் உள்ள பல்வேறு ஊர்களில் உள்ள சராசரி வெப்பநிலைகளைக்கொண்டு, இந்தக் கண்டம், மற்ற கண்டங்களைவிட அதிகமாகச் சூடேறி வருகிறது என்று அறிவித்தல். இந்த அளவீடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, புவிச் சூடேற்றம் நிச்சயம் என்று சொல்வது ஆரம்ப நிலை விஞ்ஞான ஆராய்ச்சியைக்கொண்டு இறுதி நிலை முடிவுகளை அறிவிப்பதற்குச் சமம். உண்மையான விஞ்ஞானிகள், இந்த ஆரம்ப நிலை ஆராய்ச்சியை அறிவிக்கும்போது என்ன சொல்வார்கள்? “இந்த அளவீடுகள் சற்று அச்சமூட்டுவதாக இருந்தாலும், இது மேலும் பல்வகை அணுகுமுறைகளில் ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டும். இவை இன்னும் விஞ்ஞானிகளால் முழுவதும் சந்தேகமின்றி ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள் அல்ல.” என்ன செய்வது? இன்றைய ஊடகங்கள், இரண்டாவது வாக்கியத்தை நீக்கிவிட்டு, அச்சமூட்டுகிறது என்பதைச் சொன்னால் மட்டுமே செய்தியை விற்கமுடியும் என்று அதையே செய்கின்றன. உண்மையான விஞ்ஞானிகள், எது தனக்குத் தெரியாது என்பதில் எந்தவித அரசியலும் இல்லாமல் ஒப்புக்கொள்பவர்கள். பெரும்பாலான துறைகளில் இந்த முதல்படி பின்பற்றப்பட்டாலும், மிகவும் வளர்ந்த பெளதிகத் துறையில், சில சமயம் முதல்படி, நோக்கப்பதிவு மற்றும் அளவீடுகள் என்று தொடங்காமல், ஒரு புனைக் கொள்கையுடன் (hypothesis) தொடங்குகிறது. இவ்வாறு தொடங்கிய புனைக் கொள்கை, பல பெளதிக அறிஞர்களாலும் அலசப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. இந்த வகைப் புனைக் கொள்கையாய் ஆரம்பித்ததுதான் ஐன்ஸ்டீனின் பொது ஒப்புமைக் கொள்கை. இதன் அடுத்த கட்டங்களில், படிப்படியாக இந்த ஆரம்ப நிலையிலிருந்து மேம்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது படி, முதல் படியில் சேகரிக்கப்பட்ட நோக்கப்பதிவுகள், அளவீடுகள் மற்றும் ஒட்டுறவுகளைச் சரி பார்ப்பது. சில விஞ்ஞானத் துறைகளில், எளிதில் சோதனைகள் செய்து முதல் படியில் உள்ள ஒட்டுறவுகள் சரியா இல்லையா என்று சொல்லமுடியும். உதாரணத்திற்கு, முதல் படியில், அமில மழைப் பிரச்சனையில் பல்வேறு நோக்கப்பதிவுகள், அளவீடுகள் மூலம் அனல் மின் நிலையங்கள் கரியை எரிப்பதால் உருவாகும் பிரச்னை என்று சொல்லப்பட்டது. இரண்டாம் கட்டத்தில், இந்தக் கோட்பாடு சரியா இல்லையா என்று ஊர்ஜிதப்படுத்த, மண்ணின் pH அளவைச் சரிபார்த்து, அது சரியான அளவில் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், இதைச் சந்தேகத்திற்கு இடமின்றி எப்படி நிரூபிப்பது? இதற்காக, பனியில் உறைந்திருக்கும் காற்றையும் சோதித்துப் பார்த்தார்கள்.

The Scientific Method Is Crap | T.H. Cooke

பனியில் உறைந்திருக்கும் காற்று எத்தனை பழசு என்று விஞ்ஞான முறைப்படி எளிதில் சொல்லிவிடலாம். இவற்றை எல்லாம் ஏன் செய்ய வேண்டும்? நம்மூர் அரசியல் கட்சிபோல சும்மா சவால் விடுவதெல்லாம் விஞ்ஞானம் ஆகிவிடாது. இவ்வாறு சாட்சியங்கள் சேகரித்தால் பிரச்னை எந்த அளவு உள்ளது, ஒன்றுமே செய்யாவிட்டால் அது எதுவரை நம்மைப் பாதிக்கும் என்று கணக்கியல் மாதிரியுறு (mathematical models) கொண்டு சொல்வது சாத்தியம். இவ்வாறு செய்வதற்குக் கடந்தகால மற்றும் நிகழ்காலத் தரவுகள் தேவை. இதை வைத்துக்கொண்டு, எதிர்காலத் தாக்கம் எப்படி இருக்கும் என்று தகுந்த நம்பிக்கை அளவில் (confidence level) சொல்லமுடியும். இந்த எதிர்கால ஊகத்தைத் தகுந்த கணக்கியல் மாதிரியுறு மூலம், எந்தத் தேர்ந்த விஞ்ஞானியாலும் சொல்லிவிட முடியும். இந்தக் கணக்கியல் மாதிரியுறுவும் மற்ற விஞ்ஞானிகளால் சரிபார்க்கப்படுகிறது. ஐன்ஸ்டீனின் பொது ஒப்புமைக் கொள்கையின் முதல் நிரூபணம் எட்டிங்டன் என்ற பிரிடிஷ் விஞ்ஞானியால், முழு சூர்ய கிரகணத்தின்போது சூரிய ஒளி, ஈர்ப்பு சக்தியால் சற்று வளைவதைக்கொண்டு நிரூபிக்கப்பட்டது. ஆனால், இது ஓர் ஆரம்ப நிலை நிரூபணம்தான். 1918–ல் எட்டிங்டன் நிரூபித்தாலும் 1921–ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு பொது ஒப்புமைக் கொள்கைக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசன்று அது. ஏனென்றால், ஐன்ஸ்டீன் தன்னுடைய கணக்கியல் மாதிரியுறுக்களில் முழுவதுமாக எல்லா விஷயங்களையும் விளக்கியிருந்தும், இன்னும் சந்தேகமின்றி எல்லாக் கோணங்களிலும் நிரூபிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு, நேரம் பற்றிய கொள்கைகளை நிரூபிக்க போதுமான சோதனைத் தொழில்நுட்பம் அந்த காலத்தில் வளரவில்லை.

மூன்றாவது படி, அணு பெளதிகத்தில் மிகவும் அருமையாகக் கையாளப்பட்டது. ஒரு கணக்கியல் மாதிரியூறுவிலிருந்து, ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும். இந்தக் கொள்கையின் எல்லைகள் (boundary conditions) மற்றும் தொகுதிபண்பளவுகள் (parameters) இத்துறையின் வல்லுனர்களால் ஆராய்ந்து ஒப்புக்கொள்ளப்படும். இது ஓரளவு பெளதிகத் துறையில் பல்லாண்டுகளாகவே இருக்கும் ஒரு விஷயம். உதாரணத்திற்கு, நிலையான அல்லது என்றும் நீடிக்கும் எந்திரங்கள் என்று பலரும் சில ஜாலங்களை விஞ்ஞானக் கண்காட்சிகளில் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு பார்த்தவுடன், பெளதிகம் தெரிந்த ஒருவருக்கு உருவாகும் கேள்வி, சக்தி பேணல் கொள்கை (universal law of energy conservation). அதாவது, எந்த ஓர் எந்திரத்தாலும், புதிதாகச் சக்தியை உருவாக்க முடியாது. ஏன், நீரினால் இயங்கும் சுழலி (turbine) மின்சக்தி உருவாக்குகிறதே என்று கேட்கலாம். உண்மை என்னவோ, இயற்கையில் இருக்கும் நீர் சக்தியை மின் சக்தியாய் மாற்றும் எந்திரம் சுழலி – புதிதாக சக்தி எதையும் உருவாக்குவதில்லை. சரி, மூன்றாவது படிக்குத் திரும்புவோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட கோட்பாடு, அதன் பின்னணியில் உள்ள கணக்கியலால், பலவகை புதிய விஷயங்களைச் சொல்லவல்லது. மிக முக்கியமாகப் பழைய கோட்பாடுகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க இவ்வகை புதிய கோட்பாடுகள் உதவுகின்றன. ஐன்ஸ்டீன் விஷயத்தில், அவர் தன்னுடைய கோட்பாட்டைச் சில சிந்தனைச் சோதனைகள் மூலம் விளக்கினார் – அதன் பின்னணியில் மிகப் பலமான கணக்கியல் மாதிரியுறு இருந்ததே அவருடைய தொலைநோக்கிற்குக் காரணம். அதேபோல ஹிக்ஸ், கணக்கியல் மாதிரியுறுக்களின் துணையோடு, புதியதொரு நுண்துகள் இருக்க வாய்ப்புண்டு என்று கண்டறிந்தார். இந்த இரு விஞ்ஞானிகளின் கணிப்புகளையும் சரியாக நிரூபிக்கப் பல்லாண்டுகள் ஆகின. நோபல் பரிசுக் குழுவைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் இவர்கள் முன்வைத்ததை முழுவதும் ஒப்புக்கொண்டார்கள்.

BCSW Building Competitive Services & Wares: November 2011

இதில் முக்கியமான விஷயங்கள்:

  1. எந்த ஒரு விஞ்ஞான முன்வைப்பும், மற்ற துறை வல்லுனர்களால் முதலில் தீர ஆராயப்பட வேண்டும். இந்த ஆராய்ச்சியில் புதிய கோணங்கள், புதிய சோதனை முறைகள் எல்லாவற்றிற்கும் இடமுண்டு
  2. முன்வைத்த கோட்பாட்டுடன், பலவித சோதனை முடிவுகளும் ஒத்துப்போக வேண்டும்
  3. விஞ்ஞானக் கோட்பாடுகளில் உள்ள ஓட்டைகள் அந்த சமூகத்தினரின் விமர்சனத்திற்கு ஆளாகும். ஆயிரத்தில் ஒரு கோட்பாடு மட்டுமே வெற்றிபெறுகிறது. இதில் உருவாவதுதான் விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள். இதன் உள்நோக்கம், விஞ்ஞானம் மட்டுமே
  4. விஞ்ஞானக் கோட்பாடுகளைச் சோதிக்கும் சோதனைகளால் வரும் முடிவுகளில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். இது, இந்தப் பாதையின் ஓர் அம்சம். எதிரும் புதிருமாய்க் காய்ச்சி எடுக்கும் பல விஞ்ஞானிகள் தனிப்பட்ட முறையில் எந்த காழ்ப்பும் இல்லாதவர்கள்
  5. இவ்வகைக் கருத்து வேறுபாடுகள், விஞ்ஞானம் வளர முக்கியக் காரணம். உதாரணத்திற்கு, ஐன்ஸ்டீனும் போரும் குவாண்டம் பெளதிக தத்துவத்தில் மிகவும் வேறுபட்டனர். ஆனால், தனிப்பட்ட முறையில் நண்பர்கள்
  6. இந்த விஞ்ஞான முறைகள், ஒவ்வொரு விஞ்ஞானியின் அறம் என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது

சரி, எப்படிப் பொது வெளியில் விஞ்ஞானம் பற்றிய கருத்துக்களில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன? விஞ்ஞானிகளில் சிலரைத் தவிர, அழகாக பேசத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. ஒவ்வொரு கட்டத்திலும் விஞ்ஞான நோக்கப்பதிவுகள், அளவீடுகள் மற்றும் முடிவுகள், ஊடக உலகிற்கு அறிவிக்கப்படுகிறது. ஒரு சில பத்திரிகையாளர்களைத் தவிர, மற்றவர்களுக்கு இந்த மூன்று படிகளுக்குள் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. இதனால் வருவதே பெரும் பொதுவெளிக் குழப்பங்கள்.

சரியான விஞ்ஞானம் எப்படிச் செயல்படுகிறது என்று பார்த்தோம். விஞ்ஞானத் திரித்தல் எப்படி நடக்கின்றது என்பதையும் அடுத்த பகுதிகளில் பார்த்து விடுவோம். இந்த வித்தியாசம் சரியாகப் புரிந்தால், ஏன் புவிச் சூடேற்ற விஷயத்தில் விஞ்ஞானிகள் என்றுமல்லாத அளவு எதிர்ப்பைச் சந்திக்கிறார்கள் என்று புரியும்.

இந்தப் பகுதியில் சொன்னதைப் பற்றி, பெளதிக துறையின் மிகச் சிறந்த ஆசிரியரும் விஞ்ஞானியுமான ரிச்சர்டு ஃபைன்மேன் என்ன சொல்கிறார் என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம்:

Series Navigation<< செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.