
வேலியில் ஓடியிருந்த பிரண்டைக் கொடியில் குழந்தையின் மெலிந்த விரல்களைப்போல இளம்பச்சையில் பிரண்டைக்காய்கள். நுனியில் சுருள் வளைவுகளாய் கொடி நீண்டிருந்தது. அம்மா கொடி நுனிக்காய்களை மட்டும் கிள்ளி எடுப்பாள். நடுக்காய்கள் முத்தலாயிருக்கும் என்பாள்.
இளங்காய்களைப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி மிளகாய், உளுத்தம் பருப்பு வறுத்து, உப்பு, புளி வைத்து துவையலரைப்பாள். சூடான சாதத்தில் அரைத்த விழுதும், நெய்யும் இட்டுப் பிசைந்து வைப்பாள். அதன் ருசி நாக்கில் தங்கி தங்க ருசியைத் தரும். புவனா அப்படித்தான் சொல்வாள்.
” தங்க ருசின்னா என்னடி…?”
” தங்கம்னா ஒசத்தி. அந்தமாதிரி இதுவும் ஒசத்தியான ருசி. “
ஒருமுறை அம்மா கேட்டபோது கடைசி வாயை வழித்து வாயில் போட்டுக்கொண்டு புவனா சொன்னாள்.
” என்ன இருந்தாலும் அத்த மாதிரி உனக்கு தொவையல் அரைக்க வரலம்மா. அவங்க அரைச்சு தர்ற தொவையல் இருவத்திநாலு கேரட் தங்க ருசியைத் தரும். உன்னுது இருவத்திரெண்டு கேரட் …..” என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள்.
இளவெயில் தரையில் படர்ந்திருந்தது. லேசான மஞ்சள் நிறம். ஒருமுறம் கொண்டு அள்ளலாம் என்னும் அளவுக்கு வெயில். மற்ற இடங்களில் மரஞ்செடிகளின் நிழல். காலை நேர மசக்கைக்கு பதில் சொல்லி மாளவில்லை புவனாவுக்கு. அம்மா தாளித்தால் ஓடிவந்து கொல்லைப்படிக்கட்டில் அமர்ந்துகொள்வாள். நார்த்தமரத்தின் நாலைந்து இலைகள் கைகளிலிருக்கும். கிள்ளி, கிள்ளி முகர்ந்து விட்டெறிவாள்.
” பூனா, உள்ளாற வா.”
அம்மா குரல் கொடுத்தாள். வயிறு பூம்பஞ்சு போல
குழைந்திருந்தது. மூன்று மாத வயிறு……..எது போட்டாலும் விடாப்பிடியாய் வெளியேற்றிவிட்டு துள்ளத்துடிக்க பசித்துக் கிடக்கும் வயிறு. சிட்டிகையளவு உயிரை உள்வாங்கிக்கொண்டு இல்லாத ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யும் குடுவை வயிறு.
“மூணு மாசத்துல வயிறு தெரியாதுடி. அஞ்சாம் மாசம் லேசா பூசுனாப்ல இருக்கும்.”
பாட்டி நரம்போடிய கையால் தொட்டு முத்தமிட்டாள். குழிக்கண்கள் மலர்ந்து போயின. பெருமையின் சிறு இணுக்கொளி அதில் பிரகாசித்தது. மின்னல் தெறிப்பு போல அது உள்ளோடி மறைந்து போயிற்று. வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய்க் குளியல் புவனாவுக்கு சாசுவதமாகியிருந்தது. ஊருக்கு வந்ததிலிருந்தே வெள்ளிக்கிழமையானால் அம்மா காலை எழுந்ததுமே நல்லெண்ணெய் சூடு செய்தாள்.
” கொஞ்சம் ஓமமும், ரெண்டு பல்லுப்பூண்டும் அதி உத்தமம்…” என்றாள் பாட்டி.
அம்மாவின் கை அழுந்தா தேய்ப்புக்கு குளித்து கொஞ்சநேரம் கழித்து முகமெங்கும் எண்ணெய் வழிந்தது. மஞ்சள் விழுதூறிய முகத்தில் எண்ணெயின் மினுமினுப்பு குத்துவிளக்கின் சுடர்போல பிரகாசிக்கும். அம்மாவின் பழைய பருத்திப்புடவைகள் கட்டிக்கொள்ள இதமாயிருந்தன.
” பீரோல ஏகப்பட்டது இருக்கே . புள்ளைக்கி இதைப்போயி குடுத்திருக்க. “
அப்பா சத்தம் வராமல் குரல் தழைத்துக் கேட்டார். அம்மா மாவு போலிருந்த அடித்தண்டுகளை குழம்பிலிருந்து அரித்து தனியே கிண்ணத்தில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள். புவனாவுக்கு இளங்கீரைத்தண்டுகளை விட அடித்தண்டுதான் பிடிக்கும். இரண்டுவிரல்கடை தடிமன் இருக்கும் தண்டுகளை வேர்கள் நீக்கி குழம்பில் வேகவிட்டு எடுத்துக் கடித்தால் மாவு, மாவாய் கரையும். அதற்காகவே அம்மா கொல்லையில் ஆறுமாதத் தண்டுகள் வளர்ப்பாள். ரோஸ் நிறத்தண்டுகள் சொற்ப இலைகளோடு உசரமாய் வளர்ந்து நிற்கும்.
” ஒடம்ப உறுத்தாத பொடவையா குடுடின்னா….புதுசுலேருந்து எடுத்துக் குடுத்தேன். வேணாம்னுட்டு தானே அதை எடுத்துக் கட்டிக்கிட்டா.”
அம்மா பாத்திரக்காரரிடம் போடுவதற்காக வைத்திருந்த பழம்பஞ்சு புடவைகள் புவனாவுக்கு அந்நியோன்யமாகிவிட்டிருந்தன. வயிற்றில் உறுத்தாத புடவைகள்…….உள்ளேயும் மெத்தென்ற உணர்வு, வெளியேயும்……. நாலைந்து புடவைகளிருக்கும்.
” மாப்ள வர்றப்ப இதை கட்டிக்கிட்டு நின்னுடாதம்மா…”
அப்பா சொல்லிவைத்தார். புவனா திண்ணையில் கிடந்த நாற்காலியில் தளர்ந்து அமர்ந்திருந்தாள். ஊருக்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. அந்த ஒரு மாதத்தில் அத்தை கண்ணில் படவில்லை. படைங்கான் போன்ற விரிந்த உள்ளங்கைகள் கொண்ட அத்தை.
” இன்னும் கொஞ்சம் மொளகா சட்னி வச்சிக்கடி.”
கண்களும், கைகளும் பேசும். தோசையோரத்தில் நல்லெண்ணெய் பொன்னுருக்கி
ஊற்றினாற்போல் பளபளத்து, ஒன்று கிடைக்காதா என்று ஏங்க வைப்பதை அத்தை எப்படித்தான் புரிந்து கொள்வாளோ…..
” ஒன்னு சாப்பிடன்டி……”
தட்டில் தோசையைப் போட்டு பக்கத்தில் சிவந்த மிளகாய் சட்னி தாராளமாய் விட்டு மேலே நல்லண்ணெயை ஆறாய் ஓடவிட்டு விமலாவுக்குப் பக்கத்தில் கொண்டு வந்து வைப்பாள். எண்ணெயின் கசப்புக்கு உதடுகள் லேசாக சுளிக்கும்.
கண்களின் வாஞ்சை, ஒளி வெள்ளத்தைப்போல பொழிந்து கொண்டேயிருக்கும். அந்தப் பார்வையிலிருந்து தப்பவே முடியாது.
” சிறு கசப்பு ஒடம்புக்கு நல்லதுடி. “
அத்தை பிரியமாய் இன்னொன்று வைப்பாள். கிழங்கு மஞ்சளின் வாசம் அருகில் வந்ததும் மூச்சிழுக்க வைக்கும். உதடு சுளித்ததை அவள் கவனித்து விட்டதாய் காட்டிக்கொள்ளாமலே பேசுவாள். இடுப்பளவு சுவருக்கு அந்தப்புறம் மனைப்பலகையிலமர்ந்து அத்தை தோசை சுடுவாள். எப்படி கவனிப்பாளென்று தெரியாது. உள்ளங்கைகளின் மஞ்சள் மெழுகலில் ரேகைகள் மினுமினுத்து நீண்டிருப்பதைப் பார்க்க புவனாவுக்கு ஆசையாயிருக்கும்.
” அத்தைக்கு மட்டும் ஏம்மா கை அவ்ளோ பெருசா இருக்கு?”
ஒருநாள் அம்மாவிடம் கேட்டுவிட்டாள்.
” சிலபேருக்கு ஒருவாகு. ஒடம்புக்கு தகுந்தாப்லதான் உறுப்புகளும் இருக்கும். நல்லவேளை அவங்களுக்கு எதுத்தாப்ல கேக்காம இருந்தியே…”
அம்மா மெதுவாய் சொன்னாள்.
மாலையும், இரவும் கூடும் நேரங்களில் அம்மாவும், அத்தையும் அவள் வீட்டுத் திண்ணையிலமர்ந்து கதை பேசுவார்கள். அத்தை வீடு அதே தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி எதிர்ப்புறமிருந்தது. அத்தை புடவை முந்தானை நுனியை இரு கைகளாலும் இழுத்துப் பிடித்து வலதுகை ஆட்காட்டி விரலால் நிமிண்டியபடியே பேசுவாள். என்ன பேசுவார்களென்று நிதானித்து கேட்கும் அவசியமற்ற வயது.
புவனாவும், விமலாவும் எதிர்த்திண்ணையில் அமர்ந்து ஏழுகல் ஆடுவார்கள். திண்ணையை ஒட்டிய ஓட்டத்தில் வரிசையாய் நின்றிருக்கும் தூண்களில் ஒன்றைப் பற்றி அரை வட்டமடித்து விளையாடுவார்கள். பாகைமானியின் வளைந்த அரைவட்டம். தொய்வின்றி தூணைப் பிடித்துக்கொண்டு சர்ரென்று இங்கிருந்து அங்கு வட்டமடிப்பது புவனாவுக்கு ரொம்பவே பிடித்த விளையாட்டு. அம்மா கால்களை நடைபாதையில் பதித்திருப்பாள். பேச்சில் சுவாரசியம் கூடிப்போகும்போது முழங்கால்களில் இரு முழங்கைகளையும் பதித்துக் கன்னங்களைத் தாங்கிக்கொள்வாள். அத்தை அப்படியே சுவரில் சாய்ந்து கால்களை எதிர்ப்புறமாய் நீட்டி விட்டுக்கொள்வாள். நீளமான கால்கள், கொஞ்சம் ஆம்பிளைத்தனமான உயரம். மாமா அவளைவிட சற்று உயரம் குறைவு. அதனால் இருவரும் ஒன்றாக வெளியில் செல்லமாட்டார்கள். அபூர்வமாய் போனாலும் மாமா பத்தடி முன்னால் நடப்பார். அத்தை பின்னால் குனிந்த தலை நிமிராது செல்வாள். தெருவிளக்குகள் பளிச்சிட்ட பின்பும் கதை தொடரும். அம்மா நினைத்துக்கொண்டாற்போல் புவனாவை விரட்டுவாள்.
” போயி வெளக்க கையமத்திட்டு புத்தகத்த எடுத்துப் படி. நான் வந்துடுறேன்.”
புவனாவுக்கு மனசு வராது.
” விமலாவையும் கூட்டிக்கிட்டுப் போயேன். ரெண்டுபேரும் ஒண்ணா ஒக்காந்து படிங்க.”
அத்தை அனுப்பிவைப்பாள். வீட்டுக்குள்ளிருந்து கசியும் குண்டுபல்பின் ஒளியில் அந்தி மஞ்சள் வெயிலின் சாயல் படர்ந்த முகங்களோடு களைந்த கேசம் கொண்ட இரு உருவங்கள் பேசிக்கொண்டேயிருக்கும். அத்தை அடிக்கடி விமலாவைக் கண்களால் துழாவிக் கொள்வாள். இருளில் மினுங்கும் கண்களில் மகளின் இருப்பு குறித்தான திருப்தி மென்படலமாய் விரிந்திருக்கும்.
அவள் வீட்டு முற்றம் சற்று ஆழமானது. அதில் காலைத் தொங்கவிட்டு குறட்டிலிருக்கும் தூணில் சாய்ந்தமர்ந்து அத்தை விமலாவுக்கு சடை பின்னிவிடுவாள். சிறு, சிறு இழைகள் பிரித்து சடை பின்னி அதை இறுதியில் ஒன்றாக சேர்த்து ரிப்பனால் இணைத்து மடக்கி அதற்குள் மல்லிகை அரும்புகளைக் கொட்டி கட்டிவிடுவாள். மறுநாள் காலை பூக்கள் மலர்ந்து தலை முழுக்க கமகமக்கும். புவனாவுக்கும் இதெல்லாம் நடக்கும். சடை பின்னும்போது அத்தை அதிகம் பேசமாட்டாள்.
” ஆடாம காமி…” என்பது மட்டுமே அவள் சொல்லும் வார்த்தையாக இருக்கும். படைங்கான் கையால் எண்ணெயை தலையில் அழுந்த தேய்ப்பாள்.
“ வீட்டுல எண்ணெய் தடவிட்டுதான் வந்தேன் ” என்றால் கேட்கமாட்டாள்.
” சலிக்க தடவணும். இல்லேன்னா பிசிறு, பிசிறா முடி நீட்டிக்கிட்டு இருக்கும் ” என்பாள்.
அதன்பிறகு பேச்சிருக்காது. வாகு கலைத்து திரும்ப எடுத்து வழுவழுவென்று சீவுவாள். அந்தப் படைங்கான் கைகளுக்குத் தச்சரின் கைலாவகமிருக்கும். இணுக்களவு தவறு இழைத்துவிடாத எச்சரிக்கை உணர்வில் கண்கள் சுருங்கியிருக்கும். தலை பின்னி முடித்ததும் திரும்பி அமரவைத்து சடையை முன்னாலிட்டு அழகுப் பார்ப்பாள். கிள்ளி, கிள்ளி எடுத்த இழைகள் பின்னிப்பிணைந்து ஒரு பெரிய பூரான் தோளில் ஊர்வது போன்று நெளிந்து கொண்டிருப்பதைப் பார்ப்பவள் கன்னம் வழித்து முத்தமிடுவாள். கொல்லையில் பூத்த அடுக்கு செம்பருத்திப்பூவை வைத்துவிட்டு காரிய சித்தி அடைந்துவிட்டதற்கு அடையாளமாக பெருமூச்சு விடுவாள்.
விமலாவுக்குப் பூஞ்சையான உடல்வாகு. மாமா மாதிரி.
‘ அத்தையை மாமா எப்படி கல்யாணம் பண்ணினார் ‘ என்று புவனா பல தடவை யோசித்திருக்கிறாள். ஒருமுறை அம்மாவிடம் கேட்டு முதுகில் சாத்துப்படி வாங்கினாள்.
” அத்தைக்கும், மாமாவுக்கும் பொருத்தமேயில்லையே….ரெண்டு
பேரும் எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க…?”
இயல்பாக கேட்ட கேள்விக்கு முதுகு பழுத்துவிட்டது.
” மொளைச்சு மூணு எலை விடலை. அதுக்குள்ள பேச்சப்பாரு…”
அம்மாவுக்கு அப்படியொரு ஆத்திரம். வெளுத்துவிட்டாள். அம்மாதான் அத்தை வீட்டுக்குப் போவாள். அதுவும் வாசலோடு சரி. ஏதாவது விசேஷமென்றால் அத்தை குங்குமம் தர அம்மாவை உள்ளே அழைப்பாள்.
” பூனாம்மா, செத்த உள்ள வந்துட்டுப் போவீங்களாம். இன்னிக்கி வரலெச்சுமி நோம்பு. தாம்பூலம் வாங்கிக்குங்க.”
கனிந்த பழம் போன்ற சொற்களுக்கு கால்கள், உயர நிலைப்படியைத் தாண்டி உள்ளே சென்றுவிடும். சிறு நிறம் மங்கிய பித்தளைத்தட்டில் வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், ஒரு ரூபாய் நாணயம், குங்குமம் வைத்து அத்தை காத்திருப்பாள். அம்மா விழுந்து கும்பிட்டு எடுத்துக்கொள்வாள். அத்தை ஆறுமாதம் பெரியவள்.
” தீர்க்க சுமங்கலியா இருக்கணும்.”
நெற்றியில் குங்குமம் இட்டுவிட்டு,
” குட்டி வாடி…” என்பாள். புவனாவின் பிறை நெற்றியில் இணுங்காமல் வைத்துவிடுவாள்.
” நமஸ்காரம் பண்ணுடி….ஒவ்வொரு தடவையும் சொல்லணும் இவளுக்கு…”
” வுடுங்க பூனாம்மா. சின்னப்புள்ள….அதுக்கு என்ன தெரியும்.”
அத்தை பாய்ந்து வாரிக்கொள்வாள். அவ்வளவு தாட்டியமான உருவம் குனிந்து தன்னை வாரிக்கொள்ளும்போது புவனாவுக்கு சிரிப்பாக வரும். பறவைத் தன் சவ்வுக்கால்களுக்கிடையில் சிறுசை இடுக்கிக்கொள்வதுபோல் அவள் எண்ணிக்கொள்வாள்.
” ரெண்டுபேரும் என்னாடி பேசிக்குவாங்க…?”
திண்ணையில் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த விமலா திடீரென்று கேட்டாள். புவனா உதட்டைப் பிதுக்கினாள்.
” நாள் தள்ளிப் போனதும் பயந்துட்டேன்னு அம்மா சொல்லுச்சு. அவ்ளோதான் காதுல வுழுந்துச்சு. அதுக்கப்புறம் என்னைத் திரும்பி பாத்துட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சிடுச்சு….நாள் தள்ளிப் போச்சுன்னா என்னாடி…?”
” யாருக்குத் தெரியும்.நேத்திக்கி புதன், இன்னிக்கி வியாழன். எங்க தள்ளிப்போச்சு. சரியாத்தான வந்துருக்கு.”
குழி துடைத்து அள்ளிக்கொள்ளும் முனைப்பில் புவனா இருந்தாள்.
புவனாவுக்கு ஐந்தாம்நாள் தலைக்கு நீர் விட்டபோது அத்தைதான் கூடவே இருந்து எல்லாம் செய்தாள்.
” தலைய தொவட்டுடி. தண்ணி கோத்து சளி புடிச்சிக்கப்போவுது. “
புடவையை மன்னி தொடையிடுக்கில் சொருகிக்கொண்டு முடியை துண்டால் அடித்து ஈரம் போக துவட்டிவிட்டாள். வைலட் பூக்கள் சிதறிய பூனம் புடவையின் அடியில் நனைந்திருந்தது. புவனாவுக்கு நீர் விட்டபோது ஏற்பட்ட ஈரம். தட்டிலிருந்த மல்லிகைச்சரத்தின் மலர்ச்சி அத்தை முகத்தின் மலர்ச்சியை விட சற்று கம்மியாகத்தானிருந்தது.
அத்தையின் மஞ்சள்முகம் பெரிய சூரியகாந்தியாய் விகசித்தது. புறங்கையில் பொன்னிற ரோமங்கள் மின்னின. நீள்விரல்களால் புவனாவின் கன்னம், கழுத்து, அரும்பியிருந்த மொட்டுகள் தடவி சிலிர்த்தாள். பெண்மை குபீரென்று மலர்ந்து திக்குமுக்காடவைத்துவிடுவதை எண்ணி ஆச்சர்யமாயிருந்தது. விமலாவின் பக்கம் பார்வை திரும்பியது. கனமான ரோஜா மொட்டுகள் மலர்ந்திருப்பதைக் கண்டபோது கவலையாக இருந்தது. கண்படாமல் காப்பாற்றவேண்டுமே என்றிருந்தது. விமலா பெரியவளானபோது அம்மாதான் எல்லாம்.
” அருகம்புல் பறிச்சிட்டு வாங்க…….”
” தொவரம்பருப்பு பொங்கல் தயாராயிடுச்சா….?”
” நல்ல கனமான பாவாடைத் துணியா இருந்தா பரவாயில்ல….” என்று அத்தைக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.
சடங்கு முடிந்ததும் அத்தை நினைத்துக் கொண்டாற்போல் வாய்பொத்தி அழுதாள். அவள் பதினெட்டில் பெரியவளானாள். அதுவரை ஊரார் பேச்சுக்கு ஆளானதை எண்ணி வேதனைப்பட்டதை நினைத்துக் கொண்டதாக சொன்னாள்.
” நம்ம பிள்ளையும் அந்தமாதிரி நாள் கடத்திடுமோன்னு பயந்துக்கிட்டிருந்தேன் பூனாம்மா. நல்லவேளையா பதிமூணுல ஒக்காந்துடுச்சு.”
அம்மா நெகிழ்வாய் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அந்தக் கைகள் அவ்வளவு மிருதுவாய் இருந்ததாய் அம்மாவுக்குப் பட்டது. இன்னும் கொஞ்சநேரம் பிடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. புவனாவின் கன்னம் கிள்ளப்படும்போதெல்லாம் அவளுக்கும் அதுமாதிரி தோன்றும். விரல்கள் மெத்மெத்தென்றிருக்கும், கடற்பஞ்சு போல. கண்களின் பளபளப்பில் குழைந்து கிடக்கும் பாசம் திண்ணையில் வெயிலுக்கு ஒதுங்கி சரிந்திருக்கும் ஆடுகளுக்கும் பாரபட்சம் பார்க்காது.
” எனக்கு இந்த விளம்பரம்தான்டி ரொம்பப் புடிக்கும். “
அத்தை அவசரமாக கூவினாள்.
புல்வெளி….. அதில் நீளமான, நான்குபேர் அமரக்கூடிய நாற்காலியில் தந்தை அமர்ந்திருக்கிறார். பெண் குழந்தை கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அதன் தலைக்கு மேலே இரும்பு நாற்காலியின் விளிம்பு. தந்தை தன் வலதுகையால் நாற்காலி விளிம்பைப் பற்றியபடி அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார். கவனக்குறைவாக நிமிர்ந்துவிடும்பட்சத்தில் குழந்தை காயம் பட்டுக் கொள்ளாதிருக்க தந்தையின் பாசம் அங்கொரு பாதுகாப்பு அரணாய்.
அத்தையின் முகம் விளம்பரத்தில் கனிந்திருந்தது. கண்கள் லேசாக கலங்கி பொட்டொளி போல் துளிநீர் முத்தாய் கீழிமையில் அரும்பியிருந்தது. ஆழ மூச்செடுத்ததில் மார்பு ஏறி இறங்கிற்று. புடவையின் முந்தானை நுனியை இருகைகளாலும் பிடித்து ஆள்காட்டி விரலால் நிமிண்டிக் கொண்டிருந்தாள்.
இதழ்கள் கோடுபோல் நீண்டிருந்தன.
சமைக்கும்போதுகூட டிவி ஓடிக் கொண்டேயிருக்கும். பாட்டோ, படமோ, நகைச்சுவையோ காதில் வாங்கிக்கொண்டே சமைப்பாள். பிரண்டைத் துவையல் அரைத்தால் சின்ன பொட்டுக்கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் வைத்து எடுத்து வந்து,
” பூனாம்மா, பிள்ளைக்குப் பெசஞ்சு குடுங்க ” என்று தந்துவிட்டுப்போவாள்.
அம்மாவும் செய்வதைத் தருவாள். அத்தையும், அம்மாவும் திடீரென்று பேசுவதை நிறுத்திக் கொண்டனர். புவனா காரணம் கேட்டபோது தொடையில் நறுக்கென்று கிள்ளு கிடைத்தது. பாட்டியும் பலமுறை கேட்டுப் பார்த்து விட்டாள். அம்மா கடைசிவரை காரணம் சொல்லவேயில்லை.
கடைசியாக அம்மாவும், அத்தையும் திண்ணையிலமர்ந்து எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தனர், சன்னமான ஒலியில் காதின் துளைகளுக்குள் மட்டுமே புகமுடிகின்ற அளவுக்கு. திடீரென அத்தையின் முகம் மாறிப் போயிருந்தது. அம்மாவும், தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள். பின் நிமிர்ந்து அவள் ஏதோ கேட்க, அத்தையும் அவசரமாய் தலையசைத்தாள். கண்களின் ஈரம் அவள் நெஞ்சின் ஈரம் போல அப்போது புவனா தவறாகப் புரிந்து கொண்டிருந்தாள். மறுபடியும் அம்மா வெகு தீவிரமாய் என்னவோ சொல்ல, அத்தை படைங்கான் கைகளை அசைத்து ஏதோ சொன்னாள். பொடித்து கொட்டிய வார்த்தைகளுக்கு நீள, நீள விரல்கள் காற்றில் நர்த்தனமாடின. அம்மா சுவாதீனமாய் எழுந்து புவனாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.
இயல்பான விடைபெறல் போன்றதொரு தளர்வான நடையில் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. அந்த உரையாடலின் போதுதான் ஏதோ நடந்திருக்க வேண்டுமென்று பள்ளிக்கூடத்தில் புவனாவும், விமலாவும் பேசிக்கொண்டனர். வீட்டுக்கு வந்ததும் இவள், இவள் வீட்டுத் திண்ணையிலும், அவள், அவள் வீட்டுத் திண்ணையிலும் விளையாண்டனர். விமலா கல்யாணத்துக்கு அம்மா சம்பிரதாயத்துக்கு சென்றுவிட்டு வந்தாள். மறுமாதமே நடந்த புவனா கல்யாணத்துக்கும் அத்தை அதையே கடைபிடித்தாள்.
அத்தை பெரிய பூத்தோடு அணிந்திருப்பாள். இதழ்கள் பெரிதாய் நடுவில் பச்சைக்கல் வைத்தது. இதழ்களில் பாண்ட்ஸ் பவுடரின் வெண்மை படர்ந்திருக்கும். அடிக்கடி தோடுகளைக் கழற்றி பூந்திக்கொட்டையில் ஊறப்போட்டுவிட்டு இரண்டு ஈர்க்குகளை சொருகிக்கொள்வாள். பூந்திக்கொட்டை பளபளப்பு ஏற்றி. இதழ்களின் வளைவுகளை பளிச்சென மின்ன செய்திடும். அன்று மாலை தங்கத்தோடுகள் அத்தையின் சிரிப்பில் ஒரு அகல்விளக்கை ஏற்றி வைத்திருக்கும்.
நிறைவிளக்கின் இணுங்காத சுடர் பொன் பிழம்பாய் ஜொலிப்பதன் சாயலில் அத்தை சிரிப்பாள். மஞ்சள் மினுத்த முகம் சிரிப்பின் கூடுதல் பிரகாசத்தில் முலாம் பூசிய தகடாட்டம் பளபளப்பதை புவனா கீழ்க்கண்ணால் அடிக்கடி பார்ப்பாள். ஓங்குதாங்கான உருவத்தில் பெண்மையைக் குழைத்துப் பூசி விட்டது போல அவளது நளினங்கள் அவ்வபோது வெளிப்படும்.
மாமா வீட்டிலிருந்து புவனா பார்த்ததில்லை. காலை வேலைக்குப் போனால் இரவு வருவார். திருவாரூரிலிருக்கும் ரிஜிஸ்டர் ஆபீசில் வேலை. சாப்பாடு கட்டிக்கொண்டு காலை எட்டுக்கே கிளம்பிவிடுவார். அதன்பிறகு வீட்டின் சகல சதுரஅடிகளையும் அத்தை தனதாக்கிக்கொள்வாள்.
வெயில், விரித்த தாழம்மடலாய் முற்றத்தில் கிடக்கும்போது குறட்டிலமர்ந்து உளுந்து களைந்து கொண்டிருப்பாள். மிளகுரசத்தின் காரமணம் நாசிக்குள் நெடியேற்றும். சடசடத்து எரியும் பனையோலை சருகுகள் பொன்நாக்குகளை பானை தாண்டி எழும்பச்செய்து அத்தையின் கன்னத்தில் அனல் காய்ச்சும். அப்போது கன்னங்கள் செண்பகப்பூவின் நிறத்தில் மினுங்கும். விடுமுறை நாட்களில் விளையாட செல்லும் புவனாவுக்கு அது ஒரு அதிசயம்.
” பலாக்கொட்டை சுட்டுத் தாரேன். திங்கிறீங்களாடி….?”
எட்டிப் பார்த்துக் கேட்பாள். கொட்டைகள் சுடுபடும் வாசம் காந்தலாய் அடிக்கும். அத்தை கைமாற்றி, மாற்றி பலாக்கொட்டைகளை ஊதுவாள். பொறுமையாகத் தோலுரித்து சமமாகப் பங்கிட்டுத் தருவாள். மழைநாட்களில் புளியங்கொட்டைகளை வறுத்து வைத்திருப்பாள். மடக்கு பல்லாங்குழியை விரித்து குழிகளில் புளியங்கொட்டைகளை படைங்கான் கையால் நிரப்பி, மடியில் வறுத்த கொட்டைகளை அழுத்தி வைத்துவிட்டு எழுந்துபோவாள்.
” தின்னுக்கிட்டே வெளையாடுங்க…..”
ஒரு கோட்டு சித்திரம் போன்ற அந்த நெடிய உருவம் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருக்கும். கிளிப்பச்சை நிறத்திலும், வைலட் நிறத்திலும் இரண்டுப்புடவைகள் புவனாவின் நினைவில் நிரந்தரமாக தங்கிவிட்டன. அத்தையுடனான பேச்சு நின்றுபோனபோது அவள் அந்தப் புடவைகளை உடுத்தியிருந்தாள். அதன்பிறகு என்ன உடுத்தினாலென்று புவனாவுக்குத் தெளிவாக ஞாபகமில்லை.
அம்மா, புவனாவை உரக்க அழைத்தாள்.
” பூனா, சாப்புட வா…..”
எழுந்து கால்களை அழுந்த ஊன்றி சோர்ந்திருந்த உடம்பை ஒரு நிதானத்துக்கு கொண்டுவந்தபோது காம்பவுண்டுக்கு அந்தப்புறம் கழுத்தளவு முகம் தெரிந்தது. சூரியகாந்திப்பூ முகம். இளவெயிலின் மஞ்சளொளி பிரகாசித்த முகம் கண்கள் இடுங்க சிரித்தது.
” பூனா………..எப்படீ வந்த….?”
அத்தை சுவாதீனமாய் இரும்புக்கதவு திறந்து உள்ளே வந்து சிமிண்ட்தளத்தில் நின்றாள். கை முந்தானை ஓரத்தை நிமிண்டிக் கொண்டிருந்தது. கால்கட்டை விரல்கள் மடங்கி நிமிர்ந்தன. பெரிது, பெரிதாய் பூப்போட்ட கருஞ்சிவப்பு நிறப்புடவை உடுத்தியிருந்தாள். கண்களில் அதே பூஞ்சிரிப்பு. உடலில் கண்கள் மட்டும் கடைசிவரை இளமையாக இருப்பதாக புவனா நினைத்துக்கொள்வாள். தோள் சுருங்கும், தலை நரைக்கும். ஆனால் கண்களுக்கு மட்டும் இளமை குறைவதேயில்லை என்று விமலாவிடம் சொல்லியிருக்கிறாள். அத்தைக்கு பளிங்கு கண்கள். நீரில் மிதக்கும் இரு கருந்திராட்சைகள் போலிருக்கும்.
” அம்மா பொடவைய கட்டியிருக்கறதுனால அடையாளம் தெரில. ரெண்டுவாட்டி போறப்ப ஒங்கம்மான்னு நெனச்சு போயிட்டன். இன்னிக்குதான் உத்து பாத்தப்ப நீயின்னு தெரிஞ்சுது . மாசமாயிருக்கியா………?”
உடலின் சோர்வு தாய்மையைப் பொதிந்து வைத்திருந்ததை அவள் எளிதாக அடையாளம் கண்டுகொண்டு விட்டிருந்தாள். சற்று மேலேறி வந்து கைகளைப் பிடித்துக்கொண்டாள். விரல்கள் மெத், மெத்தென்று குளிர்ந்திருந்தன. குப்பென்ற மஞ்சள் வாசம் காற்றின் வெம்மையில் குளுமையை ஏற்றியிருந்தது.
” மூணு மாசம் ….”
புவனா இடது கையின் கடைசி மூன்று விரல்களைக் காட்டினாள். நிலைப்படி தாண்டி வந்த அம்மாவின் கால்கள் நின்றுவிட்டன.
” தல சரியா காயாம பொடரியில ஈரம் வச்சிடப் போவுதுடி…..”
அத்தை தொட்டுப்பார்த்தாள்.
” பூனாம்மா துண்டு குடுங்க…”
அம்மாவிடம் துண்டு வாங்கி அடித்து கோதிவிட்டாள். கன்னத்தில் விரல்கள் இழைந்தபோது புவனா கண்களை மூடிக்கொண்டாள். அந்த ஸ்பரிசத்தின் உணர்வு நெடுநாளைய இறுகளை நெகிழ்த்தி விட்டதில் உடைந்த விரிசலின் வழியே சொட்டுகள் கசியப் பார்த்தன . அதை உள்ளிழுத்துக்கொண்டவள்,
” உள்ளாற வாங்க அத்த…” என்றாள். அத்தை தலையாட்டி சிரித்தாள்.
” இன்னொருநாள் வர்றேன். எண்ணெ தேச்சி குளிச்சியா…..?”
” ஆமா, கை அழுந்த மாட்டேங்குது, பாருங்க, மொகமெல்லாம் பளபளங்குது.”
அம்மா நாற்காலியை அவளருகில் நகர்த்திப் போட்டாள்.
” இருக்கட்டும் பூனாம்மா. அடுத்தவாரம் நான் வந்து தேச்சி வுடறேன். நல்லா கசக்கி தேச்சா பஞ்சு, பஞ்சா போயிரும். தலையில எண்ணெ இருந்தா கசண்டடிக்கும். “
அத்தை எப்போதும்போல சொல்லிக்கொண்டேப்போனாள். அம்மாவின் உதட்டில் வழக்கமான புன்னகை மிதந்தது.
” சாயந்தரம் வர்றியா….மொளகா சட்னி அரைச்சு வைக்கிறேன். ரெண்டு தோசை தின்னுட்டு வரலாம்.”
அத்தை கையை ஒரு சுற்று சுற்றிக் காட்டினாள். ஓரங்களில் எண்ணெய் மினுமினுக்கும் தோசை, பொன்முறுகலில், அவளின் பிரத்தியேக அன்பின் வாசனைக்கான அடையாளமாக.
***
ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

சுஜாதா:சிறுகதை:நகரம்:Suujatha:Story:Nagaram – Solvanam – Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
- சுஜாதா:சிறுகதை:நகரம்:Suujatha:Story:Nagaram
- சுஜாதா : சிறுகதை: ஃபிலிமோத்ஸவ் : Suujatha: Story: filmothsav
- எழுத்தாளர் | சார்பினோ டாலி | சிறுகதை | "கொலைப் பசி" | Charbino Dolli| story |"Kolaip Pasi"
- Sushil Kumar | short story | "Eeral" | சுஷில் குமார் | "ஈரல்" | வனம் | சிறுகதை
- சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 17
பாந்தமாகவும் கவித்துவமாகவும் கதை சொல்லவருகிறது.வாழ்த்துகள் , கிருத்திகா.