அவள் ’லைஃப் ஆஃப் பை’
திரைப்படம் பார்த்துவிட்டு
வந்து கொண்டிருந்தாள்.
அது கெடுவிதியின் அறிகுறியா?
படத்தின் நாயகன்
படகில் விலங்குகளோடு பயணித்தான்.
அந்தக் கதையை உலகுக்கு சொல்ல
அவன் உயிரோடு இருந்தான்.
அவளும்
வேட்டையாடும் மிருகங்களோடுதான்
பேருந்தில் பயணித்தாள்.
கழுதைப் புலிகள் ஆறு
அவள் மீது பாய்ந்தன.
ஜாக்கியும் இரும்பு குழாயும்
அவள் பிறப்புறுப்பில்
சொருகப்பட்டன.
குடல் தெறித்து விழுந்தது.
இதெல்லாம் நடக்கும்போது
அந்தப் பேருந்து
முனிர்கா பகுதியை
வலம் வந்து கொண்டிருந்தது.
அவள் உடலெங்கும்
வெறிநாய்களின் கடித்தடங்கள்.
பிறகு
சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில்
மரணித்தாள்.
அவள் தாயின் கண்கள்
கரும் பிழம்புகளாயின..
வழியக் காத்திருக்கும் ஏரிகள் போல்
தளும்பின..
அவள் செத்துவிட்டாள்.
ஆனால் நாங்கள்
தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்.
கடவுளும்
எங்கள் பக்கம் இல்லை.
இறுதியில் புள்ளிகள் ஒன்றிணைந்தன.
அவர்கள் கருமையின் உருவாயினர்.
கருப்பு துணி கட்டிய வாயில்
பற்கள் நெரிபட்டன.
முழுவதும் கருப்பு
ஆடைகள் அணிந்த பெண்கள்
ரைசினா குன்றுப் பகுதியின்
‘இந்தியா வாயிலி’ல் குவிந்தனர்.
நகரம்தோறும் அணிவகுத்த
காலடித்தடங்கள்
‘நீதி’ நீதி’ என்று முரசு கொட்டின.
தீப்பிழம்பான பெண்களுக்கு
அவள் திரியானாள்.
அணையாத ஜோதியாய் ஆக்கினாள்.
இந்த நாள்
ஒரு கனியெனக் கருதினால்
பகட்டாய் மின்னும் நாட்டில்
கருப்பு இதயம் கொண்ட பப்பாளி போல்
பூவெனக் கொண்டால்
மணக்கும் மலரின் மது
நாட்டின் நாளங்களை வெடிக்க செய்வது போல
மீனனெக் கொண்டால்
வாளை மீன் போல்
பேருந்தின் தரையில் சிதறிய
அவளது குடல்.
மரமெனக் கொண்டால்
புளி போல்
இந்தியத்தின் சுவாசத்தை
சுளிக்க வைக்கும்.
பெயர் வேண்டுமென்றால்
அவள் ஜோதி.
குகையிலிருந்து
சினந்து புறப்பட்ட சிங்கம்.
ஒரு புயல் போல்
இவ்வுலகை சுருட்டிய சுனாமி.
போதும் நிறுத்துங்கள்.

*இந்திய சட்டப்படி பாலியல் பாதிக்கப்பட்டவர் பெயர் வெளியிடக்கூடாது. இந்தப் பெண்ணிற்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது.ஆனால் அவளது தந்தை தனது பெண் எந்தத் தவறும் செய்யவில்லை.அவள் பெயரை மறைக்க வேண்டியதில்லை.அவள் பெயரை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் தைரியம் கொள்வர்; வலுப்பெறுவர் என்று கூறுகிறார்.
உஷா அகேல்லா மூன்று கவிதைத் தொகுதிகள், சிறு பிரசுரங்கள், ஒரு இசைநாடகம் ஆகியவை எழுதியுள்ளார். ஹார்ப்பர் காலின்ஸ் வெளியிட்ட இந்தியக் கவிஞர்களின் ஆங்கிலக் கவிதை தொகுப்பில் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சுலோவிகியா, நிகரகுவா, மாசிடோனியா, கொலம்பியா, சுலோவினியா,இந்தியா மற்றும் பல நாடுகளின் கவிதை விழாவிற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் தெற்கு ஆசிய புலம் பெயர்ந்தோர் கவிதை விழாவின் நிறுவனர். முகாமில் வாழும் பெண்கள், முதியோர், மருத்துவமனை ஆகியவற்றில் வாழும் ஆதரவற்றோர்கள் மத்தியில் கவிதைகளை கொண்டு செல்லும்’கவிதை ஊர்வலம்’ எனும் அமைப்பின் நிறுவனர். பல விருதுகள் பெற்றுள்ளார். ஆஸ்டின் நகரம் ஜனவரி 7ஆம் தேதியை ‘கவிதை ஊர்வல தினம்’ ஆக அறிவித்துள்ளது.
சிறந்த சொல்லாடல்கள் மற்றும் அணி நயங்கள் கொண்ட உயரிய மொழிபெயர்ப்பு. திரு . இரமணன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.