
நேற்றைய நாள்
கடந்து,
இன்றும் அதே போல்,
ஏக அவசரத்தில் அவரவர்.
காலை நேரத்தில்,
சிற்றுண்டி அருந்தி சின்னதாய்,
கையோடு மதியத்துக்கும்,
உணவு.
பள்ளிக்கும், பணிக்கும்,
கல்லூரிக்கும், காதலுக்குமாய்
இந்நேரம்.
இதுவெல்லாம் இருக்கிறவனுக்கு.,
இல்லாத இவனுக்கேது ?
நல்லபொழுது.
ஆத்தாவுக்கு ஆஸ்துமா வந்து,
அப்பவே போயிட்டாள்.
அப்பனும் இராத்திரி தேவைக்கு,
ரகசியமாய் இன்னொருவளை சேர்த்துக்கிட்டா,
என்ன செய்வான்?
இந்த பையன்.
பரிதாபம் சொல்லியவர்,
பாதியிலே ஒதுங்கினர்,
பாவப்பட்டவன் இன்று நடுவீதியில்,
தெரு பையனாய்.
பிழைப்புக்கு வழிதேட,
பிழைப்பே பிழையானது.,
சித்தன் போக்கு, சிவன் போக்காம்…
இவன் போக்கு.
கிழிந்த சாக்குபை – ஆகி,
தெரு தெருவாக, மசாலா பொறுக்க,
நிரம்பியது,
குப்பையும், இந்த பொழுதும்.
படுத்துறங்க பிளாட்பாரம்,
பாதி வயிரோடு எங்கே உறக்கம்?
காசு கொடுத்தால் கற்பை தரும்,
தாசியின் முணங்கல் சத்தம். – தினம்
தெருமுனையில்.
காமபசிக்கு களம் வந்த கணவான்கள்,
இச்சை முடிந்து செல்ல – கண்ட
இவனுக்கு எப்படி வரும் உறக்கம்?.
பாதி மீசை அரும்பியிருக்க,
அடைக்கலம் கொண்டான்,
அம்மணி மேலே…
அக்கா! உனக்கு ஆளும் கூட்டியாரேன்.
எனக்கு நீ என்ன தருவே?
வருமானம் போதவில்லை ,
வாய்வவுத்துக்கும் உணவுமில்லை,
என்ன செய்வேன்?
கெஞ்சியவனை கொஞ்சமாக தடவி,
சம்மதமும், சம்பளமும் சொன்னாள்.
இவன்
பசியும் நிறைந்தது,
மனசும் நிறைந்தது.
பஸ் ஸ்டாண்ட்,
ரயில்வே ஸ்டேஷன்,
கடலோரம், என விஸ்தரிக்க,
பிழைப்புக்கு வழி தேட,
பிழைப்பே பிழையானது.
நடுவீதியில் பாவமாய் திரிந்த,
“தெருபையன்”-பலரும்,
தெரிந்த ‘மாமா’ ஆனான்.
மாதம் முழுவதும் பணமும் பார்த்து,
மானம், ஈனம், அறிந்தும் தொலைத்து,
“மாமூல் “ வாழ்க்கை என்றே,
மாமியார் வீட்டில் தஞ்சம் புகுவான்.
இவன்..
“தெருபையன் அல்ல,
நகராட்சி வண்டி,
சிறைக்குள் அடைப்படும்
தெரு நாய்.