தீண்டா நதி

குமரன் கிருஷ்ணன்

மதுரைக்குச் செல்லும் திட்டம் பேசப்படும் போதெல்லாம் என் மனைவியிடமிருந்து தவறாமல் வரும் வரிகள் "மதுரைக்குப் போனாலே இருபது வருஷம் குறைஞ்சுரும் உங்களுக்கு..." என்பதே. அது பாதி உண்மை. முழு உண்மை என்னவென்றால், மதுரை என்ற சொல்லைக் கேட்டாலே பலசமயம் அவ்வாறு நிகழ்வதுண்டு. அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உலகில் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கிறதே...அவற்றில் இதுவும் ஒன்று. இப்படி இருபது வருடங்கள் குறைந்து போன மற்றுமொரு மதுரை விஜயத்தில், ஸ்மார்ட் சிட்டி ஆகிவிடும் மும்முரத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திலிருந்து வரும் புழுதியை புறந்தள்ளி "ஜம்ஜம்"மின் ஏலக்காய் டீ வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தேன்...

மனிதர்களில் தான் எத்தனை வகை! அதிலும் ஒரு சமோசாவை மனித மனம் எப்படியெல்லாம் வித்தியாசமாக சாப்பிட நினைக்கிறது! என் அருகில் இருந்தவர் சமோசாவின் தோல்பகுதிகளை தனியே எடுத்துவிட்டு மசாலாவை மட்டும் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர். அதன் பொருட்டு தோலுக்கும் மசாலாவுக்குமான பிரிவினைவாத முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வழிப்போக்கர் ஒருவர் "ஜெயிந்திபுரம் எப்படி போறது" என்று அவரிடம் கேட்டபடி வந்தார். கிரைம் பிராஞ்ச் பக்கம் கைகாட்டி, "இப்படியே நேரா போங்க ஒரு சாக்கடை வரும் அதை ஒட்டின தண்டவாளத்தை தாண்டி லெப்ட்ல போனா வந்துரும்" என்றார். அவர் எதை சாக்கடை என்று சொன்னார் என்று அறிந்த நான் கொதித்தெழ வேண்டும்தான். எல்லாவற்றையும் உடனே சரி செய்ய வேண்டும் என்று துடிப்பது இளமை. எதுவும் கடந்து போகும் என்றிருப்பது முதுமை. நான் இரண்டுக்கும் இடையில் இருப்பவன். எனவே பதமான "கொதிப்புடன்" டீயை நான் குடித்து முடிப்பதற்குள் எனக்கும் அந்த சாக்கடை என்றறியப்படும் புராதன கிருதுமால் நதிக்கும் என்ன தொடர்பு என்பதை தெரிந்து கொண்டு விடுங்கள்.

டிபன் என்ற சொல்லுக்கு வீடென்றால் இட்லி தோசையும் ஓட்டலென்றால் கூடுதலாக பூரி சப்பாத்தியும் என்றே பொருள் கொள்ளப்பட்ட‌ என்பதுகளின் தமிழகத்தில் மதுரையும் விதிவிலக்கல்ல. எங்கள் வீட்டில் நாங்கள் கேட்காமலேயே ஓட்டல் வாய்ப்பு கிடைக்கும் தினங்கள் ஆண்டுக்கு இரண்டு மட்டுமே என்று எங்கள் நாட்காட்டி காட்டும். தாத்தா பாட்டியின் திதி தேதிகள் அவை. பள்ளிக்குச் செல்லும் பொருட்டு அந்த தினங்களில் மட்டும் காலையும் மதியமும் ஆரிய பவனிலிருந்து டிபன் கிடைக்கும் "பூரி"ப்பு நாட்கள் அவை. சில தினங்கள் முன்னரே மசாவில் நன்கு ஊறிய பூரி கனவில் தோன்றி நாவின் நீர்த்தன்மையை அதிகரித்துச் செல்லும். 

பூரி உண்ட மகிழ்ச்சியில் வீடு திரும்பும் அந்த இரு தினங்களின் மாலையிலும் வீட்டினர் அளிக்கும் ஒரு பெரும்பணி உண்டு. திதியில் மீந்த உணவை நதியில் இடும் சாதாரண பணி தான். ஆனால், அதற்காக கிளம்பும் தறுவாயில் வீட்டிலிருந்து தவறாமல் கேட்கும் "நாயெல்லாம் சாப்பிடக்கூடாது கவனமா போடு" என்ற வாக்கியம் சாதாரண பணியை பெரும்பணியாய் மாற்றி விடும். அப்போதைய கிரைம் பிராஞ்ச் அருகே இருக்கும் புதர் மண்டிய வெற்றிடத்தில் இருக்கும் நாய்களை நானறிவேன். அவற்றில் சில அபார நுகர்வு சக்தி கொண்டவை. என்னைத் தொடர்ந்து வரும் இயல்பு கொண்டவை. சில நேரம் பயந்து, சில நேரம் போக்கு காட்டி, சில நேரம் எதிர்த்து என பல யுக்திகளை கையாண்டு வெற்றியுடன் வீடு திரும்புவது பள்ளிப் பருவம் முழுவதும் நிகழ்ந்த ஒன்று. நான் அன்று சென்ற நதியும் அவர் வழிகாட்டிய சாக்கடையும் இன்று ஒன்றே. ஒரு ஆதி நதி, பாம்பு உதறிச் சென்ற சட்டையைப் போல் ஆகிருதி சுருங்கி, உணர்வற்று, கழிவுகளை உள்வாங்கி பத்தடி அகலம் கூட இராத சாக்கடை என்றாகிப் போன அவலம், மூத்த குடியின் மொழி வளர்த்த ஊரில் கேட்பாரின்றி நிகழ்ந்தேறி விட்டது என்பதற்கு "கலி முற்றியது" என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்லால் நிரப்புவது? மதுரை உங்கள் மனதுக்குள் இருந்தால், "கிருதுமால்" என்பதும் அதனுள் இருக்கும் வாய்ப்பு அதிகம். தற்போதைய கூகுள் பார்வையில், பசிக்குப் புசித்து பலநாட்கள் ஆன வறிய உடம்பின் ரத்த ஓட்டம் போல் மெல்லிய தெளிவற்ற கோடாக நகரின் ஆங்காங்கே தென்படுகிறது இன்றைய கிருதுமால். ஆனால்...
காலத்தின் கனமேறிய இலக்கியப் படிக்கட்டுக்களில் மெல்ல மெல்ல இறங்கினோமானால்...

கிருதுமால் என்பது வைகையின் கிளை நதியா? அல்லது வைகைக்கும் முன்னரே இருந்த முதுநதியா? பரஞ்சோதி முனிவரை பக்கத்தில் அழைக்க வேண்டியிருக்கிறது. இவரின் திருவிளையாடற் புராணத்தில்,

"தீர்த்த னிதழிச் சடைநின்று மிழிந்து வரலாற் சிவகங்கை
தீர்த்த னுருவந் தெளிவோர்க்கு ஞானந் தரலாற் சிவஞான
தீர்த்தங் காலிற் கடுகிவரு செய்தியாலே வேகவதி
தீர்த்தங் கிருத மாலையென வையை நாமஞ் செப்புவரால்.."

என்றொரு பாடல் உண்டு. இதழி என்றால் கொன்றை. தீர்த்தன் இங்கு சிவன். கொன்றையணிந்த சிவனின் சடையிலிருந்து வருவதால் சிவகங்கை என்று பெயராம். நதி என்பதும் அவனின் இன்னொரு வடிவமே என்றென்னும் அளவுக்கு ஞானம் தருவதால் சிவஞான தீர்த்தம் என்று பெயராம். அதன் வேகமான ஓட்டத்தாலே வேகவதி என்று பெயராம். இப்பெயர்களுடன் கிருதமாலை என்றும் வைகையை பெயர் கொண்டு அழைப்பர் என்கிறது இப்பாடல்.

நதி சாக்கடையாகும் நாட்டில் கிருதுமாலை கிருதுமால் என்றானது எல்லாம் வியப்பா? சரி, கிருத‌மாலை என்பதை எப்படி பொருள்கொள்வது? எப்போது யாரால் எழுதப்பட்டது என்ற அறியப்படாத "கூடற் புராணம்" என்றொரு நூலுண்டு. பெரும்பாலான இலக்கியங்கள் போன்று கூடற்புராணத்தையும் நேரடியாக வாசித்து பொருள் கொள்ள முயல்வது அமாவாசை இருட்டில் அடர்காட்டை கடப்பதை ஒத்தது. ஆனால் மதுரையில் வளர்ந்து விட்டு கூடற்புராணம் அறியாதிருப்பது நீரை விரும்பா மீனின் வாழ்வு போன்றதாகி விடும் அல்லவா?
கைகொடுத்து உதவுகிறார் அப்பனையங்கார். இவர் "கூடல் மான்மியம்" என்றொரு நூல் எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் "ஹரிஸமய திவாகரம்" என்றொரு பத்திரிகை வெளிவந்துள்ளது. அதில் வெளிவந்ததே கூடல் மான்மியம். இதன் உதவியுடன் கூடற்புராணத்தை உட்கொண்டால், அமாவாசை அடர்காட்டை பட்டபகலில் கையில் வரைபடத்துடனும் காதில் இளையராஜாவுடம் கடக்கும் அனுபவம் கிட்டும்.

கூடற்புராணம் என்பதே மகாபுராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தின் அடியொற்றி எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது. கூடல் மான்மியத்திலும், இந்தக் குறிப்பு உள்ளது. கூடற்புராணம் வழக்கமான முறைப்படி படலங்களாய் பகுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. கிருதகாண்டம்,துவாபரகாண்டம், த்ரேதகாண்டம், கலிகாண்டம் என்ற நான்கு காண்டங்களை உள்ளடக்கி, அந்தந்த யுகத்தில் நடந்தவையாக அதற்குரிய காண்டத்தில் பொருத்தி எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
இதில் வரும் பாடலொன்று,

வேக மாதலின் வேக வதியென்றும்
மாகம் வாய்ந்ததணால் வையை யென்றுந்தா
ராக லாற்கிருத மாலைய தாமென்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ

என முன்னர் பார்த்த திருவிளையாடற் புராணத்தில் வரும் பாடல் போன்றே வைகையின் மூன்று பெயர்களை கூடற்புராணமும் கூறுகிறது. ஆனால் கூடற்புராண அமைப்பை ஒட்டியும், மதுரைக்காரன் என்ற பெருமிதம் தந்த கிளர்ச்சியினாலும், ஏகப்பட்ட கற்பனைகள் என்னுள் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. கிருதகாண்டம் கிருத யுகத்தை பாடுவதால், அதில் கிருதமாலை வருவதால், கிருத யுகத்திலும் ஓடியிருக்கக் கூடிய நதிதான் கிருதமாலையோ? சத்தியமே வாழ்க்கையென கொண்டது கிருதயுகம். ஒருவேளை பழம்பதி என அறியப்பட்ட மதுரை சத்திய யுகத்திலும் மூதூராய் திகழ்ந்து மதுரைக்கு காலம் அணிவித்த மாலை தான் இந்நதி என்பதால் கிருதுமாலை என்றானதோ? ஆக்கப்பூர்வமான கற்பனை என்பதால் அறிஞர்கள் என்னை மன்னிப்பார்களாக.

இருந்தையூர்...! இங்குதான் எங்கள் வீடு இருக்கிறது என்று சொன்னால் மதுரையில் இருந்தையூர் எங்கிருக்கிறது என்று யோசிக்கத் தோன்றும். பரிபாடலில் வரும் இந்த வரிகளை பார்த்து விட்டு எங்கள் வீட்டுக்குப் போகலாம்...

“வானார் எழிலி மழைவளம் நந்தத்
  தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
  மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
  திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”

மேகங்கள் சூழ்ந்த சைய மலையில் பெய்யும் உயிர்மருந்தாகிய மழையை மதுரை எதிர்கொள்ள அது பெருகும் நதித்துறையில் உள்ள இருந்தையூர் அமர்ந்த செல்வனின் அடி தொழுகிறோம் என்பது பொருள். பெரியார் பேருந்து நிலையத்தை ஒட்டிய நகரின் மையப் பகுதி சங்க காலத்தில் இருந்தையூர் என்று அழைக்கப்பட்டது. இருந்தையூரில் அமர்ந்திருக்கும் செல்வன் கூடல் அழகர். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து உரக்க வேண்டுதல் வைத்தால் இருந்தையூர் அமர்ந்த செல்வனின் காதில் விழும் அளவு அருகாமை! இன்று கூடலழகர் பெருமாள் கோயிலிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி உயிரற்று இருக்கும் கிருதுமாலை அன்று கோயிலின் வாயில் வரை அகன்று இருந்திருக்கக் கூடும்.

கூடல் அழகர் கோயிலை இன்று கூகுளில் தேடலாம். நேரிசல் மிகுந்த மதுரை மையப்பகுதியின் குறுகிய தெருக்களின் வழியே அதை அடையு வழிகளை கூகுள் காட்டும். இருந்தையூரை தேட முடியுமா? முடியும். கூடற்புராணம் காட்டும் இருந்தையூர் வரைபடம் வித்தியாசமானது. மீண்டும் மீண்டும் "தேடிப்" பார்க்கச் சொல்லும் அளவு அற்புதமானது.

சங்க காலத்திற்குச் சென்று ஒரு விமாத்தில் ஏறி இருந்தையூர் மீது நாம் பறந்து பார்த்தோமேயானால் கூடல் அழகருக்கு சில காத தூரம் மேல் நதி இரண்டாகப் பிரிந்து அவரின் இடது புறத்தில் வைகையாகவும் வலது புறம் கிருதுமாலையாகவும் ஓடி விரகனூர் அருகே மீண்டும் சேர்ந்து அவருக்கு ஆரம் போல் அணிசெய்வதை மனக்கண்ணில் காண முடியும். இப்படி இருந்தையூர் அமர்ந்த செல்வனுக்கு மாலை ஆனதால் கிருதமாலை என்று அழைக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த எண்ணத்திற்கு வலுசேர்க்க கலித்தொகையை உதவிக்கு அழைப்போம்..."நாங்க மதுரைக்காரைங்க" என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. கலித்தொகை காட்டும் ஒரு தலைவி "என் தலைவன் மதுரைக்காரனாக்கும்" என்கிறாள். எப்பேர்ப்பட்ட நதி ஓடும் நகரைச் சேர்ந்தவன் எனச் சொல்லும் பாடலைப் "பாருங்கள்". ஆம் படித்தபின் கண்களை மூடிக்கொண்டு இப்பாடல் வரையும் சித்திரத்தை கண்டு களித்தால் மட்டுமே பொருள் முழுமை பெறும்.

"கார்முற்றி இணர் ஊழ்த்த கமழ்தோட்டமலர் வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறமெய்தி இழுநிலம்
தார்முற்றியதுபோல தகைபூத்த வையை தன்
நீர்முற்றி மதிப்பொரூஉம் பகைஅல்லால் நேராதார்
போர்முற்றொன்று அறியாத புரிசைசூழ் புனல்ஊரன்"

பல்வேறு பூக்கள் கொத்தாய் மலர்ந்து அதீத மழையில் புரண்டோடும் நதியில் விழுந்து நீரோட்டமே தெரியா வண்ணம் நதிமேல் பரந்திருக்கிறாம். இப்படிப்பட்ட நதி ஓடும் ஊரைச் சேர்ந்தவன் என் தலைவன் என்று பெருமை கொள்கிறாள் தலைவி! அது மட்டுமல்ல...அழகிய மதுரை நிலம் அணிந்திருக்கும் மாலை போல...இதிலிருந்து நிலத்தின் இருபுறமும் மாலை போல் நதி ஓடியிருக்கிறது என்று அறிய முடிகிறது. கிருதமாலை என்னும் பெயர் சரிதானே? இந்த மாலைக்குட்பட்ட பகுதி இருந்தையூராய் இருந்திருக்கக்கூடும்.

என்ன கதை விடுகிறீர்கள்? சிறுநீர் கழிக்கும் மனிதர்களையும் மாடுகளையும் தவிர நதிக்கரையில் நாம் வேறெதையும் பார்த்ததில்லையே என்கிறீர்களா? என்ன செய்வது, நமக்கு வாய்த்தது அவ்வளவுதான். இன்னும் சற்று ஆதங்கம் கொள்ள, என்னென்ன மலர்கள் இவ்வாறு நதியில் விழுந்து ஓடின என்பதையும் பார்த்து விடுவோம்...கூடற்புராணம் கூறுகிறது இதை:

"...மன்னு மனோகரமான கடம்பவன்ஞ்சூழ‌
இன்னறைகாலதர் புன்னைசரும் பரிருந்தூதப்
புன்னை மலர்ந்துமணங்கமழ் தாதொடுபொன்வீச‌
பின்னிய கூந்தற்கமுகிடை தோகைப்பெடையாட..."

புன்னை மரங்களிலிருந்து உதிர்ந்த பூக்கள் நிலமெங்கும் பொன் போல் ஜொலிக்குமாம். இடைவெளியின்றி ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும் வெவ்வேறு வகை மரங்களின் கிளைகளில் மயில்கள் தோகைவிரித்தாடி மகிழ்ந்திருக்குமாம்...

சிலப்பதிகாரத்தில், கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரைக்கு வருகிறார்கள். கவுந்தி அடிகள் அவர்களை இடைச்சேரியில் மாதரி என்னும் இடைச்சியர் தலைவியின் இல்லத்தில் தங்க வைக்கிறார். மாதரி ஆய்ச்சியர் குரவை கூத்து ஆடி முடித்தபின்,

"...ஆயர் முதுமகள் ளாடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கன்னியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடிய..."

போயினாள். அதாவது வைகையில் நீராடி அதன் கரையிலிருந்த பெருமாளின் திருவடியில் பூத்தூவி வணங்குவதற்குச் சென்றாளாம். வைகையின் கரையில் இருந்த பெருமாள் என்றால்? அறிஞர் மு.இராகவையங்கார் 1938ல் ஒரு "ஆராய்ச்சி தொகுதி" வெளியிட்டிருக்கிறார். அதில் "ஸ்ரீ இருந்தவளமுடையார்" என்றொரு கட்டுரை உள்ளது. அதில், சிலப்பதிகார அரும்பதவுரை "வையை நெடுமால்" என்பதற்கு "ஸ்ரீ இருந்தவளமுடையார்" என்று சொல்வதாலும், நாம் முன்னர் பார்த்த பரிபாடலில் வரும் "இருந்தையூர் அமர்ந்த செல்வனை" தொடர்புபடுத்தி, நெடுமால் என்பது கிருதுமாலை நதிக்கரையில் இருக்கும் கூடல் அழகரே. வையையும் கிருதுமாலும் ஒருநதியே என்றும் நிறுவுகிறார்.

மசாலா டீயின் நீட்சி நாக்கில் நிற்க, வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினேன். கதவை திறந்த மனைவி, "பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்துட்டேன்னு சொல்லி ஒரு மணி நேரம் ஆகப்போகுது... என்னாச்சு" என்றார். வீட்டின் அடியில் அசைவற்று இருந்தது நதி.

4 Replies to “தீண்டா நதி”

 1. அருமை. மதுரை அல்லாதவர்களுக்கும் இது அருமையானதாகவே இருக்கும் என்றே எண்ணுகிறேன். ஶ்ரீரங்கம் பெருமாளுக்கு அமைந்ததை போல, மதுரை கூடலழகருக்கு கிருத்தமாலையும் வைகையும் அமைந்திருந்தன என்பது அருமையான பதிவு. எனக்கு புதிய படிப்பினை.

  கிருதமாலை கிருதயுகத்திலும் ஓடி இருக்க வேண்டும் என்பதும் மதுரை கிருதயுகத்திலும் இருந்திருக்கலாம் என்பதும் சாத்தியம் உள்ள கற்பனையே! அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கூட, யுகங்களை
  கடந்த ந்திகளை சாக்கடை ஆக்கிய பெருமை நமக்கும் நம் முந்திய தலைமுறைக்கும் உண்டு.

  1. சுவாரசியமான பதிவு….
   மதுரை பேரை கேட்டாலே , சிலிர்ப்பு , ஏற்படும் என்ற ஆரம்பமே , இதை படிக்கும் ஆர்வத்தை அதிகபடுத்துகிறது. எல்லா மதுரைகாரர்களுக்கும் இந்த உணர்வு பொதுவானது.
   கூடற்புராணம் , கூடல் மான்மியம் பற்றி மேற்கோள் காட்டி, கூடல் அழகர் , கிருதமாலை பற்றின தெளிவான நீண்ட விவரம் , எனக்கு புதியதே.

   reasoning , logic , appears to be sensible … ,that the river might have existed in kirutha yugam .
   An interesting read …..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.