
திக்குதல் ஓர் ஊனமல்ல.
அது ஒரு பேச்சு முறை.
திக்குதல் என்பது சொல்லுக்கும் அதன் பொருளுக்கும்
இடையே வீழும் மௌனம்
முடம் என்பது
சொல்லுக்கும் செயலுக்கும்
இடையில் உள்ளது என்பது போல.
திக்குதல் மொழிக்கு முந்தையதா,
பிந்தையதா?
அது ஒரு வட்டார வழக்கா அல்லது
ஒரு மொழியேதானா? இந்தக் கேள்விகள்
மொழியியலாளர்களைத் திக்கச் செய்து விடுகின்றன.
நாம் திக்கும் ஒவ்வொரு முறையும்
அர்த்தங்களின் கடவுளுக்கு
நாம் பலியை அர்ப்பணிக்கிறோம்.
மொத்த மக்களும் திக்கும் போது
திக்குதல் அவர்களின் தாய் மொழியாகிறது:
நம்மிடையே இப்போது அவ்வாறு இருப்பது போல.
மனிதனை அவர் உருவாக்கியபோது
கடவுள் கூட கட்டாயம் திக்கியிருக்க வேண்டும்.
அதனாலேயே மனிதனின் எல்லா சொற்களும்
வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.
அதனாலேயே அவன் உச்சரிக்கும் அத்தனையும்
அவனது பிரார்த்தனையில் இருந்து கட்டளைகள் வரை
திக்குகின்றன,
கவிதையைப் போலே.
– ஆங்கிலத்தில் இருந்து தமிழில், நளினி
கேரளாவின் முன் முதல்வர் (முதலாவது முதல்வரும் கூட ) இ.எம். சங்கரன் நம்பூதிரிப்பாடு அவர்களுக்கு திக்குவாய் இருந்தது. ஒரு முறை பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்டார், “உங்களுக்கு எப்போதுமே திக்குதல் உண்டா?” அதற்கு நம்பூதிரிப்பாடு கூறிய பதில் ” இல்லையே! பேசும்போது மட்டும்தான்”.
எவ்வளவு தன்னம்பிக்கையும், அங்கதமும் உள்ள பதில்! பகிர்வுக்கு நன்றி.
//கடவுள் கூட கட்டாயம் திக்கியிருக்க வேண்டும்.
அதனாலேயே மனிதனின் எல்லா சொற்களும்
வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.//
எவ்வளவு ஆழமான வரிகள்.. அருமையான மொ.பு. வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் நளினி ❤️