அபிக்குட்டி முற்றத்தில் கிடந்த நாற்கட்டிலில் உடல் கட்டிலில் கிடக்க , தலை மட்டும் கீழே தொங்கிக் கிடக்குமாறு மல்லாந்துக் கிடந்தாள். அவளின் பாவாடைச் சட்டையில், சட்டை உடல் வளைந்து ரப்பர் போல கிடந்ததால் முன்னே இழுத்துக் கொண்ட நிற்க, அதன் இடையே தெரியும் அங்கத்தை சட்டையின் நுனியை வலது கையால் இழுத்து மறைக்க முயற்சித்தாள். அவள் அணிந்திருந்த பூப் போட்ட மாம்பழ நிற பாவாடைச் சட்டை இந்திராவுடையது. ஏற்கனவே அவளால் அணியப்பட்டு பல வருடங்கள் கழிந்தே அபிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அபியின் ஆடைகள் இந்திரா உடுத்தி அழுத்த பழைய ஆடைகளைதான். குப்பாச்சி வீட்டு நடைக்கு தத்தி தத்தி நடந்து வந்தாள், குறுகிய உடலில் சுத்தி துணியை கட்டி ஒரு அமலா பொம்மையைப் போல தெரிந்தாள், வயதான அமலா பொம்மை. கன்னங்கள் ஒட்டி, பற்கள் துருத்திக் கொண்டு நின்றாலும், குறையொன்றும் இல்லா வெழுத்த பற்கள். “நறுக்கு நறுக்குன்னு சுத்து முறுக்க திங்கத பாருட்டி” பக்கத்து வீட்டு கிழவிகள் முறுக்கை பாக்கு உரலில் இடித்து திங்கும் போது, இவள் மட்டும் வாயால் அரைத்து தின்பாள். இப்போதும் உலையில் போட்ட அரிசியில் நாலை வாயால் மென்றப் படியே வெளியே வந்தாள். இந்த மாதத்தின் முதல் மழைத் தூற ஆரம்பிக்க, சிறிய துளிகள் பூமியை எட்டிய சமயம் “எட்டி குட்டி, உள்ள போ. முத மழை காச்சல் வரும். மனசுலச்சா, காச்சல் வந்தா ஆச்சி வள்ளியம்மை டாக்டர்ட்ட கூட்டிட்டு போனா, குண்டில ஊசி போடும். பிள்ளைக்கு வலிக்கும்லா. அப்புறம் ஒரண்டையும் போக முடியாது. வீட்டுக்குள்ள போட்டி தங்கம்” குப்பாச்சி அவளை எழுப்பி மடியில் அமர வைத்து வீட்டுக்குள் ஓடினாள். அவளின் இடுப்பு அபியை தூக்கி தூக்கி ஒரு பக்கம் வளைந்தே இருந்தது. மழையும் அவர்களை துரத்த, சில துளிகள் அவர்களின் தலையில் விழ, மங்களாவிற்கு சென்றவள் பழசாய் இருந்தாலும் இன்னும் பலமாய் நிற்கும் ஒத்தை மரக்கட்டிலில் அவளை அமர்த்தி அங்கேயே கிடந்த துவர்த்தால் அபியின் தலையை துவட்டினாள். ஒட்ட நறுக்கப்பட்ட முடி துவர்த்த இலகுவாயிருந்தது. அபியின் மோவாயில் அதற்குள் எச்சில் வழிந்திருக்க அதையும் துடைத்து, குப்பாச்சி தன் தலையில் கைகளால் இரண்டு பெறட்டு பிரட்டி “டிவி போடவா மக்கா, பாத்துட்டு இரு” ஓரமாய் மேஜையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை போட்டாள். ஓடியது என்னவோ? அபிக்கு அதில் ஆர்வமில்லை. பல நிறங்களில் விரியும் காட்சிகளும், மனித உருவங்களும் அவளுக்கு ஒன்றுதானே. பக்கத்தில் கிடந்த சிறிய அழுக்கான வெள்ளை துணியை வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தாள். இந்த துணியை துவைத்தாளோ, எங்கே கொஞ்சம் அழுக்கு குறைந்து அதன் நிஜ நிறம் வந்தாளோ அவளுக்கு அது வேறு பொருளாகி விடும்.
“உங்க அம்மை இன்னைக்கு வாரேன்னா. இன்னும் வரக்காணும். அவாளுக்கும் சேத்துல்லா உலை போட்ருக்கேன். இந்திராவும் வாரேன்னு சொன்னா. அவளுக்கு பிடிக்குன்னு சாளையும், கிழங்கும் வாங்கி வச்சுருக்கேன். நாளும் தெரியல கிழமையும் தெரியல” புறவாசலில் இருந்து மீன் நறுக்கிக் கொண்டிருந்தாள். மலுங்கிய அருவாமனையில் மீன் தலை பெரும்பாடு பட்டது. நல்லவேளை செத்த மீன், விரலால் இடுங்கி தலையை பிய்த்து, அவளின் செய்கைகளை வெறித்தவாறே நின்ற கருத்த பூனைக்கு எறிந்தாள். இவர்களுக்கு இதை விட்டால் தினமும் துணை தான் யார். வெளியே மழைத் தூரல் நின்றது. அபி சிறுப்பிள்ளையை போல கை தட்டி சிரிக்கும் ஓசை கேட்டு, குப்பாச்சி மீன் சட்டியை அலுமினிய சருவத்தால் மூடி, “நான் வர வரைக்கும் அமுக்குனியாட்டு இருக்கணும்” பூனையிடம் பேசிய படியே வெட்டி வைத்திருந்த மரச்சீனி கிழங்கில் சிறிய துண்டை கையில் எடுத்துக்கொண்டு மங்களாவிற்கு வந்தாள். டிவியில் ரஜினி பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. “அதானே, ரசினி பாட்டு பாக்கியோ. பாரு மக்கா. தாத்தாக்கும் ரசினி தான் இஷ்டம். கையில பச்சலாம் குத்தியிருக்கும். ஆச்சிக்கு காலு தண்ணில நின்னனா அதாக்கும் இழுத்து பிடிக்கி. இந்தா இத தின்னு” கையில் இருந்த கிழங்கை அபியிடம் நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவள் “ஆச்சி, மாமு.. மாமு.. தா.. தா” திக்கி திக்கி கேட்டாள். “கள்ளக் குட்டி. மாங்கா வாங்குனத கண்டுட்டே. மீனு குழம்புக்கு வேணுலா. சின்ன மாங்கா. ஆச்சி வெட்டும் போது ஒரு துண்டு தாரேன். உலை கொதிக்கும், நா அடுப்ப குறைச்சு வச்சுட்டு வாரேன்.” குப்பாச்சி அடுக்காளைக்கு செல்ல போகவும், பாதி மென்றுக் கொண்ட கிழங்கு வாயோடு “ஆச்சி.. தண்ணி.. தண்ணி.. தாகம்.. தா” அபி மீண்டும் அடுத்த வேலையை ஆச்சிக்கு கொடுத்தாள். தத்தி தத்தி நடந்தவள் முதலில் சிறிய லோட்டாவை செம்பு பானையில் முக்கி, முக்கால் வாசி நிரம்ப எடுத்துக் கொண்டு அபியிடம் சென்றாள். அதற்குள் வீட்டிற்குள் யாரோ நுழையும் ஓசை கேட்க, அபியின் சிரிப்பு சத்தம் கேட்டது. இந்திரா வந்தாள் மட்டுமே ஒலிக்கும் பிரத்தியேக சிரிப்பு. “என்னா ஆச்சியும் பேத்தியும் ரசமா இருக்கு போல” குப்பாச்சியின் மகள் ராணியின் குரல் கேட்டது. இந்திரா வழக்கமாய் இல்லாமல் அன்று சேலையில் வந்தாள், வந்தவள் அபியின் பக்கத்தில் அமர்ந்தாள். “இந்திரா. இன்னா.. தின்னு.. கியங்கு.. நல்லாருக்கும்”, இந்திரா அவள் கொடுத்ததை வாங்கி பாதியை பிய்த்து வாயில் போட்டு மெல்லவும் “நல்லாருக்கா.. கியங்கு” அபி ஒளிநிறைந்த கண்கள் விரிய கேட்டாள். இந்திரா அபியின் தோள்களை அணைத்து தன் மடியில் சாய்த்து கொண்டே “ஆச்சி அக்காக்கு முடி வெட்டாதன்னு சொன்னேன்லே. பாரு மெலிஞ்ச மாறி இருக்கு”, “ஈறும் பேனும் வருகே மக்கா. பழைய மாறி கண்ணு தெரியல. உன்ட கண்ணு ஆசுவத்திரி கூட்டிட்டு போன்னு எப்ப இருந்தே சொல்லுகேன். அதான் நம்ம முத்துவ வீட்டுக்கு கூப்டு ஒட்ட வெட்டி ஒட்டுட்டேன்”. ராணியும் “அபிக்குட்டி அம்மை உனக்கு அல்வா வாங்கிட்டு வந்திருக்கேன். அப்புறம் தின்னு சரியா. அம்மா மீனு நறிக்கிட்டியா. நீ இங்க இரு. நா அடுக்காளை வேளைய பாக்கேன்” சேலையை இடுப்பில் தூக்கி சொருகி உள்ளே போனாள். அபி இந்திராவையே ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆச்சி எனக்குள்ள பழைய சுடிதார் கவர்ல இருக்கு. முன்னாடியே ரெண்டு கொடுத்தேம்லா, இனியும் பாவாடை சட்டை போடாதே, இதுல நாலு வச்சுருக்கேன். இத போடு”, “பாவாடை சட்டை போட்டு உடதுக்கே குறுக்கு வலிக்கு. சுடிதார்லா இவளுக்கு போட்டு உட முடியாது. பழசை கொடுக்கதுக்கு. புது பாவாடை சட்டை வாங்கிட்டு வரலாம்ல. அவளுக்கு என்ன தெரியும். பாவம் பிள்ள. நீ போட்ட பழசையே இன்னைக்கும் கொடுக்கியே” இந்திரா எதுவும் பேசாமல் இருந்தாள். அவள் உடுத்திக் கொண்டிருக்கும் சேலை போன தீபாவளிக்கு எடுத்தது. அன்றைக்கு அபிக்கு அவள் மூன்று வருடம் முன்பு உடுத்திய அரக்கு நிற பாவாடை சட்டையை கொடுத்திருந்தாள். “இந்திரா.. இப்போ புதுசா வந்திருக்கே அந்த பஞ்சு துணி என்னவோ பேரு வருமே. அத வாங்கி தான்னு என்னைல இருந்து கேக்கேன். தூரம் வந்தா இன்னும் துணிய வச்சு அங்க புண்ணு வருகு. பாவம் பிள்ள கஷ்டப் படுகு.” இந்திரா அதற்கும் மௌனத்தையே பதிலாய் அளித்தாள். குப்பாச்சி நாப்கின் இன்றைக்கு வாங்கி கேக்கவில்லை, மாதம் நான்கு ஆகிறது. இரத்தம் பட்ட துணிக்காக வீட்டில் இருக்கும் வேஷ்டியை எத்தனை நாள் தான் கிழிப்பாள். பாவம் இந்திராவிற்கு நேரம் இல்லை போல. சிரித்து முடிக்காத அபிக்குட்டி அவளின் மடியில் தலை சாய்த்துப் படுத்தாள், அப்படியே புரண்டாள். கிழங்கு சாப்பிட்ட வாய் சேலையில் பட, “அம்மா இங்க பாரும்மா. சாரில எச்சி ஆக்கிட்டா. எட்டி அபி தள்ளி போட்டி. புது ட்ரெஸ்ஸில எச்சி ஆக்கிட்டு”. குப்பாச்சிக்கு சுர்ரென்று தலையில் சூடு ஏறியது. அதை வெளிக் காட்டி கொள்ளாமல், விருக்கென்று அபியை தூக்கி, தரையில் கால் நீட்டி அமர்ந்து மடியில் படுக்க வைத்தாள், அப்படியே தலையை தடவிக் கொடுத்தாள். இந்திரா இதையெல்லாம் கவனிக்க நேரம் இல்லாமல் புடவையில் பட்ட கிழங்கை துடைத்தாள். “ஆச்சி.. இந்திரா.. ட்ட.. போனும்” அபி சிரித்த முகத்தை தொலைத்து அழும் முகத்தை சூடிக் கொண்டாள். “பிள்ள மாங்கா கேட்டிலா. ஆச்சி தாரேன். எட்டி ராணி. மாங்கா வெட்டுன துண்ட ஒன்னு கொடு பிள்ளைக்கு” அபியை திசைத் திருப்பினாள். ஆனால் அவளின் கண்கள் இந்திராவையே நோக்கி கொண்டிருந்தது. ஒளி நிறைந்த கண்கள்.
“அம்மா, நல்ல விஷயமாட்டு வந்தேன்” கையில் இருந்த தேயிலையை இந்திராவிற்கும், குப்பாச்சிக்கும் கொடுத்தாள். இந்திரா குடிக்க ஆரம்பிக்க, குப்பாச்சி அபியை தூக்கி உட்கார வைத்து தேயிலையை அவளுக்கு கொடுத்தாள். “செய், மதியில்லையே மூணு கப்பு தான் போட்டேன். இரிம்மா” ராணி அடுக்காளைக்குள் போக நுழையவும் “எட்டி, எனக்கு டீ வேண்டாம். சோறு வடிச்ச தண்ணிய மட்டும் கொண்டா. என்னைக்காச்சும் வாற. வந்தவ அடுக்காளையிலே கிடந்தா. பிள்ள நீங்க வாற அன்னைக்கு தான் சிரிக்கும். வாட்டி சீக்கிரம். அவள கொஞ்சம் பாரு” மெல்லிய கோபம் பேச்சில் எட்டிப் பார்த்தது.
“இந்திராவுக்கு ஒரு வரன் வந்திருக்குமா. மாப்பிளை கடுக்கரை. நம்ம எங்கோடியா மாமாவுக்கு சொந்தம். நல்ல பையதான். பாலிடெக்னிக் படிச்சுட்டு மெட்ராஸ்லா காரு கம்பனில வேல பாக்கான். மாசம் இருவத்தையாயிரம் சம்பளம். இருவது பவுனு, ரெண்டு லட்சம் கையில. நம்ம மூர்த்தி மகளுக்க கல்யாணத்துல வச்சு, மாப்பிள்ளைக்கு அக்காவும், அம்மாவும் இவள பாத்துட்டு ரொம்ப பிடிச்சு போச்சு. அவரு போய் இன்னைக்கு மூணு வருஷம் ஆச்சு. இப்போதான் ஒரு நல்லது நடக்கு. எவ்ளோ கஷ்டம். இப்போ ஒன்னும் தலைப் போற பிரச்னை இல்ல. பவுனு எனக்குள்ளது ஒரு பத்து பவுனும். இவளுக்குன்னு எடுத்தது ஒரு எட்டு பவுனு இருக்கு. ரெண்டு சீட்டு போட்ருக்கேன். அதுல ஒரு ஒன்றரை லட்சம் வருகு. இவ ஒரு அம்பது ஆயிரம் சேத்து வச்சுறக்கா. எப்படியாவது குமற இறக்கிறனும். மேலாங்கோட்டு காரி தான் காப்பாத்தணும். நெய்த்தாபிஸ்லா ஓடம் ஓட்டியாக்கும் பிள்ளையை வளத்தேன்” சிறுதுளி நீர் கண்ணில் வடிய சந்தோசமாய் கூறினாள். இந்திரா வெட்கத்தில் தலைக் குனிந்து புன்னகைத்தப் படியே இருந்தாள், அவள் கால்கள் ஒட்டியப் படி கால் பெருவிரல் மேலும் கீழுமாய் அசைந்தது . அவளின் செய்கைகள் அபிக்கு ஏனோ பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. “இந்திரா.. இந்திரா.. சிரிக்கி.. ஆச்சி.. இந்திரா” அபி பேசிக் கொண்டேயிருந்தாள். குப்பாச்சியை தவற யாரும் அதைக் கவனிக்கவில்லை.
“நல்லப் பையன் தான, எல்லாம் விசாரிச்சிட்டியே. கெட்டிக்கப் போற பிள்ளைகளுக்கு பிடிச்சா சரி” குப்பாச்சியின் கைகள் அபியின் கன்னத்தை வருடியப்படியே இருந்தது. “அவாளுக்கு என்ன, இப்போவே போன்ல பேசிட்டு கிடக்கு. நேரமும் காலமும் இல்ல. அப்போலாம் பாத்தா கெட்டுனோம். தாலிக் கெட்டப்ப அவருக்கு முகத்த பாத்தேன். ரெண்டு பெத்தேன். என்ன பாவம் செஞ்சோமோ! யாரு குடிய கெடுத்தோம். ஒன்னு இப்படியாட்டு. ஒருத்தியாச்சும் நல்லாருக்கட்டும். நா வாங்கி வந்த சாபம்” ராணியின் கண்ணீர் வடிந்தது.
குப்பாச்சியின் மடியில் கிடந்த அபியை தன் மடியில் மாற்றிக் கொண்டாள். குழம்பு கொதிக்க அதை இறக்கி, அவித்த கிழங்கையும் குப்பாச்சி எல்லோருக்கும் பரிமாறினாள். அபிக்கு ஊட்டினாள். மூவரும் சாப்பிட்டு முடிக்கவும், குப்பாச்சி தனியாய் தட்டில் போட்டு சாப்பிட்டாள். அவள் சாப்பிடும் போது பூனை அருகிலே வந்தது, நெடுநேரமாய் மற்றவர் சாப்பிடும் போது தூரமாய் நின்று வெறித்தவாறே இருந்தது. சாளையில் இரண்டு துண்டை அதற்கு போட்டாள். சாப்பிட்டு பின் பாத்திரமும் கழுவி மங்களாவிற்கு வந்தாள். ராணி அபியை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு முற்றத்தில் நடந்தாள், அவளின் கையில் அல்வா பொட்டலம் இருந்தது.
இந்திரா போனில் பேசிக்கொண்டு அங்குமிங்கும் நடந்தாள். ‘அபியை இங்க விட்டு வருஷம் என்னாச்சு. ஒத்தையா கிடந்து பாக்கேன். துணைக்கு தான் யாரு இருக்கா. எல்லா சாமியும் கும்பிட்டு என்ன பலன் கிடைச்சு. அளவோல இருக்கும் பொடிசுல. நான் தானே அபிராமின்னு பேரு வச்சேன். இவளுக்க இளையவளுக்கு கல்லியானம் வர போகு. இவளுக்கு ஒன்னுக்கு கூட ஒழுங்கா போகத் தெரியாது. ஒருத்தியாச்சும் நல்லா இருக்கட்டும். ராணிக்க கதை எப்போதான் முடியுமோ. ஒத்தக் கட்டையா பிள்ளையை கட்டி கொடுக்க போறா. சொக்கறான் ஒருத்தன் உதவுனான’ குப்பாச்சி தனக்குள்ளே பேசிக் கொண்டாள்.
அபியின் தலை ராணியின் தோளில் சாய்ந்து கிடந்தது. “அம்மா உள்ள ரூமுல துணிய விரிச்சு பேன போடு. உறங்கிட்டா” ராணி உள்ளே வந்தாள். அவளை படுக்க வைத்ததும், அபியைத் தவிர எல்லோரும் முற்றத்தில் அமர்ந்தனர். “வர சித்திரைல தொடக்கத்துல சின்னதா பேசி முடிச்சுட்டு, வைகாசில கல்யாணம் வச்சிரனும். மாப்பிள்ளைக்கு அம்மை, அப்பாலாம் கடுக்கரைல இருக்கா. ஒரு அக்கா, அவ மாப்பிளை முனிசிபாலிட்டில வேல பாக்கான். அவளும் ஏதோ வேலை பாக்கா போல. பிள்ளைகளு அவாள் அம்மை வீட்டுல நிக்கும். இந்திராவுக்கும் மெட்ராஸ்ல ஒரு வேலை பாக்கணம்னு மாப்பிள்ளை சொல்லிட்டாரு. பின்ன ஒரு சம்பளத்துல மெட்ராஸ்ல என்ன கழிக்க முடியும். அதான் கூட மாட இருந்து சமைச்சு அவாள் கூடயே போயிடலாம்ன்னு இருக்கேன். எப்படியும் இவ உண்டானா நா அங்க போய் தானே ஆகணும்” ராணி பேசிமுடிக்கவும் குப்பாச்சி பேசாமல் இருந்தாள். ஏனோ அபியின் நினைவு வர, ராணி “சுப்பையா அண்ணாச்சிக்க மவ உண்டாயி இருந்தாள்ள. அவ மூணு மாச ஸ்கேன் எடுக்க போகும் போது, பிள்ளைக்கு வளர்ச்சி இல்லைன்னு அபார்சன் பண்ணிட்டு. அப்போல்லாம் இது இருந்துச்சுன்னா. எனக்கு இந்த நிலைமை உண்டா” பேசி முடிக்கும் முன்னே, குப்பாச்சி கத்தினாள் “என்னடி பேசுக. பிள்ளையை கருவுலயே கொல்லுவியா கொலகாரி பாவி. இவள நீதான் பெத்தியா. நீயாட்டி பாக்க. நான்லா பாக்கேன். என் ஆயிசுக்கும் அவள பாப்பேன். யாரு துணையும் வேண்டாம். பெத்ததுக்கு அவளுக்கு மாசம் நீ ரூவா கொடுக்கணும். இல்லாட்டியும் எனக்கு வயசான காலத்துல கவெர்மென்ட் ரூவா கொடுக்கு, அது போதும். நீ உனக்க ஒரு பிள்ளையை பாரு. அது போதும்”, “என்னைக்காவது இங்க வந்தா பெகலம் இல்லாம போய் இருக்கம. பெத்தவளுக்கு தான் தெரியும் அந்த கஷ்டம். வாட்டி இந்திரா போவோம். ரூவாய தாத்தா போட்டோ கிட்ட வச்சுட்டு வா போலாம்”.
அவர்கள் அங்கிருந்து சொல்லிக்கொள்ளாமல் கிளம்பினர். வழக்கமாய் நடக்கும் கதை தான், அபியை ஏதாச்சும் குறை சொன்னால் குப்பாச்சியால் தாங்க முடியாது. பின் என்றாவது ஒருநாள் ராணி அம்மையிடம் சமாதானம் பேசிக் கொள்வாள். குப்பாச்சி உள்ளே அபி தூங்கும் அறைக்கு வந்தாள். அபி குழந்தையை போல உறங்கிக் கொண்டிருந்தாள். ‘என் காலம் முடிய வர ஒன்ன பாப்பேன். எனக்கு காலம் முடியுன்னு தெரியும் போது, விஷத்த கொடுத்து நானும் செத்து ஒன்னையும் கூட்டிட்டு போயிருவேன் மக்கா. இவளுக கிட்ட ஒன்ன தனியா விட மாட்டேன்’ தனக்குள்ளே பேசிக் கொண்டு அபியின் அருகில் படுத்தாள். அபியின் கால்கள் தன்னிச்சையாய் குப்பாச்சியின் மேலே பட, அதை அவள் தடவிக் கொடுத்தாள்.