அந்த நாள்

ஜோரான மழை பெய்து கொண்டிருந்தது. பத்து நிமிடத்திற்கு முன்னால் வரையில் வானம் மழைக்காக தயாராகியிருந்த எந்த அறிகுறியையும் காட்டவில்லை. “இப்போ எங்கயிருந்து இப்படி ஊத்து ஊத்துனு ஊத்திது” தனக்கு தானே பேசிக்கொண்டு சிங்கில் கிடந்த பாத்திரத்தை தேய்த்துக் கொண்டிருந்தாள் பத்மினி.

சரவணன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் இரவில் சரியாக தூங்கி இருக்கவில்லை. பத்மினி இரவில் தூங்கியே இருக்கவில்லை. படுத்த முதல் ஒரு மணி நேரத்திற்கு கொஞ்சம் கண்ணு அசந்திருந்ததாக, நியாபகம். அது ஒரு மணி நேரத்திற்கு சில மணித்துளிகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்திருக்க கூடும்.

அடுத்து தொட்டிலில் கிடந்த வெண்பா  வீலென்று வைத்த ராகத்தில் பத்மினியின் மொத்த உறக்கமும் கலைந்திருந்தது. வெண்பா பிறந்து ஆறு மாதம் ஆகிறது.போகப் போக அழுகை குறையுமென்றே சித்தி சொல்லியிருந்தாள். ஆனால் அப்படி ஒன்றும் நடந்தமாதிரி  இல்லை.  கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தை விடவும் வெண்பாவின் அழுகை அதிகரித்திருந்தது. 

இரவு பசிக்கென்று ஆரம்பித்த அழுகை பாலூட்டி அழுகையை அடக்கி தொட்டிலையாட்ட முழுவதுமாய் அந்த பிஞ்சு விழிகள் மூடுவதற்குள், தொட்டில் துணி ஈரமாக, மீண்டும் ராகமாக தொடங்கியது. பிறகு  இடைவெளி கொடுத்து கொடுத்து அவ்வப்போது காரணங்களின்றி அழுகை இரவு முழுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது.அது தாய் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக நடந்த போலி நாடகம் போலவும் பத்மினிக்கு தோன்றியது. அவள் கையில் தூக்கி வைத்துக் கொண்டால் அழுகை நின்றது . தொட்டிலில் போட்டால் இரண்டு நிமிடங்கள் கண்ணை உருட்டி உருட்டி அமைதியாய் இருக்கும், பின் அழுகை ஆரம்பமாகும். 

பத்மினி சரவணனை திரும்பி பார்த்தாள்.அவன் அங்குமிங்கும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். ஆனால் கண்கள் மட்டும் திறக்கவேயில்லை. பளீரென்று முகத்தில் விழுந்த டியூப் லைட் ஒளியிலிருந்து தப்பித்துக் கொள்ள, போர்வையை முகத்தோடு இழுத்து போர்த்தி கொண்டிருந்தான். 

இப்பொழுது தொட்டிலில் சிறு அசைவுமில்லை. ஆடாமல் அசையாமல் அப்படி ஒரு துயில் நடந்தேறி கொண்டிருந்தது‌.விடியற்காலை ஐந்து மணி வரையிலும் பத்மினியை விழிக்க வைத்திருந்த களைப்பு தீர உறங்கி கொண்டிருந்தாள் வெண்பா.ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் ஒரு குட்டித் தூக்கம் போட முயன்ற பத்மினியின் முயற்சி தோல்விலேயே முடிந்திருந்தது. புரண்டு புரண்டு படுத்த போதிலும் ஏனோ உறக்கம் வரவில்லை, ஒருவிதச் சலிப்பே மேலோங்கியிருந்தது. புரண்டு புரண்டு ஒரு மணி நேரம் கழிந்திருக்க, அலாரம் ஒலி  நேரம் சொல்லி எழுப்பிவிட்டிருந்தது.

மணி இப்பொழுது எட்டை தொட்டிருந்தது. இன்னும் இரண்டு பாத்திரங்கள் மீதமிருந்தது. மதில் மீது காக்கைகாக வைத்திருந்த இட்லித் துண்டு பெய்து ஓய்ந்திருந்த மழையில் முழுவதுமாக நனைந்திருந்தது. காக்கையின் மீது வந்த கரிசனத்தில் பாத்திரம் தேய்த்து அடுக்கி முடித்த கையோடு, ஈர இட்லி துண்டை அப்புறபடுத்திவிட்டு அதுக்கு மாற்றாக இன்னொரு இட்லி துண்டை மதில் மீது வைத்தாள்.  

“அரை மணி நேரத்தில சும்மா நச்சுனு ஒரு அடி அடிச்சிட்டு போயிருச்சு” மனதில் நினைத்தபடியே பின் வாசற்படிகட்டில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பற்கள் அரிசியை அரைத்துக் கொண்டிருந்தது. 

நாட்கள் ஓடலாம், பழக்கம் மாறுமா? எப்பொழுது மழை வந்தாலும் பத்மினியின் கைகள் அவளை அறியாமலேயே அரிசி பாத்திரத்திற்கு  சென்று,  ஒரு பிடியோடு திரும்பி இருக்கும்.

“எப்படி அரிசி திங்கிறா பாரு. மழை வந்தா திங்க அது என்ன முறுக்கு பலகாரமா புள்ள. இப்படி அரிசிய வெறுமனே தின்னா கலியாணத்துக்கு ஒரு சனம் வர விடாம மழை கொட்ட போகுது” என்று அம்மா கடிந்து கொள்வாள்.

“ஆமா நான் அரிசி தின்னா, என் கல்யாண பத்திரிக்கையை அரிசி போயி மழைக்கு வச்சிருமோ. போம்மா” என்று அம்மாவை கேலி செய்தபடி அடுத்த வேலையை பார்க்க போய்விடுவாள் அவள்

ஓரே பொண்ணு என்பதால், அம்மாக்கு பத்மினி ரொம்ப செல்லம். அம்மாவும் அவளும் சில சமயம் அக்காவும் தங்கையும் போல் அடித்துக் கொள்வார்கள் , கல்லூரி விடுமுறை நாட்களில் அம்மாவை வம்பிழுப்பது தான் பத்மினிக்கு பெரிய பொழுதுபோக்கு. சில நேரங்களில்  இருவரும் சமையல் குறிப்பு பகிர்ந்து கொள்வார்கள். 

அம்மாவின் சமையல் குறிப்பு அனுபவத்தில் பிறந்ததாகவும், பத்மினியின் சமையல் குறிப்பு, நெட் வீடியோக்களில் இருந்து திருடியதாகவும் இருக்கும். பத்மினி சொல்லும் சமையல் குறிப்பை அச்சு பிசகாமல் முயற்ச்சித்து பார்த்து, “ என் மக சொன்ன மாதிரி , செஞ்சேன், நல்ல ருசியாக இருந்திச்சு” என்று பக்கத்து வீட்டு பெண்களிடம் மகளின் பெருமையை பறை அடித்துக் கொள்வான் அம்மா.

“நீ என்ன விட சமையல் நேக்கு தெரிஞ்சு வச்சிருக்க புள்ள” என்று வாஞ்சையோடு மகளை புகழ்வாள்.  அம்மாவின் பரந்த மனதை நினைத்து ஆச்சரிய பட்டுக் கொள்வாள் பத்மினி. 

“ நீ சமைக்கிறதே ஒரு அழகா இருக்குடி. நீ கடுகு போடுறதே ஒரு அழகு” பத்மினி அத்திபூத்தாற்போல் நடத்தும் சமையல் நாட்களில் அவளை புகழ்ந்து கொண்டே இருப்பாள் அம்மா.

வாயில் அறைபட்டு கொண்டிருந்த அரிசி தீர்ந்து போயிருந்தது. மழையின் மிச்சம் மரத்தின் இலைகளிலிருந்து துளிகளாக விழுந்து  கொண்டிருந்தது. 

அம்மா சொன்னது போலவே பத்மினியின் கல்யாணத்தன்றும் மழை வந்தது. ஆனால் அன்று அவள் மனம் அரிசிக்குப் பதிலாக அம்மாவை தேடியது.

“பத்மி…..” சரவணன் கூப்பிட்டுக் கொண்டே வந்தான்.

பின் படிகட்டிலிருந்து இப்பொழுது அடுப்பின் அருகே வந்திருந்தாள் பத்மினி. சரவணன் ஒரு காபி தொடங்கி. ஆமா அதான் அவள் அவனுக்கு மனதிற்குள் வைத்துக் கொண்ட பெயர். அவன் பல் தேய்த்து முடித்து வர, அதே நொடி அவன் கையில் காபி டம்ளரை ஒப்படைக்காமல் போயிருந்தால் எங்கு இருந்து அவனுக்கு அத்தனை கோபம் வருமென்று தெரியாது. அப்படி நடந்தால் அந்த நாள் முழுவதும் அவன் ஒருவித எரிச்சலோடே காணப்படுவான்.

“ இங்க நிக்கிறாயா?…” என்றபடி அவளை கடந்து பின்கட்டில் இறங்கி போனான்.

அவள் காப்பி போட்டு இறக்கவும் அவன் பல் தேய்த்து முடித்து வந்திருக்கவும் சரியாக இருக்க, அவன் கையில் காப்பி டம்ளரை கொடுத்தாள் அவள்.

தொட்டிலின் எதிரே இருந்த சோபாவில் அவன் அமர, அவள் அடுப்படியில் காய்கறி நறுக்கி கொண்டிருந்தாள்.

“ நைட்டு பாப்பா அதிகமா சிணுங்கிட்டே இருந்தா? “ 

“ஆமாங்க. இப்பல்லாம் வர வர நைட்டு அதிகமா சிணுங்கிறா” அடுப்படியிலிருந்து பதில் அவன் காதுகளுக்கு சென்றது.

“டாக்டர்கிட்ட வேணும்ன்னா ஒரு தடவ போய் என்ன ஏதுன்னு பாத்திட்டு வந்திருவோமா?” 

“ வேணாங்க…நான் சித்திகிட்ட இன்னைக்கு போன் போட்டு கேக்குறேன்.அவங்க என்ன பண்ணலாம் சொல்லுவாங்க” மூணு பிள்ள பெத்து வளத்த இருக்குறவங்களுக்கு தெரியாததா, என்று வள்ளி சித்தியை பற்றி நினைத்துக் கொண்டாள்.

மீண்டும் அம்மாவின் நினைப்பு மனதை அழுத்தியது.

“ மனசுல ஆயிரம் நினப்பு கிடந்தாலும் , பொம்பள கை,  வேலை செய்திட்டு தான் இருக்கணும்” இதுவும் அம்மா சொல்லும் வசனம் தான்.

சரவணன் குளிச்சு கிளம்பி அலுவலகத்திற்கு தயாராகியிருந்த, நேரத்தில் அவளும் அவனுக்கான மதிய உணவை சமைத்து டிபன்பாஃக்ஸில் அடைத்து முடித்திருந்தாள்.

இப்பொழுது தொட்டில் லேசாக அசைந்தது. வெண்பா ஒரு பூனைக்குட்டியை  போல நெட்டி முறித்துக் கொண்டிருந்தாள் தொட்டிலினுள். பத்மினி அவளை அள்ளிக் கொண்டாள்.

“ அப்பாக்கு டாட்டா சொல்லுங்க” என்று குழந்தையின் கையை அசைத்தபடி சரவணனை வழியனுப்பி முடித்திருந்தாள்.

வெண்பாவின் சிறு உதடுகள் இப்பொழுது சிரித்தபடி இருந்தது. சிரிப்பில் அந்த இதழ்கள் அழகாக குவிந்திருந்தது. அதை ரசிப்பதில்  அம்மாவின் நினைப்பை மறந்திருந்தாள் பத்மினி.அவள் பசியையும் சேர்த்து.

கையில் கொடுத்த விளையாட்டு பொருளை குழந்தை வாயில் விட்டு சப்பிக் கொள்ள. “ சீ வாயில வைக்க கூடாது” என்று விலக்கி விட்டாள்.

தெருவில் காரும் பைக்கும் கடந்து போகும் சத்தமும், இரைச்சலுமாக இருந்தது. குழந்தை பசியாறி மீண்டும் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தது. “ இத்தன சத்ததுக்கும் தூங்கிறா, ஆனா நைட்டு அமைதியா இருந்தாலும் அடம் பண்ணிட்டே இருக்கா,” என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

“ பச்ச புள்ள பண்ணுற எல்லாத்துக்கும் காரணம் தேடாதடி. பிள்ள ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கும்” வள்ளி சித்தி மதியம் போனில் சொன்னது நியாபகம் வந்தது.

இரவு தூங்காத அசதி கண்ணை மயங்க செய்ய, கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள். சரவணன் வீட்டிருக்கு திரும்பி வர இன்னும் மூன்று மணி நேரம் பாக்கியிருந்தது.

தூங்க முயற்சித்த போது வெளியே செல்லும் வண்டிகளின் ஹாரன் ஒலி சத்தம் இடையூறு செய்து கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

“ மாப்பிள வாங்கி போட்டிருக்க வீடு தான் மெயின் ரோட்டுல இருக்குனு சொல்லுறாங்க. மெயின் ரோடு வீடே கொஞ்சம் சிரமந்தான். “ சரவணனை வரனாக பேசி முடித்திருந்த போது அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.

ஒரே பெண் என்பதால் பத்மினிக்கு மாப்பிளை பார்த்த போது , அம்மாவும் அப்பாவும் கூடுதல் கவனம் எடுத்து கொண்டார்கள். செல்லமாக வளர்த்த பிள்ளையின் வாழ்க்கை எக்காரணத்திலும் கோணலாக போய் விடக்கூடாது என்ற எச்சரிக்கை. 

சரவணன் வேலை பார்த்த இடம், அவன் சுற்றம் நட்பு என்று எங்கும் அவனை பற்றி பல விசாரணைகள் நடத்தியிருந்தார்கள்.

“ நல்ல குடும்பம், பையனுக்கு நல்ல வேலை, கைநிறைய சம்பளம். கல்யாணம் முடிஞ்சதும் வேலை பார்க்கிற ஊருக்கே நம்ம பிள்ளைய கூட்டிட்டு போயிடுவான். அங்க சொந்த வீடும் கிடக்கு. ….அத்தான் போயி அந்த வீட்டையும் பாத்து வந்தாச்சு. இன்னும் என்ன வேணும் ஒரு பொம்பளை பிள்ள வாழ” வள்ளி சித்தி அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள்.

“பொம்பள புழப்புல ஆயிரம் இருக்கே…கடைசி வர பிள்ளைய மனசு கோணாம பாத்துகிரனும்” அம்மா சித்திக்கு பதில் சொன்னாளா, இல்லை அவளே அவளுக்குள் சொன்னாளோ.

“ அதுலாம் பாத்துகிருவான். நம்ம பிள்ளையும் எல்லாம் தெரிஞ்சு புரிஞ்சு பக்குவமா நடந்துகிரும்” சித்தி சமாதானம் சொன்னாள்.

கல்யாண வேலைகள் ஒவ்வொன்றாக, நடக்க தொடங்கின. அம்மா நாளுக்கு நாள் சோர்ந்து காணப்பட்டாள். கல்யாண வேலையில் வந்த களைப்பு என்று பார்க்கிறவர்கள் நினைத்து கொண்டார்கள். சற்றென்று அவள் சாய்ந்து, நெஞ்சு வலியில் உயிர் பிரிந்திருந்ததாக, மருத்துவர் சொன்னபோது தான், அவள்  உடம்பு முடியாமல் இருந்திருக்கிறாள் என்பதே மற்றவர்களுக்கு தெரிய வந்தது.

கல்யாணம் ஆறு மாதம் தள்ளி போடப்பட்டது. சிலர் ஒரு வருடம் தள்ளி போடலாம் என்றார்கள். பத்மினியின் சித்தப்பா தான், கெட்டது நடந்த வாசலில் சீக்கிரம் ஒரு நல்லது நடத்தனும் என்று சொல்லி ஆறு மாதம் தள்ளிப் போட்டால் போதும் என்று முடிவு செய்தார். அப்பா அதிகமாக பேசவில்லை. எல்லோர் பேச்சுக்கும் தலையாட்டினார்.

பத்மினி சோறு தண்ணி இல்லாமல் கிடந்தாள். சித்தி சமைத்து கொண்டு வைத்து போகும் சாப்பாட்டில் பாதிக்கு மேலாக தினமும் குப்பைக்கு போனது. கல்யாண நாளன்று கூட பத்மினியின் முகம் இறுகி போய் கிடந்தது. “பேருக்காச்சும் கொஞ்சம் சிரிடி “ என்று சித்தி தேத்தினாள்.

புரண்டு புரண்டு படுத்த அரை தூக்கத்தில் ஏதேதோ காட்சிகள் கண்களுக்குள் ஓட,  திடீரென்று தோன்றிய அம்மாவின் முகத்தை பார்த்துத் திடுக்கிட்டு எழுந்தாள். கண்களை உடைத்து கொண்டு கன்னங்களில் நீர் வழிந்தோடியது.

தொட்டிலில்  குழந்தை வீலென்று அழ, மூக்கை உறிஞ்சியபடியே குழந்தையை கையில் அள்ளிக் கொண்டாள்.

கடிகாரம் ஆறு மணி என்று நேரம் காட்டியது. வெண்பாவின் அழுகை கொஞ்ச நேரத்தில் அடங்க, பாய் விரித்து அவளை அதில் படுக்க வைத்து விட்டு, முகம் கழுவி, சாமி அறையில் விளக்கு ஏற்றி வைத்தாள்.

அம்மாவின் நினைப்பும், முதல் நாள் தூங்காத களைப்பும் சேர்ந்து, மனதிலும் உடலிலும்  சோர்வை .ஏற்படுத்தியிருந்தது.

 சரவணன் இன்னும் சற்று நேரத்தில் வரக்கூடும்.

இரவு சாப்பாட்டுக்கு என்ன சமைக்கலாமென்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது பத்மினிக்குள். பாயில் படுக்க வைத்திருந்த குழந்தை கவிழ்ந்து கைகளையும் கால்களையும் அசைத்து கொண்டிருந்தது. ஏதோ நீச்சல் செய்வதற்கான பயிற்சி போல் அந்த அசைவுகள் இருந்தது.

அடிவயிற்றில் நழுக்கம் தெரிய நாள்காட்டியை பார்த்தாள். ஏற்கனவே இரண்டு நாட்கள் தள்ளி போயிருந்ததை அப்பொழுது தான் உணர்ந்தாள். வலி அடிவயிற்றை அமுக்கியது. பீரோவின் மேலிருந்த நாப்கின் பெட்டியை எடுக்கும் போதே குழந்தை அழும் சத்தம் கேட்டது. அது பசிக்கான அழுகை.

குழந்தைக்கு பசியாற்றி கொண்டிருக்க, அடிவயிற்றின் வலி வேகமெடுத்தது. வாசலில் சரவணனின் வண்டி வந்து நிப்பாட்டும் சத்தம் கேட்டது. கையில் குழந்தையை ஏந்திகொண்டு, சேலையை இழுத்து விட்டு பால் புகட்டும் இடத்தை மறைத்து விட்டுக் கொண்டு போய் வாசலை திறந்து விட்டாள்.

வானம் சந்தி நேர இருட்டோடு சேர்த்து அடுத்து இன்னொரு மழைக்கான இருட்டையும் தன்னுள் சேர்த்து கொண்டிருந்தது.

பசியாறிய குழந்தை இப்பொழுது தூங்கி கொண்டிருந்தது.

பத்மினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். பேசாமல் படுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்பது போல் இருந்தது.

உடைமாற்றி , கை கால் கழுவி வந்திருந்த சரவணன் அவள் அருகில் நின்றபடி, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பசிக்குதாங்க, ஒரு கால் மணி நேரந்தான். ரெடி ஆயிரும்” அடுப்பில் எதையோ வதக்கியபடி திரும்பி பார்க்காமல் சொன்னாள்.

“ மெல்ல ரெடி பண்ணு. ஒன்னும் அவசரமில்ல” அவன் பின்னிருந்து அவள் இடுப்போடு கைகளை சுற்றி அணைத்துக் கொண்டான்..அவன் கைகள் கொடுத்த அழுத்தம் அவளது அடிவயிற்று வலியை அதிகரிக்க அவள் அவன் பிடியை தளர்த்தினாள்.

“என்னாச்சு” 

அவள் காரணத்தைக் கூறினாள்.

“ …………”  அவன் என்ன முணுமுணுத்தான் என்று அவள் காதுகளில் விழவில்லை.ஆனால் ஏதோ கடிந்து கொள்கிறான் என்பது மட்டும் புரிந்தது.

அவன் முன் அறையின் சோபாவில் சென்று அமர்ந்திருந்தான்.

அவள் கண்கள் கொட்டுவதற்காக சிவந்திருந்தது.

மழைக்காக அடைத்து நின்ற வானம் இப்பொழுது கொட்ட தொடங்கியிருந்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.