தமிழ் மொழியின் தொன்மை: ஒரு கண்ணோட்டம்

“உலகின் மிகத் தொன்மையான மொழியாகிய தமிழ்” என்னும் சொல்லாட்சி பரவலாகத் தமிழ்ச்சூழலில் பயன்படுத்தப் படுகிறது. அரசியல் தலைவர்களின் பிரசாரங்கள் மற்றும் வெகுஜன எழுத்துக்களில் மட்டுமன்றி பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்களிலும் கூட இக்கருத்து பிரசாரம் செய்யப்படுகிறது  பாரதப் பிரதமர் நரேந்திர மோதி கூட கடந்த சில வருடங்களில் ஒன்றிரண்டு முறை தமது உரைகளில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த வாசகத்துடன் கூடவே “சம்ஸ்கிருதத்தை விடவும் தமிழ் பழமையானது” என்றும் பல தமிழ் மொழிப்பெருமைவாதிகள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். 

இத்தகைய கூற்றுகள் அறிவியல் பூர்வமானவை  அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை. “தமிழ் அழகான மொழி, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று” என்பதோடு  நிறுத்தியிருக்கலாம்.  அதுவே போதுமானது, சரியானது. மற்றபடி, வரலாற்று ரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் சிறிதும் ஆதாரமற்ற ஒரு விஷயத்தை  ஓட்டைப்பானை  கோட்பாட்டாளர்களும்  (crackpot theorists)  பரப்புரை அரசியல்வாதிகளும் சொல்வது அப்படியே நீடித்து, கல்விப் புலங்கள் வரையிலும் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது.  இந்தக் கோட்பாடுகளின் உண்மைத் தன்மை என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தொல்காப்பியம்

தமிழ்மொழியின் பழமைக்கான சான்றாகப் பலரும் தொல்காப்பியத்தைக் குறிப்பிடுகின்றனர்.  “தொல்காப்பியத்தின் காலம் பொயுமு 300  (300 BCE),  நமக்குக்  கிடைக்காமற் போன அகத்தியம்  அதற்கும் முற்பட்டது” என்கிறார்கள். எனவே அகத்தியத்தின் காலத்தை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமாலும்  முன்நகர்த்திக் கொள்ளலாம் என்ற வசதி இதில் உள்ளது 😊.  துரதிர்ஷ்டவசமாக, இந்த வாதத்தை முன்வைப்பவர்களுக்கு  தமிழ் இலக்கிய வரலாறு குறித்து மிகவும் மேம்போக்கான அறிதல் கூட இல்லை என்றே உண்மை.

தொல்காப்பியர் தனது தமிழ் இலக்கணத்தில் மொழிபெயர்ப்பு என்று ஒரு வகையையே கூறியிருக்கிறார்.

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்.
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே.

(தொ.கா, மரபியல் 642-43) 

மொழிபெயர்ப்பு என்றால் எதிலிருந்து என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.  சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தல் என்பதையே “மொழிபெயர்த்து” என்ற இந்தச் சொல் குறிக்கிறது. இந்த தொல்காப்பிய சூத்திரத்திற்கு இளம்பூரணர் (பொ.யு. 11ம் நூற்.) எழுதியுள்ள உரை மூலம் இது தெரியவருகிறது.

“”என்னின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு” – இளம்பூரணர் உரை.

எனவே, தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் எந்த வகையிலும் தமிழின் முதல் நூல் அன்று. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகத் தொகுக்கப் பட்டுள்ள சங்க இலக்கியங்களே தமிழின் முதல் நூல்கள்.  இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்களின்  காலம் பொயுமு 200 முதல் பொயு 300 வரை (200 BCE – 300 CE)  என்பதே பொதுவாக ஆய்வாளர்கள் பலராலும் ஏற்கப்பட்டது.  சங்கப் பாடல்களில் நால்வேதம், வேத வேள்விகள், வேத தெய்வங்கள், இராமாயண, மகாபாரத, புராணச் செய்திகள் என்று ஏராளமான குறிப்புகள் உள்ளதை மு.சண்முகம் பிள்ளை உட்பட பல ஆய்வாளர்கள் விரிவாக எழுதியிருக்கின்றனர் [1].  எனவே, தமிழின் ஆதி முதல் இலக்கியச் சான்றுகளிலேயே வேதப்பண்பாடு தமிழ்நிலத்தில் முழுமையாகப் பரவியிருந்தையே காண்கிறோம்.  

தொல்காப்பியத்தைப் பொறுத்த வரையில், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ற பொதுவிதியை வைத்தும், அதில் பேசப்படும் சில குறிப்பிட்ட விஷயங்களை வைத்தும் தான் ஆய்வாளர்கள் அதன் காலத்தை நிர்ணயிக்கிறார்கள். அதுவே அறிவியல்பூர்வமானது.

தொல்காப்பியத்தின் காலம் பொயு 5ம் நூற்றாண்டுக்கு முன்பாக இருந்திருக்கவே முடியாது என்று தனது  கறாரான ஆய்வுகளின் அடிப்படையில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை 1950களில் கூறினார். தொல்காப்பியம் புள்ளியெழுத்தைக் குறிப்பிடுவதால்  பொயு 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே என்று ஐராவதம் மகாதேவன் இன்னும் கறாராக வரையறை செய்தார்.  இவை நீங்கலாக, அதன் காலத்தை  பொயு 1,2,3ம் நூற்றாண்டுகளுக்குக் கூட கொண்டுசெல்ல முடியும் என்று தோன்றவில்லை. பொயுமு 300 வரையெல்லாம் கொண்டு போவதற்கு ஆதாரங்கள் சிறிதும் இல்லை என்பதே உண்மை. தொல்காப்பியத்தின்  நூல் ஒருமையைக் காண்கையில்  அதன் அதிகாரங்கள்  வேறுவேறு காலகட்டங்களில் இயற்றப்பட்டு பின்பு சேர்க்கப் பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கான முகாந்திரமும் இல்லை. அதற்கான அகச்சான்று அந்த நூலுக்குள்ளோ அல்லது அதற்கான உரைகளிலோ எங்கும் இல்லை. எனவே, தொகுப்பு நூலாக இல்லாமல் தொல்காப்பியர் என்ற ஒரே ஆசிரியரால் முழுமையாக இயற்றப் பட்து என்ற கருத்தே ஏற்புடையது.

பின்பு பிள்ளையார்பட்டிக் கல்வெட்டை முழுமையாக, சரியாக வாசித்தறிந்து தொல்காப்பியம் பொயு 6ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தியதே என்று ஐராவதம் முடிவு செய்தார் [2].   இந்தக் கல்வெட்டுச் சான்றையும் சேர்த்துப் பார்த்தால் வையாபுரிப் பிள்ளை எவ்வளவு தீர்க்கமாக தனது கருத்தைக் கூறியிருக்கிறார் என்பது புலப்படுகிறது. பிரமிப்பூட்டும் புலமை அவருடையது.

சிந்துவெளி எழுத்துக்கள்

சிந்துவெளி  எழுத்துக்களில் “தமிழ்” அல்லது “தொல் திராவிடம்” உள்ளது என்பது தமிழ்த்தொன்மைவாதிகளின் மற்றொரு வாதம். இது குறித்து ஆய்வுகள் செய்துள்ள  ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்ப்போலா, கமில் சுபிலவல் போன்றவர்களது வாதங்களில் நிரப்பவே முடியாத மாபெரும் தர்க்க இடைவெளிகள் உள்ளன என்பது கூட இவர்களுக்குப் புரியவில்லை.  

அ) ரிக்வேதம் அதன் முழுமையான வடிவத்தை அடைந்த காலகட்டம்  பொயுமு 1500 என்பது எந்த வரலாற்றாசிரியரும் ஏற்கும் கருத்து (அதாவது, வேதகாலத்தை வலிந்து பின்னுக்குத் தள்ளும் மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. பல  இந்திய வரலாற்றாசிரியர்கள் பொயுமு 3000 அல்லது அதற்கும் முன்பு என்று ரிக்வேத காலத்தை கணிக்கின்றனர்). எப்படியானாலும், ரிக்வேதம் தமிழில் நமக்குக் கிடைக்கும் எந்த நூலையும்  விட குறைந்தது 1300 ஆண்டு காலம் பழையது.  இதனுடன் ஒப்பிடுகையில் ஐராவதம் மற்றும் பிற ஆய்வாளர்கள் சிந்துவெளி இலச்சினைகளையும் எழுத்துக்களையும் ஊகிப்பதற்கு ஆதாரமாகக் கொள்ளும் சங்க இலக்கியங்கள் (எட்டுத் தொகை, பத்துப் பாட்டு) காலத்தால் மிகப் பிற்பட்டவை.   

ஆ)  ரிக்வேதத்தில் காணப் படும் “சப்த சிந்து” நிலவியல் ஐயத்திற்கிடமின்றி  துல்லியமாக சிந்துவெளி அகழாய்வு இடங்களையும் முத்திரைகள் கண்டெடுக்கப் பட்டுள்ள நிலப் பகுதிகளையும் விவரிக்கிறது.  Satellite Imaging மூலம் ரிக்வேதம் கூறிய சரஸ்வதி நதி ஓடிய வறண்ட படுகையும் கண்டறியப் பட்டுள்ளது.   இந்த நிலவியல் குறித்த பிரக்ஞை தொடர்ந்து மகாபாரதம், புராணங்கள் வரையும் அதற்கப்பாலும் நீடிக்கிறது. ஆனால், தமிழில் உள்ள எந்தத் தொல் நூலிலும் சிந்து நதி,  சரஸ்வதி நதிப் பகுதிகளின் நிலவியலுடன் மிக remote ஆகத் தொடர்புறுத்தக் கூடிய மிகச்சிறு குறிப்பு கூட இல்லை. ரிக்வேதத்தில் நதிகளின் பெயர்களே துல்லியமாக் கூறப்பட்டிருக்க, தமிழின் எந்தப் பழைய இலக்கியத்திலும் “ஐந்து நதிகள்” “ஏழு நதிகள்” என்ற சொல்லாட்சி கூட இல்லை.  மாறாக, தொல்தமிழ் நூல்கள்  கூறும் நிலவியல் என்பது  பஃறுளி ஆறு, பன்மலை அடுக்கம்,  குமரிக் கோடு, கடல் கொண்ட மதுரை இப்படித் தான் போகிறது. இதை சிந்துவெளியுடன் பொருத்துவது என்பது, குருட்டாம்போக்கானது. 

ரிக்வேதத்திற்கும் சிந்துவெளிக்குமான மாபெரும் நேரடித் தொடர்புகளை சிறிதும் கண்டுகொள்ளாமல், சிந்துவெளி முத்திரைகளின் எழுத்துகளுக்கு மனம்போன போக்கில் “மீன்” “காவடி” “பானை” போன்ற அர்த்தங்களை இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  அதற்கு ஆதாரமாக ரிக்வேதத்தை விட  மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேந்த சங்கப் பாடல்களிலிருந்து சான்றுகளைக் காட்டுகின்றனர்.  இவர்களது கருத்துக்களில் அறிவியல் பூர்வமான ஆய்வு அணுகுமுறையே இல்லை என்பது தான் நிதர்சனம்.   

சம்ஸ்கிருத ஒப்பீடு

தமிழ்த் தாய் தன் மக்களைப் பார்த்துக் கூறுவதாக மகாகவி பாரதியார் எழுதியுள்ள பாடல்:

ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.

இதில் “ஆரியம் எனப்படும் சம்ஸ்கிருதத்திற்கு நிகராக வாழ்ந்தேன்” என்பதனான சித்தரிப்பு கவனத்திற்குரியது.  “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று முழங்கிய பாரதியார், இந்தப் பாடலில் தமிழா சம்ஸ்கிருதமா என்ற போட்டியே அர்த்தமற்றது என்பதைக் கூறும் வகையிலேயே இவ்வாறு எழுதியுள்ளார் என்று கருத இடமிருக்கிறது.

தமிழின் தொன்மை குறித்த எல்லாப் புராணங்களிலும்  அது சிவபெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து பிறந்ததாகவும் வேதரிஷியான அகத்தியருக்கு அதை சிவபெருமான் உபதேசிக்க, அகத்தியர் இலக்கணம் எழுதினார் என்றும் தான் கூறப்பட்டுள்ளது. 

உடனே, சம்ஸ்கிருதம் என்றால் அதன் முதல் நூல் பாணினி இலக்கணம் (தமிழ் என்றால் தொல்காப்பியம் என்பது போல), அது பொயுமு 3ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று  தமிழ்நாட்டு  மொழியியல் கோமாளிகள் பிலுபிலுவென்று ஆரம்பித்து விடுகிறார்கள் (அப்படியே பார்த்தாலும் பாணினி இலக்கணம் தமிழின் எந்த நூலையும் விடக் காலத்தால் முற்பட்டது).  அதற்கு முன்பிருந்த வேதமொழி வேறு சம்ஸ்கிருதம் வேறு என்று அபத்தமாக உளறுகிறார்கள்.  இது எப்படி இருக்கிறது என்றால் நற்றிணை, அகநானூறு, புறநானூறு முதலான சங்க நூல்களின் மொழி வேறு,  திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் அதற்குப் பின்னுள்ள நூல்களின் மொழி வேறு என்று கூறுவதற்கு ஈடானது.

பொதுவழக்கில் தமிழ் என்றால் எப்படி அது சங்ககாலத் தமிழையும் சேர்த்தே குறிக்கிறதோ, அதுபோல,  சம்ஸ்கிருதம் என்றால் வேதமொழியையும் சேர்த்துத்தான் குறிக்கும். ஆய்வுநூல்களில் ஆராய்ச்சியாளர்கள் அதைத் தனியாகக் குறிக்க வேண்டி வரும்போது Vedic Sanskrit என்று சொல்வார்கள், அவ்வளவு தான்.  மேலும் பாணினி இலக்கணத்தின் படியான சம்ஸ்கிருதம் என்பது அதற்கு முந்தைய வேதமொழியின் பிற்கால வடிவமே அன்றி தனிப்பட்ட வேறு மொழி அல்ல. அவை வேறுவேறு மொழிகள் என்று கூறுவது கம்பராமாயணமும், பாரதியார் கவிதைகளும் வேறுவேறு மொழிகளில் எழுதப்பட்டவை என்று கூறுவது போல முட்டாள்தனமானது.  

சரி, “வேதமொழியான சம்ஸ்கிருதத்துடன் ஒப்பிடுகையில் தமிழ் காலத்தால் பிற்பட்டது” என்று துல்லியமாகச் சொன்னால் அந்தக்  கூற்றையாவது  குருட்டுத்தனமான தமிழ்மொழி வெறியாளர்கள் ஒப்புக் கொள்வார்களா என்றால் இல்லை.  உடனே  லெமூரியா  குமரிக்கண்டம்  கல்தோன்றி மண்தோன்றி  என்று ஆரம்பித்து விடுவார்கள்.  அப்போது விவாதமே அர்த்தமற்றதாகி விடுகிறது.   

மூர்க்கர்களைத் திருப்திப் படுத்துவதற்காக பொய் சொல்லுவதை ஒருபோதும் கற்றறிந்த அறிஞர்களும்  அரச பதவியிலிருப்பவர்களும்  செய்யக் கூடாது  என்பது மூத்தோர் மொழி.  தமிழ்மொழிக்கு இத்தகைய போலித்தனமான தொன்மைப் பெருமைகளை சூட்டுவது என்பது அதன் உண்மையான, மகத்துவமிக்க, வரலாற்றுபூர்வமான தொன்மைச்சிறப்பையே அவமதிப்பதாகும்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்.

சான்றுகள்

[1] சங்கத் தமிழர் வழிபாடும் சடங்குகளும்: மு. சண்முகம் பிள்ளை –
https://bit.ly/sanga-tamil

[2] “புள்ளி தந்த பிள்ளையார்”  கட்டுரை – http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=607)

6 Replies to “தமிழ் மொழியின் தொன்மை: ஒரு கண்ணோட்டம்”

  1. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள “தமிழ்நாட்டு மொழியியல் கோமாளிகள்” போன்ற தொடர்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். (அதற்கு இணையாக சமஸ்கிருதத்தின் தெய்வத்தன்மையைப் போற்றுகிற தேவபாஷைக் கோமாளிகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.) இத்தகைய எள்ளல்கள் தேவையற்றவை என்பதோடு ஆய்வுக் கட்டுரையின் தரத்தையும் குறைத்துவிடும். மற்றபடி இக்கட்டுரை ஒரு விறுவிறுப்பான விவாதத்தைத் தொடக்கி வைத்தால் ஆய்வுலகிற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டின் அடிப்படையில் எகரக் குறிலுக்கும் மெய் எழுத்துகளுக்கும் புள்ளி வைக்கிற பழக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உருவாகி இருக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் என்றும் அதன் அடிப்படையில் தொல்காப்பியம் கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகவே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளதாகவும் ஜடாயு எழுதியுள்ளார். இக்கருத்து தவறாகும். ஐராவதம் மகாதேவன் அவர்களுடைய Early Tamil Epigraphy என்ற நூலில் (பக்கம்-402,403) ஆனைமலை பிராமிக் கல்வெட்டில் அரட்டகாயிபன் என்ற பெயரில் டகர மெய் புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ளது எனக் கல்வெட்டின் வரைபட ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார். அக்கல்வெட்டின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டாகும். அக்கல்வெட்டின் நிழற்படத்தினை அந்நூலின் பக்கம்-509இல் வெளியிட்டுள்ளார். தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டளவில் இருக்கக் கூடும். களப்பிரர் ஆட்சிக் காலம் முடிந்து பாண்டியர் ஆட்சி மீண்டெழுந்த காலமாகிய 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி இலக்கிய-இலக்கண மரபுகளில் புதிய போக்குகளைத் தொடக்கிவைத்த காலகட்டமாகும். சிவபெருமானே அகத்திணைக்கு – குறிப்பாகக் களவு மணத்துக்கு – ஓர் இலக்கண நூல் செய்ததாகவும் இறையனார் களவியல் என்று அந்நூல் பெயர்பெற்று இருந்ததாகவும் நம்பப்படுகின்றன. இத்தகைய திருவிளையாடல் புராண நிகழ்வுகளாகக் குறிப்பிடப்படுகிற சமய சமூக இயக்கப் போக்குகளின் தொடக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டாகும். அதாவது பாண்டியர் தலைநகரின் தலபுராணமாக சைவ சமயம் சார்ந்த அற்புதச் செயல்கள் குறித்த கதைகள் உருவாகத் தொடங்கிய காலம்.எனவே தொல்காப்பியத்தை அக்காலகட்டத்துக்குரிய இலக்கணமாகக் கருதுவது பிழையானது. (வையாபுரிப் பிள்ளை போன்ற பேரறிஞர்களின் சாதனையைக் குறைத்து மதிப்பிடுவதோ வையாபுரிப் பிள்ளையை வசைபாடிய கோஷத் தமிழ் ஆர்வலர்களைப் போற்றுவதோ என் நோக்கமன்று)

  2. தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி இராமச்சந்திரன் ஐயா. “சமஸ்கிருதத்தின் தெய்வத்தன்மையைப் போற்றுகிற தேவபாஷைக் கோமாளிகளும் இருக்கிறார்கள்” என்பதுடன் முற்றிலும் உடன்படுகிறேன். இந்தக் கட்டுரையிலும் கூட நான் சம்ஸ்கிருதத்திற்கென்று தனிப்பட்ட தெய்வத்தன்மை எதையும் கற்பிக்கவில்லை. ஐராவதம் அவர்களின் கருத்தாக நான் கூறியதிலுள்ள தவறைச் சுட்டியதற்கு மிக்க நன்றி. தாங்கள் கூறுவதன்படி தொல்காப்பியம் பொயு. 3ம் நூற்றாண்டினது என்று கொண்டாலும், அது சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்டதே என்று கட்டுரை முன்வைக்கும் அடிப்படையான வாதத்தில் மாற்றம் இல்லை. தாங்கள் கூறுவதன்படி தொல்காப்பியம் களப்பிரர் காலத்தைச் சார்ந்த, அல்லது அதற்குச் சற்றே முற்பட்ட நூல் என்றாகிறது. ஆனால், அதிலுள்ள அகப்பொருள், புறப்பொருள் சார்ந்த பொருளிலக்கணக் கூறுகள், களப்பிரர் காலத்திற்குப் பிற்பட்டவையே, அவை “பாண்டியர் ஆட்சி மீண்டெழுந்த காலமாகிய 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி” என்று நீங்கள் குறிப்பிடும் காலத்தவையே என்பது தான் வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் முக்கியமான வாதம். வரலாற்றாசிரியர் மு.அருணாசலம் தனது Kalabhras in the Pandya Country என்னும் நூலில், களப்பிரர் காலத்தில் சமணசமயத் தாக்கத்தால் தமிழ் மரபின் பொருளிலக்கணம் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், பின்பு பொயு 6ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பாண்டியர் எழுச்சியின் போதே அது மீள் உருவாக்கம் செய்யப்பட்டதாகவும் கூறுகிறார். இறையனார் களவியல் உரை என்ற நூலை சிவபெருமானவே இயற்றியதாகக் கூறப்படுவது, இந்தப் பொருளிலக்கண மீட்சிக்கு ஒரு தெய்வத்தன்மையை அளிப்பதற்காக உருவான புராண வழக்கு என்கிறார். கல்லாடம் என்ற நூல் குறித்தும் இதேபோன்ற புராண வழக்கு உள்ளது. இந்தக் காலகட்டத்தில் தான் சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று தொகுக்கப்பட்டு அவற்றின் திணை, துறைகள் அடையாளம் காணப்பட்டன என்கிறார். இந்த அடிப்படையில் தான் வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியத்தின் காலத்தை பொயு 6-7ம் நூற்றாண்டு என்று வரையறை செய்வதாகத் தோன்றுகிறது.

  3. ரிக் வேதத்தில் உள்ள திராவிட சொற்களைப் பற்றி கருத்து என்ன? (https://en.wikipedia.org/wiki/Substratum_in_Vedic_Sanskrit)

    அதே போல, வடமொழி இலக்கணத்துக்குத் திராவிட மொழிகளின் பங்கு என்ன என்பதை அறிவீர்களா?

    லெமூரியாக் கண்டம் போன்ற கருத்தாக்கங்கள் மிகை, முட்டாள்தனம் என்பது போலவே, சிந்துவெளி நாகரிகம் வேத நாகரிகம் என்று என்பதுவும் மிகை, முட்டாள்தனம் இல்லையா?

  4. // ரிக் வேதத்தில் உள்ள திராவிட சொற்களைப் பற்றி கருத்து என்ன? // – ரிக்வேதத்தில் 40-50 திராவிட மூலம் கொண்ட சொற்கள் உள்ளன, அந்த திராவிட மூலச் சொற்கள் என்பன முண்டா, ப்ராஹுயி போன்ற மொழிகளிலிருந்து வந்திருக்கலாம் என்பது சில மொழியியலாளர்,அளின் ஊகம். இதனால் ரிக்வேதத்தின் தொன்மை குறைந்து விட்டதா? இந்த மொழிகளில் வெறும் சொற்கள் இருந்த காலத்தில் வேதமொழியில் ரிக்வேதம் என்ற முழுமையான கவிதைத் தொகுதியே உள்ளது என்பது தானே அர்த்தம்? மற்றபடி இதற்கும் தமிழின் தொன்மைக்கும் என்ன சம்பந்தம்?

    // வடமொழி இலக்கணத்துக்குத் திராவிட மொழிகளின் பங்கு என்ன // அது என்ன பங்கு? வடமொழி இலக்கணம் என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னால் என்ன அர்த்தம்? என்ன நூல், என்ன பங்கு?

    சிந்து, சரஸ்வதி நதி நிலவியலின் கூறுகள் வேத, புராண, இதிகாச இலக்கியங்களில் தொடர்ந்து வருகின்றன. சரஸ்வதி வறண்டது பற்றிய குறிப்புகளும் கூட உள்ளன, அவை அங்கு செய்யப்பட்ட அகழ் நீர்நிலை ஆய்வுகளுடன் (hydro archaeology) பொருந்தியும் உள்ளன. லெமூரியா போன்ற ஓட்டைப் பானை தியரி அல்ல இது. அறிவியல் ஆய்வுகளில் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வரும் விஷயம்.

    1. வடமொழியில் திராவிட மொழிகளின் தாக்கம் இருந்தது எதைக் காட்டுகிறது? இந்திய நிலப்பரப்பில் திராவிட மொழிகள் வேதகால வடமொழிக் காலத்தில் இருந்தன என்பதைத் தானே? திராவிட மொழிகள் வடமொழி இலக்கணத்துக்குக் கொடுத்த கொடைகள் பற்றி:

      Vedic Sanskrit has a number of linguistic features which are alien to most other Indo-European languages. Prominent examples include: phonologically, the introduction of retroflexes, which alternate with dentals, and morphologically, the formation of gerunds.[1]:79 Some philologists attribute such features, as well as the presence of non-Indo-European vocabulary, to a local substratum of languages encountered by Indo-Aryan peoples in Central Asia and within the Indian subcontinent, including the Dravidian languages.[2] — https://en.wikipedia.org/wiki/Substratum_in_Vedic_Sanskrit

      சரஸ்வதி நதி இந்தியாவில் இல்லை, வேதம் சொல்லும் விவரணைகளுக்குப் பொருந்தும் நதி Haraxvati என்றும் ஒரு கருதுகோள் உண்டு. உறுதியாக, முன்முடிபாக ஒன்றைப் பற்றி பேசும் முன், மாறுபட்டக் கருத்துக்களை பற்றியும் படியுங்கள்.

      மேலும், paleo-archaeology, மரபியல் ஆராய்வுகள், மொழியியல் ஆராய்வுகள் எல்லாம் சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் அல்ல என்பதைக் காட்டுகின்றன. இது பற்றி மேலும் அறிய, இந்த இரு நூல்களைப் படிக்கவும்:

      The horse, the wheel, and language: how bronze-age riders from the Eurasian steppes shaped the modern world (David Anthony)
      Early Indians: the story of our ancestors (Tony Joseph)

      இல்லை, ராஜாராம் போன்றவர்கள் தான் உங்களுக்கு வழிகாட்டி என்றால், இனிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

  5. இந்த கட்டுரை நானே எழுதியது போன்று, கனகச்சிதமாக எனது எண்ணங்களுடனும், சொல்லாடல்களுடனும் பொருந்துவது விந்தையாக உள்ளது.

    தங்கள் கருத்தை முழுமையாக, கமா – ஃபுல் ஸ்டாப்வோடு சேர்த்து ஏற்கிறேன்.
    நலம்!

Leave a Reply to நாகூர் ஸ்வாமி நாயுடுCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.