வேராழத்தை காட்டுதல்

தே ஒரு இலையின் வரலாறு நூல் குறித்து

     சில ஆண்டுகளுக்கு முன் வரை வரலாறு என்றாலே மனதில் பெரும் அலுப்பு தோன்றும். அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. வரலாற்றை மிகச் சுவாரசியமாக வாசிக்கும் வண்ணம் எழுதப்படும் நூல்கள் சில ஆண்டுகளாக வெளிவருகின்றன. ராமச்சந்திர குகா இதில் முதன்மையானவர். அவரின் “வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்” மற்றும் “இந்தியா- காந்திக்குப் பிறகு” ஆகிய நூல்கள் நல்ல வாசிப்பனுவத்தைத் தரும் வரலாற்று நூல்கள்.

     அதே போல, ராய் மாக்ஸம் அவர்களும் வரலாறை சுவையாக கூறக் கூடியவர் என்பது, அவர் “A Brief History of Tea” என்று ஆங்கிலத்தில் எழுதி, சிறில் அலெக்ஸ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள “தே- ஒரு இலையின் வரலாறு” என்ற நூல் மூலம் உறுதியாகத் தெரிகிறது. ராய் மாக்ஸிம், இங்கிலாந்தில் 1939 – ல் பிறந்து வளர்ந்து, ஆப்பிரிக்க தேயிலைத் தோட்டத்தில் பதின்மூன்று ஆண்டுகள்  மேற்பார்வையாளராக பணியாற்றியவர்.

     இவர் தேயிலைத் தோட்டத்து வேலையைப் பெற்றதே சுவையான கதையாக உள்ளது. ஆட்கள் தேவை என நிறுவனங்கள் விளம்பரம் செய்வது பொதுவாக நடப்பது. ஆனால் இவர் “21 வயது சுட்டி இளைஞனுக்கு தேயிலை அல்லது புகையிலைத் தோட்டத்தில் வேலை வேண்டும்” என “தி டைம்ஸ்” நாளிதழில் விளம்பரம் செய்து, அதன் மூலம் தொடர்பு கொண்ட ஒரே ஒருவரிடமிருந்து இந்த வேலையைப் பெற்றுள்ளார். இப்படியொரு சுவாரசியமான மனிதர் கூறும் வரலாறு சோர்வளிக்காது என்ற நம்பிக்கை முதலிலேயே தோன்றிவிடுகிறது.

      நாடுகளுக்கான வரலாறு, மொழிகளுக்கான வரலாறு, மனிதர்களுக்கான வரலாறு போன்றவற்றை படித்திருப்போம். ஒரு இலைக்கு என்ன வரலாறு இருக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் வாசிக்க ஆரம்பித்தால், இந்நூல் பெரும் ஆச்சர்யம் அளிக்கிறது.

     நூலின் வடிவம் இந்நூலுக்கு மேலும் சுவாரசியம் கூட்டுகிறது. முதலில் தன்னுடைய அனுபவம், அடுத்து தேயிலை கடத்தல் மற்றும் கொள்ளை ,தொடர்ந்து தேயிலை தோன்றிய கதை, தேயிலையை பல இடங்களில் விளைவித்தது கடைசியாக மீண்டும் இவருடைய கதையோடு முடிகிறது.

     தேயிலைப் பொதிகளை கொள்ளையடிப்பதும் கடத்துவதும், அது குறைந்த அளவே கிடைப்பதும், அவற்றை அனைவரும் விரும்புவதாலுமே நடக்கிறது. அப்போதைய இங்கிலாந்து குடிமக்கள் தேநீர் அருந்துவதை பெருமைக்குரிய விசயமாக கருதியதால் கள்ளச் சந்தையிலாவது வாங்க முயற்சித்தார்கள். அதற்காகவே சட்டத்திற்கு புறம்பான முறையில் விற்பனை செய்வதற்கு, அபாயகரமான வகையில் கொள்ளையும் கடத்தலும் நடந்தது. அதில் ஈடுபட்டு சிக்குபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை ஒரு வேடிக்கையான தகவலுடன் கூறுகிறார் ஆசிரியர். கடும் தண்டனை என்றால் தூக்கிலேயே ஒரு வாரத்திற்கு தொங்கவிடுவதும், சற்று குறைவான தண்டனை என்றால் தூக்கில் இறந்தவுடன் எடுத்து அடக்கம் செய்து விடுவதும் நடக்குமாம்.

      அடுத்ததாக தேயிலை சீனாவில் எப்போது கண்டறியப்பட்டது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விவரிக்கிறார். தேயிலைச் சுவைகளின் பல மாதிரிகளைப் பற்றி கூறிச்செல்பவர் அதனை பறிப்பது அதனைப் பதப்படுத்துவது போன்றவற்றின் நுணுக்கங்களையும் அதன் வகைகளையும் விளக்குகிறார்.  மன்னர் குடும்பத்தினருக்காக மட்டும் மலையின் உயரமான பகுதியில் பாதுகாப்புடன் தனியாக வளர்க்கப்படும் செடியில், தங்க கத்திரி கொண்டு இலைகள் பறிக்கப்பட்டதையும் அவ்விலைகளை வேறு யாரேனும் பறித்தால் மரண தண்டனை விதிக்கப்படுவதையும் வாசிக்கும் போது திகைப்பு ஏற்படுகிறது.

     சீனாவின் தேயிலைகளைப் பெருவதற்கு ஆங்கிலேயர்கள் செய்த முயற்சிகளையும் சதிகளையும் ஒரு அத்தியாயத்தில் விவரிக்கிறார். சீனாவிலிருந்து   தேயிலை பெருவதற்காக இந்தியாவிலிருந்து ஓப்பியம் ஏற்றுமதி செய்து சீனர்களை அதன் போதைக்கு அடிமையாக்கியதும், அதைத் தடுக்க முயன்ற சீன அரசர்களுக்கு  எதிராக நடத்தப்பட்ட ஓப்பியம் போர்களும், தங்களுக்கு ஒன்று தேவையானால் அதைப் பெறுவதற்கு ஆங்கிலேயர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு மேலுமொரு உதாரணம். இந்நூலாசிரியர் ராய் மாக்ஸிம், இதில் தொடர்புடைய ஒரு ஆங்கில அதிகாரியின் பெயரைக் கூறவேண்டியிருந்தால் அப்படியே முன்சென்று அவர் பிறப்பிலிருந்து சொல்லிவந்து நீட்டி அவரின் இறப்புவரை சொல்லிய பிறகு மீண்டும் வரலாற்றை தொடர்கிறார். இது இவரது நூலின் சிறப்பம்சமாகும். 

      அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் அசாமில் தேயிலையை விளைவிக்க நடந்த முயற்சிகளையும், விடாத கடும் முயற்சிகளுக்குப் பின் கிடைத்த வெற்றியை விவரிக்கிறார். அதோடு கூடவே தோட்ட வேலைகளுக்கு வந்து சேரும் தொழிலாளர்களைப் பற்றியும் கூறிச் செல்கிறார். ஏற்கனவே வெளிவந்துள்ள “Red Tea” நாவலில் தோட்டத் தொழிலாளர்களின் பாடுகள் விரிவாக சொல்லப்பட்டுவிட்டாதாலோ அல்லது இந்நூல் தேயிலையைப் பற்றியது என்பதாலோ தொழிலாளர்களின் இன்னல்களின் சில முக்கிய புள்ளிகளை மட்டும் அழுத்தமாக கூறிவிட்டு தோட்டங்கள் அமைப்பதை பற்றி விரிவாகக் கூறுகிறார்.

       “இலங்கையில் பெருமளவில் இருந்த காப்பித் தோட்டங்களில் பரவிய பூஞ்சை நோய் அத்தொழிலில் இழப்பை உண்டாக்கியது. அந்நேரத்தில் தேயிலையை விளைவிப்பது பலன் தரும் என்ற நம்பி இச்செடிகளை பயிரிட்டார்கள்”.  ஆசிரியர் கூறும் இத்தகவல், காப்பியின் வசமிருந்த இடங்களை தேயிலை ஆக்கிரமித்த சித்திரத்தை தெளிவாகக் காட்டுகிறது. தேயிலைக்கு ஏற்ற நிலம் என்று தெரிந்தவுடன் சுற்றியிருந்த பல்லாயிர ஏக்கர் நிலங்கள் ஆங்கிலேயர்களால் போட்டி போட்டு வளைக்கப்பட்டதையும் வாங்கப்பட்டதையும் கூறி கடைசியில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆக்கிரமித்ததைப்போல இலங்கையையே  கைப்பற்றியதைக்  கூறுகிறார் ஆசிரியர்.

       அடுத்ததாக, தேயிலையை விற்பனை செய்த நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறார். ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் வருமானத்தை பெருக்கவும் தக்க வைக்கவும் செய்யும் முயற்சிகளையும் சதிகளையும் விரிவாகக் காட்டுகிறார். ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரைக் கூறும் போதும் அந்நிறுவனம் எந்த ஆண்டு, எந்த நாட்டில், யாரால் தொடங்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் செயல்பட்டது அல்லது செயல்படுகிறது. அதன் விற்பனையின் மதிப்பு எவ்வளவு போன்ற எல்லாத் தரவுகளையும் விரிவாக அளிக்கிறார். இங்கிலாந்தில் தேநீர் விற்பனையகங்கள் தொடங்கப்பட்ட விதமும், அங்கு  வரும் வாடிக்கையாளர்களின் வெற்று ஆடம்பர நடவடிக்கைகளும்  வாசிக்கும்போதே திகைப்பூட்டக் கூடியவை. அதே நேரத்தில் இந்தியர்கள் இங்கு பட்ட பாட்டை எண்ணினால் ஆங்கிலேயர்கள் மேல் பெரும் ஒவ்வாமை ஏற்படுகிறது.

       இங்கிலாந்து மக்கள், பதினேழாம் நூற்றாண்டில் பயன்படுத்திய தேயிலையின் அளவு 19-ம் நூற்றாண்டில் எத்தனை மடங்கு அதிரித்துள்ளது என்பதையும் இரண்டு உலகப்போர் காலங்களிலும் தேயிலைக்கு ரேசன் முறை இருந்ததையும் சுவாரசியமாகச் சொல்கிறார். இவை, ராய் மாக்ஸமின் வரலாற்றின் மீதான ஆர்வத்தையும், அதற்கான அவரின் கடும் உழைப்பையும் உணர்த்துகிறது.

     கடைசியாக ஆப்பிரிக்காவில், தன் தேயிலைத் தோட்ட அனுபவங்களை விவரிக்கிறார். காசோலையை ஓர் இளம்பன்றியின் மீது எழுதிக் கொடுப்பது போன்ற வித்தியாசமான மற்றும் சில விரும்பத்தகாத செயல்களைச் செய்த “மாக்சன்” என்பவரையும் தன்னையும் ஒருவரே என  சிலர் தவறாகப்  புரிந்துகொண்டதை தெளிவாக்க தன் பெயரை “எம்-ஓ-எக்ஸ்-ஹெச்-ஏ-எம் … மாக்ஸம்” என்று உச்சரித்து விளக்கியதை வேடிக்கையாக கூறுகிறார். அங்கிருந்த தோட்டத் தொழிலாளர்கள் கடினமான சூழ்நிலையிலும் இயல்பாகவே மகிழ்ச்சியாக வாழ்ந்ததையும் அப்போது அந்நாட்டில்  நிலவிய அரசியல் சூழ்நிலையையும் சுவையான சம்பவங்கள் மூலம் சிறப்பாக சித்தரிக்கிறார்.

      ராய் மாக்ஸம் எழுதி “சிறில் அலெக்ஸ்”- அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட இந்நூல் வரலாற்று நூல்கள் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கான உதாரண நூலாகும் தகுதி கொண்டது. இலையின் வரலாறைக் கூறப் புகுந்து அதன் வேரின் ஆழம்வரை துல்லியமாகக் காட்டுகிறது.  இந்நூலை வாசித்து முடிக்கும் போது இதேபோல காபி, புகையிலை, ஓப்பியம் போன்றவற்றிற்கான வரலாறுகளையும் அறிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது. வாசிக்கும்போது மொழியாக்கம் செய்யப்பட்ட நூலென்ற எண்ணம் ஒருமுறைகூட எழவில்லை. இதன் மூலம்  மொழியாக்கம் எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது என்பதை உணரலாம். சிறில் அலெக்ஸ் -க்கு என் பாராட்டுகள்.

  • நூல்: தே- ஒரு இலையின் வரலாறு
  • ஆசிரியர்; ராய் மாக்ஸம்
  • மொழியாக்கம்; சிறில் அலெக்ஸ்
  • பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

One Reply to “வேராழத்தை காட்டுதல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.