
ஸ்டீபன் அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்தான். அவன் போட்டுக் குளித்திருந்த சோப்பின் வாசனையும் மீறி குழந்தைத் துணியின் நாற்றமடித்தது. ஜூலியின் பக்கத்தில் குழந்தை அசைவில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது. ஜூலியின் கைகள், முகத்தில் எல்லாம் சாம்பல்பூத்தது போலிருந்தது. அவள் பக்கத்தில் சென்றால் பூண்டு, இஞ்சியின் வாசனையெல்லாம் வீசும். உள் அறையில் போய் சட்டையையும் கரைவேட்டியையும் தேடினான். அத்தைதான் – ஜூலியுடைய அம்மா குழந்தை பிறந்ததிலிருந்தே அவனுடைய துணிமணிகளையும் துவைக்கிறாள். குளோரிந்தா அத்தை அடுப்படியில் வேலையாக இருந்தாள். அத்தை அருகில் வந்தாலும் குழந்தைத் துணியின் வாசனை வீசுகிறது. வீட்டின் எல்லா அறைகளிலும் சுவர்களிலும்கூட வீசுகிறது. வீடு பூராவும் குழந்தை பிறந்த வீட்டு மணம்.
வேட்டி சட்டையைத் தேடி எடுத்து அணிந்து கொண்டான். நல்லவேளையாக அவனுடைய உடைகளில் அந்த வாசனை இல்லை. சட்டைப் பித்தான்களை அவசரஅவசரமாக மாட்டிக்கொண்டே, “அத்தை காப்பி தாரீங்களா?…” என்று கேட்டான். மணிக்கட்டில் வாட்சைக் கட்டிக்கொண்டான். மணி ஏழு பத்து. டேனியல் வீட்டுக்குப் போக பத்து நிமிஷமாவது ஆகும். ஏழரை மணிக்கெல்லாம் ஓட்டுக் கேட்கப் போகவேண்டும்.
சமையல் கட்டிலிருந்து குளோரிந்தா, “உப்புமா ரெடியா இருக்கு… அதைச் சாப்பிட்டுட்டே காபியக் குடியுங்களேன்…” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை… டிபனெல்லாம் போற வழியில பாத்துக்கிடுவோம். காப்பி மட்டும் தாங்க.”
“இன்னும் எத்தனை நாளைக்குதான் பெரச்சாரத்துக்குப் போவியோ? அன்னைக்கு புள்ளயப் பாக்க வந்த கணவதி அண்ணன்கூட ரெண்டு மூணு எடத்துல கம்பி கட்டுததுக்கு ஆளு தேவைப்படுதும்மா… இவன் இந்த நேரத்துல போயி தேர்தல், பெரச்சாரம்ன்னு அலைஞ்சுகிட்டு இருக்கானேன்னு சொன்னாவ…”என்றாள் ஜூலி.
அவனுடைய அம்மா காபி கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள் காபி உறிஞ்சிக் குடித்துக்கொண்டே, “அவனுக்கு என்ன தெரியும்?… அண்ணன் செயிச்சு எம்எல்ஏ ஆயிட்டாருன்னா நமக்கு எப்பிடியும் கெவர்மெண்டு வூடு வாங்கித் தந்துருவாரு… என்னும் நாலே நாலு நாள்தான் பெரச்சாரம். அப்பறம் வேலைக்கிப் போனாப் போவுது… என்றான் ஸ்டீபன். அவனுடைய காதுக்குள், “போடுங்கம்மா ஓட்டு இரும்புப் பொட்டியில ஓட்டு” என்ற குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
வேட்பாளர் டேனியல் அவனுடன் மேட்டுத்தெருப் பள்ளிக்கூடத்தில் படித்தவன். பிறகு காலேஜெல்லாம் படித்து, கட்சியில் சேர்ந்து பெரிய புள்ளியாகிவிட்டான். இருந்தாலும் இவனிடம் அந்தக் காலத்தைப்போல் நல்ல ஸ்நேகமாகத்தானிருக்கிறான். போன எலக்ஷனில்கூட 30 ஓட்டு வித்தியாசத்தில்தானே தோற்றுப்போனான். இந்த முறை டேனியல் ஜெயிப்பது நிச்சயம். ஸ்டீபனுக்கு கவர்மெண்டு வீடும் நிச்சயம். போடுங்கய்யா ஓட்டு இரும்புப்பொட்டியில ஓட்டு…
“ஒனக்கென்ன?… சும்மயா பெறச்சாரத்துக்குப் போறேன்?… சாப்பாடு எல்லாம் போக தெனசரி 500 ரூவா தாராவோ… கம்பி கட்டப் போனாலும் இதுதான கெடைக்கும்?…”
“அதுக்காகப் பதிவா கெடக்ய வேலய உட்டுட்டு இப்பிடித் தெருத்தெருவா கத்திகிட்டு அலையணுமா?… என்று கேட்டாள் ஜூலி.
“நீ எதுக்கு சடச்சுக்கிடுத?… எல்லாம் எனக்குத் தெரியும்…” என்று சொல்லிவிட்டுக் காபி குடித்த தம்ளரைக் கீழே வைத்தான். வீட்டைவிட்டு வெளியே வந்து, முடுக்கில் சுவரோரமாகச் சாத்தி வைத்திருந்த சைக்கிளை உருட்டிக்கொண்டு தெருவாசலுக்கு வந்தான். சைக்கிளில் ஏறி வேகமாக மிதித்தான்.
குளோரிந்தா மகளுக்குச் சமாதானம் சொன்னாள். “அவியளுக்குத் தெரியாதா ஜூலி. டேனியலு அவிய பெரண்டுதான? செயிச்சு வந்தா பாத்துச் செய்யாமையா போவாரு?… என்றாள் குளோரிந்தா.
“ஆமா… நீ உன் மருமவனுக்குச் சப்போட் பண்ணு…” என்று சலித்துக்கொண்டாள்ஜூலி.
அவிய சொல்லுதாப்பல நமக்கு வூடு கெடச்சா நல்லதுதானள்ளா… எத்தனை நாளைக்கித்தான் வாடவ வூட்டுல இருந்து கயிஸ்டப் படுதது?… என்றாள் குளோரிந்தா.
“ஆமா… நீதான் ஒன் மருமகன் பேச்ச நம்பணும்…” என்றாள் ஜூலி. அம்மாவிடம் அவள் அப்படி விட்டேற்றிதாகப் பேசினாலும் ‘ஒரு வேளை டேனியலு செயிச்சு வூடுவேண்டிக் குடுத்துட்டாருன்னா…” என்றொரு ஆசை ஜூலியின் மனதில் துளிர்க்கத்தான் செய்தது. அதற்காக ஸ்டீபன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்? ஆம்பளைகளை அவ்வப்போது சத்தம்போட்டு அடக்கி வைத்தால்தானே குடும்பம் ஒழுங்காக ஓடும்? இதெல்லாம் ஜூலிக்குத் தெரியாதா என்ன?
ஸ்டீபன் நெஞ்சை முன்னால் தள்ளி சைக்கிளை வேகமாக மிதித்துப்போய்க்கொண்டிருந்தான். பெரிய தெருவில் திரும்பியபோது எதிர் வேட்பாளர் சங்கையாவின் ஆட்கள் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள் எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் நோட்டீஸ் கொடுத்தார்கள். ஸ்டீபனிடமும் கொடுத்தார்கள். சைக்கிளை நிறுத்தி, ஒரு காலைத் தரையில் ஊன்றிக்கொண்டே நோட்டீசைப் படித்தான்.
சங்கையா படத்தில் கைகூப்பி நின்றிருந்தார். அவருடைய சின்னமான இஸ்திரிப் பெட்டியையும் பெரிசாக அச்சிட்டிருந்தார்கள். நல்ல வழுவழுப்பான தாளில் நோட்டீஸ் அச்சிடப்பட்டிருந்தது. டேனியலின் நோட்டீஸெல்லாம் சாதாரணக் காகிதத்தில்தான் அச்சிடப்பட்டிருந்தன. அப்படியானால் சங்கையா ஜெயித்துவிடுவாரா?
உங்கள் ஓட்டு யாருக்கு?
சங்கையாவுக்கு…
நமது வேட்பாளர் சங்கையா…
நமது சின்னம் இஸ்திரிப்பெட்டி…
சங்கையா ஜெயித்துவிட்டால் கவர்மெண்டு வீடு கிடைக்காதே அந்த நோட்டீஸைக் கசக்கி எறிந்து விட்டு சைக்கிளை மிதித்தான். தெருவில் போகிறவர்கள் கையில் சங்கையா ஆட்கள் கொடுத்த நோட்டிஸ் இருந்தது. அவர்கள் எல்லோரும் சங்கையாவின் ஆதரவாளர்களா? நோட்டீஸை பத்திரமாகக் கையில் வைத்திருக்கிறார்களே. இஸ்திரிப் பெட்டிக்கு ஓட்டுப் போடப் போகிறவர்களா? அப்படியானால் கவர்மெண்ட் வீடு?
அவ்வளவு லேசில் ஸ்டீபன் சங்கையாவை ஜெயிக்க விடுவானா? டேனியலிடம் சொல்லி நல்ல வழவழப்பான பேப்பரில் நோட்டீஸ் அடிக்கச் சொல்லவேண்டும். வழவழப்பான பேப்பரில் நோட்டீஸ் அடித்தால் டேனியலின் வெற்றி நிச்சயம். அவனுக்கு வீடும் நிச்சயம். சைக்கிளை ஓங்கி மிதித்தான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட கவர்மெண்ட் வீட்டை நோக்கிப் போவது போலிருந்தது அவனுக்கு. நமது வேட்பாளர் டேனியல். நமது சின்னம் இரும்புப்பெட்டி. இஸ்திரிப்பெட்டியை விட இரும்புப்பெட்டிதான் பெருசு. கனமானது.
சங்கையாவை ஜெயிக்க விடக் கூடாது. சங்கையா மக்களின் எதிரி. சங்கையா ஜெயித்தால் இந்த ஊரை ஆண்டவராலும் காப்பாற்ற முடியாது சங்கையா ஒழிக. டேனியல் வாழ்க.
டேனியல் விட்டின் முன் பிரச்சார வாகனம் நின்றிருந்தது. எல்லோரும் பிரச்சாரத்துக்குப் புறப்படுகிற நேரம்தான். வழக்கம்போல் சைக்கிளை நிறுத்துகிற இடத்தில் சைக்கிளை நிறுத்திப் பூட்டினான். டேனியலுடைய மேனேஜர் ஏசுவடியான் இட்லிப் பொட்டலங்களையும், கொடிக் கம்புகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.
ஏசுவடியானிடம், “அண்ணாச்சி… எதிர்கட்சிக்காரங்க நல்ல பளபளப்பான தாள்ல பிறச்சார நோட்டீஸ் கொடுக்காவ…நாமளும் அந்தமாதிரி தாள்ல நோட்டீஸ் அடிச்சாத்தான் அண்னாச்சி நல்லது…”என்றான் ஸ்டீபன்.
“ஆருடே சொன்னது. தேர்தல் நடத்துற ஆளூவோ எல்லாத்தையும் கங்காணிச்சுக்கிட்டுல்லா இருக்கானுவ…நாமதான் சரியாட்டு செலவு பண்ணுதோம்…அவனுக தேர்தல் கமுசன் கிட்டே மாட்டிக்கிடுவானுவோ…” என்றார் ஏசுவடியான்.
“சனம் பளபளப்பப் பாத்து மயங்கிரும்லா அண்ணாச்சி?..”
“ஆருடே சொன்னது? இந்த நோட்டீசிலே ஒண்ணும் சமாச்சாரமில்லே மக்கா…சனங்க கிட்டே எப்பிடி ஓட்டு வாங்கணும்னு அண்ணனுக்குத் தெரியாதா? எத்தன எலக்சன அண்ணன் பாத்துருக்காரு?…சங்கைய்யா இன்னைக்கில்லா எலக்சன்ல நிக்காரு.அவருக்கு எலக்சனப் பத்தி என்ன எளவுடே தெரியும்?…”
அதன் பிறகு ஸ்டீபனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. டேனியல் எத்தனை எலக்ஷனைப் பார்த்தவன். அவனுக்குத் தெரியாதா.
டேனியல் தோளில் போட்ட துண்டுடன் வீட்டுக்குள்ளிருந்து வந்தான். ஸ்டீபனைப் பார்த்ததும், அவன் முதுகில் தட்டிச் சிரித்தான். எல்லோரும் கொடிக்கம்புகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தார்கள். ஏசுவடியான் அவர்களைப் பார்த்து, ஏடே!… இரும்புப் பொட்டி, இரும்புப் பொட்டின்னு சொல்லாயதேயடே…இரும்புப்பெட்டியின்னு திருத்தமாட்டு சொல்லுங்க…” என்றார்.
நமது சின்னம்
இரும்புப்பெட்டி
நமது வேட்பாளர்
அண்ணன் டேனியல்
கூட்டம் நகர்ந்தது. டேனியல் பின்னால் பிரசார வேனில் நின்று வந்தான்.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஸ்டீபனின் நம்பிக்கை பெருகி வந்தது. டேனியலின் ஆட்கள் எல்லோரையும் போல் அவனும் டேனியலின் வெற்றி நிச்சயம் என்று நம்பினான். புது கவர்மெண்ட் வந்தால் காக்கா தோப்பில் அரசு ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்போவது உறுதி. அதில் ஸ்டீபனுக்கும் நிச்சயமாக ஒரு வீடு கிடைக்கும். ஜூலி, குழந்தை, அத்தையுடன் அவன் அந்த வீட்டில் குடியேறி விடுவான். இஸ்திரிப் பெட்டியை விட வலுவான இரும்புப்பெட்டிதான் ஜெயிக்கும்.
ஜெயித்த பிறகு டேனியல் சென்னைக்குப் போய் எம்.எல்.ஏ ஆகிவிடுவான். பதவி ஏற்ற பிறகு ஸ்டீபனுக்கு வீட்டுக்கு ஏற்பாடு செய்வான். வீட்டில் குடியேறும் போது மறக்காமல் டேனியலை அழைத்து விருந்தெல்லாம் வைப்பான். துரதிருஷ்டவசமாக டேனியல்தான் ஜெயிக்கவில்லை
ஒலி வடிவில் கேட்க / To Listen to the story in Audio form:
.
யதார்த்தமான கதை.. கட்சியின் வெற்றியில் தனது வாழ்வியலை அபிவிருத்தி செய்து கொள்ள ஏங்கும் தொண்டர்களின் நிலைப்பாடு.
அப்பாவி தொண்டர்கள் எவ்வாறு தூண்டில்புழுவாய் தேர்தல் அரசியலில் சிக்குண்டிருக்கிறார்கள் என்பதை வண்ணணநிலன் எடுத்துரைக்கிறார். வாழ்த்துகள்
யதார்த்தமான கதை. நேர்த்தியான நடை.
அப்பாவிகளின் கனவையும் வாழ்வையும் இணைத்துப் செல்லும் சிறப்பான கதை.
உண்மையான கட்சித் தொண்டனின் நிலையை அப்படியே சொல்லி விட்டார்…